வசீகரக் கோமாளிகள்: தினவுக் காரர்களும், வினவுக் காரர்களும்
December 5, 2013
(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (13/n)
… சினிமாக்காரர்களின், வசீகரக் கோமாளிகளின் கோனார் உரைகளும், தமிழ அறிதல்களும் — யின் தொடர்ச்சி…
புல்லரிப்பு சத்யாவேசம் அறவுணர்வு எல்லாம் சரி. பேஷ் பேஷ், றோம்ப நல்லாவே கீது! ஆனால், இவருக்கு யார் இப்படி கோனார் உரை கொடுக்கிறார்கள்? இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால் – வேறு வழியேயில்லாமல், இவர்களுடைய கவிதைகளே(!) பரவாயில்லை என்கிற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. போலிப் பெண்ணியம் பேசுவதற்கு அப்பாற்பட்டு — இம்மாதிரி வசீகரக் கோமாளிகளுக்கெல்லாம், விசாரணை, புலனாய்வு, வழக்குப்பதிப்பு, வழக்காடல், தீர்ப்பு, மேல்முறையீடு சுற்றல்கள், முடிவான தீர்ப்பு என்றெல்லாம் விரியும் நீதிமன்ற நடப்புகளைப் பற்றி ஒரு எழவும் தெரியாது என்பதை மீண்டும் மீண்டும் உளறிக் கொட்டி, கருத்துதிர்த்துப் பேசித் திரிகிறார்கள்; இவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் அசட்டுக் கண்ணாடிகளைக் கழற்றினாலே இவர்களுக்கு பச்சை நிறம், சிவப்பு நிறம் என்றெல்லாம் நிறங்கள் தெரியமாட்டா. தங்களுக்குக் கொஞ்சமாவது அடிப்படை நேர்மை இருக்கிறதா என்று கேட்டுக் கொள்ளாமலேயே, வெட்கம் கெட்டவர்கள்– ஊருக்கு உபதேசமும், சகட்டுமேனிக்கு அறிவுரைகளும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள், அதாவது என்னைப் போல… (படத்துக்கு நன்றி: ‘சவுக்கு;’ இந்த நகைச்சுவைக் கோனார் உரை, ஃபேஸ்புக்கில் வந்திருக்கும் என நினைக்கிறேன்.)
சரி, வசீகரக் கோமாளிகள் நமக்காகக் கோனார் உரையாற்றும் பணி புரிகிறது. ஆனால், அவர்களும் சுயசிந்தனை அற்றவர்கள்தாமே! ஆக, அவர்களுக்கு யார் கோனார் உரை கொடுக்கிறார்கள்? எப்படி ஆணித்தரமாகப் பல விஷயங்களில் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் – கருத்துச்சிதைவுகளை விரிக்கிறார்கள்? அவ்வளவு மூளையிருக்கிறதா என்ன அவர்களுக்கு?

ஒன்றையும் தெரிந்துகொள்ளாமை, அசடாகவே இருப்பது / டானி நொபஸ், மால்கம் க்வின் / ரூட்லெட்ஜ் / 2005 / இது மனோதத்துவவியலைக் குறித்த புத்தகமாக இருந்தாலும், படிக்கப் கொஞ்சம் அதிகமாகவே கடினமாக இருந்தாலும் – இதன் மூலமாக நம் பத்திரிகை, புரட்சியாள, வசீகர புத்திஜீவிகளை கொஞ்சம் அதிகமாகப் புரிந்து கொள்ளலாம். முட்டாள்தனத்தை, அறிவின்மையை, அசட்டுத்தனத்தை – அறிவுடனான ஒரு முரணியக்கப் பாதையில் வைத்துப் புரிந்துகொள்ள வைக்கிறது இப்புத்தகம். இந்த நோக்கில், தலையில் அடித்துக் கொண்டு, நம் திராவிடக் கொழுந்துகளை, வசீகரக் கேளிக்கைக் காரர்களைப் புரிந்து கொள்ள, வேண்டாவெறுப்பாக முடிகிறது. அமேஸான்.
இவர்களுடைய சிந்தனைகளின் ( =நிந்தனைகளின்) கந்தறகோள ஊற்றுக் கண்கள் அனைத்தும் – அடிப்படையில் அற்புதமான அரைகுறைகளான சிலரிடம் பெற்றவைதாம்.
சாளரம் #6ன் உபசாளரம்: ‘கல் தோன்றி மண் தோன்றாக்’ காலத்திலிருந்து பல முக்கியமான விஷயங்களை, நம் வளர்ச்சிக்கான சங்கதிகளை, நம் பண்பாடு பற்றிய நம்முடைய புரிதல்களை வளர்த்தெடுத்தலை, நாம் செய்யாமல் – பிறருக்கு அந்த வேலையைக் கொடுத்துவிடுவதை (’outsourcing even the so called core competencies of us,Tamils’), தமிழர்களாகிய நாம், ஒரு கலையாகவே வளர்த்தெடுத்து வந்திருக்கிறோம்.
எடுத்துக்காட்டு: ‘திராவிடம்,’ ஆரியம் vs திராவிடம், ஆரியப் படையெடுப்பு, கைபர்-போலன் கணவாய்மூலம் ஆரியர்கள் உள்ளே வந்தது, சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம், உலகின் முதற் குரங்கு தமிழ்க் குரங்கு போன்ற சுவையான, ஆனால் ஆழ்ந்த ஆராய்ச்சிகளுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத கருத்துகளை (=கட்டுக்கதைகளை) உருவாக்கியது தமிழர்களல்ல.
இப்படிப்பட்ட கற்பனைகளை, அவர்கள் வசதிக்காகவும் குயுக்திக்காகவும் வளர்த்தெடுத்தது, க்றிஸ்தவ வெள்ளைக்காரப் பாதிரிமார்களே! அல்லது பிரித்தாளும் சூழ்ச்சிக்காரக் காலனியவாதிகளே – உதாரணங்கள்: தாமஸ் பபிங்டன் மக்காலே (Thomas Babington Macaulay), வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), மாக்ஸ் ம்யுல்லர் (Max Müller), வில்லியம் ஜோன்ஸ் (William Jones – ஆசியாடிக் ஸோசைடி, கொல்கொத்தா), ஜியார்ஜ் உக்லோ போப் (George Uglow Pope), ராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell), ‘வீரமாமுனிவர்’ கான்ஸ்டன்ஸோ பெஷி (Constanzo Beschi), ழான் அந்த்வான் துப்வா (Jean-Antoine Dubois) போன்ற பலர்…
தமிழர்களாகிய நாம், நம்முடைய வரலாறுகளை (அவை உண்மையோ பொய்யோ அது வேறு விஷயம்) ஆய்ந்தறிய, எழுதக் கூட வக்கில்லாதவர்கள்… ஆனால் கிளிப்பிள்ளைகள் போலக் கந்தறகோளங்களை உச்சாடனம் செய்யும் பாங்கை நன்றாகவே வளர்த்துக்கொண்டதற்கு நம்மை நாமே மெச்சிக்கொள்ளலாம்.
… இதைத் தவிர, மானுடவியல் / புவியியல் / பண்பாட்டு வரலாறு / பரிணாம வளர்ச்சி என்பது போன்ற எந்த கருத்துச் செறிவு சார்ந்த, தரவுகளால் சரிபார்க்கக் கூடிய, தகுதி பெற்ற, உலகளாவிய பெருமதிப்பு உடைய ஆராய்ச்சியாளர்களால் – எவ்வளவுதான் இந்த ‘திராவிட’ தொடர்பான கந்தறகோளக் கருத்துக்கோவைகள், மனு நீதி தான் ஹிந்து சமூகத்தைப் புரிந்து கொள்ள உதவும் ஒரே சாளரம் என்பது தொடர்பான நகைக்கத்தக்க உச்சாடனங்கள், ஆரிய மாயை, ஆரியப் படையெடுப்புகள், வடநாட்டு வந்தேறிகள், லெமூரியா போன்ற நகைச்சுவைகள் — உள்ளீடற்றவை, தவறான கற்பிதமானவை எனச் சொல்லப்பட்டாலும் இவற்றை, அரைக்காது கொடுத்துக் கூடக் கேட்டுக் கொள்ள மாட்டோம்.

தென்னிந்தியாவின் அரசியல் (1920 – 1937) / க்றிஸ்டொஃபர் ஜான் பேகர் / கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் / 1976 / அமேஸான்
இது சமன நிலையில் எழுதப்பட்ட ஒரு கறாரான ஆராய்ச்சிப் புத்தகம். உளறிக் கொட்டுவதற்கு முன் இவற்றையெல்லாம் படித்தால் நலம் – எனக்கும் சேர்த்துத்தான் சொல்லிக் கொள்கிறேன்… (இந்த க்றிஸ் பேகர், யூஜீன் இர்ஷிக் போன்றவர்கள் – மேதைகள், இவர்களுடையது – என்ன நுணுக்கமான வாசிப்பு, எவ்வளவு சமன நிலையிலுள்ள கூரிய சமூக அவதானிப்பு – என மீண்டும் மீண்டும் வியக்கிறேன்!)

உரையாடல்களும் வரலாறும் – தென்னிந்தியாவெனும் கருத்தைக் கட்டமைப்பது – 1795–1895 / யூஜீன் இர்ஷிக் / கேலிஃபோர்னியா பல்கலைக்கழகப் பதிப்பகம் / 1994 / அமேஸான்; இதுவும் ஒரு மிக முக்கியமான, கனமான புத்தகம்.
ஆனால் – நம்முடைய அக்கால மேன்மையைப் பற்றி, ‘திராவிடம்’ பற்றி வசீகரத் தலைவர்கள், அவர்களுடைய பாதங்களை நக்கிக் கொண்டு கீழேவிழும் சோற்றுப் பருக்கைகளுக்காக அலைமோதும் அரைகுறை திராவிடக் கருத்தியல்வாதிகள் போன்றவர்கள் சொல்லும் உள்ளீடற்றவற்றைத்தான் நாம் காதுகொடுத்துக் கேட்போம்.
வசீகரக் கோமாளிகளிடமிருந்து, அவர்களுடைய அரைகுறை கோனார் உரைகளிலிருந்து, ஏன், அந்தக் கந்தறகோள விடுதலையிடமிருந்தே – நாம் விடுதலை பெறுவது எப்போது?

அசட்டு அமெரிக்கா – சுதந்திர பூமியில் முட்டாள்தனம் ஒரு கல்யாணகுணமானது எப்படி? / சார்ல்ஸ் பி பியர்ஸ் / நங்கூரம் – அன்கர் புக்ஸ் / 2009 / இப்புத்தகம் ஒரு கேளிக்கை ஜல்லிக்கட்டு. கூரான விமர்சனங்களை உள்ளடக்கியதும் கூட; இதன் மூன்று அடித்தளக் கோட்பாடுகள்: 1) உரக்க, திருப்பித் திருப்பிச் சொல்லப் படுவது எதுவும் சரியானதாகிவிடும். 2) ஏதாவது கருத்தை உள்ளடக்கிய புத்தகமோ கோட்பாடோ நன்றாக விற்றால் / வரவேற்கப் பட்டால் அது சரியான கருத்துகளை உள்ளடக்கிய ஒரு புத்தகமாகவோ அல்லது கோட்பாடாகவோ புரிந்துகொள்ளப் படும். 3) தேவையான எண்ணிக்கையில் மக்கள் ஆவேசமாக நம்பும் எதுவும் காலப்போக்கில் உண்மையாகக் கருதப் பட்டு நிதர்சன சத்தியமாக விரிக்கப் படும். :-)
… எனக்குப் பிடித்த ஸெடயர் / பகடிப் புத்தகங்களில் இதுவும் ஒன்று… அமேஸான்
இம்மூன்று கோட்பாடுகளையும் அப்படியே தமிழகத்திற்குப் பொருத்தி, மண்டையில் அடித்துக் கொண்டே – இக்கோட்பாடுகள் வேலை செய்வதற்கு நம் வசீகரக் கோமாளிகள் அளிக்கும் பங்கை மெச்சலாம்.
-0-0-0-0-0-0-
இப்போது என் செல்ல நண்பர்களான வினவாள மாமுனிகள் பக்கம் செல்லலாம். இவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைப்பது கீழ்கண்ட புத்தகம். கொஞ்ச காலத்துக்காவது அவர்கள், என்னுடைய செல்ல பூர்ஷ்வாக்களான மார்க்ஸையும், எங்கெல்ஸையும் – வணக்கத்துக்குரிய ஃபாஸ்ஷிஸ்டுகளான ஸ்டாலினையும் மாசேதுங்கையும் விட்டுவிட்டு இதனை உருப்போட்டால், சம்சார சாகரத்தில் நீந்தலாம். பின்னர், சாவகாசமாக முடிந்தால், புரட்சிகரக் கரை ஏறலாம்.

புரட்சிகர தீப்பந்தத்தைச் செந்தாரகையை நோக்கி ஏந்தி புத்துலகம் சமைக்க, முதலில் சிறிய அளவில் பட்டாசுகளைக் கொளுத்த ஆரம்பிக்கவேண்டும். அதன் பின்னர் டாக்டர் டென்னிஸ் லியரி அவர்கள் கோனார் துணைவன் போட்டுச் சொல்வது போல – பல கல்யாணகுணங்களோடு நெடு நாள், புரட்சிப் பூபாளம் பாடி மாறாதப் பேரின்ப நீராடலாம். இந்தப் புத்தகத்துக்கு, புரட்சிக்காரர்களின் தன்னிலை விளக்கமாக பெரும்புகழ் பெற கண்டிப்பாக வாய்ப்பிருக்கிறது. அட்டையைத் தாண்டிப் படிக்கவேண்டிய புரட்சிகர அவசியமும் இல்லை. நன்றி. அமேஸான்.
பரிதாபத்துக்குரிய வினவாளர்கள் பேச்சாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதைத்தானே ஸ்தாபிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் – அட்டைக் கத்திகளை மட்டும்தானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? எதற்கும் எதிர்ப்பை மட்டும்தானே காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதில் என்னதான் தவறு? நிலைமை இப்படி இருக்கும்போது – ஏன் வினவுத் தினவுகாரர்களும் இந்தக் கோனார் நோட்ஸ் கோமகன்களாகி, வசீகரக் கோமாளிகள் வரிசையில் வருகிறார்கள் – எனும் கேள்வி நியாயமானதே!
இந்தச்சமயம், அச்சுஅசலாக (=அச்சுப்பிச்சாக) வினவின் ஆஸ்தான உளறலாளர்கள் போலவே, ஒரு விதமான தொடர்பும் முகாந்திரமும் இல்லாமலேயே வினவுக்கும் அந்தத் தீண்டத்தகாத இயக்கமான ஆர்எஸ்எஸ்-ஸுக்கும் உள்ள தொடர்பை அவர்கள் இணையதளத்தை வைத்தே கீழே நிறுவுகிறேன்.

ஆக, ஆர் எஸ் எஸ், சங் பரிவாரம்தான் வினவு-களின் பின்புலத்திலும் ஊடாடுகிறது, என்பது வினவின் முகப்பிலேயே இளித்துக் கொண்டிருக்கிறது. வினவு, ஆர்எஸ்எஸ் அமைப்பிடம், பதிவுகளுக்காக மட்டுமல்லாமல், பின்னூட்டங்களுக்காகவும் கடமைப் பட்டுள்ளது! ஆம்!! ;-)
சரி. இந்தக் கிண்டலை விட்டுவிட்டு, இந்த வசீகரக் கோமாளிகளைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம். 8-)
இந்த வினவாளர்களின் ‘எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு / வெறுப்பு’ என்பது விடலைப் பருவ இளைஞர்களுக்கு கொஞ்சம் ஸெக்ஸியாகவேதான் இருக்கும். நானே என் இளம்வயதில் பாட்டாளி வர்க்கம், புரட்சி புதுயுகம் என்று உளறிக் கொட்டிக் கொண்டிருந்தவன் தான்.
‘அட இவனுங்க அல்லாத்தையும் தெகிர்யமா எதிர்க்கறாங்கடோய்’ என்பதே இவர்களுக்கு ஒரு கோமாளித்தனமான வசீகரத்தைக் கொடுக்கிறது. ஆனால்…

விபி சிங் எனும் ஒரு அரசியல்வாதி ஒரு காலத்தில், இந்தியாவில் இருந்து கொண்டு, இந்தியாவை ஒழிப்பதில் முனைப்பு மிகுந்து, தாங்கொணாப் பொய்கள் பல பேசி, சுயகாரியப் புலியாக இருந்து துரோகங்கள் செய்து – பின் ஒருவழியாகப் போய்ச் சேர்ந்தார். இவர் பிரதமராகவெல்லாம் வேறு இருந்தார்! இம்மாதிரி ஒரு அரைகுறைத் தனமாக, சுத்தமாகப் பொறுப்புணர்வேயில்லாமல், ஒரு அற்ப தமிழ்ச் சினிமா அட்டைக்கத்திப் போராளி போல அயோக்கியத்தனமாகப் பேசுபவர், ஒரு பிரதமராகவெல்லாம் இருந்திருக்கிறார் என்பது ஜனநாயகத்தின் சாபக்கேடுகளில் ஒன்றுதான்… (சுதீப் சக்ரவர்த்தி எழுதி வைகிங் 2008ல் பதிப்பித்த ‘செஞ்சூரியன்: நக்ஸலைட் பிரதேசத்தில் பயணங்கள்’ புத்தகத்திலிருந்து; ஃப்லிப்கார்ட்.)
நான் பதில் சொல்கிறேன்: (இதை ஒரு கம்யூனிஸ்ட் எனும் பெரும்பாலும் உபயோககரமாக இருக்கும், மக்களின் மேன்மையை விரும்பும், வன்முறையை கட்சிக்கொள்கையாக்க விரும்பாத கம்யூன் இஸம் சார்பாளர்களை முன்வைத்துச் சொல்லவில்லை; மாவோயிஸ்ட், நக்ஸல்பாரிகள், எம்எல், மக்கள் யுத்தம் அணியினர், ஆயுதப் புரட்சியாளர்கள் எனவெல்லாம் தங்களை அழைத்துக் கொண்டிருந்த, கொண்டிருக்கும் வினவாளர்களை, கவைக்குதவாத பயங்கரவாதிகளை முன் வைத்து மட்டுமே சொல்கிறேன்)
சரி. ஏதுதான் நம்தேசத்து இளைஞர்களை, நக்ஸலைட்டுகள் ஆகவிடமாட்டேன் என்கிறது? (அல்லது எப்படியாவது எல்லா இந்திய இளைஞர்களும், நக்ஸலைட்டுகள் ஆகிவிடக் கூடாதா?? ஏன் தான் இது நடக்கமாட்டேன் என்கிறது?)
சில காரணங்கள் தான்:
1. பெரும்பாலும் இந்திய இளைஞர்கள், தேவையற்ற ரத்தக் களறிகளை விரும்பாதவர்கள்.
2. எதை எடுத்தாலும் எதிர்ப்பு என்று, சமூகத்துக்கு ஒன்றுமே ஆக்கபூர்வமாகச் செய்யாமல் வாய்ப்பேச்சு வீரம் காட்டுபவர்களைக் கோமாளிகளாகத்தான் எடுத்துக் கொள்வர். நம் திரைப்படக் காரர்களை எடுத்துக் கொள்வது போலவேதான்!
3. நமது இந்தியப் பாரம்பரியம் என்பது – கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற அடிப்படை விழுமியங்களால் கட்டமைக்கப் பட்டது. எவ்வளவுதான் பிரிவினைவாதம் பேத்தினாலும், இந்த விழுமியங்கள் இன்னமும் நமக்கு முக்கியம்.
4. வாயோர நுரைதள்ளும் வெறுப்புமுதல் வாதத்தைத் தவிர, பலபத்தாண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட, காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஒத்திசையாமல் காலாவதியான கந்தற்கோளங்களை மட்டுமே – அதுவும் கிழிந்து போன பழைய கோனார் துணைவன்களை வைத்து மட்டுமே முன்னெடுக்கும், தற்காரியப் புலிகளை, சுயநலவாதிகளை, பொறுப்பற்றவர்களை நம் மக்கள் மிகவும் பொருட்படுத்துவதில்லை.
5. இந்த நக்ஸலைட் – நக்ஸடார்க் ஆசாமிகள் ஒழிக்கப் படாமல், நம் கருணாநிதி அவர்கள் போல ‘ நானே ஒரு புரட்சிக்காரன் தான்’ என்று உளறிக் கொட்டிக் கொண்டு இன்னமும் மினுக்கிக் கொண்டு வளைய வருவதற்கே, அவர்களுடைய இருப்பிற்கே, நம் நெடிய பண்பாடும், சகிப்புத் தன்மையும் தான் காரணம்.
… இருந்தாலும், இவர்கள் வசீகரக் கோமாளிகளாக இருப்பதால், அவர்களுடைய பராக்கிரமம் பற்றி, ரேம்போ போலப் பேராண்மையுடன் முறுக்கெடுத்த தசைநார்களுடன் எழும்பி ஏகே47 கொண்டு சுட்டுத் தள்ளுதல் போன்ற பிரமைகள் – நம்முடைய சில இளைஞர்களிடையே உருவாகலாமோ – அப்படியே இவர்கள் பிறழ்ந்து ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாகி விடுவார்களோ என்று சில சமயம் சந்தேகம் வருகிறது.
ஆனால், உடனடியாக, வினவு தளம் போய்ப் பார்த்தால், அவர்களுடைய கிண்டல் (அங்கு எதை எடுத்தாலும் கிண்டல் தான்; ஒரு புண்ணாக்கும் உள்ளீடுமற்ற, கவைக்குதவாத வெறுப்பும், வசவும், உச்சாடனங்களும்தான்!) புதுக் கருக்கு மறையாமல் இருப்பது கண்டு பூரிப்பாக இருக்கிறது.
ஆஸ்தானப் பின்னூட்டக் காரர்களும் அப்படியே புரட்சிகர பின்னூட்டமிடுவது இன்னமும் மனதுக்குத் திருப்தியாக இருக்கிறது.
இவர்கள் நக்ஸல்பாரிகள் இல்லை, வெறும் நக்கல்பாரிகள் தாம்!
வாழ்க நக்கலிஸம்! வளர்க நக்கல்பாரிகள்!!
தமிழகத்தின் தலைசிறந்த நகைச்சுவை இணையதளமாக ‘வினவு’ தொடர்ந்து பணியாற்ற, அகில இந்திய ரீதியில் பிரசித்தி பெற, புகழ் ஓங்க, என் புரட்சிகர வாழ்த்துகள்!
ஆகாஷம் வெரெ, ஞங்களு செங்கொடி உயரட்டே!!
-0-0-0-0-0-0-0-0-0-0-
December 6, 2013 at 09:34
“இம்மாதிரி மதச்சார்பின்மைச் சாமி வந்து உளறிக்கொட்டும் ஆட்களைப் பார்த்தால்”
“போலி மதச்சார்பின்மைச் சாமி” என்று குறிப்பிட்டுருக்கவேண்டும்.இவரை மாதிரி ஆள்கள் எல்லாம் ஒருவர் தப்பு பண்ணியிருக்கிறாரே அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர் செயலை கண்டிக்கவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். மாறாக தப்பு பண்ணினவர் யாருக்கு வேண்டப்பட்டவர் என்று பார்த்து அதற்கு ஏற்றார்ப்போல் “கள்ள நியாயம்” பேசுவர்.இவர் தூக்கி பிடிக்கும் ‘யோக்கிய சிகாமணி’ ஒன்றும் செய்யவில்லை என்றால் பின் ஏன் ஆறு மாதம் தன் பதவியை தானாக துறக்க முன் வந்தார்?
December 6, 2013 at 16:25
In almost all television talk shows, for better TRP rating, the TV wallahs want shouting club members. And this Abdulhameed aka sombeswarananda has the highest pitch compared to other shouters in the TV talk shows. He would neither hear what others say nor would allow any other participant aka shouter to say something.
“மதியம் இரண்டரை மணிவரை அருண் தேஜ்பாலை கைது செய்ய வேண்டாம் என என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது”
தருண் தேஜ்பாலை அருண் தேஜ்பாலாக மாற்றியுள்ளார். Sure that can be genuine slip of the tongue. But could also be because of shouting spree. Probably TV wallahs may not know that many viewers change the channel when this blaberrer starts shouting.