பாதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – பகீர் பயங்கர உண்மைகள் : திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், கொல்லியல் துரை, தமிழக அரசு
July 11, 2019
இனிமேலிருந்து ஓத்திசைவில் அவ்வப்போது சிலபல துறைவல்லுநர்கள் தொடர்ந்து ‘விருந்தினர் கட்டுரை’ எழுதுவார்கள் என்பதைப் பெருமையுடன் அறிவிப்பதில் இறும்பூதடைவதே நான்தான்!
…எடுத்துக்காட்டாக, இந்த அறிமுகத்துக்குப் பின் வரும் கட்டுரை ஒரு ஐஏஎஸ் அதிகாரியால் எழுதப்பட்டுள்ளது; அவர் துறைவல்லுநராக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவர் துரை வல்லுநர் என்பதை யார்தான் மறுக்கவோ மறக்கவோ முடியும், சொல்லுங்கள்? வெள்ளைக்கார ஐஸிஎஸ் காலத்திலிருந்து, துரைமார்கள்தாமே நம்மை ஆண்டாண்டுகாலமாக ஆண்டு வந்துள்ளனர்? அவர்கள் வல்லமை வலிதல்லவா? பராக்கிரமம் பெரிதல்லவா? கரும்பழுப்புத் தோலர்களானாலும் அவர்கள்தம் ஆளுமை, தேங்காய்த்தர வெள்ளையல்லவா?
மேலும் அவர்கள் என்ன எழுதினாலும், தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் என்று மட்டம்தானே என்னைப்போன்ற வெறும் ராமசாமிகள், பதில் பேசாமல், ஒரு கேள்விகூடக் கேட்காமல் அகலமுடியும்? அவர்களுக்கு சகல துறைகளிலுமிருக்கும் ஆழ்ந்த, அபூர்வ ஞானத்தை, சாதா பொதுஜனங்களாகிய நமக்கு அளக்கக்கூட முடியுமா? அதையே விடுங்கள், அதற்கும் மேற்பட்டு அவர்கள் அளக்குமளவுக்கு நம்மால் அளக்கத்தான் கூடுமா, சொல்லுங்கள்?
சரி. குண்ஸாகச் சொல்லமுடியுமானால், பொதுவாக எல்லா ஐஏஎஸ்களும் சமம். ஆனால் சில ஐஏஎஸ்கள் மேலதிகமாகச் சமம். இந்த மேலதிகம் என்பதன் சூட்சுமம், அவர்களுடைய அட்ச்சிவுடும் திறமைசார் தெகிர்யத்தில், கூச்சமின்மையில் பொதிந்திருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதியிருக்கும், மூக்கும் முழியுமாகத் திருதிருவென முழித்துக்கொண்டு இருக்கும் அஸ்தமனசூரியன் ஐஏஎஸ் அவர்களுக்கு இந்தத் திறமை ஏகத்துக்கும் இருக்கிறது.
-0-0-0-0-
இப்போது உங்கள் மனதில் எழும்பும் முதற்கேள்வி – இந்த திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், திரு உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் தம்பியா விரோதியா எதிர்ப்பதமா?
பதில்: எனக்குத் தெரிந்து, எதுவும் அப்படி இல்லை, இல்லை, இல்லை. இந்த அடிப்படைப் புரிதல் உங்களுக்கு முக்கியம். தேவையற்ற வம்பில் என்னை மாட்டிவிடாதீர்கள், சரியா? எந்தப் புற்றில் எந்த ஜீபாம்போ யாரறிவர்.
ஆக – கவனிக்கவும், கருத்தில் கொல்லவும்: முன்னவர் துறை கொல்லியல், பின்னவர் துறை தொல்லியல்; அதாவது முன்னவர் கொல்லியலின் துரை, பின்னவர் தொல்லியலின் தொரை. ஆனால் முன்னவரும் பின்னவர்போலவே ஆகிருதியும், அறிவுத்திறனும், நுண்ணுணர்வுள்ள நுணுக்கமான நுண்மான்கள் (Nano Deer) நுழையமுடியாத புலங்களிலும் புகுந்து புறப்பட்டுப் புலம்பெயர்ந்து அறிந்துதெளியும் வல்லமையும் ஏகோபித்துப் பெற்றவர் என்பது கொள்ளிடை கொலை. மேலும் முன்னவர், எனக்கு முன்பே நன்கு நரிமுகமான நபர். ஆனால், என் ஆழ்ந்த மரியாதைக்குரிய பின்னவர் அப்படியல்லர்.
…ஆனால் திராவிடத்தில் தொப்புள்கொடி உறவு எனவொரு அரூப அபூர்வத்தனம் சொட்டும் சுவையான பதம் இருக்கிறது. இந்த உறவுமுறைக் கருதுகோள் செங்கோளின்படி, அவர்கள் இருவரும் உறவினர்களே என்பது ஆங்கே உறைந்திருக்கிறது. அது மட்டுமல்ல, நானும் அவர்களுடைய தொப்புள்கொடி உறவினன், ஆகவேதான் இக்கட்டுரையைப் பதிப்பிக்கிறேன் என்பதும். மேலும் தமிழில் வந்திருக்கும் இந்த முக்கியமான கட்டுரையைப் படிக்கும் பாக்கியம் பெற்ற நீங்களும் எமது தொப்புள்கொடி உறவினரே! வ்வோத்தா, தப்பித்து ஓடலாம் எனவா பார்க்கிறீர்கள்??
யாதும் தொப்புளே யாவரும் கொடியே! நன்றி.
ஊக்கபோனஸ் கேள்வி: திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ் நல்லவரா, கெட்டவரா?
பதில்: மய்யத்தின் நாயகனான கமலகாசனார் அவர்களிடமே இதைக் கேட்கவும். தேர்தல் முடிந்தபின் அவருக்கும் என்னைப்போலவே நிறைய நேரம் இருக்கிறது என நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் (எடுத்துக்காட்டாக, என்எதிர் வீட்டு ஞமலியின் கேர்ல்ஃப்ரெண்ட்) சொல்கின்றன. இவருடைய பதில் சுத்தமாகவே புரியாமல் போகலாம். ஆகவே மணி ரத்தினம் அவர்களிடம் செல்லலாம். அவர் ஏறத்தாழ இப்படித்தான் சொல்வார்: “வேணும், நாயகன் எடுத்த எனக்கு நல்லாவேணும். இதுவும் வேணும். இன்னமும் வேணும். நல்லவரு, அவ்ரு நல்லவரு. ஆனா, கெட்டவரு, அவரு கெட்டவரு. நாலு பேருக்கு கெட்டது செஞ்சா கெட்டவரு நல்லவராய்டுவாரு!’ ஆக, கமலகாசனே பெட்டர்.
இன்னொரு கேள்வி: இது ஒரு கிண்டல்/பகடி பதிவா?
இன்னொரு பதில்: என்ன இப்படி ஒரு அபாண்டமான கேள்வி! :-( இல்லவேஇல்லை! படுஸீரியஸ்ஸாக அலக்கியவிமர்சனம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி என எங்கெங்கோ ஞானத்தங்கமாக அலைந்து கொண்டிருக்கும் என்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்பீர்கள் என நினைத்தால்… உள்ளபடியே எனக்கு துக்கமாக இருக்கிறது. என்றைக்கு நான் பகடி கபடி என அலைந்திருக்கிறேன் சொல்லுங்கள்? என் மனைவியிடம் (பிரமிக்கத்தக்க வகையில், என் துணைவியும் அவரேதான்!) கேட்டால், உம்மணாமூஞ்சியான அடியேனுக்குச் சுட்டுப்போட்டாலும் நகைச்சுவை உணர்ச்சியே வராது என்பார்; இத்தனைக்கும் அவர் தங்கம்வெள்ளிசனி போன்றவற்றை விரும்புபவரே அல்லர்.
மேலும், அருகே வாருங்கள், வெளிப்படையாகச் சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் – எனக்கு அரசு ஆட்சி அரசியல் கட்சி வகை உயரதிகாரிகளை அல்லது சுருக்கமாக உதிரிகளைக் கண்டாலே கொஞ்சம் வெடவெட நடுக்கம். ஏமாந்தால், மனிதவுரிமையுடன் முட்டிக்குமுட்டி தட்டி உள்ளே தள்ளிவிடுவார்கள், பாவிகள்! ஆகவே. :-(
இனி விருந்தினர் கட்டுரைக்குத் தைரியமாகச் செல்லலாம்; அஸ்தமனசூரியன் ஐஏஎஸ் அவர்களைப் பற்றி, நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. அவர் கொல்லியல் நிபுணரும் கூட. கொல்லாமை என இதனைப் புரிந்துகொள்ளாமல் கொல்லென்று மக்களைச் சிரிக்கவைக்கும் துறை என இதனைப் பதம் பிரித்து அறிந்தாலும் அதுவும் நன்றே!
-0-0-0-0-0-
பாதிச்சநல்லூர் – புதைக்கப்பட்ட ரகசியங்கள், அகழ்ந்த அண்டங்கள், பிறழ்ந்த பிண்டங்கள்
(அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், கொல்லியல் துரை)
நம் பாவப்பட்ட தமிழகம், எல்லாத் துறைகளிலும் வடவர்களால், ஹிந்திக்காரர்களால், பார்ப்பன-பனியாக்களால், ஹிந்துத்துவக்காரர்களால், ஆர்எஸ்எஸ்ஸால், அம்பானிஅடானி டாட்டாபிர்லாக்களால், பன்னாட்டு நிறுவனங்களால், முதலாளித்துவத்தால், ஏகாதிபத்தியத்தால், இல்லுமினாட்டிகம்மினாட்டிகளால் தொடர்ந்து, துளிக்கூடக் கருணையேயில்லாமல் வஞ்சிக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்ததே. பிரச்சினை என்னவென்றால், திராவிடர்களாகிய நாம், கல்தோன்றி மண் தோன்றாக்காலத்திலிருந்து வாயில் விரலையும் சகதிராவிடர்களின் இன்னபிற டிங்டாங் போன்றவற்றையும் வைத்துச் சப்பிக்கொண்டே இருக்கும் அப்பாவிகளாகவும் அறியாமையில் மூழ்கியவர்களாகவும் இருந்திருக்கிறோம், என்ன செய்வது சொல்லுங்கள்?
கைபர்போலன் கணவாய் வழியே நுழைந்த ஆரிய நச்சரவக் கொங்கணவர்கள், நம் பண்டைய நாகரீகத்தைச் சிதைத்ததற்குத் தரவுக் களஞ்சியங்களை சுனாமிபோலத் தரமுடியும் என்றாலும், உங்களுக்கு நீச்சலோ பாய்ச்சலோ அறிமுகம் இல்லையென்றால் முழுகிப் போய்விடுவீர்கள்.
ஆகவே, நீங்கள் எளிதில் இந்தக் கொடுமையை, ஓரவஞ்சனையை, மத்திய அரசின் அடுத்துக் கெடுக்கும் மனப்பான்மையை இனம்கண்டுகொண்டு புரிந்துகொள்வதற்காக, என்னுடைய சொந்த எடுத்துக்காட்டாக, இதுதொடர்பாக ஒருதரவைக் கொடுக்கமுடியும்: என்னை வேறெங்கோ அனுப்பியிருக்கலாம், ஆனால் மத்திய அரசுதான் என்னைத் தேவைமெனக்கெட்டு, தமிழகக் கேடரில் அடக்கி அனுப்பியிருக்கிறது, நானும் கொல்லியல் துறையின் துரையாக இருக்கிறேன். இதைவிட அசிங்கமாக, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன், மத்திய அரசு அணுகமுடியுமா? கேவலம்! இன்னமும் பலப்பல பிற, சகஐஏஎஸ் அதிகாரி எடுத்துக்காட்டுகளைக் கொடுக்கமுடியும். ஆனால் வேண்டாம். எனக்கெதுக்கு வம்பு. ஆகவே, அகழ்வாராய்ச்சி பக்கம் போவோம்.
ஏற்கனவே கீழடி ஆராய்ச்சியில் ஆரியர்கள் அரங்கேற்றியிருக்கும் கபட நாடகத்தை நாமெல்லாரும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஃபார்வர்ட்கள் மூலமாகவும், பிற துறைவல்லுநர்களான போராளிகள் மூலமும் அறிந்திருக்கிறோம் அல்லவா? மத்திய அரசு இப்போது என்ன சொல்கிறது என்றால், “அவரவர் கீழடியில் என்ன இருக்கிறது என்பதை அவரவரே பார்த்துக்கொள்ள முடியும் இக்காலத்தில், நாங்கள் ஏன் அங்கு வந்து நோண்டவேண்டும்? உங்கள் அடியில் கண்டசொத்து உங்களுடையது என்பதை அறிவீர்!”
நியாயம்தான். ஆனால் எம்மைப்போன்றிருக்கும் தமிழ்மறவ செம்மறவர்களுக்கு வளப்பமாக வளர்ந்திருக்கும் பெரும்தொந்தி செந்தொந்தி மறைப்பதால், எம்மால், மூத்திரம் அடிப்பதற்கே கீழடியைக் கீழ்திசை நோக்கிக் குவியம் கொள்ளச் செய்யமுடியவில்லையே! ஆக கீழடியை ஆய்ந்தறிய மத்திய அரசுதான் நமக்கு உதவவேண்டுமன்றோ?
-0-0-0-0-
அண்மையில், சிலவருடங்கள் முன்பு, பாதிச்சநல்லூர் சென்று அங்கு நடந்துகொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும்போது சில முக்கியமான விஷயங்கள் என் கவனத்துக்குக் கொணரப்பட்டன.
மத்திய அகழ்வாராய்ச்சி விற்பன்னர்கள் (ஏஎஸ்ஐ-காரர்கள்) – நம்மை இகழ்வாராய்ச்சி செய்திருக்கிறார்கள் என்பதைத் தீரவிசாரித்து அறிந்து விசனமுற்றேன். அவை என் மனதுக்குக் கொடுத்த உளைச்சலுக்கும் பாதிப்புக்கும் அளவேயில்லை.
பிரச்சினை என்னவென்றால் ஆரியர்கள் அகழ்வாராய்ச்சி செய்யும் போது, பண்டைத் தமிழன் விட்டுச் சென்ற சில தடயங்களை, நம் பாரம்பரியத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றைப் பகிரங்கப் படுத்தினால், ஆரிய நச்சரவத்தின் வேதகாலத்துக்கு முன்பே கணிநியைக்கூடக் கண்டுபிடித்திருக்கும் நம் பாட்டன் பூட்டன் செருப்பன் பாதக்குறடன்கள் பற்றியெல்லாம் உலகமே பரணி பாடிடுமே! அதனால், இந்தியத் தொல்லியல் ஸர்வே காரர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா?
தமிழர்கள் வாழைமட்டைகள், கொர்கொர் எனக் கொறட்டை விட்டுக்கொண்டு தூங்குபவர்கள் என அவர்கள் அறிந்துள்ளதால் – நச்சரவங்கள், தங்களுக்குக் கிடைத்த சில முக்கியமான சான்றுகளை எடுத்துக்கொண்டு, போர்க்காலரீதியில் ஹரப்பா சென்று அதனைப் புதைத்துள்ளனர். பின்னர் சாவகாசமான அவற்றை அகழ்வாராய்ந்து கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் சதி. அப்போதுதானே அந்த நச்சரவங்களுக்கு, சிந்துஸரஸ்வதி நாகரீகம்தான் முதன்மையானது எனக் காண்பித்துக்கொள்ளமுடியும்? பாவிகள்!
ஆனால் நல்லவேளை – அவர்கள் அவற்றைக் கடத்திச் செல்வதற்குள், சாண்டில்யனுக்கு நன்றியுடன், கிருஷ்ணபட்சத்து நள்ளிரவுக் கும்மிருட்டில் நான் அந்த ருசுக்களை எப்போதோ படம்பிடித்துவிட்டேன். ஏதோ என்னாலான, நம் லெமூரியத் திராவிடத் தமிழகத்துக்கான சேவை. அதைக் குறித்து, நம் தமிழைக் கூறுபோட்டு விற்கும் நல்லுலகத்திற்கு எடுத்து இயம்புவதற்கு எனக்கு வாய்ப்பளித்ததோ மாங்காய்பளித்ததோ என அனுமதிகொடுத்த தமிழ்ச்செம்மல் செஞ்செம்மல் திருமிகு ராமசாமியார் அவர்களுக்கு என்னுடைய மனம் கனிந்த நன்றி.
-0-0-0-0-0-
பச்சைத் திராவிடன் – பாதிச்சநல்லூரில் கிடைத்த காத்திரமான, அசைக்கமுடியாத சான்று
பேச்சுவழக்கில் நாம் சொல்கிறோம் இல்லையா, பச்சைத் தமிழன் பச்சைத் திராவிடன் என்றெல்லாம்? அதற்கெல்லாம் கூட திராவிடப் பாரம்பரியத்தில் சான்றுகள் இருக்கின்றன.
நம்மில் எவ்வளவுபேருக்குத் தெரியும், லெமூரிய காலத்துப் பச்சைத் திராவிடத்தமிழன் ஆக்சுவலாகவே பச்சையாக இருந்தான் என்று?
பாதிச்சநல்லூரில் சுமார் 3.142 கிலோமீட்டர் ஆழத்தில் கிடைத்த சிலைச் சான்று இதோ!
எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் பாருங்கள், தம் சகதிராவிடர்களொடு கும்மாளமடிக்கும் பச்சைத் திராவிடன். (தேர்ந்த திராவிட வரலாற்றாளரும் ஓஸாகா பல்கலைக்கழகப் பேராசிரியருமான நிக்குமா நிக்காதா அவர்கள் இதனைப் பற்றி ஆய்வறிக்கை எழுதியிருக்கிறார்கள். ஆனால், மத்திய அரசு, இதனையும் மூடி மறைத்துவிட்டது. மத்தியில் இருப்பது மோடி அரசல்ல, அது மூடி அரசு.)
இன்னொரு பசும்பொன் பச்சைச் சிலை.
நம் மூதாதையர்களின் அருமைபெருமைகளை நினைத்தாலே நெஞ்சம் விம்முகிறதல்லவா?
கர்வத்துடன் சொல்லுங்கள்!
நான் பச்சைத் தமிழன் பசுந்திராவிடன் வழித்தோன்றல் என்று!
என் உடலில் ஒடும் ரத்தம் பச்சை ரத்தமென்று!
-0-0-0-0-0-
நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும், நம் திராவிடப் பாரம்பரியக் கொடி என்பது தொப்புள்கொடி என்றும்?
நம் சொந்த வரலாறுகளையே நாம் அறியாமல் இருப்பதால்தான் ஆரியம் இங்கு வந்து தன்னை நம்மேல் கவிழ்த்துகிறது அல்லவா?
கீழே இருப்பது பாதிச்சநல்லூரில் இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலவிய திராவிட அரசின் கொடி. லெமூரியத்தின் சின்னம்.
தொப்புள் கொடி!
என்ன, பார்த்தாலே புல்லரிக்கவில்லை? இது சுமார் 42கிமீ ஆழத்தில் மத்திய அரசின் இகழ்வாராய்ச்சிக் காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாகக் கடத்தப்பட்டது… சோகம்.
ஆனால், நம்மில் எவ்வளவுபேருக்குத் தெரியும், தொப்புள்கொடியுடனான நம் தொப்புள்கொடியுறவு?
தொப்புள மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
ஆங்கே பம்பரம் விடுவோம், நல்லா கம்பு சுற்றுவோம்
…என்றெல்லாம் பாட்டுக்கொரு கவிஞன் பாரதியே பாடினானென்றால் அந்தக் கொப்பூழின் பராக்கிரமத்தை நாம் அறிந்தது நம்மூழ் நல்லூழ் செவ்வூழல்லவா?
அன்றில் பறவை பறந்த அன்றிலிரிந்து இக்காலத் திரைப்படங்கள் வரை, தீராமல் தொடரும் நம் தொப்புள்மோகம் என்பது லெமூரியத் திராவிட டீஎன்ஏவிலேயே இருக்கிறது என்பதை, என்று நாம் புரிந்துகொள்ளப் போகிறோம்? :-(
அதுமட்டுமல்ல, பாரதி இதன் தொடர்பாகத் தொடர்ந்து…
“அக்கினிக் குஞ்சொன்று கீழடியில் கண்டேன் அதனைக் காட்டி பொந்திற்குள் வைத்தேன்!” என்றெல்லாம் பாடவில்லையா?
நம்முடைய தொப்புள் நமதென்பறிந்தோம் என வாளாவிருக்காமல் வீறுகொண்டு எழுவோம்.
நமக்குத் தொப்புள்கொடியுடனான தொப்புள்கொடி உறவு, நம் சந்ததிகளுக்குத் தெரியாமல் மறைக்கப்படக் கூடாது.
ஆகவே சென்னை மெரீனாவில் அடுத்த ஆவணியில் அவனி அதிர அணிதிரண்டு நம் தொப்புள்கொடியை நாமே ஏற்றுவோம்! ஹரப்பாவில் புதைக்கப்பட்ட நம் தொப்புள்கொடியை மீட்டு அமித்ஷா தலையில் வைத்து அதனைத் திருப்பிக் கொணர்வோம்!
ஆரியர்களின் கொட்டத்தை அடக்கி, நம் கோட்டையில் தொப்புள் உறவுக் கொடி ஏற்றி, அதனைப் பட்டொளிவீசிப் பறக்கச் செய்வோம்!
மறைக்கப்பட்ட மறைகளை புதைக்கப்பட்ட புதையல்களை சிதைக்கப்பட்ட சிதிலங்களை மீட்டெடுப்போம்! ஊக்கபோனஸ்ஸாக திராவிடனின் தன்மானத்தையும்!
வாழ்க தொப்புள்! வளர்க தொப்புள்!
தொப்புளே வெல்லும்!
-0-0-0-0-
சக ஏழரைகளுக்கு மட்டும் ஒரு விண்ணப்பம். மேற்கண்ட கட்டுரை போல உயர்தர அகழ்வாராய்ச்சிகள் அவ்வப்போது பதிப்பிக்கப் பட்டால், அவற்றைப் படிப்பீர்களா என்பதை மட்டும், ஒரு சிறு பின்னூட்டமாகத் தெரிவிக்கவும். அடுத்ததாக எந்த வல்லுநரைப் பிடிக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. பரிந்துரைத் துரை வல்லுநர்கள், குறிப்பாக இதனைக் கவனிக்கவும்.
மேலும் தமிழ்நாட்டில் நாம் அனைவரும், என் பெரும்பேராசான் உட்பட, அனைத்துத் துறைகளிலும் வல்லுநர்கள் என்பதை நான் மிக வல்லுநத்தனமாக வல்வில் ஓரியாக ஒர்ரேயடியாக உணர்ந்திருக்கிறேன். ஆகவே நீங்களும் வல்லுநர்களே! நீங்களும் எழுதலாம்.
ஏனெனில் தமிழன் இழந்த மண், மானம், மண்ணாங்கட்டி, தெருப்புழுதி போன்றவற்றை எட்டுத் திக்கும் சென்று திக்கித் திணறி மீட்டுக் கொணரலாம் என – நானும் என்னுடைய சக, சகலதுறைவல்லுநர்களாகிய நீங்களும் இனிமேலாவது தொடர்ந்து முயலவேண்டும்; வெறுமனே ஐஏஎஸ் ஆஃபீசர்களை மட்டும் நம்பினால் போதாது அல்லவா? ஆக, பார்க்கலாம்.
வாழ்க திராவிடத் தொப்புள்கொடி. வளர்க பச்சைத் திராவிடன்.
நன்றி.
July 11, 2019 at 17:08
Waiting to read…. Next : Kalvar Kottam : Venkatesan
July 11, 2019 at 19:51
AyeAyeYo! :-(
July 12, 2019 at 02:58
தொப்புளான் என்று தமிழனுக்கு இன்னொரு ஒரு பெயர் வைக்கலாம்.தன் தொப்புளைத்தானே குனிந்து பார்க்கமுடியுமா என்று நமது ஐ ஏ எஸ், ஐ பி எஸ் துரைமார்களுக்கு ஒரு போட்டி வைக்கலாம்.ஆமாம். தொப்புள் கொடியை அறுத்து, ஒரு துணியில் கட்டி ஆலமரத்தில் தொங்கவிடும் வழக்கம் வடவரிடம் உண்டா?இதிலிருந்தே தெரியவில்லையா ஆதி தமிழன்/திராவிடன் எவ்வளவு பெரிய விஞ்ஞானி என்பது!!
அடுத்து ஒரு கதையோ ,கட்டுரையோ திருமதி பொட்டு அம்மாள் ஐ பி எஸ் ஓய்வு அவர்களிடம் பெற்று வெளியிடலாம்.
July 12, 2019 at 06:10
“திருமதி பொட்டு அம்மாள் ஐ பி எஸ் ஓய்வு”
???
July 12, 2019 at 09:28
திலகவதி?
July 12, 2019 at 10:31
!
July 12, 2019 at 07:06
தமிழில் டாக்டர் பட்டம் வாங்கி தமிழன்னைக்கு குடலாப்பரேசன் செய்த அனுபவங்களை மொனைவர் தமிளரசண் .பீ.எச்சை. டி அவர்களைக் கொண்டு ஒரு தொடர் எழுதச் சொல்லும்.அவரது முகவரி
என்ஜினியர் தமிளரசண், பி.ஏ.பி.எல்., மாட்டாஸ்பத்திரி காம்பவுண்டு , ச்செண்ணை – 228. (குறிப்பு:இங்கு டூவீலர் பஞ்ஜர் வேலைகள் நல்லமுரையில் செய்து தரப்படும்)
July 12, 2019 at 07:21
முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டீர்களே! அவருக்கு லெமூரியர்களுடன் பரிச்சயம் உள்ளதா?
July 12, 2019 at 09:37
மூத்த ஏழரை என்பதால் இந்த சிறப்புமிகு தேர்வுக்கு எனது முழு ஆதரவு உண்டு!இதற்கான வலிமையான ஆதாரம்:
https://pakrishnan.com/2019/07/09/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/
July 12, 2019 at 17:51
ஐயா நன்றி. சமயம் கிடைக்கும்போது படிக்கிறேன். (கொஞ்சம் நடுக்கமாகவே இருக்கிறது)
July 12, 2019 at 09:43
நுண்மான்= Nano Deer – பஹுத் அச்சா!
July 12, 2019 at 13:05
நீர் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியப் பாம்பு. தமிழை மூலதனமாக கொண்டு வாழ்க்கையில் வசதி வந்தவுடன் தமிழை என் தமிழன்னையை கேவலப் படுத்துரறீர். இருக்கட்டும் லெமூரியா வலூருந்து எங்கள் தமிழ் நடை கிளம்பி விட்டது. இனி ஆரியப் பாம்கள் வடக்கு நோக்கி ஓட வைப்போம்.
July 12, 2019 at 15:04
அன்பரே, வாழ்த்துகளுக்கும் முன்னறிவிப்புக்கும் நன்றி.
நானும் இன்றிலிருந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபடலாம் என நினைக்கிறேன், கைபர்போலன் வழியே வெளியேற அது உதவியாக இருக்குமல்லவா? 😭
ஆனால் ஒரு ஆச்சரியம்: எப்படி நீங்கள் இங்குவந்து இதையெல்லாம் படிக்கிறீர்கள்? 🤣
தப்பித்தவறி உங்கள்தமிழைப் போய் தமிழன்னைக்குக் காண்பித்துவிடாதீர்கள்! இன்றைக்கோ நாளைக்கோ என்று ஊசலாடிக்கொண்டிருக்கும் அவள் உயிர் இன்றே ஓடிப்போய்விடும்! மற்றபடி உங்கள் விருப்பம்.
July 13, 2019 at 22:48
அடுத்ததாக எந்த வல்லுநரைப் பிடிக்கலாம் என்பதற்கான பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன:
J. D. Bhaskara Das
July 14, 2019 at 05:17
??
July 14, 2019 at 10:30
Please take a look at the youtube talk:
சம்ஸ்கிருத மொழியை தமிழரே உருவாக்கினர் – முனைவர் பாஸ்கரதாஸ்
July 14, 2019 at 13:52
“வாராய் நீ வாராய்” என என்னை எங்கோ அழைத்துக்கொண்டு சென்றுவிட்டீரே மலைக்கள்ளரே! எனக்கு இது தேவையா?? :-(
July 25, 2019 at 18:47
http://www.lightoflife.com/LOL_Arch_Article_IsNot_Indian_Religious_Traditions_Christianic.htm
This Bhaskaradas seems to be a nagarkoil Christian. and very cleverly using Tamil to bash the other Indian culture is very bad , the venomous speech , our poor tamilians.
July 25, 2019 at 19:33
Sir, there are all kinds of jokers like this. But what is very surprising to me is the fact that folks flock to these nincompoops.
Water does find its level, so do people, based on their own stage in evolution.
Remember, we need diversity. ;-)
July 26, 2019 at 11:47
சார்,என்னுடைய மற்றுமொரு தெரிவு :சமஸ் மற்றும் கல்விக்கலை நிபுணர் : நடிகர் சூர்யா
https://www.hindutamil.in/news/opinion/columns/508684-indian-education-sytem-things-to-learn-from-surya-agaram.html
July 26, 2019 at 12:24
கலவிக்கலை நிபுணர்கள்?