கருங்குருவிகளும், வெண்டைக்காய்களும், தர்ப்பைப் புல்லும் – இலவச இணைப்பாக, கெய்ல் ஓம்வேத்களும், கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆஇரா வேங்கடாசலபதிகளும்(1/2)
March 28, 2015
அம்மணிகளே, அம்மணர்களே, எனக்குப் பைத்தியம் பிடிக்கவில்லை. இதை இருமுறை அடிக்கோடிட்டுக்கொள்ளவும். எனக்கு அது பிடிக்கவேறு வேண்டுமா என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யாதீர்கள். உங்கள் விதண்டாவாதம் சரிதான். மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதுதான்!
ஆனாலும் இப்பதிவு கருங்குருவி+வெண்டைக்காய்+தர்ப்பை பற்றித்தான். பயப்படாதீர்கள்.
கடந்த 9 மாதங்களாக – பள்ளிவளாகத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள, ஆண்டாண்டுகாலமாகக் கட்டிடக்குப்பைக் கழிவுகளைப் போட்டுக்கொண்டிருந்த இடத்தில் – சுத்தம் செய்து (மாளவில்லை!) ஒரு தோட்டம் போட்டுக் கொண்டேயிருக்கிறேன். இங்கே (இப்போதைக்குச் சுத்தம் செய்யப்பட்டது சுமார் 1.5 ஏக்கரா விஸ்தீரணம் – ஆனால் தோட்டம் இருப்பது, முக்கிமுனகி அரை ஏக்கராவில்தான்!) பலவகைக் காய்கறிச்செடிகள், கீரை வகைகள் போட்டு ஓரளவு மகசூல் எடுத்திருக்கிறேன்.
9 வகை பீன்ஸ்,7 வகைக் கீரைகள், 3 வகை பரங்கி, 4 வெள்ளரி வகைகள், 3 வகை சுரைக்காய்கள், சேப்பங்கிழங்கு, சின்ன வெங்காயம், முள்ளங்கி, பச்சை மிளகாய், கத்தறி, வெண்டை எனப் பலவிதமான காய்கறி வகைகள் வளர்கின்றன (+சாகின்றன). முருங்கை, பப்பாளி, எலுமிச்சை மரங்கள் இன்னமும் தயவு செய்யவில்லை. ஏனெனில் அவை மரங்கள்.
…தோட்டத்திற்காக என்று, வெளியில் இருந்து வாங்கியது என்பது சிலவகை விதைகள் + நீர் பாய்ச்ச ப்லாஸ்டிக் குழாய், சில அடிப்படைக் கருவிகள் + இரண்டு ட்ராக்டர் லோடு உலர்ந்த மாட்டுச்சாண எரு மட்டுமே. இந்த மாட்டுச்சாணமும் என் நேரடித் தொடர்பில்லாத வாழைத்தோட்டத்திற்குப் பெரும்பாலும் போடப்பட்டது. பள்ளிவளாக இலைதழைகளைக் கம்போஸ்ட் செய்து, எனக்கு அறிமுகமாயுள்ள சிலபல நுணுக்கங்களை உபயோகித்துத் (ருடால்ஃப் ஸ்டெய்னர்!) தயாரித்த மக்கல் உரத்தை மட்டுமே பயன் படுத்தியிருக்கிறேன்.
பயணம் இல்லாத சமயங்களிலெல்லாம் – கடந்த 8 மாதங்களாக, வாரம் ஏழு நாட்கள்போல, 4-5 மணிநேர உடலுழைப்பு – ஞாயிறன்று மட்டும் இரண்டு மணி நேரங்கள். ஆக, வாரத்திற்கு சுமார் 22-25 கிலோ காய்கறிகளைப் பறித்து (= ‘அறுவடை செய்து’) உடனே என் பள்ளியின் சமையல்கூடத்தில் உபயோகிக்க முடிந்திருக்கிறது; இதைத் தவிர வாரத்துக்கு 6-7 கிலோ கீரை வகைகள்; இவை புழுபூச்சிகள் + மாடு + ஆடு + முயல் + மான் + முள்ளம்பன்றி + பெருச்சாளி ++ முக்கியமாக திருட்டுமனிதன் (அண்மைக் காலங்களில் மயில்களும் வர ஆரம்பித்திருக்கின்றன!) சாப்பிட்டது போக மிச்சம். நிச்சயம் அதிகமில்லை, பெரிதாகப் பெருமைப் படவும் ஏதுமில்லை – எங்கள் பள்ளிச் சமையலறையின் வாராந்திரத் தேவைகளில் சுமார் ஒன்றரை நாட்களுக்கு மட்டுமே, இது தேறும். அவ்வளவுதான்.
நகரங்களில் செய்வதுபோல – மூளையையே சுத்தமாக உபயோகிக்காமல், அயோக்கியத்தனமாக – பொக்கிஷமான நிலத்தடி நீரை வைத்து, வண்டியையும் குண்டியையும் கழுவுகிறோம் என அபரிமிதமாக அள்ளித் தெளிப்பதற்கோ, ஷவரம் செய்துகொண்டே குழாய் நீரை வியர்த்தம் செய்வதற்கோ, இரண்டு பக்கெட்டிலும் தொட்டிகளிலும் எங்கிருந்தோ மகாபிரயத்தனப்பட்டு கொணரப்படும் நீரை நிரப்பி, வெறும் ஐந்து நிமிடமே குளித்துவிட்டு சாக்கடைக்கு உடனடியாக அனுப்புவதற்கோ, இன்னும்படுகேவலமாகப் பல வழிகளில் நீரை வீணடிப்பதற்கோ – முடியாது.
… இதனைப் பற்றித் தொடர்ந்து பீற்றிக் கொள்ளும்போது — ஆர்கனிக் இனார்கனிக் இயற்கை-செயற்கை கெமிக்கல் சுபாஷ்பாளேகர்-ஜீரோபட்ஜெட் நம்மாழ்வார்-ஸேன்ட்விச் வ்ர்க்ஷாயுர்வேதம்-பஞ்சகாவ்யம் கோமியம் பாரம்பரிய-விவசாயம் பர்மாகல்ச்சர் மரபணுமாற்றம்-அய்யய்யோ ஜிஎம்ஓ-ஒழிக கெமிக்கல் ஒழிக என்றெல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு, மானாவாரியாக ஜல்லியடிக்க விரும்பவில்லை என்பதை மிகுந்த துக்கத்துடன் தெரிவிக்கிறேன்.
இப்போது பெரிதாகப் ‘புடுங்கிய’ முள்ளங்கியை முகத்தின் அருகில் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட வகையறா பெருமிதப் புல்லரிப்புப் புகைப்படங்களைத் தரவேற்றுவதாக இல்லை. மன்னிக்கவேண்டாம்.
ஆனால், ஒரு நற்செய்தி! பள்ளிக்கு வந்த சில விருந்தினர்கள், பல தன்னார்வ இளைஞர் குழுக்கள் வேண்டுமளவு இலவச அறிவுரை வழங்கியிருக்கிறார்கள் – அவர்களுக்கு மண்ணுக்கும் மசுத்துக்கும் ஒரு சுக்கு வித்தியாசமும் தெரியாமல் இருக்கலாம், அதனால் என்ன, அவர்கள் காட்டும் ஆர்வம் முக்கியமானதுதானே? ஆகவே, நானும் அளவுகடந்த நன்றியுடன் அவைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன். நான் பாக்கியசாலி.
மனிதர்களுக்கு, பொதுவாகவே கையில் நிறைய நேரத்தை வைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, அறிவுரை தருவது என்பது வெல்லக்கட்டி. எனக்கும், ஆச்சரியத்துடன் அறிவுரை பெற்றுக்கொள்வதும் பிடிக்கும் – ஏனெனில், பின்னர் இதனை வைத்து ஒரு பதிவு தேற்றலாம் பாருங்கள்! ஆக, என் பிளந்த வாயைப் பார்த்து, குதித்துக்கொண்டு வரும் தொழில்முறை அறிவுரையாளர்களின் மகிழ்ச்சித் துள்ளல்களுக்குக் கேட்பானேன்… ஒர்ரே புல்லரிப்புதான் போங்கள்!
ஆனால் – எந்த அற்பக் கழுதையும் (= அயோக்கிய ஐடி குளுவான்கள் உட்பட!), வெறும் உழைப்பு மட்டுமிருந்தால் (ஆனால் இதுதானே பிரச்சினை, இவர்களுக்கு!) நான் செய்திருப்பதை விடப் பலமடங்கு அதிகமாக விளைவுகளை ஏற்படுத்தமுடியும். ஏனெனில் நான் ஒரு ‘பகுதி நேர‘ தோட்டக்காரன் தான்.
மேலும், என் கணக்கில் – இந்த இடத்தின் மண்,அடுத்த இரண்டு வருடங்களில் இயற்கையாகச் சுத்திகரிக்கப்பட்டு, ஆகவே வளம் பெற்று, நீர் வேண்டுமளவு கிடைத்து (அதிகமில்லை – வாரத்திற்கு 400 லிட்டர்கள்தான்!), தினந்தோறும் முழு நாள் உழைப்பை நான் இதற்குக் கொடுக்க முடியுமானால் கூட – இந்த அரை ஏக்கரா நிலத்தில் சுமார் வருடத்திற்கு 12-13 டன் நல்ல, ஆரோக்கியமான காய்கறிகளை – ஓரளவுக்குச் சுலபமாகவே வளர்த்தெடுக்க முடியும். ஆனால் இதுவரை நான் எடுத்திருப்பது சுமார் ஒரு டன் மட்டுமே. ஹ்ம்ம்… ஜேஜே: சில குறிப்புகளில் வருவது போல – எதற்குமே, தூரத்தின் இடைவெளியோ அல்லது காலத்தின் இடைவெளியோ வேண்டும்தானே?
இதுவரை இலக்கியம், சமூக/மானுட/நாட்டுப்புறவியல், கணிதம், இயற்பியல் தொடர்பான ஆய்வுகளில் தான் – பல சமயம் நகைக்கத்தக்க, ஜோடனை செய்யப்பட்ட, சமைக்கப் பட்ட, விளக்குமாற்றுக்குப் பட்டுக்குஞ்சலம் கட்டப்பட்ட ஆவணங்கள் காணக் கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்; ஆஇரா வேங்கடாசலபதி போன்றோரின் தரமான ஆராய்ச்சிகளைப்(!) படித்து விட்டு, புத்தி பேதலித்துத் திரிந்திருக்கிறேன். மேலும், கடந்த 10-20 ஆண்டுகளில் – இந்த தில்லிக்கார மகாமகோ ஜேஎன்யு கூட இந்த கந்தறகோளக் குப்பை ஜோதியில் கலந்து – அசிங்கமாகியிருப்பதை, ஷோத்கங்கா தளம் மூலம் கண்டுகொண்டு துக்கித்திருக்கிறேன்.
…ஆக — இம்மாதிரி பொய்மையும் பஜனையும் கலந்தடித்த மோசடி ஆராய்ச்சி ஆவணங்கள் பலவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும், பலமுறை வேலைவெட்டியற்றுக் கிழித்திருக்கிறேன் என்றாலும்… இந்த வெண்டைக்காய் கருங்குருவி தர்ப்பைப் புல் வகையறா ஆய்வுகள்?
ஹ்ம்ம்… இவையும் சோககாவியங்கள்தான்!
-0-0-0-0-0-0-0-
இச்சமயம் – நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக நான் படித்துச் சிரித்த ஒரு சமூகவியல்-போராளித்தனக் கட்டுரையை நீங்கள் படிக்கவேண்டுமென்று விழைகிறேன்; வார்த்தைக்கு வார்த்தை அரைகுறைத்தனமான நகைச்சுவைக்கு நான் உத்திரவாதம்.
அது: கேரள சமூகத்தின், பதறவைக்கும்/சங்கடப்படவைக்கும் விஷயங்கள் – Disturbing Aspects of Kerala Society
ஆனாலும் நம்பூதிரிபாட்-மகன்-ஊழல் என்றெல்லாம், பத்து நிமிடத்தில் புரிந்துகொண்டுவிடுவது என்பது வெள்ளைக்கார உரிமைச் சிகாமணிகளுக்குத்தான் முடியும். மேலும், ஓய்வாக ஓரிரு நாள் செலவழித்துவிட்டு, ஒட்டுமொத்த கேரளச் சமூகத்தையும் எள்ளி நகையாடுவதும், ஒரு தில்லியில் படித்த / தங்கிய அரசு செலவில் அமோக ‘ஆராய்ச்சி’ செய்யும் சமூகவியல் அகழ்வாராய்ச்சிக் காரரால்தான் முடியும். சோகம்.
ஆக … இவரும், என்னுடைய கந்தறகோளக் கருத்துரிமைக்காரப் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவர்தான்!
March 29, 2015 at 11:39
\\\ 9 வகை பீன்ஸ்,7 வகைக் கீரைகள், 3 வகை பரங்கி, 4 வெள்ளரி வகைகள், 3 வகை சுரைக்காய்கள், \\\
ராகவா…………….அட்லீஸ்ட் பேரயாவது போட்டிருக்கலாமே.
9 வகை பீன்ஸ்!!!!!!!!!!!!
ஃபலி…………..என்று கொத்தவரங்கா மற்றும் பீன்ஸ் இரண்டயும் இங்க தில்லியில் சொல்லுவது வழக்கம். ஒன்பது வகையா……….. ராம் தலய சுத்துது……… பேரயாவது சொல்லங்களேன்.
7 வகைக் கீரைகள்………..உங்க தோட்டத்துல என்னென்ன
நெனவுல இருக்கறது………….. அரைக்கீரை, மொளக்கீரை, பொன்னாங்கண்ணி, பசலக்கீரை, மணத்தக்காளிக்கீரை (இத்தோட இலை,காய், பழம் எல்லாமே சூப்பர்)
இங்கே உத்தர் பாரத் மே………….. பாலக், சொளாய் (ஹரா ஔர் லால்), பத்துவா, சௌசல் கா சாக் (கஷ்மீரி), மேதி, ஸர்ஸோங்கா சாக் (மக்கே கா ரோடி கே ஸாத்……..) மக்கே கா ஆட்டா பன் சக்கீ ஸே பீஸா ஹுவா…………ஹிமாஞ்சல் யா ஸாட்டே ஜம்மு தா……………
3 வகை பரங்கி………….
இங்கே உத்தர் பாரத் மே……………
உருண்டையான கத்து எனப்படும் பரங்கி, நீளமாக பச்சைத் தோலுள்ள பரங்கி என்று இரண்டு வகை ப்ரபலம்.
4 வெள்ளரி வகைகள்!!!!!!!!!!!!
கீரா, கக்கடி இரண்டு பரிச்சயமானவை……………. தக்ஷிண பாரதத்தில் கக்கடிக்காயும் உண்டு, கொடி வெள்ளரி என்று கேட்டிருக்கிறேன். உங்க தோட்டத்துல நாலு வகை!!!!!!!
சுரைக்காய்…………….
தக்ஷிண பாரதத்தில் சாப்பிடாத காய்…………… நீச்சலடிக்க கத்துக்க சொரக்குடுக்கை என்று பயன்படுத்தியிருக்கிறேன் (நீச்சல் கற்றுக்கொள்ளாத கத்துக்குட்டி என்பது வேற விஷயம்)
இங்கே லௌக்கி என்றும் கத்து என்று அறியப்படும் நீளமான சுரைக்காயும் உண்டு, நம்மூர் குடுக்கை சுரைக்காயும் உண்டு.
ம்……………..மதறாஸ் வந்தால்………. இதயெல்லாம் சாப்பிடுவதற்காகவாவது…………..ம்ஹும்………… பாக்கறதுக்காவது ஒரு தபா உங்க இஸ்கூலுக்கு வரணும்னு ஆசயா இருக்கு. சமயத்துல இம்ச கொடுப்பேன்…………எலவச அறிவுர கொடுப்பேன்னு பயப்பட வேண்டாம்………….. அந்த அளவுக்கு அறிவு இல்லாததால்.
உங்க இஸ்கூல் இஸ்டூடண்ட்ஸுடைய சூழலை நினைத்தால் பொறாமையாக இருக்கு.
ம்…………….. சர்டன்லி …………….. ஹம் ஹோங்கே காம்யாப் ……………… ஏக்தின்……….. மன் மே ஹை விச்வாஸ்…………. பூரா ஹை விச்வாஸ் ஹம் ஹோங்கே காம்யாப் ஏக் தின்……… (thanks for sharing that you tube)………… Whenever I hear this song, i remember a famous comedy film of 80s……….. of Satish Shah………….. jine bhi do yaro………..
சரி…………. அய்யய்யோ ஜிஎம்வோ அப்படீன்னு எழுதிருக்கீங்க………….. எணயத்துல இதப்பத்தி அய்யய்யோன்னு தான் படிச்சிருக்கேன்………… ஏதாவது நல்ல சமாசாரமும் இதப்பத்தி இருக்கா…………..மான்செண்டோ டட்டடா டட்டடா………. அமேரிக்க பயங்கரம் டட்டடா டட்டடா……….
March 29, 2015 at 12:20
அய்யா – அந்தக் காய்கறி வகைகளைப் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.
ஜிஎம்ஓ என்பதோ, அணுக்கருசக்தியென்பதோ விட்டு ஓடப்படவேண்டியவையல்ல என்பது என் கருத்து. இவைகளை ஒழிக என்று சொல்பவர்களில் குறைந்த பட்சம் சுமார் 100% ஆட்களுக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே புரிவதில்லை என்பதும் என் தீர்ப்பு. இவைகளும் இன்னொரு சமயம்.
நீங்கள் சொல்லும் ‘ஜானே பீ தோ யாரோன்’ குந்தன்ஷா-வுடையது என நினைக்கிறேன். சதீஷ் ஷா உட்பட ஒரு நடிகர் பட்டாளமே அதில் இருந்தது அல்லவா? ஆனால், அது ஜீனேயல்ல.
ஜீயோ ஔர் ஜீனே தோ! ;-)