சிலைத் திருடன் – சில குறிப்புகள் (+ஒரு கமர்ஷியல் ப்ரேக்!)

September 17, 2018

எஸ். விஜயகுமார் அவர்கள் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், மிக முக்கியமானதொன்று.

பாரதக் கலாச்சாரச் சுரண்டல்களுக்கும், அறமற்ற வகையில் அவை அழிக்கப் படுவதையும் குறித்த புத்தகம் – முக்கியமாக, நாடு கடத்தப்பட்ட நம் பொக்கிஷங்களான விக்கிரக மூர்த்திகளைப் பற்றியும் அவற்றை திருப்பிச் சேர்க்க நடந்துகொண்டிருக்கும் பகீரதப் பணிகளைப் பற்றியுமானது…

எதிர்காலத்தைக் குறித்த, நம் நம்பிக்கைகளை கூர்மைப்படுத்தும், அடர்வடையச் செய்யும் புத்தகமிது. நம் எழுச்சிமிகு (இதனை நான், சாரு நிவேதிதாத்தனமான அல்லது பொதுவாகவே தமிழ் அலக்கியத்தனமான புல்லரிப்புகள் பற்றி விரசமாகச் சொல்லவில்லை) இளைஞர்களின் காத்திரமான பங்களிப்புகள், நம் கலாச்சார மேன்மைக்காக அவர்கள் சிந்தும் வியர்வை பற்றிய – துரித நடையில் எழுதப்பட்ட, வெகு சுளுவாகப் படித்துவிடக்கூடிய புத்தகம்…

ஆகவே, அவசியம் இப்புத்தகக்தை வாங்கிப் படிக்கவும்!

மறுபடியும் மேற்கண்ட கோரிக்கையைப் படிக்கவும்…

0-0-0-0-0-0-0

ஐந்தாறு மணிநேர ரயில் பயணங்களில் உள்ள ஒரு பெரிய அனுகூலம் என்னவென்றால், ஒருவிதமான தொந்திரவுமில்லாமல் உட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு இரண்டுமூன்று புத்தகங்களை முடித்துவிடலாம். சனிக்கிழமை பெங்களூர்-சென்னை ஷதாப்தி வண்டியில் எனக்கு அடித்தது யோகம். முடித்த மூன்று புத்தகங்களில் இதுவும் ஒன்று.


விறுவிறு நடையில், ஆனால் ஆத்மார்த்தமாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம்.

இதைப் பற்றிக் க்ளிப்தமாகச் சொல்லவேண்டுமென்றால் – பண்டைய சிலைகள், அவை வழிபாட்டிலில்லாததன் வரலாறு, நம் புராதனக் கோவில்கள் – அவற்றின் சிதில நிலை, சிலைத் திருடர்கள், அயோக்கிய தமிழக காவல்துறையினர், ஜொலிக்கும் நேர்மையும், செயலூக்கமும் கொண்ட அதே காவல்துறையினர் (எனக்கு ஒரு புதுதகவல்: ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்களின் மதிப்புக்குரிய தன்மை), அமெரிக்க/ஆஸ்திரேலிய / ஸிங்கப்பூர் பகுதிகளில் உள்ள அருங்காட்சியகங்களின் அடிப்படை அயோக்கியத்தனம் – மெத்தனம், நம் லிபரல்கள் ‘சான்றோர்கள்’ வகை அழிச்சாட்டியம், சிலைதிருடல்களைத் துப்பறிவது எப்படி, வெளி நாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி, சிக்கல்களைச் சிடுக்கவிழ்த்தல், விடாமுயற்சி, இன்னும் செய்யவேண்டிய மாளாவேலைகள், நம் பொக்கிஷங்களுக்கு உரிய மரியாதை கொடுத்து நம் கௌரவத்தை மீட்டெடுப்பது எப்படி எனப் பலவாறு சொல்லலாம்.

இதனை எழுதிய விஜயகுமார் அவர்களின் முனைவுகள் குறித்து கடந்த 5 வருடங்களாக அறிந்திருக்கிறேன். ஆக்கபூர்வமான செயல் வீரர். கற்கவிதை தளக்காரர் – http://poetryinstone.in/en/ – இன்றுதான் இவருடைய ட்விட்டர் கணக்கு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டேன் – https://twitter.com/poetryinstone.

விஜயகுமார்கள் போற்றுதும், களப்பணி போற்றுதும்… வேறென்ன சொல்ல.

-0-0-ஒரு கமர்ஷியல் ப்ரேக்-0-0-

இப்புத்தகத்தைப் படித்து(!) எஸ்ரா தனித்துவமாக விமர்சனம் செய்வதானால் “இது ஒரு தனித்துவமான படைப்பு. ஒரு கவிதை என்றே சொல்லிவிடலாம். இதே மாதிரி ஒரு புத்தகத்தை, ஜப்பானிய மொழியில் படித்திருக்கிறேன். அதுவும் தனித்துவம்தான்.”

ஜெயமோகன் போலச் சொல்வதானால், “நம் பழமையான பின்நவீனத்துவ ஞானமரபுகள் வழியான பௌராணிக அழகியல் முறைமைகளில், என் குருவுக்கு நான் பலமுறை, ஆகச்சிறந்த வகையில் சொல்லிக்கொடுத்துள்ளபடி – நான் இப்புத்தகத்தை இரண்டு விதமாகப் புரிந்துகொள்கிறேன்.

ஒன்று: சிலை; இரண்டு: திருட்டு. இப்புத்தகத்தின் மையக்கருத்தை இவையிரண்டும் சித்திரிப்பதற்கு அப்பாற்பட்டு இவையன்றி இப்புத்தகத்தின் பிரதியில் பிறிதொன்றுமில்லை. இதன் தலைப்பை ‘பொன்னா மங்கை” அல்லது “வெங்கல எரிதழல்” அல்லது “ஐம்பொன்டமார விரிசடை அழகியோன்” என வைத்திருந்தால் இதன் அழகியல் இன்னமும் மெருகேறியிருக்கும். விஜயகுமார் என் வாசகரல்லர் என நினைக்கிறேன், பாவம்!”

சாரு ‘கோவைக்காய்’ நிவேதிதா பெருந்தகையின் புத்தக விமர்சனம்: “என் உயிரைக்கொடுத்து இந்த விமர்சனத்தை எழுதுகிறேன். இதன் தலைப்பு ‘சிலே திருடன்‘ என இருந்திருக்கவேண்டும். லத்தீ அமெரிக்கா சிலேயில் ஸால்வதொர் அய்யண்டே, ஸலாத் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? படு அமர்க்களம்.

மேலதிகக் கேள்விகளின் விவரங்களுக்கு என் ‘காகிதக்கூழ்ப் புத்தகம் – 712’ல் பதில் இருக்கிறது. படிக்கவும். அதில் ஒவ்வொரு வார்த்தையும் லட்சம் பொன் பெறும். அப்படித்தான் என் வாசகர்கள் சொல்கிறார்கள். கீழே என் வங்கிஎண் விவரங்கள் இருக்கின்றன. என்னைக் கேலி செய்பவர்கள் என்னைப் படிக்கவேண்டாம். எப்படியும் நான் டேங்கோ ஆட ப்ரேஸில் போய் ஸெட்டில் ஆகிவிடப் போகிறேன்.”

‘துக்ளக்’ புகழ் பரக்கத் அலி உவாச: “இப்புத்தகம் நல்ல தாளில் அச்சிடப்பட்டு 200 பக்கங்களில், ஜகன்னாத் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு வந்துள்ளது. கெட்டி அட்டை. மாலிக் காஃபுர், அலாவுத்தீன் கில்ஜி போன்ற போற்றத்தக்க நம் சான்றோர்களைப் பற்றிய முன்னுரைக்கு அப்பாற்பட்டு, இதில் இஸ்லாம் பற்றி ஒன்றுமே பெரிதாகச் சொல்லவில்லை.

சிலையிலும் திருட்டிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு, இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.விலை ரூ 399/-.

தமிழ்த் திரைக்கதைவசன கர்த்தா (யேஸ்ஸுவே என்னை மன்னியும்!) டைரடக்கர் குஞ்சாமணிகளின் யோசனைகள்: இப்புத்தகத்தை உல்ட்டா செய்து, கமுக்கமாக ‘உலகத் திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக’ ஒரு கிரைம் த்ரில்லர் திரைப்படத்தை உருவாக்கலாமா?

எந்த நடிகைக்கு, உமாமஹேஸ்வரி சிலை போல அலங்காரம் செய்து கனவுசீனில் அடைமழையில் சிவனுடன் குத்தாட்டம் போடவைத்தால், அந்தப் படம் வெற்றிகரமாக பத்தாம் நாளை நோக்கிப் பீடைநடை போடும்? ஹிந்துக்களைச் சீண்டுவதுபோல தமிழவழமையான வக்கிரத்துடன் எடுத்தால் இன்னமும் விளம்பரம் கிடைத்து (அவர்கள் என்ன, இஸ்லாமிய தீவிரவாதிகள் போலவந்து கழுத்தையா சீவப்போகிறார்கள்? அல்லது க்றிஸ்தவ தீவிரவாதிகள் போல, போப் கிட்டே போய் மத்தியஸ்தம் செய்யச் சொல்வார்களா?) நிஜமாகவே வெற்றியடையலாமே!”

-0-0-0-0-0-0-

… சுமார் 40-45 வருடங்களுக்கு முன், ர சு நல்லபெருமாள் அவர்கள் (கலைமகள் பத்திரிகையில் தொடராக?) எழுதிய ‘நம்பிக்கைகள்‘ நாவலிலும் – சிலை திருட்டு, கடத்தல், காதல், கருத்துகள், விழுமியங்கள், வாழ்க்கை எனக் கதை விரியும். மிகவும் நன்றாகவும் நேரடித்தன்மையுடனும் எழுதப்பட்ட புதினங்களில் அதுவும் ஒன்று என்பது என் கருத்து. (இது ஒரு முக்கியமான தமிழ்ப்புனைவு; ஆத்மார்த்தமானது. ஆகவேயும் அவசியம் நம்மால் படிக்கப்படவேண்டும் என்பது என் கோரிக்கை – ஆனால் இது, ஒரு புத்தகமாக வெளிவந்ததா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.)

பீஷம் ஸாஹ்னி அவர்களின் ‘தமஸ்‘ புத்தகத்திலும் சிலைத் திருடல்கள் பற்றி,  ‘இவற்றைப் பார்த்துக்கொள்ள இந்தியர்களுக்கு முடியாது, நம்மால் தான் முடியும்’ எனத் தாராளமான வெள்ளைக்கார இளக்காரத்தனத்துடன் அவர்கள் திருடிக்கொண்டதைப் பற்றிய சில குறிப்புகள் வருகின்றன – என எனக்கு மங்கலான நினைவு. (யாராவது இது தவறு எனச் சுட்டிக்காட்டினால், தாராளமாகத் திருத்திக்கொள்கிறேன், சரியா?)

(1997-98) ஸான் ஃப்ரான்ஸிஸ்கொ பகுதியில் இருந்த ஒரு பணக்கார அமெரிக்கர் (பாரத வம்ஸாவளிக்காரரல்லர்) வீட்டு வரவேற்பரையில் மரகத லிங்கம் ஒன்றை, காட்சிக்காக வைத்திருந்ததைப் பார்த்தேன். பிற பல இந்திய ஆஃப்கனிய பொக்கிஷங்களையும்… :-(

(1999 – 2001) லண்டன் அருகே உள்ள/இருந்த ஹேர்ட்ஃபோர்ட்ஷயர் பகுதியில் இருந்த சிலபல (அந்தக்கால கிழக்கிந்திய கம்பெனி வேலைக்காரர்களுடைய தலைமுறைக்கார) வீடுகளுக்குச் சென்றபோது – அங்கிருந்த நம்முடைய ஐம்பொன் சிலைகளையும் நாணயங்களையும் ஹொய்ஸாள ஸ்கிஸ்ட் சிற்பங்களையும் சோழர்கள் காலத்து க்ரேனைட் சிற்பங்களையும் கண்டு அரண்டு போனேன்! அவ்வீட்டுக்காரர்கள் சொன்னதன் சாராம்சம்: “இவை எங்கள் மூதாதையர்கள், கேட்பாரற்றுக்கு கிடந்த பேகன் [நம் ஹிந்து] வழிபாட்டிடங்களிலிருந்து அவை காபந்து செய்யப்படுவதற்காகக் கொணர்ந்தவை, திருடியவையல்ல; இன்னமும் இருந்தன, சிலவற்றை நாங்கள் விற்றிருக்கிறோம்!” :-(

என் அனுமானத்தில் – லட்சக்கணக்கான எண்ணிக்கைகளில், நம் பொக்கிஷங்கள் திருடப்பட்டுள்ளன. இவை சட்டபூர்வமாகவோ, அல்லது பிறவகைகளிலோ திருப்பிக் கொணரப்பட்டு – நம் பாரதத்தின் மகோன்னதப் பெருமை மீட்கப்பட்டு + ஆக்கபூர்வமான பிறவழிகளிலும் நாம் மேம்படவேண்டும் என்பதென் அவா.

-0–0-0-0–0-0-0-0-0-

விஜயகுமாரின் ‘த ஐடல் தீஃப்’ புத்தகத்தில் சிலபல விஷயங்கள், மேலதிகச் சிரத்தையுடன் கொஞ்சம் நேர்த்தி செய்யப்பட்டிருக்கலாம்.

அ. எடிட்டிங் / படிதிருத்துதல் – இதனை அவசியம் செய்யவேண்டும். ஏனெனில் சில இடங்களில் சில சொற்றொடர்கள் மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மொழியும் கொஞ்சம் கவனிக்கப்படவேண்டும். + ஓட்டமும், சிலபல இலக்கணப் பிழைகளும்

ஆ. சிலசமயங்களில், அந்த ‘கல்கி’ க்ருஷ்ணமூர்த்திய ‘பொன்னியின் செல்வன்’ பாதிப்பிலா எனத் தெரியவில்லை – அதிலுள்ள ‘இப்போது வாசகர்களை கலங்கரை விளக்கத்துக்கு அழைத்துச் செல்வோம்’ வகையில் விஜயகுமார் எழுதியிருக்கிறார். பெரிய்ய பிரச்சினை இல்லை என்றாலும், அது துருத்திக்கொண்டு நெருடுகிறது.

இ. பொதுவாகவே, இம்மாதிரி புத்தகங்களுக்கு ஒரு இன்டெக்ஸ் இல்லாத விஷயம்  கொஞ்சம் வருத்தம் தருவது. கணிநி மூலம் சகலமும் நடக்கும் இக்காலங்களில் இந்தவொரு விஷயத்துக்கு ஏன் பாரபட்சம் எனத் தெரியவில்லை. இது இல்லாததால், விஷயங்களைக்/குறிப்புகளைச் சட்டெனச் சென்றடைவது கொஞ்சம் சிடுக்கல்.

சில யோசனைகள்:

விஜயகுமார் இதே ரீதியில் மேலும் சில புத்தகங்களை எழுதலாம்; மேலும், இம்மாதிரி விஷயம் குறித்த களப்பணிகளில் எப்படி ஈடுபடுவது என்பதற்காக ஒரு கையேடு/குறிப்பேடு எழுதலாம்; சிலபல தரவுகளை அளித்து – இளைஞர்களுக்கு, ஒரு புதிர் போல, இச்சிடுக்கவிழ்த்தல்களில் ஈடுபட – ஒரு போட்டி (அல்லது போட்டிகள்) வைக்கலாம்.

நான் டீவி எழவைப் பார்ப்பதில்லை – ஆனால் பரவலாக இவ்விஷயங்கள் சென்றடைய, ஒருகால், இதனை ஒரு டீவி ஸீரியலாக எடுக்கலாமோ என்ன எழவோ?

பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு ஒரு கோரிக்கை: இப்புத்தகம் தமிழில் பெயர்க்கப்பட்டு, கொஞ்சம் எடிட் செய்யப்பட்டு வெளிவந்தால் – தரவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நல்ல, நிஜ க்ரைம்-த்ரில்லராக இது வெளிவர / பரவலாகச் சென்றடைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றனவோ?

சரி. உங்களுக்கு நம் பாரம்பரியங்களின் மீட்சிக்கான எத்தனங்களில் நம்பிக்கை இருந்தால், அதில் ஈடுபட்டுள்ளவர்களைப் போற்ற வேண்டும், உற்சாகப் படுத்தவேண்டும் என எண்ணம் இருந்தால், அவசியம் இந்தப் புத்தகத்தை வாங்கி உய்யவும்.

தற்போது இது ஹார்ட் பௌண்ட் (கெட்டி அட்டை) புத்தகமாகத்தான் கிடைக்கிறது, ஆனால் சாதாரண / கிண்டில் புத்தகமாகவும் கூடியவிரைவில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

வாழியவே பல்லாண்டுகாலம், இந்த விஜயகுமார்கள்… வேறென்ன சொல்ல…

நன்றி.

 

7 Responses to “சிலைத் திருடன் – சில குறிப்புகள் (+ஒரு கமர்ஷியல் ப்ரேக்!)”


  1. சார்,
    புத்தகத்துக்கான சுட்டி (https://www.amazon.in/Idol-Thief-S-Vijay-Kumar/dp/9386228823) இடுகையில் சரியாக தொடுப்பு கொடுக்கவில்லை.

    அன்புடன்
    வெங்கட்ரமணன்


    • ஐயா, திருத்திக்கொண்டேன். நன்றி. :-(

      கவனக்குறைவு ஒரு அசிங்கமான விஷயம். இனிமேல் இப்படியாகாமல் பார்த்துக்கொள்கிறேன்.

      ரா.


  2. //அவர்கள் என்ன, இஸ்லாமிய தீவிரவாதிகள் போலவந்து கழுத்தையா சீவப்போகிறார்கள்?//

    தல, இப்படி சொல்லி சொல்லி நம்மாட்களும் கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள் . இன்னும் கிறிஸ்துவ, இஸ்லாமிய extremistகள் அளவுக்கு போகவில்லை. வரும் நாட்களில் இந்து extremistகளும் வளர்ந்துவிட்டால் நாடு தாங்காது என்றே அஞ்சுகிறேன்.

  3. Anonymous Says:

    Sir, Thanks for the good reference.
    Such dedication towards Motherland at his age (45+) is heart-warming.

    https://www.livemint.com/Leisure/pk6se8SuZuTwdbEl68nnpI/A-heritage-whodunnit.html

    Spot-on at this point in time (Tamilnadu’s revamping the respective division).

    Incidentally there was this movie ‘ Iraivi’ (we know that you do not watch movies) which was glossing over the same matter.

    Thanks for your highlighting the well-deserved.

    Regards

  4. Swami Says:

    Five more years of Modi, please God! For your own sake!

  5. venkatesh Says:

    அந்த புத்தகத்தை பதிரி சேஷாத்திரி வெளியிட மாட்டார்,அதாவது இனி ,எந்த புத்தகத்தையும்,-அந்த அளவுக்கு கிழக்கு பதிப்பகத்தில்,எழுத்து பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.எங்கள் தலைவரின் பேரிலக்கியத்தை அவர் வெளியிடுவதால் வந்த வினை!அந்த காலத்தில் பல்லாயிரம் புத்தகங்களை அச்சிட்டதால் ,உலோக எழுத்துக்கள் இளைத்து போனதை அறிவோம்,டிஜிட்டல் எழுத்துக்களையும் தேய அடிக்கும் அட்டூழிய படைப்பாற்றல் மிக்க எங்கள் தலைவரை நீங்களும் அறிவீர்கள் ,பத்திரி சேஷாத்திரிக்கு உதவ எல்லா எழுத்து வங்கிகளும் கைவிரித்து விட்டனவே!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s