ஆசான் எஃபெக்ட்

November 17, 2018

ஓசோன் துளை என்பதைப் போன்ற விஷயம் போலத்தான் இந்த எஃபெக்ட்.

குரு விளைவு – கோட்பாடு.

பொதுவாகவே, ஒருமசுரும் தெரியாமல், ஒரு சுக்குக்கும் பின்புலம் தெரியாமல், விக்கிபீடியா புரட்டிவிட்டு நாம் பேசுவதில்லையா?

அதேபோல, ஓசோன் அடுக்கில் துளை என்று ‘காதுகுத்தாதவர் களுக்கெல்லாம் காதுகுத்தி விடப்படும்’ படிக்குப் பேயாட்டம் போடும் சுற்றுச்சூழலிய ஆட்டோ பின்னால் ‘ஜீஸஸ் சவரம் செய்கிறார்’களைப் போலவே, முட்டாக்ககூவானாகிய நானும் ‘ஆசான் எஃபெக்ட்’ பற்றி எழுதுகிறேன் என நீங்கள் நினைத்தால் அது சரியாகவே இருக்கலாம். நன்றி.

ஆம், எனக்கும் இந்தக் கோட்பாடு பற்றி அண்மையில் தான் தெரியும்  (இந்தக் கோட்பாட்டினை என் சிறுவயதிலேயே, பிள்ளைப்பிராயத்திலேயே அறிந்திருந்தேன், எனத் தடாலென்று அட்ச்சிவுட்டால், இந்த கேள்விகேட்கா, ஆலையில்லா ஊரில் என்னை வம்புக்கா இழுக்கப் போகிறீர்கள்? ஆகவே, நான்தான் இந்தச் சின்னப்பையன் டேன் ஸ்பெர்பரின் மண்டையில் குட்டி அவனுக்குப் படிப்பித்து, அவனை இந்த 2010 கட்டுரையை எழுதத் தூண்டினேன் என்று சொல்வதற்குக் கட்டுக்கடங்கா ஆவல் இருந்தாலும் அதனை மிகுந்த வருத்தத்துடன் அடக்கிக்கொண்டு, கனத்த இதயத்துடனும் இன்னமும் கனத்த சிறுநீர்ப்பையுடனும் தொடர்ந்து எழுதுகிறேன்… எங்கேடா இந்த எழவெடுத்த லாட்ஜ்ல ரெஸ்ட் ரூம்பு? முட்டிக்கினு வர்தேடா!!)

எது எப்படியோ… ஆனால் இக்கோட்பாட்டின் விளைவுகளில் நாமெல்லாரும் மாட்டிக்கொண்டு முழிமுழியென்று முழிக்கிறோம் என்பது மட்டும் நிஜம் என என் மண்டையை பக்கத்துச் சுவரில் முட்டிக்கொண்டு வலக்கையால் பூமியை அறைந்து இடக்கையால் இடக்கை நாவலைக் கசக்கிக்கொண்டு எனக்கு நானே தனித்துவமாக, வெண்முரசு கட்டிலின் விளிம்பு நிலையில் உட்கார்ந்துகொண்டு  மோசி கீரனார் போலக் கீரையை ஆய்ந்தறிந்துகொண்டு, நாரினை விலக்கி, தமிழ்ப்பினாத்தல் செம்பினாத்தலில் ஈடுபட்டு வேதனையில் சிரிக்கிறேன்.

உள்ளே குலுங்கி நலுங்குகிறேன். நுண்மையோடு நுணுக்கத்துடன் அணுக்கமாக இல்லாமல் சுணங்குகிறேன். எனக்கு நானேயென ஜென்தனமான மௌனமாக, உரக்கச் சொல்லிக்கொள்கிறேன்;  மௌனமும் என்னைப் பார்த்து ஜென்னி வந்து மூக்கைச் சுழித்து முழிக்கிறது – தண்டகருமாந்திர எழவு. எத்தனை ஜென்னிகளை மௌனம் தீர்க்கமாக பார்திருகும்? எத்தனை மௌனங்கள் ஜென்னி வந்து உரக்க சிரிதிருகும்… உலகசினிமா பார்துவிட்டு ஜென்னியில் கதைச்சுருகதை விமர்சனமாக நீட்டிமுழகியிருக்கும்… எல்லாமே ஜென்னித்துவம் தானோ?

கார்ல் மார்க்ஸ்க்கு தன் மனைவி ஜென்னி இப்படியெல்லாம் செய்வதைப் பிடிக்காததன்றி வேறு ஒரு வர்க்கஎதிரிப் பிரச்சினையும் இல்லை – ஏனெனில் அவள் மலங்க மலங்க முழித்துக்கொண்டிருந்தால் தானே அவர், தம் வீட்டில் பணிசெய்த ஹெலென் டிமத் அம்மணியுடன் சந்தடிசாக்கில் ஏகோபித்து சல்லாபிக்க முடியும்?

ஜென்னியும் வராமல், அம்மணியையும் தொலைத்துவிட்டு, ஜுரவேகத்தில் காமரூபக் கதையாடலில் ‘எங்கேல்ஸ் அவள்‘ என எம்ஜியார் போல கார்ல் மார்க்ஸ் பாடமுடியுமா சொல்லுங்கள்?

ஆனால் ‘என் கே அவள்’ என்றால், ஐயய்யோ, ஏதாவது ஓரினச் சேர்க்கை எழவு என்பது போலாகிவிடுமே, ஐயன்மீர்! அவையெல்லாம் விளிம்புக்களிம்பின் ஒட்டுமொத்த வியாவாரி சாருநிவேதிதாவின் ஏகபோகக் குத்தகையில் இருப்பனவே! ரொம்பத் துள்ளினால் என்னையும் லத்தீன்அமெரிக்காவில் உள்ள பாரீஸுக்குப் போ என ஜெயகாந்தன் (Victory Magneton) போல, கலகப்பிரதியான என்னை ஒதுக்கிவிடுவாரே! இன்னொரு சிந்தனை: காந்தம் என்பது ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவேமுடியாது என்பதால் அது ஜெயகாந்தம் என அழைக்கப்படவேண்டுமோ? :-(

சரி, கிழத்துக்கு ஜென்னி வந்துவிட்டது என நினைக்கிறீர்களா? சரிதான். உங்களுக்கு, ஃபூல் மார்க்ஸ்.

சம்பந்தாசம்பந்தமில்லாமல் இப்போது, காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்துப் பிரிவின்கண் தலைவன் தலைவியிடம் நன்றி கூறல்தான் காவற்கடுகுதல் எனக் கலித்தொகையை இந்தப் பாழாப்போன கலிகாலத்தில் அட்டைக்காப்பியடித்தாலும் –   வாயிற்கிழத்தி சொன்னாற்போல, பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனால் விடுக்கப்பட்ட தூதுவரை நோக்கி, “ஞாழற்பூ மருதப்பூவோடு பரவி நம் தலைவனது ஊர்த்துறையை அழகு செய்துள்ளது. ஆயின் அவனால் தழுவப்பெற்ற என் தோள்கள் வளையல்கள் நெகிழுமாறு மெலிந்து தனிமையையே அழகாகப் பெற்றுள்ளன” என்று தலைவி நொந்து கூறியது இங்கே முக்கியம் என முக்கினாலும் குறுமதிக் குறுந்தொகையர்களே!

நீவிர் கேட்கவா போகிறீர்கள்?  பசலை நோய்க்குப் பசலைக்கீரை மசியலே அருமருந்து என்பதை அறியீரா? மோசி கீரை நாரையாவது அரிந்தீரா? சமையப் பிடிப்பே இல்லையா உங்களுக்கு? குறைந்த பட்சம், இயற்கை பைத்தியத்திலாவது? :-(

…ஊக்கபோனஸாக –  கிழவன், ஆடவருள் மிக்கான், எந்த டவருமே கிடைக்காமலிருந்தாலும் ஸ்மார்ட் ஃபோனை சும்மனாச்சிக்கும் செவிக்கருகே வைத்துக்கொண்டு, யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாக பாவலா காட்டி, தன் வழமையேபோல தற்புகழ்ச்சியில் – கல்வியும், கொடையும், பொருள்செயலும், முற்றுவிக்கப்பட்டவனை முற்றுகையினின்று விடுவித்தலும் ஆகிய காரியங்களை நிகழ்த்துவதற்குப் பிரியுங்கால் கிழத்தி முன்னர்த் தன்னைப் புகழ்ந்து கொள்வான். இச்சிறந்த செயல்களுக்குக் கடமையுணர்ச்சியொடு கிழவன் தான் பிரிவதைக் கூறுவதன் பயன், இல்லக் கிழத்தி ஆற்றியிருத்தல் வேண்டும் என்பதே.

இதனைப் படிக்கும்போதே – வேலைவெட்டியற்று வீட்டுக்கணவனாகச் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு தற்போது காலட்சேபம் செய்துகொண்டிருக்கும் நான்,  புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான மன்னார் & கம்பெனி வேலைக்கு என, அவ்வப்போது பக்கத்திலிருக்கும் பூங்காவுக்குச் செல்லும்போதெல்லாம் என் லக்கற்ற இல்லக் கிழத்தி (=துணைவி எனும் மனைவி) கிட்டே நான் வாய்கூசாமல் தமிழ்ப்புளுகு-செம்புளுகித் தற்புகழ்ச்சியில் ஈடுபடுவது நினைவுக்கு வந்து தொலைக்கிறது என்பது – என் சொந்த அசங்க சித்திரங்களில் ஒன்று, என்ன செய்ய. :-(

ஆசான் சொல்வார்த்தை அமிர்தம் எனக் காணீர்.

மாறாக, காணீ நிலம் வேண்டும் என எம்எஸ் நீஈஈஈட்டிப் பாடினால் புளகாங்கிதம் அடையவேண்டா, கேட்டோ?  பாவம், பாரதி.

-0-0-0-0-0-

சரி. பேராஸிடமால் 10 மாத்திரை முழுங்கியதும், ஜன்னி இறங்கிவிட்டது.

ஜன்னத் மிக அருகிலே வந்துவிட்டது. ஃபிர்தௌஸ் எட்டிவிடும் தூரம்தான். குருவருள் கிடைத்தது. மன இருள் அகன்றது… பிஸ்மில்லாஹ் அல்-ரஹ்மான் அல்-ரஹீம். ஆமென். அண்ணா நாமம் வாழ்க. பெரியார் போட்ட மங்கலமாவது திருநீறு வளர்க. கருணாநிதி தமிழகத்துக்குப் போட்ட அமோக மொட்டையில், இப்பவாச்சும் கொஞ்சம் மசுர் வளர்க!

சின்னப்பையன் டேன் ஸ்பெர்பர் ஆய்வுக்காட்டுரை. படித்து இன்புறவும். இது பத்து பக்கம் கூட இல்லை. ஆங்கிலமும் கரடுமுரடாக இல்லை.

இதில் சின்னப் பையனார் சொல்வதின்(என்னுடைய)  சாராம்சம் என்னவென்றால்: (கொஞ்சம் ஆச்சி மசாலாவும் இலவச இணைப்பாகப் பிணைத்திருக்கிறேன், ஏனெனில் இதில் கொஞ்சம் என் சுயசரிதையும் இருக்கிறது! நானும் ஆசானின் சங்கத்தில் ஒரு ஈசானிய மூலையில் உட்கார்ந்திருந்த அனுபவம் (ஒரேயொரு முறைதான்!) பெற்றவனே!)

ஒரு ஆசானுக்கு எப்படி, என்னைப் போன்ற மௌடீகமான வாசகர்கள் திரள்கிறார்கள், இறும்பூதடைகிறார்கள், சங்கக் கடை எப்படி வளர்கிறது – ஆக, எப்படி அந்த ஆசான், ஆனானப்பட்ட ஓசோன் படுகைக்கும்மேலே விண்ணிய விசும்பில் குசும்பன்களின் தொல்லையில்லாமல் சஞ்சரிக்க முடிகிறது எனும் விசித்திர நடைமுறையை – இந்தக் கட்டுரை அலசுகிறது.  இதன் களமும் குவியமும் வேறு என்றாலும் – இந்தக் கட்டுரையின் வாயிலாக நாம் கொஞ்ச நஞ்சம் புரிதல்களையாவது அடையலாம்.

என்னுடைய சொந்த தறுதல் புரிதல்கள் கீழே:

ஏனிப்படி? இம்மாதிரி நடந்துகொண்டிருக்கும் அற்புத அனுபூதி நிலைக்கு என்ன புறவய அகவய அறம்சார் காரணங்கள் இருக்கக்கூடும்?

ஆசான் சொன்னால் சரியாக மட்டுமே இருக்கும் எனும் நம்பிக்கை. அவரன்றி ஒரு அணுவும் அசையாது எனும் பார்வை. அவருடைய கருத்தும் பொழிப்புரையும் சர்வ நிச்சயமாகச் சரியேயின்றிப் பிறிதொன்றில்லை எனும் நிச்சயத்தனம்.

ஆசானிய அதிகாரபூர்வமான தன்மை, அவர் தம் கருத்துகளை தம் பார்வையில் அலசி அடுக்கி அள்ளித் தெளிக்கும் விதம், மாற்றுக் கருத்துகளை இடக்கையால் புறந்தள்ளும் அல்லது புறங்கூறும் தன்மை.

ஆசான், தம் வாசகர் திரளை அணுகும், அரவணைக்கும் விதம் – அவற்றில் சிலபல வழிமுறைகளையும் வழிபாட்டுச் சட்டகங்களையும் கட்டமைக்கும் தன்மை இன்னபிற.

ஆகவே, ஆசானின் அருள்வாக்குகளில் – வாசகனுக்குச் சரியாகப் பிடிபடாத விஷயங்களையும்கூட, அவன் மிகவும் உன்னதமாக, பொக்கிஷமாக, அருந்தவத்தின் பயனாக மட்டுமே தனக்கு வாய்த்ததாக நினைத்துவிடுகிறான் – சரி விடுகிறாள்களும்கூட. சிலபல சமயங்களில் இஷ்டத்துக்கு அட்ச்சிவுடப்படுவதிலும் ‘பொருள் பொதிந்து’ள்ளதாகப் பாவித்துக்கொள்கிறான், பாவம்.

குறிப்பு: (அண்மைய ஜெயமோகப் பதிவொன்றிலிருந்து: https://www.jeyamohan.in/11497)

“இப்போது நள்ளிரவு கடந்துவிட்டிருந்தது. இன்னும் சற்று நேரத்தில் விடிவெள்ளி எழுந்துவிடும். இரவு எப்போது காலையாகிறது? ஏதோ ஒரு கணத்தில் இரவிலிருந்து உள்ளம் விடுபட்டு காலை என உணரத்தொடங்குகிறது. அக்கணத்தில் குளிர் மாறுபடுகிறது. வானின் விண்மீன்களின் அமைப்பு மெல்ல தன்னை மாற்றிக்கொள்கிறது. காற்றில் எழும் மணங்கள் வேறு வகையில் கலவை கொள்கின்றன.

எங்கோ கீழ்வானுக்கு அடியில் புலரி எழுந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் புலரியின் அறிவிப்பாளராக விண்ணிலிருந்து விழியை முற்றாக மூடும் கருக்கிருள் வந்து நிறையும். கையால் அள்ளி எடுத்துவிடக்கூடிய பிசின் போன்ற இருள். அதற்குள் விண்மீன்கள் அரக்கில் ஒட்டியிருக்கும் மின்மினிகள்போல அதிர்ந்துகொண்டிருக்கும். விடிவெள்ளி முதலில் எழுந்து வரும். நாணுவதுபோல தயங்கி. வான்வெள்ளமொன்றின் விளிம்பில் மிதந்து மிதந்து மேலெழுவதுபோல. விடிவெள்ளியை பறவைகள் உணர்கின்றன. காட்டுக்குள்ளிருந்து முதற்குரல் எழுப்பும் கரிச்சான் “புலரி! ஆம், புலரி!” என அறிவிக்கிறது.”

எனக்கு இதனை இரண்டாம் முறை படிக்கும்போதும் மகாமகோ புல்லரிப்பு. கிறக்கம் கலந்த மயக்கம். சொக்குப் பொடி போடப்பட்ட இன்பக் கையறு நிலை.

புலரி சமயமாக இல்லையானாலும்கூட, இனம் புரியாத ஒரு இன்ப லாகிரி. புலரிப்பு. உவகையில் சுற்றிச் சுற்றி அப்படியொரு அலாரிப்பு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!  அப்படியொரு அடங்கா அடவு.

ஆசானின் லாகவத்தில் அலாதி மோகம். ஜெயமோகம்!

ஆனால் இதில் மேற்கண்ட இரண்டு பத்திகளிலேயே சிலபல றொம்பறொம்ப பிரச்சினையான இயற்கை வர்ணனை ஆகாத்தியங்கள் – மேலோட்டமாகப் பார்த்தால் புல்லரிப்பு. ஆனால் ஆழ்ந்து படித்தால் அது வெறும் அலர்ஜி வகைச் சொறி.

சரி. அவற்றில் மூன்றை எடுத்துக்கொள்வோம்.

1. வெள்ளி என்பது வீனஸ் கோள். நள்ளிரவு கடந்து சற்று நேரத்தில் எல்லாம் வெள்ளியால் எழமுடியாது, பாவம். அதற்கு முடக்குவாதம், என்ன செய்வது.

ஸீரியஸ்ஸாக –,  சூரியோதயத்துக்கு முன்பும், சூரியாஸ்தமனத்துக்குப் பின்பும் சுமார் 20 நிமிடங்களுக்கு இந்த வெள்ளி தெரியவரும்.  ஏனெனில் அதுதான் இயற்கை. வான ஸாஸ்திரம். அவ்ளோதான். மற்றபடி பிறிதெல்லாம் டகீல். மன்னிக்கவும்.

2. கரிச்சான் என்றழைக்கப்படும் (ரெட்டைவால் குருவி எனவும்) இந்த  ட்ரோங்கோ (Dicrurus leucophaeus) முதற்குரல் குதக்குரல் என்றெல்லாம் எழுப்பமுடியாது. பாவம். அவைகளும் நம்மைப் போலத்தான். எனக்கு இவற்றுடன் நல்ல பரிச்சயம் உண்டு. நடுமதியத்தில் அரைத் தூக்கத்தில்  இந்தக் காட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் யான் (உக்கிரப் பதிவெழுதி) தொடர்ந்து இவற்றின் காட்டுக்கூவலால் சீண்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.

இவை முதலில் புலரியில் குரல்கொடுக்கும் என்பதெல்லாம் வளமான டகீல். மன்னிக்கவும்.  காடுமேடு எனக் கண்டபடி சுற்றியலைந்து வாரக்கணக்கில் காடுகளில் தனியாகவும் டேரா போட்டிருக்கும் எனக்கு, இப்படியாப்பட்ட ‘இயற்கை’ வர்ணனைகள் ஆச்சரியத்தைத் தவிரப் பிறிதொன்றையும் ஆகச் சிறந்ததாக அளிக்கவில்லையே, ஞான் எந்தா செய்யும்?

3. மின்மினிகள் என்றழைக்கப்படும் ஃபையர் ஃளைஸ் – வாசகர்கள் போல முட்டாட்கள் அல்ல, பாவம். அவை அரக்கு மேல் உட்கார்ந்து பிசினில் மாட்டிக்கொள்பவையோ அரக்கிக்காகக் காத்திருப்பவையோ அல்ல. அவற்றின் குண்டிவழி வெளிச்ச நடனம் என்பது இரவு வேளைகளில், தங்கள் புணர்ச்சித் தேவைக்காகவும் பிற செய்திபரிமாற்றங்களுக்காகவும் நடத்தப்படும் ஒன்று.

:-( …தாங்கமுடியாத செயற்கையான இயற்கை வர்ணனை. ஆனால், இதுதான் அலக்கியத்தின் இயற்கை நியதி, என்ன செய்வது சொல்லுங்கள்…

ஆனால், இலக்கியத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பு இருக்கவேண்டிய அவசியமில்லை எனத் தாராளமாக இதனைப் புறம் தள்ளலாம்; கற்பனை, கவித்துவம், கழுதைத்துவம், இலக்கிய வாதியின் அலக்கிய அனுபவம், வாசிப்பனுபவம், poetic license, வெண்முரசாலஜி, வெண்முரசிக்ஸ் அட்ச்சிவுட்டாலஜிக்ஸ்   என்றெல்லாம்…. நன்றி.

ஏனெனில் குருவின் கடாட்சம் இருந்தால், அதைத் தவிரப் பிறிதொன்று எவ்வாசகனுக்கு வேண்டும்?

தெருவாசகனுக்கு உருகாத குரு என்றொருவர் உண்டா? குருவருளுக்கு ஏங்காத வாசகன் உண்டா, ஏகே47 கன் உட்பட??

நன்றி.

இப்படிக்கு:

குருவிளைவால், இன்னமும் வாடிக்கொண்டிருக்கும் ஒரு போக்கற்ற வாசகன்.

12 Responses to “ஆசான் எஃபெக்ட்

 1. Kannan Says:

  எனக்குத் தலை வலிக்கிறது, பேராசான்டமால் 10
   யாராவது வாங்க்கிக் கொடுக்கவும்.

 2. K.Muthuramakrishnan Says:

  ஹும்.. நீர் என்ன முயற்சி செய்தாலும், தலைகீழ நின்றாலும் குருவோ, ஆசானோ ஆகவே முடியாதைய்யா! அதிகபட்சம் ஒரு கோமாளிப் பட்டம் கிடைக்கலாம்.இப்படி சரியான தரவுகளையெல்லம் கொடுத்தால் பயந்து விடுவோமா என்ன?

  ஆசானின் இந்தக் கூற்றுக்குப் ப‌தில் சொல்ல முடியுமா உம்மால்.

  “ஆனால் அந்த புகழ்பெற்றவர்கள் வீழ்ச்சியடையவேண்டும் என்றும் உள்ளூர விரும்புவார்கள். அந்த வீழ்ச்சியைக் கொண்டாடுவார்கள், அது இவர்களே கற்பனைசெய்துகொண்டதாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு ஊடகங்கள் தீனிபோடுகின்றன
  ஆனால் இது இயல்பானது அல்ல. இதில் தமிழகத்தில் சாதிக்கணக்கு மிக வலுவானது. எவர் கிண்டலுக்கும் சிறுமைக்கும் ஆளாகிறார்கள், எவர் மெய்யாகவே சிறுமைப்பட்டாலும் இந்த ஊடகங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை எவரும் காணமுடியும்.”


  • யோவ்! இப்படியா என்னுடைய நியாயமான குருவிய எதிர்பார்ப்புகளை பொடிப்பொடியாக்குவீர்?

   உங்களைக் கஜா கொண்டுபோய்விட்டது என்றல்லவா மகிழ்ச்சியுடன் இருந்தேன்!

   நான் துர்பாக்கியவான். :-(


 3. ஜெயமோகனின் பதிவுக்குச் சுட்டி – https://venmurasu.in/2018/11/17/%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0-64/

  ஜெயமோகன்.இன் தளத்தில் இருந்த பதிவை நீக்கிவிட்டார் போலும்.

  அதே இரண்டு பத்திகளில் இருந்த இன்னொரு அட்ச்சிவுடலை மறந்துவிட்டேன்.

  “வானின் விண்மீன்களின் அமைப்பு மெல்ல தன்னை மாற்றிக்கொள்கிறது.” என்று எழுதுகிறார்.

  ஆனால் உண்மை என்னவென்றால் – அவற்றின் அமைப்பு சர்வ நிச்சயமாக மாறாது. ஆனால் ஒட்டுமொத்தமாக அவை நகர்வது போலத் தோற்றம் அளிக்கும், அதாவது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதால்… அவ்ளோதான்.

  ஏன் தான் இப்படியெல்லாம் கவித்துவமாக எழுதுகிறாரோ!

  எல்லாம் அந்த மாயோனுக்கே வெளிச்சம்.

 4. SB Says:

  Sir,
  Thanks for the good laugh whilst your angst fully understood.
  In due course of time, your articles will remain the raison d’être for Mr.Jeymo to churn out more in the similar fashion.
  If he’d read yours, he would take that as a catalyst to do more
  (Undusakthi or Kiriyauookkee).
  You pre-empted all rebuttal by saying that there’s need to have’logic of science’ when ‘nature’ gets detailed .
  However, ‘beauty is in the eyes of beholder’ (Author’s freedom for the sake of language) needs to be validated as Asan has an all-pervading eye ..What you /Scientists cannot see, he could which please bear (not in mind but beyond).
  FYI Asan has written about fireflies in his novel ‘Kaadu’ where night was the background ..But logic of why would they do that (for amorous feel) , we get to know from your piece only which we are thankful for.
  BTW, for your avid readers, could you please publish what novels of Jeymoh you had the fortune/misfortune of reading through ?
  Vishnupuram/Kottravai/Aram ( chef-d’oeuvre -Vishnupuram? We would love to know of same .

  Here’s a challenge for Jeymo’s fans :
  If anyone of Jeymo’s afciniados generate a synopsis (not to refer to Vhttps://vishnupuram.com….an antiquated one) – like how goodread/sparknotes deliver- it will be an illustrious service to Tamil-reading-society. It is a tough nut to crack and what one could gain after reading that is quizzical.

  If you bought that, you’ve to finish thru (most of readers would have been so …exceptions are highly erudite ones) for the sake of having paid the price for same.
  Even if somebody bring aboard the footnotes to explain the words invented/discovered by Jeymo, it will be a great help too.
  It is not for no reason Writer Sujatha discarded Vishnupuram (Mr.H.Raja may not have yet read it ..one particular portion which got Sujatha furious about which led to his cutting off friendship with Jeymo which Jeymo himself narrated about …..If Mr.Raja had read, there would certainly be opening up of can of worms much greater in proportion to Vairamuthu’s villification apropos Andal Mata’s issue. Even SU.RA’s rejection of that novel got Jeymoy puzzled.

  Great to know of your feelers towards all above.
  Thanks again for the mirth you had us generated reading your piece.

  Regards
  SB

  • RC Says:

   நன்றிகள் டேன் ஸ்பெர்பர் அறிமுகத்துக்கும் + கட்டுரை சுட்டிக்கும்.
   (அவியல் மட்டுக்குமே ஆசைப்படும் எனக்கு) மானி(னு)டவியல் உளவியல் ன்னு எனக்குச் சம்பந்தமில்லாத அல்லது தெரியாத விஷயங்கள் பற்றிய என் பின்னூட்டம் தேவையற்றதுதான்.நீங்கள் பல ‘ஜெமோ’ சிறப்பு பதிவுகள் போட்டதால் வந்த வினை தான்.என்ன செய்ய..பொறுத்துக்கொள்ளவும்.

   நீங்கள் பலவாறாக முனைந்தாலும் /poetic license/ என்ற அளவில் விட்டு விடவே எனக்கு விருப்பம்.

   நிகரமா பதிவுகளின் பயனாக அவரும் சரி நானும் சரி ஒரு அடி முன்னெடுத்து வச்சா சந்தோசமே.எல்லாத்துக்கும் நிகர கணக்கு ஏம்டே பாக்க ன்னு நீங்க கேட்டா என்னிடம் பதிலில்லை.

   நிற்க..

   ஒரு வாதத்துக்குக்காக மட்டுமே கீழுள்ளவை –

   1)ஜெமோ ‘இரவு’ என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார்.இரவு,பகலில் தூங்கி இரவில் மட்டுமே வாழும் மனிதர்கள் பற்றிய நெடுங்கதை.இதில் என் அறிவியல் நோக்கை புகுத்தி முற்றிலும் கதையை புறந்தள்ள என்னளவில் முயலமாட்டேன்.இதில் எனக்கு ஏதோ தேறினா சரிதான்ற மனநிலை எனக்கு.(உங்களிடம் அதை நான் எதிர்பார்க்கவுமில்லை).

   நீங்கள் சுட்டி கொடுத்த கட்டுரையில் இருந்த கீழ்கண்ட பத்தி எனக்கு உவப்பு. /As long as the interpretation of a text is not settled, its evaluation is likely to be based on external rather than internal criteria. We don’t know what X meant in making some obscure statement, but, given the authority we recognise him, we have reasons to think that he was expressing a very important idea. In fact, if we did not think this, we would not be involved in trying to comprehend that statement. Participating in a collective process of interpretation amounts to publicly vouching for the value of what is being interpreted. Moreover, it seems sensible to take the amount of attention paid to thinkers and their thought as a rough indication of their importance—and it would be sensible if it were not for the fact that these individual evaluations build on one another and together spiral into ever greater devotion./

   2) அவரின் சமீபத்திய சிறுகதை ‘ரயிலில்’.நெல்லை பின்புலத்தில் இருவேறு சமூக மனிதர்களிடையே நடந்த ஒரு சொத்து பிரச்சனையே கரு.அதில் பூடகமாகவும் வெளிப்படையாகவும் வரும் சாதி குறித்த பொது மதீப்பீடுகள்.பிள்ளை,தேவர் (என்று கணிக்கிறேன்),நாடார்,மார்வாரி குறித்த விவரணைகள் பொதுப்போக்கில் சரி போல தோன்றினாலும் அது தவறு என்று சப்ஜாடாக மறுக்கவும் முடியும்.(எனக்கிருக்கும் குறைவுபட்ட நெல்லை சாதி/தொழில் பற்றிய புரிதலில் எந்த தேவரும் துணி மொத்த வியாபாரத்தில் ஈடுபடுவதாகத்/பட்டதாகத் தெரியவில்லை,தவறெனில் திருத்திக்கொள்கிறேன்).

   3) இந்நேரத்தில் திரு பூமணி, விமலாதித்த மாமல்லன் எழுதிய நிலை மற்றும் தவிப்பு கதைகள் நினைவுக்கு வருகிறது.ஏனெலில் ஆசிரியர் கதையில் எதை விடுகிறார் அல்லது எதைச் சேர்கிறார் என்பது அவரின் ஆளுமை பற்றிய நமது புரிதலுக்கு தானே.

   http://old.thinnai.com/?p=10208252

   https://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/article8572779.ece
   (‘புனைவு என்னும் புதிர்’ புத்தகமாகவும் வந்துள்ளது)

   பூமணி எழுதிய நிலை சாதி பின்புலத்தை நேரிடையாக சொல்லாமல் சொல்கிற கதை வகை

   http://maamallan.com/?p=76 விமலாதித்த மாமல்லன் எழுதிய தவிப்பு, மத பின்புலத்தை நேரிடையாக சொல்லிச் செல்கிற கதை வகை
   எப்படிச் சொல்வது என்பது ஆசிரியனின் உரிமை என்ற அளவில் விட்டு, எனக்கு என்ன மிஞ்சியது என்று நான் கொள்வது எளிதானது என்று நினைக்கிறேன்.என் புரிதலை ஆசிரியருக்காக நான் மாற்ற வேண்டிய அவசியமில்லை (என் Reflective inference சரியாய் உள்ள பட்சத்தில்.. கரீட்டா டேன் ஸ்பெர்பர பிடிச்சனா சார்.தப்புன்னா சொல்லுங்க :-) ).

   /கலையை கிரகித்துக்கொள்ள நுண்ணுணர்வுக்கொம்புகள் எல்லோருக்கும் பிறவியிலேயே கொடுக்கப்படுவதில்லை அவனவன் உருவாக்கிக் கொள்கிற விஷயம் அது./திரு.மாமல்லன் ஒரு கட்டுரையில் சொன்னது.

   ஆனால் அதுவெல்லாம் செய்ய அனைவருக்கும் மதியும் ஆசையும் நேரமும் வாய்த்தால் அதிசயம்.கூட்டத்தோடு கோவிந்தா போடுவேன் அதுவரையில்.அது எளிது எனக்கு. மந்தையில் இருந்து விலகிய ஆட்டுக்கு வேறோர் மேய்ப்பர் கிடைக்கும் வரை சிக்கல் தானே.வாழ்க்கையில் மேய்ப்பர் முக்கியம் சாரே..

   ஏதோ சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்னு புரியுது /Impenetrability indicates profundity/ நன்றி+ வாழ்க டேன் ஸ்பெர்பர் :-)


   • ​அன்புள்ள ஆர்ஸி, சுவையான பின்னூட்டத்துக்கு நன்றி. உங்களுக்கும் கைவசம் நிறைய நேரம் இருக்குபோல! ;-)

    அதேசமயம், முன்னொரு முறை ஒத்திசைவில் குறிப்பிடப்பட்ட வின்ஸென்ட் கேன்பி அவர்களின் (எனக்கு மிகவும் மிகமிகவும் பிடித்தமான மேற்கோள்) வார்த்தைகளை மறுபடியும் இங்கே:

    “The mediocre movie explains everything twice and always means exactly what it says. It waves its sincerity aloft like a truce flag. It leaves no questions unanswered. It tells you exactly where you should stand in relation to its characters and its subject matter. It is frequently soothing because it tells you that you are right. Then, too, it can be like an unrelenting host who holds you captive until you finish every last morsel on the plate. But it tends not to stick in the memory because there’s nothing there to wonder about.”
    – – Vincent Canby (1924 – 2000)

    https://othisaivu.wordpress.com/2013/10/22/post-269/

    பொதுவாக, நான் இந்த வழியில்தான் எனக்குக் கலாபூர்வமான விஷயங்கள் ஒத்துவருகின்றனவா இல்லையா எனப் பார்க்கிறேன். இந்த விஷயத்தில் வெண்முரசு ஒருவிதமான ஏமாற்றம் தந்தது. ஏனெனில் தேவையற்ற வியாக்கியானங்கள், தேய்ந்த நடையையே விடுங்கள். ஒரு சமயம், மூலம் நிர்மூலம் செய்யப்படுகிறது என்றே பட்டுவிட்டது.

    எது எப்படியோ.

    இரவு கதை: அதன் சட்டகமே அப்படி. கதைக்களமே அப்படி. ஆகவே அந்த அளவில் அது அறிவியல் அவியல் எனப் பார்க்கப்படவேண்டா என்பதுதான் என் கருத்து. what we can look for is a significant bit of internal consistency, while being somewhat externally consistent. (ஓரளவு படிக்கபிள் ஆக இருந்தாலும் அந்தக் கதையில் பலப்பல ஓட்டைகள், எனக்கு ஒத்துவரவில்லை)

    ரயிலில் கதையை இன்னமும் படிக்கவில்லை. படிப்பேன் ஆனால் பூமணியையும் மாமல்லனுடையதையும் படித்திருக்கிறேன். (ரயிலில் கதையினை வின்ஸென்ட் வழியாகப் பார்த்தால் தேறுமா? தெரியவில்லை.)

    மாமல்லன், பொதுவாகவே புனைவுகள் விஷயத்தில் எனக்குப் பிடித்தவர். பூமணி அவர்களும் நான் படித்தவரை அப்படித்தான்.

    மறுபடியும் உங்கள் கருத்துகளுக்கு நன்றி. அசை போடுகிறேன். :-)

   • Velmurugan Kuberan Says:

    //ஒரு சமயம், மூலம் நிர்மூலம் செய்யப்படுகிறது என்றே பட்டுவிட்டது.// அழிக்கப்பட்டு விட்டது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் வெண்முரசு ஜெமோ வெறியர்களால் மட்டுமே படிக்கப்படும், ஒரு சில வருடங்களுக்கு பிற்பாடு யாருடைய நினைவிலும் இருக்காது, அதுவரையில் நல்லது.

    நவீன மொழியில் பாரதத்தை எழுதுவது தவறு ஒன்றும் இல்லை. பைரப்பாவின் பருவமும், எம். டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடமும் அப்படி எழுதப்பட்டதுதான் (உங்களுக்கு தெரிந்து இருக்கும்). இவர்கள் இருவரும் தங்களை வியாசராக நினைத்து கொள்ளவில்லை. ஆசான் தன்னை வியாசராகவே நினைத்து கொண்டு இருக்கிறார் போல இருக்கிறது.
    நீங்கள் குறிப்பிட்ட மாதிரி, “what we can look for is a significant bit of internal consistency, while being somewhat externally consistent.” வெண்முரசில் consistency என்பதே கிடையாது. ஒரு வேலை கருணாநிதிக்கும் நேர்மைக்கும் எவ்வளவு தொலைவோ அவ்வளவு தொலைவு போல் ஆசானுக்கும் consistencyகும்.

    ஆசானின் atrocityக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அஜித கேசகாம்பளியே ஒரு முறை வெண்முரசில் வந்து விட்டார். இனிமேல் காந்தியும் நேருவும் வந்துவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. மிக ஆவலோடு வெண்முரசை படிக்க ஆரம்பித்தேன், பெருத்த ஏமாற்றம்.

 5. Velmurugan Kuberan Says:

  அய்யா இதை கொஞ்சம் கவனிங்க. pseudoscience முதிரா அறிவியலாம் ஆசானுக்கு. நான் pseudo என்பதை போலி என்றுதான் இது நாள் வரை நினைத்து கொண்டு இருந்தேன்.

  https://www.jeyamohan.in/115778#.XAima2gzaUk


  • ஐயா! ஆசாஆஆஆஅனையே கேள்வி கேட்கும் அளவுக்கு உங்களுக்குத் திமிர் ஏறியிருப்பது, நம் முதிர்ந்த வளர்ச்சியையும் அறிவியலையும் தான் குறிக்கிறது… என்ன செய்வது சொல்லுங்கள். :-)

   இலுப்பைப் பூக்களைக் கோபிக்காதீர்கள். :-(


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s