கும்பீரனின் கம்பீரம் (22ஆம் அத்தியாயம், 33ஆம் பாகம், 44ஆம் புத்தகம் – ‘நீள்குடல் பெருபேதி’ – பின்நவீனத்துவ மஜாபாரத நுண்முரசு தொகை நூல்)

June 1, 2019

…குபீரென்ற வெடிச்சிரிப்புடன், வலக்கையால் உலக்கைக் கதையைப் பிடித்துத் தூக்கி, வடதிக்கை வசதியாக நோக்குமிடம் கிடைத்தகாலே இடக்காலில் நின்று மேலே விண்ணோக்கி நீண்டு நிமிர்ந்து தென் திசை நோக்கி முகம்திருப்பி வலது காலெழுப்பிச் சிரம் தூக்கி இடக்கையால் ஓங்கித் கீழ்த் தரையில், பல மாமாங்கங்களாகப் பயின்றுவரும் தம் வெண்முரச யோகவழமையே போல 1, 23, 456, 789ஆம் முறையாகச் சிறிது சலிப்புடனே அறைந்தான், ஆக, சமன நிலை தவறி ஆங்கே டமாலென்று கீழே வீழவிருந்த துருயோதனன்! பாவம்!

(நமக்கெல்லாம் முன்னமே அறிமுகமாகியுள்ள அதேஅதே அவன்தான் இவன்)

“உடலை அஷ்டகோணலாக வடித்து ஜெமினி ஸர்க்கஸில் புகழ்பெற்ற ஜைமினி முனிபுங்கமரத்தவரே! சாங்கிய ஜெயமோக நிஷ்டையில் சாய்ந்தபடியே சாஞ்சிஸ்தூபியை சாமானியமாக எழுப்பிய சமத்கார சமனமிக்கவரே! யோக வாஸிஷ்ட ஆசனச் சுளுக்குகளின் சுளுக்கே! எங்கள் குல விளக்கே! ஞானதரிசனத்தின் வேதாந்தமே! அரைவேக்காட்டு வேந்தர்களின் அரைக்கால் வேக்காட்டு வேந்தே! மண்ணர்க்கு மண்ணே! விண்ணர்க்கு விண்ணே! பாணர்களின் பண்ணே! பாதாரவிந்தர்களின் விந்தே! சூதர்களின், ஐய்யய்யோ, சூட்சுமமே!

துருப்பிடித்த வாளுடன், தேமேயென்று வாளாவிருக்காமல் நம்முடன் வெட்டியாகப் பொருதவரும் வெற்றுவேட்டுப் பாண்டுவர்களை எதிர்கொள்ளாமல் இருக்க! முடிந்தவரை அமைதி காக்க! எதுவுமே முடியாவிட்டால் சவத்து ஏடிஎஸ் ஊசிபோட்டுக்கொண்டுப் பின்னர் ஆகச் சிறக்கப் பொருதுக! அதுவன்றிப் போர்க்காலரீதியில் பிறிதொன்றையும் செய்யாதிருக்க!‘ என எவ்வளவோமுறை முறையாக, முடிந்தவரை பண்டமிழ் அலக்கியரீதியில் கோரிக்கை விடுத்தேனே, பாவியாகிய யான்!’

….எனப் பாண்டு குழுவில் க்ளாரினெட் வாசித்துப் பிரபலமான கமலகாசன், ஸ்த்ரீலோலப் பண்டாரகப் பாயும் புலியானவன், துலுக்கத் துருஷ்கரைக் கண்டதும் மாளா மதநல்லிணக்க பயபீதியுடன் வாடினோன், பின்னர் ஒப்பாரும் மிக்காருமிலாமல் இப்பாரில் பரிமீதமர்ந்து ஒப்பாரி வைத்த வள்ளல் ஆழ்வார்ப்பேட்டைக்கடியான், ஹிந்துத் தீவிரவாதத்தை எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் கொண்டு நோக்கி அதனைப் பயாஸ்கோப்புப் பெரும் 3டி படமாக மாற்றினோன், எட்டுத் திக்கும் சென்று கலைச்செல்வங்கள் எல்லாவற்றையும், குறிப்பாக ஹாலிவுட் படங்களையும் லெஃப்ட்&ரைட் சரமாரியாகச் சுட்டுக் கொணர்ந்திங்குச் சுடச்சுடச் சேர்த்தோன், அண்டப்பேரண்ட மகாமகோ படுதண்டநாயகன் பிரலாபித்தான்.

…கமலன், காச நோய் வசப்பட்டிருந்தால், பின்னர், லொக்லொக் என லொக்கேஷன் பார்க்க அவகாசமில்லாமல் மய்யமாக இருமிக் கருஞ்சாயமடித்த வெண்முடிமீசையை விண் நோக்கி முறுக்கிச் சீடர்கள் வடை சூழ அரசியல் மாற்றத்தை மக்கள் நீதியுடன் தேடிக்கொண்டே தொடர்ந்தான்.

“எஃகனைத்த துருயோதனரே! துருதுருவென்று துருவ நட்சத்திரமாக அலைந்துகொண்டிருந்த தாங்கள் இப்படித் துருப்பிடித்த துர்மதிக் கத்தியால் வெட்டுண்டு துண்டுரெண்டாகி டெட்டனஸ் வந்து அல்லலுறுகிறீர்களே! துரு தலைக்கேறி துரிய நிலையே லபித்துவிட்டதோ தங்களுக்கு?

இப்படி வெடித்துச் சிரிக்கிறீர்களே! அதுவும் குபீரென்று! ஈதென்ன நுண்கொடுமை! குபேரனின் அருள்பெற்ற பேரனாகிய நீவிர், இப்படி பட்வைஸர் பீர் குடித்துப் பெருந்தொந்தி வந்து குபீர் ஆகிவிட்டீரே! ஐயகோ!! கௌரவர்களின் கௌரவமான ஆட்சியைப் பீராய்ந்துகொள்வதைக் குறித்து நாம் சிவாஜிகணேசனின் கௌரவ ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவில்தான் சிந்திக்கவும் முடியுமோ? நூற்றை ஐந்து வெல்லுமா உலகிலே??”

துருயோதனன் துருதிருஷ்டியுடன் ஈஸ்ட்மன் கலர்கலராகப் பதிலை அனல் கக்க, புனல் புக, பகபகவெனப் பகன்றான்:

“ஹஹ்ஹ… …நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?”

தொடர்ந்தான். “நானும் எப்போதோ நங்கநல்லூர் ரங்கா தியேட்டரில் ‘கௌரவம்’ பார்த்துவிட்டேன்! சிவாஜி வாயிலே ஜிலேபி!”

சி  வா  ஜி
வா  யி  லே
ஜி  லே  பி

“ஆகவே, இந்தியாவின் முதல் டெர்ரரிஸ்ட், அதுவும் ஹிந்து டெர்ரரிஸ்ட், அந்தக் கிருஷ்ணன்தான்!

அதற்குப் பிறகு வந்த முழுமுதல் கருத்துலக எர்ரரிஸ்ட், ஜெயமோகன்! ஆமென்.”

…பதைத்துப்போன கமலகாசன் துடித்துப்போய்ச் சொன்னான்,

“துருயோதனரே! எவரை வேண்டுமானாலும் பகைத்துக்கொள்ளலாம், ஆனால் நம் பேராசான் ஜெயமோகனிடம் மட்டும் இந்தவேலை வேண்டவே வேண்டாம்! அவர் எர்ரரிஸ்ட் தான்! ஆனால் அவர்பின்னால் தற்கொலைப் படைகளும் இன்னபிற சொறிசிரங்குகளும் அணிதிரண்டு இருக்கின்றன! ஆகவே கவனம்!

அவருடைய பராக்கிரமும் அக்கிரமமும் அதன்மூலம் அவர் எட்டியுள்ள மிச்சமற்ற உச்சங்களையும் நீங்கள் அறியீர்! அவரிடம் உங்கள் வீரம் வெகுதூரம் செல்லாது. வெந்தணலால் வேகாது. அள்ள அள்ளக் குறையாது! செயலூக்கத்துடன் துணிந்து, அமோகத் தவறுகளைத் தொடர்ந்து செய்யும் பாங்கினர் அவர்! ஆகவேயும் வாசக பாங்கு பேலன்ஸ் வளர்ப்பவர்.

…அவர் நினைத்தால், உங்களை உடனடியாகக் கொல்லாமல், கருணையே இல்லாமல் இன்னும் 10, 008 பாகங்களுக்கு உங்களை நீட்டித்துத் துடிக்கத் துடிக்கச் சித்திரவதை செய்து பொதுயுகம் 3019 வாக்கில் சுமார் 10, 009ஆம் பாகத்தில் உங்களைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சதைப் பிண்டமாக்கி அண்டத்தில் விட்டெறிந்து ஆகாத்தியம் செய்யும் திறமையும், மண்டபத்தில் எவனோ எழுதிக்கெடுத்த மஹாபாரதத்தை வைத்து மங்காத்தா ஆடும் வல்லமையும் மிக்க தருமி அவர். எல்லாம் அவர் திருவிளையாடல்தான்!”

-0-0-0-0-0-

சக வாசகர்களே! ஆற அமருங்கள்! அடக்கம் அமரருள் உய்க்கும் என்றாலும் அமரர் ஆனபின் நல்லடக்கமும் வாய்க்குமன்றோ?

..! அது யார்? ஆங்கே யாக்கை நிலையாமையுடன் ஒரத்தில் உட்கார்ந்து தாடியை நீவிக் குடுமியைக் குடிமைப்பண்புடன் கோதி அறிவுஜீவியக் குறுஞ்சிரிப்பை உதிர்த்துக்கொண்டே இன்னுமொரு ‘இனிய ஜெயம்’ இன்ஸ்டால்மெண்ட் எழுதிக்கொண்டிருப்பது – என் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இளம் வரலாற்றாளரான கடலூர் சீனு அவர்களா?

ஓ! என் இனிய சீனம்!

தங்களைப் பார்த்து ஆரத் தழுவி உச்சிமுகர்ந்து நெடி மூக்கிலேறி கொடும் தும்மல்தும்மி நெடுநாட்களாகி விட்டனவே! மாசேதுங் எப்படியிருக்கிறார்? சீனாவில் மாதம் மும்மாரி பெய்கிறதா? மதுராவிஜயம் படித்துவிட்டீர்களா? எதற்குப் படிக்கவேண்டும், என்வழி ஆசான்வழி என்கிறீர்களா? சரிதான்! பரவாயில்லை. படிக்காமல் அட்ச்சிவுடுவதும் ஒரு நுணுக்கமான இலக்கியரசியல் கலைதான் என்கிறீர்களா? அதுவும் சரிதேன்!

என்னது? அடுத்து சீன வரலாற்றை மீள்பார்வை செய்து அதனைப் பற்றி ஒரு கட்டுரை வார்க்கப் போகிறீர்களா? நரேந்த்ர மோதி இரண்டாவதுமுறை ஆட்சி அமைக்கும் இத்தருணத்தில், சீனாவை இப்படிப் பயமுறுத்தவேண்டிய அவசியம்தானென்ன?

ஐய்யோ! நீங்களும் சீனம். அதுவும் சீனம். ஆக, எனக்கேன் மதியீனம் என்கிறீர்களா? ஆ! என்னை மன்னித்துப் பொறுத்தருளுங்கள். தவறு செய்துவிட்டேன். தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், தயவுசெய்து, பேராசானிடம் என்னைப் போட்டுக்கொடுத்து என்னையும் வெண்முரசின் ஒரு கோமாளிக் கதாபாத்திரமாகச் சிறைபிடிக்க மட்டும் சொல்லிவிடாதீர்!

எனக்கு, வெறுமனே திநகர் ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக உத்தரத்திலிருந்து கொக்கிகளில் தொங்கிக்கொண்டு பளபளாவென்று ஆடித் தள்ளுபடியில் ஆடிக்கொண்டு தொடர்ந்தாலே போதும். :-(

உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், இனிய சீனிச்சக்கரைச் சீனம்! சரியா?  என் கோரிக்கையை உதாசீனம் செய்யாதீர்கள், நான் அப்பாவி, பொதுப்புத்தி சார்ந்த பாமரனாகப் பார்வைகளை வைக்கும் – ஆனால் சமூகத்தின் மனச்சாட்சி என்றால் கிலோ எத்தனை லிட்டர் எனக் கேட்கும் என்னால், வேறு என்னதான் செய்யக்கூடும் சொல்லுங்கள்?

நீங்கள் உலகளந்த பெருமாள் – சீனிவாசன்; பெரும் பேராசானோ, உலகளவு அளந்தும் அளக்காமலும் அமோகமாக அட்ச்சிவுடும் பெருமாள்! உங்கள் இருவரின் பராக்கிரமத்துக்கு நானெல்லாம் யார், சொல்லுங்கள்?

உங்களுடைய ஆக்கங்களைப் பெறுவதற்கு நம் தமிழகம் செய்துள்ள பாக்கியம்தான் என்னே!

-0-0-0-0-0-


அஹோ கேளும் பிள்ளாய்!

இருபதாவது குளத்தில் நீச்சல் பயின்ற கும்பீரர் எனும் அவசரக் குடுக்கைச் சூதர், நரைமுடியாளரானாலும் சுரைக்குடுக்கையின் மேல் சுந்தரமாகக் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து யானைத் தோல் யாழ்த்து குதிரைத்தோல் குதிர்ந்து மான் தோல் மாண்புடன் உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய, மூன்றேகால் இழை நிறைகுடயாழை செம்மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும் கட்டைவிரலாலும் நடுவிரலாலும் மீட்டி, மோதிரவிரலையும் ஆட்காட்டி விரலையும் உள்ளங்கை நோக்கி மடக்கி , இடக்கையின் பெருவிரலாலும் சிறுவிரலாலும் அருகில் இருந்த சிறுமுழவைத் தட்டித் தாளமிட்டபடி, இடக்கை ஆட்காட்டி + நடு + மோதிர விரல்களை மூன்றுவிதமாக மடக்கி இடவுள்ளங்கையில் இருந்த நெல்லிக்கனியை நசுக்கி, துருயோதனன் போருக்கெழுந்த களத்தின் காட்சியையும் அவன் ஆத்திச் சூடி ஆத்திகனாகிப் பின் புலறியில் அலர்மலர்ந்து கொன்றைக் கொன்ற வேந்தவேளான காதையும் ஆரம்பித்துக் கூறலானார்.

…தன் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் திடீரென்று ஆங்கேயும் ஆவேசத்துடன் வெடித்தெழுந்த, தன் தளர்ச்சியில் முற்றும் முயலாத அத் துருயோதனன் பகட்டாகப் பகபகச் சிரிப்புடன் பகத்சிங்கெனப் பகன்றான்:

“நான் ஏன் ஆத்திகன் ஆனேன் என்பதைப் பிறிதொரு காலத்தில் சொல்கிறேன்! ஆனால்… நீர்தாம் கும்பீரரோ? 2019 கும்பமேளாவுக்குச் சென்று ஆங்கே பீர் குடித்துக் கூத்தடித்துப் பின்னர் சும்மனாச்சிக்கும் கங்கையில் பெயரளவில் மூழ்கி முக்குளித்து உடலை ஈரம் செய்துகொண்டதால்தான் நும் பெயர் காரணப் பெயர் கும்பீரராகியது என்பதை யான் மோனியர்வில்லியம்ஸ் அகராதியில் படித்தறியேனோ?”

பதிலுக்கு,

“சவத்து மூதியே, சும்மா கெட, ங்கொம்மாள, குற்க்ககுற்க்க பூந்து வொள்றாத, ஒரு மஸ்ரும் தெர்ஞ்சிக்காம டமிள் எலக்கியவாதீ மாறீ பெர்ஸா வோத்தா பேஸ வந்த்ட்டான் ஸோமாறீ…

…எனச் சூடாகச் சொல்லித் தொடந்தார் சூதறிந்த அச்சூதர், சூடிக் கெடுத்த சுடர்க்கேடி அவர்! அவர் பேசிய ஒவ்வொரு வரியும் – மூளையால் யோசித்து வார்த்தைகளைக் கோர்த்து நுரையீரலில் காற்றைச் சேகரித்து (இதனால் இந்தக் கும்பீரர் காற்றுக்சேகர் எனவும் அழைக்கப்பட்டார் என மோனியர்வில்லியம்ஸ் சீடராக இருந்தபோது அவருக்குச் சொன்னேன்!) பின்னர் குரல்வளை வழியாக வாயினை அடைந்து அடங்காமல் திமிறி எழுந்து காற்றை அழுத்தத்துடன் அசைத்துச் சொற்களாக வெளியனுப்பப் பட்டவை என்பதை நம்மில் எவ்ளோ பேர் அறிவோம்?

-0-0-0-0-0-

கும்பீரனின் கும்பி பசியால் எரிந்தாலும் அவர் தகத்தகாய கம்பீரத்தையுடைத்தவரான படியால், அவருடன் பிற சுதர்களும் சூதர்களும், செதர்களும் சேதர்களும் இணைந்துச் சேதமின்றிச் சேருமிடம் அறிந்துச் சேர்ந்து திரண்டனர்…

…கருங்கானகத்தின் இருட்கனியினூடே மருண்ட மான்கள், முன்னிரவு பின்நகர்ந்து, அதனால் பின்னிரவு முன்னகர்ந்ததால் காட்டுக்குள் எடுத்துக்காட்டுகளை இயம்பி முகிழ்த்தன. அவற்றில் சில கல்விமான்களும் புத்திமான்களும் இருந்தாலும் எவரும் யாரையும் ‘வாழ்க, நீ எம்மான்?’ என வினவிக்கொள்ளவில்லை.

காட்டுக்குள் பனித்துளிகள் கவித்துவமாகச் சொட்டச் சொட்ட, குளவிகள் ஏகத்துக்கும் கிடைத்ததையெல்லாம் கொட்டிக் கொட்டிக் கவிழ்த்திக் கொண்டிருந்தன – அவை படிப்பறிவற்ற எழுதாக்குளவிகள் என கும்பீரரின் குரு ஒட்டச்சூதர் சொன்னாரென உருமி, மேளத்துடனும் தாளத்துடனும் முற்புலரியின் பரவைக்குரல்கள் முனியம்மாத்தனமாக எழுந்தன. பக்ஷிராஜன்கள் அனந்தகிருஷ்ணனை ஃபேஸ்புக்கில் மறுபடியும் எழுந்தருளவும் எனக் கோரிக்கை வைத்தன. ‘கம் PAK ப்ளீஸ்‘ என்றும் பொழிப்புரை பொழிந்து யாழை மீட்டின.

ஆயினும் இறந்துபோனதால் உயிர்போன வீரர்களின் யாக்கை உடல்கள் பெருந்தீயினால் எரியூட்டப்பட்டிருந்த சிதைகளனைத்தும் அக்னி மூண்டெழுந்து செந்நாக்குகளை விண்ணோக்கி நீட்டி வெப்பத்தால் சூடேறி அனல் அதிகரித்து ஆக்ரோஷித்து உறும, எரிவதால் செம்புகை எழுந்தாட, எரியூட்டப்பட்ட உடலின் ஊன்நெய் உருகும் நெடுநல்வாடையுடன் ஒளிர்ந்துகொண்டிருந்தன.

(தற்போதைக்கு, திடீரென்று இந்த அத்தியாயம் முற்றிவிட்டது. உங்களுக்கும்!)

-0-0-0-0-

எல்லாம் சரி. ஆனால் – நீங்கள் இப்போது ‘இந்தச் சிறுகதையின் பெருநீதி யாது?’ என யோசிக்கிறீர்கள் அல்லவா?

அது:

தூங்கிஎழுந்த கர்ணகடூரன் ஏதோ யோசனையில் தலையைச் சொறிந்து கொண்டான்‘ என எழுதவேண்டுமானால், மஜாபாரதத்தில் அது எப்படி ரசவாத மாற்றம் பெற்று மினுங்கும் என்பதுதான்.

இதற்குச் செயல்முறை விளக்கம் வேண்டுமா?

“காரிருள் இரவின் மின்மினிப் பூச்சிகள் மினுக்க  ஆந்தைகள் அலற கூகைகள் கூவ யௌவன வௌவால்கள் வௌவ்வ சிதையில் சவங்கள் எரிந்தொளிர்ந்த நேரத்தில்  பின்னாலிருந்த பின்னிரவு முன்னால் காத்திருக்கும் முன்னிரவைத் தொடர்ந்து முழுவிசையுடன் பதவிசாக நகர்ந்ததால் முன்புலரி மலர்ந்து பின்புலரியை நோக்கிச் செல்லும்காலை, மரங்களின் மேற்கவிந்த குளிர்பனி நீர்ச்சொட்டுத் திவலைகளாக இலைகளின் நுனியிலிருந்து கீழ் நோக்கிக் கவிழ்ந்த காலை நேரத்தில் புள்ளினங்கள் புள்ளிராஜாவாகத் துள்ளியெழுந்தாலும் அவற்றுக்கு எய்ட்ஸ் வரமுடியாதாகையால் உவகையுற்ற சமயத்தில் கொடுங்கனாக்களால் அகவொளி அகன்றதால் மெய்வாழ்வில் அல்லலுற்றுத் துஞ்சியெழுந்த கர்ணகடூரன் அன்று, தான் எப்படி இன்னொரு மெய்மையான அறுதிப்போரடிக்காத அத்தியாயத்தை – தன் இடக்கையின் ஐந்து விரல்களாலும் வலக்கையின் ஆட்காட்டி நடுவிரல்களாலும் மடிக்கணிநியில் தட்டச்சு செய்து தரவேற்றுவது என யோசித்தபடியே, இடக்கையால் அக்குளைச் சொரிந்தபோதே தன் வலக்கையைத் தோளுக்குமேல் தூக்கிப் பின் நடுவிரலையும் ஆட்காட்டிவிலையும் நீட்டி, கட்டைவிரலையும் சுடர்மிக்க மணிபுதைந்த மோதிரத்தை அணிந்த மேதிறம் வாய்ந்த மோதிரவிரலையும் அனைத்துவிரல்களிலும் சிறியதான சிறுவிரலையும் உள்நோக்கி உட்கவிந்து மடக்கி, நீட்டிய விரல்களால் வகிடினை எட்டிப் பொடுகினை அவதானித்து, தன் காடனைத்த நெளிமுடிக் கருஞ்சிகையில் கலந்திருந்த வெள்ளிக் கதிர்களைக் கிள்ளிக் கோதி ஆகச் சிறந்த வகையில் வரக்வரக் எனச் சொறிந்து கொண்டான் என்பதைத் தவிரப் பிறிதொன்றுமிலா எல்லைக்குட்பட்ட பெரும் ஆற்றல்களுடன் மாபெரும் எல்லையின்மை முன் அவன் எப்படி நிற்கக் கூடும்? ” என ரத்தினச் சுருக்கமாகவும் தத்துப்பித்துவார்த்தமாகவும், அளவிலா அலகிலா காப்பியத்தனமாக எழுதவேண்டும்.

அவ்ளோதான்!

இன்னொரு எடுத்துக்காட்டு வேண்டுமா?

ஆங்கே செல்லவும்.  அவர்தான் உதாரணங்களுக்கே உதார் விடும் பராக்கிரமம் மிக்க ரணகளம் பலகண்ட உதாரண புருஷர்.

நன்றி!

15 Responses to “கும்பீரனின் கம்பீரம் (22ஆம் அத்தியாயம், 33ஆம் பாகம், 44ஆம் புத்தகம் – ‘நீள்குடல் பெருபேதி’ – பின்நவீனத்துவ மஜாபாரத நுண்முரசு தொகை நூல்)”

 1. K Muthuramakrishnan Says:

  Why this Kolveri?

 2. jasdiaz Says:

  Hi,
  Why do you waste your time and effort on Jeyamohan? You wanted to make a point and that had been made. I also regularly read Jeyamohan’s articles including Vennmurasu. Some I agree, some I don’t agree with. As long as he doesn’t claim ‘Nagapasam’ was a tactical nuclear weapon I am ok with that.
  Pl write more on other topics such as about the books you read etc.i find them more interesting and useful.


  • Well, Siree… I do not consider it as a total waste. :-(

   The thing is – anyone who has even an iota of inclination to delve even 1 cm deeper than the rest in our rather shallow tamil(!) culture(!!) – sees Jeyamohan as a beacon of light and a repository of all knowledge under the sun! I repeatedly learn to my horror, this fact of life – when I get to interact with our youth.

   But, the one and only Asaan is mindnumbingly irresponsible, knows his ‘stature’ and willfully passes off his splendid & arrogant ignorance as the gospel truth; and it is mighty annoying for a stupid, emotional idiot like me – to see that the youth drink off this as a fountain head.

   Not that I disagree with your take. But sire, one has to tickle himself to keep his sanity, yeah? ;-)

   Especially when, EVERY FREAKING THING is wrong in the state of Tamil LITTERature, oh what to do.

   Also, may be you should be okay with my rants too, just as you are okay with the rants of that runt.

 3. RC Says:

  மாடியிலிருந்து விழுந்த
  (ஒத்திசையா) சுத்தியல் ஒன்று
  காற்றின்
  தீராத பக்கங்களில்
  நேசமணியின் வாழ்வை
  எழுதிச் செல்கிறது

  இப்படிக்கு –
  (வலியில் பினாத்தியபடி) நேசமணி
  வெண்முரசு ஃபேன் (முகநூல்)


  • நீங்கள் இப்படியொரு ஓற்றுக் கழுதை எழுதி என்னைக் கலாய்க்கிறீர்கள்!

   ஆனால், நம் பெரும்பேராசான் சமணமதத்துக்கும் குமணகுதத்துக்கும் த்வைத வித்யாசம் பார்க்காமல், மனம்போன போக்கில் அட்ச்சிவுட்டுக்கொண்டு போகிறார்.

   ஆச்சரியமாக இருக்கிறது.

   • RC Says:

    இது ட்ரெண்டிங் ஆன நேசமணியின் முகநூல் கழுதை ஐயா.’ஒத்திசையா’ என்ற பதத்தை சேர்த்தது மட்டுமே என் வேலை.உங்களை நான் கலாய்ப்பேனா :-)
    தங்கள் பதிவை படிக்கையில் திரு.மாமல்லன் எழுதிய மிகப்பழைய ஜெமோவின் பிரமிள் கவிதை குறித்தான விமர்சன பதிவொன்றும் நினைவுக்கு வந்தது.https://maamallan.com/?p=1068
    அப்பதிவு கொடுத்த திறப்புகள் பல. சொல்லின் மதிப்பு உணர்த்தியவை.விமர்சன வகையில் தங்கள் பதிவுகளை விட எனக்கு பிடித்தது திரு.மாமல்லன்னுடையதே.இருப்பினும் தங்களுடையதை வாசிப்பதற்கு ஆங்காங்கே தெறிக்க வைக்கும் நகைச்சுவைக்குத்தான்.படிக்கையில் தங்கள் இப் பதிவில் உள்ள திநகர் கடையில் வெள்ளைச்சட்டை அண்ணாச்சிக்குப்பதில் நீலச்சட்டை ஜெமோ வந்து அடக்கவொண்ணா சிரிப்பை கொணர்ந்தார்.மேலதிகமாக ‘இனிய பயம்’ தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள ‘legend’ அருள் அண்ணாச்சி பாத்திரத்தை நடனத்தோடு கூடவே தானாக நிரப்பினார்.என் நாள் இனிதானது.நன்றி.

    இந்த தலைமுறையில் ஏற்கனவே நக்கலும் பகடியுமே மிச்சம்.தீவிரம் சற்றும் இல்லை என்ற புரிதலும் ,உங்களுடைய தொடர் ஜெமோ விமர்சன பதிவுகள் சொச்ச நச்ச தீவிரத்தையும் குறைக்கக்செய்யுமோ என்ற ஐயமும் எனக்குண்டு.இதை ஏற்கமாட்டீர்களென தெரியும்.இருப்பினும் சொல்ல வைத்தது தங்கள் வெற்றி.

    ஜெமோ-சமணம் பதிவு குறித்த தங்கள் பின்னூட்டம் கண்டேன். திரு.சுரேஷ் வெங்கடாத்திரி எழுதிய சுருக்கமான முகநூல் பதிவு தாக்கம் மிக்கது. ‘Duplicity’ என்ற ஒற்றை வார்த்தையே போதும்.ஒரு நல்ல வாசகராக அவருக்கு அந்த உரிமை உண்டு,எனக்கு அதுவும் இல்லை என்பதே எனது புரிதல்.


   • ஐயன்மீர்!

    1. எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார், மாமல்லன்! (நான் இதனை எப்படித் தவறவிட்டேன்! உங்கள் சுட்டிக்கு மனமார்ந்த நன்றி!)

    2. நான் செய்வதெல்லாம் விமர்சனம் அல்ல; அவை வெறும் ஆதங்க வெளிப்பாடுகளே. (முன்னொரு காலத்தில் விமர்சனம் கிமர்சனம் எல்லாம் செய்து வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறேன் – அதாவது முப்பது வருடங்களுக்கும் முன்! ஆனால் இப்போது சலிப்புத்தான் வருகுதய்யா!)

    3. நான் முன்னமேயே சொன்னது போல நான் எழுதுவது விமர்ச்னமுமல்ல. மேலும் நான் ஒருவன் புலம்புவதால் அவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டிய அவசியமும் ஜெயமோகனுக்கு இல்லை; அவரவர்க்கு அவரவர் வானமற்றவெளியும் (பசுவய்யாவின் உடற்கவிதை படித்திருக்கிறீர்களா?) அதலபாதாளங்களும்.

    4. தாங்கள் சிலாகித்துச் சொல்வதால் கேட்கிறேன். எனக்கு சுரேஷ் வெங்கடாத்ரி அவர்களுடன் துக்குணியூண்டு அறிமுகம் உண்டு. அவர் அப்படி ட்யூப்லிஸிடி என என்ன எழுதினார்? (முடிந்தால் கட்பேஸ்ட் செய்யவும்)

    5. சமணர் பற்றி ஜெயமோகன் அடிப்படை நேர்மையில்லாமல் அட்ச்சிவுட்டதற்கு நான் ஒரு எதிர்வினை (விமர்சனமல்ல) புரிந்திருக்கிறேன் – அடுத்த பதிவு. முடிந்தால் படித்துச் சோகமடையவும்.

    நன்றி.

   • RC Says:

    நன்றி.தங்கள் தகவலுக்கு ஜெமோ எழுதிய பிரமிள் பற்றிய பதிவு/ கவிதை வலைப்பக்கமும் இணைத்துள்ளேன்.https://www.jeyamohan.in/344#.XPPxFvZuJjo
    இப்போது இருப்பது எவ்வித பின்னூட்டம்/குறிப்பு இன்றி திருத்தப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன்.
    திரு.மாமல்லனின் பதிவு இன்று வாசிக்க நேரும் புது வாசகருக்கு தரும் பொருள்/தாக்கம் என்ன? ..நிரம்ப யோசிப்பதை விட்டு ‘நேசமணி வாழ்க’ என்று இத்தோடு விலகிக்கொள்கிறேன் )

    இனி திரு.சுரேஷின் சுட்டி –


   • நன்றி. சுரேஷின் சுட்டியைப் பார்ப்பதற்கு எனக்கு ஃபேஸ்புக் கணக்கு வேண்டும் போல. ஆனால் பாதகமில்லை. சமயம் கிடைக்கும்போது பார்க்கிறேன். (அதனால் தான் உங்களை கட்-பேஸ்ட் செய்யச் சொல்லிக் கோரிக்கை வைத்தேன்)

    அக்கப்போரில் கிடைக்கும் இன்பம்ஸ் தனிதான்!

  • Ramakrishnan Says:

   Good sense of humour

 4. RC Says:

  வெட்டி ஒட்டிவிட்டேன் :-)

  திரு.சுரேஷ் வெங்கடாத்ரியின் முகநூல் பதிவு –

  இதுதான் ஜெயமோகன் அவர்களின் Duplicity.ஒரு தவறை செய்துவிட்டால், இன்னொருவர் அதை சுட்டிக் காட்டும் போது , அதை ஒத்துக் கொள்ளும் நேர்மையும் பக்குவமும் வேண்டும் அது என்றுமே அவருக்கு இருந்ததில்லை. கடலூர் சீனுவின் கட்டுரையில்,தசாவதாரங்கள் கருத்தே இன்னும் பல தேவ தேவியர்கள் எல்லாமே சமணத்திலிருந்து இந்து மதம் எடுத்து கொண்டதாக சொல்கிறார். ஜெமோ அதை மறுக்கவேயில்லை. மாறாக தானும் அதை வழி மொழிகிறார். ஏனென்றால், சீனு அதைப் பெற்றுக் கொண்டதே இவர் மூலமாகத்தானே
  சீனுவின் கட்டுரைக்கு ஜெமோவின் பதிலில் முடிவில் உள்ள இந்த வரிகளை பாருங்கள்
  //சில சமணநூல்களில் கூறப்பட்டுள்ளவற்றின்படி விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது. அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள். அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.//
  ஆனால்,இப்போது அனீஷ் கிருஷ்ணன் நாயர் (Bcak Nayar)சீனுவின் கட்டுரையை மறுத்து எழுதியதை பிரசுரித்து, சீனுவின் கருத்தில் தனக்கு உடன்பாடோ, சம்பந்தமோ இல்லை என்பது போல எழுதிவிட்டார். மேலும் பழியை வழக்கம் போல, மேலை நாட்டு,காலனிய இந்தியவியலாளர்கள் மீதும் போட்டுவிட்டார். தான் சீனு சொன்னதை ஒப்புக்கொண்டு எழுதினோம் என்பது கூட அவருக்கு நினைவில்லை.
  பின் இன்னொரு வழக்கமான தவறு, மதப் பூசல்கள் மத்திய ஆசியாவில் அதிகம் என்பது. இவருக்கு என்றுமே, மத்திய ஆசியாவுக்கும் மேற்கு ஆசியாவுக்கும் வேறு பாடு தெரிந்ததில்லை. மத்திய ஆசியா என்பது, உஸ்பெகிஸ்தான்,கஜாகிஸ்தான், துர்க்மினிஸ்தன், கிர்கிஸ்தான் போன்ற நாடுகள். பழைய சோவியத் யூனியனில் அங்கம் வகித்தவை.ஜெமோ குறிப்பிட வருவது,இஸ்ரேல்,மற்றும்,அரபு நாடுகளை..அதை எப்போதும் போல தவறாக மத்திய ஆசியா என்கிறார்.அவை மத்திய கிழக்கு நாடுகள் அல்லது மேற்காசிய நாடுகள்என்றே குறிப்பிடப்படுபவை…Learn Nothing Forget Nothing.என்பதே தாரக மந்திரம்..என்னவோ போங்க..//


  • ஹ்ம்ம்… உங்கள் பொறுமைக்கும் நன்றி, மறுபடியும். Jeyamohan is, like totally, delusional. Oh what to do.

   ஒரிரு ஆண்டுகள் முன்வரை, இம்மாதிரி அட்ச்சிவுட்டாலஜிஸ்ட் விஷயங்களெல்லாம் ஜெயமோகன் போன்ற அலக்கியவாதிகளின் சறுக்கல்கள் அல்லது தற்காலிக வீழ்ச்சிகள் என நினைத்திருந்தேன்.

   ஆனால் இவை, முன்னமேயே ​யோசித்து டேக்டிகல் ரீதியாக அரங்கேற்றப்படுபவை என்கிற வகையில் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை எனும் சோகமுடிவுக்கு வந்திருக்கிறேன்.

   ஆனாலும் – தொடர்ச்சியாக எழுதும் தற்காலத் தமிழ் அலக்கியக் காரர்களுடன் ஒப்பு நோக்கும்போது, ஜெயமோகன் அளவுக்கு க்ரியாசக்தி உடையவர்கள் வேறெவரும் இல்லை என்பது உண்மை. ஆனால் அவரும், இலக்கியத்தர ரீதியாக போகவேண்டிய தூரமும் செப்பனிட்டுக்கொள்ள வேண்டிய கர்ணகடூரக் கருத்துப்பாதைகளும், மிகமிக அதிகம் என்பதும்… ஆன்மிகபலத் தேவைகளையே விடுங்கள்!

   எது எப்படியோ…

   (சென்ற இரண்டுவாரங்கள் – தெலங்கானா, மஹாராஷ்ட்ரா கர்நாடகப் பகுதிகளின் அற்புதமான சிறார்களுடன் ~30 பேர் – கழிந்தன. வாழ்க்கை என்பது சர்வ நிச்சயமாக இனிமைதான், தமிழலக்கியவாதிகள் எவ்வளவுதான் எதிர்மறையாக முயன்றாலுமேகூட…)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s