எனக்கு வரும் சில மின்னஞ்சல்கள், பலர் கேட்கும் கேள்விகள்,  என்னைக் கீழ்கண்டவை பற்றி எழுத வைத்திருக்கின்றன. மறுபடியும் மறுபடியும் ஒரே கவைக்குதவாத விஷயத்தை பலவாறு எழுதுவது எனக்கு அலுப்பாக இருக்கிறது. ஆகவே, எனக்கு ஏதாவது மின்னஞ்சல் அனுப்புமுன் (அப்படி அனுப்பியேயாக வேண்டுமென்றால்) இவற்றைப் படித்தால் நலம்.

ஆ… ஒரு விஷயம் – ஏதாவது திட்டித்தான் எழுதப்போகிறீர்கள் என்றால், இதனைப் படிக்கவேண்டிய அவசியமே இல்லை.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-

1. நான் அறிவுஜீவி கிறிவுஜீவி என்றெல்லாம் இல்லை. இதனை நான் இதன் ஆங்கிலச் சூழலில் உபயோகிக்கப்படும் ‘இன்டெலக்சுவல்’ வார்த்தையின் மொழிபெயர்ப்பாகப் பார்க்காமல், நம்முடைய தமிழ்ச்சூழலில் எப்படி பிரயோகிக்கப்படுகிறது என்று பார்க்கிறேன்;  உண்மையில் இந்த வார்த்தையை சமகாலத் தமிழ்ச்சூழலுடன் பொருத்திப் பார்த்தால்,  உங்களுக்கே தெரியும் – நீங்கள் என்னைக் கேவலப் படுத்துகிறீர்கள் என்று. எல்லோருக்கும் இருக்குமளவு மூளைதான், நேரம்தான் எனக்கும் இருக்கிறது – எனக்குத் தலைவீங்கியெல்லாம் இல்லை; பின் நவீனத்துவம் குண்டூசி நவீனத்துவம் கட்டுடைப்பு ஆட்டோஃபிக்‌ஷன் மண்ணாங்கட்டி தெருப்புழுதி மேஜிக்ரியலிஸ்ம் நக்ஸல்பாரி இனமானம் கலகப்பிரதி ஜாதிஒழிப்பு திராவிடம்ஆரியம் மதச்சார்பின்மை கடவுள்ஒழிப்பு பகுத்தறிவு சுயமரியாதை குறுந்தேசியம் தமிழீழம் தொப்புள்கொடியுறவு என்றெல்லாம் கண்டமேனிக்கும் அற்பத்தனமாக  உளறிக் கொட்டிக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு மோவாக்கட்டையைச் வருடிக் கொள்வதற்கெல்லாம், சூனியத்தை வெறித்துச் சூத்தாமட்டையைச் சொறிந்து கொள்வதற்கெல்லாம் எனக்கு முடியாது, மன்னிக்கவும.

நான் நிறையப் படிப்பவன், யோசிப்பவன் தான் – இதற்காக என்னை மன்னித்து விடுங்கள்.

ஆனால், நான் கடினமான உடலுழைப்பு செய்யமுடிவதில், அதனைத் தொடர்ந்து செய்வதில் பெருமையும் கர்வமும் உள்ளவன். என்னால், இப்போதும் நாள் முழுவதும் ஸிமெண்ட் மூட்டைகளை, கீழ்த்தளத்திலிருந்து முதல் மாடித் தளத்தில் தூக்கி வைக்கமுடியும். நாள் முழுதும் தோட்டவேலை செய்யமுடியும். அரை நாளுக்காவது தொடர்ந்து திமிசுக்கட்டையடிக்க முடியும். பலவிதமான பராமரிப்பு வேலைகளைச் சுணங்காமல் செய்யமுடியும். குறைந்த பட்சம் 14 கிமீ தொடர்ந்து, நிற்காமல்  ஓட முடியும். ஒரு நாளைக்கு மிக லகுவாக 130 கிமீ மிதிவண்டியில் செல்லமுடியும். ஐம்பது பேருக்கு ஒண்டியாளாகச் சமைத்துப் பரிமாற முடியும். பொதுவாக அஹிம்சைவிரும்பி என்றாலும், தேவைப்பட்டால் (=அநீதியாக நெருக்கடி கொடுக்கப்பட்டால்)  அடிஉதையில் ஈடுபடவும் முடியும் – இவற்றைக் கொடுக்கவும் வாங்கவும் முடியும் மன_உடல்வலியிருக்கிறவன். வாங்கியும் கொடுத்தும் இருப்பவன். ஆகவே நான், சர்வநிச்சயமாக  ஒரு தமிழ்நாட்டுத் தமிழ் அறிவுஜீவியல்லன். எனக்கு இதில் கர்வம்தான்.

ஆக, உட்கார்ந்த வாக்கில், அலுங்காமல் நலுங்காமல் நான்கு புத்தகங்களை மேலோட்டமாகப் புரட்டிவிட்டு ‘வாசிப்பனுபவம்’ கிடைத்ததாக கருதிக்கொண்டு,  உலக அனுபங்களைப் பெற்றதாக மப்பு கொண்டு, அல்லது நான்கு திரைச்சதைகளைத் திருட்டு டிவிடியில் பார்த்துக்கொண்டு, பின்புறத்தைத் தூக்கி வாயுவை வெளியேற்றி, முன்புற துவாரத்தால் உள்ளீடற்ற, சுயானுபவத்தால் செறிவு படுத்தப் படாத வார்த்தைகளை வாந்தியெடுக்கும் அறிவுஜீவி ஆசாமிகளில் ஒருவனாக (அல்லது மனிதவுரிமைவாதியாக, களப்பிணியாளனாக சினிமா விமர்சகனாக இன்னபிற) என்னை நீங்கள் இதுவரை கருதி வந்திருந்தால் – கருதினால் எனக்குக் கோபமில்லை – சிரிப்புத்தான் வருகிறது. மன்னிக்கவும்.

2. நான் ஒரு தொழில்முறை எழுத்தாளனல்லன். அதாவது, எனக்குத் தொழில், சர்வ நிச்சயமாக,  எழுத்து அல்ல. இந்த அல்ல-வை இன்னும் ஒருமுறை அடிக்கோடிடவும்.

எனக்கென்று பல தொழில்கள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்த ஒத்திசைவு என்பது இக்காலங்களில் — எனக்காகவும், நான் எழுதுவதைப் படிக்கும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பத்து நண்பர்களுக்காகவும் எழுதப் படுவது – அதாவது, ஒரு குறிப்புப் புத்தகம் அல்லது நாட்குறிப்பு போல – அவ்வளவுதான். ஆனால், யார் வேண்டுமானாலும், படிக்கவேண்டுமென்றால் படிக்கலாம். ஆக, எழுதுகிறவன் எல்லாம் எழுத்தாளனில்லை – என்கிற விஷயம் எனக்கு நன்றாகவே தெரியும்.

3. நான் ஒரு பப்பரப்பா பத்தி எழுத்துச் சமையல்காரனல்லன். எனக்கு, இந்தப் பதிவுகளை எழுதுவது, ஒரு வெட்டி ‘டைம்பாஸ்’ பொழுதுபோக்கு அல்ல. இவற்றை எழுதுவதினால் சில சமயங்களில் எனக்கு என் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை கிடைக்கிறதுதான். ஆனால் அது முக்கியமில்லை. எனக்கு மனதிற்குச் சரியென்று பட்டவற்றைச் சொல்லவேண்டும், எனக்குப் பிடித்தவற்றை (அல்லது பிடிக்காதவற்றை), என் நினைவுகளை, குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், அவ்வளவே; நான் ஒரு – புதியதறுதலை பழையதலைமுறை என போங்காட்டமாடும் தொழில்முறை பத்தி எழுத்தாளன் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பக்கம் காப்பியடித்துக் கொண்டே, அற்பத்தனங்கள் செய்து கொண்டே, ஜாதிமத இனபேதம் பார்த்துகொண்டே – இன்னொரு பக்கத்தில் நியாயாவேசத்தையும், அறத்தீயையும், ‘சுயமரியாதையையும்,’  ‘இனமானத்தையும்’ ஊட்டி வளர்க்க வேண்டிய அவசியமோ, அதே சமயம் ‘குட்டி நடிகை ஜல்சா’ பற்றி பிதுங்கும் பாற்சுரப்பிப் படங்களோடு அவ்வப்போது எழுதுவதோ – அவசியமில்லை எனக்கு. நடக்க நடக்க, சூடாகச் செய்தியை, உளறல் விமர்சனங்களைப் பரிமாறுவது என் வேலையல்ல.

4. நான் பொதுமக்களுக்கு என் எழுத்தால் சேவை செய்ய, அவர்களை உய் உய்  என்று உய்விக்க என்றெல்லாம் விழையும் மதபோதகன் அல்லன். என்னுடைய ‘ நல்ல’ பக்கத்தை மட்டும் காட்டிக்கொண்டு, நான் இப்படி எழுதினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, இவர்களைப் பற்றி எழுதினால் அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ, அவர்களைப் பற்றி எழுதினால் இவர்கள் வருவதை நிறுத்திவிடுவார்களோ, எப்படி நடுநிலையாளனாக, மதச்சார்பற்றவனாக,  ஸெக்யூலர்காரனாக காண்பித்துக் கொள்வது, பொதுப்புத்தியின்மை  சார்ந்து, மனதுக்குத் தெரிந்து பொய்க்கருத்து சொல்லும் politically correct ஆசாமியாக இருப்பது, தினமும் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது என் பதிவுகளைப் படிக்கவேண்டுமே, இந்த எண்ணிக்கை ஏறிக் கொண்டே இருக்கவேண்டுமே, தினம் தினம் பதிவு போடாவிட்டால் யாரும் கவனிக்க மாட்டார்களே, அய்யய்யோ அம்மாடியோ என்றெல்லாம் அலைக்கழிக்கப் பட்டு, மென்று முழுங்குவதையெல்லாம் செய்ய, எனக்கு விருப்பமேயில்லை.

என்னைப் பொறுத்தவரை – நான் எழுதுவதை, உங்களுக்கு வேண்டுமானால், விருப்பமிருந்தால் படியுங்கள் – இல்லாவிட்டால் வேறெங்காவது ஓடுங்கள் — அல்லது உபயோகமாகச் செலவழியுங்கள். இன்னொன்று: அய்யாமார்களே – இக்காலங்களில், என் பதிவுகளை, என்னையும்  சேர்த்து ஒரு நாற்பது-ஐம்பது பேர் தினம் படித்தால் அது அதிகம். ஆக, என்னொருவனால் ஏதாவது பெரிய பாதிப்பு ஏற்படுமா என்பதெல்லாம் நகைச்சுவைக்கும் அப்பாற்பட்ட விஷயம்.  இந்த விஷயத்தில் எனக்குப் பிரமைகளோ, பாவனைகளோ நிச்சயமாக இல்லை. சரியா?

5. நான் ஒரு தொழில்முறை நடுநிலைமைக் காரன் அல்லன். இதை, இரண்டுமுறை அடிக்கோடிட்டு 108 முறை பாராயணம் செய்யவும். இந்த நடுநிலைமை இழவைப் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். முடிந்தால் படிக்கவும்.

6. நான் எப்போதும் கறார் கறார் என்று, பால் கறார்க்கும் ஆசாமியல்லன். எனக்குப் பிடித்ததை, பிடிக்காததைப் பற்றித்தான் நான் எழுதமுடியும். சில சமயம் கறார், சில சமயம் மென்மை. சில சமயம் வெறுப்பு, சில சமயம் விருப்பு.

நான் சாம்பல் நிறத்தின் மகாமகோ உபாசகன். ஆக, கறுப்பு வெள்ளை நிறங்களில் மட்டுமே, அவை சார்ந்த பகுப்புகளினூடாக மட்டுமே என்றெல்லாம் என்னால் உலகத்தைப் பார்க்க முடியாது. நீ நல்லவனா கெட்டவனா என்கிற சுளுவான பகுப்பு என்னிடம் இல்லை. எனக்குப் பிடித்ததை பிடித்திருக்கிறது என்று எழுதுகிறேன். பிடிக்காதவற்றை பிடிக்கவில்லை என்கிறேன்; மேலும், கிண்டல் செய்கிறேன்.

ஆக, எனக்கு என் பாடு. உங்களுக்கு உங்கள் பாடு. உங்களுக்குப் பிடித்ததை, பிடிக்காத கண்றாவிகளைப் பற்றி நீங்களே தயவுசெய்து எழுதிக் கொள்ளுங்கள்.

7. நான் ஒரு தொழில்முறை விமர்சகன் அல்லன். ஆக, பொய் பொய்யாக, நடு நிலைமை என்றெல்லாம் உளற வேண்டிய அவசியம் எனக்கில்லை. எதையாவது விமர்சனம் செய்தே ஆகவேண்டும் என்று அலைபவனில்லை. முக்கியமாக சினிமா திரைச்சதை விமர்சனம் என்கிற பெயரில் போங்காட்டம் ஆட முடியாது. மன்னிக்கவும். நீங்கள் கேட்டீர்கள் என்று எந்தப் புத்தகத்தையும், ஆசாமியையும் விமர்சனம் என்றெல்லாம் செய்ய முடியாது. எனக்கு வேண்டிய, பிடித்த அல்லது பிடிக்காத புத்தகங்களை நானே வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்ய முடியும், அவ்வளவுதான்.

8. நான் ஒரு தொழில்முறை இலக்கியவாதியல்லன். இலக்கியக் காரனல்லன். கவிஞன் கிவிஞன், சிறுகதை, பெருவதை எழுத்தாளனெல்லாமில்லை. தொழில் முறை கட்டுரையாளனுமில்லை. நான் ஒரு இலக்கியத் துய்ப்பாளன் மட்டுமே. எனக்கு நல்ல இலக்கியம் (இலக்கணமும் கூட) பிடிக்கும்.

ரெண்டேரெண்டு அரைகுறை பத்திகளைக் கமுக்கமாகக் காப்பியடித்து எழுதிவிட்டு, ஒரு நாவலாசிரியர் என்றோ மகாமகோ கட்டுரையாளனென்றோ நான் சொல்லிக் கொண்டு, யாரிடமாவது தொங்கி, புத்தகப் பதிப்புக்காக அலைபவனில்லை. பின்னர் மதிப்புரைக்காக, விளம்பரத்துக்காக என அலைபவனல்லன். தமிழின் பிரச்சினையே, அதன் சாபக்கேடே — தேர்ந்த வாசகர்கள், டபக்கென்று, உடனே, தேர்ந்த இலக்கியக்காரர்களாகி விடவேண்டும் எனப் பிடிக்கும் அடம்தான். ஆனால் நான் – பத்து போல சுந்தரராமசாமி / அசோகமித்திரன் / புதுமைப்பித்தன் / சிசு செல்லப்பா / தருமு சிவராமு /… /…  புத்தகங்களைப் படித்தவுடன் – உடனே கை நமநமத்து கண்டமேனிக்கும் ஏதோ ஒரு கந்தறகோளத்தை எழுதி  ‘ நானும் ஒரு எழுத்தாளன் தான்’ என்று அல்லாடும் ஆசாமியல்லன்.

9. நான் ஒரு தொழில்முறைப் பொறாமைக்காரன் கிடையாது. ஏனெனில் நான் ஒரு புத்தகம் எழுதி அதை யாராவது பாவப்பட்ட பதிப்பாளன் வெளியிட்டு, அது என்  மதிப்பீட்டில் ஜெயமோகன் புத்தகத்தை விட நன்றாகவே வந்தும் யாரும் என்னைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்களே என்றெல்லாம் அற்பத்தனமாக நினைத்து, ஜெயமோகனைக்  கரித்துக் கொட்டவெல்லாம் முடியாது.

அதேபோல, யாராவது என்னைவிட நன்றாக என் குழந்தைகளுக்குப் பாடம் / உலகம் சொல்லிக் கொடுத்தால் அவர்களை கீழ்த்தரமாகப் பேசி – ஆனா அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனா அவர் வாய் நாறும், ஆனா அவரு வேற ஜாதியென்று – சகதியில் தள்ளுபவன் கிடையாது. என்னை விட பல, மிகப் பல பெரியவர்கள் (இவர்களில் சிலர் எனக்கு வயதில் இளையவர்கள் கூட) சகல துறைகளிலும் இருக்கிறார்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு  அறிவேன்.

10. நான், பல விஷயங்களில், ஒரு தொழில்முறை அறிவுரையாளன் கிடையாது. அப்படி இருக்க வேண்டுமானால், எனக்குக் கோபமே வரக் கூடாது. சிரித்த முகத்துடன், மனித மேன்மைக்காக உழைப்பதெல்லாம், களப்பணி கிழப்பிணி செய்வதெல்லாம் எனக்கு முடியாது. மேலும், என்னுடைய பங்களிப்பு என்பதை எங்கு கொடுக்கலாம் என்பதில் எனக்குச் சந்தேகங்களில்லை.

ஆக, பொறுமையாக, அறிவுரை அறிவுரையாகவெல்லாம் என்னால் வழங்கமுடியாது. (கேட்டுக்கொள்ளவும் முடியாது, போங்கடா!)

11. நான், பிடித்த முயலுக்கு நான்கே கால் எனச் சொல்லும் – மாறாத பார்வையுள்ள ஆசாமியல்லன். மாறாக, மனிதர்கள் மாறுவது, வளர்வது சாஸ்வதம் என்றெண்ணி, தம் நிலைப்பாடுகளை தரவுகளின் படி சீராகச் சிந்தித்து தங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ளும் மனிதர்களில் ஒருவன். ஆக, சில சமயம் நான் பிடித்த முயலுக்கு ஐந்து கால்கள் இருக்கலாம் என்பதைப் புரிந்திருக்கிறேன். என் பார்வையை மாற்றிக் கொள்வது எனக்கு ஒவ்வாத விஷயம் அல்ல. ஒரு எடுத்துக் காட்டாக — நான் ஈவெரா அவர்களை ஆராதிப்பவனாக இருந்த இளமைப் பிரகடனங்களிலிருந்து, அவர் ஒரு சாதாரண மனிதர்தான் (ஒரு விஷயத்தைத் தவிர) என்கிற எண்ணத்திற்கு வந்திருக்கிறேன்.

12.  நான் ஒரு தொழில்முறை கேள்வி-பதில் காரன் கிடையாது. நீங்கள் ஒரு கேள்வி ஞானியாகவே இருந்தால் கூட, இதுதான் நிதர்சனம்.

மன்னிக்கவும். பொதுவாக, எனக்கு, என்னுடைய  — மாளாத, அள்ள அள்ளக் குறையாத, சொந்தக் கேள்விகளுக்கு பதில் பெறுவதற்கே நேரம் போத மாட்டேன் என்கிறது. இந்த அழகில் என்னால், உங்கள் கேள்விக்காக, திடுதிப்பென்று கண்டமேனிக்கும் புதுப்புது விஷயங்களில், இதுவரை அறியாத துறைகளில் விற்பன்னனாகி விட முடியுமா? முடியவேண்டும் என்ற ஆசைதான். ஆனால், ஆசை மட்டும்தான் இருக்கிறது தாஹ்ஸில் பண்ண… ஆம், என்னிடம் இதற்குத் தேவையான படிப்பறிவோ, பொறுமையோ, விடாமுயற்சியோ இல்லை.

13. நான் ஒரு தொழில்முறை களப்பணியாளன் அல்லன். எனக்கு விருப்பப்பட்டதைச் செய்பவன் மட்டுமே. ஒன்று ஒத்து வரவில்லையானால் இன்னொன்றுக்குக் போக நான் தயங்கவே மாட்டேன். மறுபடியும் ஒன்றுக்குப் போவதற்கும் தயங்கமாட்டேன். ஆனால் இணையத்தில் அதனைச் செய்யமாட்டேன். மன்னிக்கவும்! 8-)

14.  நான் ஒரு தொழில்முறை எதிர்ப்பாளன் அல்லது வெறுப்பாளன் அல்லன் – எப்படா எதை எதிர்த்துப் போராடலாம், உச்சாடனம் செய்யலாம் என்று அலைபவன் அல்லன். நான் ஒரு மனிதவுரிமைக் காரனுமல்ல – இந்த மனிதவுரிமை வாதிகளில் பெரும்பாலோர், அயோக்கியத் தனமாக நடந்து கொள்பவர்கள் என்பதை அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கிறேன். இவர்களில் பெரும்பாலோர் — நகைக்கத்தக்க அளவில் பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட சொந்த வாழ்க்கைக்கும் இடைவெளிகளை – எண்ணங்களுக்கும் சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே மாபெரும் பிளவுப் பள்ளத்தாக்குகளை வைத்துக் கொண்டுள்ளனர் என்பதை அறிவேன்.

15. நான் தொழில்முறை தன்னார்வ நிறுவனக்காரன் அல்லன். பொதுவாக, எனக்கு பிச்சைப் பாத்திரம் ஏந்திக் குத்தாட்டம் ஆடுவது ஒவ்வாது – இருந்தாலும் நண்பர்கள் நான் தொடர்பிலிருக்கும் நிறுவனங்களுக்கு (எனக்கு அல்ல) உதவுகிறேன் என்று முன்வந்தால்  தராதரம் பார்த்து ஒப்புக் கொள்வேன். சில ‘ நன்கொடை கொடுக்க விரும்பி’களின் ஆர்வத்தையும் மீறி அவர்கள் உதவி வேண்டாம் என்று சொல்லவும் சொல்கிறேன். நான் ஒரு கப்பரைமுதல்வாத வியாதி பிடித்த தொழில்முறைப் பிச்சைக்காரனல்லன். கண்டமேனிக்கும் வெளி நாட்டுப் பணத்தை யாசித்துப் பெற்று, படகுக் கார்களில் பவனி வருபவனோ, அல்லது நம் பண்பாட்டைப் பேணி வளர்ப்பவனோ அல்லன். மன்னிக்கவும், இன்று முதல் நாளை திருவோடு.

16.   நான் ஒரு குட்டி க்யூபிக்கிள்ளில் குசு விட்டுக்கொண்டு வாழும், அந்த லாகிரியில் மனவெழுச்சி காணும் கணினிப்பொட்டி தட்டும் குமாஸ்தா அல்லன். ஸொடெக்ஸோ, டிக்கெட் என்று கண்டமேனிக்கும் க்யூபன்கள் பலவற்றை பஸ்-கண்டக்டர் போல கையில் வைத்துக் கொண்டு எங்கேடா இவற்றைக் வாங்கிக் கொள்வார்கள் என, வருமானவரி ஏய்க்கும் பதர்களில் ஒருவனில்லை. அலுவலகச் செலவில் சொந்தவேலைகளுக்கு இணைய இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் புல்லனில்லை நான். எப்படா ஒசியில் டீஷர்ட் கொடுப்பார்கள், கீசெய்ன் கொடுப்பார்கள், நிறுவனப் பங்குகள் கொடுப்பார்கள், எப்படா நம் பங்குகள் சந்தை மதிப்பில் ஏறும் என்று ஒடும்ஷேர் ஒட உறுஷேர்வரும்வரை வாடிக்கொண்டிருப்பவனில்லை.

அல்லது, அதே மாதிரி க்யூபிக்கிள்ளில் தட்டச்சு செய்து கொண்டு, எப்படா அன்பளிப்பு கொடுப்பார்கள். எப்படா பத்திரிகை செலவில் பேருண்டி  சாப்பிடலாம், அந்த ‘ப்ரெஸ் கிட்’ பையில் எவ்வளவு பணம் இருக்கும் என அலைந்து ‘பத்திகளைத் தேத்தும்’ – செய்திகளைச் சேகரிக்கும், அற்ப இணை / துணை / ஸீனியர் / … நிருபர் / பத்திரிக்கைக்காரனில்லை.

எப்போதுமே என் வாழ்க்கை இப்படி இருந்ததில்லை.

17. நான் ஒரு தொழில்முறை ஆசிரியன் அல்லன். எனக்கு பிஎட் பட்டம் கிட்டமெல்லாம் இல்லை. நிறைய அனுபவம் மட்டுமே இருக்கிறது. எனக்கு இளைஞர்களுடன் நேரம் செலவழிப்பதை விட (இதனை இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும்) குழந்தைகளுடன் அளவளாவுவது, அறிவியல் – பொறியியல் – கணிதம் – வரலாறு சார்ந்த கதைகள் சொல்வது மிகவும் பிடிக்கும், அவ்வளவுதான்.

18.  நான் ஒரு தட்டச்சுப் போராளி அல்லது கீபோர்ட் வீரன் அல்லன். கீபோர்டினை தேவைப்பட்டால் உபயோகிப்பவன் தான். ஆனால், தெருவில்-சபையில் இறங்கி, எனக்குப் பிடித்த வேலைகள் செய்துதான் என் பழக்கம். கை ஓயாமல் தட்டச்சில் வீரம் காண்பிப்பதும், வாய் ஓயாமல் வாந்தி எடுப்பதும், பிரச்சினைகள் ஏற்பட்டால் குய்யோமுறையோ என்று அலறுவதும், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என்று பிலாக்கண ஒப்பாரி வைப்பதெல்லாம் எனக்கு ஒத்து வராது. என்னுடைய முதுகெலும்பு மிக நன்றாகவே இருக்கிறது – தொடர்ந்து நன்றாகவே இருக்கும். மேலும் எழுத்து – அதுவும் தட்டச்சு எழுத்து என்பது, என் வாழ்க்கையில் ஒரு மிகச்சிறிய அங்கம், அவ்வளவுதான்.

19.  நான் சுயவிளம்பரத்தை விரும்பாதவன் என்று பாவ்லா காட்டுபவனல்லன். எனக்கு விளம்பரம் தேவைதான். தேவைப் படும்போது விளம்பரத்துக்காக, உதவிக்காக, நண்பர்களை அணுக நான் தயங்குபவனல்லன். ஆனால், என் சுயவிளம்பரத்துக்கான எல்லைகள் குறுகியவை.

அதே சமயம் கண்ட மூளையற்ற கழுதைகளும் என்னை விரும்பவேண்டும், ‘லைக்’ போடவேண்டும், எனது தேமதுரத் தமிழ் ஓசை  எழுத்துகளை(!) உலகம் முழுவதும் பரவச் செய்யவேண்டும் என்கிற விருப்பமெல்லாம் இல்லை. எனக்கு எண்ணிக்கைகள் முக்கியமல்ல. தரம்தான் முக்கியம். NEVER do I hanker after numbers and quantities. But, I do like & love Quality. Yes.

20.  தன்னார்வக்கோளாறுக்காரனாக இருந்தாலும், நான் பணத்தை விரும்பாத ஒரு எளிமை வாதியோ, முக்கியமாக காந்தியனோ அல்லன். காந்தியனாக இருப்பதற்கு, நான் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். மேலும், பணம் முக்கியம், ஆனால் அது அதிமுக்கியம் அல்ல என்பதை உணர்ந்தவன்; மேலதிகமாக, தேவையானால் ‘பணம் இன்னிக்கு வரும், நாளைக்கும்  வரும்’ என்பதையும் அறிந்தவன். பலமுறை அதலபாதாளத்தில் விழுந்து எழுந்தவன். ஆகவே குறையொன்றுமில்லை கோவிந்தாவானாலும். எதிர்காலத்தைப் பற்றிய இனம்புரியாத பயமும் இல்லை.

21.  நான் வெகு நிறைமுனைப்பான. வெகு ஸீரியஸான ஆள் என்றெல்லாம் கிடையாது. என்னுடைய நகைச்சுவையுணர்ச்சியைப் பற்றிய மதிப்பு எனக்கு அதிகம் – ஆம், இதுவும்  ஒரு நகைச்சுவைதான். ஆக, உம்மணாமூஞ்சிகள் – வெகு சீக்கிரம் புண்படுபவர்கள் – சுயபச்சாதாபக் கழிவிரக்கம் மிக்கவர்கள், ‘என்னை இப்படிச் சொல்லிவிட்டானே, நான் எப்படிப்பட்ட ஆள்’ ஒப்பாரிமுதல்வாதிகள் எல்லாம், இந்தப் பக்கமே வரவேண்டாம். வேறேங்காவது சொறிந்து கொடுக்கும் இடங்களுக்கு, பாதுகாப்பாக சினிமா விமர்சனங்கள் மட்டுமே வரும் தளங்களுக்கு, அல்லது உளறிக் கொட்டி நகைக்கத்தக்க அளவில் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துபவர்களிடம் போகலாம்.

நான் ஒரு வெகு சாதாரண சாதாரணன் தான்.

மேலும் மேற்கண்ட அனைத்து ‘நான் அவனில்லை’ பகுப்புகளிலும் மகத்தான நேர்மையும், செயலூக்கமும், புத்திகூர்மையும் உடையவர்கள் இருக்கிறார்கள் என்பதை நேரடியாகவே அறிவேன்.

ஆகவே, பொங்க வேண்டாம்.  பொங்கலுக்கு நிறைய நாட்கள் இருக்கின்றன.

இப்போதைக்கு இவ்வளவு போதும். :-) நன்றி.

10 Responses to “ராமசாமி – யாரில்லை?”

 1. Sridharan S Says:

  :-)

 2. Venkatachalam Says:

  கொஞ்ச நாட்களாக ஒரே அலுப்பு. எதுவும் நகரமாட்டேன் என்கிறது. ஆனால் உங்களைப்பற்றிப் படித்தால் நான் என்னத்தைச் செய்து கிழித்து விட்டேன். அலுத்துக்கொள்வதற்கு என்ற எண்ணம் தோன்றி எனக்கு என்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இப்படி யெல்லாம் எழுதி என்னைப்போன்றவர்களை வருத்தத்தில் ஆழ்த்தாதீர்கள் சார். இப்போதுதான் இந்த பதிவுக்கு வந்துள்ளேன். இன்னமும் தங்கள் பதிவுகள் நிறைய இருக்கின்றன. படிக்கவேண்டும். என்னுடைய சோம்பேறித்தனமும் பேரனும் அனுமதிக்கும்போது!

 3. nparamasivam1951 Says:

  நீங்கள் சிலவற்றில் திரு.சோ அவர்களை ஒத்திருக்கிறீர்கள். ஆனாலும் தங்கள் பதிவுகள் வாசிக்க நன்றாக உள்ளன. தங்களின் “வாழ்வாங்கு வாழ்வதெப்படி” பதிவின் வருடம்,மற்றும் மாதம் பற்றி அறிய ஆவலாய் உள்ளேன்.

 4. Anonymous Says:

  “alla”,”alla” entru I presume you have identified some/certain errors most human beings make, in assuming themselves that they posses them.

  When a human being is more or less in terms with what it actually is, then more or less the life is trouble-free and blissful. Like iterating and reducing errors in numerical methods.

  Wish you that, you KNOW THYSELF in full extremity.


 5. […] 8. எனக்கு என்ன எழுதவேண்டும், வேண்டாம், முடியாது என்பதைப் பற்றிய அறிவு இருக்கிறது. என்னைப் பற்றிய அதீதமான பிரமைகள் கொண்டவனல்லன் நான் (ராமசாமி – யாரில்லை?). […]


 6. […] ராமசாமி – யாரில்லை? […]


 7. […] ஆனால், எனக்கு எதற்கு அவர்பேரில் பொறாமை? நான் ஊடாடும் தளங்களே வேறு. மேலும் அலுப்புடன் படிக்க: ராமசாமி – யாரில்லை? […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: