கருங்குருவிகளும், வெண்டைக்காய்களும், தர்ப்பைப் புல்லும் – இலவச இணைப்பாக, கெய்ல் ஓம்வேத்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆஇரா வேங்கடாசலபதிகளும்(2/2)

March 29, 2015

இக்கட்டுரையின் முதல்பாகம்.   இப்பதிவு(ம்) ரொம்பவே நீளம். பொறுமையாகப் படிக்கவும். தேவையற்றுப் பொங்கவேண்டாம். சரியா? :-(

-0-0-0-0-0-0-0-0-

என் பள்ளித் தோட்டத்திற்கு சுமார் 45 வகை விதம்விதமான பறவைகள் (சில, பிரமிக்க வைக்கும் அழகுடன்) வருகின்றன. கூடவே பலப்பல பட்டாம் பூச்சிகளும், சிலவகைத் தேனீக்களும், பலப்பல பூச்சிகளும், ஊர்வனவும். இவற்றைப் போக்கத்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்து மகிழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு,  சிலவகை கருங்குருவிகளைப் (Drongo, Dicrurus macrocercus) பற்றிக் கொஞ்சமேனும் மேலதிகமாகத் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது.

அதேபோல வெண்டைக்காய்களில் (Okra, Ladies Finger, Hibiscus esculentes) எனக்குச் சில பிரச்சினைகள் இருந்தன. இவற்றைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள நமைச்சலெடுத்ததால், இணையத்திற்குச் சென்றேன். ஆனால், சில ‘சுட்டிக்’ குதிப்புகளுக்குப் பிறகுதான்… பிரச்சினையே!

என் தலைவிதிதான், இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளைப் பார்க்க வைக்கிறது…

-0-0-0-0-0-0-0-
இப்போது, பாவ்லொவ் அவர்களின் ஒரு அழகான அறிவுரையைப் பார்க்கலாம்:

Do not become the archivist of facts. Try to penetrate to the secret of their occurrence, persistently search for the laws which govern them.

—  Bequest of Ivan Petrovich Pavlov (1849–1936), to the Academic Youth of His Country, Science , Volume 83, Number 2155, April 17, 1936 (p. 369)
இந்த பாவ்லொவ் தான்,  நாய்க்கு மணியடித்து ரொட்டிகொடுத்துச் செய்த பரிசோதனைகள் மூலம் பிரபலமானவர். நம் தமிழ் நாட்டுப் பாடனூல் நிறுவனப் புத்தகங்களில் கூட இவரைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்கள், ஆச்சரியம், ஆச்சரியம்!

இவர், தம் நாட்டு இளம் அறிவியல் ஆய்வாளர்களுக்கு என்ன சொல்கிறார் என்றால் (கொஞ்சம் ஜனரஞ்சகமான மொழி’பெயர்ப்பு!’):  “வெறுமனே செய்திகளை/துணுக்குகளை/உண்மைகளை அடுக்கிக் காக்கும் ஆவணக் காப்பாளனாக இருப்பது உங்கள் வேலையல்ல. மாறாக – அவை எப்படி ஏற்படுகின்றன/நடக்கின்றன என்பதை நுணுக்கமாக கவனித்து ஆய்ந்து அறிந்து – அவை நடப்பதிற்கான விதிமுறைகளைக் கண்டு தெளியத்தான், நீங்கள் பிரயத்தனப் படவேண்டும்.”

இன்னமும் ஜன ரஞ்சகமாக –   “சும்மா பஜனை செய்யாதீங்கடா, இளைஞ ஆராய்ச்சியாளர்களே! ஒழுங்கா ஆராய்ச்சி செய்யுங்க. இல்லாகாட்டி இசுடாலினார்ஸ்டாலின், குலக்-குக்கு உங்களை அனுப்சுடுவாரு!”

… ஆனால் இம்மாதிரி ஆவணக்காப்பக  ஆர்கைவிஸ்ட் வகையறாக்களுக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டுதான், என்னுடைய செல்லங்களில் ஒருவரான, ஆய்வாளர் ஆஇரா வேங்கடாசலபதி அவர்கள். மனம்போன போக்கில் அவர் கோர்த்துக்கொள்ளும் ‘உண்மைச் செய்திகளின்’ அடிப்படையில் விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்வது, ஒரு விதமான ஆய்வு மனப்பான்மையுமில்லாமல், தவறான முன்முடிவுகளுடன், பொய்மைக் கற்பிதங்களுடன் திரித்தல்களைச் செய்வது இவருக்குக் கைவந்த கலைதான்.

இவர் போன்றவர்கள், இந்திய அரசின் சில கல்வி தொடர்பான முனைவுகளில், ‘த அஹிந்து’ தினசரியின் திங்க்டேங்க் ஆய்வகத்தில் ‘அறிவுரையாளராக‘வெல்லாம் இருப்பது… எதிர்காலத்தின் மீதான என்னுடைய சில நம்பிக்கைகளை ஆட்டிப்பார்க்கும் விஷயங்கள்தான்!

–0-0-0-0-0-0-0–
என்ன சொல்லவந்தேனென்றால்,  மேற்படி -செய்தியடுக்கி ஆயோதிஆய்வாளரின்  வழியொற்றித்தான், இம்மாதிரியேதான் கீழ்கண்ட உயிரியல் ஆராய்ச்சி மகோன்னதங்களும் நடைபெற்றிருக்கவேண்டும்!

கருங்குருவிகள் நிலத்திலிருந்து சராசரி எவ்வளவு உயரத்தில் உட்காரும், பூச்சிகளைப் பிடித்துண்ணும் – எனும் சிடுக்கல் பிரச்சினைதான் இந்த அழகான ஆய்வில் வெளிப்பட்டிருக்கிறது.

Screenshot from 2015-03-03 16:06:33:-) மெய்யாலுமே, நம் ஆய்வாளப்பெருமகனார்கள் உச்சங்களை அளந்து கொண்டேதான் இருக்கிறார்கள்…

இப்படி ஒரு ஆராய்ச்சி, இப்படி ஒரு சஞ்சிகை… அழுகையாக வருகிறது. :-(

-00-00-00-

இன்னொன்று – வெண்டைக்காய்ச் செடியைச் சுற்றியுள்ள பூச்சிவகைகளைப் பற்றிய ஒரு பட்டியலிடலைச் செய்திருக்கிறது.

இதில் கண்டமேனிக்கும் கணிதத்தைக் கலந்துவேறு ஜல்லியோதிஜல்லியடித்திருக்கிறார்கள். ஒர்ரே புல்லரிப்புத்தான்!

இந்த ஆராய்ச்சி செய்யப் பட்டதற்குக் காரணம், வேறு யாருமே  இதனைச் செய்யவில்லையாம்! ஏனய்யா, இதில் ஏதாவது ஒளிக்கீற்று இருக்கிறதா? ஏதாவது ஆய்வுப் பார்வை இருக்கிறதா?

ஏனய்யா, இம்மாதிரி ‘ஆராய்ச்சிகளை’ அடிப்படையில் உயிரியலில் பயிற்சியே இல்லாத என்னாலேயே, வாரத்திற்கு ஐந்து செய்ய முடியுமே! ஆக மாதம் ஒன்றுக்கு, என் போன்ற நாடோடிகூட,  ஒரு பிஹெச்டி ஆய்வுக் கட்டுரையை உற்பத்தி செய்யமுடியும் போலுள்ளதே.மேலதிகமாக, இருமாதங்களுக்கு ஒருமுறையாவது சமூகமானுடவியல் பிஹெச்டி ஒன்றைப் ‘பண்ணவும்’ முடியும் போலிருக்கிறதே!

பத்து நாட்களுக்கு ஒருமுறை  “பின்நவீனத்துவ அயோத்திதாசரும், முன்பழமைத்துவ காத்தவராயரும்” என்கிற ரீதியில் ஆராய்ச்சியோதி ஆராய்ச்சிகளாக புழுக்கைகளை இட்டுக்கொண்டே, அந்த பாழாய்ப்போன ந்யூட்டனின் மூன்றாம் விதிப்படி, தம்மை முன்னேற்றிக் கொள்ளலாம் போல இருக்கிறதே! அய்யகோ!

டேய்!  என்ன எழவுக்குடா, இம்மாதிரி ஆயோதிஆய்வுகளைச் செய்யறீங்க…

என்ன மாபெரும் மோசடிகள் நடக்கின்றன, ஆராய்ச்சியின் பெயரால்… எல்லாம், நம் வரிப் பணம்!

ஆனால்… இந்தக் கந்தறகோளங்களையெல்லாம் மீறி, திராபைச் சாக்கடையில் அமிழ வைக்கும் சராசரித்தனங்களையும் மீறி — நம் பாரதத்தில் சிலபல ஒழுங்கான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன, போற்றுதற்குரிய பேராசிரியர்களும், முனைப்பான-துடிப்பான இளம் மாணவர்களும் ஆராய்ச்சித் துறைகளில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவருவதால் – இன்றுமுதல் எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்து விட்டது.

ஆம், கடவுளுக்கு நன்றி.

-0-0-0-0-0-0-0-

இதுவரை, நான் இந்த எழவெடுத்த தமிழக தனியார் மேற்படிப்புக் கடைகளில் – தஞ்சாவூர் ஸாஸ்த்ரா, வேலூர் போன்ற ஓன்றிரண்டு கல்லூரி/பல்கலைக் கழகங்கள் ஓரளவுக்குச் சரியானவையோ எனச் சந்தேகப் பட்டுக்கொண்டிருந்தேன்.

ஆனால் – மாஜி அஇஅதிமுக ஜிவிஸ்வனாதனின் வேலூர் கல்விக்கடைகள் + திருவண்ணாமலை திமுக கேபிச்சாண்டியின் எஸ்கேபி கல்வி வ்யாவாரக் கடைகளிலிருந்தும் (இவை அனைத்தும் – பலபத்தாண்டுகளாகக் கடுமையாக உழைத்து, நேர்மையாகச் சம்பாதித்த பணத்தைக் கொண்டுமட்டுமே, நிறுவப்பட்டன எனத்தான் நம்ப ஆசை!) கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்துள்ள சில மாணவமணிகளைப் பார்த்துவிட்டு – அதைவிட முக்கியமாக அந்தக் கடைகளின் ஆசிரியர்கள் சிலரை  ‘அளக்க’  (பரோபகார எண்ணங்களுடைய என் தொழிலதிபர் நண்பர் ஒருவர், தன்னுடைய உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஸ்தாபனம் செய்து நடத்தும் ஒரு நல்ல ஐடிஐ பயிலகத்துக்காக, நடத்தப்போகும் பள்ளிக்காக) முயற்சி செய்து – அவர்களது நகைக்கவைக்கும், அலுப்புதரும், திடுக்கிடவைக்கும், அதிசராசரி ஆளுமைகளைக் கண்டு மனம் பேதலித்து – என் வாழ்க்கையையே வெறுத்திருந்தேன். ஆகவே இவையிரண்டையும் துப்புரவாக ஒதுக்கி, ஒண்ணேயொண்ணு கண்ணேகண்ணு என, அந்த ஸாஸ்த்ரா கல்விக்கடைகளைப் பற்றி, சென்ற வாரம் வரை,  ஓரளவு – ஓரளவுதான் –  நம்பிக் கொண்டிருந்தேன்.

இது என் தவறுதான்.

…அரசல்புரசலாக (என் உறவினர் குழந்தைகள் சிலர் அங்கே படித்திருக்கிறார்கள், படிக்கிறார்கள் என்பதையும் மீறி) கேள்விப்படும் சிலபல விஷயங்களை மட்டும் கணக்கில் வைத்துக்கொள்ளாமல், அண்மையில் என் செல்லக் குப்பை தினசரிகளின் ஒன்றான ‘த ஹிந்து’வில் வந்துள்ள ஆனானப்பட்ட ஆராய்ச்சி(!) ஒன்றைப் பற்றியும் நான் படிக்க நேர்ந்தது என் பழவினைப் பயன் தான்! வேறென்ன சொல்ல. :-(

நீங்களும் அதனைப் படித்து இன்புற:http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/darbha-grass-a-natural-preservative/article7000098.ece

மாரடைத்து விட்டது. இதில் ஒரே நல்லவிஷயம் – இந்த எழவெடுத்த ஆராய்ச்சிக்கு, அந்த எழவெடுத்த ஸாஸ்த்ரா கடையே பணத்தை முதலீடு (=எள்) செய்திருக்கிறது என்பது தான்!

அனாதிகாலம் தொட்டு வரும் சடங்குகளையும், தற்கால அறிவியலையும் மூளையேயில்லாமல் கலப்பு மணம் செய்ய வைத்து, இரண்டையும் அசிங்கமாக, ஜூகல்பந்தித்தனமாக ஒரு சேர அவமதித்திருக்கிறார்கள்.

ஏனய்யா இப்படிச் செய்கிறீர்கள்? பண்பாட்டுத் தொன்மங்களைப் பற்றிய அறிவும் இல்லை – அறிவியலை எப்படி அணுகுவது என்ற மனப்பான்மையும் இல்லை. :-(

உங்கள் வாய்களில் தர்ப்பைப் புல்லை அடைத்துப் பொசுக்க

-0-0-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… வருந்தத்தக்க அளவில், நம் தமிழகத்துக் கல்லூரிகளில் – அதுவும் இந்த தனியார் துறை கல்விக் களஞ்சியங்களில் மிகப் பெரும்பாலானவை படுமோசமான தரத்திலேயே இருக்கின்றன.

இருந்தாலும், இம்மாதிரிக் கல்லூரிகளில், அந்தக் கல்லூரிகளையும் அவற்றின் திருட்டுநிதிமூல நிர்வாகத்தையும் மீறி,  சிலபல உருப்படியான விஷயங்களும், ஒரு புள்ளியியல் அசம்பாவிதம் காரணமாகவே கூட நடக்கலாம், நடந்திருக்கலாம் – என்பதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன என உணர்ந்திருக்கிறேன்…  அப்படியெல்லாம் இருந்திருந்தால், இருந்தால் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள நிச்சயம் ஆசைப் படுகிறேன்!

ஆனால்… எனக்கு அதிக அளவில் – இம்மாதிரிக் கடைகளில் உழலும், உழன்று வீணடிக்கப்பட்ட இளைஞர்களைத்தான் தெரியும்; அவர்களுடைய முட்டாள் பெற்றோர்களைத் தெரியும்…

எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் – ஜேப்பியார் மீன்பாடிவண்டி கடைகளையும், பிச்சாண்டி பரோட்டா கடைகளையும், எவ வேலு தள்ளுவண்டி கடைகளையும் – ஏன், பச்சமுத்து ப்ரேன்ட் கசாப்புக்கடைகளிலும், ஸாஸ்த்ரா தர்ப்பைக்கடையிலும்கூட,  தஞ்சமடைந்து பலவிதங்களில் நொந்து போயிருப்பவர்களைத் தெரியும். இந்த பாவப்பட்ட ஜீவன்களுடன் நேரடியாகவே அறிமுகம் இருக்கிறது.

நம் தமிழகத்தையே இந்த கல்வித் தந்தைகள், மாமாக்கள், தாய்கள் ஒழித்துக் கொண்டிருப்பது தெரியும்…

தொடரத் தொடர வேதனை மிகும்தான். :-(

-0-0-0-0-0-0-0-0-0-
நம் இளைஞர்கள் எப்படி உருப்படுவார்கள், சொல்லுங்கள்? எந்த எழவு விழா என்றாலும் ஏதாவது திரைப்பட அல்லது தொலைக்காட்சி சார்ந்த ஊடகக் குஞ்சாமணிகளைக் கூப்பிடாவிட்டால்,  நம் உடலில் தமிழ் ரத்தம் ஓடுவதை, இதயம் இனிக்க, கண்கள் பனிக்க நிறுத்திவிடுமல்லவா? அல்லது இந்த ஊடக மேதைகள், ஏதாவது நமக்குத் தெரியாத பெரிய்ய ஆராய்ச்சி கீராய்ச்சி செய்திருக்கிறார்களா? இது என்ன மோகமோ! அதிலும் கல்லூரி நிர்வாகிகள், benign என்றெல்லாம் வேறு உளறி தங்கள் ஆங்கிலப் புலமையைக் கொட்டித் தீர்க்கிறார்கள்! நம்முடைய எழவெடுத்த தமிழிலேயே இந்த கோர விளம்பரத்தைக் கொடுத்தால் என்ன?

28_03_2015_003_006 நேற்றைய தினமலர் (புதுச்சேரி பதிப்பு) இந்த விளம்பரத்தைப் பார்த்து, என் வயிற்றில் சுரந்த அமிலத்துக்கு அளவேயில்லை! என் பள்ளிசாராத பழைய ‘தனிக் கவனிப்பு’ மாணவன் ஒருவன், இந்த அற்பத்தனத்துக்கு வா என்றுவேறு அழைத்தான். அவன் மண்ணாங்கட்டி மண்டையிலேயே ஓங்கி ஒரு குட்டு வைத்திருக்கவேண்டும்! முட்டமுட்டக் குடித்து விட்டு மூத்திரம் ஒழுக, ஜட்டி தெரிய, கும்பலோடு குலுக்கிக் கொண்டு குத்தாட்டம் ஆடும் வயதாடா எனக்கு?

இந்த மாணவனின்(!) தாய் வருந்திவருந்திச் சொன்னாளேயென்று (“பையன் மேக்ஸில் ரொம்பொ வீக்கு! கொஞ்சம் தயவுசெஞ்சி ஹெல்ப் பண்றீங்களா? ட்யூஷனுக்கெல்லாம் கொடுக்க கட்டுப்படியாவாது சார்!”),’ இந்தப் பயலுடன் குறைந்த பட்சம் 160 மணி நேரம் சொளையாகச் செலவழித்திருப்பேன் – சென்ற இரண்டு வருடங்களில், இலவசமாகத்தான். விளைவு என்னவென்றால் இவன், கணிதத்தில் மட்டும் பாஸ்; மற்றவைகளெல்லாம், ஒன்றுவிடாமல் அரியர்ஸ்! பனாதைப் பயல். அம்மா உழைத்துச் சம்பாதிக்கும் சொத்தை, திரைப்படங்களில் வாலில் கட்டி புளகாங்கிதமடைபவன். இவர்களுக்கெல்லாம் படிப்பு என்று ஒன்று தேவையா? இம்மாதிரி எவ்வளவு இளைஞர்களை நாம் சொத்தைகளாகவும், நச்சுக் கிருமிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்!

வியர்த்தமான இந்த பலப்பல மணி நேரங்களை நான் பிற பிள்ளைகளுடன் செலவழித்திருக்கலாம். ஏன், என் குழந்தைகளுடனேகூட செலவழித்திருக்கலாம். அல்லது 60-70 புத்தகங்களைப் படித்திருக்கலாம். நீச்சலுக்குப் போயிருக்கலாம்… வேறேதாவது ஆனந்தமாகச் செய்திருக்கலாம்.  *ப்ச* :-(

…இந்தக் கோபத்தில் இருந்த நான் – ராமதுரை அவர்கள் அழகாக நடத்தும் அறிவியல்புரம் தளத்திற்குச் சென்று, அவருடைய கட்டுரையைப் (‘விண்கல் பூமி மீது மோத வாய்ப்பில்லை’) படித்துவிட்டு – நம் தமிழகத்தின் இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வாக இந்த விண்கற்கள் இருக்குமா? – என்கிற ரீதியில் ஒரு விட்டேற்றிப் பின்னூட்டம் ஒன்றை இட்டேன். தேவையா? அவர் என்ன செய்வார், பாவம். :-(

என் நண்பர் ஒருவரின் பரிந்துரை: இனிமேல் எந்தப் பயலுக்காவது உதவி என்று செய்வதற்குமுன் முதல் விதியாக – அவனை ஒரு வாரமாவது திரைப்படம்/டீவி பார்க்காமல் இருக்கச் சொல். அதற்குப் பிறகு, ஒருவாரம் உன்னுடன் தோட்டவேலையைச் செய்யச்சொல். பின்னர் பார்க்கலாம். எதற்கு ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்கிறாய். பேசாமல் கனடா வந்துவிடு. அழகான நாடு. நல்ல நூலகங்கள்.

-0-0-0-0-0-

… போங்கடா, தமிழக தனியார் அரைகுறைக் கல்விக் கடை எழவெடுத்தவர்களே! எஞ்சினீயரிங் பயிற்றுவிக்கிறீர்களா அல்லது, உங்கள் மாணவர்களுக்கு கஞ்சிநீருக்குக் கூட வழியில்லாத வகையில், உங்கள் கவைக்குதவாத பயிற்சியை கூவிக்கூவி விக்கிறீர்களா?

அறிவியல் கற்றுக்கொடுக்கிறீர்களா, அறிவிலியியல் கற்றுக் கொடுக்கிறீர்களா? இன்று_​முளைத்த_காளான் சினிமாக் காரர்களின் குசுக்களை முகர்வதற்கு, நம் அரைகுறை இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கவா கல்லூரிகளை நடத்துகிறீர்கள்!

உங்கள் ஆசிரியர்களெல்லாம் உங்கள் கல்லூரியிலேயே ‘பட்டப்’படிப்பு படித்துவிட்டு, ஆகவே வேறு எந்த குளுவானிய வேலையும் கிடைக்காத காரணத்தால்,  ‘டெம்பரவரியாக‘ உங்கள் கல்லூரிகளிலேயே ஆ-சிறியராகி, உடனுக்குடனே தங்கள் பரந்த போதிமர ஞானத்தைப் பேதியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்களா?

எங்க்ளோட இளைஞ்ஜர்கள இப்படியாடா வன்புணர்ச்சி செய்வீங்க? காயடிப்பீங்க??

ஏண்டா, வொங்க்ளுக்கெல்லாம் லட்சலட்சமா அள்ளி அள்ளிக் கொடுக்கறாங்களேடா, எங்களோட போக்கத்த, தங்களோட கொள்ந்தைக்கங்கள வீணடிக்கற முட்டாப் பெற்றோர் கூவான்கள்!

அல்லாத்தையும் வாங்கிக்கினு, பர்ஸை ரொப்பிக்கினு, தொப்பைய வளத்துக்கினு, இன்னாடா குப்பைங்கள எங்க பஸ்ங்களுக்கு கத்துக் குடுக்றீங்க? வொங்க்ளுக்கெல்லாம் மனச் சாட்சின்றதே இல்லையாடா… … ங்கொம்மாள… இப்டீ அயோக்கியத்தனமா சம்பாரிக்கறதெ எங்கேடா பதுக்கறீங்க?

பத்திருவது வர்ஷம் முன்னாடி கூட, வொங்க தனியார் கல்லூரிங்க இவ்ளோ மோசமா இல்லையேடா?

வொங்களுக்கெல்லாம், தமிழகத்தையே துப்புரவா  ஒழிச்சாதாண்டா நிம்மதி! பாவிகளா!

நீங்கள் நாசமாப் போகக் கடவது. (ஆனால், பாவம் உங்கள் மாணவர்கள்)

-0-0-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பதிவுகள்:

13 Responses to “கருங்குருவிகளும், வெண்டைக்காய்களும், தர்ப்பைப் புல்லும் – இலவச இணைப்பாக, கெய்ல் ஓம்வேத்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆஇரா வேங்கடாசலபதிகளும்(2/2)”

 1. Venkatachalam Says:

  ராமசாமி சார் நீங்கள் படித்த கிருஸ்துவர்களும் முகமதியர்களும் புத்தகத்தின் மாதிரியைத் தரவிறக்கம் செய்து என்னுடைய கிண்டில் டிவைசில் படித்தேன். அருமையாக உள்ளது. இருப்பினும் வாங்கமுடியாத விலை. யாரேனும் தெரிந்த கிண்டில் வாசகர்கள், இருந்தால் கடன் வாங்கிப் படிக்கலாம். தாங்கள் எவ்விதம் படித்தீர்கள்? கடன் வாங்கியா அல்லது சொந்தமாகவேவா? உதவ முடியுமா?


  • அய்யா, தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பெற்றுக்கொண்டமைக்கு பதில் போடவும்.

 2. Ramanan Says:

  i read about the research papers and i am not surprised. it is just we have a long way to go- read this – http://gizmodo.com/over-120-science-journal-papers-pulled-for-being-total-1534110496?utm_medium=referral&utm_source=pulsenews and have some fun :)

  regarding helping out, i second your friend’s suggestion about asking the student not to watch TV or movies for a week.

  it is depressing, in a way to know about the students and the kind of society that we are creating together. i can always take solace in the minority, but for how long ? … :/


  • ஆக, என்னை கனடா நாட்டிற்குப் புலம் பெயரச் சொல்கிறீர்களா அய்யா? எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஏற்கனவெ பலப்பல தமிழர்கள் அங்கே இருக்கிறார்களே, ஒத்துவருமா என்றுதான் பார்க்கிறேன். மேலும் கைபர்-போலன் வழியாகத் திரும்பிச் சென்றால் சுற்றுவழியாகிவிடுமோ என்றும் கவலையாக இருக்கிறது.

   ஏற்கனவே செயலூக்கத்தை இழந்து முதுகொடிந்து இருக்கும் எனக்கு, உங்களுடைய சுட்டிகள் களிம்பாக இல்லை. ஆனால் சுவாரசியமாக இருக்கின்றன.

   நன்றி.

 3. பொன்.முத்துக்குமார் Says:

  // நம் தமிழகத்தின் இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வாக இந்த விண்கற்கள் இருக்குமா? – என்கிற ரீதியில் ஒரு விட்டேற்றிப் பின்னூட்டம் ஒன்றை இட்டேன். தேவையா? அவர் என்ன செய்வார், பாவம். :-( //

  அவரும் சளைக்காம நச்-சுனு ஒரு பதில் சொல்லியிருக்காரு :)

  மொதல்ல இந்த பொறியியல் – தொழில் நுட்ப (என்ன நுட்ப கண்றாவியோ) கல்லூரிகள் தொடங்குமுன், அவர்கள் கல்லூரி விழாவுக்கு சினிமாக்காரர்களை முதன்மை விருந்தினராக அழைக்கக்கூடாது என்பதை விதியாக வைக்கவேண்டும்.

  எட்டாம் வகுப்புகூட தாண்டாத நம்மூரின் பதினாறு வயது நாயகியை மூன்று கோவை கல்லூரிகள் (இஞ்சி-பொறி கல்லூரிகளும் சேர்த்தே) முதன்மை விருந்தினராக அழைத்திருந்த கோராமையை நாஞ்சில் நாடன் நெஞ்சில் அடித்துக்கொண்ட நாடனாய் புலம்பியிருந்தார்.


  • அய்யா பொன்.முத்துக்குமார்,

   நாநா அவர்களுடைய அங்கலாய்ப்பின் சுட்டி கொடுக்க முடியுமா?

   சுமார் மூன்று வாரங்களுக்கு முன், ஒரு பிற்பகலில், எங்கள் கிராமமே காலியாகி விட்டது. பள்ளியில் வேலை செய்யும் பலர் ‘சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்; தாத்தாவுக்கு ஒடம்பு சரியில்ல!’

   ஏனெனில், பக்கத்து இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் சமீபத்தில் ஒரு ‘தொலைக்காட்சி சீரியல்’ காரர்கள் ஏதோ காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆக எம் மக்கள், வெய்யிலில் சுமார் 4 மணி நேரம் கால் கடுக்க முள் குத்த நின்று, இந்த பராக்கு பார்க்கும் வைபவத்தை நடத்தியிருக்கிறார்கள், பாவம்.

   நான், இப்படித்தான் விண்கற்களின் விசிறியாகியிருக்கிறேன். என்னால் முடியவில்லை. மன்னிக்கவும்.

   நமக்கு விமோசனம் உண்டா? :-)

 4. Saravanan Says:

  எட்டாம் வகுப்பைப் பாதியில் விட்டவர் 3 ஆண்டுகள் சவீதா பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக பேராசிரியராக 3 ஆண்டுகள் வேலை பார்த்து, மிகத் தற்செயலாக மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் வேறு!

  http://timesofindia.indiatimes.com/city/chennai/Class-8-dropout-becomes-engg-college-professor-lands-in-jail/articleshow/46489649.cms

 5. Sridhar Says:

  இந்த கல்லூரி விழாக்களுக்கு cultureless என்று பெயர். அவர்களுக்கு spelling தெரியாமல் தப்பாக அச்சடித்து அதுவே நிலைத்து விட்டது.

 6. poornam Says:

  //பனாதைப் பயல். அம்மா உழைத்துச் சம்பாதிக்கும் சொத்தை, திரைப்படங்களில் வாலில் கட்டி புளகாங்கிதமடைபவன். இவர்களுக்கெல்லாம் படிப்பு என்று ஒன்று தேவையா? இம்மாதிரி எவ்வளவு இளைஞர்களை நாம் சொத்தைகளாகவும், நச்சுக் கிருமிகளாகவும் ஆக்கிக் கொண்டிருக்கிறோம்!//
  இவர்களுக்கு விளிம்பு மனிதர்கள் என்று பின் நவீனத்துவப்பெயர் ஒன்று இருப்பதாகக் கேள்வி. அவர்களுடைய பின்புலத்திலிருந்து நோக்கி அவர்களது வாழ்வைப் பதிந்து, புலம்பெயர்ந்து அல்லது பெயராது அவர்களது விளிம்பு ஆன்மாவின் குரலை ஒலிக்காமல் சொத்தை, நச்சுக்கிருமி என்று அவர்களை நீங்கள் குறிப்பிடுவது உங்கள் பார்ப்பன மேட்டிமைவாத முதலாளித்துவ பனியா மதிப்பீடுகள் அடிப்படையிலான முன் பழமைத்துவ நிலப்பிரபுத்துவ விழுமியங்களை விழாமல் தூக்கிப்பிடிக்கிற மனநிலையைக் காட்டுகிறது.
  இணைய முற்போக்கு திராவிட பெரியாரிய பின் நவீனத்துவ சாபங்களிலிருந்து உங்களைத் தற்காத்துக்கொள்வது பற்றி முதலில் சிந்தியுங்கள்.
  அக்கறையுடன்
  பூர்ணம்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s