தகவல் கொடுத்துச் சிவந்த வாய் உங்களைக் கும்பிட்டுக் கேட்கிறது RT
August 9, 2019
இன்று ஒரு அகவல்: சட்டம் ஒரு இருட்டறை.
…என் அருமை நண்ப நடிகர், மய்யக் கமலகாசனே அப்படிச் சொல்லிவிட்டபோது, அதைவிட ஆகச்சிறந்த பெரிய பேருண்மை பிறிதொன்றில்லை. ஆனால், என் செல்லமான தொப்பிதிலகம் புகழ் எம்ஜிஆரும் (ஆனால் கருணாநிதியளவு நான் இவரை மதிப்பதில்லை; ஏனெனில் கருணாநிதி எனும், மிகமிக பண்பட்டரீதியில் அறிவுத்தளத்தில் நடத்தப்படும் திமுக கட்சியின் தலைவர் மீது, தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்திருக்கிறேன். எம்ஜிஆர் மீது அப்படியில்லை!) ‘கொடுத்துச் சிவந்த கரம் என்னைக் கும்பிட்டுக் கேட்கிறது’ என என்னைக் காப்பியடித்துவிட்டார்!
ஆர்டிஐ ஆக்ட்/RTI Act – என்பதன் பொருள் ‘தகவலறியும் உரிமைச் சட்டம்’ என்பதல்ல. மாறாக ஐ/I எனப்படும் நான், என்ன அமோக அசிரத்தையுடன் அட்ச்சிவுட்டாலும் அதனை ட்விட்டரில் மகிழ்ச்சியுடன், என் புளகாங்கித வாசகர்கள் ஆர்டி/RT – அதாவது ரீட்வீட் செய்வது போலத்தான் என்பறிக.
என் ஓளிவாய்ந்த தகத்தகாய மகத்தான ஒலியினைப் பெருக்கும் உரிமைதான், அது மட்டும்தான் என் வாசகர்களுக்கு, என் அறிவியக்கத்தின் வழியாக அருளப்பட்டு இருக்கிறது.
ஆகவே, தகவலறியும் சட்டம், அதன் நடைமுறை, திருத்தம் போன்றவற்றையெல்லாம் ஒரு மசுருக்கும் நான் புரிந்துகொள்ள முயலவில்லை (அதெல்லாம் என் வாசகர்களுக்கு முக்கியமா என்ன? ஹ்ஹ!) என்றாலும், காற்றுவாக்கில் வந்தசேதிதான் என் காத்திரமான தரவு என்பதால் இன்றைய அருள்வாக்குகளின் சாராம்சம்:
…இத்தோ புட்ச்சுக்குங்கடா!
- ஆர்டிஐ சட்டம் நீர்க்கடிக்கப்பட்டுவிட்டது (water bitten silk left), அந்தோ!
- ஆர்டிஐ மழுங்கடிக்கப்பட்டுவிட்டது, இதைக் கேட்பாரே இல்லையா? ஆனால், அறச்சீற்றத்துக்கே அறச்சீற்றம் வரவைக்கும் பராக்கிரமம் மிக்க நான், உரிமையுடன் கேட்பேன்!
- ஹிந்துத்துவா பாஜக அரசிடம் நாம் எப்படி அறத்தை எதிர்பார்க்கமுடியும்?
- தமிழ் இலக்கிய எழுத்தாளன் தான் இந்தியப் பாரம்பரியத்தின் மனச்சாட்சி.
- ஆர்டிஐ நாட்டாரியக் குறுந்தெய்வம், மைய நீரோட்டத்தில் உட்புகுத்தப்பட்டு பெருந்தெய்வமாக ஆகவேண்டியதற்குப் பதிலாக அதன் கைகள் வெட்டப்பட்டு மோடிமஸ்தான் மாந்த்ரீகனால் மந்திரக்கட்டு கட்டப்பட்டுவிட்டதே! ஓ அம்மே!
- ஆர்டிஐ மறுக்கப்பட்டால், அமைதிபூர்வ மார்க்கத்தின் மாற்றுஅறமான ஆர்டிஎக்ஸ் வெடிக்குமன்றோ?
- அறக்கிழவன் காந்தி இன்று இருந்தால் என்ன செய்திருப்பான்? ஆர்டிஐ குறித்து விலாவாரியாக என் மேலான கருத்துகளை எழுதும்படிக்குக் கோரிக்கை வைத்து, ஆல்ரவுண்ட் அறிவுஜீவியான எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியிருப்பான். கிழவனுக்கு, ஆகச்சிறந்த என்னை அணுகுவதைத் தவிர வழி பிறிதொன்றில்லை.
சரி. இதுகுறித்து சிலபல ‘வாசகர் கடிதங்களும்’ + ‘வல்லுநர் பார்வை’களும், எம் வழக்கம்போலவே தொழில்முறையில் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன; அவை நாளை வெளிவரலாம். ஆனால், நாளைக்கு என்ன, எதுகுறித்து எப்படி அருள்வாக்கு அளிக்கப்போகிறேன் என்பது, இன்று என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்து என் அட்ச்சிவுடுதல்களை அமைத்துக்கொள்வதில் இருக்கிறது.
அதுவரை மேற்படி அருள்வாக்குகளை வழக்கம்போலவே ஊதிப் பெருக்கிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் வாசகர் கடிதம் எழுதவும்.
ஆ! சொல்ல மறந்துவிட்டேனே! ஒரு புதிய சேவையைத் தொடங்கியிருக்கிறேன். அதாவது உங்கள் கனவிலும் பிரத்யேகமாக வந்து அருள்வாக்குச் சொல்வதுதான் அது.
கனவுலகஜீவி ஸர்வீஸ். என் கனவுகளில் ஒன்றான இதனை மேம்படுத்தும் முகமாக – வேண்டுமளவு நனவிலி வாசகர்கள் சேர்ந்தால், ஒரு கட்டணக் கனவுப் பேருரைக்கும் ஏற்பாடு செய்யலாம்; இதற்கான தொழில் நுட்பத்தேவைகளை என் வாசகர் எம்ஸ்ரீனிவாஸ் பார்த்துக்கொள்வார்.
இந்தக் கூட்டத்தில் பங்குபெறுபவர் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கவேண்டும். கூட்டத்தின்போது கொறட்டையை உரக்க விடக்கூடாது. கண்டிப்பாக, ஜொள்ளொழுகவும் கூடாது.
தேவைப்படுபவர்கள் என்னை என் கனவினூடே தொடர்புகொள்ளலாம். முன்விண்ணப்பம் செய்பவர்களுக்குச் முன்சலுகைகள் உண்டு. #இனியகொறட்டை எனும் கூப்பனை/டோக்கனை உபயோகித்தால் 10%கழிவு நிச்சயம். கழிவுடன் பேருரையைப் போட்டுக் குழப்பிக்கொள்ளவேண்டாம்.
இந்தச் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட முடியாதவர்கள் அல்லது வேண்டாதவர்கள் கனவிலிக் கட்டணக் கூட்டங்களுக்கு வரலாம். ஒரு சிக்கலும் இல்லை.
நம்முடையது ஒரு, அறம் சார்ந்து அறுக்கும் அறிவியக்கம்.
நன்றி.
உங்கள் அவசர ஆன்மீக மற்றும் லௌகீகக் கேள்விகளுக்கு, உடனடியாக நீங்கள் அணுகவேண்டிய ஒர்ரே இடம்… என் கடைதான்!
டட்டடயிங்க்க்க்க்க்ங்!
—
August 9, 2019 at 10:38
Eppudiyya yosikkireer! sirichi maalala!
August 9, 2019 at 11:01
Hey! I don’t ‘think.’ Only copy from ‘sources.’
One can’t even BEGIN to plumb the abysmal depths that our current litt scene is! Amazinggo!! :-((