விடாது கரப்பு: அனீஷ்க்ருஷ்ணன் நாயர், ஜெயமோகன், போக்கற்றவன் – குறிப்புகள்

June 4, 2019

என்ன செய்வது. உங்கள் கர்மா.

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்; இவற்றைப் படித்தால்தான் பின்புலம் பிடிபடும்.

-0-0-0-0-

நேற்று ஒரு தொல்லைபேசிக் கச்சேரி; இதற்குப் பயந்துகொண்டுதான் நான் பொதுவாகவே என் தொலைபேசி எண்ணை யாருக்குமே கொடுப்பதில்லை. ஏமாந்தால் கூப்பிட்டு அறிவுரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள், பாவிகள்! நிறையப் பட்டிருக்கிறேன். ‘பஸ்ல வொக்காந்தேனா! பொளுது போவலயா! வொங்க நெனவு வந்திச்சி! அதனாலதான்!!

சரி. இவர் ஜெயமோகன் விசிறி. ஓரளவு தெரிந்தவர்தாம் – அதுவும் இந்த ஒத்திசைவு எழவைத் தொடங்கிய பின்னர், சுமார் 4 வருடங்களாகத்தான்; 2015 வாக்கில் வீட்டுக்கு வந்து 100-110 புத்தகங்களை அள்ளிச் சென்றார்கூட. காந்தி-நேரு புல்லரிப்பு வகை ஆசாமி. என்னிடம் புலம்பல். நவரச நாயகங்கள். அதிகமாகப் பிலாக்கணமும் அறிவுரையும்! [ஆனால், நல்லவேளை – பிறசில ஜெயமோக விடலைவிசிறிகள் செய்வதைப் போல பார்ப்பனன் கீர்ப்பனன் எனச் சொல்லி :-) இவர் என்னைத் திட்டவில்லை;  ஆக, எனக்கு, ‘வட போச்சே!’]

சாராம்சம் – ஆனால் அதே புலம்பல் வரிசையில் இல்லை:

1. ‘நாம்’ ஏன் உள்ளுக்குள் சண்டை போட்டுக்கொள்கிறோம்? சகல பக்கங்களிலிருந்தும் பாரதசமுதாயம் கிடுக்கிப் பிடியில் திணறிக்கொண்டிருக்கும்போது, இம்மாதிரி விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் போகவேண்டாமா? ஜெயமோகன் போன்ற அறிஞரிடம் எடுத்துக்கொள்வதை எடுத்துக்கொண்டு விடுப்பதை விடாமல் – இப்படிப் போக்கற்றவனாகப் பொருதிக்கொண்டு இருக்கிறாயே!

2. நீ காந்தியன் என நினைத்தேன். நீ அப்படியல்லன். நீ வன்முறையாளன்.

3. ஜெயமோகன் திரும்பித் திரும்பி ‘சமண நூல்களில் அப்படிச் சொல்கிறார்கள் எனத்தான் சொன்னேன்’ என்கிறார். நீ அதனைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறாய். செய்யாத குற்றத்துக்கு அவர் ஏன் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும்?

4. ஜெயமோகன் தமிழுக்கு ஒருவிதமான நல்ல பங்களிப்பையும் அளிக்கவில்லையா? அவர் பாரதத்தின் முக்கியமான எழுத்தாளரில்லையா? மாறாக உன் பங்களிப்பு என்ன?? உனக்கு ஏன் அவரிடத்தில் பொறாமை?

5. நாயர் அவர்கள் படிப்பாளி. நிறையப் படித்திருக்கிறார்.  பண்பாளர். தானுண்டு தன்வேலையுண்டு என ஒருவரையும் குற்றம்சொல்லாமல், நகைக்காமல் இருக்கும் மென்மையான அவரைக் குற்றம் சொல்ல நீ யார்? நீ படித்திருப்பது ரெண்டு புத்தகங்கள்தாமே! உன் தகுதி என்ன?

6. உனக்கு நகைச்சுவை உணர்ச்சியே இல்லை. கொதிக்கிறாய். வெறுப்பியத்தில் ஈடுபடுகிறாய். வாழ்க்கை கசந்துவிட்டதா உனக்கு?

7. கையில் பேனா கிடைத்தான் எதைப் பற்றியும் எழுதிவிடுவதா? தட்டச்சு செய்யமுடிந்தால் எதையும் சுற்றுக்கு விடுவதா? பள்ளி ஆசிரியராகச் சிலகாலம் இருந்தால், உலகத்தைக் கரித்துக்கொட்ட உனக்கு உரிமை கிடைத்துவிட்டதா?

8. நீ ஜெயமோகன் பற்றி எழுதுவதை நிறுத்து. இல்லாவிடில் நான் ஒத்திசைவு படிப்பதை நிறுத்திவிடுவேன்.

(…இம்மாதிரியாகத் தொடர்ந்து என்னைக் கழுவிஊற்றிக் கழுவிலேற்றிக் கழுதைமேல் அமர்த்தி, கரும்புள்ளிசெம்புள்ளியை திராவிடத்தனமாகக் குத்தியபின், கடைசியில் ‘ஒத்திசைவைத் தொடர்ந்து எழுது, பிடிக்காவிட்டாலும் தொடர்ந்து படிப்பேன்!’ என்று வேறு ஒரு மிரட்டல்; குறுஞ்செய்தியில், ‘தவறாக நினைத்துக்கொள்ளாதே! ஒரு வேகத்தில் பேசிவிட்டேன்!’ இன்ன பிற… மனிதர்களுக்கு கமலஹாஸிய பாரதிமீசைக்கும் ஆசை, மழுங்கச் சிரைத்துக் கொண்டு இளமையாகக் காட்டிக்கொள்ளவும் ஆவல், வேறென்ன சொல்ல!)

-0-0-0-0-0-

அலுப்பு. என்னவோ போங்க… மறுபடியும் மறுபடியும் இம்மாதிரிக் கேள்விகள். பலமுறை இவற்றைக் குறித்து எழுதியாகிவிட்டது; ஆனாலும், எனக்கும் இம்மாதிரி கேள்விகள் என்னை, கொஞ்சம் நிதானமாக யோசித்து, நிகழ்வுகளை அசைபோட்டு, நக்கலோ கிண்டலோ இல்லாமல், சமனம் மிகுந்த எதிரிவினை புரிய வைக்கின்றன. ஆகவே படு ஸீரியஸ்ஸாக எழுத முயல்கிறேன். :-(

சரி. தமிழில் தொடர்ந்து, படு ஸீரியஸ்ஸாக எழுதி/தட்டச்சித் தள்ளுபவர்களில் – விழுப்புரத்தின் வாணூர் வட்டச் சார்பதிவாளர் அலுவலகம் பக்கத்தில், பத்திரப் பதிவு தமிழில் ‘அடியில் கண்ட சொத்து’  தட்டச்சும் குமாஸ்தா கன்னியப்பன் அவர்களுக்கு அப்பாற்பட்டு –  என் மதிப்புக்குரிய பேராசான் ஜெயமோகன் அவர்கள்தாம் முதன்மையானவர்.

இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை. ஏனெனில், கன்னியப்பன் அவர்கள் என் ஜிகிரி தோஸ்த். அவர் திருமா, வேல்முருகன், நாராயணசாமி, ரங்கசாமி, ராமதாஸ், ‘உசுட்டேரி கொண்ட’ திமுக ராஜா, டிஆர்பாலு என எடுத்துவிடும் புள்ளிவிவர ஊழல்கள் / அபகரிப்புகள் / அடாவடி ஆகாத்தியங்கள் + ‘குட்டி நடிகையுடன் ஜல்ஸா’ விவகாரங்கள், சுவாரசியமானவை. ஆனால், இவரையும் அப்படியே எடுத்துக்கொண்டு விடமுடியாது. ஒப்புக்கொள்கிறேன்.

தமிழில் ஸீரியஸ்ஸாகப் படிப்பவர்கள் எனச் சுமார் 200 பேர் இருந்தால் அதிகம். ஸீரியஸ் என்றால் – பரந்த அலுப்பனுபவமும், படிப்பறிவும், ஆகவே நரைமுடியுமுடைத்தவர்கள். இந்த எண்ணிக்கை சங்ககாலத்திலிருந்து ஸ்டேண்டர்டாக அங்கேயே இருக்கிறது. இதில் நானும் ஒருவனாக இருக்கலாம், சந்தேகம்தான்! ஏனெனில் என்னிடம் நரைமுடி மட்டும் இருக்கிறது, தற்போதைக்கு.

ஆனால், மேற்கண்ட கூமுட்டைகளைத் தவிர, எக்காள வெண்முரசினால் துடிக்கத் துடிக்கக் கொட்டப்பட்டு, அதையன்றிப் பிறிதொன்றில்லை என அதனை ஸேடோமேஸொக்கிஸ இன்பலாகிரியுடன் தொடர்ந்து வாசித்தே தீரும் ~1000 தமிழ்க்குளவி-செங்குளவிகள் இருக்கலாம். இவர்களின் நிலைமை ஸீரியஸ்.  பாவம். உறவுக்கார குளவி குளவன்களுக்கும் இரட்டைக் குளவி, எழுதாக் குளவி உட்பட அனைத்துக் குளுவான்களுக்கும் சொல்லியனுப்பிவிடவேண்டிய நிலைமை!

பின், தொடுவானத்துக்கு மிக அப்பால்… … சாருநிவேதிதா, எஸ்ராமகிருஷ்ணன் என ஆரம்பித்துக் கருமாந்திரக் கரப்பான்பூச்சிகளின் அணிவகுப்பும் அவைகள் வழிநெடுக இட்டுக்கட்டி இட்டுக்கொண்டே போகும் விஷ்டையும். இவர்களையெல்லாம் பார்த்து விக்கித்தும் அரண்டும் போயிருக்கும் எனக்குப் பேராசானே பரவாயில்லை என அவரிடமே நிபந்தனையற்றுச் சரணடையலாம் என்று அவ்வப்போது அங்கு எட்டிப் பார்த்தால்… அவர் தம் சமணச் சம்மட்டியால் என்னை ஓங்கி அடித்து என்னை என் வேட்டிதுண்டைப் பிய்த்துக்கொண்டு கோமணத்தைக் கிழித்துக்கொண்டு  ஆகப்பெரிய அம்மணமாகத் தெறித்தோடச் செய்கிறார்!  ஹ்ம்ம்ம், எப்படியும் வேறொரு திகம்பர ரகசியமுமில்லை இதில்! எல்லோருக்கும் இருக்கும் அடியில் கண்ட சொத்துதான் என்னிடமும்… என்ன செய்வது, சொல்லுங்கள்!

இன்னும் சிலபலர் இருக்கிறார்கள், அத்திபூத்தாற்போல எழுதுகிறார்கள். அவையும் நன்றாகவே இருக்கின்றன. இவர்களில் சிலரை நான் முடிந்தபோதெல்லாம் படிக்கிறேன். ஆனால், இவர்கள் கூடியவிரைவில் திருந்திவிடுவார்கள் என நினைக்கிறேன். ஒருவிதத்தில் மகிழ்ச்சி; இன்னொரு விதத்தில் வருத்தம்.

மேற்கண்டவர்களைத் தவிர சுமார் 100 கோடி பேர் தமிழில் எழுதுகிறார்கள் – அவற்றில் பெரும்பாலும் கவிதைகளாக இருக்கவேண்டும். அவர்களே எழுதி அவர்களே படித்துக்கொள்ளும் கர்மசிரத்தை. சுயகவிதைமைதுனம். கவிரைவீக்கம்.

அம்மணிகளே, அம்மணர்களே! நான் குறிப்பிடவரும் பிரச்சினையென்னவென்றால் – தமிழ் அலக்கியம் என்பது மொத்தம் 200 பேரால் மட்டுமே ஸீரியஸ்ஸாக கவனிக்கப்படுவது. அவர்களுக்கும் ஆயிரம் பிறகவலைகள் & பிரச்சினைகள்; அவர்களும் ஒரு ரிலீஃப் எழவாகத்தான் – ஒன்றிரண்டு ரிட்டையர் ஆன கிழங்கட்டைகளைத் தவிர – அலக்கியத்தை அணுகுகிறார்கள். அவ்ளோதான்!

மாறாக – உலக உளறுத் தமிழரின் மாக்கட்தொகை சுமார் ஏழரைக் கோடி. இவர்களில் சுமார் ஏழரையாயிரம் பேர் ஜெயமோகனைப் படிக்கும் (வீடு)பேறு பெற்றிருக்கலாம்; அதிலும், திகைப்பளிக்கக்கூடிய அளவில், மொத்தம் (அதிக பட்சம், போக்கற்றவனாகிய அடியேன் உட்பட!)  ஏழரை பேர் மட்டும்  ஒத்திசைவுக் குறிப்புகளைப் படிப்பவர்கள், பாவப்பட்ட ஜீவன்கள்.

ஏனெனில் தமிழ் இலக்கியம் என்பதே, திராவிடர்களுக்கு நன்றியுடன், ஒரு தொன்மம், மிகைக் கதையாடல். மித். மாறாக, தமிழ் அலக்கியம் என்பதுதான் நிதர்சனம். நன்றி.

அலக்கியத்தின் அழகு இப்படி நியாயமாகவே இருக்கையிலே, இந்தக் குண்டுச் சட்டிக்குள் ஆயிரம் பிரச்சினைகள். அக்கப்போர்ஸ். இன்பம்ஸ். குடுமிப்பிடிச் சண்டைகள். புரளிகள். கடைந்தெடுத்த பொய்மைகள்.  சமணம் குமணம் எனும் அழிச்சாட்டிய கும்மாளம் வேறு! விசிலடிச்சான் குஞ்சப்ப வரலாற்றாளர்களின் இன்பலாகிரிக் கண்டுபிடிப்புகள்! ‘மாஸ்டர் ஆஃப் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்’களின் எதற்கெடுத்தாலும் மேதாவிலாசக் குறிப்புகள்… சிரித்துச் சிரித்து மாளவில்லை, வேறென்ன சொல்ல!

ஆகவே, உங்கள் கரப்புக் கர்மாவின் வினை உங்களைத் துரத்துகிறது…

(குறிப்பு: மேற்கண்ட எண்ணிக்கைகளெல்லாம் ஆசானிய முறையில் ஈசானிய திசையை நோக்கிக்கொண்டே என் புட்டத்தைச் சொரிந்துகொண்டிருந்தபோது, தனக்குத் தானே தோன்றியவை. ஆகவே, ஆசானியத் தகவல்களைப் போலவே, இவற்றையும் லூஸ்ல வுடவும். நன்றி!)

-0-0-0-0-

1-8 பதில்கள்:

1. உள்வட்டம் – வெளிவட்டம் எல்லாம் எனக்கு இல்லை. ஆகவே ஜெயமோகனை ‘நம்மவர்’ எனவும் நினைக்கவில்லை – அவர் சமயத்துக்கேற்றது போல (நம்மெல்லார் போலவும்தான்!) நடனமாடுபவர்தாம்; ஏனெனில் இலக்கியம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி எல்லாம், நம் பண்பாட்டு வெளியில் பெரிய விஷயங்கள் இல்லை; முக்கியமாக அவைகள் இப்போதிருக்கும் தரத்துக்கு அவற்றின் சுயபிம்பங்கள், ஸாரி, கொஞ்சம் ஓவர்; அவற்றைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எல்லாம் ‘சமூகத்தின் மனச்சாட்சிகள்’ அல்லர்.  சொல்லப் போனால், நம் அலக்கியக் காரர்கள் போன்ற செயல்பாடுகளை உடையவர்கள், நேர்மையற்ற அரசியல் செய்பவர்களினால் – அவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்களுக்கே (அவை ‘பொது நன்மை’ சார்ந்திருந்தாலும்கூட, பாரதீயம் தொடர்புள்ளதாக இருந்தாகுமேகூட) மோசமாகிவிடும் என்பது என் அனுபவம்.

ஜேஜே: சிலகுறிப்புகள் எனும் எனக்குப் பிடித்தமான நாவலில், அகந்தையின் சில ‘நன்மைகள்’ குறித்துச் சிலவரிகள் இருக்கின்றன: அகந்தை எப்படிச் சோறாக வெந்து பசியைப் போக்குகிறது, என விரியும் அவை. செயல்பாடுகளின் ஊற்றுக்கண்களான சிந்தனையைக் குறித்த வரிகள். இத்துடன் இதனை விடுகிறேன்.

பாரததத்துவத்தின் மீதான கருணையற்ற, பேடித்தனமான தாக்குதல்கள் குறித்து: இவற்றுக்கெதிராக அவர் காத்திரமாகச் செயல்படுகிறாரா எனத் தெரியாது, ஆனால் பல கட்டுரைகளை வடித்திருக்கிறார்; நான் படித்திருக்கிறேன். அவர் அப்படி காத்திரமாகச் செய்யவேண்டும் எனவும் நினைக்கவில்லை. ஆனால் ஒன்று: பாரதம் என்பது அலக்கிய அலக்கணங்களுக்கும் அவற்றின் பவிஷுகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு விஷயம். அதைப் பற்றி நம் அலக்கியவாதிகள் கவலைப் படுவதைப் பற்றித்தான் பாரதமும் பாரதீயர்களும் கவலைப்படவேண்டும் – இதென்னடாது பிலிம் காட்டுதல் என்று!

இன்னொன்று: ஜெயமோகன் அறிவியல் தொழில் நுட்பம் டாவோ ஆஃப் பிஸிக்ஸ் பென்ரோஸ் கயாஸ்தியரி வயர்லெஸ் தொலைதொடர்பு சிட்டுக்குருவி ரொபாட் என்றெல்லாம் பேசாமலிருந்தாலே நல்லது, அறிவியல் ‘புனைவுகள்’ பக்கம் போகாமலிருந்தாலும். வாய்க்கு வந்தபடி பேசுவதற்கு அவருக்கும் யுவகிருஷ்ணா எஸ்ரா போன்றவர்களுக்கும் உரிமை இருந்தாலும் என் ‘கரித்து’ இது. அவரவருக்கு அவரவர் எல்லைகள் தெரியவேண்டும் – இல்லாவிட்டால் அவைகளை மீறும்போது வெகுசாதாரணமாக எல்லோர்க்குமே ஏற்படும் அபுரிதல்களை ஒப்புக்கொண்டு, தம்மைத் திருத்திக்கொண்டுஅவற்றைத் தாண்டிச் செல்லவேண்டும். ஆனால் கற்றுக்கொள்ளவே மாட்டேன், பாரதப் பொருளாதாரம் பற்றி டபக்கென்றுப் பேசுவேனென்றால்… சிரிப்புத்தான் வருகுதய்யா! (ஜெயமோகனின் ‘வரி’ தொடர்பான கருத்துகள் எனக்குக் கொடுத்த இறும்பூதுக்கு அளவேயில்லை!)

ஆக – எனக்குத் தவறு எனப் பட்டதை, தரவுகளுடன் தவறு என்று சொல்கிறேன். கிண்டல் செய்கிறேன். போற்றுதற்குரியனவைப் போற்றுகிறேன். இதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.  உங்களுக்கு அது பிரச்சினையாக இருந்தால் அகலலாம். நன்றி.

அறிதலைப் பொறுத்தவரை, என்னுடைய கடவுள் ஸரஸ்வதி – அவளுக்கு மட்டும் தான் நான் கடமைப் பட்டிருக்கிறேன். பூசிமெழுகுவதன் கடவுளர்கள் லக்மேதேவியும் டவ்வச்செல்வியும் ஃபேரண்ட்லவ்லிகுமாரியும் – அவர்கள் கிட்டேகூட நான் போவதில்லை.

அதேசமயம் – என் தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். தாராளமாக நான் என்னைத் திருத்திக்கொள்கிறேன். எனக்கு இதெல்லாம் மானப் பிரச்சினையல்ல.

2.  மறுபடியும் சொல்கிறேன். நான் காந்தியன் அல்லன். ஆனால் – பாபுஜியின் ‘பஹுரூபே’ – அதாவது அவருடைய பன்முகங்கள், பௌதீகரீதியான செயல்பாடுகள் எனக்குப் பிடித்தமானவை. அவரைப் பலவிதங்களில் தொடர்ந்து புரிந்துகொள்ள முயன்று வருகிறேன் என்றாலும் – அவருடைய அரசியல்செயல்பாடுகள் ஜெயமோகன் மொழியில் வேண்டாவெறுப்பாகச் சொல்லப்போனால் ‘தட்டை’ எனத்தான் கருதுகிறேன் – ஹ்ம்ம், படுமோசம் என்றேகூட.  ஊக்கபோனஸாக இரண்டுமூன்று வருடங்களுக்கு முன் அரங்கசாமி+ஜெயமோகனுக்கு, ஏதோ (எஸ்கேபி கருணா எனும் கல்வித்தந்தை) விவகாரம் தொடர்பாக, நான் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்கண்டவாறு நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

நான் தூய்மையானவனோ ஒழுக்கவாதியோ அல்லன்.  கோபமும் தாபமும் உடையவன் – ஏன், வன்முறையைச் சர்வசாதாரணமாக உபயோகிப்பவன் (மூன்று நாட்களுக்கு முன்னால், பள்ளிச்சிறுமி ஒன்றின் பின்புறத்தைத் தடவிவிட்டு ஓடிய தறுதலையைப் பிடித்து ஓடஓட அடித்திருக்கிறேன்!), பின் அதனைக் குறித்து வெட்கப் படுபவன். :-( சர்வ நிச்சயமாக 0.0001% காந்தியன்கூட அல்லன் – இது காந்தியை நான் மிக மிக ஆராதிப்பவன் என்றாலும்! பேச்சு முழ நீளத்துக்குப் பேசலாம் – ஆனால் நான் யதார்த்தவாதி. GTD – Getting Things Done என்பதில் மும்முரம் உள்ளவன், செய்பவன்; எனக்குத் தெரியும் – யதார்த்தவாதி, வெகுஜனவிரோதி. ஆகவே லட்சியவாதி என என்னை அழைப்பது – ஏன், கோடிட்டுக் காட்டுவதே கூட ஒரு குரூரமான அவதூறு.

பாபுஜி அவர்களின், எனக்கு அணுக்கமான விஷயங்களை எழுதினால் நான் ஆட்டொமெடிக்காக காந்தியன் ஆகிவிடமாட்டேன். யாரும் அப்படி ஆகிவிடமுடியாது. ஜெயமோகன் தலைகால் தெரியாமல் புளகாங்கிதமடைந்து தலையில்  தூக்கிவைத்துக்கொண்டு குத்தாட்டம்போட்ட அண்ணாஹஸாரே உட்பட.

3. அவர் அப்படியும் சொல்வார். இப்படியும் சொல்வார். தான் புனைவதைப் பற்றியும் புனையும் மெடா-புனைவாளர் அவர்.

ஆனால் – சரி, அவர் அப்படியே ‘சமண புத்தகங்களில் சொன்னதாகத்தான் சொன்னார்’ என ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், பிற புளுகுகள்? உளறல்கள்?? அவற்றை லூஸ்ல வுடவேண்டுமா?

4. ஜெயமோகன் தமிழின் ஒரு முக்கியமான எழுத்தாளர். ஆனால் அவர் இலுப்பைப்பூ. அவரை நான், பாரதத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் எனக் கருதமாட்டேன். His is a relative merit, NOT absolute merit. Sorry to bust your illusions.

ஏனெனில் – நான், என் கிழவயதின் காரணமாகவோ என்ன எழவோ, பாரதத்தின் பலபிற மகாமகோ எழுத்தாளர்களின் புத்தகங்களையும், உலகளாவிய பிதாமகர்களையும் படிக்கும் பாக்கியம் பெற்றவன். எழுத்துக்கூட்டி காளிதாஸனைப் படிப்பவன். என் அளவுகோல்கள் வேறு. அவை தமிழலக்கிய, சொறிந்துகொடுக்கும் கன்னக்கோல்களல்ல.

அதே சமயம், அவர் எழுதிய இரு கட்டுரைத் தொகுப்புகளை, நான் மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன் – அவை: சிலுவையின் பெயரால் + சங்கச் சித்திரங்கள்; அவர் எனக்கு மிகவும் பிடித்தமான சிலபல பேய்க்கதைகளை (வெண்முரசைக் குறிப்பிடவில்லை) எழுதியிருக்கிறார். அவருடைய தமிழ்வளமும் அதைக் கையாளும் லாகவமும் அனுபவித்து மகிழத் தக்கவை. சந்தேகமேயில்லாமல் அவர் ஒரு புத்திசாலி (ஒப்பு நோக்க – எஸ்ரா, சாருக்கள் எல்லாம் புத்துசாலிகள் – बुद्धू)

ஆனால், எனக்கு எதற்கு அவர்பேரில் பொறாமை? நான் ஊடாடும் தளங்களே வேறு. மேலும் அலுப்புடன் படிக்க: ராமசாமி – யாரில்லை?

5.  நான் முன்னமே சொல்லியபடி, எனக்கு இந்த அனீஷ் க்ருஷ்ணன் நாயர் அவர்களுடன் பெரிதாக அறிமுகமில்லை – ஒத்திசைவில் அவர் இட்ட பின்னூட்டத்துக்கு நான் அளித்த பதிலைப் பார்க்கவும். அவர் ‘தானுண்டு தன்வேலையுண்டு’ என்றிருக்கிறாரா, விவாதங்களில் ஈடுபடுகிறாரா என்பதையெல்லாம் அறியேன். எனக்கு அவற்றைத் தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகவேண்டியதில்லை. (அவருக்கும்தான்!)

ஆனால், பொதுவாகவே ஏகத்துக்கும் வறண்ட தமிழ் அறிவுஜீவியப் படிப்பாளிச் சூழலில் அவரைப் போன்றவர்கள் விதிவிலக்குகள், ஆகவே அவர்கள் நிறைய எழுதவேண்டும் எனும் பேராசையுடையவன் நான். அதற்காக அவர்கள் எழுதுவதெல்லாம் எனக்கு உவப்பாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. நான் யார் இப்படியெல்லாம் அடாவடி செய்வதற்கு!

…இதனாலேயே எனக்கு பத்ரி சேஷாத்ரி, அரவிந்தன் நீலகண்டன், அருண் நரசிம்மன்  போன்றவர்கள் (தகுதியுள்ள  இன்னும் பலர் இருக்கிறார்கள் இப்படி!) பேரில் கோபமும் அலுப்பும் – இவர்கள் ஏன் நிறைய எழுதமாட்டேனென்கிறார்கள்?

…அல்லது எழுதுகிறார்கள் என வைத்துக்கொண்டால் – அவற்றை ஏன் என்னால் அணுகமுடிவதில்லை? ஃபேஸ்புக்கில் மட்டும் எழுதுகிறார்களா??  (நான் முடிந்தபோதெல்லாம் ‘வலம்’ & ஸ்வராஜ்யா படிக்கிறேன் என்பதைப் பதிவு செய்கிறேன்)

…சரி. என் வீட்டுக்கு வந்து நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அள்ளிச் சென்ற நீங்கள், இப்படிப் பேசுவதைக் கிண்டல் என எடுத்துக்கொள்கிறேன். பரவாயில்லை.

மேலும், புத்தகங்கள் படிப்பது, கருத்துரீதியாகப் பொருதுவது என்பதெல்லாம் என் வாழ்க்கையின் சிறு பகுதிகள். முதன்மையாக நான் ஒரு வரலாற்றுமாணவன், இரண்டாவதாக – ஒப்புக்கொள்ளத்தக்க ஆகிருதியும் கைவேலைகள் பல செய்யும் திறனும் உள்ள பொறியியலாளன் – மூன்றாவதாக, ஒரு ஆசிரியன். நான்காவதாக… ஹ்ம்ம்… அவ்ளோதான்.

6. எனக்கு நகைச்சுவை உணர்ச்சியில்லை எனச் சொல்கிறீர்கள். என்னிடம் இருக்கும் ஒரேயொரு சாக்லேட்டையும் பிடுங்கிக்கொள்கிறீர்கள். பரவாயில்லை, உங்களுடைய நகைச்சுவையுணர்ச்சி அதிகம்தான்!

7. இல்லை. ஜெயமோகன் போலல்லாமல், நான் எனக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி மட்டும்தான் எழுதுகிறேன்.  நான் ஒரு பின்புலமுமில்லாமல் உளறிக்கொட்டுபவன் அல்லன் – அதே சமயம், உளறினேன் என யாராவது சுட்டிக்காட்டினால், அதனை மறுதலிக்காமல் என்னைத் திருத்திக்கொள்பவனும்; ஏனெனில் நான் ஒரு அறிவுஜீவியோ அலக்கியக் காரனோ அல்லன். என் குவியம் அலக்கியமல்ல. எனக்கு வீங்கிச் சீழ்வடியும் ஊதிப்பெருக்கப்பட்ட சுயபிம்பமும் இல்லை.

மேலும், முன்னெப்போதோ நான் குறிப்பிட்டிருக்கிறேன் – 1991-2011 போல, இருபது வருடங்கள் நான் தமிழில் ஒன்றும் எழுதவில்லை – ஆங்கிலத்தில் என் பள்ளி தொடர்பாகக் கொஞ்சம் எழுதினேன். ஆனால்  நிறையப் படித்தேன் – திகட்டத் திகட்ட இன்பலாகிரியுடன் ஒரு நாளுக்கு 4-5 புத்தகங்கள் படித்த காலமும் இருந்தது; பழக்கமும் தடிமன்தோலினாலும் தொலைக்காட்சியின்மை போன்ற சிலபல காரணங்களாகவும் பெருமளவு நண்பர்களில்லை எனும் உண்மையாலும், நான் பொதுவாகவே நிறையப் படிப்பவன் – இது பெரியவிஷயமில்லை – இப்போதும் கூட ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஒரு புத்தகமும் நான்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ஒருவிதமான வெறியுடன் படிப்பவன். ‘விடுமுறை’ நாட்களில் இது அதிகமாகலாம்.

ஆனால் ‘உலகத்தைக் கரித்துக்கொட்ட’ எனக்கு ஆவலில்லை. எப்படி நீங்கள் இதனைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எனக்கு வாழ்க்கையில் பிடிப்பு உண்டு, வெறுப்பு இல்லை. நான் அலக்கியக் காரனல்லன். தாடி வுட்டுக்கினு கண்ணில் பஞ்சடைத்து கஞ்சிக்கலயத்துடன் வாழ்க்கையின் இருப்பு இருப்பின் அவஸ்தை அவஸ்தையின் தேடல் தேடலின் கனகம்பீரம் கம்பீரத்தின் நங்கூரம் பற்றி உளறிக்கொட்டிக்கொண்டு அலைபவனல்லன்.

மேலும், ஜெயமோகனிடம் கேட்கவேண்டிய கேள்விகளை, அவரிடமும் கேட்கலாமே! ;-)

8. சரி. நான் எனக்குப் பிடித்தமாக இருக்கும்போது,  அவர் எழுத்துகளை சிலாகித்தும் எழுதியிருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளவும். ஆனாலும் சலிப்பின் காரணமாக –  ஜெயமோகன் பற்றி எழுதுவதை நிறுத்திவிடத்தான் ஆசை. பார்க்கலாம். ஆனால், அவருடைய தகுதிக்கும் அளவுக்கும் மீறி மானாவாரியாக அவர் ஆடித்தள்ளுபடியில் அட்ச்சிவுடும்போது சங்கடமாகி விடுகிறது. இதைக் கண்டுகொள்ளாமல், தாங்கள் எனக்கு மட்டும் அறிவுரை தரும்போது சிரிப்பாக வருகிறது.

மற்றபடி, நீங்கள் ஒத்திசைவைப் படிக்காவிட்டால், யாருக்கும் ஒரு பிரச்சினையுமில்லை. நன்றி. எப்படியும், அடுத்தமுறை என் புத்தகங்களைக் கழித்துக்கட்டும்போது அவசியம் தெரிவிக்கிறேன். அதற்கும் நீங்கள் ஒத்திசைவு எழவைப் படிக்காததற்கும், உங்கள் ஆசான் போலவே நீங்களும் பொய் சொல்வதற்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லை, சரியா?

மற்றபடி நாம் தொடர்பில் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நன்றி.

போதுண்டாப்பா!

 

11 Responses to “விடாது கரப்பு: அனீஷ்க்ருஷ்ணன் நாயர், ஜெயமோகன், போக்கற்றவன் – குறிப்புகள்”

  1. nparamasivam1951 Says:

    அய்யா,
    ஜெயமோஹநார் பிசிக்ஸ் பேசுவதும், கமல்ஹாசன் அரசியல் பேசுவதையும் படிப்பது/கேட்பது நமது தலை எழுத்து.

  2. Kannan Says:

    சோதனைமேல் சோதனை,…உங்களுக்கு இப்படி, வ.ம வை நாய் கடித்து விட்டதாம். 

    :(


    • ஐயா, புரியவில்லை. விளக்குக.

    • RC Says:

      கண்ணன் சார், ஏன் நிசப்தமா இருக்கிற இடத்தில கல்லு விடுறீங்க ..கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ப்ளீஸ் பாவம் அவரு :-)


      • ஓ! நிசப்தம் என்றால் silence, no noise! நாய்ஸ் கூடாது என இப்படித் தெளிவாக எஸ்ராதனமாக அவர் தம் தளத்துக்குப் பெயர் வைத்தும், இப்படியாகிவிட்டதே என்பதை நினைத்தால்…

        நாய்களுக்கு ஆங்கிலம் தெரியாதோ என்ன எழவோ!

        1. இது சர்வ நிச்சயமாக ரசக்குறைவு. ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் தான் ஆரம்பித்தீர்கள்!

        2. ஆனால் தன்னை நாய் கடித்ததை எல்லாமா பதிப்பார்கள்? ஆச்சரியமாக இருக்கிறது. அலக்கியத்தில் ஏகத்துக்கும் வறட்சிபோலும். இன்றைய ஃபேஷனான சமணர் பற்றி எழுதலாமே! (ஆனால் சுஜாதா அவர்கள் குதிரை கடித்ததைப் பற்றி ஒரு சிறுகதை (நிஜ நிகழ்வு??) எழுதினார் என மங்கலாக நினைவு)

        3. இதுதான் சாக்கென்று ‘நாய்க்கடியார் கவிதைகள்’ என ஒரு பின் நவீனத்துவ நாலடியார் எழுதிவிடுவாரோ! பயபீதியாக இருக்கிறதே! இல்லாவிட்டால், இந்த நிகழ்வால் உந்தப்பட்டு தன்னுடைய சொந்த வெண்முரசு எழுத ஆரம்பித்து – பாண்டவர்களை ஒரு ஞமலி தொடர்ந்த கதையிலிருந்து ஆகச்சிறந்ததாக ஆரம்பித்துவிடுவாரோ?

        4. எது எப்படியோ அந்தப் பாவப்பட்ட நாயும், அவரும் இந்தச் சிக்கலிலிருந்து மீண்டு, தொடர்ந்து அலக்கியப் பணியாற்ற வாழ்த்துகள்!

      • Kannan Says:

        I just brought that up here to lighten up your mood. Va.Ma’s attempted humor is appreciable given the critical place of the bite.

        OTOH, you can safely ignore Aasan IMO. His creative juices have dried up. Hope they don’t print his Venmurasu in volumes and waste lot of trees for that.

        Cheers :)


      • Sir, thanks – but I still have no clue about the parts of SilentMan’s anatomy that was given dome autonomy.

        Entirely relied on your feed. :-)

        But, all’s well that ends in a well. Thanks!

  3. dagalti Says:

    இடிப்பாரே இல்லாத பேராசன் தன்னை
    படிப்பாரென் செய்வோமோ ஐயா- கடுப்பாகிப்
    போகாமல் நும்சேவை நீண்டால்தான் ஓசியில்
    நோகாமல் நுங்குண்ணத் தோது

  4. dagalti Says:

    Typo: பேராசான்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s