ஜெயமோகநாயனம்

October 17, 2018

மதிப்புக்குரிய ஆசிரியருக்கு,

இன்று கேள்விப்பட்ட செய்தி இது.

இதனுடன் அன்று அது பற்றி உங்கள் கருத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள முயன்றேன். ஆனால் முடியவில்லை.

குழப்பத்துடன்,

சோமனாதபுரம் சோமு

-0-0-0-0-0-0-

அன்புள்ள சோமனாதபுரம் சோமு,

இன்றுதான் நீங்கள் இதனைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் என்றோ அதனைக் கேள்விப்பட்டுவிட்டேன். என் அன்பு வாசகர்களுக்கு முன்னமேயே இவற்றைப் பற்றிச் சுயவிலக்கமில்லாமல் தன்னிலை படர்க்கை செய்வினை விளக்கங்களையெல்லாம் அள்ளித் தெளித்து விளக்குவிளக்கு என விளக்கியிருக்கிறேன்.

ஏன், திரித்துத் திரியிட்டு எண்ணைய் ஊற்றிக் கொளுத்தியே போட்டிருக்கிறேன். அதுவும் பலமுறை.

நான் படுபிஸி. இதற்கெல்லாம் எனக்கு நேரமே இல்லை. இருந்தாலும் மறுபடியும் மறுபடியும் எனக்கு இம்மாதிரிக் கேள்விகள் வருகின்றன. பலமுறை இவற்றுக்குப் பதிலளித்துப் பதிலளித்துப் பல்லாயிரக் கணக்கான பல்லிளிப்புப் பதிவுகளை இட்டிருக்கிறேன். சலிப்பாக இருக்கிறது.

ஆகவே, இந்தமுறையும் பதிலிளிக்கிறேன்.

இன்னொரு விஷயம்: என் தளமுகப்பில் உள்ள ‘இங்கே தேடு‘ பெட்டியில் ஒரு பெட்டிஷனைப் போட்டுத் தேடினால் உங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேறிவிடும் என்றாலும், மறுபடியும் இதனை விளக்குகிறேன். ஏனெனில் இப்போதுதான் இரண்டு லட்சம் பதிவுகளைத் தாண்டியிருக்கிறேன். என் இலக்கு பத்து லட்சம் – இதுதான் என் இலக்குயம்.

ஏனெனில் இலக்கில்லாத் தேடல் இலக்கியம் அன்றோ? ஆனால், உங்களுக்கு லக்கடித்து, விழைந்தது கிடைத்தால் லக்கியம் எனவும் இது விரியும்.

சரி.

முதலில், நாம் ‘இன்று இது‘ என்பதற்கும் ‘அன்று அது‘ என்பதற்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

ஒரே வரியில் இதனை எளிமையாக விளக்கவேண்டுமென்றால் – முன்னது இதியல், பின்னது அதியல். அவ்வளவுதான். சுருக்கமாக இவற்றை முதியல் பிதியல் எனத் தொடக்க நிலையில் ஒரு புரிதலுக்கு உள்ளாக்கலாம், உள்வாங்கிக்கொள்ளலாம்.

இந்த முற்போக்கு முதியலையும் பிற்போக்குப் பிதியலையும் நன்றாகக் கழுவி ஊற்றி, வால்களை நறுக்கி, துண்டுதுண்டாக வெட்டி – இரண்டையும் சரிசமமாகக் கலந்து உப்புசப்பைச் சேர்த்து அடுப்பில் ஏற்றினால் + தாளித்துக்கொட்டி, தேவைக்கு ஏற்ப மசாலா கலந்து அது ஒருமாதிரிக் கம்பிப் பதத்துக்கு வந்தவுடன் நீட்டிமுழக்கினால், அதுதான் அவியல் என அறியப்படும் என அறிவீராக.

மாறாக – இவற்றை முறையே – இன்றியல், அன்றியல் என்பவற்றை உள்ளடக்கியவையே எனும் அனுபூதித் துரிய நிலைகொண்டு உள்ளார்ந்த அறிதலுக்கு – அதாவது வெறும் அடிநிலைப் புரிதலுக்கு அப்பாற்பட்டு வந்தால், நம் ரசனையை மேம்படுத்திக்கொள்ளலாம். இதுதான் ரசனையியல்.

ஆனால் ரசமியல் என்பதுடன் இதனைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஏனெனில் பாதரசம் என்பது என் குரு என்னுடைய பாதங்களை மரியாதை நிமித்தம் அலம்பிவிட்டு அந்த நீரை ஜெயபக்தியுடன் அருந்தி, ஊக்கபோனஸாக அத்தண்ணீரைத் தன்மேல் தெளித்துக்கொண்டு தன்னைத் தானே விட்டுவிட்டு மோட்சப் பரகதி அடையும் நிலை.

நான் அவேதிக அத்வைத ஆன்மிக ஞானமரபைச் சார்ந்தவனானதலால் வேதியியல் படித்ததில்லை, இருந்தாலும் ஒரு எளிய, பாமர வகையில், ஒரு பொது மனிதனாக – இந்தப் பாதரசத்தை மெர்க்குரி என்றும் சொல்வார்கள் என அறிந்திருக்கிறேன். ஆனால் மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் இதன் மெர்க்குறியீடு என்பது வேறு – அது மெர்ஸல் எனும் பின் நவீனத்தத்துப் பித்துவத் தமிழ் வழமையுடன் குழைந்தவொன்று.

இதிலிருந்தே தெரியும், பாலகுமாரன் எழுதிய ‘மெர்க்குரிப் பூக்கள்’ எனும் நகைக்கத் தக்க நாவலுக்கு இலக்கணத்தையே நான்தான் கொடுத்திருக்கிறேன் என்று. ஆனால் பலருக்கும் என் ஞானத்தின் அளவு ஞாலத்திலும் மாளப் பெரிதென்பது சரியாகப் புரிபடவில்லை. என்னைச் சரியாகப் புரிந்துகொண்டவர் என் குருதான். பாவம், அவர். இருந்தாலும் அவருக்கு அருள்பாலிப்பதென்பதை நான் தவறவிட்டதேயில்லை. ஆசீவகனாகிய என் ஆசிகள், அவருக்கு என்றும் உண்டு.

நிற்க, குழம்பியல் என்பது ரசவியலுடன் உடனடியாகத் தொடர்புள்ள துறை என்றாலும், அதற்கு ஏகபோகக் குத்தகைதாரர் ‘வொலக நாயகன்’ கமலகாசன் என்பதால், உடனடியாகப் போர்க்கால ரீதியில் ஙப்போல் வளை.

-0-0-0-0-0-0-

இலக்கியத்தின் மூலமாகச் சாதிக்கமுடியாத விஷயமேயில்லை – ஆனால் இதனை நான் மட்டும்தான் அறிவேன் என்பதை என் வாசகர்கள் அறிவார்கள் என்பதை நானறிவேன்.

உங்களுடைய முக்கியமான கேள்வியை, மேம்போக்காக இது-அது எனச் சுருக்குவது அறமல்ல என்பது என் ஞானமரபாக இருந்தாலும், அதனைச் சுருக்கி நெடிந்தநெடிலாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

இந்த முயற்சிக்கல் என்பதே சமூகத்தின் ஒரு ஆழ்மனப் படிமம்தான். தொல்லியல் மூலமாகத் தொந்தரவில்லாமல் இதனை அணுகினால், இது ஒரு தொன்மம் எனவுமேகூட கார்ல் யூங் ஆர்க்கிடைப் என ஒருமாதிரி நனவிலி நிலையில் புரிந்துகொள்ளலாம்…

(கருத்துப்படம்: முயற்சிக்கல்: வேகப்போட்டியில் ஈடுபட்டுள்ள ஒரு முயலின் சிக்கல் –  நன்னூல் சூத்திரத்தில் இதுபற்றி விரிவான குறிப்புகள் இருக்கின்றன என நான் சுட்டிக்காட்டியதை ஆமோதித்து, ரோஜர் பென்ரோஸ் எனக்கு எழுதியிருக்கிறார்;
மேலும் – முயல்வது முயல் என்றாலும், உள்ளம் என்பது ஆமை என்பதன் முனைப்பு, முயலின் நுனிப்பைவிட ஏகத்துக்கும் அதிகமென அறிந்துகொள்ளலாம். ஆமைன்.)

கூட்டுக் கனவிலி நிலையும் சாதாரணச் சாம்பார் நனவிலி நிலையும் கலந்த எண்ணப்பரப்பில், கொஞ்சம் ஏமாந்தாலும் வழுக்கி விழுந்துவிடுவோம். ஏனெனில் எண்ணங்களை உரசிக்கொள்ளாமல் ஒன்றுடன் ஒன்று ஒத்தியைபு கொள்ளவைக்க எண்ணைய் தேவை, என எண்ணித்துணிக. கருமமே கண்ணாயிரமாக இதனைச் செய்தால், சுபிட்சம் மிக அருகிலேயே, எட்டி விடும் தூரத்தில்தான்.

எடுத்துக்காட்டாக – இந்தக் கோட்பாட்டின் உச்சிநுனியின் மீது நின்று எம்பிக்குதித்து உச்சங்களை, மிச்சங்களும் எச்சங்களும் இல்லாமல் நுணுக்கமாக அடைந்தால் நம் புரிதல் நுண்ணுணர்வுடன் நுட்பமாக விரிவடையும்.

-0-0–0-0-

இதுவுமது. அதுவுமிது. இவை, இந்த அதிதுக்கள் கடக்கப்படவேண்டியவை. அது இதுவல்ல. அதேசமயம் அதுவும் அடிப்படையில் இதுதான் என்பதுதான் உயர் நிலை அத்வைதம்.

இதை ஞானச்சுருக்கம் என ஞானச்செருக்குடன் கருதுவது கீழ்மை நோக்கிய சறுக்கல் என மஜாபாரதத்தின் என் சருக்கத்தில் விலாவாரியாக விவரித்திருக்கிறேன். ஆகவே எனக்குச் செருக்கில்லை என்பதால் நற்செருக்கினார்க்கினியராக என்னை என் குரு கருதிக்கொள்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டியிருக்கிறது என்பதற்கு அப்பாற்பட்டுப் பிறிதொன்றும் இல்லை என இந்தப் பத்தியை இந்த இடத்தில் முடித்து…

அடுத்த பத்தியில்…ஆகவே ஒட்டுமொத்தமாகவே நைச்சியம் நசுங்கிவிட்டது, அறிவியக்கம் சுருங்கிவிட்டது தத்துவம் பித்துவமாகிவிட்டது என்கிறபடி எழுத ஆரம்பித்துத் தொடர்கிறேன். ஏனெனில் சுதந்திரம் என்பது ஆகஸ்டுத் திங்கள் 15ஆம் நாளன்று வருடாவருடம் கொண்டாடுவதற்கு அப்பாற்பட்டு அனைத்து இலக்கியஅறிவியக்கங்களையும் ஒன்றாக இணைக்கும் சுதந்திரத்தையும் உள்ளடக்கிக் கொண்டது.

இப்படி நம் பண்பாட்டில் தொடர்ந்து போற்றப்படும் அடிப்படை அற விழுமியமான அறிவிலி நிலையை அடைய நனவிலிக் கனவிலி நிலைகளில் ஒழுக்கமற்றவைகளுக்கு அப்பாற்பட்ட ஒழுக்கத்துடன் – அனைத்துக்கலைகளும் இலக்கியம் வழியாகவே நிந்தனைகளுடன் உரையாடமுடிந்தால் அது பேரெழுச்சி கொடுக்கும்.

இந்தப் பத்தியில் – மேற்கண்டது போலவே தொடர்ந்தால் – அந்தப் பேரெழுச்சியில் பேரொளி நிகழ்வெள்ளமே சிந்தனைப் பேரொழுக்காக மாறி – சிந்தனையே நிந்தனை என ரசவாதம் கொண்டு – அந்த நிந்தனை கலையாகவும், கலந்தவை வலைகளாகவும், வளைகளில் எலிகளாகவும், எலிகள் ஏலியன்களாகவும், அந்தப் பாவப்பட்ட ஏலியன்கள் சித்தர்களாகச் சித்திரிக்கப்பட்டுச் சித்தியடைந்தாலும், என்னுடைய சித்தி சித்தப்பாவுடன் இந்தப் பத்தியிலிருந்து தப்பித்துப்போகப் பார்த்தாலும் — கலை என்பது நிந்தனையாகவும் நிந்தனை கருத்தாகவும் மாறுவதற்கான வாய்ப்புப் பாதை என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தோ சிந்தனையோ இல்லை.

ஆனாலும் அந்த வாய்ப்புகள் தமிழ்ச்சூழலில் பயன்படுத்தப்படவே இல்லை. இப்படியே எழுதித் தள்ளுவதால்தான், நம் தமிழகத்தில் இலக்கியத்தை ஒரு மக்களியக்கமாக ஆகமுடியாமலாக்கும் கூறு போடல்கள் தொடர்ந்து அரங்கேற்றப் படுகின்றன.

-0-0-0-0-0-

மேலும் அது/இது எனும் இருமைகளுக்கு அப்பாற்பட்டு வெளியே என்வீட்டின் எதிரில் இருக்கும் வயக்காட்டில் மேய்ந்துகொண்டிருக்கும் எருமைகளின் மீது கவனம் செலுத்துகிறேன்.

ஏனென்றால் – உடனடியாக நமக்குப் புலப்படுவது என்பது – அது என்பதற்கும் இது என்பதற்கும் நடுவில், அகரவரிசைத்தனமாக ஆது இருக்கவேண்டுமல்லவா?

இப்படி மாற்றிச் சிந்தித்தால் அது ஆது இது ஈது உது ஊது எது ஏது ஐது ஒது ஓது ஔது ஃது என நம் உயிர்ஞானம் அமோகமாக விரியும்.

மெய்ஞான மரபின் படி – இப்படி யோசித்தால், க்து ச்து ஞ்து … … எனத் தொடரலாம்.

இந்த இரண்டு மரபுகளையும் இணைத்து உயிர்மெய்ஞான மரபொன்றைப் புதிதாக உருவாக்கலாம்.

ஆகவே என்னுடைய சொந்த உயிர்மெய்ஞான மரபின்படி – இவற்றில் நான் மேலதிகமாகக் கண்டுபிடித்துள்ள தமிழ் வார்த்தைகளைப் பட்டியலிட்டு அதற்கு புதிதான தத்துவார்த்தமான, விதம்விதமான விளக்கங்களை அளிக்கிறேன்.

ஆது: வாட்ஸ்அப் ஃபோன்காலில், இந்தப் பக்கம் ‘ஆவாது‘ என்று சொன்னால், அது அந்தப் பக்கம் கேட்கப்படும் விதம்.

உது: அவசரம் அவசரமாகச் சாப்பிட ஆரம்பித்து முடிப்பது – ‘உண்பது‘ என்பதன் மரூவு.

ஐது: ஜலதோஷத்தால் பீடிக்கப்பட்டவர், ‘ஐந்து‘ எனச் சொல்லும் முறை.

-0-0-0-0-

இப்போது உங்களுக்கு அது, இது பற்றியெல்லாம் நன்றாகவே புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அள்ளியள்ளித் தொடர்ஞானம் வழங்க என்னிடம் வேண்டுமளவு பாடுபொருட்கள் இருக்கின்றன. நீங்கள் எப்படிப்பட்ட கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம். தொடர்ந்து இம்முறையிலேயே பதில்களை எழுதிப் போட்டுத் தள்ளி விடுவேன்.

தொடர்ந்து கேள்விகளைக் கேட்கவும்.

நன்றி.

__​​ரா.

*டிங்*

நெக்ஸ்ட்.

 


 

13 Responses to “ஜெயமோகநாயனம்”

 1. nparamasivam1951 Says:

  மரியாதைக்குரிய ஆசிரியருக்கு,
  ஒரு குழப்பமான பதிவு படித்து, அந்த குழப்பவியலில் நான் மயக்கவியல் அடைந்து, இப்போது தலைசுற்றவியலில் இருப்பதால், விளக்கிட வேண்டுமாய் வேண்டும்
  குழம்பிய கோவிந்து.


 2. நாயனம் என்றால் நாகசுரம் தானே? ஜெயமோகநாயனம் காருக்குறிச்சி அருணாசலம் வாசிப்பு போல் மயக்குது!

 3. Kannan Says:

  ஆஹா, அபாரம்.

  இதையே கட்டண உரையாக ஒரு முழுவதும் சாம்பிராணி புகை போடப்பட்ட அரங்கில் நடத்தினால் என்ன ?

  இந்த இலவச ஞானப்பயல்களைத்தடுக்க வாசலில் இரண்டு பவுன்ஸர்களை நிறுத்திவிடலாம் (உம்) ஆண்டர்ஸன், பிரட் லீ.

  :)

 4. SB Says:

  Sir
  Thanks for the good laugh . There’s no subject under The Sun which JMo cannot leave untouched and now ‘unmasking Siddha’s padalgal’ came into the fore ..He will not let you stop .
  As you talked about BalaKumarasiddhar, Mr.Mamallan published a note that He kicked his bucket before Metoo started ..Else he would be figuring in there prominently. Yes, not good to talk insensitive about the departed but what to do .
  Having said Mr.JMo’s gaining prominence as dialogue writer of Endiran 2/ Sarkar does exhibit his prominence ( bane for Tamil Cinema??) and even the much loved S.RA got films like Sandakhozi 2 .
  It is high time that you join this list of dialogue writers as you are far ahead (not joking and damn serious) in your prolific writing.
  Mr.Kannan (publisher) may have been funny when somebody suggested about compiling your writings but the fact of the matter is you are gifted with your adeptness in making anybody laugh out really LOUD .Thank you.

  Regards
  SB

 5. SB Says:

  Having said ..having said so .3rd para correction.


 6. இஞ்சி, சுக்கு இரண்டையும் தட்டிப் போட்டு, கொஞ்சம் விளக்கெண்ணை சேர்த்துக் காய்ச்சி, தலையில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின்னர் அதே தலையைக் கொண்டு சுவற்றில் நான்கு முறை ‘சுவர் பிரும்மாஸ்மி’ என்று முட்டிக்கொண்டால் இந்தப் பதிவு தெளிவாகப் புரியுமா என்று அடுத்த பதிவில் தெரியப்படுத்தவும். இப்படிக்கு – அசட்டு அம்மாஞ்சி ஆமருவி.

 7. duraiswamy murali Says:

  Hi ram
  we eagerly await your next post on majabharatham with vizhumiyam and akhibeena urundai and pukai


  • Yov!

   Will write some serious stuff (am caught in some III party MeToo nonsense currently) and then, may be.

   In the meantime, please do vennmurasu paaraayanam, thrice a day, before meals for two days and then instead of meals for three days.

   Meet me after five days, if you are still alive.

   *ding*

   NEXT, please!

   • Duraiswamy murali Says:

    Hi
    I cannot take that risk since I have to tie some loose ends.but
    Oonguppranai I am getting younger after reciting your majabharatam thrice a day

 8. Sambasivam G Says:

  ஏய்யா,.. இன்னா நெனசிங்கீர நீனு.. ஒரு வேலையும் செய்யாம ஒன் பதிவ பட்சிங்கீரன்னு சம்சாரம் ஒரே கூவுதுயா.. என்னால இத பட்சி சிற்சி சிற்சி தலையெல்லாம் புண்ணா போவுதுய்யா….


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s