திராவிடர் கழக மானமிகு வீரமணி அவர்களின் கருணையற்ற பொய்கள்
April 1, 2015
| நிகழ்ச்சி: கேள்விக்கென்ன பதில் | தந்தி டீவி | ஒருங்கிணைப்பாளர்/நடத்துநர்: ரங்கராஜன் பாண்டே | ஓளிபரப்பான தினம்: 28/03/15 | கி வீரமணி நேர்காணல் | 53.48 நிமிடங்கள் | யூட்யூப் சுட்டி: https://www.youtube.com/watch?v=bU0H077e4DA |
சூட்டோடு சூடாக விமர்சனம் என்கிற பேரில் கந்தறகோளம் செய்வது, விஷயங்கள் நடக்க நடக்க என்னுடைய மேலான முட்டியடி எதிர்வினைக் கருத்துகளைத் தெரிவித்தே தீர்வது என்பதெல்லாம், பொதுவாகவே எனக்கு ஒவ்வாத விஷயங்கள்.
ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்; இவர்களில் ஒருவர் ‘warning: to be watched only when you have real time to kill and not otherwise’ என்று சொல்லியிருந்தார் தான்! ஆக என்னுடைய நேரம் வியர்த்தம் என்பதற்கு அப்பாற்பட்டு – திராவிடர் கழகம் பற்றிய என் கருத்துகள், இதனால் மேலும் உறுதிப் பட்டிருக்கின்றன எனத்தான் எண்ணம்.
பாவமாக இருந்தது – இந்த நேர்காணலைப் பார்க்கப் பார்க்க. வீரமணி அவர்கள் கொஞ்சம் திண்டாடி விட்டார்தான்…
… ஆனால், யாரிந்த இளைஞர் – ரங்கராஜன் பாண்டே? சில சமயங்களில் இவர் தன்னுடைய ஆவேசத்தைக் குறைத்துக்கொள்ளலாமே, வாய்விட்டுச் சிரிக்கலாமே என்று தோன்றியது. மறுபடியும் மறுபடியும் இஸ்லாம்/க்றிஸ்தவம் பற்றி இழுத்தாரே என்று. ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே, திராவிடத்தின் கமுக்கமான ஜாதி அரசியல் பற்றி, அதன் அடிப்படை முரண்கள், நடைமுறைச் சிக்கல்கள் பற்றி உரையாடியே, மானமிகு வீரமணியாரை இன்னொரு முறையும் அம்பலப்படுத்தமுடியுமே என்று…
… ஆனால், ஒப்புக் கொள்ளவேண்டும் – ரங்கராஜன் பாண்டே அவர்கள், தன்னுடைய ஹோம்வர்க்-கினை நன்றாகச் செய்திருக்கிறார் – எனக்கு இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு, பின்புலத்தில் ஆராய்ச்சி செய்து தரவுகளையும், முக்கியமான உரையாடற் புள்ளிகளையும் கோர்த்து, நிகழ்ச்சியின் பேட்டிகாண்பவர்/நங்கூரக்காரரிடம் தர – ஒரு தரமான குழு மாதிரி இருக்குமா என்பது தெரியாது. அப்படி இருந்திருக்கும் என்றுதான் சந்தேகப் படுகிறேன். அப்படியே ஒரு குழு அவருக்காக உழைத்திருந்தாலும் ரங்கராஜன் பாண்டே அவர்கள், உரையாடலை நன்றாக மட்டுப் படுத்துகிறார்; கொஞ்சம் கிண்டல், நையாண்டி + தேவையான பின்புலச் செய்திகள் + தேவையான குரல்வளம், ஏற்றஇறக்கம் + துரிதகதியில் இயங்கும் மூளை + வேண்டும்போது பின் வாங்குவது + மூன்று நான்கு மையக் கருத்துகளுக்கு மறுபடியும் மறுபடியும் வருவது + முரண்பட வைப்பது + முட்டுச் சந்துகளை எதிர்கொள்ளும்போது நாசூக்காக மற்ற விஷயங்கள் பக்கம் போதல் + எதிரில் பேசுபவர்களை மிகவும் சிறுமைப் படுத்தாமை – இவை அனைத்தையும் சரியான விகிதத்தில் உபயோகிக்க முடிகிறது இவருக்கு; ஆகவே, என் கருத்து என்னவென்றால் இவர் திராவிடர் அல்லர்; நாம்தமிழரற்ற, தமிழ்தேசியரற்ற – ஆனால் செயலூக்கம் மிகுந்த, வெறும் சாதா தமிழகத் தமிழர்தான், :-) May his tribe(not tripe) increase!
பரிதாபமென்னவென்றால் வீரமணி அவர்களுடைய அரசியல்-சமூக நிலைப்பாடுகள் அனைத்தும், தர்க்கரீதியாக எதிர்கொள்ளப்பட்டால் தகர்ந்துவிடும் தன்மையுடையவை. இதற்கு, அவரைக் குற்றம் சொல்லமுடியாதுதான். வீரமணி அவர்கள் தொடர்ந்து (சுய லாபத்துக்காகத்தான்!) தூக்கிக் கொண்டிருக்கும் ஈவெரா அவர்களின் காலாவதியான கொள்கை(!) மூட்டைமுடிச்சுகளின் பளுவும், சீழ்பிடித்த வீக்கமும் அப்படி. ஒவ்வொரு சமயம் இந்த வீக்கம், ஒவ்வொரு திசையில் இழுக்கும். இப்படி இருக்கையிலே, தனியொரு மனிதனாக (உதவிக்கு வீ தங்கராஜ் அன்புராஜ் (s/o கி வீரமணி) துரிதகதியில் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலும்) பலப்பல கோடி பெருமானமுள்ள சொத்துகளை நிர்வகிப்பதும், அனுபவிப்பதும், இயக்கத்தை(!) முன்னெடுத்துச் செல்வதும் மிகவும் சிக்கலான விஷயங்கள் தானே! வீரமணி அவர்கள்மேல் இருக்கும் பொறுப்புப்பளு சாமானியமானது அல்ல, பாவம்தான் அவர்.
ஆனால் – வீரமணி அவர்கள், தயங்காமல், தொடர்ந்து பொய் சொல்லக் கூடியவர். திருப்பித் திருப்பிப் பொய்களைச் சொல்லிக்கொண்டே இருந்தால், திரித்துக்கொண்டேயிருந்தால் நாட்ஸி ஜெர்மனியின் கீபல்ஸ் போல – அவையெல்லாம் உண்மையாகிவிடும் என நம்புபவர். ஆக, இவருடைய நம்பிக்கை என்பது பொய்மீதுதான். ஆகவே, இவருடைய மதம் என்பது பொய்ப் பிரச்சாரம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.
சரி, இந்த ரங்கராஜவீரமணி உரையாடலிலும் அப்படித்தான் – வீரமணி அவர்கள் சார்பாக, பலப்பல நேரடித் திரித்தல்கள், தொட்டுக்கொள்ள கமுக்கமான அடிப்படைப் பொய்கள் இருக்கின்றன இதில்.
வீரமணி வாய்கூசாமல் சொன்னது, பொய். கொஞ்சம் கருணையாக இதனைச் சொல்லவேண்டுமென்றால், அவருக்கு ஒரு சுக்கும் தெரியாத விஷயத்தில், அவர் வழக்கம் போல மிகஆழமாகக் காலை விடுகிறார். பாவம் தான்.
-0-0-0-0-0-0-0-0-
கத்தோலிக்க மதத் தலைவரான போப், வாடிகனையும் (அதாவது அதிலிருந்து பணிபுரியும் ஹோலி ஸீ என்கிற புனித கத்தோலிக்கச் சிங்காசனக் கட்டுமானத்தையும்) கத்தோலிக்கத் திருச்சபைகளையும் ‘ரோமானிய சபையமைப்பு’ (=ரோமன் க்யூரியா) என்ற ஒரு அமைப்பு மூலம் நடத்திச் செல்கிறார்; ஏனெனில் வாடிகன் ஒரு (ஓரளவு) இறையாண்மையுடைத்த சுதந்திர நாடும் கூட – ஆகவே மதத் தலைமை + (ஏறத்தாழ) நாட்டுத் தலைமை இரண்டும் அவர் மூலமே பெறப் படுகின்றன.
இந்த ரோமானிய சபையமைப்பில் பல அங்கங்கள் இருக்கின்றன. ஒரு செக்ரடேரியட், குருமார் கமிஷன்கள், குருமார் கௌன்ஸில்கள், பல காங்க்ரிகேஷன்கள், ட்ரைப்யுனல்கள் (இவை நீதிமன்றங்கள் போன்றவை), என பலப்பல உபஅமைப்புகள் இருக்கின்றன; இவற்றைத் தவிர நிதி மேலாண்மை, பொருளாதார மேலாண்மை, சொத்து மேலாண்மை எனப் பல விஷயங்களுக்குக் கட்டமைப்புகள்.
சில காங்க்ரிகேஷன்கள் எனப்படும் அமைப்புகள் மிகமிக முக்கியம் – அவற்றில் சில அதிமுக்கியம்: அவை 1) மத மாற்ற மேலாண்மை ஒருங்கிணைப்பு (இது உலகளாவிய மதமாற்றத்துக்கும், வெளி நாட்டு மிஷன்களின் மேலாண்மைக்கும்), 2) மதகுருமார்கள் மேலாண்மை (உலகளாவிய கத்தோலிக்கக் கட்டமைப்புகளுக்கு பிஷப்புகளை நியமனம் செய்வது போன்றவை) 3) அமைதிக்கும் நீதிக்குமான மேலாண்மை (இது உலகளாவிய அமைதிக்கும், நீதி பரிபாலனத்துக்கும்).
பொதுவாக இம்மாதிரி உப அமைப்புகளில் பலகாலம் பணி புரிந்தவர்களே போப் நியமனத்தில் முன்னோடிகளாக இருக்க முடியும்.
இந்த உப அமைப்புகளில் நுழைவதற்கும் பலகாலம் மேற்கண்ட துறைகளில் பலகாலம் ஈடுபட்டிருக்கவேண்டும்.
போப் அவர்களுடைய வழிகாட்டுதலின்பேரில் இரண்டு முக்கியமான பதவிகள் இயங்குகின்றன. ஒருவர் தலைமைச் செயலக செக்ரெட்டரி – ஒரு சுதந்திர நாட்டின் பிரதம மந்திரிக்கு இணையான பொறுப்பு இது. இன்னொருவர் அதே செக்ரடேரியட்டில் (சட்டசபை அலுவலகம்) இருக்கும் வெளிவிவகாரங்களுக்கான செக்ரெட்டரி – ஒரு வெளிவிவகார அமைச்சருக்கு இணையான பொறுப்பு இது. இந்த இரண்டு பொறுப்புகளும்தான் – போப் அவர்களின் இரண்டாம் அடுக்கு மத/அரசதிகாரிகள். இவர்களிருவரும் கார்டினல்கள்தாம்.
இந்த இரண்டு பதவிகளிலும் ஃப்ரான்ஸ், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். ஃப்ரான்ஸ், இத்தாலி நாடுகளையெல்லாம் இந்தியா கபளீகரம் செய்துவிட்டதா என்ன? அல்லது இந்த இருவர்கள் உடம்புக்கு வெள்ளைச் சாயம் அடித்துக்கொண்டு விட்டார்களா?
ஒருவேளை வீரமணி அவர்கள் கார்டினல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறாரோ என நினைத்தேன். இந்தக் கார்டினல்கள் பலரை உள்ளடக்கிய ஒரு குழுதான், அடிப்படையில் போப் பதவிக்காரரைத் தெரிவு செய்கிறது. இந்தக் குழு – கார்டினல்களின் கூட்டமைப்பு – கார்டினல்கள் காலேஜ். இதற்கு வேறெந்த அதிமுக்கியமான பொறுப்பும் இல்லை; பெரும்பாலும் இது – ஒரு வணிக நிறுவனத்தில் சடங்குபோல நடக்கும் வருடாந்திர பங்குதாரர் கூட்டம்போலத்தான்.
… இந்தத் தேர்தலிலும் படுபீதியளிக்கும் அரசியல், குடுமிப்பிடிச் சண்டைகள், பிரச்சினைகள், சிடுக்கல்கள் இருக்கின்றன – ஆனால் எனக்குத் தெரிந்து, இதுவரை இந்தத் தேர்தலில், திமுக-வின் பராக்கிரமம் மிக்க திருமங்கலம் ஃபார்மூலா உபயோகப் படுத்தப்படவில்லை என்பது ஆசுவாசமளிக்கும் விஷயம்.
இந்த கார்டினல்களில், பொதுவாக நான்கு அடுக்குகள் இருக்கின்றன – அவை மேலிருந்து கீழாக பராக்கிரமத்தில் = பிஷப் (குருமார்), ப்ரெஸ்பிடர், ப்ரீஸ்ட் (பூசாரி), டீகன் – பொதுவாக, இதுவரை பிஷப்புகள் தாம் போப்புகள் ஆகியிருக்கிறார்கள்.
சரி. இந்தக் கார்டினல்களில் ஐந்து இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் நால்வர் நகரவாழ்க்கையினர் – அனைவரும் பூசாரி வகையினரே! (பார்க்க: உயிரோடு இருக்கும் கார்டினல்களின் விவரங்கள் – ஆங்கிலத்தில்)
ஐந்தாமவர்: டெலஸ்ஃபோர் டொப்போ அவர்கள் – 76 வயது – பூசாரி – இவர் ஜார்கண்ட் பகுதி மலைவாழ் ஜாதியினர் (பிற்படுத்தப் பட்டவர் அல்லர், வடவர், நம்மூர்க் காரரல்லர்) – இவருடைய பல பணிகளுக்காக, குறிப்பாக மதமாற்ற நடவடிக்கைகளுக்காக 2003 வாக்கில், கார்டினல் ஆக்கப் பட்டார். (இன்னும் நான்கு வருடங்களில், இவர் போப்புக்காக வாக்களிக்கக் கூட முடியாது என்பது ஒரு புறமிருக்க, அவருக்கும் போப்புக்கும் நடுவில் பல பிரிவுகளிருக்கின்றன!)
ஒருகால் – இவரைக் குறிப்பிட்டுதான் வீரமணி பேசினாரா – அப்படியும் அது தவறுதான் என்றாலும்?

மானமிகு கிவீ-யும் பறக்க முடியாத திராவிடப் பறவையுமாகிய யான், க்ர்ர்ர்ர்ர்… மகாகோர பராக்கிரமம் மிக்க திராவிட பரம்பரையில், ஈவெரா-வின் நேரடி நியமன வாரிசாக திராவிடர் கழக வானில் உதித்தேன்! (படம் இங்கிருந்து)

எனக்குக் கோபம் வந்தால் தெரியும் சேதி! எல்லோரையும் கடித்து கபளீகரம் செய்து விடுவேன்… ஆரியம் பார்ப்பனீயம் காந்தியம் க்ர்ர்ர்ர்ர்! நான் இப்படிப் பேசிக்கொண்டே இருந்தால் மக்கள் வெறுப்படைவர்தான், அதனால் என்ன – அத்தாண்டா எங்க தொளில்முறை திராவிடம்! (படம் இங்கிருந்து)
ஆக, நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் – வீரமணி சொன்னது பொய்யா மெய்யா என்று?
குறிப்பு: பிரச்சினை என்னவென்றால், வீரமணி அவர்களுக்கு உதவியாக — நம்பகமான, புத்திசாலிகளாலான அறிவுளையாளர்களோ, அல்லது ஆராய்ச்சிக் குழுவினரோ இல்லை. இது அவர் தவறும் இல்லை.
ஏனெனில் – திராவிட இயக்கத்துக்கும் அறிவுக்கும் தொடர்பேயில்லை – இந்தப் பகுத்தறிவு என்ற எழவையே விடுங்கள்!
ஏனெனில் – திராவிட இயக்கத்தின் எதிர்அறிவுஜீவியம் (anti-intellectualism) என்பது தாங்கொணாதது. ஆகவே அங்கு படிப்பாளிகளோ, சான்றோர்களோ இல்லை. வெறும் உச்சாடனவாதிகளும், அரைகுறைகளும், விசிலடிச்சான் குஞ்சப்பர்களும் தான் இருக்கிறார்கள். தலைவர்களும், தன் பங்குக்கு அநியாயச் சொத்து சேர்ப்பவர்களாகவும், பொறுக்கிமுதல்வாதிகளாகவும், ‘பொறுப்புள்ள’ குடும்பஸ்தர்களாகவுமிருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்துக்கு விமோசனமே இல்லை என்பது மகிழ்ச்சி தரும் செய்தியே! ஆனாலும், திராவிடத்தின் நடைமுறைக் கொசுத் தொல்லைகள் தாங்கமுடியவில்லை என்பதும் ஒப்புக்கொள்ளப் படவேண்டியதே!
April 2, 2015 at 08:28
தனியொரு மனிதனாக (உதவிக்கு வீ தங்கராஜ் (s/o கி வீரமணி) துரிதகதியில் தயார் செய்யப்பட்டுக் கொண்டிருந்தாலும்) பலப்பல கோடி பெருமானமுள்ள சொத்துகளை நிர்வகிப்பதும், அனுபவிப்பதும், இயக்கத்தை(!) முன்னெடுத்துச் செல்வதும் மிகவும் சிக்கலான விஷயங்கள் தானே!
வீரமணியின் உண்மையான பெயர் சாரங்கபாணி. அவர் மகன் பெயர் அன்புராஜ்
April 2, 2015 at 08:45
அய்யா ஜோதிஜி,
தவற்றைச் சுட்டியமைக்கு நன்றி. திருத்தி விடுகிறேன்.
April 2, 2015 at 09:00
(“ஆனால், நான்கைந்து நண்பர்கள் இதனைப் பரிந்துரைத்தார்கள் என இதனைப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பொழுதுபோனது என்று சொல்ல முடியாது – பரிந்துரைத்தவர்கள் மீது கொஞ்சம் கோபமும் வந்ததுதான்;”)
நானும் (உங்களின் நண்பர்தான் என நினைக்கிறேன்) ‘ஸ்ரீ ராமானுஜர்’ சீரியலுக்கு வசனம் எழுதப்போகும் இந்த “கலிஞரின்” நேர் காணலை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
அதில் இருந்து மாதிரிக்கு ஓன்று
“நாத்திகப் பிரச்சாரத்துக்காக நீங்கள் பல திரைப்படங்களில் கதை வசனம் எழுதியிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் எழுதப் போகும் இராமானுஜர் தொடரால் பாதிக்கப்பட்டு யாரேனும் ஒரு நாத்திகர் ஆத்திகராக மாறிவிட்டால்?”
என்னுடைய கதை வசனங்களை – என்னுடைய பேச்சை – எனது கருத்துகளைக் கேட்டு, ஆத்திகர்கள் நாத்திகர்களான வரலாறுதான் உண்டு. அதைப்போலவே இந்தத் தொடரைப் பார்க்கும் ஆத்திகர்கள், நாத்திகர்களாக மாறத்தான் வாய்ப்பு உண்டே தவிர, நாத்திகர் யாரும் ஆத்திகர்களாகி விட மாட்டார்கள்.”
http://idlyvadai.blogspot.in/2015/03/blog-post_29.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+Idlyvadai+%28IdlyVadai+-+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%29
நாத்திகர் யாரும் ஆத்திகர்களாகி விட மாட்டார்கள்.”(ஐயையோ!!)
April 2, 2015 at 22:00
யோவ் சேஷகிரி, என்ன நிம்மதியா இர்க்கவே வுடமாட்டேங்க்றியேபா! நான் இன்னாபா ஒனக்கு துரோவம் செஞ்சேன்?
ரோசிச்சா, இவ்ரூ ஏன் இப்டீ செய்றாரூ? சோழியன் குடுமி சும்மாவா ஆடும்றீங்க?
அவ்ரு வூட்ல அல்லரும் கோஷ்டிகோஷ்டியா கீறாங்க – அத்தொட்டு திருக்கோஷ்டியூரார் பத்தி எள்தியாவது, அவனுங்கோ குஸ்தீலேர்ந்து முன் ஜாமீன் கெடக்யலாம்நிட்டா?
வைணவம், எவ்வளவோ புல்லுருவிகளை மீறித்தான் வளர்ந்திருக்கிறது, என்பது ஆசுவாசம் தருவது.
ஆனால் இந்த ஆளின் நேர்காணலைப் படிக்க முடியாது. மன்னிக்கவும்.
April 5, 2015 at 14:03
அதெப்படி ராம் கடவுளே இல்லை, கடவுளுக்கு பூஜை செய்யுற பிராமணன் எல்லாத்தையும் கல்லால அடிக்கணும்னு பிரச்சாரம் பண்ற அமைப்போட தலைவர், இன்னொரு மதத் தலைவரனான போப்பை மட்டும் அங்கீகரிக்க முடியுது ?
என்னமோ போப் தான் உலகத்துக்கே தலைவர் போல “தாழ்த்தப் பட்டவன், இன்னிக்கு போப்புக்கு அடுத்த லெவல் வரைக்கும் வந்துட்டான்”-னு பேட்டி குடுக்குறார் ? போப்புக்கு அடுத்த லெவலுக்கு போறதுதான் ஒரு மனுஷனுக்கு உயர்வா ??
April 9, 2015 at 22:14
ரங்கராஜ் பாண்டே என்பதுதான் அவர் பெயர். பீஹாரி. ரங்கராஜன் என்றால் தமிழ்நாடு. கட்டுரை முழுவதும் ரங்கராஜன் பாண்டே என்றெழுதியிருக்கிறீர்கள்.
உங்கள் பேரைக் கேள்விபட்டிருக்கிறேன். இப்போதுதான் முதல்தடவையாக வருகிறேன். கருத்துக்களை வைக்கும் பாணியில் இட்லி வடை சாயல் தெரிகிறது. ரொம்ப எதிர்பார்த்து வந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. டோண்டு ராகவனுக்குப்புறம் நீங்கள்தான் அவரிடத்தை நிரப்புகிறீர்கள். இட்லி வடை சாயல்; ராகவனின் மூர்க்கம்.
April 9, 2015 at 22:17
ஒத்திசைவு என்றால் என்ன பொருள்? ஏன் உங்கள் பெயருக்கு முன் அது சொல்லப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது? நாங்கல்லாம் தி க ஆளுங்க இல்லப்பா. பார்த்துத் தாக்குங்க.