கருத்துகளை அளிக்கும் கலை (அல்லது) கொலை செய்வதும் ஒரு கலை (பின்னதைச் சொன்னது ‘டணால்’ தங்கவேலுவோ?)
September 5, 2026
இந்த ‘கருத்துக் கலை’ என்பது என்னிடம் கலையாகப் பரிமளிக்கவில்லை, பரிமளிக்கக் கூடிய சாத்தியக்கூறும் இல்லை என்பது உண்மை. ஏனெனில்.
சில சங்கடமளிக்கும் ஆனால் சுதந்திரப் படுத்தும் சிந்தனைகள்…
1
ஏனெனில், கருத்துகளை எப்படி, எதற்காக அளிக்கிறோம் – என்பது, நம் எண்ணங்களைப் பிறருக்கு நேரடியாகச் செலுத்துவதற்கான ஊற்றுக் கண்களைப் பொறுத்த விஷயம்.
ஒன்று; அதாவது, தகவல் பரிமாற்றத்துக்கான வழிமுறைகளும் அதன் முறைமைகளும்.
இன்னொன்று – அப்பரிமாற்றத்தின் வழி நேரடிக் கருத்துகளைச் சொல்வதற்கு அப்பாற்பட்டு, நம் மனோபாவத்தையும் நமக்கும் கேட்டு/படித்துக்கொண்டிருப்பவருக்கும்(~ ‘வாசகனுக்கும்’) இருக்கும் உறவையும் சுட்டுதல்…
- “வெட்டினால் ஒன்று துண்டு ரெண்டு – அப்டீன்னு பேசிடணும்! அப்டிதான் எனக்குப் பழக்கம்!! நீ புண்பட்டால் எப்படியே கெட்டுப்போ! எனக்கொரு பிரச்சினையும் இல்லை!”
- “நான் யார், எவ்வளவு பெரிய்ய அறிவாளி, தெரியுமா?”
- “டேய், இதோ என் கர்த்து… புட்ச்சிக்கினு ஓட்றா டேய்!”
- “இதையெல்லாம் உனக்கு விலாவாரியாகச் சொன்னால் புரியாது, நீ எளிமையானவன்… இருந்தாலும்…”
- “இம்மாதிரி சிக்கலான விஷயங்களையெல்லாம் நான் எப்படி மிகத் தெளிவாக அணுகுகிறேன் பார்க்கிறாயா?”
- “நான் மிக முக்கியமானவன், பெரும் செயல்பாடுகளில் இருக்கிறேன்! ஏதோ போனால் போகிறது என என் கருத்துகளை உன் மேன்மைக்காகச் சொல்கிறேன்! ஆகவே, நான் சொல்வதை, உன் நன்மைக்காக, நீ மிகமிகக் கவனமாகக் கேட்க வேண்டும்!”
- “விட்டேற்றித்தனமாகப் பேசுகிறேன். எனக்கு போரடிக்கிறது, ஆகவே பிடித்துக்கொள் இந்த வம்பை…”
- “ஃப்ரீயா ஜாலியா பேஸ்றேன்… லூஸ்ல வுடு…”
- “நான், ஒரு கேளிக்கைகாகச் சொல்கிறேன்! நானே என்னை படுஸீரியஸ்ஸாக எடுத்துக் கொள்வதில்லை, அதையேதான் நீங்களும் செய்ய வேண்டும், சரியா?”
- “நான் எவ்வளவோ பெரிய உன்னதமான விஷயங்களைப் பற்றிப் பேசுகிறேன்! ஆனால் எவருமே இதற்குச் செவிசாய்ப்பதில்லை… *ப்ச்* இதெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்… கடைவிரித்தேன் கொள்வாரில்லை, கட்டிவிடவும் மனதில்லை…”
- “இதைச் சொல்லவேண்டும் எனத் தோன்றியது… சொல்கிறேன்.”
- “யாம் பெற்ற பேறு, பெருக இவ்வையகம்.”
- “…”
… … இன்னமும் பல இப்படி அப்படியென்று இருக்கலாம்… ஆனால் என் அனுமானத்தில், என்னிடமும் பிறரிடமும் கலவைகளாகவும் வண்டல்களாகவும் இருக்கும் பாவனைகளையும் சால்ஜாப்புகளையும் பற்றித்தான் சொல்ல முடியுமல்லவா?
2
என்னைப் பொறுத்தவரை, நான் எனக்காக – ஒரு தொடர் பயிற்சிக்காக மட்டும்தான் எழுதுகிறேன். இதன் மூலகாரணம் – எழுதும்போதுதான் (குறைந்த பட்சம் எனக்காவது) ஒருமாதிரி கோர்வையாகவும், தர்க்கபூர்வமாகவும் சிந்திக்க முடிகிறது. என் முன்முடிவுகளைக் குறித்து அலச முடிகிறது. மனதளவில் சுற்றுச்சூழல்களை மறந்து, அவற்றின் இரைச்சலுக்கு அப்பாற்பட்டு – குறிப்பிட்ட விஷயங்களைக் குறித்து ஓரளவு குவியம் கொள்ள முடிகிறது.
தினமும் சுமார் ‘தமிழில் 400 வார்த்தைகள்’ எனவொரு கணக்கு. எனக்கு மனதில் பட்டதை எழுதுவேன் – ஆனால் இது நாட்குறிப்பு வகை அல்ல. மேலும் நான் எழுதுவதில் சுமார் 95%+ இந்த ஒத்திசைவு தளத்திலோ, X-குறும்பதிவுகளாகவோ அல்லது வேறெங்கோ பதிப்பிக்கப் படுவதில்லை. (தப்பித்தீர்கள், சகஏழரைகளே!)
மேலும் – என்னுடைய பிற – குவியங்களுடைய, ஆர்வங்கள் சார்ந்த, மேலும் தொழில்நுட்பம் உள்ளிட்ட குறிப்புகள் (புத்தகங்கள்+வியாசங்களின் சாராம்சம், அல்லது டெக்னிகல் நுணுக்கங்கள்++ என் அனுமானங்கள்++) இவையெல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.
(நிறைய, நுட்பமான விஷயங்கள் குறித்துத் தமிழில் சிந்திக்க, தமிழிடமும் என்னிடமும் தேவையாக கலைச்சொற்கள் இல்லை, அறிவுப் பின்புலங்களும் இல்லை – இது கொஞ்சம் விசனம் தருவது ஆனால் சத்தியமான உண்மை… மேலும் நான் வெறும் ஒரு தமிழ் ஆர்வலன் தான் – வாயோர நுரைதள்ளும் வெறியனல்லன்)
சுமார் 1991 வரை போல – நான் தமிழில் பெரும் ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தேன். அந்த வருடத்தில் நான் பிரத்யட்சமாகக் கண்ட அசிங்கமான உண்மைகளின் காரணமாக – தமிழில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன் படிப்பதையும் நிறுத்தினேன் – ஏனெனில் எனக்குத் தமிழில் அல்லது தமிழ்வழியாகக் கற்றுக் கொள்ள பெரிதாக ஒன்றும் இல்லை என்பது என் அனுமானமாக இருந்தது – இன்றுவரை அது சுமார் 90% தொடர்கிறது என்பது வேறுவிஷயம்…
பின்னர் 2006 வாக்கில் மறுபடியும் சொந்தக் குறிப்புகளாக “ஐயோ! நான் தமிழில் சிந்திப்பதையே நிறுத்தி 15 வருடங்களாகி விட்டனவா!” என யோசித்து ஆரம்பித்து – 2011 முதல், இந்த ‘ஒத்திசைவு தளம்’ வழியாக சிலவற்றைப் பதிக்கவும் செய்கிறேன்.
ஒருமாதிரி நகைச்சுவையாக எழுதுவதும் பிடிக்கும். நான் எழுதியவற்றை நானே படித்துப் புளகாங்கிதம் அடைந்து இன்பலாகிரி பெறுவதும் நடக்கின்றன – இவற்றிலும் ஏறக்குறைய 90:10 விகிதம்தான் பதிவேற்றம் அடையும். (தப்பித்தீர்கள் நீங்கள்!)
சென்ற வாரம் – ஜெயமோகன் சாருநிவேதிதா எஸ்ராமகிருஷ்ணனாதிகள் ஒரு அறிவுசார் கலந்துரையாடலில் இருப்பது போல எழுதினேன். எனக்கே படுசிரிப்பு.
ஆனால் இப்போதைக்கு அதனை வெளியிடுவதாக இல்லை. கவலை வேண்டேல்.
3
ஏன் – இவ்வளவு கதைகதையாய் எழுதுகிறேன் என்றால்… அண்மைக் காலம் வரை, எனக்கு இருக்கும்/இருந்த சிலபல தொடர்புகள் + ஆர்வங்கள் காரணமாக – நம் மக்கள் அவர்களுடைய வரைவு வடிவ நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என அனுப்புவார்கள் – அதாவது என் மேலான ப்ளட்டி கருத்துகளைக் கேட்டு…
ஆனால்… இதனை மாதிரிக் கொடூரமான, ரத்தத்தை உறையவைக்கும் கொடுமை என வேறொன்று இல்லை.
இதை என்னால் நிச்சயமாகச் சொல்லமுடியும்.
என் குறிப்புகளில் இருந்து ஒருமாதிரி டேட்டா எடுத்து அங்கலாய்ப்புடன் சொல்கிறேன்: இந்த ஜென்மத்தில் இதுவரை இப்படிச் சுமார் 25-30 நாவல்கள், 40-50 சிறுகதைத் தொகுப்புகள், 100+ கவிதைத் தொகுப்புகள், 10 போல கட்டுரைத் தொகைகள், 100+ குறிப்பிட்ட/தனி சிறுகதைகள்… … (இவற்றைத் தவிர மடித்து ஸ்டேப்ளர் பின்னடித்து ‘தனிச்சுற்றுக்காக மட்டும்’ வகை சிறுபத்திரிகைச் சுயமைதுனங்கள்++) – பெரும்பாலும் கொடுமைகள்… இவற்றையெல்லாம் படித்துத் தொலைத்திருக்கிறேன்…
மூன்றே பேருக்கு அவர்களுடைய ஆங்கிலக் கட்டுரை புத்தக வரைவுகளில் உதவியிருக்கிறேன் + எடிட் செய்திருக்கிறேன்; ஆனால் அவர்களுடைய 7 புத்தகங்களில் 4 நிஜமாகவே குறிப்பிடத் தக்கவை. இவர்களில் இருவர் ‘இடதுசாரி அறிவுஜீவிகள்’ எனத் தம்மை வரித்துக் கொள்பவர்கள். நான் அப்பெபர்களை வெளிப்படுத்தினால் சங்கடப் படுவார்கள், ஏனெனில் நான் ஒரு ‘சங்கி.’ நன்றி. இன்னொருவர் அப்படியல்லர், மூளை ஓரளவுக்குப் பணிமூப்பு அடையாமல் இருக்கிறது அவருக்கு. இருந்தாலும்.
யோசித்தால் ஐந்தாறு தொழில் நுட்பப் புத்தகங்களுக்கும் இப்படி ‘அணில்’ உதவி செய்திருக்கிறேன். ஆனால் அவை உண்மைகளைக் கணித-அறிவியல் பூர்வமாக அணுகுபவைகள். இலக்கிய – பொருளாதார இன்னபிற வகை பம்மாத்துகள் அல்ல.
தமிழைக் கூறுபோட்டுக் கூவிக்கூவி விற்கும் நல்லுலகுக்கு மறுபடியும் வருகிறேன்: இப்போது ‘பிரபலமாக’ இருக்கும் சிலபலர் இந்த ‘அனுப்பியோர் ஜாபிதா’வில் இருக்கிறார்கள். பல தேய்ந்து-மறைந்து போன அந்தக் கால அலக்கியவாதிகள் இருக்கிறார்கள். ஆனால் எவர் பெயரையும் வெளியிட முடியாது. அவர்களும் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இதைப் படிக்கும் (அதாவது – இந்தக் காட்டுரையில் இதுவரை நீங்கள் நீந்தி வந்திருந்தீர்களானால்…) நீங்களும்தான்!
4
சரி. இப்போது சிலபல சுவையான ‘கருத்துதிர்த்தல் கொலைக்கலை’ எஸ்எம்எஸ் வகைக் குறிப்புகள்:
பிரச்சினை என்னவென்றால் – நீங்கள் ஒருவருக்கு – முகதாட்சணியம் பார்த்து குறிப்பு – ஊக்குவித்தல் உதவி-கிதவி எனச் செய்துவிட்டால் – பிற சில அதேபோன்ற இலக்கியவாதிகளும் இதனை மோப்பம் பிடித்து, “அன்புடையீர், கவிஞர் குடமூக்கின்இறை என் நண்பர், நீங்கள் உதவுவீர்கள் எனச் சொன்னார். இதோ என் கவிதைத் தொகுப்பு, புதிய சகாப்தம் படைக்க என் புரட்சி பூபாள அரை கூவல்… உங்கள் கருத்துகளை அவசியம் பகிரவும்…. அன்புடன், யுகப்புரட்சிப் பிரதாபன்” எனத் தொடர் கெர்ரிலா அட்டேக் செய்துவிடுவார்கள். திக்குமுக்காட வைத்துவிடுவார்கள்… வைரல் மார்க்கட்டிங் ப்ரேஸ்ஸியர் எல்லாம் அந்தக் காலத்திலேயே அமோகமாக இருந்தன, என்னெருமை அம்மணிகளே அம்மணர்களே!
-0-0-0-0-
ஒருவருடைய கவிதைத்(!) தொகுப்பை பெற்றுக்கொண்டு அதற்கு தேவைமெனெக்கெட்டு (அவர் என் கருத்துகளைக் குறிப்பாகக் கேட்டதால்) பிற விஷயங்களைப் படித்துப் பின்புல ஆராய்ச்சியும் என்னிடம் இருந்த ஆங்கிலக் கவிதைத் தொகுப்புகளையும் ‘மறு வாசிப்பும்’ செய்யும்போது அவர் கவிதாயினி ‘ஸில்வியா ப்ளாத்’ கவிதைகள் சிலவற்றை அலேக்காகத் திருடியிருக்கிறார் எனத் தெரிந்தது.
அவருக்குச் சுருக்கமாக ஒரு 15 பைசா தபால் அட்டையில் “ஸில்வியா ப்ளாத் புளகாங்கிதம் அடைவார், அவர் மட்டும் உங்கள் மொழிபெயர்ப்புகளைப் படித்தால்..” என்பதுபோல எழுதியபின்…
… அவர், தம் நண்பரிடம், “ராம் இப்படி பாப்பார ஜாதிவெறியனாக மாறிவிடுவான் எனக் கனவிலும் நினைக்கவில்லை.”
-0-0-0-0-
இன்னொருவர் தன் கவிதைப் புத்தகத்தை அனுப்பியிருந்தார்… படிக்கப் படிக்க என் ரத்த அழுத்தம் அதிகமாகி எத்தைப் பார்த்தாலும் எரிந்துவிழுந்து கொண்டிருந்தது நினைவிலிருக்கிறது. அவ்வப்போது ஒரு நினைவூட்டல் வேறு…
(அந்தக் காலங்களில் ஈமெய்லும் இல்லை, ஸெல்ஃபோனும் இல்லை, என் வீட்டில் தொல்லைபேசியும் இல்லை – 12 வருட காத்திருப்போர்-வரிசையில் இருந்தேன் அப்போது… இந்த நிலைமையில் (இப்போது தோன்றுகிறது – அந்தக் காலத்தின் அவசரப்படேல் அமைதியே வேறு, சுபிட்சம் இருந்திருக்கவில்லை என்பதும் உண்மைதான்!) …நேரில் பேசவேண்டும், இல்லை கடுதாசி எழுதவேண்டும்… ஆக, வாரத்துக்கு ஒருமுறை “அன்புடையீர், என் முந்தைய நினைவுறுத்தல் மடலைக் கண்டீரா?”
… … இம்மாதிரி விஷயங்களுக்கே அடிவயிற்றுக் கலக்கத்தில் இருந்த நான், இப்போதைய டிங் ப்ளிங் ப்ச்ங்க் நோட்டிஃபிகேஷன் யுகத்தில் எவ்ளோ பெருங்கஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்… (ஆனால் பல வருடங்களாக எல்லா நோட்டிஃபிக்கேஷன் இரைச்சல்களுக்கும் சமாதி கட்டியிருப்பதால் கொஞ்சம் ஆசுவாசம் – இருந்தாலும் சுற்றி இருப்பவர்களும் இப்படிக் கிறுக்கர்களாக இருக்கவேண்டுமே! பலப்பலருக்கு க்ளிங் ப்ளிங் என நோட்டிஃபிகேஷன் வந்துவிட்டால் அடுத்த நொடி ஃபோனை நோண்டாவிட்டால் உயிர்போய்விடும் என நினைக்கும் போக்கு, என்ன செய்ய…)
சரி… மேற்படி கவிங்கர் கடைசியாக, ஒருமாதிரிக் கோபதாபத்தில். “அன்பின் ராம், என் கவிதைத் தொகுப்பைப் படித்தீர்களா? கடந்த 8 நினைவூட்டல்களுக்கு நீங்கள் பதிலே அளிக்கவில்லை. உங்கள் கருத்து என்ன? வரைவை அச்சுக்கு அனுப்பவேண்டும்… முடியவில்லை என்றால் சொல்லுங்கள், நம் உறவை முறித்துக் கொள்வோம்!” என்பது போலப் பரிதாபமாக எழுதினார்…
அவருக்கு உடனடியாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரு 15பைசா தபாலட்டையில் எழுதினேன்: “அன்புள்ள கவிஞர் யுகப்புரட்சி பாரதிகரிகாலன் அவர்களுக்கு, உங்கள் கடிதம் கண்டு மகிழ்ந்தேன். உங்களுடைய வரிகள் சத்திய வார்த்தைகளுள்ளவை; அவற்றிலேயே என் கருத்தும் பொதிந்திருக்கிறது, ஆமோதிக்கவும் பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ‘கவிதைத் தொகுப்பைப் படித்தீர்களா’ எனக் கேட்டுள்ளீர்கள் – அதற்கு என் பதில் ஆம். மேலும் நீங்களே பதிலாக – அக்கேள்வியில் பொதிந்துள்ள ‘குப்பை’ என்பதைக் கோடிட்டுக் காண்பித்துள்ளீர்கள், எனக்கும் அதே கருத்துதான். நன்றி. வாழ்க வளமுடன்.”
என் மதிப்புரையைப் பெற்றுக்கொண்ட அவர் எப்படியும் உறவை முறித்துக்கொள்வார் என நான் நினைவிலும் கனைக்கவில்லை, என்ன செய்ய, சொல்லுங்கள்…
-0-0-0-0-
இன்னொருவர், புதியகார்க்கி – ரத்தத்தைச் சுண்டவைக்கும் கட்டுரைப் புத்தகம் ஒன்றை அனுப்பியிருந்தார், எப்போதோ சிலகாலம் நானிருந்த கட்சித் துணுக்கின், தொடர்ந்த தீவிர பக்தர் – இன்னொரு அறிமுகம் என்னிடம் இவரைக் கழற்றிக் கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகியிருந்தார். மார்க்ஸிஸ்ம்-லெனினிஸ்ம் வகை.
ஆதிக்க சாதிகளையும் சுரண்டல்வாத முதலாளித்துவத்தையும் செமத்தியாகச் சாடிச் சாட்டையால் விளாறி ரத்தம் பீச்சியடிக்க உடலை நறுக்கி உப்புக்கண்டம் போட்டு+++… ஒவ்வொரு பத்தியிலும் பற்றவைக்கும் திகுதிகுப் புரட்சித் தீ! ஆனால் பத்தியில் ஒரேயொரு வாக்கியம்தான். பத்திகளும் முக்கால் பக்கம்! படிக்கப் படிக்க மூச்சே அடைத்து விட்டது, என்ன செய்ய…
…இதனை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கிற பயத்தில் இருந்தேன்… புதியகார்க்கியும் எஸ்கேப் நண்பரும் நினைவூட்டல்களை அனுப்பி, ஒரு தொடர் கொசுத்தொல்லையில் என்னை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தார்கள்.
புகா கடைசியில் ஒரு அஞ்சலட்டை: “தோழர், மதிப்புரை அனுப்பமுடியுமா முடியாதா?”
என் உடனடி பதில். “அன்பரே! என்னால் மிதிப்புரை வேண்டுமானால் அனுப்பமுடியும். நன்றி.”
பின்னர் அவர், என்னுடைய பெட்டி பூர்ஷ்வாத்தனம் பற்றி நீண்டதொரு நீலக்கலர் இன்லண்ட் லெட்டரில் சுவையாகத் திட்டியிருந்தார் என நினைவு…
-0-0-0-0-
ஒரு நாவல்காரர் (இது சுமார் 3 வருடங்கள் முன் நடந்ததால் இவருக்கான ஒரு ர்கசியக் குறிப்பும் கொடுக்கப் போவதில்லை) – வெறும் நா என்று மட்டும் இவரைக் குறிப்பிடுகிறேன். அவருடைய பின்புலம் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும், சாதாரண சராசரிதான் ஆனால் தன்னைப் பற்றி பெரும் அதிபுனைவு பிரமைகளைக் கொண்டிருந்தவர்… முரட்டுக்கதர் ஜிப்பா போட்டவெனெல்லாம் ஒத்திசைவு ராமசாமியாகி சாமியாட முடியுமா என்ன?
இந்த நா ப்ளட்டிமேனுடைய நாவலை, ஏதோ ஒரு பசையுள்ள ஆசாமி பதிப்பிக்கிறார் எனச் சொன்னார். (இவர் எல்டிடிஈ பிரபாகரனின் இயக்க பினாமி பணமேலாளர்களில் ஒருவர், வெறி பிரபாகரனின் 2009 கணக்குத்தீர்ப்பு நன்முடிவுக்குப் பின் இவர் கழன்றுகொண்டு ஒரு தமிழ்ப் பதிப்பகத்தையும் ஆரம்பித்தார் எனக் கேள்வி…)
…ஆக, இவர் இஷ்டத்துக்குப் பதிப்பித்துக் கொண்டிருந்த புற்றீசல் புத்தகவரிசையில் பதிப்பிக்கப்பட நா-வுக்கரசருடையதும் அப்போது பொறுமையாக க்யூவில் நின்று கொண்டிருந்தது, என நினைக்கிறேன். இதற்குச் சிலபல வருடங்கள் முன்பு இதே பதிப்பகத்தாரின் இன்னொரு நாவலை (இது வேறொரு எழுத்தாளர் – இவர் மீது நன்மதிப்பு கொண்டிருக்கிறேன்) நான் வரைவுப்படிப்பு செய்து குறிப்புகளைக் கொடுத்திருந்தேன்…
இந்த பின்னவர் சொல்லித்தான் முன்னவர் நா என்னை அணுகினாரா என்பது தெரியவில்லை. ஆனால் – உதவி என்று கேட்டுக் கொண்டு வருபவர்களுக்கு என்னாலான உதவி, கோர்த்து விடுதல் போன்றவற்றை ஒரு வழக்கமாக வைத்திருக்கும் நான், நம் செல்ல தமிழ் இலக்கியவாதிகள் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்பேரழிவு அபாயத்தையும் கருத்தில் கொண்டு என் உயிரைத் துச்சமாக மதித்து அவருக்கு வெகுதைரியத்துடன் – சரி நா ஐயன்மீர், நான் முதல் வரைவைப் பட்டிபார்த்து டிங்கரிங் செய்துகொடுக்கிறேன் என்றேன். யாகாவாராயினும் நா காக்க, என நான் இருந்திருக்கக் கூடாதுதான்… என்ன செய்ய.
நா-க்கில் ஸேடர்ன். நா என்னைப் பதம் பார்த்துவிட்டார். ஒரு பானை சேற்றுக்கு ஒரு மண்ணாங்கட்டி பதம்.
நாவல் – ஒருமாதிரி பாலகுமாரன் + எஸ்ரா +மார்க்கெஸ். அதாவது, கடைந்தெடுத்த குப்பை, நடையே ஜெல் ஆகவில்லை. சுஜாதாவைக் காப்பியடித்து ஒப்பேற்றும் வகை – ஆனால் ஒரு இலக்கிய பாவலா. தொட்டுக்கொள்ள ஈழப்’போர்’ பின்கதை.
கதைகதையாம் கொரோனாவாம். கதாநாயகி சீனாவில் வூஹான் பரிசோதனைச் சாலையில் கொரோனா வைரஸ்ஸுடன் சல்லாபம் என்பது போல… ப்ளடி.
இதில் பல பிரச்சினைகள்: நா அடிப்படையில் ஒரு பிஏ/இளங்கலை-சமூகவியல் – இது கவைக்குதவாத படுகுப்பை என்றாலும் எல்லோராலும் வெகுவாக விரும்பப்படும், படுடிமாண்டில் இருக்கும், உலகத்திலேயே ஆகச்சிறந்த பெருமை மிக்க ‘படித்து முடிப்பதற்கு முன்னாலேயே கேம்பஸ் ரெக்ரூட்மெண்டில் வேலை கியாரண்டீ’ வகைபடிப்பான பிஏ/இளங்கலை-தமிழிலக்கியம் படிக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்…
எனக்கு, சமூகவியலோடு பிணக்கு இல்லை, அது பாவம் ஒன்றுமறியா ஒட்டுண்ணி ஜீவன் – ஆனால், அதன் காரணமாகவோ என்னவோ இந்த நா – வடக்கம் இல்லாத ஆசாமிக்கு அறிவியல் என்பது சுட்டுப்போட்டாலும் வராது. அதனால் அடிப்படை அறிவியலில் ஏகப்பட்ட பரிதாபமான சொதப்பல்கள், தேவையா என நோக வைக்கும் விளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சலங்கள். + கதாநாயகனாக தன்னை வரித்துக் கொண்டிருந்த சமூகவியலாள நா…
+ஏதோ கவர்னமெண்ட் பொதுத்துறை நிறுவனத்தில் ஆஸ்தான அதிகாரி-குமாஸ்தா, அவரைச் சொல்லியும் குற்றமில்லை, பாவம். என் தனிப்பட்ட பிரச்சினை என்னவென்றால், நா-வார் தன்னுடைய தனிப்பட்ட வரலாற்றுக் கதைகளையும் நைஸ்ஸாக நாவலில் உள் நுழைத்திருந்தார். ஆனால் எதுவுமே கோர்வையாக இல்லை.
மூச்சு முட்டினாலும் 700 பக்க எழவை (கணிநியில் தான்!), ஒப்புக் கொண்ட எழவுக்காகப் படித்துத் தொலைத்தேன். (என் ஆயுள் இதனால் சில வாரங்களாவது குறைந்திருக்கும் என அனுமானிக்கிறேன் – அதனால் என்ன, ஒன்றிரண்டு வெண்முரசு செவ்வெக்காளம் பச்சைக்குழல் கருப்புப்பிசாசு எல்லாங்கூடத்தான் படித்துத் தொலைத்திருக்கிறேன். ஆகவே.)
சுயகதையாடல் புராணம் வேறு, இதிஹாஸ ஹாஸ்யம் வேறு, தேவையா?
“ஆனால் நா, சீனா போயிருப்பதாக நீங்க சொன்னதே இல்லியே! நீங்க எப்படி அத நேர்ல பாத்ததுபோல எழுதறீங்க? யவனராணி சாண்டில்யன் ஐநா யுனெஸ்கோ பெரியார் ஈவெரா டர்புர் போல எழுத வேண்டிய அவசியமேயில்லையே? ஏங்க இந்த அறிவியல் புனைவு எல்லாம்… ‘என்னை நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்ததை உரத்துச் சொல்லி தனித்துவமாகச் சிரித்துக் கொள்ள’ நீங்க என்ன எஸ்ரா-வா?”
“கிண்டலா? நீங்க ரொம்ப சிலாகிக்கற ஜெயமோகன், மஹாபாரதம் நடக்கும்போது பாத்தாரா? எப்படியும் நான் எழுதுவது ஸைய்ன்ஸ் ஃபிக்ஷன் இல்ல – மேஜிக்கல் ரியலிஸ்ம்!”
“ஐயோ! நான் அவர் எழுதற எல்லாத்தயும் சிலாகிக்கல, ஆனாலும் அவரு சில குறிப்பிடத்தக்க படைப்புகள எழுதித்தான் இருக்காரு, பொய் சொல்லமாட்டேன். இன்னொரு விஷயம்: அது மேஜிக்கல் ரியலிஸ்ம் இல்ல, மேஜிக் ரியலிஸ்ம், சரியா?”
“என்னவோ சொல்லுங்க, கொற சொல்லியே நாளக் கடத்தறீங்க… சொந்தமா ஏதாவது எழுதினா அதோட பிரச்சின புரியும்… மேட்டிமையோட இதெல்லாம் பாத்தா எப்டி? ஆனா, நானும் உங்க கிட்ட வந்துருக்கக் கூடாது…”
“ஆனாக்க நீங்க சொல்லுங்க… வூஹான் வர்ணனை செய்யறீங்க, அந்தவூரோட தப்புத்தப்பான உள் விவரங்களையாவது பரவால்ல என விட்டுட்றேன், ஆனா டீஎன்ஏ வைரஸ் அப்டீன்னு இஷ்டத்துக்கு அட்ச்சுவுட்றீங்க. வூஹான் எங்க இருக்குன்னாவது பூகோள வரைபடத்துலாவது பாத்துருக்கீங்களா? சும்மா கண்டெய்னர் போர்ட் ஸப்மரீன் ன்னு தாராளமா பேசுறீங்க… அது கடற்கரைல இல்லியே! “
“என்னங்க இது! என்னப் பத்தி உங்களுக்கு தெரியும் ஆனா வாசகன் அப்டியிருக்கமாட்டானே! நான் நான் அப்டீன்னு எழுதினாலும் நான் அந்த நாவலோட நான் இல்லியே! நீங்க ஒரு எழுத்தாளனோட கற்பனைய சிறகொடிக்கிறீங்க! எழுத்து தன் பிரதிய தானே எழுதிக்குதா இல்லையா?”
“ஐயா, ஆனா அடிப்படை விவரங்க சரியே இல்லியே! அங்கதான் பிரச்சினையே!”
“சார், அதையெல்லாம் திருத்திக்கிறேன் – ஆனால் நாவலோட கரு பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”
“ஐயன்மீர், உங்க நாவல்ல கரு இல்ல, வெறும் கருச்சிதைவுதான் இருக்கு, என்னை வுட்றுங்க, ப்ளீஸ்!”
(நா அவர்களுடைய நாவல் இன்றுவரை பதிக்கப்படவில்லை. பாவம் அந்தப் பதிப்பாளர், இம்முறை தப்பித்துக்கொண்டு விட்டார் போலும்; இருந்தாலும் மெல்லத் தமிழினிச் சாகும் என்றால் அது அதன் கர்மவினைப் பயன், வேறொன்றும் சொல்வதற்கு இல்லை, என்ன செய்ய…)
-0-0-0-0-
இன்னொருவர்; இது தமிழக வரலாறுகள் பற்றிய ஆங்கிலக் கட்டுரைகளைக் கோர்த்த புத்தகம். எனக்கு இந்த வரலாறு மண்ணாங்கட்டி தெருப்புழுதிகளிலும் ஆர்வம் உண்டு என்பதால் மிக்க மகிழ்ச்சியுடன் இவர் புத்தகத்தின் வரைவைப் படித்து கருத்து சொல்ல ஒப்புக் கொண்டேன். (ஒரு பொது நண்பர் கைங்கரியமிது)
பிரச்சினை. ஆரம்பித்த உடனே க்றீச்சிட்டு விட்டது. தயவு தாட்சணியம் பார்க்காமல் விக்கிபீடியாவைவும் போகிறபோக்கில் நக்கி வெட்டியொட்டி அப்படியொரு கதனகுதூகலம். ஜாஜ்வல்யம். விளக்க வார்த்தைகளே இல்லை.
இந்த அழகில் டிஎஸ் கிருஷ்ணன் (இவரும் ஒரு வரலாறு ஆர்வலர், நிறைய்ய்ய்ய எழுதுகிறார், சில சொல்லிக்கொள்ளும்படியாகவே இருக்கின்றன) எழுதிய சில அராஜக விஷயங்களையும் உள்சேர்த்தி… (இது சிதம்பரம் கோவிலருகில் ஏதோ பெரிய அளவு நீர்-பொறியியல் தொடர்பான பெரும் ஆச்சரியம் இருக்கிறது என அவர் இஷ்டத்துக்கு அடாவடியாக அட்ச்சிவுட்டு எழுதியது) – எனக்கு வெறுத்து விட்டது…
“ஐயா, நீங்க காப்பி அடீங்க, ஆனா அதயெல்லாம் கொஞ்சம் சரிபாத்தாவது எழுதக் கூடாதா?”
“ஸ்வாமீ! இதை நானே ஸெல்ஃப் பப்ளிஷ் செய்யப்போறேன், என்னால நாலு பேருக்கு வரலாறு பத்தி ஆர்வம் வந்தா போறும்… பொன்னியின் செல்வன்ல ஆழ்வார்க்கடியான்…”
“ஐயோ ஐயா! எவனுக்கு அடியிலும் அடியில் கண்ட சொத்துதான் ஆடிட்டு இருக்கும். ஆழ்வாரே கடிச்சாலும் கடிக்காம கடுக்கா கொடுத்தாலும் இத்தான் உண்மை… என்ன வுட்றுங்க…”
“சரி. நண்பர் சொன்னார்னு ஒங்க கிட்ட வந்தேன் – உங்க ஃப்ரேங்க் ஒப்பீனியன் குடுங்க, எதுவானாலும் பரவாயில்ல, நான் ரொம்ப ஓபன்…”
“ஐயா, என்கிட்ட க்ரேங்க் ஒப்பீனியன் தான் இருக்கு. நானெல்லாம் உங்க புக் பத்தி ஒப்பீனியன் கொடுக்கற அளவுக்கு பெரிய ஆளில்ல…”
“சார், பரவால்ல, தைரியமா சொல்லுங்க… பொது சபைக்கு வந்த்ட்டா கருத்துகள தாங்குற சக்தியும் இருக்கணுமே!”
“சரீங்க. என் பார்வைல நீங்க உங்க கொழந்தகுட்டீங்களோட சௌக்கியமா இருந்தா அதுவே போதும், தமிழ் வரலாற லூஸ்ல வுட்றுங்க… ஒரு பிரச்சினயும் இருக்காது…”
“ஏங்க இப்படி பொறாமைல பேசுறீங்க? ஃப்ரேங்க் ஒப்பீனியன் தான கேட்டேன்… ரெண்டு ஆதரவான வார்த்தைங்களுக்கு இவ்ளோ தட்டுப்பாடா?”
“ஐயா மன்னிக்கவும் ‘ஃப்ரேங்கா பேசு’ அப்டீன்னா ‘எனக்குப் பிட்ச்ச மாரீ பேசு’ அப்டீன்னு அர்த்தம் வரும்னு நான் எதிர்பார்க்கல, ஆனா பரவாயில்ல… எனக்கு வேற வேல இருக்கு, பெஸ்ட் விஷஸ். பை.”
“… …”
(இந்த விக்கிபீடியர், எங்கள் பொது நண்பரிடம் பொருமித் தீர்த்திருக்கிறார். “அகங்காரம் பிட்ச்ச பொறுக்கி… இவனெல்லாம் எப்டீ ஸ்கூல் டீச்சரா இர்ந்திருக்கான்! போக்ஸோ கேஸ்ல மாட்டிக்கப் போறான்… பாத்துட்டே இருங்க… ப்ராமின்ஸுக்கு இவ்ளொ அர்ரொகன்ஸ் இருக்கறதாலதான் அப்பப்ப தட்டிட்டே இருக்காங்க… …”
நண்பருக்குக் குதூகலம். ஆர்வத்தோடு பகிர்ந்து கொண்டார் – கைகாதுமூக்கு வைத்துச் சொன்னாரோ தெரியவில்லை… எப்படியும், தான் சொல்லமுடியாததை பாப்-வரலாற்றாளர் சொல்லிவிட்டார் என்பதாலும் அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது…)
சுபம்.
இதற்குப் பின்னர், ஒருவருடைய ப்ளடி புத்தகத்தையும் வரைவு அளவில் படிப்பதாக இல்லை, ஏன், இணையக் காட்டுரைகளையும் – என முடிவு செய்திருந்தேன்; அலுப்புதான் முக்கியக் காரணம். எல்லாம் வல்ல இறைவன் தான் (அங்கு முருகன் கோவில் இருப்பது என் குலதெய்வப் பெருமையை அதிகரிக்கச் செய்கிறதே!) என்னைக் காப்பாற்ற வேண்டும்.
அதைவிட முக்கியமாக, எல்லாம் வல்ல இறைவன் – என்னிடமிருந்து தமிழ் அலக்கிய வாதிகளையும் பொழுதுபோக்கு வரலாற்றாளர்களையும் காப்பாற்ற வேண்டும். நன்றி!
-0-0-0-0-
நிலைமைகள் இப்படிக் கவலைக்கிடமாக இருக்கையிலே…
சில வாரங்கள் முன் இன்னொரு ‘இளைஞர்’ ஆர்வத்துடன் எழுதிய தன் கட்டுரையை, நான் உள்ளடங்கியிருக்கும் ஒரு சிறு வாட்ஸ்அப் குழுவில் (தற்போது, என் குடும்பக் குழுவையும் சேர்த்தி மொத்தம் 4 குழுக்களில் இருக்கிறேன், முடிந்தவரை இந்த குழுக்களைத் தவிர்க்கிறேன் – ஓரளவு வெற்றிகரமாக இருக்கிறது இந்த ‘வெற்றி வாட்ஸ்அப் திட்டம்’ ஜோஸஃப்விஜய்க்கு நன்றியுடன்) பகிர்ந்தார்… ஒருமாதிரி ஒப்புக்கொள்ளக்கூடிய அளவில், அக்கட்டுரை (குட்டுரை?) சில விஷயங்களைப் புரிகிறார்போல் பேசியது. அலுவலகத்தின் அலுப்படையவைக்கும் சூழலில் சுயத்தைப் பாதுகாத்து போஷித்துக் கொள்வது எப்படி என்பது போல… பணியை விட்டகலும்போது (அல்லது வெளியேற நேரிடும்போது) அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும்++
அதே சமயம் இன்னொரு நண்பர், பொறுப்புணர்ச்சியுடனும் நாசூக்காகவும் ஆக்கபூர்வமாக கருத்துகளைச் சொல்லிக் கடுப்பேற்றினார், அவர் வழமையே போல.
அவர் கடுப்பேற்றிச் சித்தர்.
ஆனால், என் சொந்த பயங்களின் காரணமாக, கருத்தே சொல்லாமல் டபாய்க்கலாம் என்றால், ஏதோ என் கருத்துகளைச் சுருக்கமாக அல்லது சுருக் என்றாவது சொல்லவேண்டிய நிலையில் என்னை வை(த்)துக்கொண்டு…
(இவ்வுரையாடலில் ஈடுபட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு, முடிந்தவரை உண்மை விளம்பிக் குறிப்பான்களை அகற்றிவிட்டுச் சில ஸ்க்ரீன்ஷாட்களைக் கொடுக்கிறேன்; இதில் அவசரகதி செய்திப் பரிமாற்றத்தினால் ஏற்பட்ட இலக்கணப் பிழைகளைப் பொறுத்தருள்வீர்!)
இளைஞர்’ விட(வில்)லை. என்ன செய்ய… (need for me to talk -> NO need for me talk)
*but, if in a closed forum like this, we could not engage at these subterranean levels, then where else could we!
பணிவுடனும் அன்புடனும்,பிறத்தியார்மீது கரிசனத்துடனும் இருப்பவர்கள் – இப்படியா பதில் கொடுப்பார்கள்? நான் கொடுத்தேன். வழக்கம்போலவே என்னைத் திட்டுவார், அல்லது குழுவிலிருந்து வெளியேறி விடுவார், குறைந்தபட்சம் வருத்தத்தில் குமைந்து கொண்டு அமைதியாக இருப்பார் என நினைத்தேன்…
ஆனால், ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்… அவர் என் கருத்துகளை பரிசீலிக்கிறார் என நினைக்கிறேன் – வெகு நார்மலாகவே இன்னமும் உரையாடல்களில் ஈடுபடுகிறார்… கலிகாலம் தான்!
எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை – ஆனால் ஒருமாதிரிக் கலக்கம் தரும் மகிழ்ச்சி…
(+பொய் சொல்லக் கூடாது – என்னுடைய “மதிப்புரை”க்கு வந்தவற்றில் சுமார் 2-5% ஓரளவுக்குத் தரமானவைதான் எனத் தோன்றுகிறது; தமிழின் தற்கால நிலைக்கு இந்த விகிதம் மிக அதிகம் என்றாலும் – முதலுக்கே மோசமில்லைதான். நன்றி!)
(அடுத்த பகுதியில் இன்னும் சில சொல்லவேண்டிய பகுதிகள் வரலாமோ என்ன எழவோ!)




