ஜெயமோகனின் பகீர் அவதூறுகள் – சில குறிப்புகள்

March 6, 2017

!?

 மன்னிக்கவும். கொஞ்சம் விகடன், விடுதலை, நக்கீரன் போன்ற மேற்கண்ட திடுக்கிடும் தலைப்பைப் படித்துவிட்டு ஏமாறவேண்டாம், சரியா? இப்பதிவினுடைய தலைப்பு ‘ஜெயமோகன், சுயகருணாநிதிக் கல்லூரிகள், அவதூறுகள் – சில குறிப்புகள்’ என்றுதான் இருந்தது. :-)

[சுமார் பத்து நாட்களுக்கு முன், கீழ்கண்ட மின்னஞ்சலை ஜெயமோகன் அவர்களுக்கும் இன்னொரு அறிமுகத்துக்கும் அனுப்பினேன்; அதனை அவர் படித்திருப்பார் என நினைக்கிறேன்; இந்த உரையாடலை ஒருவழியாக முழுமையாக்கி(!) முடிக்கும் விதமாக அதனைக் கொஞ்சம் பட்டிபார்த்து – அதாவது அதனைச் செம்பதிப்பாக்கிப் பதிப்பிக்கிறேன்; மேலும், சில கலைச்சொற்களை, என் மகாமகோ பேராசானின் காலடித்தடங்களையொட்டி மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறேன்; அவை italicsல் (=இத்தாலிய நக்குதல்கள்) கொடுக்கப்பட்டுள்ளன.படித்துத் துன்புறவும்!]

இந்த அக்கப்போர் தொடர்பான என் பதிவுகள்:

ஜெயமோகன் அவர்களின் பதிவு:

அன்புள்ள ஜெயமோகன்  &  xxxxxx, எப்படி இருக்கிறீர்கள்? நலமா?

ஜெயமோகன், நீங்கள் இப்படியெல்லாம் பதற்றப்பட்டு, வருத்தப்பட்டு யோசித்துயோசித்து இந்தக் கட்டுரையை எழுதியிருக்கவேண்டிய தேவையேயில்லை. ‘டேய், கர்வம் தலைக்கேறிய முட்டாளே! ரொம்ப ஆடாதே!!’ என்று சொல்லியிருந்தால் அதுவே போதுமானதாகவும் மிகமிகச் சரியானதாகவும் இருந்திருக்கும்.

மேலும் நான் உங்களுக்கு நெருக்கமானவனல்லன், நண்பனல்லன் என்பதும் வெறும் துய்ப்பாள வாசகனே என்பதில் எனக்கு வசதிதான். உங்கள் எழுத்துகளுடன் முடிந்தவரை அணுக்கமாக இருப்பதே எனக்கு உவப்பானது. ஒருவருக்கு நண்பனாக இருக்க முயல்வதில் – நடைமுறையிலும் தத்துவார்த்தமாகவும் – ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன எனக்கு. ஏனெனில் – நட்புகளைப் போஷகம் செய்யச் சக்தியும், குவியமும், கடும் விமர்சனப் பார்வையற்ற வெளிப்படைத் தன்மையும், நடைமுறை விஷயங்களை அப்படியே எடுத்துக்கொள்ளும் பாங்கும், விஷயங்களை முன்முடிவுகளற்றுச் சமனத்துடன் அணுகும் பக்குவமும், பரஸ்பர நல்லெண்ணம்+கரிசனமும் வேண்டும்.  மேலும்  – என் வேலையும் மூளையும் பண்பும் இருக்கும் நிலையில், இருக்கும் சொற்ப நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கே ததிங்கிணத்தோம், ஒரு மின்னஞ்சல் சுற்று வருவதற்குள் மாமாங்கமாகி விடுகிறது, நண்பர்களுக்கும் கோபம்+வருத்தம் – எதிரி(!)களே தேவலாம் போல, ஒன்றிரண்டு வசைகளுடன் ஒழிந்தது என விட்டுவிடலாம் அல்லவா? :-)

ஆக, எனக்கு – ஒரு வெறும் வாசகனாக இருப்பதில் கிடைக்கும் இன்பம்ஸ்(+துன்பம்ஸ்) மட்டுமே போதுமானது. நான் அனைத்துக்கும் ஆசைப்படமாட்டேன்.

…என்னுடைய பிரச்சினையென்னவென்றால் – சிலசமயம், நன்றாக மேலெழும்பியிருக்கவேண்டிய என் பிள்ளைகள், பிரத்தியட்சமான காரணங்களால் சுணங்கிப் போகும்போது கோபம் வந்துவிடுகிறது. மூன்று நான்கு நாட்களுக்குமுன், பாண்டிச்சேரி மளிகைக்கடையிலிருந்து என் பிள்ளை அழுதுகொண்டே பேசும்போது எனக்கு ரௌத்திரம். நான் இவ்வளவு செய்கிறேன், ஒரு எழவும் நடக்கமாட்டேனென்கிறதே – எனக்கென்றல்ல – என் பிள்ளைகளுக்காவது ஒருவர் விடாமல் நல்ல விஷயங்கள் நடக்கக்கூடாதா – என்கிற மிகை எதிர்பார்ப்பு வளர்க்கும் வெறுப்பு இதற்குக் காரணம் என நினைக்கிறேன். ஒரு நாள் இரண்டு நாளல்ல – பல வருடங்களை இக்குழந்தைகளுடன் செலவழித்திருக்கிறேன் – ஆக, எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொடிப்பொடியாகும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது; ஆனால் குழந்தைகளின் குடும்பச் சூழலைமீறி ஒரு பள்ளியாலோ கிறுக்குக் கும்பலினாலோ ஒரு சுக்கும் செய்துவிடமுடியாது என்பதையும் அனுபவரீதியாக அறிவேன். என் அகங்காரத்தையும் நான் அறிவேன். என் அளவு எனக்குத் தெரியும். எவ்வளவு கசண்டுகளும் சுமைகளும் என்னிடம் இருக்கின்றன எனவும்தான். பெரிதாக ஒன்றும் சொல்லிக்கொள்ள விஷயமில்லை. ஒப்புக் கொள்கிறேன்.

… மறுபடியும் மறுபடியும் அதேவிஷயங்களைப் பொறுமையாக அணுகுவது என்பது போயே போய்விட்டது. அவசரமாக வேலைகளைச் செய்யவேண்டுமே – ஆனால் ஒவ்வொரு நாளும் ஆயுள் குறைந்துகொண்டே வருகிறதே, அதேகுப்பையை ஏன் திருப்பித்திருப்பிக் கட்டிக்கொண்டு அழுகிறோம் – மாறாக, தொடர்கதவுகளைத் தொடர்ந்து உதைத்துத் திறந்துகொண்டு முன்னேறவேண்டாமா என்றெல்லாம் அலைக்கழிப்புகள். வாழ்நாட்களில் ஒன்றுமே உருப்படியாகவும் காத்திரமாகவும் பரந்துபட்டும் செய்யமுடியாமல் போய்விடுமோ எனக் கலக்கமாகவும் இருக்கிறது.

இப்போதுகூடத் தொடர்ந்து நான்கைந்து நாட்களாகச் சரியாகத் தூங்காமல் பஞ்சுப்பொதியில் நடப்பது போன்ற உணர்ச்சி. Myth of Sisyphus கதையாடலுக்குள்ளே மாட்டிக்கொண்டு பாறாங்கல்லை மலைச்சரிவிலே மேல் நோக்கி உருட்டிக்கொண்டு போவது போன்ற பிரமை. ஆக, கையலாகாத்தனத்தினால் சமன நிலை போய்விடுகிறது. இருந்தாலும், தாங்கள் சொல்வதற்கு மாறாக, நான் சாம்பல் நிறத்தின் உபாசகனே. கறுப்புவெள்ளைப் பகுப்புகளினால் மட்டும் உலகத்தைப் பார்ப்பவனல்லன். (என்னைப் பற்றிய சுயஅவதூறுகளையும், பிம்பங்களையும், வதந்திகளையும்  (VTelegramRemoving) ஒருங்கிணைத்து ஒர் நீஈஈஈளப் பதிவே போட்டிருக்கிறேன்; முடிந்தால் படித்துத் துன்புறவும்:  ராமசாமி – யாரில்லை?  (https://othisaivu.wordpress.com/page-1/page-9/))

…ஆனால், நான் யோசித்துப் பார்க்கிறேன் – ஒவ்வொரு பத்து படுமோசமான வியர்த்தமான காரியங்களுக்கும் ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கின்றன. முதற்பத்து விஷயங்கள் ஆயாசம் தந்தாலும், இந்தப் பின்னவைதான் முக்கியம். இவற்றை எப்படி பரந்துபட்டவையாகச் செயல்பட (‘ஸ்கேல் அப்’) வைப்பது என்பதில் தான் சூட்சுமம். இந்த – நீர்க்கடிக்கடிக்கப்படாத பரவல் மயமாக்கலைச் செய்வதை – எப்படிக் காத்திரமாக அணுகுவது என யோசித்துயோசித்தே உடலில் உள்ள அனைத்து முடிகளும் வெள்ளிமயம். சனியன். ஆக, அடுத்தது ஞாயிறு. சூர்யோதயம் நடக்குமா? அல்லது உதயசூரியனா, அய்யோ!

ஆக, என்னை நான் நம்பிக்கைவாதி என நம்பிக்கொண்டு என்னைப் பற்றிய சுயவதந்திகளை என்னுடைய சிறிய வட்டத்தில் பரப்பிக்கொள்ளவே ஆசை. பட்டிமன்றத்தனமாகச் சொல்லப்போனால்  ‘அவநம்பிக்கைங்கற்திலேயே நம்பிக்கே இர்க்கே சார்! <கைதட்டலுக்காக ஒரு சிறிய இடைவெளி>’

நிற்க, மிகக் கவனமாக உங்களுடைய கட்டுரை எழுதப் பட்டிருந்தாலும்,  அதில் என்னைப் பற்றிய படுமோசமான அவதூறுகள் இருக்கின்றன. அபாண்டங்கள் இருக்கின்றன. இவற்றைப் படித்தவுடன் நான் மிகவும் துடித்துப் போய்விட்டேன். பதற்றக் கையறு நிலையில் எனக்கு என்ன செய்வது என்றே வழக்கம் போலப் புரியாமல், மேலே எழுதுகிறேன்.

அவதூறு #1: நான் லஞ்சம் வாங்கமாட்டேன்.

தவறு. சிலபல ஒத்திசைவு வாசகர்களிடம் நான் சர்வ நிச்சயமாகப் பணம் பெற்றிருக்கிறேன் – நேரடியாகவும் மறைமுகமாகவும். நீங்கள் கொடுத்தாலும் நான் வாங்கிக்கொள்ளத் தயார். இதில் எனக்கு வெட்கமேயில்லை. கொடுக்கத் தயாரென்று சொல்லுங்கள், எப்படி யார் மூலமாக எவருக்கு அதனை அனுப்புவது என்பதை இடம் சுட்டிப் பொருள் விளக்குகிறேன். நன்றி. + பதிலுக்கு நான் என் மனம்போனபோக்கில் (=MindWentGoMurder)  எழுதுவேன். இது ஒரு ரிஸ்க்.

அவதூறு #2: “அவரைப்பற்றி அறிந்து அவர் மேல் பெருமதிப்பு கொண்டிருக்கிறேன்”

யார்மூலம் என்னைப் பற்றி அறிந்துகொண்டீர்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒருவேளை, என்னைப் பற்றிய வீரதீரப் பராக்கிரமங்களை  நானே விலாவாரியாக எழுதியுள்ளதை நீங்கள் படித்து நம்பி இப்படியொரு அவதூறோ! எனக்குப் பொறுக்கவே முடியவில்லை.  இம்மாதிரி வதந்திகளை ஏன் நம்புகிறீர்கள்? என்மேல் உங்களுக்கு ஏன் இப்படியொரு கேவலமான எண்ணம்?

அவதூறு #3: “ராமசாமி அவர்கள் என்னைவிட மூத்தவர்”

முகவரியில்லாமல் இருந்த என்னை, கடந்த பத்துப் பதினைந்து வருடங்கள் கல்விகலவி என அலைந்து கவலைப்பட்டு பட்டஅனுபவங்கள் – முகத்தில் வரிவரியாகச் சுருக்கங்களை உடையவனாக ஆக்கிவிட்டன! அப்படியாப்பட்ட முகத்தின் அழகைப் பார்த்து இப்படிச் சொல்லிவிட்டீர்களே அய்யா! உண்மையில், நான் உங்களை விடச் சிறிது (அதிக பட்சம் இரண்டுவயது) இளையவன். இப்போதுதான் ‘ஒத்திசைவு மழலையர் அணி’யிலிருந்து பதவி உயர்வைப் பெற்று, ‘ஒத்திசைவு விடலைகள் அணி’யின் தன்னிகரற்ற தானைத்தலைவராக ஆகலாமா எனத் தீவிரமாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்! என்னைப் போய் இப்படிச் சொல்லிவிட்டீர்களே! :-(

அவதூறு #4: “கல்வித்தகுதியில் நான் நினைக்கமுடியாத அளவு உயர்ந்தவர்”

அய்யா, நீங்கள் அறியாததல்ல; ஏட்டுப் படிப்பு என்பது வேறு (அதை வைத்துக்கொண்டு, அதிக பட்சம் போலீஸ் ஸ்டேஷனில் தான் வேலை செய்யமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள்) கல்வி என்பது வேறு.

நான் ஏட்டுப் படிப்பு முறையில் ஒரு கஞ்சினீர் பட்டதாரி டீல் மாஞ்சா வகை அவ்வளவுதான்! அதுவும் சொல்லிக்கொள்ளும்படியான ‘படிக்கிற பையனாகவும்’ இருந்ததில்லை – மதிப்பெண் (=MoonWoman) வாங்குவதைத் தவிர மற்ற அனைத்து விஷயங்களிலும் அப்படியொரு ஈடுபாடு, சதா ஆசிரியர்களுடன் பிணக்கு, மற்றபடி நூலகமும் பணிமனையுமே கதி எனக் காலட்சேபம். எது எப்படியோ, அலையோடு அலையாகக் கரை சேர்ந்தாகிவிட்டது. அவ்வளவுதான். கல்வித்தகுதி என்பதை சுமார் 70-80 வயதில் சாவகாசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

மேலும், நான் உங்களை விடக் குள்ளம்; ஆக உயர்ந்தவர் என்றெல்லாம் அவதூறும் வஞ்சப் புகழ்ச்சியும் செய்து அவதூறு செய்வதை நான் புரிந்துகொள்ள மாட்டேனென்றா நினைத்தீர்கள்? வசை எனக்கு இசையல்ல.

அவதூறு #5: “நான் அடுத்தபிறவியில் ஆசைப்படும் சேவைசார்ந்த வாழ்க்கையை தெரிவுசெய்துகொண்டவர்”

ஆ! நாக்கில் மேல் பல்லைப்போட்டு இப்படிச்சொல்ல  உங்களுக்கு எப்படி மனம் வந்தது! :-(

நானா சேவை இடியாப்பம் பாயா என்றெல்லாம் செய்து கொண்டிருக்கிறேன்? வெறுமனே எனக்குப் பிடித்த தொழிலான பஜனையும் காலட்சேபத்தையும்தானே  பொய்யைப் பார்த்துக்கொண்டு (=மெய்நோக்காமல்) செய்கிறேன். அவ்வளவுதான். ஊக்கபோனஸாக அவ்வப்போது பிலாக்கணம். திட்டல்+குட்டல் பதிவுகள். வாழ்க.

ஆனால், என்னைப் பற்றிய இப்படியொரு அவதூறான எண்ணம் உங்களுக்கு இருந்தால், அது எனக்கு வசதியே!

அவதூறு #6: “ஆனால் திமுகவின் அடிப்படையில் ஓர் இலட்சியவாதம் இருந்துள்ளது, ஓரளவு அது நீடிக்கிறது.”

ஹ்ம்ம்… இந்த அவதூறுகள் (=1-திமுகவின் அடிப்படையில் ஒரு லட்சியவாதம் இருந்துள்ளது + 2- அது ஓரளவு நீடிக்கிறது) என்னைப் பற்றியவையல்ல; ஆகவே அவற்றை சாய்ஸில் விட்டுவிடுகிறேன்! :-)  + சிலபல மற்ற அவதூறுகளையும்! ஏனெனில் என்னிடம்,  நான் நம்பும் சிலபல பிரத்தியட்சமான தரவுகள் இருக்கின்றன – ஆனால் அவை முக்கியமல்ல, ஒப்புக்கொள்கிறேன்.

அவதூறு #7: “இன்றைய சூழலில் இலட்சியவாதத்தில் நம்பிக்கைகொண்டவர்களில் இருவகை மனிதர்கள் உண்டு. மூர்க்கமாக இச்சமூகத்தின் கருத்தியல்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக தன் கொள்கைகளை முன்னிறுத்திப்போராடுபவர்கள் முதல்வகை. சமரசமற்றவர்கள். ஆகவே தனியர்கள். பெரும்பாலும் தோல்வியடைபவர்கள். ஆகவே கசப்பு நிறைந்தவர்கள்.”

நான் மூர்க்கனாக இருக்கலாம். ஆனால் லட்சியவாதத்திலோ, கொள்கைகளை (=HorseGramHands) முன்னிறுத்திப் போராடுபவனோ அல்லன். சமரசம் சமரசம் (=EqualLentilSoup)என்று இட்டு நிரவிக்கொண்டே செல்பவன் தான்.

எண்ணத்துக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளிகளை வேறுவழியில் சரியாக இணைக்கத் தெரியாதவன். பெரும்பாலும் தனியன் தான் – ஆனால் உற்சாகமும் செயலூக்கமும் உள்ள இளைஞர் குழாமும் என்னிடம் இருக்கிறது; சுற்றி இயங்குகிறது. கசப்பும் வெறுப்பும் அவ்வப்போது வரும், போகும். சமன நிலை தவறும். கொதித்தல். பின் மீட்சி. அமைதி. வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலும் இனிமையைத்தான் நுகர்கிறேன். கசப்பைத் துப்புகிறேன்.

எடுத்துக்கொண்ட காரியங்களில் தோல்விகள் நிறைய (சுமார் 90%); ஆனால் குறிப்பிடத்தக்க (என்னளவில்) வெற்றிகளும் இருக்கின்றன. இதுவே போதும் என இருக்கலாம். ஆனால் — இந்த 10-15% எனும் குறுங்கனவு விரிந்து 90% ஆகவேண்டும் என அமோகமாகப் பேராசைபப் படுவதில் தான் பிரச்சினையே. நான் ஒரு ப்ரேக்மேடிஸ்ட், அவ்வளவுதான்.

நான் தூய்மையானவனோ ஒழுக்கவாதியோ அல்லன்.  கோபமும் தாபமும் உடையவன் – ஏன், வன்முறையைச் சர்வசாதாரணமாக உபயோகிப்பவன் , பின் அதனைக் குறித்து வெட்கப் படுபவன்.

…பத்து நாட்களுக்கு முன்னால், இரவு ட்யூஷன் முடிந்து வீட்டுக்குத் தனியாகப் போய்க்கொண்டிருந்த பள்ளிச்சிறுமியின் பின்புறத்தைத் தடவிவிட்டு இருட்டுச்சந்திற்குள் ஓடிய தறுதலையைப் பிடித்து ஓடஓட அடித்திருக்கிறேன்! அவன் தப்பித்துப் போகும்போது சொன்னான் – டேய் கிழவா நீ தமிழாள்தானே, உன்னுடைய வீடு தெரியும், ஆளைக்கொண்டுவந்து அடிப்பேன். ஹ்ம்ம்… ஆனால் இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை – அவனும் திராவிடன் தான் போலும்! ;-) அரைகுறைத் தொடைநடுங்கி; ஆனாலும் இப்படி அசாத்தியமாகக் கோபப்பட்டதைக் குறித்து அசிங்கமாகத்தான் இருக்கிறது.  தடவிவிட்டு ஓடிவிட்டான் என்றால் சனியன், ஒழிகிறான் என்று விட்டிருக்கலாமோ என விட்டிருந்தால், அல்லது நாளைக்கு வீட்டுப்பக்கம் வந்து கலாட்டா செய்வானோ என்று பயந்து வாளாவிருந்திருந்தால், அது பேடித்தனம்… ஆனால் கையை ஓங்காமல், இப்படிச் செய்வது சரியில்லை என்று அந்த இளைஞனிடம் சொல்லிவிட்டு, பிறகு விதிர்விதிர்த்துப் போயிருந்த அந்தச் சிறுமியை வீடுசேர்த்தியிருக்கலாம்.  இருந்தாலும் கையை ஓங்கியது அசிங்கம்தான். நானா காந்தியன்? :-( சர்வ நிச்சயமாக நான், 0.0001% காந்தியன்கூட அல்லன் – இது காந்தியை நான் மிக மிக ஆராதிப்பவன் என்றாலுமேகூட! பேச்சு முழ நீளத்துக்குப் பேசலாம் – ஆனால் நான் யதார்த்தவாதி. GTD – Getting Things Done என்பதில் மும்முரம் உள்ளவன், செய்பவன்; எனக்குத் தெரியும் – யதார்த்தவாதி, வெகுஜனவிரோதி.

ஆகவே லட்சியவாதி என என்னை அழைப்பது – ஏன், கோடிட்டுக் காட்டுவதே கூட ஒரு குரூரமான அவதூறு.

-0-0-0-0-0-0-

இப்படி அடுக்கடுக்கான அவதூறுகள்! ;-) உங்கள் சமூகப் பொறுப்புக்கும் ரசனைக்கும் மூளைக்கும்  – படுகேவலனான என்னைப்பற்றி இப்படிப்பட்ட அவதூறுகளைப் பரப்புதல் சரியா? முறையா? நேர்மையா? :-(

ஆக, என் மனம் மிகமிகப் புண்பட்டு விட்ட காரணத்தாலும் இணையத்தில் அக்கப்போர்கள் அருகிவரும் காரணத்தாலும் – நாளை, உங்கள் கொடும்பாவி (= EvilSinner) ஒன்றை உங்கள் நல்லாசியுடன் என் வீட்டு மொட்டைமாடியில் எரித்து அதனைப் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டுக்கொள்ளலாம் என ஆசைப் படுகிறேன். சின்னச்சின்ன ஆசை. சிறகொடிக்க ஆசை.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க மிகுந்த அன்புடனும் எதிர்பார்ப்புடனும் (=OppositeBrahminWith)  உங்களை அழைக்கிறேன். தயவுசெய்து வரமுடியுமா?

என்னைப் பற்றி நீங்கள் பரப்பும் அவதூறுகளுக்குப் பிராயச்சித்தமாக (=BrassiereThoughtLike), இதனைக் கூடச் செய்யமாட்டீர்களா என்ன?

இணையப் பப்பரப்பாவாதிகளுக்கு ஊக்கபோனஸாக, உங்கள் புத்தகம் ஒன்றையும் எரிப்பதாக இருக்கிறேன்; இதற்கும் உங்கள் பரிந்துரை தேவைப்படுகிறது. இதற்கான ஒரு கையேட்டையே நெட்டுரு போட்டிருக்கிறேன் என்றால், எனது செயலூக்கத்தின் அளவைக் குறைத்து மதிப்பிடமாட்டீர்களல்லவா?
https://scarfolk.blogspot.in/2014/10/how-to-burn-books-pelican-books.html

நன்றி. வாழ்க வசையுடன்.

ஸ்ரீலஸ்ரீ வெ. ராமசாமி வசைபாடிகள் :-))

 

3 Responses to “ஜெயமோகனின் பகீர் அவதூறுகள் – சில குறிப்புகள்”

  1. avudaiappan Says:

    puriyavilai puriyum padi eluthavum

  2. Sridharan S Says:

    அவரது அவதூறுகளில் சிலவற்றை (#5,#4,#3,#2,#1) நான் ஏகோபித்து வழிமொழிகிறேன், இதுபோன்ற எண்ணற்ற அவதூறுகளுக்குரிய காரியங்களை தாங்கள் அயராமல் செய்துவருவதால் (உதாரணமாக, திரையில் நமது கதாநாயகர்ர்ர் காலித்தனமாக பெண்களைத் துரத்துவதை இரசித்து, அதே நாயகர்ர்ர் தான் செய்த அதே காரியத்தை மற்றொருவன் செய்கையில் எவனடா எனக்குப் போட்டியாக இங்கு வந்தவனென அறச்சீற்றம் கொண்டெழுந்தது (sound mixing, vfx, bgm புடைசூழ) அடித்துத்துவைக்கையில் ஆர்ப்பரித்து, சமூகவலைத்தளங்களில் சமத்துவம் பேணி, முற்போக்குப் பரப்புரை மிகநிகழ்த்தி, நிகர்வாழ்வில் தன்னெதிரில் ஒரு குழந்தை சீண்டப்படும்போது பின்னங்கால் பிடறியில்பட எதிர்த்திசையில் விரைந்தோடி மறையும் தட்டச்சுப்போராளிகள் நிறைந்த நம் சமுதாயத்தில், அந்தப்பேடியைத் துரத்திச்சென்றுதைக்கும் நெஞ்சுரம்கொண்ட தாங்கள்) இவற்றை எதிர் கொண்டே ஆகவேண்டும்.மற்றபடி, இதுபோன்ற அவதூறுகள் தவிர, தங்களைப்பற்றி கவனத்துடன் எழுதப்படுபவைகளை சாய்சில்விடுவதே சாலச்சிறந்தது.

  3. bmniac Says:

    Why should we be surprised by someone who can justify Tamil atavism(Dravidian being a linguistic classification) and goes on to find fault with RK Mission in a trivial matter?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s