வ்ளாடிவாஸ்டக் நகரில் ஒத்திசைவு வாசகர் வட்டம் – கடிதம்
June 9, 2019
ஹனிய ஹராம்,
உங்கள் பெயரைக் கேட்டாலே காதில் களிதேனை ஊற்றுவதைப் போல, அதன்பின் கடுப்புற்ற கடும் கட்டெறும்புகள் சாரிசாரியாக வந்து ஸாரி சொல்லாமல், எங்கள் காதினுள் அமைந்திருக்கும் வெண்பழுப்புமுரசை, நுண்டமாரத்தை கடித்துப் பிய்த்துப் பிடுங்குவதுபோல அப்படியொரு உணர்ச்சிகரம்! FeelingHand!
நிற்க. வழக்கம் போலவே எங்கள் வாராந்திரக் கூட்டம், சென்ற வாரமும் இனிதே நிறைவேறியது.
ஒரு சிறிய அறிமுகம்: உலகத்தின் வேறு யாருமே உங்களளவுக்கு அறிவும் பராக்கிரமும் படைப்பூக்கமும் பெற்றிருக்கவில்லை என்பதால் – பெருமையுடன் உங்கள் புத்தகங்களையும் கருத்துகளையும் தீர்க்கமாக விவாதம் செய்து தீர்க்கத்தான், பின்னர் – தமிழ் அலக்கியம், அதனுடன் நுண்மையான நுணுக்கத்துடன் நுனி வரை தொடர்புள்ள வாயுத்தொல்லை, ஆசீவக அஜீரணம், குதப்புண், விரைவீக்கம், திகம்பரம், பசிதம்பரம், ராகுல் அல்குல், சமதர்மத் திருமணச் சமணம், நேனோ (10−9)தெய்வங்கள் மைக்ரோ(10−6)தெய்வங்களால் உள்ளே மய்யமயமாக்கும் நீரோட்டத்தில் இழுத்துக்கொள்ளப்பட்டமை – அதேபோல மைக்ரோதெய்வங்கள் மில்லிதெய்வங்களால், மில்லிதெய்வங்கள் குறுந்தெய்வங்களால், குறுந்தெய்வங்கள் நடுந்தெய்வங்களால், நடுந்தெய்வங்கள் பெரும்தெய்வங்களால் அப்படிஅப்படியே போன்ற உலகத்தை அமோகமாகக் குலுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்றுதான் இதனைத் தொடங்கினோம்.
ஏனெனில் – எப்படியும் சொப்பன ஸ்கலிதம் முஷ்டிமைதுனம் வகையறா அதிதீவிர தமிழிலக்கியப் பிரச்சினைகளைத் தீர்க்க சாருநிவேதிதா வமட்டம் இருக்கிறது. வொலக முழிபெயர்ப்பு , வொலகசினிமா, வொலகஎலக்கியம் பொலகஎடக்கை வொலகசஞ்சாரம் வொலகாந்திரி போன்ற படுபீதியளிக்கும் கொடூரப் பிரச்சினைகளைத் தீர்க்க எஸ்ரா வாசகர்கள் அல்லா நாட்லயும் கீறானுங்கோ. வெண்முரசு உள்ளிட்ட உள்ளீடற்ற ஆழ்ந்து உறைந்து பொளேறென்று அறையும் கர்ணகடூரக் காவியப் பிரச்சினைகளுக்கோ, அவற்றின் சொல்புதிது கீது.
…நாங்கள் முதலில் எங்கள் அமைப்பை ஒரு குழுமம் எனவே அழைத்தோம். ஆனால், வருத்தத்துக்குரிய விதத்தில் இதில் இரண்டு பிரச்சினைகள்:
1. ‘குழுமம்’ – ட்ச் ச் ட்ச் கம் ஹியர் என அழைத்தால், உடனடியாக அது வாலாட்டிக் கொண்டு கதனகுதூகலத்துடன் அருகில் வரவில்லை. அதன் பெயரே அதற்குத் தெரியவில்லை. சோகம்.
2. ‘குழுமம்’ என்றால், குழு வெறும் மம்-கள் மட்டும் சார்ந்தது – ஆகவே டாட்டிகள் இணையமுடியாது என யாரோ வாட்ஸ்அப்பிலோ அல்லது ஜெயமோகன்.இன் இணையதளத்திலோ கிளப்பிவிட்ட புரளி காரணமாக, ஆண்கள் இணையமுடியாத பரிசுத்தப் பெண்ணிய சூழ்நிலை உருவாகிவிட்டது.
ஆகவே வட்டம்; மய்யமாக மயான அமைதியுடன் இதனைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.
இதிலும் உள்வட்டமா வெளிவட்டமா நடுவட்டமா நீள்வட்டமா பரிவட்டமா எனவெல்லாம் மாதக்கணக்கில் சர்ச்சை. ஏன் அது பிற ரிலையன்ஸ் ஜியோமிதி தீமிதி ரூபங்களில் பின்நவீனத்துவத்துடன் இருக்கக்கூடாது, முன்னமே மங்கோலிய வாசகர் வட்டத்தில் ஏகோபித்துப் புழக்கத்திலிருக்கும் இருபது பக்க ஐகஸஹெட்ரன் என்ன பாவம் செய்தது என்றெல்லாம்.
ஆனால் இந்த பெயர்ப் பிரச்சினையை – ஆனானப்பட்ட ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி – அது நம் வாசகரின் அறிவுமுதிர்ச்சியைக் காட்டவேண்டும் என அனைவரின் உள்மனக் கிடக்கையாக இருந்ததால் – பொதுவாகவே எமக்கெல்லாம் வாய்த்திருக்கும் அபூர்வமான வழுக்கைத்தலைகளை முன் வைத்து ஒரு படிமமாக ‘வட்டம்’ தான் சரி எனவொரு முடிவுக்கு வந்தோம்; இந்த முடிவுக்கு வருவதற்குள்ளேயே பலவருடங்கள் மேலதிகமாகக் கழிந்துவிட்டபடியால் – மேலும் பலருக்கு பரிணாமத்தின் இன்னொரு பரிமாணமாக, சொட்டைத் தலைப் பரிவட்டங்கள் ஏற்பட்டு, வட்டத்துக்கு மெஜாரிட்டி வாக்குகள் கிடைத்தன என்பதும் ஒரு கொசுறுச் செய்தி.
மேலும், வட்டத்திற்கெதிரான ‘குழுமம்’ ஆதரவாளர்கள், ஒரு குழுவாகச் சேர்ந்து வாய்மூடி மௌனிகளாகி குழுவாகவே கம்மென்று மம் ஆகிவிட்டனர் என்பதும் ஒரு அனுகூலமாக இருந்தது.
ஒருவழியாக, ஒரு சுற்றுச் சுற்றி – கீழ்கண்ட லோகோவைத் தேர்ந்தெடுத்துள்ளோம். லோகோ ஷேமோ ஸுகினோ பவந்து என அன்றே சொன்னாரல்லவா அண்ணா, நம் அறிஞர் பெருந்தகை?
இதற்கு கீழேயுள்ளது போன்ற ஓளிவட்டங்கள் தாம் முன்மாதிரி என்றால் ஒருமாதிரியாக இருக்கும் என்றாலும் அதுதானே உண்மை?
மேலும் ஓ-ம் என்பது ஒருமாதிரி சைவசித்தாந்தத்தையும் அதன் இணையான சைவசித்தாந்தமாமாவையும் நினைவுபடுத்தி எடுக்கிறது அல்லவா? நம் பாரம்பரியத் தம்பதி சமேதராக நமக்கு ஆசி வழங்கி ஆசிவகர்களாக ஆக்குவது போலவெல்லாம் விசித்திரம் விரிகிறதில்லையா?
இனி, நம் வட்டத்தின் அண்மைய நிகழ்வைக் குறித்த குறிப்புகள்:
இக்கூட்டத்தில் பங்கேற்ற பலரும் காலையில் பல்தேய்த்துவிட்டு பின்னர் பிற காலைக்கடன்களைக் கழிக்குமுகமாக, வட்டக் கூட்டம் நடந்த வளாகத்துக்கு வண்டி ஓட்டிக்கொண்டு சென்றோம். பின்னர் அங்கே காலைக் காப்பியம். சிற்றுண்டி. அறை குளிருடன் இதமாக இருந்தது. ஆனால் கூட்டத்திற்கு வந்த பலர் முந்தைய நாள் நிறைய பூண்டு, வெங்காயம், பிரியாணி என மிகப் பிரியத்துடன் உண்டிருப்பார்கள் போல. பாவிகள், குழுமம் என்பதைக் குசுமம் எனவொரு பழம்புரிதலுடன் சேர்த்துக் குழப்பிக்கொன்றிருக்கிறார்கள், என்ன செய்வது! :-(
ஆக, வாயிற் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவைத்தோம். பின்னர் உங்கள் ஆக்கங்களைப் பற்றி – அதாவது, எங்களுக்குப் பிடித்த, எங்களுக்குக் கறாரான கருத்துகள் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் பேசித் தீர்த்தோம். அதாவது அனைத்து விஷயங்களையும் – ட்ரம்ப், திருமா, மூணுசீட்டு என எல்லாவற்றையும்.
பிரச்சினையென்னவென்றால், மேற்கண்ட விவாதங்களின்போது – கருத்துக் குறட்டை சப்தம் மிகவும் எதிரொலித்ததால் – இளையராஜாவே பாடிய பாடலொன்றைப் போட்டவுடன் (‘நானாக நானில்லை தாயே!‘) அனைவரும் விக்கித்து எழுந்து பின்னர் பயபீதியில் கவனத்துடன் பிறர் கருத்துகளை அவதானித்து தம்மை முன்னேற்றிக்கொண்டனர்.
பின்னர் மதிய உணவு. கோபி மஞ்சூரியன். தயிர் சாதம். நல்ல கலவை. மரபுசார் பாரம்பரியப் பின் நவீனத்துவம். இதனை உண்டுவிட்டபின், மறுபடியும் ஏகத்துக்கும் கருத்துக் குறட்டை.
பின்னர் மாலை உயர்-டீ. அடுமனைந்த பெண்சமையலாளர்கள். Baked Cookies.
ஓ! மறந்துவிட்டேன்! வட்டக்கூட்ட அமர்வுகளில், இரண்டு கட்டுரைகள் படிக்கப்பட்டன. அவற்றின் கருத்தாக்கங்கள் குறித்த விவாதங்களும் நடந்தன. உடனடியாக, மீண்டும் கதவுகளையும் ஜன்னல்களையும் அகலத் திறந்துவைத்தோம்.
அவற்றைப் பற்றிய குறிப்புகளும் கொடுக்கிறேன்.
…எங்களூரின் மேற்கண்ட வ்ளாடிவாஸ்டக் லெனின் சிலையானது தவறாக, ‘ரஷ்யாவின் அம்பேட்கர்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், எங்கள் பேராசானாகிய தாங்கள், சென்றவருடம் வருகை தந்து எழுந்தருளி அருள் பகர்ந்தபோது – உண்மையில் அது ‘ரஷ்யாவின் அண்ணா’ எனக் குறிப்பிடப்படுவதுதான் சரி எனக் கறாராகச் சொன்னீர்கள் என்பதை, அதுமட்டும்தான் சரி என, பல்துறை வல்லுநரும் புகழ்பெற்ற டென்டல் ஸர்ஜனுமான லியோ காஃபி டால்டாஸ்டாய் ஆமோதிப்பதற்கு அப்பாற்பட்டு, உங்களைப் போல ஒரு அறிஞர் இப்பூவுலகில் உண்டா என, நம் வட்டத்தின் முந்தைய கூட்டத்தில் ஆச்சரியப்பட்டார்!
ஆகவே – உடனடியாக, நம் ஓ-ம் வட்டத்தின் அடுத்த அமர்வில் டால்டாஸ்டாய் அவர்கள், ‘தஞ்சைப் பெரியகோவில், ஒரு முற்கால புத்த விஹாரம்‘ எனவொரு ஆய்வுக்கட்டுரையை, அதாவது, தங்களுடைய பெரும்பேராசானுடைய ஆணித்தரமான தவறுகளின் தரவுகளின்மீது கட்டமைக்கப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளைச் சமர்ப்பித்தார். அவ்வப்போது வெள்ளைக்காரர்களை விட்டு நம் பெருமைகளைப் பேசச் சொல்வது என்பது, அவர்களின் விமர்சனங்களைத் தாள்பணிந்து ஏற்றுக்கொள்வது என்பது, நமது பிம்பவீக்க நடைமுறைகளில் ஒன்றுதானே!
அதில் அவர், உங்களுடைய பெரும்பேராசானைப் போலவே இந்தியாவின் தற்காலப் பிரச்சினைகள் பற்றியும் பேசினார். அவை 1) ஹிந்துத்துவா எனும் இந்தியப் பேரழிவுக்கான மதப்பூசல் முஸ்தீபு 2) இந்துத்துவர்களின் சமரச சுத்த சன்மார்க்க சத்தியமின்மை 3) மோதி அரசின் விளம்பரங்கள் 4) மதச்சார்பின்மை அதிகமாகாமல் சகிப்புத்தன்மையின்மை அதிகமாவது 5) தொன்மைமிகுந்த நாட்டாரியப் பிடாரிவகை பீகோ(10−12)தெய்வங்களை , நாட்டாமை வகை நேனோ(10−9)தெய்வங்கள் தங்கள் உள்ளிழுத்துக்கொண்டு முன்னவற்றைக் கபளீகரம் செய்வது 6) முரணியக்க முரண்டியக்கம் 7) பன்னாட்டு நிறுவன, எதிர்சுற்றுச்சூழலியச் சதி 7.5) நாட்டில் சனி … … என விரிந்தன. (இங்கு – வடஇந்தியாவில், (நள)தமயந்தியை இளவரசியாகப் பெற்ற குண்டினபுரத்தில் இருந்த குண்டிகேஸ்வரர் எனும் நாட்டாரியக் கடவுளுக்கு, சிறுதெய்வத்திலிருந்து பெருந்தெய்வமாக டபுள் ப்ரமோஷன் எப்படி யார் பரிந்துரையால் கிடைத்தது என்பதைப் பற்றிய உங்களுடைய பெரும்பேராசான் ஜெயமோகன் அவர்களின் ஆராய்ச்சியை அவர் குறிப்பிட்டதை அவசியம் குறிப்பிடவேண்டும்; விடை: நமக்கு ஆச்சரியமே தராத வகையில் சாக்ஷாத், நம் ஜவஹர்லால் நேருதான் இதற்கும் பரிந்துரைத்தார்! என்னே சாச்சா நேருவின் புகழ்!)
இரண்டாவதாக – நானும், ‘பழனி மலையின் பெயர்க்காரண’த்தை, உங்கள் பேரசான் கடலூரார் பாணி ஆராய்ச்சிமுறையிலேயே ஆய்ந்து – அது உண்மையில் ஆதாம் ஏவாள் – ஞானப் பழம் தொடர்புடைய பைபிள் தொன்மத்தின் ஒரு வடிவம்தான் அதுவென – பழம்நீ என்றால், அந்த ஆப்பிள் பழத்தைத் தான் குறிக்கிறது என ஒரு கறாரான கட்டுரையைச் சமர்ப்பித்தேன். அப்ரஹாமிய மதங்கள் இன்றேல் அஹம்ப்ரஹ்மாஸ்மி இல்லை என்பதுதான் எனது கருதுகோள்மூட்டல்.
இதனை (கட்டுரையை இணைத்திருக்கிறேன்) எங்களின் பேராசானான தங்களுடைய பாதாரவிந்தங்களில் சமர்ப்பித்து உங்கள் கடைக்கண் பார்வைக்கு வைக்கிறேன்; தாங்கள் அருள்கூர்ந்து, இதனை, தங்களுடைய நண்பர்களும் பேராசான்களுமான கடலூர் சீனு அவர்களையும், மகாமகோ அனீஷ் க்ருஷ்ணன் நாயர் அவர்களையும் ஒருசேரச் சரிபார்க்கவைத்து தாங்களும் அவர்களும் ஒருங்கிணைந்து என்னையும் உய்விப்பீர்கள் என்பதற்கு அப்பாற்பட்டு பேர்பெற்ற பெரும்பேராசானாகிய சாக்ஷாத் அந்த ஜெயமோகன் அவர்களே அனாமதேயமாக வராமல், சொந்த ரூபத்தில் வந்து எழுந்தருளி என்னை ஊக்குவிப்பார்கள் எனவும் கருதுகிறேன்.
-0-0-0-0-
மாலை மலர எங்கள் வட்டக்கூட்டம் இனிதே முடிந்தது. அனைவரும் கனத்த தொந்திகளுடன், ஆகவே நெகிழ்ந்த அரையணாக்கயிறுகளுடனும் அவற்றின் பின்நவீனத்துவ உறவினர்களான லூஸாக்கப்பட்ட லெதர்பெல்ட்களுடனும் பிரிந்தோம்! (அதற்கு முன், மறக்காமல், எங்கள் உயர்விழுமியக் கருத்துவெளிப்பாடுகளால் திறக்கவேண்டிநேரந்த கதவுகளையும் ஜன்னல்களையும் மூடினோம்)
நான் அடுத்த வட்டக்கூட்டத்தில் எனது அடுத்த ஆராய்ச்சியைச் சமர்ப்பிக்க இருக்கிறேன். தலைப்பு: ‘குறும்பேராசான்கள் குறும்பற்று இருந்து ஸிம்பாலிக்காக ஸிம்பல்* அடித்தால், பெரும்பேராசான்கள் அவர்களை அரவணைத்துத் தடுத்தாட்கொண்டு மய்யநீரோட்டத்தில் எதிர்நீச்சலிட அனுமதிப்பரா?‘
*ஸிம்பாலிக் ஸிம்பல் = Symbolic Cymbal = ஜால்ராக் குறியீடு.
பேரன்புடன்,
வ்ளாடிவாஸ்டக் வில்லவன்
அம்புள்ள வில்லவன்,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நம் நண்பர், லண்டன் லொடுக்கப்பன் நலமா?
ஆனால், எல்லாப் புகழும் ஜெயமோகனுக்கே!
வில்லடிவாச்டக் லெனின் சிலை, அண்ணாசிலையை ஒட்டி வடிவமைக்கப்பட்டது என்று கண்டுபிடித்துச் சொன்னவரும் ஜெயமோகன் தான். (அல்லது இதுவும் சாச்சா நேருவாக இருக்கலாம்; எனக்குச் சரியாக நினைவில்லை)
உங்களுடைய வட்டம் சிறக்க, அது பெருகி மாவட்டமாகி தமிழகத்தின் 101ம் மாவட்டமாக, இணையபூர்வமாக இணைய, என் வாழ்த்துகள். எப்படியும், இந்துத்துவா ஒழிக.
ஜெயமோகதாசன்.
—
June 9, 2019 at 15:41
ஹராம்,
இதனை தானே பகடி செய்திருக்கிறீர்கள்? LOGO கூட அதேபோல 🤣🤣
https://www.jeyamohan.in/122446
🤣🤣🤣
June 9, 2019 at 17:00
ஐயா, சர்வ நிச்சயமாக இல்லை. ஜெயமோகனை நான் என்று பகடி செய்திருக்கிறேன், சொல்லுங்கள்? இப்படிப் பிரிவினைவாதம் பேசுவது எனக்கு ஆழ்ந்த வருத்தம் தருவது. உங்களுக்குத் திமிர் அதிகம்தான்.
பார்க்கப்போனால் – அந்தக் கட்டுரையில்தான் என்னுடைய இந்த ஒத்திசையாக் கட்டுரையைப் பகடி செய்திருக்கிறார், அந்த லண்டன் கோபியார். அதுவும் நேரடியாக என் பேராசானுக்கும் எனக்கும் நடுவில் பிணக்கேற்படுத்த முயன்றிருக்கிறார். என்ன துக்கிரித்தனம்! :-(
என்ன, காலவரிசை கொஞ்சம் முன்னேபின்னே இருக்கிறது, அவ்ளோதான்!
பின்குறிப்பு: என்னைத் திட்டாமல், சிரிப்புடன் அந்த அபாண்டக் கேள்வியைக் கேட்டிருப்பதைக் கவனித்துக் குறித்துக்கொண்டேன். ;-)
உடனடியாகச் சிங்கப்பூரில் வட்டமிட ஆரம்பிக்க ஆவன செய்யவும். ;-)
June 9, 2019 at 17:50
எங்கள் ஊருக்கு அருகில் வாளாடி என்று ஓர் கிராமம் உண்டு. அங்கேதான் என்னமோ ஏதோ என்று படித்தால்…
பகடியையே பகடி செய்திருக்கிறீர்கள்.சீக்கிரமாக உலகளாவிய அளவில் குழுமம் எல்லாம் கோவில்களாக மாறப் போகின்றன..அங்கே வந்து நீர் தோப்புக்கரணம் போடத்தான் போகிறீர்…. ஹூம்ம் அந்தக்காலம் வரத்தான் போகிறது…
June 12, 2019 at 09:55
ஒத்திசைவாருக்கு சிங்கப்பூரில் ஒரு வாசகர் வட்டமோ சதுரமோ ஆரம்பிக்க எண்ணியுள்ளோம்
சக ஏழரைகள் ஆர்வம் இருப்பின் தொடர்பு கொள்ளவும்
June 12, 2019 at 16:25
யோவ்! நெசம்மாவா?? பேஜார் பண்ணாதபா! ;-)
June 13, 2019 at 15:03
உங்களின் பெருந்தேடலுக்கு விடை கிடைத்து விட்டது. அந்த வடையை, மன்னிக்கவும், விடையை தங்களுக்கு பரிமாற விரும்பினேன்.
“உதகை முகாமில் நண்பர் ஒருவர் நான் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இருகிறேனா என வினவினார். இல்லை என்றேன் .காரணம் சொன்னேன். பொதுவாக என் மூளை அமைப்பு வாசிப்பில் ஒரு மணிநேரம் ஊன்றி நிற்கும். இயல்பாக விடுபட்டு, கால்மணி நேரம், வாசித்தது புனைவு எனில் கனவிலும்,அபுனைவு எனில் எண்ணங்களிலும் திளைத்துக் கிடக்கும் பின்னர் வாசிப்பு தொடரும். பலவருடம் இதே நிலைதான். அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை த்ராட்டிலை முறுக்கிப் பார்க்க நான் விழையவில்லை.”
https://www.jeyamohan.in/122263#.XQIj5ohKiUk
பி.கு.: GOT பார்வையாளர் எண்ணிக்கை இனி கணிசமாய் குறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் தொடர் முடிந்து விட்டதாம் :D
June 13, 2019 at 17:00
பிரச்சினை என்னவென்றால், நான் என்னுடைய பேராசான்கள் + பெரும்பேராசான் போன்றவர்களின் வீக்கங்களையும் ஆக்கங்களையும் படிப்பதிலிருந்து(!) பணிமூப்பு பெற்று ஹாய்யாக என் மிச்சமிருக்கும் வாழ்நாட்களைக் கழிக்கலாமென்றால் இப்போது இந்த ஏழேமுக்கால்கள் கிளம்பியிருக்கிறார்கள். தூண்டில் போடுகிறார்கள்.
நான் கொக்கியில் அகப்படுவதாக இல்லை.
கொக்கி என்று நினைத்தாயா விம்பிள்டலண்ட கொங்கணவா?