புலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (1/2)
August 16, 2019
ஐயா அனாமதேயம்,
முதற்கண், தங்களுடைய ஆங்கிலப்புலமைக்கு வாழ்த்தும், என்னுடைய தமிழ் ‘dick’tion நன்றாக இருக்கிறது எனச் சொல்லும் பொய்க்கு கண்டனமும். ஆகவே தமிழிலேயே உங்களுக்கு பதிலும். = தண்டனையும். (+இளம் பொன்னாருக்கு நன்றியும்)
…உங்கள் பின்னூட்டத்தின் ஒருமாதிரியான முழிபெயர்ப்பை எஸ்ரா போல கூக்ள் ட்ரேன்ஸ்லேட் எழவை, முதலில் வெச்சிசெஞ்சேன் – ஆனால் அது நம்மருமை ஸாஹித்ய அகாடம்மி எஸ்ரா தரத்திலேயே படுமோசமாக இருந்தது. ஆக, அதனைக் கடாசிவிட்டு, அதன் ஒருமாதிரியான சாராம்சம் மட்டும் கீழே:
குப்பை. உன்னைவிட அறிவில் மிகவும் உயர்ந்த ஜெயமோகன் + கடலூர்சீனுவிடம் உனக்குப் பொறாமை + ஒரு பிராம்மணனாக, பிராம்மணரல்லாதவர்களின் மீது கொலைவெறி என்பவைதாம் உன்பதிவில் தெரிகின்றன. எப்போதாவது, ஒருமுறையாவது பிராமணரல்லாதவர்களைப் புகழ்ந்திருக்கிறாயா? வாசகர்களுக்கு நொறுக்குத்தீனி போடுவதற்கு மாறாக, புதிதாக/தனித்தன்மையுள்ளதாக எழுது. [தமிழில்?] நன்றாக எழுதவந்தால், நீ எழுதுவதெல்லாம் சரியென்றல்ல.
நீ வெறுக்கும் அரவிந்தன் கண்ணையனிடமிருந்து, எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொள். அவர் உன்னைவிடப் படிப்பறிவு கொண்டவர் + மிகக் கவனத்துடனும் தரவுகளுடனும் எழுதுபவர். பாரத அரசு, உன்னைப்போன்ற கழுதை+பிராம்மண ஏமாற்றுக்காரர்களின் மீது படிப்புக்காகச் செலவழித்த பணம் வீண்.
உன்னைப் போன்ற ஆரியர்களால்தான் என்னைப் போன்றவர்கள் அமெரிக்காவுக்குப் புலம்பெயர நேர்ந்தது.
(-: (-: (-: 0-0-0-0-0-0-0 :-) :-) :-)
இதற்கு, என் முதல் பதிலும் + இளம் பொன்னார் அளித்த பின்னூட்டமும் கீழே (எல்லாம் ஓரிடத்திலேயே இருக்கட்டும் என) கொடுத்திருக்கிறேன்.
இப்போது என் வளவளா பதில்:
1. இரண்டுமூன்று நாட்களுக்குமுன், காலையில் உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும், வழக்கம்போலவே இம்மாதிரி வகையறாக்களுக்குச் செய்வதுபோல, பேசாமல் கடாசிவிடலாமா என யோசித்தேன். பின் கொஞ்சம் ஊறப்போட்டு, அன்றிரவு ஒரு பின்னூட்ட பதில் கொடுத்தேன். பின்னர். கொஞ்சம் ஹோம்வர்க் செய்து, யோசித்து கொஞ்சம் விரிவாக இன்று பதில் எழுதுகிறேன். ஏனெனில், தாங்கள் கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். கொஞ்சமாவது மெனெக்கெட்டிருக்கிறீர்கள். அதை நான் மதிக்கிறேன். மேலும் இம்மாதிரி கேள்விகள் மாதத்துக்கு சிலதடவைகளாவது வருகின்றன – ஏனெனில் என்னையும் உங்களையும் போலவே, பல வேலைவெட்டியற்றவர்கள் இணையத்தில் சதா தொங்கிக்கொண்டு இருக்கிறார்களல்லவா?
2. ஆனால் – தாங்கள் அரவிந்தன்கண்ணையன் தரவுகளுடன் எழுதுகிறார் (“அரவிந்தன் கண்ணையனிடமிருந்து, எப்படி எழுதுவது என்பதைக் கற்றுக்கொள். அவர் உன்னைவிடப் படிப்பறிவு கொண்டவர் + மிகக் கவனத்துடனும் தரவுகளுடனும் எழுதுபவர்“) என்று அவர் மேல் மிக அநியாயமாகவும் அறமற்றும், குற்றம் சாட்டியதற்கு எதிர்வினையாகவும் கண்டனமாகவும்தான் ஒத்திசைவு முகப்பில் இருக்கும் xkcd கேலிச்சித்திரத்தை அன்று காலையில் பதித்தேன் – அதனைச் சொடுக்கினால் வரும் சுட்டியில் சிலகாலம் முன்பு(ம்) உங்கள் நண்பர்(?) தரவில்லாமல் அட்ச்சிவுட்டது பற்றி இருக்கிறது. அத்துடன் விட்டுவிடலாமென நினைத்தேன்.
ஆனால் – இப்போது, கடும் யோசனை(!)க்குப் பிறகு, சில மேலதிக வரிகள். (பாவம் நீங்கள்! ஆனால், இந்த எழவை நீங்கள்தாம் ஆரம்பித்தீர்கள்!)
3. நானும் வெறுப்பியத்தில் பீடிக்கப் பட்டவன் தான். நம்மில் யார்தான் அப்படியில்லை, சொல்லுங்கள்? ஆனால் – எனக்கு (குவியம் செய்யப்பட்ட) வெறுப்பு இருப்பது பொதுவாக காலிப் பெருங்காயடப்பா அறிவுஜீவி(!)களிடமும், நம் திராவிடர்களுடனும் மட்டுமே. முதுகெலும்பற்ற இடதுசாரிகளும், பொதுவாகவே உங்களைப் போன்ற என்ஆர்ஐகளும் (இந்தத் திரளில் சிலர் எனக்கு அறிமுகங்கள்/நண்பர்கள் – ஆகவே, விதிவிலக்குகள் இருக்கின்றனர்) அதில் அடங்குவர் என்பதையும் மறுக்கமாட்டேன்.
அண்மையில் இந்தப் பகுப்பில் நேருவிய-ஸோஷலிஸ்ட்கள் எனத் தம்மைக் கருதிக்கொள்ளும் சில படித்த அறிவிலிகளும் வந்து விழுந்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகிறேன்.
ஆனால் – அரவிந்தன் கண்ணையன் போன்றவர்களை நான் வெறுக்கவில்லை. படித்துப் பரிதாபப் படுகிறேன், அவ்வளவுதான். அவர் பரந்த படிப்பு படித்திருக்கிறார் என்று தாங்கள் கருதுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் ரெண்டு புத்தகங்களைப் படித்துவிட்டு அட்ச்சிவுடுபவராகத்தான் (இதைப் பற்றித் தரவுகளுடன் சிலமுறை எழுதியிருக்கிறேன்) அவர் எனக்குப் படுகிறார். ஆனால், யார்தான் தமிழைக் கூறுபோட்டுக் கூவிக்கூவி விற்கும் நம் நல்லுலகில் அப்படியில்லை, சொல்லுங்கள்?
ஆனாலும் – அவருக்கும் இருக்கக்கூடும் வசதிகளையும் வாய்ப்புகளையும் (அதுவும் அமெரிக்காவில் இவை அநியாயத்துக்கு அதிகம்) சரிவரப் பயன்படுத்தினால், கொஞ்சமேகொஞ்சம் சிரத்தை எடுத்துக்கொண்டால், விஷயங்களை அவற்றின் பின்புலத்தில் அறிந்துகொள்ள முயற்சி செய்தால் அவரும் (என்னைப்போலல்லாமல் தான்!) ஜொலிப்பார் என்பது என் எண்ணம். (அப்படிப் பார்த்தால் அனைவரும் ஜொலிப்பர் என்பதும் உண்மை!)
4. நான் ஜாதி/மதவழிப் பிரிவினைப் பார்வையோடு உங்களைப் போல அலைபவனல்ல. அதேபோல மதச்சார்பின்மையையும் ‘நான் ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன்’ என்று காட்டிக்கொண்டு மினுக்குவதையும் வெறுப்பவன், தவிர்ப்பவன். என்னை ஒருமாதிரி Entrepreneur – Warrior – Scholar – Doer/Labourer கலவையாக வரித்துக்கொள்பவன். சதுர்வர்ணன். ஆகவே சர்வ நிச்சயமாக மேட்டிமைவாதிதான், சராசரியல்லன் எனவும் உணர்ந்திருக்கிறேன். அதேபோல நாம் அனைவரும் அவரவர் துறைகளில் வல்லவர்களாக, மேட்டிமைத்தனம் மிக்கவர்களாக இருக்கவேண்டும் எனத்தான் விழைகிறேன். இருந்தாலும், தாங்கள் என்னிடமிருக்கும் ஜாதிவெறியை ‘இனம்கண்டுகொண்டது’ பற்றி யோசிக்கிறேன். இதுவரை இப்படி ‘மாற்றி’ யோசித்ததில்லை என்றாலும்…
பாரதப் பிரதமர் நரேந்த்ரமோதி அவர்களைப் பற்றி நான் நிறைய எழுதியிருக்கிறேன். அவர் போற்றத்தக்கவர் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. இன்னமும் ஜொலிக்கும் சிலபலரைப் பற்றி (மதுகிஷ்வர், ஷங்கர்குஹா நியோகி, அஹ்மெத்ஷா மஸூத், நான் வரைமுறையேயில்லாமல் ஆராதிக்கும் ஸ்ரீ தரம்பால், ஸ்வாமி ஸானந்த்ஜி, குருஜி ரவீந்த்ரா (ட்டாகுர் அல்ல, கவனிக்கவும்!)+++ இன்னபிறர் ஸையத் முஸஃபர் அலி அவர்கள் உட்பட) அப்படி +வகையில் எழுதியிருக்கிறேன். ஏன், உங்கள் ஜெயமோகனைக் குறித்தும் (தேவைப்பட்டபோது, அவர் நன்றாக எழுதும்போதெல்லாம்) புகழ்ந்துதான் அதிபுளகாங்கிதத்துடன் எழுதியிருக்கிறேன். அப்போதும் மனதறிந்து பொய் சொல்லவில்லை; இப்போதும் அப்படியே. முடிந்தவரை மரியாதையுடன் தான் அனைவரிடமும் (ஒத்திசைவின் சொற்ப சகவாசகர்கள் உட்பட) பழகுகிறேன் – கிண்டல் பகடி கபடி எல்லாம் வேறுவிஷயம், அது இல்லாமல் என்னால் வாழமுடியாது.
இவர்களெல்லாம் நீங்கள் சொல்கிறதுபோல் பிராம்மணர்களாக இருக்கலாம். அஹ்மெத்ஷா ஐயங்கார். நரேந்த்ரமோதி கனபாடிகள். மதுபூர்ணிமா ஐயர். நன்றி.
சரி. இவ்வளவு அழகாக, கோர்வையாக எழுதுகிறீர்கள் – ஆனால், நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதைப் படிக்காமல், அடிப்படை ஹோம்வர்க் செய்யாமல், கோபத்துடன் பொதுமைப்படுத்தி நான்-ப்ராமின் காழ்ப்பு கொலைவெறி அதுயிது எனக் கருத்துதிர்க்கிறீர்களே!
5. நான் ஏன் தங்களுடைய உதாரணபுருஷர்கள் – கடலூர்சீனுவாதிகள் – குறித்துப் பொறாமைப்படப்போகிறேன், சொல்லுங்கள்? வரைமுறையில்லாமல் கிண்டல் செய்வதை பொறாமையின் வெளிப்பாடு என நினைத்துவிட்டீர்களோ?
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்: ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு போன்ற ஒரு சூய்ங்கம் பப்புள்கம் சவத்து சவ்வு இஸ்த்து ஊதும் விஷயத்தை, சிலகாலம் மும்முரமாக முயன்றால், தொழில்முறையில் ஒரு கணிநி நிரலால் உருவாக்க முடியும். வினாடிக்கு ஒரு ஒரு புத்தம்புதிய வெண்முரசு பதிவு க்யாரண்டி. மேலும் சிறிது முயன்றால், பட்டனைத் தட்டினால் அல்லது எலியின் கொட்டையைச் சொடுக்கினால் ஆட்டோமெடிக்காக அதனைக் கிண்டில் புத்தகமாக மாற்றி அமேஸான் எழவில் தரவேற்றிவிடவும் முடியும். டிஜிட்டல் எனேபிள்ட் ஃபேக்டரி ஃபேக் அலக்கியம். இதற்குப் பெயர் தமிழலக்கியி1.0. நன்றி. அதற்குப் பின் அதனைப் படித்தமாதிரி மேதாவித்தன அலக்கிய விமர்சனத்தையும் அதே வகையில் செய்யமுடியும் – அது தமிழலக்கியவிமர்சனி2.0 ரிலீஸ் எழவில் வரும்.
சொல்லப்போனால், மெஷின்லேர்னிங் எழவாலஜிஸ்ட்கள் அல்லது குரூரநகைச்சுவையுணர்ச்சி கொண்ட இளம் ப்ரொக்ராம்மர்கள், இவற்றைச் செய்யலாம். ஆனால், இது கேளிக்கைக்காகச் செய்யப்பட்டாலும் நம் செல்லமான தமிழ் அலக்கியத்தின் மீதான ஒரு விமர்சனம் என்பதால், இதனைச் செய்யவேண்டிய அவசியம்கூட இல்லை. நமக்குத் தெரியாதா நம்முடைய தரமும் ரெவலும், சொல்லுங்கள்?
அமெரிக்க அரசியல் சாஸனத்திலேயே இதுபற்றிப் பேசப்படுகிறதே…
“We hold these Truths to be self-evident, that all modern/current Tamil literary works are created equal, that they are endowed by their Creators with certain unalienable Rights, that among these are Mediocrity, Shoddiness, Ahistorical knowledge and the Pursuit of Shamelessness…“
…அதேபோல யார் எங்கிருந்து திருடி உல்ட்டா செய்கிறார்கள் என்பதை அறிவதும், இக்காலங்களில், புதுமைப்பித்தன் சொல்வது போல ‘மிகவும் லேசு.’ ஏனெனில் – நம் தற்காலப் பிதாமகர்களில் பெரும்பாலானோர் பலவிதமான வஞ்சிகளில் – அந்தக்கால மழபுல உழபுல போல, இக்கால ஸ்கேன்புல ஸெராக்ஸ்புல உள்ளிட்ட டவுன்லோட்புல விக்கீபிடியபுல கூக்ள்புலவஞ்சி போன்றவைகளில் அசகாய சூரத்தனம் மிக்கவர்கள். மையக் கருத்தை லவட்டுவது, உல்ட்டா செய்வது, மொழிமாற்றிப் பின்புலத்தையும் அட்ஜஸ்ட் செய்வது, சில சொற்றொடர்களைத் தடுத்தாட்கொள்வது, மானேதேனே இணைப்பது, நெகிழ்வாலஜி கலப்பது, நான்கைந்து புத்தகங்களிலிருந்து தலா ஒரு பத்தி எடுத்துக் குழப்பிக் குதப்பித் துப்புவது போன்ற கமுக்கவியல் பராக்கிரமங்களில் வல்லவர்கள். இலுப்பைப்பூக்கள். ஒருகாலத்தில் ஒரு அரைகுறை ஸ்கீம் நிரல் (பின்னர் காமன் லிஸ்ப்) ஒன்றை எழுதி விளையாட்டுபோல நம் பிதாமகர்களின் சிலபல கைவண்ணங்களை மேற்கண்ட வஞ்சிவிவகாரவழியில் பார்த்துமிருக்கிறேன். கொஞ்சம் திடுக்கிடவைத்த விஷயம்தான் அது. அதனால் தான் சொல்கிறேன். (நானும் என்னுடைய பழைய லிஸ்ப் கணிநி நிரல்கள் எங்கேயெனத் தேடி தூசிதட்டி வைக்கிறேன், பார்க்கலாம் – அவை யாருக்காவது பயன்படலாம்!)
ஆக ஐயன்மீர், எனக்குப் பொறாமை? (ஆனால் பொச்சரிப்பு அவ்வப்போது வரும். களிம்பு தடவிக்கொண்டால் சரியாகிவிடும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்!)
எனக்குப் பொதுவாகவே, யார் மேலும், சாதாரணனான (simple wound made) என்னைவிடப் பலப்பல மடங்கு புத்திசாலிகளாகவும் செயலூக்கம் உடையவர்களாகவும் இருப்பவர்களைப் பார்த்துக்கூடப் பொறாமை இல்லை – மேலும் அவர்களுடன், ஒரு பிரச்சினையுமில்லாமல், நான் நட்பில் இருக்கிறேன் எனவும் நினைக்கிறேன். மதுகிஷ்வர், என் மனைவி போன்றவர்கள் (பலப்பலர் இப்படி இருக்கிறார்கள் – ஆனால் பகிரங்கமாக அவர்கள் அனைவரையும் ஏழரைகள் உட்பட, இப்படிக் குற்றம்சாட்டக்கூடாது, காட்டிக்கொடுக்கக்கூடாது என்பதால்… குறிப்பிடமுடியவில்லை) என் நண்பர்கள்தான்.
6. நிலைமை இப்படிப் படுசோகமாக இருக்கையிலே, மற்றபடி ஜெயமோகன் கடலூர் சீனு அவர்கள் மீதெல்லாம் நீங்கள் அபாண்டமாகவும் கீழ்மையுணர்ச்சியுடனும் குற்றம் (“உன்னைவிட அறிவில் மிகவும் உயர்ந்த ஜெயமோகன் + கடலூர்சீனு“) சுமத்தியிருக்கவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. என்னைப் புகழ்வதற்காக, ஏன் பிறரைத் தாழ்த்துகிறீர்? ஏன் அவர்களைப் பற்றி அநியாயத்துக்குப் புளுகுகிறீர்? அவர்கள் உங்களுக்குச் செய்த துரோகம்தான் என்ன? வருத்தமாக இருக்கிறது.
இதுதானா தாங்கள், நம்முடைய பொதுச் சொத்தான பெரும்பேராசானுக்கும், ஆகமசந்திர லகுலீச சண்டிகேஸ்வர சண்டேஸ்வர தொண்டரடிப்பொடியாழ்வாருக்கும் கொடுக்கும் மட்டற்ற மரியாதை?
எனக்குக் கோபம்கோபமாக வருகிறது. அவர்களுடன் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் வாய்க்கா தகராறு இருந்தால் அதனைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாமே! இப்படியா பகிரங்கமாக அவர்களைக் கிண்டல் செய்வது, ஹ்ம்ம்??
****கடலூராரிய விளம்பர இடைவேளை ஆரம்பம்****
… … அடுத்து வரப்போவது உங்கள் பிரத்யேக மடிக்கணிநி வெள்ளித் திரை எல்ஸிடி எல்இடி எழவுகளில் வெளிவரப்போகும் மிக நூதனமான விளம்பரம். காணத் தவறாதீர்!
-0-0-0-0-
அடுத்த பகுதி(!) – இந்த மகத்தான எழவின் மெகா தொடர்ச்சி! படிக்கத் தவறாதீர்கள்!! All, your time. :-(
புலம்பெயர்ந்த அமெரிக்கஇந்திய அன்பரின் அறிவுரையும், கொஞ்சம் தன்னிலை விளக்கமும் (2/2)
—
August 16, 2019 at 07:12
[…] இந்தத் தொல்லைக்காட்சியின் முதற்பகுதியைப் படித்துத் தொலைத்துவிட்டு […]
April 9, 2020 at 17:54
[…] […]
February 11, 2021 at 10:08
[…] […]