புராதனக் கோவில்களுக்குச் சென்றுவிட்டு புல்லரிப்புப் பயணக் கட்டுரை எழுதுவது எப்படி

July 26, 2019

இனிய பயம்,

என்னருளால், வாணிக்கமாசகர் எனும் ஆகச்சிறந்த சமணஅம்மண முனிபுங்கவரால் பாடல்பெற்ற புங்கமரத்தடி அமர்ந்தோன் ஸ்ரீ ஜெயஜெய அவலக்கீஸ்வர லகுலீஸத் தீர்த்தங்கர போதிஸத்வ ஸ்வயம்பு உள்ளுறை ஸாஸ்தாசண்டிகேஸ்வர குடமூக்கின் இறைவனுக்கு, நான் விஜயம் செய்த வாய்ப்பு கிடைத்தது. என்னே என் மகிமை!

அவன் எழுந்தருளியிக்கும் கற்றளி எனத் தாளிக்கப்படாமலேயே தளிகை செய்வது போன்ற தனித்துவம் வாய்ந்த தளியான இது, பிற்கால-முற்காலச் சோழர்களுக்கும் மிகமுந்தைய லெமூரியக் கற்காலச் சோழர் கோவில். அதுவும் அது கருங்கற்களாலேயே கட்டப்பட்டது இதன் வைசேஷிகம் என நீங்கள் நியாயமாகவே பாடம் புகட்டியது நினைவுக்கு வந்தது என் யோகம்.

‘மீ மாம்ஸம்’ என்றால், ஓடும்மீன் ஓட, பின் வந்த உறுமீனை, அந்தப் பாழாப்போன வாடியிருக்கும் கொக்குக்கு முன்னே எகிறி ஓடித் தாவிப் பிடித்து அதனைக் கழுவிஊற்றி அதன் முன்பக்க இறைச்சியை மட்டும் உண்வதுதான், என மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் இருக்கிறது என்று நீங்கள் சொன்னது எனக்குத் திடீரென்று நினைவுக்கு வந்தது. ஆக, மீன் மாமிசம். ஆஹா! இன்றைய தேதிக்கு உங்களை விட்டால் எங்களுக்கு இதையெல்லாம் சொல்லிக்கொடுப்பதற்கு ஆள் இல்லை.

கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போல திகம்பரர் வீட்டு வாஷிங்மெஷினுக்குத் துளிக்கூடவேலையில்லை அல்லவா?

(திகம்பரர்கள் சூழ நடந்துகொண்டிருக்கும் ஒரு சமணச் சபையின் புகைப்படம்; ஸ்வேதாம்பரம் எனும் சென்னை, தாம்பரம் பக்க ஊரில் கடைச்சங்க காலத்தில் இது நடந்தது என குறுக்குவெட்டு கல்வெட்டுகள் சான்றுகூறுகின்றன)

….இது குறித்தும் நாம் நிறையவே உரையாடியிருக்கிறோம். நம் நண்பர் ஸாம் இதனைக் குறித்து, நம் லூட்டி காவியமுகாம் அமர்வுகளில், ஒரு பாட்டுப் பாடியதைத் தொடர்ந்துதான் ஸாம்ஸங் எனும் சொல் கொரியாவில் வழக்காடலுக்கு வந்தது என்பதை நம்மில் எவ்வளவு பேர் அறிவோம்? அன்றே பாடினார் அல்லவோ ஸாம்?

இச்சமயத்தில், இங்கே ஸாம்ஸங் நிறுவனம் வாஷிங்மெஷின்களையும் உற்பத்தி செய்கிறது எனும் உண்மை, நம் உரையாடல் வரலாற்றின் நீட்சி அன்றோ? இன்று இருந்தால், நீட்ஷேயும் அப்படித்தானே நினைத்திருப்பார்? இப்படியே முற்பகலில் கருத்துலகச் சிறுதாவல் சிலவற்றைச் செய்தால்தானே பிற்பகலில், உண்டபின் வரும் கிறக்கத்தில், பெருந்தாவல்தாமே வரும்?

-0-0-0-0-

…இன்று காலை திடீரென்று ஒரு உந்துதல். ஆணிக்கமாசகரால் பாடப்பட்ட இந்தக் கோவிலுக்குச் சென்றேயாகவேண்டுமென்று. ஆக, நானும் என் நண்பன் ஹீரோ ஸ்ப்ளெண்டர்+ வண்டியும் ஆர்வத்துடன் உந்தியபடிக் கிளம்பினோம். ஏனெனில் உதைப்பானை உதைத்தாலும் வண்டி நகரவில்லை. அதில் பெட்ரோல் இருந்திருக்கவில்லை. உதைப்பானே இல்லாத ஏமரா வண்டிகளை எப்போது இந்தியாவில் உற்பத்திசெய்யப்போகிறார்களோ? பின்னர் BP பங்கில் பெட்ரோல் போட்டபோது என் BP எகிறியது. ஒரு லிட்டர் 80 ரூபாயா? நான் கட்டும் வரியும் லுங்கியும் எங்கே போகின்றன என நினைத்தேன். பெருமுதலாளிகளுக்கும் தனவான்களுக்கும் முட்டுக்கொடுக்கத்தானே மத்திய ஹிந்துத்துவ அரசால் நம் வரிப்பணம் உபயோகிக்கப் படுகிறது?

…காலையில் ஆம்லெட் உண்டிருந்தாலும் ஹெல்மெட்டோ கபாலக்காப்போ பிறிதொன்றுமில்லாமல், வண்டியோட்டிக் கொண்டிருந்தபோதே ஆகமங்களைப் பற்றிய ஆகமச்சிறந்த சிந்தனையில் ஈடுபட்டதால்,  பாதையின் நடுவில் இருந்த ஒரு குழியின் காரணமாக  விசைபிறழ்ந்த அந்தவண்டி மட்டும் ஆர்வத்துடன் மிகுவிசைகொண்டு தனியே முன்செல்ல, நான் பின்னால் கப்பிச் சாலையில் என் மண்டையால ஓங்கி அறைந்து உருண்டேன், தலையில் பலத்த அடி.

உருண்டுகொண்டிருக்கும்போதே மேலே பார்த்தால் ஒரு பருந்து.  ‘ஃபேர் அண்ட் லவ்லி’ களிம்பை அதன்மேல் தடவினால் அது உடனடியாக ந்து எனச் சுருங்கிவிடுமோ என ஒரு பின்நவீனத்துவ விடலைவயது பருவகாலக் கேள்வியைக் கேட்டுக்கொள்வதற்குள், நான் உருள்வது நின்று விட்டது. எழுந்து போய் வண்டியை நிமிர்த்தித் தூசி தட்டிக்கொண்டு மறுபடியும் கிளம்பினோம். மறுபடியும், அடுத்த சில நிமிடங்களில் அதே கேள்வி. ஆக இந்த மீள்உருளாக்கத்தின்போது மறுபடியும் மேலே பார்த்தேன். பருந்து ஏதோ விருந்துக்குச் சென்றுவிட்டதுபோலும். கார்ட்டூன் படங்களில் யாராவது கீழே விழுந்தால் மண்டைக்குமேல் போடுவார்களே, அதேபோல வெறும் ஸ்பிரிங்குகளும் நட்சத்திரங்களும் புடைப்புகளும்தான் விசும்பில் விழுமியமாக மிஞ்சின.

பின், கூகுள் வழிகாட்டும் செயலியில், தட விளக்கத்துக்காகவும் தல விலக்கத்துக்காகவும் இந்தக் கோவிலின் மூலவர் பெயரை உள்ளிட்டவுடன், என்னுடைய ஸ்மார்ட்ஃபோன் உடனடியாகக் கொற்றவையால் வெட்டப்பட்டதுபோல ரத்தம்கக்கிச் செத்துவிட்டது. கோவில் பெயர் நீளமாக இருந்ததால் இது ஏற்பட்டிருக்கலாம் என அவதானித்தேன். என்ன மென்பொருள் எழுதுகிறார்களோ! பின்னர் மறுபடியும் சுருக்கமாக, வட்டார வழமைப்படி ‘மொட்டைக்கோவில், குட்டைப்பனை சமீபம், எட்டையம்மபுரம்’ என உள்ளிட்டவுடன் அது செயல்பட்டது.

-0-0-0-0-

இதுவன்றோ கோவில்.

இது மொட்டைக்கோவில் என்றழைக்கப்பட்டதன் காரணம் அமைதிமார்க்கத்தைச் சார்ந்தவர்களால் அவர்கள் வழக்கம்போலவே, இதன் புராதனகோபுரமும் இடிக்கப்பட்டதுதான்; இதுவும் ஒருவிதத்தில் நல்லதற்கே! பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே நம் மானுடவாழ்வின் நியதி?

பின்னர் இந்த மொட்டைகோபுரம் வழக்கம்போலவே வழக்கமான புரவலர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டு இளையராஜகோபுரம் என்றழைக்கப்பட்டு கட்டுமானத்தில் இருந்தாலும் இதற்கு விமானம் இதுவரை அமையவில்லை எனத்தான் சங்ககாலப் புத்தகங்களில் படித்திருந்தேன். ஆனால் மேலே அண்ணாந்து பார்த்தால் விமானம் தெரிந்தது. நம்பமுடியாமல் கண்ணைக்கசக்கிக்கொண்டு பார்த்தால், அது இண்டிகோ. இதற்காகத்தானே, இந்த அவுரிக்காகத்தானே அறக்கிழவன் காந்தி, சம்பாரணத்தில் ஆங்கே போராடினான் என நீங்கள் சதா சொல்வது நினைவுறுத்தியது.

உள்ளே நுழைந்தேன், முதலில் மூக்கும் முகமும் முலைகளும் மூளியாக்கிச் சிதைக்கப்பட்ட அற்புதச் சிற்பங்கள் கொண்ட மண்டபம்.

பயாஸ்கோப்பெருந்தேவி உபயத்தில் பெருங்கற்காலத்தில் கட்டிய 250 (=ஆயிரங்கால்) மண்டபத்தின் கற்களை வருடினேன். எவ்வளவு வருடல்களை அப்புடைப்புகள் பார்த்திருக்கும்? எவ்வளவு புடைப்புகள் யோனிகளைத் தேடி நடுநிசிநாய்களாக அலைந்திருக்கும்! யோசிக்கும்போது பிடரி சிலிர்த்தது. தடவிப் பார்த்தால் ஒரு கம்பளிப்பூச்சி ஊர்ந்துகொண்டிருந்தது. கீச்சென்று கத்தி ஒரு சிறு தாவலைத் தாவி அகன்றேன். வெண்முரசில் கீச்சகவத வர்ணனை அபாரம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தற்செயலாகப் பாக்கெட்டில் கைவிட்டால் ஹீரோஸ்ப்ளெண்டர்+ வண்டிசாவி அந்தர்தியானம். ஆக, நான் முன்பு கீச்சென்று கத்தியபோது கீச்செயினும் ஒரு சிறுதாவல் தாவிவிட்டது என்று அனுமானித்து அதனைத் தேடிப் பின்னகர்ந்தேன். தாங்கள் முன்னொரு காலத்தில் செயின் ரியாக் ஷன் எனும் அணுக்கரு உடைப்புத் தொடர்பான உயர்பௌதீகக் கோட்பாட்டைப் பற்றி எங்களுக்குக் கொடுத்த பேருரைகள் என் நினைவில் வந்து பொட்டில் அஹிம்சையுடன் அறைந்தன. நம் வாழ்க்கையில் எல்லாமே ரியாக் ஷன் எதிர்வினைகள்தாமே! எதிர்வினை விதைத்தவன்,  அணுக்கருவினை அறுப்பான்.

வாயிலில் பாயும் கோலத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடனும் துடிப்பாகவும் இருக்கும் முழுமூலவர் பக்கவுறை இரு துவாரபாலர்கள் இரு பக்கங்களிலும். உள் பிராகாரங்களிலிருந்து கதிரோனின் பால் நிற அருட்பெருவெள்ளம். உடனுறை பாலாம்பிகையின் பழம்பெரும்கோவிலன்றோ இது?

அழகு! இதன் பண்பாட்டுத் தொடர்ச்சிகள் இன்றுவரை தொடர்கின்றன அன்றோ? நீங்களே முன்கொடுத்த எடுத்துக்காட்டாக, நம் அரசு நிறுவனமான ஆவின் தயாரிக்கும் யூரியா, சோப்புத் தூள், நீர் போன்ற கெமிக்கல்கள் கலக்கப்பட்ட பால், ப்ளாஸ்டிக் கவரில் வருகிறது. அதில் துவாரமிட்டால்தான் அதிலிருந்து பால் வெளிவர முடியும். துவாரபாலர்கள்!  இணையோ ஈடோ அற்ற படிமமல்லவோ இது?

துவாரபாலர்கள் அருளி இடம்கொடுத்தால்தான் அருட்பெரும்வெள்ளமாக வெளிவரும் பால் நம் ஆன்மாவை மீட்டெடுக்க முடியும். பாலிற் படுநெய்போல மறைந்துள்ள மாமணி ஜோதியான், சென்னை-பரங்கிமலை பக்கத்தில் தியேட்டராகவே அருள்பாலிக்கிறான் அன்றோ?

மெய் சிலிர்த்தது.

பக்கத்திலுள்ள இரண்டாம் லெமூரியச்சோழனின் மெய்கீர்த்தியில் அசோகனின் பிராம்மியில் செதுக்கப்பட்ட விவரங்கள் இருந்தன. உங்கள் தளத்தில் இதற்கும் பயிற்சி கிடைத்துள்ள காரணத்தால், இதனையும் குமுதம்விகடன் மாதிரிப் படுஈஸியாகப் படித்தேன். சுமார் 20000 வருடங்களுக்கு முன் அங்கவங்கக் கடல் பொங்கி எழுந்துவந்து தமிழகநிலத்தைப் பற்றி இறைவனிடம் கோள்மூட்டிவிட்டதற்குமுன், அதாவது கடற்கோளின்முன் உறைந்த தொன்மம் அதில் செதுக்கப்பட்டிருக்கிறது. இதே பிராம்மிதான் அந்தக்கால லெமூரியப் பெண்மணிகளின், பிரபல மார்க்கச்சை ப்ரேண்ட் என்பதையும் நீங்கள் சொல்லிதான் அறிந்தேன்.

இறைவனுக்கு இங்கே தனிக்கோவில் இருந்தாலும் அதன் பரிவாரங்களுக்குப் பரிவட்டங்கள் இல்லை எனத்தானே ஆகமங்கள் தன்னளவில் தனித்துவமாக அறைந்து சொல்கின்றன? பெருந்தெய்வங்கள் அனைத்தும், கவிதாயினி பெருந்தேவி போல மாபெரும்தெய்வங்களால் உள்வாங்கப்பட்ட எல்லாவற்றையும் கவித்துவமாக உள்ளிழுத்துக்கொள்ளும் அன்றோ? பேராசானைச் சுற்றி நாங்கள் இருப்பதுபோல மூலவரைச் சுற்றிப் பலப்பல துணைஇறைவிகளும் இறைவர்களும் உபதேவதைகளாகவும் பரிவார தெய்வங்களாகவும் இருப்பதும் நீங்கள் சொல்வதே உண்மைதானே?

பெரும்பேராசானே! லெமூரியா கோட்பாட்டுடன் தொடர்புடைய குமரிக்காண்டம் என்பதும் ஏதோ உடலுறவு தாந்த்ரீகம் தீர்த்தவாரி பசுபாவம் வீரபாவம் குலநர்வம் தொடர்புடைய வஸ்துவோ? பொதுவாகவே ஆண்கள்தான் காண்டம்  உபயோகிப்பார்கள் என்பதைத்தான் வாத்ஸ்யாயனரின் காமஸூத்திரம் சொல்கிறது என்பதை நாமெல்லாம் விளம்பரங்கள் மூலம் அறிவோமென்றாலும், இது, மணமாகாத இளம்பெண்களும் மட்டற்ற உடலுறவில் திளைத்துக்கொண்டிருந்ததற்கான படிமமோ? அதாவது ஆண் குறியீடு இங்கே பெண்குறியீட்டினால் உள்ளிழுக்கப்பட்டு ஒரு சின்னத் தாவலைத் தாவி, சிறுதெய்வம் பெருந்தெய்வமானது எனத்தான் நீங்கள் நினைப்பதுபோலவே நினைக்கிறேன். மரபார்ந்த ஆன்மீகச் சிந்தனையில் திளைக்கிறேன்.

மூலவர் உறையும் கர்ப்பக்ரஹம் என்பது ஒரு காரணப்பெயர் என்பதும், விளக்கில்லாமல் இருட்டாகவே இருக்கும் அதில், பொதுவாகவே, எல்லாமே கருப்பாக இருப்பதால்தான் அது கருப்பக் கிரகம் என நீங்கள் சொன்னதும் நினைவுக்கு வருகிறது. இந்த அடிப்படை உண்மையை அறியாதவர்கள்தாம் கெரகங்கள் எனச் செல்லமாக அழைக்கப்படுகின்றனர் என நீங்கள் நினைப்பதுபோலவே நினைக்கிறேன்.

ஆனால்… …

ஐயய்யோ! இன்னமும் மூலவர் இருக்கும் கர்ப்பக்ரஹத்துக்கு அருகேயே போகாமல் இங்கேயே  ஞானப்பழமாகத் திகைத்துக்கொண்டு நிற்கிறேனே!

(ஆகவே பிற, அடுத்த சிற்ப-ஆகமஞானப் பயணக் கட்டுரையில் தொடரும்)

அன்புடன்:

ஆகமனூர் சோகமன்

இந்த இனியபயக் கட்டுரை, ஜெயமோகன் தளத்தில் வந்த கட்டுரையால் உந்தப்பட்டு எழுதியதானதொன்று, ஆக, அதுதான் ஒரிஜினல். படித்து மகிழவும். இனியபயம் பெறவும். நன்றி.

4 Responses to “புராதனக் கோவில்களுக்குச் சென்றுவிட்டு புல்லரிப்புப் பயணக் கட்டுரை எழுதுவது எப்படி”

 1. K.Muthuramakrishnan Says:

  “திருமால் திரு மருகா நித்த நித்தம் இந்த எழவா? வாத்தியார் சாகாரா வயித்தெரிச்சல் தீராதா? ”

  அங்கே தான் விழுந்து எழுந்து தூசிதட்டிக்கொண்டு இங்கே வந்தால், இங்கேயும் அதேவா? பிசிறு மாறாமல் அதே இழுவை நடையை எப்படிதான் எழுதுகிறீரோ?


  • “சிறுகுழுவினர் மட்டும் படிக்கும் ராமசாமியின் வெறுப்பியத்தை நான் அறிவேன். ஆகவே, அதற்குப்போய் ஒரு விளம்பரம் கொடுத்து அதனைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அகங்காரத்தில் உச்சத்தில் நின்று ஆபாசத்தை அள்ளித் தெளிக்கும் அவரை யாராலும் திருத்த முடியாது.

   “ஆனால் இந்த முத்துராமகிருஷ்ணன் என்பவர், “வாத்தியார் சாகாரா, என் வயிற்றெரிச்சல் தீராதா” என இழிபார்வையுடன் என்னைக் குறித்து எழுதுவதுதான் விந்தை. இவர்களை மீறித்தான் மஜாபாரதத்திற்குப் பின் தொடர்ந்து ‘நீலநிறத்தோனின் வில்லும் நிலத்தின் மகளும்’ என ராம்போயணம் தன்னைத்தானே என் தட்டச்சுப்பலகை வழியாக எழுதிக்கொள்ளப் போகிறது.

   பெரும்பேராசான்”

 2. Vettri Says:

  வரவர இங்கே இடம்பெறும் கட்டுரைகளைத் தான் முதலில் படிக்கிறேன். அங்கே என்ன உளறியிருப்பார்கள் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது :)


  • அன்புள்ள வெற்றி,

   இவற்றைக் கட்டுரைகள் எனக் குறிப்பிட்டமைக்கு நன்றி. இப்போதுதான் எனக்கு மூச்சே வந்தது.

   கூடியவிரைவில் உங்கள் பயணக்கட்டுரைகளைப் பதிப்பிக்கிறேன். டெம்ப்ளேட்டுக்குக் கடலூராரை அணுகவும்.

   நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s