யாதும் ஊரே, யாவரும் வேளிர்
September 23, 2022
மன்னிக்கவும்.சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்,கேண்மினோ…
ஏனெனில்.
சங்க இலக்கியத்தில் சாதி இல்லை – மாறாக, ஆரிய வந்தேறிச் சதியினால் தான் தொல்தமிழகத்தில் சாதியே ஏற்பட்டது எனச் சாதிக்கப் படுகிறது என்பது சரியே!
சங்ககாலத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இறக்கயேற்றம் என எதுவுமே இருந்திருக்கவில்லை. ஒர்ரே சமதர்மப் பூங்காதான். அதற்கு மாறாக சங்கயிலக்கியத்தில் இருப்பவை இடைச் செருகல்கள் மட்டுமல்லாது முதற்செருகல்களும் கடைச் செருகல்களுமேயாம்.
அதாவது ஸோஷலிஸச் சமுதாயப் பார்வையில் தமிழகத்தில் ஆதி கம்யூனிஸ்ம் இருந்தது. அடிப்படையில் பகவன் கம்யூனிஸமாகவும் அது இருந்ததைத் தான் ஸோஷலிஸப் புலவர், வள்ளுவமார்க்ஸ் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ எனப் பாடினார். இதில் முதல் என்பது கேபிடல், CAPITAL. மூலதனம். அதாவது மூலதனம் அற்று, அதாவது அதற்குத் தேவையேயில்லாமல், ஒரு முற்போக்குப் பாதையில் ஆதிபகவ கம்யூனிஸ்ட்கள், ஏகோபித்த வளர்ச்சிக்கு நம் தமிழகத்தை இட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதைத்தான் நாயனார் அங்கு நாயத்துடன் நயந்து பகர்ந்திருக்கிறார்.
எங்கும் செல்வச் செழிப்பு – அனைவரிடமும் அடுத்த ஆயிரம் தலைமுறைகளுக்குத் தேவையான நிதி. இயற்கை அளித்த கருணை நிதி.
நாடெங்கும் சுபிட்சம்.
ஆணும் பெண்ணும் திருநங்கையும் திருமதிநம்பியும் சர்வசமம். அனைவரும் குழந்தைபெற்றனர், மீசை வைத்துச் சீவிச் சிங்காரித்து, பசலைநோய் வராத சமயங்களில் ஒயிலாக இருந்தனர். அப்போதைய பாலியல் என்பது ஆநிரை தொடர்பான பால், வெண்ணெய், தயிர் சம்பந்தப் பட்ட பகுத்தறிவாகவே இருந்தது. வம்ப மோரியர்கள்தாம் ஆதித் தமிழ் வேர்ச்சொற்களைத் திரித்து அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து மடைமாற்றம் செய்துவிட்டனர். அவர்கள் செய்ய ஆரம்பித்ததுதான் பாலியல் பலாத்காரம்.
…அந்தப் பொற்காலத்தில், அனைவருக்கும் நிலவுடமை இருந்தது. விவசாயம் செய்தார்கள். குறிஞ்சியில் நெல்லும் பாலையில் கரும்பும் நெய்தலில் நெய்யும் பொங்கிப் பிரவகித்தன.
அடிமைகளோ, பணியாட்களோ, வேளாண் தொழிலாளர்களோ அப்போது இருந்திருக்கவேயில்லை; அனைவரும் சர்வசமம்.
அப்போது, கடின உடல் உழைப்பு என யாராவது செய்துதான் இருக்கவேண்டும் என சில குல்லுகபட்டர்கள் வருவார்கள். அவர்களுக்கு யாம் சொல்லிக் கொள்வதென்னவென்றால்….
அப்போது, பெய்யெனப் பெய்யும் மழை. உழு என்றால் உழும் உழவு. களை என்றால் களைக்காமல் களைந்துகொள்ளும் கலை. அறு என்றால் அறுவடையாகும் சொலவடை. பொங்கு என்றால் பொங்கிப் பொங்கல் வைக்கும் திறன். (ஏனெனில் வேலைவெட்டியற்ற நல்லார்கள் அப்போதும் தொடர்ந்து உளறிக்கொண்டுதான் இருந்தார்கள், நன்றி)
மற்றபடி தமிழ்த்தேசிய தமிழ்க் குடிகள் அப்போதும் குடித்துக்கொண்டிருந்தார்கள். கவலை வேண்டேல்.
தமிழ்ப் பாரம்பரியமென்பது தொல்பாரம்பரியம், கொல்பாரம்பரியம்; சிரிக்காதீர்கள்.
-0-0-0-0-0-
இங்குதான், ஆரிய வந்தேறிகளின் குயுக்தி வெளிப்படுகிறது. வடுகர்களின் வடுமாங்காய்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன. மார்வாடிகளின் மாராப்புகள் விலகுகின்றன. இந்தியின் தொந்தி தெரிகிறது. நாயக்க மன்னர்களின் நாய்க்கடிகள் தொடர்கின்றன.
நம் தமிழகத்தில் ‘யாவரும் வேளிர்’ என இறுமாப்புடன் இருந்ததைச் சகிக்காத மேற்படி ஆரிய நச்சரவங்களின் கூட்டணி, சங்கயிலக்கியங்களைக் கையில் எடுத்துக் கிடைத்ததையெல்லாம் செருகுகிறது. சிதைக்கிறது. அழிக்கிறது. மாற்றுகிறது, அதற்குத் தேவையில்லை எனப் படுபவற்றை வெளியே வீசுகிறது.
குறுந்தொகையைக் குற்றுயிரும் கொலையுயிருமாகச் சின்னாபின்னம் செய்கிறது. புற400ஐ புறா65 ஆக்குகிறது! வந்தேறிகள் தங்களையும் ஆதித்தமிழ் கம்யூனிஸ்ட்களின் உறவினர்களாகத் தாங்களே ஊக்கபோனஸுடன் ஃப்ரியாக ஆஃபரில் அள்ளிச் சேர்த்துக் கொள்கிறார்கள்.
கூடா நட்பு கேடில் முடியும். நாம் தமிழர்கள் அவர்களை ‘உறவினர்’ என எண்ணி ஏமாந்துபோனோம்!
இப்படியாகத்தானே…
‘யாவரும் கேளிர்’ என்றாகிறது நம் ‘யாவரும் வேளிர்!’ இந்த அநியாயத்தை யாராவது கேட்டிருக்கிறீர்களா? உணர்ந்தாவது இருக்கிறீர்களா? அவாள் எப்படி நமக்கு உறவினராக முடியும்?
பாவி ஆரியர்கள், நம் மூளைகளை மைக்கிராஸ்கோப்புப் போட்டுத் தேடிப் பிடித்து துப்புரவாக ஒழித்தே விட்டார்களே! ஐயகோ!!
இந்தப் புறநானூற்றுத் திருத்தல்வாதக் கணியன் பூங்குன்றன் என்பவன் யார்? ஆரியப் பார்ப்பனன்.
கணியன் என்றால் வானசாஸ்திரம் படித்தவனல்லன், ஆரூடம் சொல்பவனல்லன், ஏன் கிளிசோசியம் கூடப் பார்ப்பவனல்லன். ஒரு கணிகைக்கு – அதாவது ஒரு தாசிக்குப் பிறந்தவன் எனப் பெரியார் சொல்லியிருக்கிறார்; ஆ ராசா, இதனை மேற்படி ஒலிப்பெருக்கி வைத்துச் சொல்லி ஓலமிடுவார் என்பது திண்ணம்.
பூங்குன்றன் என்றால் புஷ்பகிரி. ஆக, எப்படியிருக்கிறது பாருங்கள்?
‘தாசிமகன் புஷ்பகிரி’ எப்படிக் ‘கணியன் பூங்குன்றன்’ ஆகி வேளிர்களைக் கேளிர்களாக மாற்றினான் என்பது விளங்குகிறதா?
இல்லையா?
வெளங்கிடுண்டே! :-(
-0-0-0-0-0-
இனிமேல் யாராவது நம்மிடம், “யாதும் ஊரே…” என வந்தால், திராவிடர்களாகிய, இப்போது தமிழ்தேசியர்களாகிய நாம் சொல்லக் கூடுவது என்ன?
“கேளிராவது மயிராவது, எனக்குத் தெரியாது போடா!”
தமிழ் வெல்லும். கேளிர்கள் தோற்பார்கள்.
இது உறுதி.
—
September 23, 2022 at 14:20
தமிழர் மதம் ஆசீவகம்
உயிர்கள் தற்செயல் கோட்பாட்டின் படி உடல்களில் மாறி மாறி பிறக்கும்
அதாவது எனது பாட்டனாரின் அத்திம்பேரின் ஷட்டகரின் அம்மான்சேய் தான் நீங்களாகப் பிறந்திருகிறீர்கள்.
உங்கள் அத்தையின் ஓரகத்தியின் நாத்தனாரின் கணவரின் அண்ணன் தான் நானாக அவதரித்திருக்கிறேன்.
ஆக இப்படி உலகமக்கள் யாவரும் கேளிர்.
வேடிக்கை இல்லை.
கிட்டத்தட்ட இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தை ஒரு அறிஞர் சொல்லில் கேட்டிருக்கிறேன்.
September 23, 2022 at 14:40
மறுபிறப்பில் நம்பிக்கை இல்லாதவனை, இப்படி மறுஇறப்பு எழவெல்லாம் ஆக உந்திவிட்டீர்களே!
ஏற்கனவே நான் உங்கள் செல்ல தொப்பையார் (தொ.ப) பிரானின் மடையர்கள் வியாக்கியானமும் அழகர்மலை சார் அழகான ஆராய்ச்சியைப் படித்தும் இறந்துவிட்டிருந்தேன்…
இந்த அழகில் நீங்கள் எனக்கு உறவா? What the Waqf!! யார் அந்த ப்ளடி அறிங்கர்?
$ % # @ % #
ஆ!
ஏ! ஆரிய வந்தேறியே! கிட்டேவராதே போ பகையே!
.