திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2)

May 23, 2015

நம் தங்கத் தமிழகத்தில் எந்தவொரு அரசியல்வாதிய கொலை நடந்தாலும், அடிதடி ஏற்பட்டாலும், வீச்சரிவாள் கீச்சப்பட்டாலும், வெடிகுண்டு வீசப்பட்டாலும்  – அதற்காக பழி சுமத்துவதற்கென சில செல்லமான சங்கதிகள் இருக்கின்றன. ஏனெனில், இவற்றின் மேல் பழி சுமத்துவதற்கு வேறு ஒரு காரணமும் தேவையில்லை – வெறும் வெறுப்பும், பொறுப்பின்மையும் மட்டுமே போதும். அவையாவன: 1) அடுக்குமுறை ஜாதி வரிசை 2) ஹிந்து மதங்கள்.  பொதுவாக ‘ஹிந்துத்துவா’ தான் தமிழகத்தின் எல்லா சீர்கேடுகளுக்கும் காரணம் என்றால் எல்லோரும் சோர்வுடன் தலையை ஆட்டிக்கொண்டு தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள், அவ்வளவுதான். எப்படியும், சாவகாசமாக ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’ அல்லவா? மேலும்,  பம்ப்கின் இயக்கிய ஒரு புத்தம்புது குஜய் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கிறதாமே?

…ஆனால், நடு 1970களில் இருந்து தமிழக நிலவரத்தை ஓரளவு உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு வருபவன், சில கீழ்மட்ட (=படுமட்டமில்லாத) அரசியல்வாதிகளின் நட்பைப் பெற்றவன், கொஞ்சம் படிப்பறிவும் உள்ளவன் என்கிற முறையில், எனக்குத் தெரிந்தவரை – உண்மைக் காரணங்களாவன:

1) அளவுக்குமீறிப் படுமோசமாகக் கொள்ளையடித்தல் 2) கொள்ளையடித்த பணத்தைப் பங்கிடலில் பிரச்சினைகள் 3) பண/நில தொடர்பான அநியாய பேரங்கள் படியாமை 4) ஆண்-பெண் உறவு விவகாரம்.

(சில சமயம் சிலர் ‘வன்முறையை வசீகரமாகச் சித்திரிக்கும் திரைப்படங்களின்‘ பங்கைப் பற்றியும் பேசுவார்கள். இது மிகக் குறைவான எண்ணிக்கைகளில் உண்மையாக இருக்கலாம்; அப்படியே இருந்தாலும், இந்தத் தமிழ்ச் சினிமாவுலக எழவும் திராவிட இயக்கங்களின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்!)

 -0-0-0-0-0-0-0-

இந்த மேற்படிக் காரணங்களுக்கான வெகு அடிப்படையான காரணி என்பதுதான் தமிழகத்தின் கந்தறகோள நிலைமைக்கு முழுமுதற்காரணம் – அதுதான் கடந்த சுமார் 50 வருடங்களாக, நம் தமிழகத்தைத் துப்புறவாகக் காயடித்துகொண்டிருக்கும், ஒழித்துக் கொண்டிருக்கும், பணம் சுருட்டுவதை மட்டுமே செய்துகொண்டு தமிழகத்தை மலடாக்கிக் கொண்டிருக்கும் திராவிட இயக்கங்களின் கயமைக் கூட்டணி. ஆனால் – இந்த அயோக்கிய இயக்கங்களையும் மீறி, தமிழர்கள் மேலெழும்பி வர முயன்று கொண்டிருப்பது, கொஞ்சம் ஆச்சரியம் தரும் விஷயம்தான்! கடவுள் இருக்கிறாளோ?

பொதுவாக என்னால் திராவிட இயக்கங்கள் எனக் குறிப்பிடப்படுபவை வெறும் திக, திமுக, அஇஅதிமுக கட்சிகளை மட்டும் அல்ல; அதாவது, என் வாதங்கள் – திராவிட, அல்லது கட்சியின் பெயரில் ‘திராவிட’ என்கிற சொல் இல்லாத தமிழகக் கட்சிகளுக்குப் பொருந்தும்; ஆக இதன் நீளமான ஜாபிதாவில் திமுக, அஇஅதிமுக, மதிமுக, தேமுதிக, பாமக, விசிகே போன்ற பலப்பல கட்சிகளும் அடங்கும்; திராவிடத்தைப் பொறுத்தவரை, அவற்றின் வீரியமும் தாக்கத்தும்தான் கொஞ்சம் வேறாக இருக்கும், அவ்வளவுதான். அதாவது இந்தக் கட்சிகளெல்லாம், திராவிட ஊழல் குட்டையில் ஆனந்தமாக மிதந்துகொண்டிருக்கும் முடைநாற்றமடிக்கும் உளுத்துஅழுகிப்போன மட்டைகள்தாம்!

ஹ்ம்ம்… ஏற்கனவே, இந்த திராவிட ஊழல் இயக்கங்களைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதியிருக்கிறேன்  – பொருளாதாரவியல் வல்லுனரான மகாமகோ கார்டன் டுல்லக்  அவர்களின் கருத்தாக்கங்களை முன்வைத்து ஆங்கிலத்திலும், பொதுவாகத் தமிழிலும். இருந்தாலும்

-0-0-0-0-0-0-0-0-0-0-

தமிழக திராவிடக் கட்சிகளை நடத்திச் செல்வது என்பது ஒரு கொள்ளைக் கூட்டத்தையோ அல்லது கொலைவெறி, பாலியல்பலாத்காரமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் கும்பலையோ நடத்திச் செல்வதற்கு இணையானதொன்று. ஏனெனில் முன்னேற்றத்திற்கான கொள்கை, மேன்மையான சிந்தனைகள் என எதுவுமே இல்லாத உள்ளீடற்ற உதிரி கும்பல்களை எந்த நல்ல நோக்கங்களினாலும் ஒருங்கிணைக்கவே முடியாது; மாறாக – இவற்றை ஒருங்கிணைப்பதற்கு மூன்று எதிர்மறை விஷயங்கள் முக்கியம்:

1) ஒருங்கிணைக்கப் பட்ட வெறுப்பு – இந்த நெருப்பினை அணையாதபடிக்கு அவ்வப்போது விசிறிக்கொண்டேயிருக்கவேண்டும். தமிழகத் திராவிட அரசியலைப் பொறுத்தவரை இது – ஆரியம், ஹிந்துத்துவம் என விரியும்.
2) கொள்ளையில் பங்கு – முட்டாள்தனமாக அடிமட்டத் தொண்டனாக இருப்பவர்களுக்கு அவ்வப்போது பிரியாணியும், ஹாஃபும் கொடுத்தால் போதும்; ஆனால் தமிழகத்தில், இந்திய அளவிலும்கூட அடிக்கப்படும் கொள்ளையில் பங்கு கொடுத்தால்தான், அல்லது தனியே (ஒரு அளவுக்குட்பட்டு கொள்ளையடிக்கவிட்டால்தான்) மற்ற செயலாளர்கள் போன்றவர்கள் கட்சியில் இருப்பார்கள்.
3) பரப்புரை – தொலைக்காட்சி, திரைப்படம் போன்றவற்றை வைத்துக்கொண்டு அரசியல் பொய்களை பவனிவரச் செய்து, சிந்தனைகளை மழுங்க அடித்து, உன்மத்தக் களியாட்டங்களைச் சித்திரித்து, தத்தம் கும்பல்களுக்கு லாகிரியூட்டுவது.

இவற்றில் இரண்டாவது பிரதானம். ஏனெனில் 1ம் 3ம் ஏற்கனவே செம்மையாகத் தம் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன; அவை சுலபமாக முன்னெடுத்துச் செல்லக்கூடியவை.

ஆனால் 2? இது மாதாமாதம் போல கையாளவேண்டியது. சம்பளம் போல. பாவத்தின் சம்பளம் திராவிடப் பங்கீடு. பணம், நிலம், பெண் என்பவற்றைத் திராவிடயுடமைகள் என்றறிந்தால் இதைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்துகொள்வதில், அனுமானிப்பதில் பிரச்சினையொன்றுமிருக்காது.

மேலும், இதுதான் அரசியல் கொலைகளின், பிற வன்முறைகளின் ஊற்றுக்கண் என்பதை அறிந்து தெளிவதிலும் சிக்கலிருக்காது.

-0-0-0-0-0-0-0-

கொள்கை என்று ஒன்றிருந்து (நமக்கு அதனுடன் ஒப்புதல் இருக்கிறதா என்பது வேறு விஷயம்) அவற்றில் பிடிப்பும் உள்ள, ஜனநாயகத்தை வரித்துக்கொஂண்ட கட்சிகள் தமிழகத்தில் சொற்பம் – என்னைப் பொறுத்தவரை – அவை கம்யூனிஸ்ட் கட்சிகளும், பாஜகவும் மட்டுமே. ஏனெனில் – இவை அடிப்படையில் தொண்டர் பலத்திலிருந்து உருவாக்கப்பட்டவை, உருவாக்கப் படுபவை. இவற்றின் தொழில்முறை அரசியல்வாதிகள், தொண்டர் அணியிலிருந்து மேலெழும்பி வருபவர்கள்.

ஆனால், நம் தமிழகத்தின் செல்ல திராவிடக் கட்சியினர் அப்படியில்லை. அவற்றின் தொண்டர்களும் தொழில்முறையினர்தாம். அதாவது அவர்கள் தொழில்முறை குண்டர்கள்! இவர்கள் கொள்கையைக் கண்டார்களா? தமிழகத்தின் வளர்ச்சியை அவதானித்தார்களா? இக்கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும், கொள்ளைக்காரக் கூலிப்படைகளின் வெவ்வேறு அடுக்குவரிசைகள்தான்.

இவர்களை ஒருங்கிணைப்பது வெறும் பணம்தான். ஆகவே, திராவிடக் கட்சிகளுக்குக் கொள்கைத் திட்டம் என்று ஒரு எழவும் இல்லை. வெறும் கொள்ளைத் திட்டம் மட்டுமே இருக்கிறது அவர்களிடம்!

இந்தக் கொள்ளைத் திட்டத்தின் முக்கியமான அங்கங்கள்: பணத்தை எப்படித் திரட்டுவது? அவற்றின் திட்டங்களையும் வழிமுறைகளையும், நம்பகத் தன்மைவாய்ந்த ஆட்களைவிட்டு மேற்பார்வை செய்வதையும், சச்சரவுகளை ‘சுமுகமாக’ தீர்ப்பதையும் மேலாண்மைசெய்வது எப்படி? சட்ட ரீதியான நிதிகளை, கள்ளப்பணக் கிடங்குகளை உருவாக்குவது எப்படி? அவற்றை நிர்வகிப்பது எப்படி? கள்ளப் பணத் திரட்டுகளை பதுக்கி மட்டும் வைக்காமல், அவற்றை சுயபொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்களில் ஈடுபடுத்துவது எப்படி?

கூட இருந்தே குழிபறிக்க முயலும் சக-திராவிடத் தலைவர்களை, உட்கட்சி துரோகிகளை கையாள்வது எப்படி? யாருக்கு எப்படி ‘செக்’ வைத்தால் ‘பேசாமல்’ இருப்பார்கள்? பணப் பங்கிடல் முறைகள் யாவை? எந்ததெந்த கீழ் மட்டத் தலைமைக்கு எவ்வளவு போகவேண்டும்? கீழ்மட்டத் தலைமைகளின் ‘சுய சம்பாத்தியத்தில்’ எவ்வளவு மேலிடங்களுக்குச் செல்லவேண்டும்? அவற்றுக்கான வழிமுறைகள் யாவை? அதிகார வர்க்க அரசதிகாரிகளை எப்படி இந்த நிதி சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுத்துவது? அரசு ஊழியர்களை எவ்வளவு தனிப்பட்ட ஊழல் செய்ய அனுமதிக்கலாம் அல்லது அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம்?

… மேலும், பொதுமக்களுக்கே லஞ்சம் கொடுத்து தேர்தல்களில் வெற்றியோ தோல்வியோ பெறவேண்டுமில்லையா – ஆக இதற்கான ‘போர்க்கால ரீதித் திட்டங்களை’ எப்படிச் செயல்படுத்துவது – போன்ற மேலதிகக் கொள்ளைப் பரப்பல்கள் குறித்த திட்டங்களும் போடவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள், நம் திராவிடத் தலைவர்கள்…

இச்சமயம் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தவேண்டும்; அது – மக்கள் வரிப்பணத்தை மட்டுமேதான் திராவிடக் கட்சிகள் சூறையாடுகின்றன எனும் பார்வை; இது சரியில்லை; இன்னும் பலவகைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவை சுரண்டுகின்றன என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

இதனை அடுத்த பகுதிகளில் – இந்தக் கொள்ளையடித்தல் – அதன்காரணமாகக் கொலை விழுதல் தொடர்புகளின் சில அடிப்படைகளை மட்டும் குறிப்பாகப் பார்க்கலாம்:

-0-0-0-0-0-0-0-0-

அபரிமிதமான ஊழல் பணம் என்பது திராவிட இயக்கங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. ஊழல் இன்றேல் திராவிடம் இல்லை. ஏனிப்படியாயிற்று?

இதற்குப் பல முக்கியமான காரணங்கள்:

1. கட்சியின் நடுமட்ட, கீழ்மட்ட செயலாளர்கள் – அவ்வப்போது கட்சி மேலிடம் (கட்சித் தலைவர்கள், அவர்கள் குடும்பத்தினர்) கேட்கும் தொகைகளைக் கொடுக்கவேண்டும். இது தேர்தல் நிதிக்காக இருக்கலாம், அல்லது கமுக்கமான ஊழல் பணத்துக்காகவும் இருக்கலாம். இத்தொகைகளை தங்களுடைய வட்டாரத் தொழிலதிபர்கள், வியாபாரிகள், பணக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து பிடுங்கித்தான் கொடுக்கிறார்கள். மேலும் தேவைப்படும் போதெல்லாம் மாநாடுகளுக்கும் அடிதடிகளுக்கும் பேரணிகளுக்கும் கூலிக்கு ஆட்களை அனுப்பியவண்ணம் இருக்கவேண்டும்…

2. ஆகவே இவர்கள், தம் விசுவாசிகளையும் தொண்டகுண்டர்களையும், குட்டித் தலைவர்களையும் வேண்டிய அளவு ‘கவனித்துக் கொள்ள’ வேண்டும். இவர்களுக்கும் தொகைகளை அளிக்கவேண்டும். இவை இல்லாவிட்டால், இவர்கள் தம் படைகளை, போர்வாட்களை, களவீரர்களை எப்படி நிர்வகிப்பார்கள்? தலைவர்கள் கேட்கும்போது தொண்டர்படைகளை எப்படிக் களம்காண வைப்பார்கள்? மேலும் பைசா பெயறாவிட்டால் / இல்லாவிட்டால் இவர்கள் போட்டியாளர்களிடம் போய்விடுவார்களே!

3. மேலும், புல்லுக்கும் ஆங்கே பொசியவேண்டும் அல்லவா? ஆக, நடுமட்ட, கீழ்மட்ட கழகச் செயலாளர்கள் தங்களுடைய தலைமைகளுக்கு வேண்டிய கப்பத்தைக் கட்டிவிட்டால் குறு நில மன்னர்கள் போல தங்கள் பகுதியை ஆளலாம். அதாவது தங்களுடைய பல குடும்பங்களுக்கு, சுற்றங்களுக்கு எனப் பலப்பல வழிகளில், பலப்பல தலைமுறைகளுக்காக திரவியம் தேடலாம். திரைகடல் ஓடியும் கூட. தமிழகத்தின் கழகக் கண்மணிகள் போட்ஸ்வனா நாட்டில் பினாமி வைரச் சுரங்கங்களை வைத்திருப்பதும் இவ்வகைதான்.

4. ஆசைக்கு அளவில்லை. போதுமென்ற மனமில்லை. 100 தலைமுறைகளுக்கு வேண்டிய சொத்து சேர்த்தாலும் – மேலும் மேன்மேலும் பணத்தைக் களவாடிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது ஒரு தீவிரமான மன நோய்; பதவியில் இருந்தால், அய்யோ, ஐந்தே வருடங்கள்தானே இருக்கின்றன, அதற்குள் எவ்வளவுதான் சுருட்டமுடியுமோ என்ற கவலை. பதவியில் இல்லாவிட்டால் – அய்யோ, நான் பதவியில் இல்லையே, மற்றவர்கள் பதவிக்கு வந்துவிட்டு, நான் திருடவேண்டிய பணத்தைத் திருடுகிறார்களே என்ற பொறாமையும் வேறு! இப்படிப்பட்ட மன நோயுடன் உலாவும் திராவிடத் தலைவர்கள் ஊழலில்லாமல் வாழ, கனவு கூடக் காணமுடியாது.

...துளிக்கூடக் கூச்சமேயில்லாமல், இப்படியெல்லாம்வேறு அலங்கரித்துக் கொண்டு அலையவேண்டும்...

…துளிக்கூடக் கூச்சமேயில்லாமல், இப்படியெல்லாம்வேறு அலங்கரித்துக் கொண்டு அலையவேண்டும்…

5. அடிப்படையில் அயோக்கியத்தனமாக மட்டுமே சொத்துகள் சேர்க்கப் பட்டிருப்பதால் திராவிடத் தலைவர்களுக்கு, செயலாளர்களுக்கு சதா பயம். செய்துள்ள முற்பகல்  வினைகளினால் உயிர்ப் பயம். பிற்பகல் விளையக்கூடாதே எனக் கூலிப் படைகளுடன் உலாவவேண்டிய அவலம். (ஒரு சிறு திராவிடக் கட்சியின் மாஜி மாவட்டச்செயலாளர் சொல்படி –  இந்த பாதுகாப்புக்காக மட்டும் அவருக்கு மாதாமாதம் 1.2 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருந்திருக்கிறது. மற்ற கட்சிப்பணிகளுக்கு சுமார் 75 லட்சம். ஆக, இவர் பார்வையில் ஒரு மாவட்ட கழகத்தை ‘நடத்திச் செல்வதற்கு’ குறைந்த பட்சம் மாதம் ரூ 2 கோடி இருந்தால் தான் முடியும் – இக்கணக்கில் 1,3, 4 இல்லை; 2ம் 5ம் மட்டுமே! ஆக, மாவட்டத்திலிருந்து, மிகக் குறைந்த பட்சம், மாதத்துக்கு 4 கோடி போல சம்பாதித்தால்தான் பிழைக்கமுடியும்!)

சரி, எப்படி இந்த ஊழல் பணங்களைத் திரட்டுகிறார்கள்? (அடுத்தபகுதியில்)

-0-0-0-0-0-0-0-0-

One Response to “திராவிடக்கட்சிகள் -> பணம் சுருட்டல்கள் -> கொள்ளைப் பங்கிடல்கள் -> கொலைகள்: சில குறிப்புகள் (1/2)”


  1. Hello Ramasamy Sir, Why no post for last 10 days? Are you doing well? Just checking. I am one of your new readers.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s