உடைந்தேவிட்ட அடுத்த அதிரடி பகீர் பதிலடிச் செய்திதான்,  இந்தத் தரமான கொடூர சம்பவம்!

May 27, 2026

“…புட்டுப் புட்டு வைத்து வறுத்தெடுத்துப் புரட்டிப்போட்டு, அடித்து ஆடி, பட்டயக் கிளப்பி, மிரட்டி மிரளவைத்து மரண அட்டாக் செய்து வெளுத்து வாங்கிப் பொளந்துகட்டி உடைத்துப் பேசி தட்டித் தூக்கி முதுகில் குத்தி நெருப்போடு விளையாடி, பக்கா ஸ்கெட்ச் போட்டு ரகசியத்தைப் போட்டு உடைத்து சோலி முடிஞ் உற்சாகத்துடன்…

… ஆத்திரமாகக் குழப்பிக் கடுங்கோபக் காட்டம் காட்டிப் பொளேறென்று ஆவேசமாக நெத்தியடித்துத் தாவிச் சுளுக்கெடுத்துக் கதிகலங்கிச் சவால் விட்டுக் களமிறங்கி வெளுத்தெடுத்து எச்சரிக்கை ஷாக் கொடுத்து, ரியாக்சன் மர்மங்களைச் சிடுக்கவிழ்த்து துவைத்து எடுத்து விளாசி அசத்தி, சதித்திட்டங்களை ஒழிக்கும் சிக்கல் தடாலடி பேக்ரௌண்ட்களை அலசி எகிறி அடித்து நுட்பமாக சலசலப்புடன் அடங்க மறுத்து பரபரத்து வெளிவராத சேட்டை செய்து திட்டித் தீர்த்துப் பந்தாடி  உருக்கத்துடன் வம்பிழுத்து, பின்னடைவில்லாத ஜென்ஸீக்களைப் புதிய திருப்ப முட்டுக்கட்டைகளாகக்  கணித்து, அம்பலப் படுத்திப் பொரிந்து தள்ளி…

…தெறிக்கவிட்டுக் கொதித்து எகிறிப் பொட்டில் அடித்து, உள்ளடிப் பின்னணி வியூக சரமாரி வலுத்து மரணகலாய் சர்ச்சை வரலாறை உலுக்கிப் பிழிந்து பழிதீர்த்துப் படைத்து அக்குவேறு ஆணிவேறாகச் சரவெடியுடன் வலை விரித்துப் பதறிக் கொந்தளித்து, அவசரமாக மோதி, மெகா மாற்றங்களை வெடித்து இறக்கி, ரத்தத்தை உறைய வைக்கும் இரும்புகரத்தைத் தூள்தூளாக்கிப் புயலெழுப்பி சைக்கோவாகி உச்சகட்ட ஆக் ஷனில் இறங்கி ஸீக்ரெட் ஆப்பரேஷன்களின் செய்திகளை முன்கூட்டியே ஸோர்ஸ்களைப் பயன்படுத்தி நிலைகுலைந்து திக்குமுக்காடி ரூட் போட்டு வெளியான உண்மைப் போர்த்தந்திர ஆயுத பி டீம் மூலம் கசிந்த அடுத்த ப்ளானுக்கான மூவைச் சற்று முன்னே அறிந்த… …

… களைகட்டிச் சூடாகி மிரளவைக்கும் அறிவுஜீவி விமர்சகரும் மிக மூத்த ப்ரிமியம் பத்திரிகையாளருமான, முத்திரை பதித்த ஒத்திசைவார் திரு ராமசாமியார் – சொல்லப் படாத புதைந்த நுண்ணறிவு உண்மைகளை, அறியாத நுணுக்கமான தகவல்களை டீகோட் சல்லடை அசத்தல் செய்து சுடச்சுட வாயடைக்க வைக்கும் ஆதாரங்களுடன் மாஸ்டர் ப்ளான் அதிர்ச்சி ஒரு நொடி குதிரைபேரக் கவிழ்ப்பு ரிப்போர்ட் கொடுத்து…

… சாட்டையைச் சொடுக்கிச் சவுக்கைச் சுழற்றி நைசாகப் பயங்கரமாகச் சீறி, பூகம்பமாக வெடித்து அலர்ட் செஞ்சு உஷ்ணத்துடன் சூடாகி, கோதாவில் இறங்கிப் போட்டுத் தாக்கித் தாளித்துப் பளிச்சென்று சிக்னல் கொடுத்து அரங்கத்தை அதிரவைத்துக் குமுறிப் பந்தாடி லெஃப்ட்ல ஹேண்டில் டீல் பண்ணி செக் வைத்து வரிவரி திடுக் டெவலப்மெண்டாகச் சிக்கப்போகும் குவிந்த விறுவிறு வேதனையுடன் எக்ஸ்க்ளூஸிவ்வாக சர்ச்சைக்குள்ளாகும் வார்த்தை விட்டு விளக்குகிறார்… “

ஸ்ஸ்ஸ்… அப்பாடா!

(மன்னிக்கவும், அப்படியெல்லாம் இல்லை, இதுவும் +1 சாதா பதிவுதான். மேலும், எனக்கு நானே நைந்த டைட்டில்கார்ட் டீஸர்வகையறா உணர்ச்சிகரமைதுன எழவெடுக்காமல், வேறு எந்த வேலைவெட்டியற்ற சகஏழரைதான் இந்தக் தண்டக் கருமாந்திரக் காரியத்தைச் செய்வார், சொல்லுங்கள்?)

(உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது)

-0-0-0-0-

ஆனால் இதை எழுதி முடிப்பதற்குள்ளேயே மிகவும் தளர்ந்து விட்டது.

ஆக. அவ்ளோதான் பதிவு.

…போங்கடா, பப்பரப்பானுங்க்ளா… பெர்ஸா பட்க்க வந்த்டானுவ… ப்ளட்டி ஹெல். போய் உர்ப்படியா ஏதாச்சும் செய்ங்கடா…

நீங்க படிக்கற பதிவு கேக்கற பாட்கேஸ்ட், யூடூப் விடியோ… எல்லாம் இதே கதைதாண்டா… வேலவெட்டியத்த தண்டகருமாந்திரங்கள, மானாவாரியாக அட்ச்சிவுவுட்றத திர்ப்பிதிர்ப்பி கேட்டு-பாத்து சீரழியாதீங்கடா… ஆனா, அதே சமயத்துல இந்த வாயோயாத தொழில்முறைப் பேச்சாளர்களயும் அவ்வப்போது கேளுங்கடா… வாய்விட்டுச் சிரிங்கடா.

மாறாக இதே சமூக வலைத்தளங்கள்ளியும் பிரமாதமான பொக்கிஷங்க அபரிமிதமா குமிஞ்சி கெடக்குதடா… அதெல்லாம் பாத்து-கேட்டு, பயிற்சி செஞ்சி, முட்டிமோதி நடைமுறைல செய்துகாட்டி ஜமாயுங்கடா…  சலிப்புக்கோ போரடிப்பதற்கோ கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லடா! அனுதினமும் புதுசு புதுசா ஏதாவது கத்துக்க முடியுதுடா. உலகம் விரியுதுடா! புல்லரிக்குதடா…

(சரி, இந்த எழவை ஏன் எழுதினேன்? இது தேவையா??

பிரச்சினை என்னவென்றால் – அண்மையில் நடந்துமுடிந்த ‘தமிழகத் தேர்தல் களேபரங்கள்’ பின்புலத்தில், கடந்த 2-3 மாதங்களில் ‘நண்பர்’களிடமிருந்து பலப்பல நல்லெண்ண யூடூப் பரிந்துரைகள் வந்தன. இவற்றில் சுமார் 15-20 மணி நேரங்களை 2X வேகத்தில் செலவழித்திருப்பேன் என அனுமானிக்கிறேன். அனுப்பப் பட்டவைகள் அனைத்தையும் பார்த்திருந்தால் சுமார் 200-300 மணி நேரங்களாவது செலவழிந்திருக்கும். ஆனால் நல்லவேளை, என் போதும் காலம், தப்பித்துவிட்டேன்.

இவற்றில் சில சுவையாக, குறிப்பிடத்தக்க கருத்துச்செறிவுடன் இருந்தன – பல, வெறும் பப்பரப்பாக்கள், அரைத்த மாவை அரைத்தவை – ஒன்றிரண்டு முறை இவற்றைக் கேலி செய்திருக்கிறேன்கூட – ஒரு புதிர்க் கேள்வி, சிலபல பகீர் பதில்கள்: ‘துரந்தர்’ என்றால் என்ன? April 6, 2026

ஆனாலும் இவைகளுக்காக இந்த ஆசாமிகள்/சேன்னல்கள் போடும் டீஸர் /டைட்டில்கார்ட் வகையறா விளம்பரங்கள் இருக்கின்றனவே – இவை படு அலாதியாக இருந்தன, இருக்கின்றன – இவைதான் இப்பதிவுக்கும, ஆகவே அதன் மீதான உங்கள் வெறுப்புச் சலிப்புக்கும் முகாந்திரக் காரணங்கள்) 

-0-0-0-0-

…சரி, தப்பித் தவறி ஒன்றிரண்டு தமிழ்வழி யூடூப் பொழிப்புரைப் பேச்சாளர்களும், ஹோம்வர்க் செய்பவர்களாக, ஜோடனை செய்யாதவர்களாக நன்றாகவே இருக்கிறார்கள் – அதில் ஒருவர் பத்ரி சேஷாத்ரி – இவரை நான் சமயம் வாய்க்கும்போதெல்லாம் தொடர்ந்து பார்க்கிறேன், இவரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன்; இன்னொருவர், எனக்கு அண்மையில் கொஞ்சமாவது பார்க்க வாய்ப்பு கிடைத்த கெவின் பால் என்பவர்.  (இவருடன் எனக்கு முன்னறிமுகம் இல்லை)

இன்னமும் சிலபலர் (பேசுதமிழாபேசு ராஜவேல் நாகராஜன்?) இப்படி இருக்கிறார்கள் எனத்தான் நினைக்கிறேன். அப்படி இருக்க வேண்டும் என விழைகிறேன். குறைந்த பட்சம் இவர்கள் இருவராவது தொடர்ந்து பொலியவேண்டும் என வாழ்த்துகிறேன்.

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *