தமிழகக் கடலோரத்தில் ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்+++ அரக்கன்!

March 2, 2017

*பகீர் செய்தி* … … *பயபீதி*     … *படுபயங்கரம்*… … *மகா கோரம்*… :-( இந்த அவலத்தைக் கேட்பாரில்லையா? :-(

…தாம் இழுத்த இழுப்புக்கு வராமல் சசிகலாவும் நடராஜனும் டபாய்த்ததால், பன்னீரும் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டதால் — ஏன், இளம் 64வயதிலேயே இளைஞரணித்தலைவராக இருக்கும் இசுடாலிருமேகூட பிடி கொடுத்துப் பேசாததால் — தமிழகத்தையே நசுக்கி அழித்தொழிக்க காவி மோதிகும்பல் அரங்கேற்றியிருக்கும் விஷவிளையாட்டுதான் இந்த ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் விஷம்!

screenshot-from-2017-03-02-144140

குடமுருட்டி குண்டு, கல்பாக்கம், கூடங்குளம், மீத்தேன், ஹைட்ரோகார்பன்,  ந்யூட்ரினொ, வாக்ஸினேஷன்… … எனத் தொடர்ந்து தமிழகத்துக்குக் கொடுக்கப்படும் அநியாய அழுத்தங்களில் ஒன்றாக ஏன் இன்னமும் இந்த ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட் அரக்கன் அங்கீகரிக்கப்படவில்லை? ஏனிந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?

…ஹ்ம்ம்ம்… இந்த டைஹைட்ரஜன் மோனாக்ஸைடு விஷத்தைப் பற்றி ஏற்கனவே நான் விலாவாரியாக எழுதிவிட்டேன்!

திருப்பித் திருப்பி இம்மாதிரி – நம் தமிழகத்தைப் பாதிக்கப்போகும் எதிர்மறை விஷயங்களைப் பற்றி எழுதும் கரிசனம் எனக்கு மட்டும்தான் இருக்கிறதா? தமிழகத்தின் பாதுகாப்பையும் மேன்மையையும் நானொருவன் மட்டும்தான் விழைகிறேனா? ஆ! என் நெஞ்சும் அதனைப் போலவே ஒலிக்கும் இன்னொரு திராவிட பாகமும் வலிக்கின்றனவே! ஐயகோ!

….இந்தச் சதிக்குப் பின்னால் இருக்கும் காவியை நம்மால் ஏன் இனம்  கண்டுகொள்ளமுடியவில்லை? மோதியும் அமித்ஷாவும் சேர்ந்து தமிழகத்தைக் காவிமயமாக்க முயற்சிக்கிறார்களே! காக்கி நிஜார்கள் நம்மை ஆளப் போகிறார்களோ?

-0-0-0-0-0-0-

கதிரியக்கம்!  இந்த ஸோடியம் குளோரைட்டைஹைட்ரஜன்மோனாக்ஸைட் எழவு என்பது வெறுமனே ஒரு விஷக் கரைசல் மட்டுமல்ல! அதில் கதிரியக்கம் தொடர்பானவையும் இருக்கின்றன! அய்யோ! கதிரியக்கம்! அணுசக்தி! அணுகுண்டு! சந்ததிக்குச் சமாதி! தேவையா??

screenshot-from-2017-03-02-131437

(ஒரு முக்கியமான குறிப்பு: பொதுவாக, எந்தவொரு விஷயம் குறித்துமே நம் வாயில் நுழையாத ஏதாவது வார்த்தையிருந்தாலோ, அல்லது வாயில் நுழைந்தாலுமேகூட நமக்கு அதனைப் பற்றி ஒரு எழவுமே கூடத் தெரியாமல் இருந்தாலோ – அதைப் பற்றி நாம் உண்மையாகவே பயப்படவேண்டும். மேலும் வாட்ஸ்அப் போன்ற அதிபுத்திசாலிகள் வளையவரும் வளைத்தலங்களில் உடனடியாக நம் பயத்தைப் பரப்பவேண்டும். வாட்ஸ்அப்போர் சொல் வார்த்தை அமிர்தம்.  இப்படிப்பட்ட கொள்கையை வளர்த்துக்கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன் – LifeSkill – என்பதைப் புரிந்துகொண்டு இன்புறவேண்டும். நன்றி! #ங்கொம்மாள)

மேற்கண்ட அறிவியல் ஆவணத்தின் படி 3.5% ஸோடியம் குளோரைட் உள்ளடக்கிய டைஹைட்ரஜன்மோனாக்ஸைட் கரைசலில் பலப்பல கதிரியக்கப் பொருட்களும் இருக்கின்றன. இவை மட்டுமல்ல, அதில் காரீயம், மெர்க்குரி போன்ற நேரடி விஷப் பொருட்களும் இருக்கின்றன!

இதற்கெல்லாம் வினை விதைத்தது யார்? மோதி காவிகும்பல்!!

…இதையெல்லாம் தெரியாமல்தான், இந்த ஊடுருவும் விஷ அரக்கன் என்னவென்ன அட்டூழியங்களைச் செய்யும் என்பதை அறியாமல்தான் – தமிழர்களாகிய நாம் வாயில் கட்டைவிரலையும், முடிந்தால் நம்முடைய நமக்குநாமே ஆண்குறியையும் போட்டுச் சப்பிக் கொண்டிருக்கிறோம்! போதும் நாம் திராவிட அப்பாவிகளாக இருந்தது!! வெற்றிவேல் வீரவேல்!!

எடடா, அந்தக் கொலைவாளினை எடடா!… அடடா, மன்னிக்கவும். நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். :-(
-0-0-0-0-0-

தமிழகத்தில் மையம்கொண்டு ஆர்பரித்துக்கொண்டிருக்கும் திராவிட விஷம் என்பது பொதுவாகவே ஒரு கொள்ளைநோய் – ஆக எந்த நல்லதையும் அது வெற்றிகரமாக முறியடித்துவிடுமென்றாலும், அதன் வீரியமும் இனமானமீயமும் இந்தப் புது அரக்கனை எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே என்பதை நம் திராவிடத் தொழில்முறை கொள்ளைக்காரர்கள் அறிந்திருக்கிறார்களா? வெறும் பகுத்தறிவுத்தனமான சுயமரியாதை இறுமாப்பை (=TwicePardon) வைத்துக்கொண்டு என்னதான் செய்யமுடியும்?

இந்த அயோக்கியத்தனத்தைக் கேட்பாரில்லையா? உண்மை விளம்பிகளான விகடன்களும், வைகோவால்சாமியாடிகளும், மேதாபட்கர்களும், உதயகுமார்களும், பரீக்ஷா ஞாநிகளும் – ஏன், என்னெருமைப் பேராசானான எஸ்ராவும், அவருடைய அதிபுத்திசாலித் தோழரான பூவுலகின் நண்ப சுந்தரராஜனும் கூட இதனைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்களே! தமிழகமே கதிரியக்கத்தால் கருவழிக்கப்பட்டு விஷத்தால் ஆட்கொள்ளப்பட்டு ஒழிந்தால்தான இதன்மீது தம் கடைக்கண் (ShopEye) பார்வையை வீசுவார்களா இந்த ரெகுலர் போராளிகள்?

இத்தனைக்கும் மோதி கும்பல், இந்த விஷத்தை அந்தமானுக்கும் மச்சிலிபட்டணத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வங்காள விரிகூடாவில் – ஒரு விமானம் தாங்கிக்கப்பலிலிருந்து கொட்டியதை பறந்துகொண்டே நேரடியாகப் பார்த்திருக்கிறார் ‘ஜூனியர் விகடன்’ புகழ் கழுகார்! இந்தக் கழுகின் மீது ஆரோகணித்து இந்தப் பகீர் விஷயத்தை அவதானித்திருக்கிறார், புகழ் பெற்ற அதிஷா எனும் குண்டுதைரிய, மெச்சத்தக்க நிருபர்! அந்த விஷமானது நேரடியாக தமிழகக் கடற்கரையைத்தான் தாக்கும் என்பது எல்லாமும் திரிகாலமும் அறிந்த திரியாவரத்தாரான அதிஷாவாருக்குத் தெரியாதா? டம்மிகளுக்காகவே திராவிடம் எனப் புத்தகங்களை எழுதிக் குவித்தால் போதுமா? டம்மிச் சமூகப் பொறுப்புணர்ச்சி வேண்டாமா? அல்லது – பொறுப்புணர்ச்சி என்பதை – பொறுமையாக எல்லாவற்றையும், கிடைத்ததையெல்லாம் புணர்வது எனத் திராவிடத்தனமாகப் புரிந்துகொண்டுள்ளாரா?

நாம் தமிழர் இயக்கத்தினருக்கு என்னவாயிற்று? தமிழனைக் கடற்கோள் காவு கொண்டபின் தான் பிரபாகரனுடையதைப் பிடித்துக்கொண்டு தொங்குவதை விடுவார்களா? சீமார் மார் தட்டிக்கொண்டு புறப்படாமல் அப்படி என்ன பட்டிதொட்டிகளிலெல்லாம் வெறும் ஃப்லெக்ஸ் தட்டியாய் நின்றுகொண்டிருக்கிறார்?

இப்படிச் செயலூக்கமில்லாமல் இருந்தால், தமிழகம் எப்போதுதான் சீமார்பகம் ஆவதாம், சொல்லுங்கள்? (அரைக்கிழவனான எனக்கே சாண்டில்யத்தனமான கிளுகிளுப்பாக இருக்கிறதே, தாங்கமுடியவில்லையே!)

டிவிட்டர் வாட்ஸ் அப் விஞ்ஞானிகளும், அதிசான்றோர்களும் அப்படி என்னத்தான் செய்துகொண்டொருக்கிறார்கள்? ஏன் அதே பழைய ஜக்கி பப்பரப்பாவில் இன்னமும் நேரத்தை உபயோககரமாகச் செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள்? அடுத்த பிரச்சினை என்ன எனப் பார்த்து அல்லது பார்க்காமலேயேகூட கருத்துச் சொல்ல வேண்டாமா? பிரச்சினை என்னவென்பதன் அடிப்படையையே புரிந்துகொள்ளாமல் அதனை உடனடியாக ஃபார்வர்ட் செய்தே முடிச்சவிழ்ப்பதுதானே சமூகவளைத்தலப் போராளிப்பெருச்சாளித்தனத்திற்கு அழகு?

என் கண்ணே பட்டுவிடும்படிக்குப் படுபுத்திசாலிகளும் முற்றுமுணர்ந்தமுனிவர்களும் அவ்வப்போது மனிதவுரிமைக் காரர்களும் காடுகள் அழிவதைத் தடுக்க பிலாக்கணம் வைப்பவர்களுமான யுவகிருஷ்ணா அதிஷா போன்ற ஞானக் குஞ்சாமணிகள் — ஏன் இந்தப் பகீர் பயங்கரத்தைப் பற்றித் தங்களுடைய மேலான கருத்துகளைத் தெரிவிக்கவே மாட்டேனென்கிறார்கள்? பப்பரப்பா பத்திரிகை நிருபர்களாக லட்சணமாக, கவர் வாங்கிவிட்டார்களோ? அல்லது வேறெங்காவது புரளிகளைக் கிளப்பிக்கொண்டும், பிதுங்கிவழியும் பாற்சரப்பிப் படங்களை ரசித்துக்கொண்டும் பகிர்ந்தும் ஆனந்தமாகவே திராவிடத்தனம் செய்துகொண்டிருக்கிறார்களா?

ஏஆர் வேங்கடாசலபதியும் பாரத்வாஜ் ரங்கனும் ஏன் இதனைப் பற்றி பத்துமுழ நீள தலைப்புடன் ஒரு கருத்தும் சொல்லவில்லை? ‘In those days there was no sodium chloride: How aryans forced the subaltern dravidians into submission by feeding them with NaCl‘ +  ‘SaltyTearjerkers in times of tamil films, a celluloid history in DVD format‘ என்றெல்லாம் அவர்கள் எழுதலாமே? கூறுகெட்ட தஹிந்துவும் அவற்றை ஆனந்தமாகப் பதிப்பிக்குமே? ஏன் செய்யவில்லை??

ஸோடியம்குளோரைட்: தமிழ நன்றிக்கடனின் முன் நவீனத்துவ குறியீடு‘ என ஆனந்தமாக நாகார்ஜுனன் கட்டுரைகளையும் ‘செய்நன்றியும் செய்வினையும்: பின் நவீனத்துவக் கட்டுடைப்புப்பேயோட்டலில் ஸில்வியாவின் பங்கு‘ போன்ற எம்டிஎம் கட்டுரைகளையும் தேவை மெனெக்கெட்டுப் படித்து —  ‘உப்பைத் தின்னவன் தண்ணீ குடிப்பான்‘ என, கபீர் போன்ற எளிமையுடன் உப்பைப் பற்றியும் தமிழப் பண்பாட்டில் அதன் பங்கு பற்றியும் அறிந்துள்ள நமக்கா இந்தப் பிரச்சினை? :-(

இந்த தொ ‘தொப‘ பரமசிவம் போன்ற திராவிட ஆராய்ச்சியாளப் பெருமகனார்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்? சும்மா மடை உடை கடை என விஜயடிராஜேந்தர் தனமாக உளறிக்கொண்டிருக்காமல் – இந்த விஷத் திரவத்தை அகற்றுவது எப்படி என ஆராய்ச்சி செய்து எழுதக் கூடாதா?

பனைமரத்தை ஒரு பெரிய்ய தேக்கரண்டி போல  உருமாற்றி அதனை வைத்து லெமூரிய காலத்தில் தமிழன் செய்ததுபோலவே மொண்டுமொண்டு இந்த விஷத்தை அகற்றலாம் எனத் தெகிர்யமாக அட்ச்சுவுடாமல் இதென்ன அய்யா சோம்பேறித்தனம்?

அமார்க்ஸும், சுபவீயும், திமுகவின் ஆஸ்தான அறிஞரான ‘எல்லாம் தமிழ், தடுக்கிவிழுந்தால் தமிழ் ஆகவே என் புனைபெயரைத் தவிர்த்து ஸம்ஸ்க்ருதத்தை ஒழி’ புகழ் மனுஷ்யபுத்திரனும்  ஏன் இது குறித்து ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் கூடப்  போடவில்லை? கவிஞர் கனிமொழிக்கு இதனைப் பற்றி ஒரு புரட்சிப் புதுக்கவிதையைக் கூடவா எழுதமுடியாது? திஹார் சிறை போலல்லாமல் அவர் வீட்டில், கழிப்பான்கள் எல்லாம் மேலை நாட்டு வகைதானே? ஆனந்தமாக உட்கார்ந்துகொண்டு இலக்கியப்பணி செய்யலாமே! :-(

 

எஸ்கேபி கருணா பற்றி எழுதினால் ஜெயமோகன் வரிந்துகட்டிக்கொண்டு அடிக்கிறார். சரி, பொட்டி வாங்கியிருக்கிறார் என விட்டுவிடலாம் என்று பார்த்தால், ஜக்கி வாசுதேவின் விஷச்சிவ விவகாரத்தையும் ஆதரிக்கிறார். சரி இங்கும் பொட்டி வாங்கியிருக்கிறார் எனக் கருதிவிடலாம் என்றாலும் முற்காலத்தில் இவர் இடதுசாரி சம்மேளனம் ஒன்றிலும் ஆர்எஸ்எஸ் அமைப்புடனும் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பதால் அங்கும் பொட்டிகள் வாங்கியிருக்கவேண்டும் என்பதைத்தான் என் தனிப்பட்ட நுணுக்கமான புலன்விசாரனை காண்பிக்கிறது.  ஆகவே, மோதியிடம் வெகு நிச்சயமாக பொட்டி வாங்கியிருப்பதால்தான் இந்த கடலோர விஷத்தைப் பற்றிக் கமுக்கமாக இருக்கிறார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட மனிதரின் தளத்தின்பக்கம் இனிமேல் போகவேபோவதில்லை. ஆனால் இரண்டு விஷயங்கள் என்னைக் குடைகின்றன 1) இவ்வளவு பொட்டிகளை வாங்கிக்கொண்ட அவர், அவற்றை என்ன செய்கிறார்? ஏதேது – இந்தச் சதி, பொட்டி விக்கிரமாதித்தன் கதைபோல விரியும்போலிருக்கிறதே! அய்யோ! 2) ஒரே சமயத்தில் எப்படி திராவிட, ஹிந்துத்துவ, இடதுசாரி, வலதுசாரி என அனைவரிடமும் இவரால் பொட்டி வாங்கிக்கொள்ள முடிகிறது? ஜித்தனாக இருப்பார் போலிருக்கிறதே!

சாருநிவேதிதா இந்த அலங்கோலத்தைப் பற்றி இன்னும் ஏன் ஒரு ஆங்கில நாவலை எழுதவில்லை? அவர் வீட்டில் ஒரு விளிம்புகூட அவருக்குக் கிடைக்கவில்லையா, உட்கார்ந்து எழுதுவதற்கு? ஏன் அதற்கு, சென்ற வருடத்துக்கான  நொபெல் பரிசோ மேன்புக்கர் விருதோ கிடைக்கவில்லை? ஏன் அதற்கு முந்தைய வருடமே அதன் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு அர்ஜெண்டினாவில் பதிப்பிக்கப்படவில்லை? தமிழகத்தில் எல்லோருமே philistines. எந்த விஷத்தையோ குடித்துச் சாகட்டும், எனக்கென்ன. நான் கேரளாவில் தருண் தேஜ்பாலுடன் செட்டில் ஆகிவிடப்போகிறேன்.

 

இடதுசாரிப் போராளிகளெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு போராடாமல் துண்டறிக்கைகளை அள்ளி இறைக்காமல் வேறென்ன புரட்சிப் பூபாளம் தாம்பாளம் என அலைந்துகொண்டிருக்கிறார்கள்?

நக்கிலைட்டுகள் இது குறித்து ஒரு போராட்டத்தையும் அறிவிக்கவில்லையே? துறைமுக முற்றுகை கடற்கரை முற்றாதகால் என எத்தையாவது ஆரம்பித்தால்தானே ஊடகப் பார்வைகள் இவர்கள் மேல் திரும்பும்? ஏன் இவர்களுக்கு இப்படியொரு பாராமுகம்?

கண்டகண்ட  ஜல்லிக் கட்டுக்கும் கான்க்ரீட் பலகைக்கும் போராடி, தமிழ்ப் பாரம்பரியத்தைப் பாதுகாத்த இளைஞர்களும் இஸ்லாமிய அஹிம்சைவாத இயக்கங்களும் ஏன் இந்தக் கொடூரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன? இந்த விஷத்துக்கு எதிராக ஏன் போராடவில்லை? விஷம் ஹராம் அல்லவா? ஹேராம்!

இசுடாலிர் தலைமையில் திமுக  ஏன் ஒரு நாள் அடையாள அறப்போராட்டத்தை நடத்தவில்லை?  உண்ணாவிரதம் மக்கள் சங்கிலி என்பதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும்தானா? தமிழகத்துத் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இல்லையா?

screenshot-from-2017-03-02-141150

தமிழ்த்திரைப்பட ஜீரோ போல அட்டகாசமாகக் காரின் கதவைத்திறந்து ஆக்ரோஷத்துடன் இறங்கி சட்டையை அவிழ்த்து பனியனைக் காண்பிக்கும் மன்மத பாணம் எல்லாம் ஊடகங்களுக்குத்தானா? விஷத்துக்கு எதிராக இல்லையா?

விடுதலை வீரமணிகள் என்ன வாயில் (வினாயகருக்குப் பிடித்த) கொழுக்கட்டையையா வைத்துக்கொண்டிருக்கிறார்கள்? பெரியார் சொத்தைத்தான் (பல்லை அல்ல) மகன் வீதங்கராஜ்களுக்குக் சேர்த்தியாகி விட்டதே? இனிமேல் என்னத் தயக்கம்?

 

பாட்டாளிவிஞ்ஞானி ராமர் பிள்ளையை ரூமர் பிள்ளையாக்குவதில் இந்தச் சென்னை ஐஐடி மனுதர்ம வெறியுடன் காட்டிய ஆர்வத்தை –  இந்த விஷத்தை முறியடிப்பதில் ஏன் காட்டமாட்டேனென்கிறார்கள்? புரிகிறதா அடலேறே, அவாளோட சதி?

 

கடற்கோள் என்பதே இந்த ‘ஸோடியம் குளோரைடு கரைந்த டைஹைட் ரஜன் மோனாக் ஸைடு ‘ விஷத்தினால்தான் ஏற்படுகிறது என்பதை ஏன் நாம் அறியமாட்டேனென்கிறோம்?

 

ஜக்கிவாசுதேவ் பூர்வாசிரமத்தில் ஜாம்பஜார் ஜக்குவாக இருந்தவர் என்பதோ, அப்போதிலிருந்தே பக்கத்திலுள்ள மெரீனா கடற்கரைக்குச் சென்று அங்கு ரகசியமாக இந்து தாந்த்ரீகப் பூஜைபல செய்தவர் என்பதோ, இவற்றின் ஒரு அங்கமாக, மந்திர செப்பு யந்திரங்களை எம்ஜியார் கைக்கடிகாரத்துடன் அவர் புதைத்துவைத்ததால் – அவற்றிலிருந்த ரகசிய ரசாயனங்கள் கடலுக்குள் கசிந்து கடலையே விஷமாக ஆக்கியது எனும் மறைக்கப்பட்ட உண்மையை நாம் அறிவோமா?

புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்குச் சின்னம்மா அனுதினமும் கொடுத்த விஷமெல்லாம், முன்னவர் புதைக்கப்பட்டபின் மேற்கண்ட மெரீனா விஷத்தோடும் அண்னா சதுக்கப் பூதத்துடனும் கொள்கைக் கூட்டணி வைத்து கடலைக் கறைபடிந்ததாக ஆக்கியதையாவது, இந்த புதைக்கப்பட்ட புத்தம்புது உண்மையையாவது நாம் அறிவோமா?

 

இந்த விஷத்தை முறிக்க சித்த மருத்துவத்தின் பஞ்சாம்ருத நிகண்டுவில் உள்ள வீரியமிக்க மருந்துகள் உதவும் எனும் உண்மையை ஆரியர்கள் மறைப்பதை எப்படி நம் சுயமரியாதைத் தமிழன் பார்த்துக்கொண்டிருக்கிறான்? யுனானி ரசாயனமும் தங்கபஸ்பமும் கலந்து உண்டால் போகர் வழியில் போகார்மல் இருந்து சிட்டுக்குருவி போல லேகியமாகப் பறக்கலாம் என்பதை நாம் அறிவோமா?

பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் ஆரியர்களும் அவாளும் சேர்ந்து தமிழனைப் போண்டியாக்குவது மட்டுமல்லாமல், அவனுக்கு விஷம் கொடுத்து அவனுடைய சந்ததிக்கே சமாதி கட்டுகிறார்கள் என்பதை ஏன் அறிய மாட்டேனென்கிறான் நம் தமிழன்?

மதவாத மோதியின் அரசு இந்த விஷ அரக்கனை வைத்துத் திராவிடத்தை வீழ்த்தி விடலாம் என மனப்பால் குடிக்கிறது. இதனை எதிர்த்து இனமானத் தமிழன் ஏன் ஒன்றுமே செய்யமாட்டேனென்கிறான்?

 

அம்பானிகளும் டாட்டாக்களும் பிர்லாக்களும் அடானிகளும் இந்த விஷ வளர்ச்சியால் துட்டு பார்க்கப் போகிறார்கள் என்பதைத்தானே இது காட்டுகிறது? அவர்களிடம் நம் போராளிகள் துட்டு பார்த்துவிட்டார்கள் என்பதைக்தானே காண்பிக்கிறது?

பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும், அரசியல்வாதிகளும் –  முக்கியமாக, காவிப்படைகளும் ஆரியர்களும் – நம் தமிழகத்தைக் கூறு போட்டுக்கொண்டு …எக்காளச் சிரிப்பை உதிர்ப்பதைப் பார்த்து எப்படி நாம் வாளாவிருப்பது தம்பீ??

 

 -0-0-0-0-0-

தமிழகத்தில் அறிவியலும் தொழில் நுட்பமும் வளர்ந்துவிடுமோ, வேலை வாய்ப்புகள் பெருகிவிடுமோ, சுபிட்சம் நிலவிவிடுமோ,  நல்லது நடந்துவிடுமோ, நாடு செழித்துவிடுமோ எனக் கவலைப்பட்டு பதைபதைத்து – முழுமூச்சுடன் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் எதிர்ப்பவர்களுக்கும் – தொழில்முறை மனிதவுரிமை / சூழலியல் காரர்களுக்கும் இந்த விஷவிஷயம் தெரியாமல் போனது ஏன்?  இஸ்லாமியவெறி அமைப்புகளோ வேர்ல்ட்விஷனோ இது தொடர்பாக ஒரு நிதியும் கொடுக்கவில்லையா?

 

மெரீனாவில் அணி திரள்வோம்!
இஸ்லாமிய அஹிம்சாவாத இயக்கங்களுடன் நம்மை ஒருங்கிணைத்துக்கொள்வோம்!
சாதா முஸ்லீம்களை ஒதுக்கித் தள்ளுவோம்!
விஷ அரக்கனை வெல்வோம்!
மோதியுடன் மோதுவோம்!
காவிப்படைகளை வென்று காவியம் படைப்போம்!

வாழ்க திராவிடம்! ஒழிக ஆரியவிடம்!!

நமக்குநாமே போட்டுக்கொள்ளும் நாமம் வாழ்க!

நன்றி.

18 Responses to “தமிழகக் கடலோரத்தில் ஸோடியம் குளோரைட் டைஹைட்ரஜன் மோனாக்ஸைட்+++ அரக்கன்!”

 1. nparamasivam1951 Says:

  50 தாண்டினாலே கிழவர் தான். அரை கிழவர் என கூறிக் கொண்டாலும் கிழவர் தான்.


  • ​யோவ் பரமசிவம்! நீர் யார் கட்சி? என்னுடனா அல்லது எதிரிக்கட்சியா? &^%$(*@!​

   கொமட்ல குத்தட்டா?
   ​நாற்பது வயதுக்குப் பிறகு பின்னோக்கி வளர்ந்துகொண்டிருப்பவன் நான்! ஆக முப்பது வயதைக்கூட எட்டாத ஒரு நற்றமிழ் திராவிடலையைப் பார்த்து *இப்படிச்* சொல்லிவிட்டீர்களே அய்யா!

   உங்களுக்கே இது சரியாக இருக்கிறதா?

 2. nparamasivam1951 Says:

  நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் நாம ம் வாழ்க.

 3. Rajkumar S Says:

  பொய்கள், பொய்கள், பச்சை பொய்கள். தமிழில் கேவலமான எழுத்துப்பிழைகள். சைபெரியாவில் புவிவெப்பமயமாதலால் வெளியாகும் மீதேன் பற்றிய காணொளியை சம்பந்தமே இல்லாமல் இந்த பிரச்சினையோடு வெளியிடுகிறார்கள். காணொளி ஆங்கிலத்தில் உள்ளது. இதை பரப்பும், பரப்ப உதவும் மாக்களும் அந்தக் காணொளியை முழுதாக பார்க்கக்கூட இல்லை. கேவலமாக இருக்கிறது. மீதேன் எடுப்பதால் சவூதி அரேபியா பாலைவனமாகிவிட்டதாக ஒரு காணொளி. எத்தனை தொடர்புகளைத்தான் துண்டிப்பது?? இதில் என்னுடைய பழைய டீம் லீடும் அடக்கம். ஐரோப்பாவில் 3 வருடங்களும், அமெரிக்காவில் 3 வருடங்களும் பணிபுரிந்தவர். ஆக ஆங்கிலம் ஒரு பிரச்சினையில்லை. உணர்ச்சிவசப்பட்டு கூவுவதை நிறுத்தாதவரை விமோசனமில்லை. அதை எடுத்துரைக்க வழியும் தெரியவில்லை.


  • அய்யா, உங்கள் வருத்தம் புரிகிறது. அதற்குத்தான் தமிழில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. நம் முன்னோர்கள் புத்திசாதுரியத்துடன் அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை அறியவும்.
   அவற்றின் பிரவாகத்தில் துக்கத்தை மூழ்கடித்துவிடலாம். எடுத்துக்காட்டாக, ங்ஙொம்மாள என ஆரம்பிக்கவும். :-(

   திராவிடத்தைக் கூட ஒழித்துக்கட்டி விடலாம் – ஆனால் இந்த விடலை வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் ஞானிகளிடமிருந்து நமக்கு இந்த ஜென்மத்தில் விடுதலை கிடைக்குமா எனத் தெரியவில்லை.

   உங்கள் கூடச் சேர்ந்து சோர்ந்து அழும்:

   ரா. (ஆனால் அய்யா, நகைச்சுவையுணர்ச்சி நம்மை விடுதலை செய்யுமோ?) :-((

   • Sridharan S Says:

    //எந்தவொரு விஷயம் குறித்துமே நம் வாயில் நுழையாத ஏதாவது வார்த்தையிருந்தாலோ, அல்லது வாயில் நுழைந்தாலுமேகூட நமக்கு அதனைப் பற்றி ஒரு எழவுமே கூடத் தெரியாமல் இருந்தாலோ – அதைப் பற்றி நாம் உண்மையாகவே பயப்படவேண்டும். மேலும் வாட்ஸ்அப் போன்ற அதிபுத்திசாலிகள் வளையவரும் வளைத்தலங்களில் உடனடியாக நம் பயத்தைப் பரப்பவேண்டும். வாட்ஸ்அப்போர் சொல் வார்த்தை அமிர்தம். இப்படிப்பட்ட கொள்கையை வளர்த்துக்கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான திறன் – LifeSkill – என்பதைப் புரிந்துகொண்டு இன்புறவேண்டும்.// அய்யா, அல்லும் பகலும் அயர்வின்றி அடுக்குமொழியில் புரளிகளை அடிச்சிவுட்டு அனைவரையும் அலறவைப்பதை ஆக்ரோஷமாய்ச் செய்துவரும் அடலேறுகளைத் தாங்கள் அற்பமாய் மதிப்பிட்டு ஆனந்தமைடயாதிருங்கள், உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், விடலைத்தனத்திலிருந்து விடுதலையென்பது வெறுங்கனவே, ஆமென்.

 4. A.SESHAGIRI Says:

  ஏன் சார் உங்களுக்கே இது நியாயமாகப்படுகிறதா?இப்படி நங்கு நங்குன பக்கம் பூரா முட்டிகிட்டிங்க,ஆனா இடையில இருக்கிற கம்பிய அநியாயமாக மறந்துட்டீங்களே!அட நம்ம ‘சமஸ’ தான் சொன்னேன்!.அவர்ட்ட இப்போ நீங்க ‘பொட்டி ‘வாங்கிட்டீங்களோனு எனக்கு சந்தேகமாயிருக்கு!


  • அய்யா, ஸமோஸா எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆகவே. :-(

   நம் தமிழகம் ஏனிப்படி சராசரித்தனத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது? நம் அடி நாதத்திலேயே சுருதிபேதமாகி விட்டதோ? 1960களுக்குப் பின் விமோசனமேயற்ற தன்மையை எட்டிவிட்டோமோ?

   இந்தக் கணத்தில் மிகவும் அசக்தனாக உணர்கிறேன். எங்கே என் க்ருஷ்ணன். :-((

 5. K.Muthuramakrishnan Says:

  Please read my article,Sir


  • அய்யா, நீங்கள் எழுதியதைப் படித்தேன். ஜெயமோகன் அவர்களைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்.

   “ஸ்ரீராமகிருஷ்ண‌ மடம் உடலில் தோன்றிய சீழ்கட்டி போன்றது. அறுத்து எறிய வேண்டியது” என்பதை அவர் தளத்தில் தேடினேன். ஒன்றும் கிடைக்கவில்லை.

   எனக்கும் தெரியும் – ‘எந்த நிலையிலும் சமனம்’ என்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. ரமணர் போன்ற ஒருசிலருக்கு அது வாய்த்திருக்கலாம் அவ்வளவுதான். மேலும் நான் சாம்பல் நிறத்தின் உபாசகன்.

   அய்யா, நீர் தன் மட்டத்தை அடையும். அவ்வளவுதான். நான் அறிவியலின் உபாசகனும்கூட, சரியா?

 6. arun Says:

  நெஞ்சும் அதனைப் போலவே ஒலிக்கும் இன்னொரு திராவிட பாகமும் வலிக்கின்றனவே! ஐயகோ!
  hahahahaha…

 7. ஆனந்தம் Says:

  இந்த மாதிரியெல்லாம் எழுதுவதில் ஆபத்து ஒன்று இருக்கிறது. நகைச்சுவை உணர்வில்லாத குளுவான்கள் யாராவது மேற்படி கட்டுரையை வாட்ஸப்பில் பகிர்ந்து அது மாதக்கணக்கில் வலம் வந்து உங்க ஃபோனுக்கே ஃபார்வர்ட் ஆகி உங்களுக்கே பீதியைக் கிளப்பவும் வாய்ப்பிருக்கிறது.
  நம் முன்னோர்கள் முட்டாள்களா? அன்றே சொல்லியிருக்கிறார்கள், தன் வினை தன்னைச்சுடும், தன் கட்டுரை தனக்கே ஃபார்வர்ட் ஆகும், வினை விதைத்தவன் வினை அறுப்பான், ஹைட்ரோ கார்பன் விதைத்தவன் ஹைட்ரோ கார்பனையே அறுப்பான். BE CAREFUL!!!


  • இன்னாமே இம்மாஞ்சாபம் குட்கறே! றொம்ப திமிராய்டிச்சா? கொமட்ல குத்தட்டா?
   எவ்ளோ பேர் இப்டீ கெள்ம்பிக்கீறீங்கோ? எங்க விஞ்ஜானிங்க்ள கிண்டல் பண்ணிக்கினு… இனிமேகாட்டி இப்டீ ரவுசு பண்ணீங்க, ஸவுண்டு வுட்டீங்க, பட்டா, வூட்டுக்கு வந்து ஒதிப்போம்.

   இப்படிக்கு,
   வாட்ஸ் அப் மூலமாக உதைகளை ஏற்றுமதி செய்வோர் கழகம்

 8. mekaviraj Says:

  பத்ரியின் பேட்டி – நெடுவாசல் குறித்து – தங்கள் பார்வைக்கு

 9. bmniac Says:

  Have I perhaps failed to see the discovery that the drought in Tamilnadu is also a Modi/Shah conspiracy?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s