க்றிஸ்தவம், இஸ்லாம் பற்றி, ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்? :-(

December 26, 2018

கீழேயுள்ள குறிப்பு, க்றிஸ்த்மஸ் வாழ்த்தாக ஃபேஸ்புக் (அல்லது வாட்ஸ்அப்) எழவுகளில் ஒரு பிரபல எழுத்தாளரால் வெளியிடப்பட்டது எனும் மேலதிகக் குறிப்புடன் வந்து சேர்ந்தது. :-(

…சொல்லப்போனால் நான், இதனை எந்தப் பிரபலஸ்தர் (ஜெயமோகன்? எஸ்ரா?? அல்லது அரேபியா ஐரோப்பாவின் ஏகபோக குத்தகைதார சாருநிவேதிதா???) எழுதியிருப்பார், இதன் முன்னேபின்னே பின்புலம் முன்புலம் என எதுவும் அனுமானம் செய்யமுடியாமல் இணையத்தில் தேடியும் – எனக்கு  இதனை எழுதியிருக்கக்கூடிய அறிஞர் அல்லது அறிஞி யாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை! இதனை அனுப்பிய நண்பரும் கமுக்கச் சிரிப்புடன், உதவமாட்டேனென்கிறார். ஆனால் – இந்தப் படம் என்னை மிகவும் சீண்டி விட்டது, :-( என்ன செய்ய; ஆகவே அதற்கு இந்த நீள எதிர்வினையைக் கொடுக்கிறேன்.

யோசித்தால் – இதனை யார் எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான விஷயம் இல்லைதான்; ஆனால், இப்படிப் பட்ட செய்தி பரப்பப் பட்டால் அது கூடுவிட்டுக் கூடுபாய்ந்து இது உண்மையாகவே கருதப்படும் நிலைக்கு வந்துவிடும். ஆகவே. இதனைத் தெரிந்தவர்கள் செய்தி/சுட்டி அனுப்பினால் மகிழ்வேன், அதாவது சோகமடைவேன்; மாறாக அந்தப் பிரபலஸ்தர் இதனை நகைச்சுவை உணர்ச்சியுடன் நாக்கை உள்கன்னத்தில் ஒதுக்கி வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறார் எனத் தெரிந்தால் இறும்பூதடைவேன், நன்றி!

(நகைச்சுவை உணர்ச்சிக்காக, என்னால் பச்சை அடிக்கோடிடப்பட்ட பகுதிகளை மறுபடியும் படிக்கவும்!)

இப்படியெல்லாம் எழுதுவதற்கு இவர்கள் என்ன மாதிரித் தரவுகளை வைத்திருக்கிறார்கள்? அவை முதன்மை ஆதாரங்களா?  அல்லது குறைந்த பட்சம் இரண்டாம்நிலை ருசுக்களைக் கொண்டவையா? மேலும். அவை அசைக்கமுடியாத காத்திரம் கொண்டவையா? அவற்றுக்கு மாறாக ஏதேனும் உரையாடல்கள், கருத்துகள் உள்ளனவா?

ஒரு மசுரும் இல்லை. ஆனால் இது ஃபேஸ்புக் வாட்ஸ்அப் தர(!) எழவுகளில் இருப்பதால் – அவற்றுக்கே உரிய இலக்கணமான ‘கண்டமேனிக்கும் “நம்மில் யாருக்குத் தெரியும்” அட்ச்சிவுடுதல்’ என்ற வகையில் சேரலாமோ என்ன எழவோ!

ஆனால்… பொதுப்படையான நல்லெண்ணத்துடன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பொத்தாம்பொதுவாக அட்ச்சிவுடுவதன் தாத்பரியம் என்ன?

அலுப்பாக இருக்கிறது.

…தமிழனுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோ, படிப்பறிவோ இல்லவேயில்லை. ஏதோ காற்று வாக்கில் கேள்விப்பட்ட விஷயங்களை ‘உள்வாங்கி’ மேலதிகமாக, அதிகபட்சம் விக்கிபீடியா படித்துக் கிறங்கிப் போய் – இப்படி நெகிழ்வாலஜியாகவும் சப்பைக்கட்டுகளாகவும் பரந்த அன்புடன் அட்ச்சிவுடுவது. தேவையா?

சரி. :-(

ஆனால் அதன் [க்றிஸ்தவத்தின்] ஆரம்பகால தரிசனம் தூய்மையானது.எளிமையானது.

அப்படியா என்ன?

அடிமைமுறைக்குச் சப்பைக்கட்டு கட்டுவதும் கொலைகளுக்குத் தூண்டியதும் யூதர்களுக்கு எதிராக நேரடி வன்முறைகளில் ஈடுபட்டதும் நடக்கவே இல்லையா?

யேஸ்ஸுவே தான் அமைதிக்காக வரவில்லை, வாளுடன் ​(அல்லது வாளுக்காக)​ வருகிறேன் என்றெல்லாம் சொல்லவில்லையா?

மேற்கண்ட ​மத்தேயு 10:34 வசனத்தை நம் தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது எவ்வளவு அழகாக வாளை —பட்டயம்’ என மொழிபெயர்த்திருக்கிறார்கள் பாருங்கள்!

நான் பிரிவினைகளை உருவாக்கவந்தேன் என வாளுடன் அலைபவரின் போதனைகளைப் போய் அநியாயத்துக்கு எளிமை, தூய்மை என்றெல்லாம் போற்றுகிறார்களே! (அதே சமயம், இதனையெல்லாம் லூஸ்ல விட்டுவிட்டு அவருடைய மலைப் பிரசங்க வசனங்களை மதிக்கிறேன். ஏனெனில், ‘தேவ’தூதர்கள் உட்பட, இந்த உலகமே சாம்பல் நிறமைய்யா!)

ஆனால் – இப்படியா ஒரு பின்புலத்தையும் அறிந்துகொள்ளாமல் எளிமை தூய்மையென அரற்றுவது?

… சர்ச்களின் பரப்புரைகளையும் தணிக்கைக்குப் பின் வெளியிடப்பட்ட  விஷயங்களையும் மதமாற்ற நிறுவனங்களின் அழிச்சாட்டியங்களையுமா உண்மை என நம்பிப் புளகாங்கிதமடைவது?

அதிகாரம் கிடைத்ததும் அதன் முகம் முற்றிலும் வேறுவிதமாக மாறியது.

!

ஐயா (அல்லது அம்மணி?) – அது வேறுவிதமாகவெல்லாம் மாறவில்லை.

மாறாக, அது இன்னமும் வீரியம் கொண்டு அமோகமாக கலாச்சார அழித்தொழிப்புகளிலும், படுகொலைகளிலும், வெள்ளைக்கார மேட்டிமைத்தனத்திலும், புத்தக உருவாக்கத் தகிடுதத்தங்களிலும் ஈடுபட்டது –  தொடரவும் தொடர்கிறது. அவ்வளவுதான்!

இங்கு ஒரு சுவாரசியமான(!) விஷயம்: நடு-1800களில் ரோம் நகரில் அரசர்போல உட்கார்ந்திருந்த போப் அவர்களின் ஆணையின் பெயரில், வதிகானின் போர் உபயோகத்துக்காக(!) துப்பாக்கிகள், ‘புனித’ பீட்டரின் சாவிகள் குறியீட்டை உள்ளடக்கித் தயார் செய்யப் பட்டன.

அவற்றுக்கு போன்டிஃபிஷியொ (M1868 Papal States Remington ‘Pontificio’) எனப் பெயர்.

சரி. துப்பார்க்குத் துப்பாக்கி ரவையைத் தூவும் வினையையும், உலகில் அமைதியை நிலை நாட்டுவதையும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இதனை விட்டுவிட்டு மேலே ஏகலாம்!

:-(

ஒப்பிட சரித்திரத்தின் பெரும்பான்மையான நேரத்தில் செமிடிக் மதங்களில் இஸ்லாமே அதிக சகிப்புத் தன்மையோடு இருந்திருக்கிறது.

!

இதை எழுதும்போது பிரபலஸ்தர், கஞ்சா புகைத்துக் கொண்டிருக்கவேண்டும், வேறென்ன சொல்ல. ஆனால், இதனைப் படித்த எனக்கு, உடனடியாக மாரடைப்பு வந்துவிட்டதே, என்ன செய்ய! :-(

ஆவணங்கள், சமகாலச் சான்றுகள், அகழ்வாராய்ச்சிகள் போன்றவை பூர்வமாகப் பார்த்தால் – ஸெமிட்டிக் வழிவந்தவர்களில், யூதர்களே (குறிப்பாக கடந்த 2200 வருடங்கள் போல) அதிகபட்ச சகிப்புத்தன்மையுடன் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், பாவம்!

ஸ்பெயினில் இஸ்லாம் ஆண்ட சுமார் மூன்று நூற்றாண்டுகள் உலக சரித்திரத்தில் ஒரு அற்புதமான காலகட்டம் என்று சொல்லலாம்.

அப்படியா என்ன? ஆச்சரியமாக இருக்கிறது. விக்கிபீடியா அறிவுப்புலங்களின் சாத்தியக் கூறுகளில் எதுவுமே சாத்தியம்!

உமயட்டுகள் ஸ்பெய்ன் பிரதேசத்தின்மீது படையெடுத்து ஜிஹாத் செய்து அதனைச் சூறையாடி, ஆண்களை வெட்டி, ஏகத்தும் பிடித்து பெண்களையும் பிள்ளைகளையும் அடிமைகளாக ஆக்கி, ஒத்துவந்த க்றிஸ்தவ விஸிகோத்களை வெறும் மலட்டு திம்மிகளாக்கி, ஒத்துவராதவர்களை வெட்டியெறிந்து – அங்கிருந்த யூதர்களையும் க்றிஸ்தவர்களையும் கதிகலங்க அடித்ததெல்லாம் பிரபலஸ்தருக்குத் தெரியவில்லை போலும்.

சுமார் நாற்பதுஐம்பது ஸ்பானிய அக்கால வரலாற்றாளர்கள் (மேனுவல் கொன்ஸாலெஸ் யிமினெஸ் Manuel Gonzalez Jimenez போன்றவர்கள்), அரபுமொழி வல்லுநர்கள் (மரியா லுய்ஸா அவிலா Maria Luisa Avila போன்றவர்கள்), அக்கால நீதிபரிபாலன முறைமைகளில் அறிவார்ந்தவர்கள் (ரமோன் பெரால்டா Ramon Peralta போன்றவர்கள்),  அகழ்வாராய்ச்சிக்காரர்கள் (சட்டென – எடுத்துக்காட்டாக ஒரு பெயர்கூட நினைவுக்கு வரவில்லை), தற்கால வெகுஜன வரலாற்றாளர்கள் (ஸெஸார் விடால்  Cesar Vidal போன்றவர்கள்) – காலம்காலமாகக் கதறிக்கொண்டு உண்மைகளை ஆவணபூர்வமாக வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள். இவர்களுக்குமேல் ஐரோப்பாவில் பிற நாடுகளிலும் இப்படி இருக்கிறார்கள்!

இவர்களையெல்லாம் படிக்க நேரமில்லை என்றால் – குறைந்த பட்சம், டேரியோ ஃபெர்னான்டஸ்-மொரெரா (Dario Fernandes-Morera) எழுதிய கீழ்கண்ட, தரவுகளின் மீதான புத்தகத்தை மட்டுமாவது படிக்கலாமே! :-(

The Myth of the Andalusian Paradise

​-0-0-0-0-0-

ஆனால், ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளவேண்டும் – இஸ்லாம் பிற பகுதிகளில் (பாரசீகம், பாரதம், எகிப்து, வட/மத்திய ஆஃப்ரிக பிரதேசங்கள் – இவற்றிலும் மிக அதிக அளவு கொடுமைகள் பாரதத்தில்தான் அரங்கேறியிருக்கின்றன)​ செய்த படு அயோக்கிய அட்டூழியங்களைப் பார்க்கும்போது – அது ஸ்பெய்னில் செய்தது கொஞ்சம் குறைவே!

:-( எது எப்படியோ, எனக்கும் அன்டலுஸியாவின் கார்டோபா பிரதேச இஸ்லாமிய விஷயங்கள் சில பிடிக்கும் – அதிலும் குறிப்பாக அவெர்ரீஸ் அவர்களை மிகவும். +சில அழகான கட்டுமானங்களையும்.

அவெர்ரீஸ் குறித்து ஒரு பதிவையும் எழுதியிருக்கிறேன்:  அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ்

ஆனால், அதற்காக – இஸ்லாமின் இருண்டபக்கங்களை தேவை மெனெக்கெட்டு இருட்டடிப்பு செய்யமாட்டேன். கயமைச் சுண்ணாம்பைப் பூசி மூடிமறைக்கமாட்டேன்.

பினாத்தவும் மாட்டேன். நன்றி.

பின்குறிப்பு: அப்ரஹாமிய/ஸெமிட்டிக் மதவரலாறுகள், ஆயிரம் இரண்டாயிரம் வருட வயது மட்டுமே கொண்டவை என்றாலும் பொதுவாகவே ஆதாரம் அற்றவை. அமோகமாகப் பூசி மெழுகப்பட்டவை. தொழில்முறையில் உருவாக்கப்பட்டவை. யேஸ்ஸு ‘க்றிஸ்து’ அல்லது மொஹம்மத் ‘நபி’ உண்மையாக ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மானுடர்கள் என்பதற்கோ அவர்கள் வாழ்க்கையில் நடந்ததாக நம்பப்படும் விஷயங்களுக்கோ அசைக்கமுடியாத பக்கா ஆதாரங்கள் இல்லை. அதிகபட்சம் – அவர்களைப் போன்ற சாயலுள்ளவர்கள் சிலர் இருந்திருக்கலாம். ஆனால் – அவை வெறும் நம்பிக்கைகள்தாம், அந்த அளவில் அவை சர்வ நிச்சயமாக மதிக்கப்படவேண்டியவை, அவ்வளவுதான்!

மேலதிக எடுத்துக்காட்டுகளாக, இஸ்லாமிய வரலாறுகளில் ஏகப்பட்ட பிரச்சினைகள்; பல மாற்றுப் பிரதிகள் எரிக்கப்பட்டு ஒரு பிரதியாகத் திருத்தப்பட்டு செருகல்கள் செய்யப்பட்டு ‘அதிகார பூர்வ’ கொர்-ஆன் உருவாக்கப்பட்ட முறை, அதிலுள்ள உள்ளார்ந்த முரண்பாடுகள், அதிலுள்ள சிலபல விஷயங்கள் முன்னமே கிரேக்க, யூத பௌராணிக மரபுக் கதையாடல்களில் இருப்பது, அந்தக் காலத்திய சூழல், நபிக்குப் பின் ஏற்பட்ட குடுமிப்பிடிச் சண்டைகள், அழிப்புகள், மெக்காதான் புனிதத்தலம் என திடுதிப்பென்று நிறுவப்பட்டமை (இத்தனைக்கும் கொர்-ஆனில் ஒரேயொரு இடத்தில்தான் மெக்கா/மக்கா பற்றிய சிறுகுறிப்பு இருக்கிறது), மெக்காவில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில் ஒரு ஆதாரம் (ஒரேயொரு ஆதாரம், வெறும் பூகோள ரீதியாகவே கூட) கிடைக்கப் பெறாமை எனப் பலப்பலவற்றை விவரிக்கலாம்.

ஆனால், அப்ரஹாமிய மதங்களில், அவை பரவிய வரலாறுகளில் இப்படிப் பலப்பல கந்தறகோள நம்பிக்கைகள் இருக்கின்றன – தொடர்ந்து புத்துருவாக்கம் செய்யப் படுகின்றன. மொகலாயர்களால் தான் பாரதம் உயர்வடைந்தது, அவர்களால்தான் பாரதம் ஒருங்கிணைக்கப் பட்டது. இங்கிலாந்து ஆட்சியால்தான் ‘இந்தியா’ எனும் தேசக்கருத்தாக்கம் ஏற்பட்டது. ஸ்பெயினில் முன்னூறு ஆண்டுகள் அரசாட்சி செய்த இஸ்லாமிய ‘மூர்’களின் காலம், உலகத்துக்கே பொற்காலம். பாரதத்தில் மிஷனரிகள் வந்தபின் தான் அனைவருக்கும் கல்வி கிடைத்தது, அதற்குமுன் மேல்ஜாதியினருக்கு மட்டும்தான். அமைதி கொழிக்கும் அப்ரஹாமிய மதங்கள் பாரதத்தை அடைந்தபின் தான் இந்தியாவில் அதன் மூட நம்பிக்கைகளும் சமூகச் சீரழிவுகளும் ஒழிந்து அனைவருக்கும் சுபிட்சம். அல்லது இன்னொரு அப்ரஹாமிய தேவதூதரான கார்ல்மார்க்ஸ் அருளால்தான் இந்தியா ‘முன்னேற’ முடியும்… அப்படி… இப்படி… என ஆதாரங்களேயில்லாமல் அட்ச்சிவுடப்படுபவை அவை…

அவற்றில் ஒன்றுகூட அறிவியலோ புவியியலோ அகழ்வாராய்ச்சிச் சான்றுகள் சார்ந்தவையோ சமகால வரலாறுகளால் சுட்டப்படுபவையோ, கறாரானைவயோ அல்ல; ஒருகால் நிகழ்ச்சி/நடப்புகள் சில உட்செருகப் பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கலாம் அல்லது இழிக்கப் பட்டிருக்கலாம், அவ்வளவுதான். நிலைமை இப்படி இருக்கையிலே – காற்றோடு வந்த வெறும் பிரச்சாரச் செய்திகளை மேலும் உக்கிரமாகப் பரப்புவது சான்றோருக்கும் பிற பிரபலஸ்தர்களுக்கும் அழகல்ல.

ஆனால், நாமிருக்கும் நாடு நமது தமிழ்நாடு எனும் உண்மையை நான் புரிந்துகொண்டிருப்பதால், பெருமூச்சு.

 

9 Responses to “க்றிஸ்தவம், இஸ்லாம் பற்றி, ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்? :-(”

 1. பா.திருமா வளவன் Says:

  போகன் சங்கர்


  • ஓ! எங்கு எழுதினார்? வாட்ஸ்அப் விஷயத்திலா அல்லது ஃபேஸ்புக்கிலா? சுட்டி கொடுக்க முடியுமா?

   இவருடைய கவிதைகள் ஒன்றிரண்டைப் படித்திருக்கும் நினைவு – நன்றாகவே இருந்தன எனவும். :-(

   கொடுமைதான்!


   • ஐயா, நன்றி.

    ஃபேஸ்புக் கணக்கு இல்லாமலேயே அதில் அனாமதேயமாகப் படிக்கமுடியும் என்பதைத் தெரிந்து தெளிந்தேன். இதற்குமுன் சிலபலர் பகிர்ந்த ஃபேஸ்புக் புகைப்படங்களை மட்டுமே பார்க்கமுடியும் என ஒரு தவறான எண்ணத்தில் இருந்தேன்.

    முழுவதும் படித்தேன். நன்றாகத் தான் எழுதியிருக்கிறார். ஆனால் மலினமான கருத்துப் பிழைகள்.

    ஃபேஸ்புக்கில் அவ்வப்போது கருத்து தெரிவித்தே ஆகவேண்டும் என்று இயங்கும்போது இவை வழித்தட விபத்துகளாக நிகழ்ந்து விடுபவையோ என்ன எழவோ, ஈஸ்வரா!

 2. SB Says:

  Bogan Sankar
  2 hrs ·
  ஒரு கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்னா தப்பாய்யா?

  See Translation

  About This Website
  OTHISAIVU.WORDPRESS.COM
  க்றிஸ்தவம், இஸ்லாம் பற்றி, ஏன் இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார்கள்? :-(
  கீழேயுள்ள குறிப்பு, க்றிஸ்த்மஸ் வாழ்த்தாக ஃபேஸ்புக் (அல்லது வாட்ஸ்அப்) எழவுகளில் ஒரு பிரபல எழுத்தாளரால் வெளிய….

 3. Raj Chandra Says:

  இது தொடர்பாக சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம்:


  • http://www.amazon.com/Darkening-Age-Christian-Destruction-Classical/dp/0544800885/

   ஐயா, நன்றி. இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறேன். (இம்மாதிரி – எங்களை நேரிடையாக/எதிர்மறையாக/மரைகழன்று… … எனப் பாதித்த புத்தகங்களைப் பற்றி சிறு அறிமுகங்களைத் தொடர்ந்து எழுதவேண்டும் எனக் கொஞ்ச நாட்களாகவே சிலநண்பர்கள் பேசிக்கொண்டேஏஏஏஏ இருக்கிறோம், பார்க்கலாம்!)

   கேதரீன் அம்மணியின் பெற்றோர்கள் – அம்மா, ஒரு மாடக் கன்னி; தந்தை, ஒரு பாதிரி/துறவி. கத்தோலிக்க மரபில் ஆழ்ந்து வளர்ந்தவர், இவர். ஆனால், படிப்பறிவு மிக்கவர், ஆய்ந்தறியும் பண்பும் உடையவர்.

   ஆக – மிகக் கறாராக (+மட்டுறுத்தப்பட்ட தார்மீகக் கோபத்துடனும்) எழுதப்பட்ட ஒரு புத்தகம். அதன் அடிக்குறிப்புகளும், மேற்கோள்களும், தகுதியுரைகளும் விரிவானவை, இல்லையா?

   ஸ்தாபனம் செய்யப்பட்ட க்றிஸ்தவத்தின் ஆரம்ப நாட்களில் இருந்த மகாமகோ வன்முறைகளை (அதாவது, அது கட்டவிழ்த்துவிட்டவைகளை) ஆதார ரீதியாக விளக்குகிறது இந்த ரத்தினம். (ஆனால் இது கான்ஸ்டன்டைனின் சமகாலத்தைத் தான் தொடுகிறது – நீங்கள் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?)

   எதுஎப்படியோ – பொதுவான கதையாடல் என்னவென்றால் – ரோமானியர்கள்+யூதர்கள் வெறியுடன் க்றிஸ்தவர்களை அதன் ஆரம்பகாலங்களில் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள் என்று! நானும் என் இளவயதில் இந்தப் பரப்புரைகளை நம்பியிருக்கிறேன் என்பதையும் கொஞ்சம் வெட்கத்துடன் ஒப்புக்கொள்ளவேண்டும். :-(

   ஆனால் ஆதாரபூர்வமான நடந்தவையென்னவோ தலைகீழ்! க்றிஸ்தவ வெள்ளையடிப்புப் பரப்புரை யந்திரம் என்பது சுமார் 1500 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. நாட்ஸீ ஞானி கீபல்ஸ் தோற்றார்.

   ஒப்பு நோக்கினால் இஸ்லாமிய பரப்புரை/வெள்ளையடித்தல் என்பது அண்மைய காலங்களில்தான் தீவிரமாக நடக்கிறது. அதுவும் இடதுசாரி அறிவுஜீவிகளாலும் மதவெறியர்களாலும் சிரமேற்றுக்கொண்டு நடத்தப் படுவது.

   இது தொடர்பாக 1950கள் வாக்கில் வெளிவந்த மெஸ்ஸையா எனும் கோரமான கோர்விடால் நாவலையும் நான் பரிந்துரைப்பேன். இது அங்கதச் சுவையுடன் க்றிஸ்தவஇஸ்லாமிய மதப் போக்குகளை விமர்சனப்படுத்துவது.

   https://www.goodreads.com/book/show/88873.Messiah

   (நம் தமிழில் இவை போன்றவை என்று எழுதப்படக்கூடும்?)

   முதலில், அதிகாலைப் புலம்பலை நிறுத்தவேண்டும். :-(

   • Raj Chandra Says:

    >> பாதித்த புத்தகங்களைப் பற்றி சிறு அறிமுகங்களைத் தொடர்ந்து எழுதவேண்டும்
    – எழுதுங்க…எங்களுக்கும் உபயோகம்…நானும் 2019-ம் வருடம் படிக்கும் புத்தகங்களைக் குறிப்புகள் எடுத்து விமர்சனம் எழுதுவதாக உத்தேசம் (ஆனால் ஜனவரி 2-ம் தேதி அதை கைவிட்டுவிடுவேன் :)).

    >> இது கான்ஸ்டன்டைனின் சமகாலத்தைத் தான் தொடுகிறது.
    – ஆமாம்..ஆரம்ப காலத்தைதான் தொடுகிறார்…ஆனால் அதுவே இந்தக் கொடூரம் என்றால்…இதை அவர் ஒரு தொடர் வரிசையாக எழுதினால் நல்லது.

    இந்தக் காலக்கட்டத்திற்கு அவர் கொடுத்திருக்கும் தரவுகளைப் படிக்கவே என் வாழ்க்கை சரியாகிவிடும்.

    >> மெஸ்ஸையா எனும் கோரமான கோர்விடால் நாவலையும் நான் பரிந்துரைப்பேன்.

    – நன்றி. அடுத்துப் படிக்கவேண்டிய பட்டியலில் சேர்த்துக் கொண்டேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s