∞.0

December 4, 2018

மன்னிப்பீர்களா? :-(

நீங்கள் மன்னிக்காவிட்டாலும் – 2.0 குறித்த என் 3.0, 4.0, 5.0 பதிவுகள் குறித்து தொடர்புள்ள/தொடர்பற்ற அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.

என் இமாலயத் தவற்றையும் தோல்வியையும் – துளிக்கூட வெட்கமேயில்லாமல் ஒப்புக் கொள்கிறேன்.

2.0தான் வழி.

2.0 என்பதுதான் சத்தியம்.

2.0 என்பதுவே ஜீவன்.

…என அன்றே சொன்னார் ஜீஸஸ். அவர் நாமம் வாழ்க. அவர் ராஜ்ஜியம் வருவதாக. பரலோகங்களில் இருக்கிற பரமபிதாவே, உன் அழைப்புக்கு நான் செவி உள்ளிட்ட அனைத்து உள்ளடங்கிய பாகங்களையும் சாய்த்து மேய்ப்பராகிய உங்கள் காலடியில் புரள்கிறேன். என்னைக் காப்பாற்றியருள்வீர்.

ஏனெனில்.

என்னுடைய பரிசுத்த ஆவி (= horse clean steam) 2.0 விமர்சனத்தை விமர்சித்து, ஜெயமோகன் அவர்கள் மீதான என் கீழ்மை (=bottom ink) வாய்ந்த பொறாமையைக் கண்டித்து என…

லட்சக்கணக்கில் சுமார் மூன்று அன்பர் கடிதங்கள் வந்திருக்கின்றன; கோடிக்கணக்கில் ஏகோபித்து சுமார் 12 வலைத்தளப் பார்வைகள். தேவையா?

ஒத்திசைவு கடையை வேர்ட்ப்ரெஸ் முதலாளிகளிடம் இருந்து ஏகபோக ஓஸீ குத்தகைக்கு எடுத்திருக்கிறேன் என்பதை அறிவீர்கள் என்னெருமை சகஏழரைகளே! ஆனால், அவர்களின் ஸர்வர்கள் (ஓட்டலில் உணவு பரிமாறுபவர்கள் என அறிக) அலைகடலென ஆர்பரித்துவரும் போக்குவரத்தாளர்களை மேலாண்மை செய்யமுடியாமல் திண்டாடிவிட்டனர் என்பதால் தளமே மடங்கிப் படுத்துவிட்டது வேறு…

பரிமாறுவதற்குத் தமிழ்சோறு செஞ்சோறு இருந்தாலும் பரிமாற ஆட்கள் இல்லை . எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஆகவே, சிலபல விஷயங்களை வேண்டாவெறுப்பாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு ஜெயமோகனிடம் பொறாமை இல்லை; எப்படியும், எந்த விதத்திலும் அவருடைய ஆகிருதி (ஹ்ம்ம், அவருடைய தொப்பையின் அளவைத் தவிர) என்னிடம் இல்லை. மிக முக்கியமாக – இதனை அடிக்கோடிட்டுக் குறித்துக்கொள்ளுங்கள் –  நான் எழுத்தாளன் அல்லன், ஒரு வெறும் வாசகன் மட்டுமே, அவ்வளவுதான். எப்படியும் – அவர் திரைப்படப் பணிகளில் ஈடுபடுவது குறித்து எனக்குப் பொச்சரிப்பு இல்லை. அவர் இதில் பணம் ஈட்டுவது குறித்து, எனக்குச் சர்வ நிச்சயமாக இளக்காரம் (=youthful spice) இல்லை. என்னிடம் எனக்கு வேண்டிய அளவு பணம் இருக்கிறது. தீர்ந்தபின் உழைத்துச் சம்பாதிக்கும் திறனும் ‘தில்’லும் இருக்கிறது.

ராமசாமி – யாரில்லை?

ஆகவே.

நிச்சயமாக – ஒரு தமிழ் அலக்கிய எழுத்தாளன் கஞ்சி மட்டுமே குடித்துப் கண்ணில் பஞ்சடைக்க தொப்பையில்லா பட்டினி உன்னத இலக்கியம் செய்து, இலவசமாக அனைவருக்கும் பரிமாறவேண்டும் எனச் சொல்லவே மாட்டேன். மாறாக – அவர் செய்வது சரி என்றுதான் சொல்வேன்.

சொகுசுவேலை பஜனை ஐடி குமாஸ்தாவாக உட்கார்ந்துகொண்டு அல்லது திருட்டுத் திராவிடனாக கொள்ளையடித்துக் கொண்டு – ஆனால், ஜெயமோகனும் அவர் குடும்பத்தினரும் மட்டும், இலக்கிய எழவில் ஈடுபட்டுள்ளதால், ஏழ்மையில் உழன்று சாகவேண்டும் என விரும்புபவனல்லன். மேலும் அவர் உழைத்து (விளைவுகள் எப்படிப்பட்டவைகளாக இருந்தாலும்) சம்பாதிக்கிறார். தமிழ்த் திரைநரகம் என்பது வீங்கிய மனப்பான்மை மிக்க மகத்தான அரைகுறைகள் உலாவரும் இடம். பேடிகளும் கறுப்புப்பணமும் அபரிமிதமாகப் புழங்கும் இடம்.

கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாத இந்த உதிரிக் கலாச்சாரச் சராசரிச் சூழலில், அதில் பணிசெய்யும் ஜெயமோகன் (எனக்குத் தெரிந்து) ஒருவரையும் ஏய்க்கவில்லை, எவருடைய கடைக்கண் பார்வைக்காகவும் (எனக்குத் தெரிந்து) ஏங்கவில்லை. அவர் முன்னின்று நடத்தும் அலக்கிய விஷயங்களில்கூட கணக்குவழக்குகள் சுத்தம். அவர் அறம்கிறம் என்றெல்லாம் எழுதுவதைப் பார்த்தால், அவர், குறைந்தபட்சம், தன்னுடைய வருமானவரியை ஒழுங்காகக் கட்டுபவராகத்தான் இருக்கவேண்டும்.

மேலும் – ஒரு திரைப்படத்தின் முழுப் பொறுப்பும் இயக்குநரைச் சார்ந்தது. பிறரைக் கூட-ஓடுபவர்கள் எனச் சொல்லலாம், அவ்வளவுதான்; ஆகவே பாவம், ஜெயமோகனைப் போய் 2.0 அற்புதத்துக்காக ஏகோபித்துப் பழி சொல்வது சரியில்லை. அதற்கு  ரசிகக்கூவானின் பங்களிப்புதான் அதிகம். அதைவிட — இப்படிப்பட்ட அரைகுறைகளை வளர்த்தெடுத்த திராவிட இயக்கம்தான் இந்த அசிங்கத்துக்கெல்லாம், தமிழனின் தலைகுனிவுக்கெல்லாம் முழுமுதற்காரணம்.

…என்னவோ எனக்கு மட்டும் திட்டித்தீர்க்கும் வியாதி இருப்பதுபோலவும், நான்தான் ஜெயமோகனின் எதிரி#1 போலவும் ஒரு சித்திரத்தை விரிக்கிறீர்கள். ஆனால் என் பவிஷ் எனக்குத் தெரியும். அதிக பட்சம் ஏழரைகள் மட்டும் படிக்கும் ஒருதளம், பல்லாயிரக்கணக்கானவர்களை படுவினோதமாகச் சொக்குப்பொடி போட்டுக் கவரும் ஒரு மனிதரின் ஆகிருதிக்கு ஈடாகுமா? எனக்குப் பிரமைகள் இல்லை. மேலும், தற்கொலைப் படைகளைக் கண்டால், ஜெயமோக ஜிஹாதிகளை நினைத்தால் கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கிறது.

மேலும் திட்டுவதுதான் என்வேலையென்றால் உங்களைப் போன்ற  போக்கற்ற நட்டநடுநிலை அறம்-வலியுறுத்தாளர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.

ஆனால் ஐயன்மீர், நான் (முழுவதும்) கயமை வாய்ந்தவன் கிடையாது. அவர் மேல் கல் விட்டெறிய நான் மேற்படிக்கு பரிசுத்தமானவன் அல்லன்.

ஆனாலும் – இப்படியெல்லாம் கண்டமேனிக்கும் – அடிப்படைத் திறனோ நடைமுறை அறிவோ இல்லாமல் தமக்குத் தொடர்பில்லாத துறைகளிலெல்லாம் டமால்டுமீல் என்று அட்ச்சிவுடுகிறாரே, சீரழிகிறாரே என ஒரு ஆதங்கம். அவ்வளவுதான். அதனால் கொஞ்சம் கிண்டல். சிலசமயம் ஆச்சரியம். சிலசமயம் பகீர். சிலசமயம் அந்தோ பரிதாபம். ஆனால் சராசரி/வழிபாட்டு வாசகன் கொடுக்கும் லாகிரியின்பம் ஒரு விதமான தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும்போல.

இழிசம்பாத்தியத்தில் ஈடுபடும் திருமாவளவன்களுக்கும் அரைகுறை கமலகாசன்களுக்கும் வக்காலத்து வாங்கும் சமயத்தில், ஜால்ராமுதல்வாதத்தில் தொழில்அறம் எங்கே போகிறது எனக் கேட்கலாம் – ஆனால் அவரும் நம் எல்லாரையும் போலத்தான் (கொஞ்சம்கூட உயர்த்தியோ தாழ்த்தியோ இல்லை!) என எனக்கும் நன்றாகவே தெரியும். ஆகவே நம்மில் இல்லாத ஒன்றை நாம் எப்படி அவரிடம் எதிர்பார்க்கக் கூடும்? நாமெல்லாரும் இரட்டைவேடதாரிகள் தாம் – ஆனால் இரண்டுக்கு மேல் கமலகாசனார் போல வேடம் போடும்போதுதான் இளித்துவிடுகிறோம்.

மேலும் – தொடர்ந்து பரவலாக, சரமாரியாக, எல்லாவற்றைப் பற்றியும் அமோகமாக எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் ‘அலக்கிய’ எழுத்தாளர்களில், ‘அறிவுஜீவி’களில் – அவரை மிஞ்சி வேறெவரும் இல்லை – எஸ்ரா, சாரு நிவேதிதா போன்ற மேதாவிக் கழிசடைகள் உட்பட.  இதை ஒப்புக்கொள்வதில் எனக்குக் கீழ்மை இல்லை.

…பின்னர் நெடுந்தொலைவில் பிற,  பரவலாள பறவை முனியப்பர்களும் கருத்துலக கண்ணாயிரங்களும். அவ்ளோதான். (அலுப்பின் காரணமாக நானும் தமிழ் எழவுகளைப் படிப்பதைக் குறைத்துக்கொண்டு குரைக்கிறேன் என்பதையும் இங்கு கோமணபூர்வமாகப் பதிவு செய்கிறேன்; ஆக, எனக்கு அறிமுகம் வாய்க்காத பலர் – ஜெயமோகனை விட நன்றாக எழுதக் கூடியவர்கள் இருக்கலாம், நான் அறியேன்!)

ஆக, ஜெயமோகன் நம் தமிழ்ச்சூழலின் இலுப்பைப்பூ சர்க்கரையோ? இருக்கலாம், பலசமயம் அப்படித் தோன்றுகிறது (ஏனெனில், பல மிகமிகப் பிரமாதமானவர்களைப் படிக்கும்/அசைபோடும் பாக்கியத்தைப் பெற்றவனே இந்த ராமசாமிதான்!).

…சில சமயங்களில் அப்படி நிலைமை படுமோசமாக கவலைக்கிடமாக இல்லை எனவும்…

ஏனெனில் அந்த ‘சில சமயங்களில்’ பிற ஒன்றிரண்டு மின்மினிப் பிரகாசங்களையும் பார்க்க நேர்கிறது. ஆனால் மின்மினிகள் மின்மாக்ஸிகள் ஆவார்களா?

…இலக்கியம் இருக்கட்டும், கழுதை.

ஒரு அரசியல்சரித்தனமும் இல்லாமல் பாஜக, ஹிந்துத்துவா, மோதி, பொருளாதாரம் பற்றியெல்லாம் விமர்சனம் வைத்துக் கரித்துக்கொட்டுகிறாரே (ஆகவேதான் உனக்குக் கோபம் அல்லவா?) என அங்கலாய்த்துக் கொள்கிறீர்கள்.

ஆனால் ஒரு பிரபலஸ்தராக, புகழ்ப்பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் இப்படித்தானே நடனமாடவேண்டும்? ஊடகப் பேய்களிடம் தொடர்ந்த மரியாதை பெறவேண்டுமானால் இரண்டு வழிகள் உள்ளன: 1) எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒன்றில் ஏடாகூடமாக ஈடுபடவேண்டும் 2) பேய்களுக்குக் கோரப்பற்களையும் பேய் வாசகன்களுக்கு நெகிழ்வுமானுட அறத்தையும் காட்டிக்கொண்டிருக்கவேண்டும் – அதாவது ஒருமாதிரி ஆல்டர்நேடிங் கரண்ட் ஸைன் கர்வ் போல!

கர்வ் ஸே கஹோ, ஹம் ஸைன் ஹை வகையறா. அரசியல் சரிகமபதனிச, வேறென்ன சொல்ல.

அதாவது நானும் லிபரல்தேன் எனக் காட்டிக்கொள்ளவேண்டும். இதில் நமக்கு என்ன பிரச்சினை, சொல்லுங்கள்? ஒரு முத்திரை குத்தப்பட்ட அறிவுஜீவிக்கு இருக்கும் இருப்பின்-பிரச்சினையை எப்படித்தான் அவஸ்தையோ விவஸ்தையோ அற்ற அறிவிலிகளாகிய நாம் அறிந்துகொள்ளக்கூடும்?

ஆதாயம் பெற ஆடுவதற்காக, பேய்களிடம் பொட்டி வாங்கவேண்டும் எனும் அவசியமில்லை – ஆனால் பலவிதங்களில் சமிக்ஞைகளை அனுப்ப வேண்டும். உரையாடல் தளங்களை நிரவிக் கொண்டே இருக்கவேண்டும்.ஹிந்துமதம் பற்றிப் ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என ஒரு பதிவு போட்டால், அடுத்த பதிவுகளில் ஹிந்துமதங்கள் சார்ந்த விஷயங்களை அல்லது நபர்களைக் கேலி செய்யவேண்டும். எக்காரணம் கொண்டும் ஒரே மாறா ஆதரிப்பு கூடாது. விலாங்குகள் அதியுன்னத விலங்குகள் அன்றோ? நாமும் அப்படித்தானே?

ஆகவே அவர் மோதி/ஹிந்துத்துவா எதிர்ப்புக் கருத்தை ஒரு தேவையுமற்று அபாண்டமாக வெளியிட்டால், அவற்றை அவருடைய நகைச்சுவை உணர்ச்சியின் வெளிப்பாடாக எடுத்துக்கொண்டு விடுவேன். இதனால் எனக்கு அவரிடம் பிரச்சினை ஒன்றும் இல்லை. தாம் ஒன்றும் அறியாத விஷயத்தைப் பற்றி முழநீளம் பேச/எழுத, ஏகோபித்து-உளற அவருக்கும் உரிமை உண்டு. அவர் விருப்பம், அவர் வாசகர்கள் பாக்கியம்.

மேலும் – என்னையே பாருங்கள், நீங்கள் எப்படியோ அற்புதமாகக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல மோதி அரசு, பாஜக, ஆர்எஸ்எஸ் என ஒருங்கிணைந்து எனக்கு ஒரு மாதாந்திரப் பொட்டி அளிப்பதால்தான் நான் இப்படி ஆணாதிக்க ஹிந்துத்துவ பார்ப்பனக் கொலைவெறிபிடித்து ஆடுகிறேன். அதற்காக என்னால் அந்த உண்மையை பகிரங்கமாக ஒத்துக்கொள்ளத்தான் முடியுமா?

நன்றி.

-0-0-0-

ஆகவே, 2.0 + ஜெயமோகன் + மதனகாமராஜ சைக்கிள்சாவி + ரஜினி + பட்சணராஜன் + அமி  ஜேக்ஸன் + ஸெல்ஃபோன் டவர் + ஸ்மார்ட்ஃபோன் + கதிரியக்கம் + ஆரா + அரோஹரா + குருவிகள் + குருவர்கள் + ஷங்கர்கிங்கர் + ஏஆர்ரஹ்மானின் கவர்ந்த (கவனிக்கவும்: ‘கவரும்’ அல்ல!) இசை – உள்ளிட்ட அனைவரையும்/அனைத்தையும் என்னை மன்னிக்கக் கோரி, நாத்தழுதழுக்க மன்றாடுகிறேன்.

கடிதம் எழுதிய மூவருக்கும் மேலதிகக் கோரிக்கை வைக்கிறேன்: என் விஷயத்தைப் பரிந்துரை செய்து நானும் ஜெயமோகனும் மறுபடியும் ராசியாக, ஆவன செய்யமுடியுமா? ப்ளீஸ்?

…இனிமேல், நான் இலக்கியம் அல்லாத எழவுகளைக் குறித்துமட்டுமே எழுதச் சத்தியம், mother top elephant, செய்யத் தயார்!

இன்னொரு பெரிய்ய்ய கோரிக்கை: தயவுசெய்து என்னை அந்த 2.0 அற்புதத்தைக் காணும்படிக்கு, விளையாட்டாகவேகூட வற்புறுத்தாதீர்கள். சரியா? (ஏற்கனவே ரத்த அழுத்தம் அமர்க்களமாக இருக்கிறது!)

நன்றி.

11 Responses to “∞.0”

 1. K.Muthuramakrishnan Says:

  அந்த மூவரின் கடிதம் உண்மையா? அதை வெளியிடத்த தயாரா? அல்லது சில ஊடகங்களில் வருவது போல நீங்களே வாசகர் கடிதம் எழுதுகிறீர்களா? நிழல் யுத்தம் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் ஏன் இந்த அளவுக்குத் தாழ்ந்து போக வேண்டும்? ஹி ஹி ஹி(சிரிப்பு)


  • ஐயா, நியாயமான கேள்வி.

   நானும் பலமுறை – பலப்பலமுறை, எனக்கு நானே வாசகர் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன். இது உண்மை. (ஆனால் அவற்றின் தொனியைப் பார்த்தாலே புரிந்துவிடும்; எடுத்துக்காட்டு: https://othisaivu.wordpress.com/2018/10/17/post-900/)

   ஆனால் இந்த மூன்று கடிதங்களும் உண்மை வெவ்வேறு ஆசாமிகளிடமிருந்து. பிரச்சினை என்னவென்றால் இவர்களில் சிலபலரிடம் இருந்து, கைநீட்டி பள்ளிக்காகவென நன்கொடை எழவைப் பெற்றுக்கொண்டு விட்டதால், அவர்கள் எனக்கு முழ நீளத்துக்குப் பின்னிப்பின்னி அறிவுரைகள் கொடுக்கிற தகுதி இருப்பதாக நினைக்கிறார்கள் – அவர்களுக்குத் தகுதியும் இருக்கலாம், எனக்கு அவர்களை இந்த ஒத்திசைவு எழவு மூலமாக மட்டுமே தெரியும், நேரில் பார்த்தது கூட இல்லை, அவர்களுக்கு ஜெயமோகன் மீது மிகைமதிப்பு. (ஹ்ம்ம், எனக்கும்தான்!) – ஆகவே, ஏன் வீண்சச்சரவு என ஒரு அபிப்ராயம் என நினைக்கிறேன். மேலும் அவர்களுக்குத் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது, இதுவும் நியாயமே.

   ஒரு மாதிரிக்கு – இன்று அலுத்துப் போய் சிலபல நண்பர்களுக்கு இதனை எழுதினேன்:
   —-
   https://www.jeyamohan.in/115544
   “நிர்மால்யம் என்றால் ஆடைகளற்ற, சூடாத என்று பொருள். தெய்வங்களை
   அதிகாலையில் வெறும்சிலையாகத் தரிசனம் செய்வது அது. ”

   நிர்மா சவுக்காரத்தால் வெளுக்கப்பட்ட ஆடை என எழுதாமல் விட்டாரே! (கை
   துறுதுறுவென நமைச்சல் கொடுக்கிறதே, என்ன செய்ய!) :-(

   இந்தவுளறலுக்கு அப்பாற்பட்டு – இந்தக் கட்டுரையில் ஏகப்பட்ட பிழைகள்.
   (நானும் ஒருகாலத்தில் பிலிம் ஸொஸைட்டி எழவையெல்லாம் நடத்தியிருக்கிறேன்)

   ஜெயமோகனை வறுத்தெடுப்பதை பலப்பல வாழ் நாட்களுக்குச் செய்யலாம்.

   ஆனால், அலுப்பாக இருக்கிறது இலுப்பையாரைப் பார்த்து. :-(

   அவர்களும் அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்றவர்கள் இதற்குப் பதிலளித்திருப்பதைச் சுட்டியிருக்கிறார்கள்… ஆனால் அவர்கள் பெயரை நான் வெளியிடத் தயங்குவேன்.

   பொதுவாக – நான் யார் கடிதத்தையும் அவர்கள் முன்னனுமதியில்லாமல் பதிப்பதில்லை – கடிதங்களும் அதிகம் வருவதில்லை (நல்லவேளை) என்பதும் உண்மை.

   மேலும் – நான் வேலைவெட்டியற்று வீட்டிலேயே ஆராய்ச்சி கீராய்ச்சி பாடத்திட்டம் என குப்பை கொட்டிக்கொண்டிருப்பதால் பலருடன் உரையாடல்களும் நரையாடல்களும் நடந்துகொண்டிருக்கின்றன, தட்டச்சையும் கொஞ்சம் வேகமாகச் செய்ய முடிவது கொஞ்சம் அனுகூலம் – அவற்றைக் கொஞ்சம் எடிட் செய்து பதிப்பிக்கிறேன்.

   ஆகவே என்னைச் சந்தேகிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதற்கு அப்பாற்பட்டு உங்களுக்குப் பிறிதொன்றையும் சொல்லப் போவது இல்லை.

   வாஷிங் பவுடர் நிர்மா
   ஆலூ பரோட்டா குர்மா.

   நன்றி.

   • K.Muthuramakrishnan Says:

    The chelas can see what is Nirmalya here. If I say this Aasan will feel that I had called him a fool.
    http://spokensanskrit.org/index.php?tran_input=nirmAlya&direct=se&script=hk&link=yes&mode=3


   • ஐயா, நீங்கள் தேவையற்ற இடங்களைச் சுட்டுகிறீர்கள். அகராதிக்கே அகராதி புகட்டும் அகராதி பிடித்தவர்கள் நாங்கள்.

    மேலும், ஆசானுக்கே அறிவைப் போதிக்கும் திமிர் உங்களிடம் கொஞ்சம் அதிகம். உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படவேண்டும் என்பதைத் தவிர பிறிதொரு சிந்தனை என்னிடம் இல்லை..

    சொல்லப்போனால் – நிர்மால்யா என்பதற்கு முக்கியமான திரைப்பட விளக்கங்கள் உள்ளன என்பதை சீடர்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.

    அது ஒரு திரைப்படம்: http://www.impawards.com/intl/india/2011/nirmalya.html

    ஆடையில்லாத பெண்பால் எனவும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். .

    குறிப்பு: நீங்கள் தாம் அந்த முத்துராமகிஷ்டனா அல்லது நானே உங்கள் பெயரில் பின்னூட்டம் இட்டுக்கொண்டு விட்டேனா என்பதைத் தயவுசெய்து தெளிவுபடுத்தி, உங்கள் ஒரிஜினல் பின்னூட்டத்தையும் பகிரவும். நன்றி.

   • Kannan Says:

    PT மாஸ்டர் பெருங்காய சாமியாகவே மாறிவிடுவார் போலிருக்கே!


 2. உங்கள் பரிதவிப்பிற்குப் பரிசாக நல்ல படம் ஒன்றைப் பரிந்துரைக்கிறேன். அல்சைமர் நோய் உள்ள பேராசிரியர் பற்றிய மராத்தி மொழிப் படம். பார்த்து மனச்சாந்தி அடையுங்கள். அது பற்றிய எனது அனுபவம் இதோ. (ஓசி விளம்பரம் என்றும் கூறலாம்) https://amaruvi.in/2018/05/27/asthu-movie-review/

 3. Sundar Says:

  அய்யா ,
  மோசம் போய்விட்டோம். !!!!

  இதயம் பலவீனமானவர்கள் ,
  கர்ப்பஸ்திரீகள்,
  18 வயதுக்கு கீழானவர்கள்
  — இதை படிக்க வேண்டாம்.

  மீறி படித்து அல்லலுற்றாள், அடியேன் பொறுப்பாள் அள்ள

  https://tamil.thehindu.com/tamilnadu/article25670571.ece


 4. நம்ம செல்ல எஸ்ராவுக்கு சாகித்ய அகடமி விருது வழங்கப்போறாங்க…!!!

 5. Kannan Says:

  செய்தியைப் பார்த்ததும் எஸ்ரா கடும் அதிர்ச்சி அடைந்ததாக இன்னொரு செய்தி உலா வருகிறது.

  :(


 6. […] ஆனால் சகஏழரையார்-ஏந்தல் முத்துராமகிருஷ்ணன் இதனை உடனடியாகத் துப்பறிந்து […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s