மாற்றுத்திறனாள வாசகர் கடிதம்

November 19, 2018

சோக ராமம்,

சோர்வான தருணத்தில் அழுதுகொண்டே நிலை கொள்ளாமல் இதனை உங்களுக்கு எழுதுகிறேன்.

கர்த்துப்படம்: பாப்லொ பிகாஸொவின் அழும் அணங்கு

…மாளாத் துயரத்தின் நனிஉயரத்தில் அதிர்வுடன் தொடரும் அதிஅதிர்ச்சியில் முதிர்ச்சியில்லாமல் முழுமூச்சுடன் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.

வேதனை தாளவில்லை. என் விசும்பல்கள் விசும்பை நோக்கியுயர்ந்து விண்ணதிர விஷ்ணுபுரத்தை நோக்குகின்றன. விம்மல்கள் பாதாளம் வரை ஏகி, பைரவிக் கொற்றவையின் கம்மல்களில் மையம் கொள்கின்றன.  வாழ்க்கையின் அர்த் தத்தைத் தேடி அறுதியில் உறுதியாக என் அத்தையிடம் நத்தை போல் சென்றாலும், என் நுண்கொம்புகள் நுணுக்கத்தை அறியவில்லை. என் பெருவிசை எக்காளங்கள் ஜமுக்காளத்தில் வடிகட்டப்படவில்லை.

கண்ணீர்ப் பெருவெள்ளம் ஊற்றாகக் கிளம்பி, அதற்குக் கீழேயிருந்து நாசியினின்றும் ஒழுகும் சளியாற்றொழுக்கினுடன் கொள்கைக் கூட்டணி வைத்துக்கொண்டு, என் வாயில் சிற்றோடையாக வீழ்ந்து கொஞ்சம் உப்புக்கரிப்பதை, நான் நன்றியுடன் பிரபஞ்ச வெளியின் தாத்பரியமாக ஏற்றுக் கொண்டாலும்…

ஏன், எனக்கு மட்டும் இப்படியெல்லாம் வாசகர் கடிதம் எழுத நேருகிறது‘ என ஒரு ஆகச் சிறந்த கேள்வியை எனக்கே நான் தனித்துவமாகக் கேட்டுக்கொள்வதைத் தவிர பிறிதொன்று செய்யத் தோன்றா கையறு நிலையில் இருக்கிறேன்.

ஆழ்ந்த சோகத்தால் துக்கம் நெஞ்சையடைக்கிறது. சிறுநீரகத்திலிருந்து புறத்தை நோக்கி என் சிறுநீர்க்கற்கள் சிறகடித்தோடி சிதறிக் குதித்து காலவெள்ளத்தில் அலைபாய்ந்து குஞ்சாமணியை ஆவேசமாக அடைந்து ஆனால் — பிரமிக்கத்தக்க வகையில் ஆங்கே ஆழ்ந்து அமிழ்ந்து சித்தம் ஒடுங்கிச் சிவனே என்று உள்ளிருப்பு மறியல் செய்து கொண்டிருக்கின்றன போலும்.

என் நெஃப்ராலஜிஸ்ட் இதனைத்தான் சொல்வார். அவரும் உங்கள் வாசகர்தாம், பாவம்.

ஆகவே சிறுநீரையும் ஆன்மிக அத்யாத்மிக வெளியில் செலுத்த இயலாமல் அதனைப் புறவயமாக அகவயத்தில் உள்வாங்கி உள்ளொளித்துக் கொள்கிறேன்.

வாழைத்தண்டை நிறைய சாப்பிட்டால் சிறுநீர்க்கற்கள் சிதைந்து சிதறிப்போம் என இயற்கை வைத்தியம் சொல்லிய விளிம்பாலஜிஸ்ட் டாக்டர் சாருநிவேதிதாவை நம்பி, தினம் ரெண்டு கிலோ வாழைத்தண்டினை தண்டால் எடுத்தபின் சாப்பிட்டதில், என் நரம்புகளும் நார்நாராகப் போய்விட்டன.  வாழக்காயே நாராசமாகி விட்டது.

புத்தி பேதலித்துவிட்டாலும் சித்தி கைப்படவில்லை. அவர் சித்தப்பாவுடன், நான் வருவதை முன்கூட்டியே எப்படியோ அறிந்து கொண்டு அம்பேல் ஆகி விட்டார்.

அத்வைத ஆன்மிக வைசேஷிகப் பார்வையில் நார்மலாக இல்லாமல், நியாயமாகவே ஆண்களும் பெண்களும் ஒருசேர ஏகோபித்து நாரீமணிகளாகவும் நாராமணர்களாகவும் நாணித் தோன்றுகிறார்கள். நார்களின் குலத்தலைவனான நார்வே தேசத்து நாரோயில் நாரதன்  கலகம் நல்லபடியாக முடியலாம் என்றாலும், இந்தத் தமிழ்நார்-செந்நார் பற்களுக்கிடையிலும், சிறுகுடல் பெருங்குடல்களில் உள்ள நுனிகளிலெல்லாம் மாட்டிக்கொண்டு சிடுக்கலாய்ச் சிணுங்கி, என் மானுட இருப்பின் பிரத்யேக அவஸ்தையாகவே மாறிவிட்டதென்றே சொல்லிவிடலாம்.

போதாக்குறைக்கு என் மர்ம உறுப்பும், கருமம், மலையாள நேந்திரம் அளவில் காத்திரமாக இருந்த பராக்கிரமம் போய், போர்க்கால ரீதியில் புறமுதுகிட்டு, கன்னடக்கார ஏலக்கி வாழைப்பழம் அளவுக்கு சுருங்கிவிட்டது.

இன்னமும் சுருங்கி அது, ஏலக்கியின் முறைப்பையனான ஏலக்காய் அளவுக்கு ஆகிவிடுமோ எனப் பயமாக வேறு இருக்கிறது. என் மகத்தான ஆளுமையே உள்நொறுங்கிக்கொண்டிருக்கிறதென்றால் அது சரியே. குறியீட்டுப் படிமமாக இல்லாமல் இது நிதர்சன உண்மை.

சுருக்கமாகச் சொல்லப்போனால், சுருக்கம் தான் என் பிரச்சினை எனலாம்.

இதற்கு முன் ரஷ்ய இலக்கியப் பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணனின் அறிவுரைப்படி, ஸப்டைட்டில்கள் இல்லாத நீளநீள உலகத் திரைப்படங்களை தொடர்ச்சியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஆனால் கவனமாக, ஒன்றுக்கே போகாமல் நாற்காலியில் உட்கார்ந்து தொடைகளை இறுக்கக் கட்டிக்கொண்டு, பார்த்தால் நாளாவட்டத்தில் சிறுநீர்க்கற்கள், எவ்வளவு முயன்றாலும் முன்னேறி வெளியேறவேமுடியாத தம் தோல்வியை ஒப்புக்கொண்டு சுயமரியாதையைச் சுத்தமாக இழந்து பொளேறென்று பொடிந்து சமூகநீதித் தனித்துவத்துடன் மேலெழும்பி, வாய்வழியே வந்து பின், சந்தர்ப்பவாதக் கூட்டணியில் ஒன்றுசேர்ந்த கூழாங்கற்களாகக் கீழே வீழ்ந்து பொலியும் என, சிலபல ஜப்பானிய ஜென் டர்புர் வழிகளையும் முயன்று பார்த்தேன்.

ஆனால் மாறாக, நான் பேச எத்தனிக்கும் போதெல்லாம் கூழாங்கற்கள் வாயினின்று தெறிந்து விழுந்து, என் சிறுவயதில் என் பாவப்பட்ட தமிழாசிரியர் ‘டேய், வாய்ல என்னடா, கூழாங்கல்லா வெச்சிருக்க?’ எனக் கேட்டது உண்மையாகவே பலித்துவிட்டது என்பதுதான் எச்சம், சாரி, மிச்சம்!

இக்கடிதத்தை முதலில் என் முழுமுதல் பேராசானுக்குத் தான் எழுதினேன்.  கடந்த சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் ஆகியும் கூட,  அவர் அதனைத் தரவேற்றி, இதைவிட நீளமாக ஒரு தத்துவார்த்தப் பதில் கொடுக்கவில்லை என்பதால் உங்களை நிபந்தனையற்றுச் சரணடைகிறேன்.

என்னைத் தடுத்தாட்கொண்டு என் பிரச்சினைக்கு உங்களுடைய மேலான சிடுக்கவிழ்த்தல்களை அளிக்கவும்.

சிறுநீர்க் கற்களுடன்,

கீழடி கற்காலன்.

–0-0-0-0–

அன்புள்ள கீழடி கற்காலன்,

இதுதான் எனக்கு உங்களிடமிருந்து வந்திருக்கும் முதல் கடிதம்.

ஆசான் உங்களுக்குப் பதிலளிக்கவில்லை என்பதால், ஆறுதல் பரிசாக என்னை அணுகியிருக்கும் உங்களை எவ்வளவு உச்சி மோர்ந்தாலும் தகும். இனிமேல் எனக்கே டைரக்டாக உங்கள் குழப்பங்களை அனுப்பவும். உடனடியாகப் பத்து நிமிடங்களில் உங்கள் கேள்வி, பதிலுடன் இணையத்தில் தரவேற்றப்படும் என்பதற்கு நான் கியாரண்டி. உங்கள் வாழ்க்கைத் தேடோதிதேடல்களில், உங்களைக் கண்டுகொள்ளும் இச்சையில், செயலூக்கத்தின் விழைவில் – கண்டகண்ட போலிகளை அணுகி ஏமாறவேண்டாம். நான் எதற்கு இருக்கிறேன், சொல்லுங்கள்?

கீழடியில், முதுமக்கள்தாழி வாசம் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

நானும் பூர்வாசிரமத்தில் தாய்க்கு ஒரு தாழியில் பிறந்துவளர்ந்தவன்தான் என என் குருவுக்கு நான் நற்செய்தி கொடுத்தது நினைவில் வருகிறது.

அதாவது சிவனுக்கு ஏற்ற தாழம்பூவைத் தாழ்மையுடன் புஷ்பாஞ்சலிக்காகக் பாதுகாப்பாக வைக்கப்படும் சட்டிதான் இது – தாழி. இந்தச் சட்டியைப் பாரம்பரியமாகப் பக்தியுடன் செய்தவர்கள் சட்டியர்கள். இவர்கள்தாம் பிற்காலத்தில் செட்டியர்கள் என்றாகிச் செட்டியார்கள் ஆனார்கள் என புதுக்கோட்டை பக்க ஓட்டுப்பேட்டை பிராந்தியத்தில் ஒரு தொன்மக் கதை உலாவருவதைச் சுட்டுகிறேன். இதனைப் பற்றிய ஒரு சீரிய புத்தகத்தை கார்த்திக்ஏசு சிவத்தம்பான் எனும் கேரள வரலாற்றாசிரியர் எழுத, நான்தான் என் களக்குறிப்புகளைக் கொடுத்தேன்.

என்ன செய்வது, நானில்லாவிட்டால் முழுத் தமிழகத்திலும் அறிவுப் புலங்களில் அறிவார்ந்த உரையாடல்களே இருக்கமாட்டா எனத்தான் நான் குருவிடம் பணிவாகச் சொல்லியிருக்கிறேன்.

அகத்திய மாமுனி இதே தாழியைக் குறித்துதான் ‘வளர்ந்தாய் தாழி காவேரி’ எனப் பாடினார் என்பது ஒரு நிகண்டுச் செய்தி, ஒரு தமிழ்க் கலாச்சாரக் கருவூலத் திரைப்படத்தில் வந்திருக்கிறது.. அதாவது ஒருதாழிக்குப் பிறந்தவள்தான் காவேரி எனப் பூடகமாக ஊடகத்தில் பகிர்வது தான் அதன் நோக்கம்.

இதுவரை உங்கள் பிரச்சினை தீரவில்லை என்றால் மேலே படிக்கவும்.

உங்கள் பிரச்சினையை இரண்டு விதமாகப் பதம் பிரித்துப் புரிந்து கொள்கிறேன்.

ஒன்று: சிறுநீர். இரண்டு: கற்கள்.

சிறுநீர் என்பது சிறிதாக இருந்தால்தானே அது சிறுநீர்? ஆனால் சிறுநீர்ப் பெருவெள்ளம் என ஔவைக் கிழத்தி வகையறா முறைமையில் புரிந்துகொண்டால், அவ்வப்போது, சிறு நீரகப்பையில் பையப்பைய வந்து சேரும் சுயவிலக்க நீரை அவ்வப்போதே உடன்விலக்கம் கொண்டு ஆவன செய்யாமல், அதனை அடக்கி இந்திரியத்தையும் ஊக்கபோனஸாக சேமித்தால் அது பெருவெள்ளம் ஆகிவிடும். நம் நனிமுயற்சியால், சிறு – பெருவாக ஆக்கப்பட்டு விட்டதால், பெருவின் பெரும் பிரச்சினை தென்னமெரிக்க சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டும் விட்டது. ஆகவே, உங்களுடைய சிறு நீர்ப் பிரச்சினையும் தீர்ந்தது.

கற்கள் பிரச்சினைக்கு வருவோம். நம் பாரம்பரியத்தின் படி, கல் என்றால் படி. ஆனால் படிகள் கல்லால் ஆனவை என்று இதனை விரிப்பது மாற்றுப்படிப்பு என்பதைத் தவிரப் பிரிதொன்றில்லை.

பொதுவாகவே, தமிழக வரலாற்றொழுக்கில், சிறுநீர் பெருவெள்ளமாகும்போது அதனைத் தடுக்க கற்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. கரிகாற் பெருவளத்தான் கட்டியதே அம்மாதிரி விஷயத்துக்கு ஒரு மாதிரிதான் என ஒரு மாதிரியாக, செவ்வல்லியழகியும், பாண்டுவின் துணைவியுமாகிய மாதுரிப் பொன்மயிலாள் தோகைவிரித்து, மஜாபாரத வியாசனிடம் விருந்து வைக்கையில் அவருக்கு உபதேசித்து, என் கருசிரசு நாவல்களில் பூரிகெளங்குசிரவசு அப்படித்தான் சொன்னாதாகச் சொல்வாளல்லவா?

அதேபோல, நம் உடலும் வெளியுலகத்துப் புறவெளியை உள்ளே பிரதிபலிப்பது ஒரு கலக்கப் பிரதி. அதற்குப் பிரதியுபகாரமாகவும் இனிப்பாகவும் — நம் உடலே உடலுக்குள் கற்களை உற்பத்தி செய்யும் கற்கலைக்கூடமாகி விடுமன்றோ?

ஆகவே, சிறு நீரகத்தின் பெருங்கற்கள் உருவாவது ஒரு உருவகப் படிமமாக, நனவிலி நிலையில் நிலைத்து நீலோத்பல மலராக மொட்டவிழ்வதாகப் புரிந்துகொண்டால் – அம்மாதிரிப் புரிதல்களில், இக்கற்கள், நம் இயல்பான வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிடும் தன்மை கொண்டவை.

‘கற்க கசடற’ எனும் சொலவடை சொல்வது இதைத்தான்.

தவறிது எனச் சுட்டமுடியாத சுட்ட செங்கற்களால் கட்டமைக்கப்படும் அறம் என்பதே இதுதானே? பொதுவாகவே, என் வாசகர்களுக்கு இம்மாதிரி அறிவுரைகளைத் தான் அளித்துக் கொல்வேன்.

பகுத்துப் பிரித்துப் புரிந்துகொண்டு பிரச்சினைகளை அணுகினால், வெல்ல முடியாததே இல்லை. ஆனால், வெல்லக்கூடியது என்பதற்காக மேலதிகமாக வெல்லம் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வந்துவிடும் என என் பேராசானிடம் நான் 1880ல் சொன்னபோது அவர் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து அதில் எனக்கு அண்டசராசாரமும் தெரிந்தது, எனக்கு இன்னமும் செவுட்டில் அறைகிறது.

சரி.

இன்னமும் உங்களுக்குப் புரியவில்லை என்றால் கீழ்கண்ட பத்தியைப் படித்தால் உங்களுக்கு ஞானம் நிச்சயம்.

அகிலத்தின் அவலச்சுவை அனாதி காலத்திலிருந்தே ஆதிமானுடத்தை அறைந்து செவியைக் கிழித்திருக்கிறது என்றாலும், பெருவிசையுடன் கசையால் அடித்தால் உடலில் பெருவெடிப்பு ஏற்படுமன்றோ?

…ஆனால் கையைப் பிசைந்துகொண்டே மசைத்தனமாக மனத்தளவில் இசைந்தால், பிறத்தியாரிடம் இருந்து வசை கிடைக்கும் என்பதும் உண்மைதானே? வாழ்தலின் ஆழ்மன இடைவெளியின் பிழியும் துயரம்தான் என்னே! அதேசமயம் பிழையாக உழைத்துப் பின் கையுதறிச் செல்வதும் சரியல்ல.

சரி. மற்றபடி பிற தாழிடப்பட்ட தாழிகளில் உங்கள் கீழடிக் குறுங்குழு உறவினர்கள் நலம் என நினைக்கிறேன். அவர்கள், கூடிய விரைவில் மேலெழும்பி இந்திய அரசுத் தொல்லியல் துறையின் உதாசீனத்துக்கு எதிராக வீரப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு என் வாழ்த்துகள்.

உதாசீனத்துக்குச் செஞ்சீனம் எப்படியும் மேல் என்பதை என் தொழிற்சங்க நாட்களில் இருந்து உணர்ந்திருக்கிறேன்.

தொடர்ந்து குழம்புங்கள், நானும் மேலதிகமாகக் குழப்பி உதவுகிறேன்.

அன்புடன்,

__ரா

-0-

 

24 Responses to “மாற்றுத்திறனாள வாசகர் கடிதம்”

  1. K.Muthuramakrishnan Says:

    நெடுமால் திருமருகா!….
    நித்தம் நித்தம் இந்த இழவா?


    • யோவ்!

      எழவின்றி அமையாது ஒத்திசைவு என அன்றே சொன்னான் அல்லவா வயநாடன் தம்பான்?

      ஆகவே.

      எனக்கே சலிப்பாகிவிட்டது. நான் எழுதியதை நானே படித்து தன்னில்தானே மௌனமாக எப்படித்தான் தொடர்ந்து சிரித்துக்கொள்வதாம்?

      ஆகவே.

      உமக்கு விமோசனம் வெகுவிரைவில். நன்றி.

  2. RameshNarayanan, Nanganallur Says:

    சீடனின் மர்ம உறுப்பு பற்றிய சந்தேகத்தை / கவலையைத் தீர்க்கவில்லையே என்ற ஆதங்கம் தவிர மற்றபடி வெகு ஜோர்

  3. RameshNarayanan, Nanganallur Says:

    மேலதிகமாக கீழேயுள்ள சுருக்கம் தான் சீடனின் தலயாயப் பிரச்சினை, அதற்கு அருமருந்து?


    • யோவ் ரமேசு! வயசுக்கேத்தபடி பேசுபா. ;-)

      ஸீரியஸ்ஸாக — சீடர்களுக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை: ஏனெனில்

      அவர்களுக்கு அடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம்? காயடிக்கப்பட்டுவிட்டார்களல்லவா?

      கேல்கதம். ஹான் ஜி.

  4. SB Says:

    Sir,

    ‘Nithya Chaitanya Yadhi’ has gone amiss while Charu /Esra got their place. For Charu, ‘ Kovaikai-size’ has gone awry and become’ Elaikai-size’ !

    Is this your indirect way of saying that you read all of Jeymoh’s books in and out ? Prime books of his since listed.

    Transmogrification of (Soga Ramam) Mr.Ram into Mr.Jeymoh .
    Durga becoming Chandrmukhi in Cinema’s lingo (Enna Kodumai Saravanan !)

    In the previous article, we were wishing to know as to the novels of Mr.Jeymo which you read so far and the best among them all.
    Kindly advise.

    Thanks for the laughter.

    Regard
    SB


    • ஐயா, தாங்கள் மறுபடியும் மறுபடியும்… கேட்பதனால், இருக்கும் சொற்ப மூளையைக் கசக்கி, அவர் எழுதியதில் எனக்குப் பிடித்தமானவற்றை…:

      1. கொற்றவை – இதில் சில அபூர்வமான பத்திகளைப் படித்ததாக நினைவு. (ஆனால், பேஸ்மென்ட் நூலகத்திற்குப் போய்ப் பார்த்தால், இவள் எங்கே அந்தர்தியானமானாள் எனத் தெரியவில்லை, ஆகவே அவற்றைக் குறிப்பிட முடியவில்லை.)

      2. ‘காடன் கண்டது’ எனும் ஒரு குறு நாவல் வகை.

      3. சங்கச் சித்திரங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பு.

      4. அவருடைய சிலபல ‘பேய்க்’ கதைகள் – பெயர்கள் நினைவுக்கு வரவில்லை.

      அடுத்த படியில் அவருடைய பேட்டிங் ஃபார் – இந்திய ஆன்மிக தரிசனங்கள் + பாபுஜி.

      மேலும் இருக்கலாம். ஆனால் இப்போதைக்கு இவ்வளவுதான். கொற்றவை அடுத்த சுற்றுக்குத் தப்புவாளா எனத் தெரியவில்லை.

      ஆனால், இவை ‘உலகத் தரம்’ வாய்ந்தவையா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், இனிமேல் அப்படியாகலாம். ஏனெனில் செந்தமிழும் ப்ளாக் பழக்கம்.

      அவரிடம் எனக்குப் பிடித்தமான விஷயங்கள் – அயர்வின்மை + அவருடைய வாசகர்களை அரவணைத்து எழுப்பும் பாங்கு.

      பிற இலக்கிய-அலக்கியக் கழுதைகளுடன் பொருத்திப் பார்த்தால் அவர் ஆகிருதி அதிகம். போதுமா??

      ஏன் எஸ்பி, தாங்கள், உங்களுடைய பின்னூட்டங்களைத் தமிழில்/லும் எழுதலாமே!

      • SB Says:

        Thanks a lot Sir, for your kind response.
        If you’d read ‘ Vishnupuram’ you would have been the trailblazer for same and we could have benefited by your expounding same. Vishnupuram is purported to be his master-piece.

        Aram – collection of short-stories ( Es Ra’s ‘neghilvology’ is nothing compared to this )has been talked about widely .

        For the sake of typing comfort, English ( Arai-Kurai that itself) being used whilst I surely shall check ( Asan’s guidance on using tamil-typo and software related to same will help) for bringing one in Tamil . Not to thrash me for same as I understood your feelings fully.

        Regards
        SB


      • ஐயா, நான் சரியாக எழுதவில்லை. அவருடைய விஷ்ணுபுரம் உட்பட – அவர் எழுதியுள்ளவற்றை ஏறக்குறைய முழுவதும் படித்திருக்கிறேன். ஏன், எழவெடுத்த குப்பைகளான சாரு நிவேதிதாவையும் எஸ்ராவையும் தான். (கேளிக்கை)

        அறம் கதைகளைப் புத்தகமாகவில்லாமல் இணையத்தில் படித்தேன்.

        விஷ்ணுபுரம் is definitely overrated. It is now part of the consciousness of his hysterical and hypnotized readers’ collective. So.

        இதுகுறித்து அருண் நரசிம்மன் அவர்களின் சிந்தனைகளை அவசியம் படிக்கவும். அழகாக எழுதியிருக்கிறார்:

        இது விஷ்ணுபுரம் விமர்சனமல்ல – https://arunn.me/2012/10/03/ithu-vishnupuram-vimarsanamalla/

        விஷ்ணுபுரம் அறிமுகம் – https://arunn.me/2012/02/19/vishnupuram-arimugam/

        வெண்முரசு என்பதின்பால் – எனக்கு அலுப்பும் அதன் திரிப்பின்மீதான ஆச்சரியமும்.

        என் ஜாபிதா – அவர் எழுதியவற்றில் எனக்குப் பிடித்தது, அவ்வளவுதான்.

        இப்போதைக்கு இவை போதும்.


    • ஐயா – நேரம் கிடைக்கும்போது முடிந்தால் அதனைப் படிக்கிறேன்.

      இந்த ஆர்வி யாரென்று எனக்குத் தெரியாது.

      நன்றி.

  5. Sivakumar Says:

    Thanks for introducing Arun Narasimhan’s blog. Funnily insightful and pragmatic. You are another level. Infinitesimally funny, terribly intelligent and dogmatic (with s.ra & j.mo)

  6. பெயரிலி Says:

    ஜெமோ உங்களைத்தான் இதில் திட்டியிருக்கிறார் https://www.jeyamohan.in/115329


    • ஐயா, ரொம்பவும் கொதித்துத் துள்ளாதீர்கள். அவர் வேறெவரோ ‘பிரபலப் பதிவர்'(கள்?) பற்றித்தான் பிரலாபித்திருக்கிறார்.

      என்னைத் திட்டிக்கொண்டே அதிகபட்சம் ஏழரை பேர் படிக்கும் ஒத்திசைவு, ஒரு மசுத்துக்கும் பிரபலம் கிடையாது என்பதுதான் அதன் பலம். மேலும் எனக்கு ஒரு மசுர் மானுடநேயமும் இல்லை. சமூகஅறவுணர்ச்சியும் கிலோ எவ்வளவு விலை.

      பின்குறிப்பு: யார் அந்தப் பிரபலப்பதிவர்கள் என்று தெரிவித்தால் ஒடிப்போய் லைக் போடுகிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s