அன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா?

October 23, 2018

அன்புள்ள அன்டார்ட்டிகா அனுபவ்,

பனிமரக்காட்டு வெள்ளையானைத் திரள்களில் பின்தொடரும் பனியின் சனியாகத் திரிந்துகொண்டிருக்கும் ஒரு போக்கற்ற நாடோடித் தகவல்தொழில்நுட்ப குமாஸ்தாவான உங்களிடம், எனக்கு அறிவுரை கொடுக்குமளவுக்கு பெரிதாக என்ன இருக்கப் போகிறது என எனக்கு உடனடியாகக் கோபம் வந்தாலும், நீங்கள் பயபக்தியுடன் கேட்கிறீர்கள்…

+ அன்டார்ட்டிகா போகவேண்டும் என எனக்கு நெடுநாட்களாகவே ஆவல். அநேகமாக என்னுடைய அடுத்த திரைப்படத்துக்கான (இது அரேபியப் பாலைவனத்தில் நடக்கும் கதை) முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்களுக்கு அங்கே வரலாம். அங்கு ரூம்பு போட்டு யோசிப்பது வழமையா அல்லது க்ளூ அந்தகோந்து என ஏதாவது சகாயவாடகையில் பிசுக்கிலாமல் கிடைக்குமா?

க்ரில் வகை உயிரிகளை க்ரில் முறையில் வாட்டியெடுத்து ஊன்குளிர உண்பது நடைமுறையில் இருக்கிறதா?

ஒரு பின்நவீனத்துவ முயற்சியாக – அன்டார்ட்டிகாவிலேயே அரேபியப் பாலைவன செட் ஒன்றைப் போட்டு, கதாநாயகனுக்கு என்ட்ரி ஸீன் கொடுக்கலாமா என்று ஒரு யோசனை. ஆனால் அங்கு மூத்திரம் போக ஜிப்பரைத் திறந்தால், சிறுநீருடன் சேர்ந்து பலானபாகமும் உடனடியாக உள்ளுறைந்து விரிசலுற்ற கண்ணாடி போலத் தெறித்துவிடுமாமே, உண்மையா?

இல்லையென்றால், க்ரிட்டிகல் தியரிக் கட்டுடைப்பு அணுகுமுறையாக, நாட்டார் வழக்காற்றியல் பாணியில் – அரேபியப் பாலைவனத்தில் ஒரு அண்டார்ட்டிகா பனிமலை செட் போட்டு பனிவிழும் பாலைவனம், உன் பாவை மறுமணம்‘ என கறுப்பு புர்க்கா போட்டுக்கொண்ட ஒட்டகங்களின் மீது நின்று ஆடியசைந்துகொண்டு…

…கதாநாயகன் உச்ச ஸ்தாயியில் கழுத்து நரம்பு புடைக்கப் பாடுவதாக சிலபல ஸீன்களை எடுக்கலாமோ என்றால் – அங்கு ஜிப்பரைத் திறந்தால், கொதித்து வெடிக்கும் சிறுநீரில், நுனியிலிருந்து ஆரம்பித்து ஒட்டுமொத்தமாக என் உடல்முழுக்க வெந்தே போய்விடுவேனோ என்னவோ?

குழப்பமாகவே இருக்கிறது. ஜிப்பர் பிரச்சினைகளுக்கு ஜிப்மரில் அறநெறி ஒழுக்க லேகியம் தருவார்களா? பாண்டிச்சேரி அன்பர்களை விட்டு விசாரிக்கச் சொல்லவேண்டும்.

திரைக்கதைக்கான மூலக்கதையின் கரு, கலைப்பு, மறுபடியும் கருத்தரிப்பு, வளைகாப்பு, சீமந்தம், பிறப்பு எல்லாம் தயார். கடந்த பலவருடங்களாகவே விதம்விதமாகப் பிறமொழித் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்வேறு. ஔவையார் பிராட்டி கேட்டதைப் போல – ‘சுட்ட படம் வேண்டுமா, சுடாத படம் வேண்டுமா‘ எனக் கேட்கக்கூட நேரமில்லாமல் சுடச்சுடச் சுடுவதுதான், தமிழச் சமுதாயத்துக்கு, எம் தமிழ்த் திரைப்படச் சமூகம் சுட்டுக்கொடுத்த சுடர்க்கொடை.

மிச்சமிருக்கும் வேலை ஒன்றுதான்.

அதாவது – தலைமுடி நிறைய இருக்கும் தயாரிப்பாளருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். அடுத்தவருடம் முகூர்த்தம் பார்த்து, அவருக்கான விசேஷ மொட்டையடிப்புக்குக் கூட திருப்பதியில் பதிவு செய்துவிட்டோம். ஒருவருடத்துக்கும் முன்பே இப்படிப் பதிவு செய்தால் ஸ்பெஷல் தரிசனம் இலவசமாமே? திருப்பதி வாசகர்களை அணுகவேண்டும்.

சரி. நேரடியாக உங்கள் கேள்விகளுக்கு வருகிறேன்.

பொதுவாகவே இவ்வகையான கேள்விகளை, நான் சொந்த அனுபவத்திலிருந்துதான் – அதுவும் ஒரு பாமர, பொதுஜன ரீதியாகத்தான் – குறிப்பாக, சமூகத்தின் ஆன்மாவாகத்தான் அணுக்கமாக அணுகி நுண்ணுணர்வுடன் நுணுக்கமாக நுனிவரை நுழைந்து நுட்பமாக நுங்கெடுப்பேன் – என்பது என் நெடு நாள் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதே சமயம், எனக்குத் தெரியாத விஷயத்தை, ‘எனக்குத் தெரியாது’ எனப் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்ளவேண்டிய அவசியமேயில்லை என்பதையும் என் தளத்தைத் தொடர்ந்து வாசித்துவரும் அன்பர்கள் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஏனெனில் – நான் அரசியல்சிந்தனையாளனோ செயல்பாட்டாளனோ அல்லன் என்பதை ஒப்புக்கொள்வது மட்டுமல்ல; என் பார்வைகள், ஒரு பொதுமனித மனம் சார்ந்தவை, எனக்கு ஒரு ரோமமும் தெரியாது என மிகப்பணிவுடன் எழுதிவிட்டும்கூட –  அளவிலாத் தன்னடக்கம், புலனடக்கத்துடன் சாட்சாத் அதே ரோமம் பற்றியும், ஏன், ஊக்கபோனஸாக க்ரேக்கம் பற்றியுமேகூடக் கூசாமல் 100, 000, 000 வரிகளை என்னால் தொழில்முறையில் உற்பத்தித் தட்டச்சு செய்து அட்ச்சிவுடும் புஜபல பராக்கிரமும், கைவிரல்வலியும் இருக்கிறது என்பதை அயோடெக்ஸ் தடவிக்கொண்டே உணர்கிறேன்.

எனது உளப்பதிவுகளானவை – என் அகவிழிக்கும் புறவிழிக்கும் இடையே விழித்துக்கொண்டு இருக்கும் தொடர் நிகழ்வான புணர்ச்சியின்வழி சாத்தியக்கூறான அகபுற பராத்பர ஞானம் என்பது, பெரும்மரபை நீட்சியுடன் உணர்ந்திருக்கிறது என்பதை அனாதிகாலம் தொட்டுச் சொல்லிவந்திருக்கிறேன்.

சமயலறையில் துருதுருவென்று அலைந்து துருப்பிடித்த தேங்காய்த் துருவியைக்கொண்டு செரட்டையைத் துரிதகதியில் துருவிக்கொடுக்கும்போதும் ஜாக்ருதியாக இருந்தால் ஸ்வப்பன நிலையைத் தாண்டி துரிய நிலைக்கு துரியோதனனாலேயே செல்லக்கூடும் என்பதை நான் எப்போதோ வெண்முரசில் எழுதியிருப்பதை என்னைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அறியாததல்ல.

முமுட்சுகளுக்கே முழுமூச்சுடன் முட்டுக்கட்டைகளை வைத்த யுயுத்சு அப்படித்தான் தன் மண்டையால் சண்டை போட்டு தன் இடக்கையால் நீண்ட நெடுநிலத்தை அறைந்து, வலக்கையால் உலக்கையை இடித்து, இடியிடி எனச் சிரித்து ஆங்காரத்துடனும் ஓங்காரத்துடனும் “ஆச்சி சாம்பார்ப்பொடிய யூஸ் பண்ணுங்கடா, இட்ச்ச புளீங்களா!” என உறைக்க உரக்கச் சொன்னான் என்பதையும் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை.

…ஆனால், கொஞ்சம் காரம் அதிகமானால் அட்ஜஸ்ட் செய்துகொண்டு திசைதேர்வெள்ளத்தைக் குடிக்கவும், கேட்டோ?

-0-0-0-0-0-

சரி. நீங்கள் கேட்டிருக்கும் இரண்டு கேள்விகளை – ஆறு வகைகளில் அலசி, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஞானத்தேடல்களாகப் புரிந்துகொள்கிறேன்.

  1. என்னிடமிருந்து நானே அறிவுரை பெற்றுக்கொள்வது எனக்குச் சிறந்ததா?
  2. என்னிடமிருந்து அறிவுரை பெற்றுக்கொள்வது உங்களுக்குச் சிறந்ததா?
  3. என்னிடமிருந்து நீங்கள் அறிவுரை பெற்றுக்கொள்வது எனக்குச் சிறந்ததா?
  4. உங்களிடமிருந்து நீங்களே அறிவுரை பெற்றுக்கொள்வது உங்களுக்குச் சிறந்ததா?
  5. உங்களிடமிருந்து நான் அறிவுரை பெற்றுக்கொள்வது எனக்குச் சிறந்ததா?
  6. உங்களிடமிருந்து நான் அறிவுரை பெற்றுக்கொள்வது உங்களுக்குச் சிறந்ததா?

பொதுவாக எனக்கு அறிவுரை கொடுத்துத்தான் பழக்கம்; என் குருவையுமே கூட இதனால்தான் குருவாக இருக்க அனுமதித்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல.

சீடன் தயாரானால், குரு உடனே தோன்றுவான்‘ எனும் ஜென் வரி என்பது என் விஷயத்தில் மிகச் சரி. நான் என் குருவை, குருவாக வைத்துக்கொள்ள ரெடியாக இருந்தேன். பின், பலத்த போட்டிகளுக்கிடையில் (நான்கு சுற்றுகளுக்குப் பிறகு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!!) என் குருவைத் தேர்ந்தெடுத்தேன்.

வெள்ளியங்கிரியிலிருந்து மோட்டார்பைக் ஓட்டிக்கொண்டுவந்து என்னை நேரடியாகப் பார்த்து, அறமில்லாமல் அழுத்தம்கொடுத்த ஜக்கி வாசுதேவுக்கு ஆறுதல் பரிசு – அவரை ஈஷாவிலேயே ஈஷிக்கொண்டிருக்கப் பணித்திருக்கிறேன்.

ஏனெனில் – அசத்தில் சத்குரு ஈடுபட்டால் மஹத்தில் தன்மாத்திரைகள் தன்னில்தானே க்ரோஸின் உண்டு, துல்லிய மாத்திரை நேரத்தில், மஜாபாரத சல்லியன் பார்க்காதபோது சல்லியடித்துக்கொண்டே கைவல்ய நிலையை சல்லீஸாக அடைந்துவிடும் என்பதை அவருக்கு உணர்த்தவேண்டிய கடமை எனக்கிருக்கிறது.

…என் தாள் பணிந்து என் குருவாக இருக்க ஒரு வாய்ப்புக் கேட்டு (“இனிய ஜெயம், ஒரு சான்ஸ், ஒரேயொரு சான்ஸ் கொடுங்கள் – உங்களுக்கு குருவாக நான் செய்யும் பணிவிடைகளையும் உங்களிடமிருந்து நான் ஞானவைராக்கியத்தைக் கற்றுக்கொள்ளும் பாங்கினையும் பார்த்தால் நீங்கள் அசந்து போய்விடுவீர்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்; + விஷ்ணுபுரம் அமைப்புக்கு நல்கை வழங்கவும் தயார்!” ) பல குருக்கள் தொடர்பு கொண்டார்கள் – ஆனால், நான் என் கடைக்கண் பார்வையைக் கூட அவர்கள் பக்கம் வீசவில்லை, குருவருள் பாலிப்பதையே விடுங்கள்!

இப்படி முட்டிமோதி என் வாசல்கேட்டில் தொங்கினால் என்னத்துக்காகும், சொல்லுங்கள்? கேட்டுக்குக் கேடு வந்து வீழ்ந்துவிடாதா எனக் கேட்பாரேயில்லையா? ‘கேட்டில் விழுச்செல்வம்‘ என வள்ளுவன் சொன்னதை இப்படியா பாடபேதம் செய்வார்கள், பாவிகள்? ஆகவே, பிறரைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் பலருக்கு என்மேல் வருத்தம் எனத் தெரியும். ஆனால் எனக்குக் குருவாக இருக்க, அடிப்படைத் தகுதிகள் வேண்டாமா? ஏனிப்படி – அடிப்படைஅறமும் பணிவுமில்லாமல் இருக்கிறார்கள் இந்தக் குருமார்கள்?

குருபூர்ணிமா அன்று என்னால் குருமா பிரசாதம் அளிக்கப்பட, சாதாரண குருக்களுக்கெல்லாம் கைகூடுமா? எதற்குமே புரோட்டாகோல் எனவொன்று உண்டே!

எனக்கு குருவாக முடியாத ஒருவர், ஏமாற்றம் தாங்காமல், அவமானப்பட்டுத் தற்கொலையே செய்துகொண்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மனோபலமற்ற இவர்களெல்லாம் எப்படித்தான் குருவாகத் தம்மை வரித்துக்கொள்கிறார்களோ!

இந்த அழகில், இந்த ஒத்திசைவு ராமசாமி அரைகுறை – இந்தச் சாமியாரின் வாலைப் பிடித்துகொண்டு குதிக்கிறது. கெரகம். தவளைநடை ராமசாமியின் தகுதிக்கேற்ப ஒரு அரைகுறைக் கோழைகுரு. இனிமேல் இதனைப் பற்றி நான் பேசப் போவதில்லை. நான் இயல்பாகவே பண்பும் கருணையும் தயாளகுணமும் பொறுப்புணர்வும் மிக்கவன் அன்றோ?

இப்படி அறிவுரையார்க்கு அறிவுரையாராக அறிவுயரத்தில் நான் அதிதீவிரமாக இருக்கும்போது, நீங்கள் எனக்கு அறிவுரை கொடுக்கட்டா எனக் கேட்கிறீர்கள். சரிதான்.

ஆசானின் வாய்க்கும் ஆசனவாய்க்கும் வித்தியாசம் தெரியாத அரைகுறை வாசகர்களுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுவதைப் போன்ற நரகமொன்று இருக்கிறதே! இதை விடவும் மோசமான, படுகேவலமாக, கொடுமையான விஷயம் இருக்குமா என்றால் – அது எஸ்ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா தளங்களைத் தொடர்ந்து படிப்பதுதான்…

-0-0-0-0-0-

அன்டார்ட்டிகா அனுபவ், என்ன ஆச்சரியம்! :-)

இன்னொரு வாசகர், எனக்கு வெகு வசதியாக, உங்கள் கேள்விகளைக் குறித்த ஒரு ஆராய்ச்சி ஆவணத்திற்கான சுட்டியை அனுப்பி அதன் மீதான என் கருத்தைக் கேட்டிருக்கிறார். :-) B-)

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்த ஆராய்ச்சியைப் பற்றி இன்று கேள்விப்பட்டேன். பிபிஸிக்கும் த-மண்டு தினசரிக்கும் முன்பாகவே நீங்கள் இந்த மனோதத்துவ ஆராய்ச்சியைக் குறித்துக் கருத்துகளை வைப்பீர்கள் எனத் தெரியும்.

இருந்தாலும், ஏதோ பேராசை. இதுகுறித்து உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

http://journals.sagepub.com/doi/abs/10.1177/0956797618795472

மேலும் கார்ல் யூங் (இவர் சைனாக்காரர் தானே?), ஸிக்மண்டு பிராய்ட் போன்றவர்கள் பற்றியும் கொஞ்சம் நற்செய்திகள் கொடுக்கமுடியுமா?

பிராய்ட் என்பவருக்கு பிராவுடன் ஏதாவது தொடர்பா? அல்லது அவர் ஏதாவது பிராட் செய்யும் பிராமணரா? ஆனால் இதுவரை, மணமுள்ள மார்க்கச்சைகளை தமிழ்ப்பெண் குடிகள் அணிந்ததுபோல, நீங்கள் தமிழக வரலாற்றை எழுதவே இல்லையே! குறுகுறுப்பாக இருக்கிறது.

ஸிக்மண்டு என்பவரை – ஸிக் + மண்டு எனப் பதம்பிரித்து அணுகினால் – அவர், உண்மையாகவே நோய்வாய்ப்பட்ட ஒரு முட்டாள் என மனோதத்துவவியல் ரீதியாக அறிதல்கூடுமா? இவற்றுக்குத் தெளிதேர் வெள்ளமாக, விவரமாக பதிலளிக்கமுடியுமா?

நன்றி,

என்றும் உங்கள் வாசகன்,

சேக்காளிபுரம் சேஷய்யன்.

-0-0-0-0-0-

அன்புள்ள சேக்காளிபுரம் சேஷய்யன், அன்டார்ட்டிகா அனுபவ்,

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படித்தான் என் கருத்துகள் ஒவ்வொன்றாக, மேலை நாடுகளில் அதிதீவிர ஆழ்ந்த அளப்பரிய ஆராய்ச்சிகளுக்கான பாடுபொருட்களாக ரசம்தேர் திசைவாதமாற்றம் அடைகின்றன என்று!

உண்மையாகவே நான் தீர்க்கதரிசிதான் என என் குரு சொல்வார், ஆனால் எனக்கு இப்படி, என் குருவால் மறுபடியும் மறுபடியும் புகழப்படுவது கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. என்ன செய்ய, என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டார்கள் என் பெற்றோர்கள். :-(

ஏதோ உங்கள் பாக்கியம், நான் இப்படித் துப்பறியும் சுயம்புவாக உருவாகி, திக்கெட்டினின்றும் தேவவார்த்தை வெள்ளமாக எழுதியருளி, நீங்களும் என் எழுத்துகளை ஓசியில் படிப்பதற்கு….

இப்படிப்பட்ட அரும்பெரும்பேற்றை அடைந்துள்ள உங்களைக் கண்டால் எனக்குப் பொறாமையாகவே இருக்கிறது, என்ன செய்ய. :-(

சரி, கீழ்கண்ட பேர்பெற்ற மனோதத்துவவியல் சஞ்சிகையில் என்ன சொல்கிறார்கள் பாருங்கள்!

மறுபடியும் சொல்கிறேன் – எப்படி என் அனுபவத்தையும் குறிக்கோளையும் நெடுநாள் கருத்தையும் செயல்பாட்டையும், இந்தக் கட்டுரை அப்படியே பிரதிபலிக்கிறது பாருங்கள்! என் கண்ணே எனக்குப் பட்டுவிடும் போலிருக்கிறது! :-(

அறிவுரை கொடுத்தால் சுயநம்பிக்கை அதிகமாகும்! :-)

மேலும், பிறத்தியாருக்கு அறிவுரை கொடுப்பதனால், என்னைப் போன்ற தேர்ந்த தொழில்முறை அறிவுரையாளருக்குப் பலப்பல நன்மைகள் இருக்கின்றன.
  1. எனக்கு அது உந்துசக்தியை அளித்து நான் மேன்மேலும் விசைகொண்டு பணியாற்ற உதவுகிறது.
  2. அது என் அறிவியக்கச் செயல்பாடுகளை அளவுக்கு மீறி வீங்கவைத்து – என் அடிப்படை திறன்களும் திறமைகளையும் குறித்தான அமோகப் பிரமைகளை எனக்கு உருவாக்குகிறது. பின்னர் அதே பிரமைகளை உங்கள் ஆழ்மனதுக்குள்ளும் ஏற்படுத்துகிறது.
  3. என்னுடைய தன்னம்பிக்கையை அது ஏகோபித்து ஏற்றுகிறது. ஆக, என்னால் மேலதிகமாக அறிவுரைகளையும் தெளிவுரைகளையும் பொழிப்புரைகளையும் அட்ச்சிவுட முடிகிறது.

ஆகவே, என்னால், என் வாசகர்களின் அளவை அதிகரிக்கவைக்க முடிகிறது. அதிக வாசகர் என்றால் மேலதிகமாக அறிவுரை, விளக்கவுரை கேட்க ஆசாமிகள் அதிகரிக்கிறார்கள். அவர்களுக்கு அறிவுரைக்க அறிவுரைக்க விளக்க விளக்க – என் தன்னம்பிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. புதுப்புதுத் துறைகளில் அகலக்கால் வைத்து அவற்றில் டூ-மினிட் விற்பன்னனாக மாறிவிடமுடிகிறது.

யாம் கொடுக்கும் அறிவுரை, பெறுக இவ்வையகம். ஆகவே பெருக என் பராக்கிரமம்.

ஆக, உங்கள் கேள்விக்குப் பதில் – மேற்கண்ட ஜாபிதாவில் மூன்றாவது; அதாவது: என்னிடமிருந்து நீங்கள் அறிவுரை பெற்றுக்கொள்வது எனக்குச் சிறந்தது.

அதனால், கண்டிப்பாக, நீங்கள் எதனைக் குறித்தும் சிந்திக்கவேண்டாம், விளக்கிக்கொள்ளவும் வேண்டாம். மாறாக, எனக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டால் போதுமானது.

உங்கள் பேராசான் எதற்கு இருக்கிறான், சொல்லுங்கள்?

என்னைக் குறித்த பிரமிப்புடன்,

ஜெ.

*டிங்*

நெக்ஸ்ட்.

 

 

 

19 Responses to “அன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா?”

  1. K Muthuramakrishnan Says:

    போதுமடா சாமி!😁😁😁


    • என்னது? SawMeயா??

      யோவ்! வந்து அறுக்கட்டா? (மேலதிகமாக அன்றிப் பிறிதொன்று ஆகச்சிறந்த ஒன்றில்லை!)

      __ரா.

  2. Kannan Says:

    https://www.jeyamohan.in/114069#.W8_skEszbIU

    Never one to back off, what has been said is said.


    • ஐயா!

      என்னைக் கொடுங்கஷ்டத்தில் மாட்டிவிடுகிறீர்கள்.

      வியாசனே ஸ்டெல்லாப்ரூஸின் வாழ்க்கையைத்தான் மஜாபாரதமாக எழுதினான் எனவன்றிப் பிறிதொன்றையும் முகத்தில் அறைந்துப் புரிந்துகொள்ளமுடியாதோ?

      ஆகச் சிறந்தவிதத்தில் நீங்கள் அவதானிக்கவருவதுதான் என்ன?

      ரா (என் சிண்டை நன்றாகவே முடிந்துள்ளேன்)

      • Kannan Says:

        வேறொன்றுமில்லை, அந்த சாமியார் இவரைக்காப்பியடித்துத்தான்
        மகாபாரதம் எழுதியது தெளிவாகிறது, அவர் முன்னாடியே எழுதி இருந்தாலும் கூட. 

        ஏன்னா ரெண்டு பேரும் ஸ்டைலும் ஒரே மாதிரி இருக்கு,.

        What a logic (;.

  3. Swami Says:

    முடியல !

    வேணாம்!!

    அழுதுட போறார் என் ஆசான்

    இதை தவிர பிறிதொன்று அன்றி வேறொன்று இல்லை என்கின்ற அவதானிப்பு பிந்தொடரும் நிழல் போல என்னை தொடர்ந்து தொரத்தி வருவதால் இதனை தத்துவ ஞான தரிசனமாய் உள்வாங்குவதை தவிர்த்து பிறிதொன்று அன்றி வேறு வழி இல்லை


    • அஹோ கேளும் ஸ்வாமீ!

      நான் அறுதியிட்டு உறுதியாகக் குருதி கொப்பளிக்க முகத்தில் அறைந்துகொண்டு நீட்டி முழக்குவது என்னவென்றால் – எதையும் அறுதியிட்டு உரைப்பது அசட்டுத்தனம்தான்.

      சட்டையில்லாமல் அசட்டையாக இருந்தால் கொசு கடிக்கலாம் என்பதே அந்தக் கொசுவின் ஆன்மிகப் பயணம் என நுணுக்கமாகப் புரிந்துகொள்வது என்னைப் போல அருகி வரும் அருகர்களுக்கு அசட்டுத்தனம் அன்றி வேறொன்றுமில்லை.

      என்னைத் துரத்திக் கொள்கிறேன்.

      டாட்டா. பை பை.

  4. SB Says:

    https://twitter.com/maamallan?lang=en

    Is it an happenstance that more we make fun of JeyMo(albeit rightfully in most of instances), more power he imbibes?…This fact of writing dialogues for 3 major films is to be lauded .
    Sir, for your calibre of writing(you have no interest over film-writing which we understood), all these could have been a cakewalk .
    Regards
    SB


    • இதெல்லாம் ஜெயமோகனுக்கும் அவர் குடும்பநலனுக்கும் நல்லதுதான். அலக்கிய எழுத்தாளத் தொழிலில் ஒரு மசுத்தையும் சம்பாதிக்கமுடியாது என்பதை அடிப்படையில் ஒரு புத்திசாலியான அவர், ப்ரத்யட்சமாகப் புரிந்துகொண்டிருப்பது நல்லவிஷயமே. (ஆனால் எஸ்ரா போன்றவர்களெல்லாமும் திரைப்படங்களில் கன்னக்கோலோச்சுவது கொஞ்சம் நிரடுகிறது, என்ன செய்ய!)

      ஆனால் ஐயா – மிகைமிதிப்புக்கு இடஒதுக்கீடு உண்டு என்றாலும், தயவுசெய்து என்னை மிகைமதிப்பு செய்யாதீர்! மேலும், தான்தோன்றித்தனமாகவும் சுதந்திரமாகவும் ஒரு ப்ளாக் ஓட்டுவது வேறு – திரைப்படங்களில் முயங்குவது வேறு. மேலும் தமிழ்த் திரைப்படவுலகத்தை(!) கொஞ்சமேனும் அறிந்தவன் என்கிற முறையில் – அதைப் பற்றி எனக்கு உயர்ந்த அபிப்ராயமில்லை.

      ஆகவே, இந்த எண் உபயோகத்தில் இல்லை.

  5. nparamasivam1951 Says:

    ஐயா சாமி,
    ஒண்ணுமே புரியலே! தலை சுத்துது.


    • ஐயோ!

      உங்களுக்குமா? அடப் பாவமே!

      எனக்கு மட்டும்தான் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்?

      எதற்கும் மன நல மருத்துவரிடம் செல்லவும். அல்லது நேரடியாக ஜெயமோகனுக்கு ஒரு கடிதத்தைத் தட்டிவிட்டாலும் சரி.

      என்னைப் போன்ற கண்டகழுதைகளின் புலம்பல்களைப் படிக்காமல் இருந்தாலும் உங்கள் ஆரோக்கியம் மேம்பட சாத்தியக்கூறு இருக்கலாம்.

      பிறகு உங்கள் விருப்பம்.

      கவலையுடன்,

      ரா.

  6. க்ருஷ்ணகுமார் Says:

    பொறுத்தது போதும் பொங்கியெழு என்று கண்ணாம்பா சொல்லுவதையும் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

    ஔவையார் பாட்டியையே சுட்டு விட்டால் தாங்குமா :-)

    மேஜர் பூவண்ணன் அவர்கள் பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் அவர்கள் பக்கத்தில் வார் டேன்ஸ் = போர் ஆட்டம் செய்து கொண்டிருப்பதால்……….. அவகாசம் இல்லாமையால்………. உமக்கு வாக்குறுதி கொடுத்தபடி உரலாயுத மைன்களால் நிரம்பிய தமிழக மாணவக்குஞ்சாமணிகளின் வார் டேன்ஸ் பற்றிய வ்யாஸத்தை எழுதி உமது அவையில் கொண்டுவந்து போட்டு ……………. அதன் நடுவே உம்மைத்தள்ளிவிட்டு

    ஆயிரம் பொன்னும் எனக்கே என்று அறைகூவல் விடாததால் …………….

    இப்படியெல்லாம் இக்கால ராமசாமியாகிய நீர் தெகிர்யமாக ஆரியத்திமிரை ஆறாது வர்ஷித்துக்கொண்டிருக்கிறீர்.

    அள்ள அள்ளக் குறையா அக்கால ராமசாமியின் ஆயுதக்கிடங்கிலிருந்து…………..

    கதோத்தரீய: என்ற படிக்கு கலஞ்சர் கர்னானிதியின் மஞ்சள் துண்டு தமது தோளிலிருந்து நழுவுவது கூடத் தெரியாமல் ……………..

    சிங்கம் போல நடந்து வரான் எங்க பேராண்டி என்ற பறவை மினியம்மாவின் பாடலுக்கேற்ப அடலேறெனப் புறப்பட்டு………….

    இளஞ்சிங்கமாகிய மேஜர் பூவண்ணன் சார் உரலாயுதங்களை மத்தகஜமாகிய ராமசாமிப்பிதாமஹர் (பெர்ஸு) மீது அஸ்த்ரப்ரத்யஸ்த்ரமாக ப்ரயோகிப்பதைக்கண்டு நீங்கள் புளகாங்கிதமடைய ………….

    ஒத்திசைவை வாசிக்கும் ஏழரை வாசகர்காளும் காள் காள் என்று ஏத்தையாவது வர்ஷிக்கும் அந்தத்தினமும் வரும்.

    இது அந்த ஔவையார்ப்பாட்டி மீது ஆணை.

    பூவண்ணன் சார் அப்பப்பவாச்சும் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை த்ராவிடர் உடமையடா என்று அச்சம் தவிர்த்து உரலாயுத சஹிதம் வந்து இக்காலராமசாமியுடன் இடையறாது பொருது நீவிர் த்ராவிடர்களை காத்து ரக்ஷிக்கவில்லையென்றால் அக்காலராம்சாமிக்கெடங்கு உரல்களெல்லாம் துருப்பிடித்துப்போகாதா :-)

    அல்லது கெடங்கு தான் காலியாகிப்போய்விட்டதா. நிராயுதபாணியாக நீவிர் யுத்தகளத்தில் இருப்பதைக் கண்கொண்டு பார்க்க மிடில.
    .
    பூவண்ணன் சார்………….

    கருப்பா இருக்கும் த்ராவிடக் காக்கா ஏற்கனவே கா கா எனக்கத்தி விட்டதால்

    சங்கடம் நீக்கிட சடுதியில் வருக


    • பூவண்ணப் பசலை நோய் என்னையும் வாட்டுகிறது, என்ன செய்ய. உங்களுடைய பிரவாளப் பிரயோகத்தையும் கடந்த சிலமாதங்களில் குமரி (miss) செய்திருக்கிறேன் என்பதும் தெரிகிறது.

      பிஏகே அவர்களுக்கு இருக்கும் கொடுப்பினை எனக்கு இல்லை என ஆசுவாசம் அடையவேண்டியதுதான்! ;-)

  7. க்ருஷ்ணகுமார் Says:

    \\ ஔவையார் பிராட்டி \\

    யார் ஸ்வாமின் அது :-)

    குற்றம் கண்டுபிடித்துப்பேர்வாங்கும் புலவர்களும் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறக்கலாகுமோ :-)

    பாட்டி, ஹம் போலேங்கே தோ போலேகா யே போல்தா ஹை


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s