க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2)

May 31, 2018

…குழந்தைகளுடன் கல்வி கற்றுக்கொள்ளும் பணி வழியாகத் தம்மை மேம்படுத்திக்கொள்ளும் தன்மையும், ஆன்மிக முதிர்ச்சியும், மனித நேயமும், பாரதத்தின் பன்முகத்தன்மையை மதிக்கும் பண்பும் மிக்க, யேசுக்றிஸ்து (இவர் உண்மையில் வரலாற்றுரீதியான ஆசாமியல்லர், கச்சிதமாக ஜோடிக்கப்பட்ட ஒரு கதம்ப பிம்பம் என்றாலுமேகூட) மலைப்பிரசங்கத்தை அடிநாதமாகக் கொண்ட க்றிஸ்தவ மதபோதகர்களால் நேர்மையாகவும் அடிப்படை மனிதப்பண்புடனும் நிர்வகிக்கப் படும் சிலபல ‘நல்ல’ பள்ளிகள் (Christian missionary schools) என நம் நாட்டில், தப்பித்தவறி எங்காவது இருக்கலாம். ஏனெனில் பாரதம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்புள்ள தேசம்.

…ஆனால் இன்னாள் வரை, எனக்கு அவற்றைப் பற்றி (=ஒன்றைக் கூட!) அறிந்துகொள்ள லபிக்கவில்லை. இத்தனைக்கும் அம்மாதிரி பள்ளிகளை – ஏன், ஒரு பள்ளியையாவது, பலப்பல மாமாங்கங்களாகத் தேடிக்கொண்டிருக்கிறேன். (இதைப் படிக்கப் போகும் சுமார் ஏழரை பேர்களில் யாருக்காவது ஏதாவது ‘விதிவிலக்கு’ சர்ச் பள்ளிகள் பற்றிக் காத்திரமாகவும் அனுபவரீதியாகவும் தெரிந்திருந்தால் அவசியம் அவற்றின் விவரங்களை எனக்கு எழுதவும்; என்னையும் என் கருத்துகளையும் திருத்திக்கொள்ள, நான் எப்போதுமே தயார்தான்!  பலப்பல வருடங்களாக, இந்த மிஷன் பள்ளிகளைப் பற்றி, என்னுடைய சொற்ப நண்பர்கள்/அறிமுகங்களுடன் உரையாட நேர்ந்தபோதெல்லாம் – இம்மாதிரி கோரிக்கைகளை வைத்திருக்கிறேன்; ஆனால் எனக்கு, இதுவரை, காத்திரமான எடுத்துக்காட்டுகள் கிடைக்கவில்லை…)

பாரத மக்களின் வரிப்பணத்தில், ஆகவே பாரத அரசு அளவுக்கு அதிகமான ஆதூரத்துடனும் வெள்ளைமனதுடனும் கொடுக்கும் காத்திரமான கொடைகளைப் பெற்றுக்கொண்டாலும் – செய்நன்றியற்று நடத்தப்படும் இந்த மிஷனரி நிறுவனப் பள்ளிகள் – பொதுவாகவே இந்தியாவையும் அதன் முதுகெலும்புகளையும், ஏன், அதன் ஆன்மாவையுமேகூட உடைக்கும் பணிகளை மட்டும் செவ்வனே செய்துவருபவை என்பது (எனக்கு) மிகவும் துயரத்தையும் மாளா ஏமாற்றத்தையும் ஒருங்கே தருவது.

பருந்தும் சிலுவையும்…

க்றிஸ்தவ இவாஞ்ஜெலிகல் (மதமாற்ற) நிறுவனங்கள் கதோலிக்க, ப்ரொடெஸ்டென்ட் இன்னபிற (=ஸெவெந்த்டே அட்வென்டிஸ்ட், அஸெம்ப்ளி ஆஃப் காட், பென்டெகோஸ்டல், நியூலைஃப்… …) எனப் பலப்பல சொரூபங்களில் இருந்தாலும் – அவற்றின் அடி நாதம் என்பது ஒன்றுமட்டுமேதான்.

க்றிஸ்தவ மதமாற்ற நிறுவனங்கள்கீழ் என்றில்லாமல் – மைனாரிட்டி நிறுவனங்கள் எனும் போர்வையில் தனியார் உதிரிகளால் நடத்தப்படும் கொள்ளைக்கார பம்மாத்துகளும் இவ்வகையில் சேர்க்கப்பட வேண்டியவையே. (அவை நேரடியாக பாரதத்தை இழிவு செய்யாவிட்டாலும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை இருட்டாக்குவதால்!)

-0-0-0-0-0-0-

மேற்கண்ட பலப்பல நிறுவனங்களின் (அதிலும் அவற்றின் படுமோசமான முன்மாதிரிகளின்) செயல்பாடுகளுடன் பலமுறை, பலவிதங்களில் என்னுடைய வாழ்க்கை (பெரும்பாலும் மகிழ்ச்சியற்ற வகையில்) பிணைந்திருக்கிறது என்றாலும் – இப்பதிவில் நான் எழுதவிருப்பது அவற்றின் ஒரு சிறு அங்கத்தைப் பற்றி மட்டுமே.

அதாவது – நான், என் சிறுவயதில் செல்ல நேர்ந்த – மிகவும் மோசமான பார்வைகளையுடைய, சமூகத்தின் ஒருங்கிணைப்பைத் தேவைமெனெக்கட்டுப் பிளக்கும் தன்மையுடைய – தென் இந்திய ஏசுசபை (=church of south India) சார்ந்த ஒரு பள்ளி – பற்றிய நினைவுக் குறிப்புகளைத்தான்…

இதற்கு, நான் என் பெற்றோர்களையோ அல்லது என் குடும்பத்தின் அப்போதைய பொருளாதாரச் சூழலையோ காரணம் காண்பிக்க முடியும் என்றாலும், ‘க்றிஸ்தவப் பள்ளிகள், அடிப்படை வாழ்க்கையொழுங்கை வளர்க்கும்‘ என்ற நம்பிக்கை என்பது ஒரு தொடரும் கல்வியுலக வதந்திக் கதையாடல் என்றாலும்  — சிந்திக்கும் திறமையிருந்த, எதிர்த்துப் பேசி சண்டை போடக்கூடிய நான்,  திமிறிக்கொண்டு ‘போங்கடா அயோக்கியனுங்களா, நீங்களும் ஒங்களோட ஓட்டை ஸ்கூலும்‘ என அதனை விட்டுவிட்டும் வீட்டைவிட்டும் ஓடியிருக்கவேண்டும், ஆனால் நான் அப்படிச் செய்யாமலிருந்துவிட்டேன். என் தவறுதான். :-(

ஆனாலும் – பொது அறிவு சார்ந்த எழவுகளை, வாழ்க்கை எப்படி ஓடுகிறது, நாடு எப்படி நிர்வகிக்கப்படுகிறது போன்ற விஷயங்களைக் கொஞ்சம் அறிந்திருந்த நான் — ஓரேயொரு முறை, நான் ஏழாவது படித்துக்கொண்டிருக்கும்போது  – ‘அரசு மானியம் எல்லாம் வாங்கிக்கொண்டுதானே இந்தப் பள்ளியை நடத்துகிறீர்கள், பின் ஏன் இப்படிப் படுமோசமாக அப்பட்டமான வெறுப்புவாதத்தைச் செய்கிறீர்கள்? என்னைப் போன்ற ஹிந்து சிறுவர்களுக்கு எவ்வளவு அசிங்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது தெரியுமா‘ எனக் கொஞ்சம் பயந்துகொண்டே பலஹீனமான குரலில் என் வகுப்பு ஆசிரியரிடம் கேட்டிருக்கிறேன்.

இவர் ஜொலிக்கும் வைரம், க்றிஸ்தவர், மனிதாபிமானமுடையவர் – ஆனால் பள்ளி நிர்வாகத்தை எதிர்க்கும் அளவு அவரிடம் சக்தியில்லை; அவருக்கு முதுகெலும்பில்லை, நேர்மையிலாப் பேடி எனத்தான் நான் சிறுவயதுக் கோபத்தில் நினைத்தேன் – ஆனால் இப்போது, வாழ்க்கையின் பல விசித்திரங்களையும் மானுடர்களின் செயல்பாடுகளையும் ஓரளவுக்காவது அறிந்துகொண்ட நிலையில், அவரைப் புரிந்துகொள்ளமுடிகிறது – ஒப்புக்கொள்ளமுடியவில்லை என்றாலுமேகூட. பாவம், அவர். மத்தியதரவர்க்க குமாஸ்தாவிய வாழ்க்கை என்றாலே ஓரளவுக்கு முதுகெலும்பு மாயமாகிவிடும்போல! :-(

…ஆக,  அவர் கொஞ்சம் கோபப்பட்டும் பயந்தும்போய் (=’டேய், என்னை விசனப்பட வெச்சிட்டியேடா, கர்த்தருக்காக சேவை செய்யுதுடா இந்த ஸ்கூலு!‘) என்னை பள்ளி அலுவலகத்துக்குப் போகச் சொல்லி, கர்ரெஸ்பாண்டெண்ட்டிடம் (இவர் ஒரு க்றிஸ்தவப் பிரச்சார வெறியர், க்ரூரம் மிக்கவர்) பேச்சுக் கேட்க வைத்துவிட்டார்  = 1) ‘ப்ளடி ப்லேக்கார்ட்’ 2) செமத்தியாகப் பிரம்படி.

அடி வலித்தாலும் – நான் பலமுறை வாத்தியார்களிடம் பிரம்படி வாங்கி, மேற்தோல் தடிமனாயிருந்தபடியால் – அது ஒரு பிரச்சினையாக இல்லை; ஆனால், அவர் திட்டியது என்னை மிகவும் பாதித்தது. இதற்குக் காரணம் ப்லேக்கார்ட் (=black guard) என்பதை, கந்தறகோளத் தமிழ் வழிக்கல்விப் பேறு பெற்ற நான் பாஸ்டர்ட் (=bastard) என நான் தவறாக அர்த்தப் படுத்திக் கொண்டு விட்டதும்…

ஆக, பயங்கரக் கோபம் – ஏழாவது படிக்கும் சிறுவனின் முத்து காமிக்ஸ் ‘இரும்புக்கை மாயாவிக்’ கனவுகளில் அந்த ஆளின் வயிற்றில் பலமுறை என் கையைக் குத்திச் சொருகி, ஆசை தீரக் கொலை செய்தேன்.

…ஆனால் – வீட்டுக்கு வந்து டிக்ஷனரியைப் பார்த்தவுடன் மகாஅசடாக உணர்ந்தேன்! :-)

மாலை வழக்கமான கந்தர்சஷ்டி கவச உச்சாடனத்துக்குப் பின் என் அம்மாவிடம் அழுதால் – “ஆசிரியர்களை எதிர்த்துப் பேசக்கூடாது; ஆச்சார்ய தேவோ பவ! க்றிஸ்தவ ஆசிரியர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்கள்! நீ முரட்டுத்தனமாக இருக்கக்கூடாதுடா ராமா! ராமன் என்றால் நல்லவனோல்லியோ!

ஆஹா!

…எது எப்படியோ – தாளாளரிடம் தடியடி வாங்கியதினால் வெட்கமும் அசிங்கவுணர்ச்சியும் என்னைப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்ததால் – பிறகு இரண்டு நாட்கள் பள்ளிபக்கமே செல்லவில்லை – பெற்றோர்கள் கேட்டால் நான் சொன்ன சால்ஜாப்பு பதில்: “பள்ளி செல்லும் வழியில் இருக்கும் கசாப்புக் கடைகளிலிருந்து (= ‘ஏஒன் பீஃப் ஸ்டால்’) ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது – ஒரே ரத்த நாற்றம், ப்ளீச்சிங் பவுடர் வாசனை – பயமாக இருக்கிறது!” :-)

விஷயம் என்னவென்றால் ஆறாம் வகுப்பிலிருந்து அதே வழியாகத்தான் சென்றிருக்கிறேன், பின்னரும் பத்தாம் வகுப்புவரை அப்படியேதான் – இருந்தாலும் என்னை என் பெற்றோர்கள், இந்தக் கதையாடல் தொடர்பாக ஒருகேள்வியைக் கூடக் கேட்கவில்லை. முழுவதும் நம்பி விட்டார்கள்! என் அம்மா, மோர்க்கூழ் காய்ச்சி என் பயத்தைப் போக்கடித்தார். இரண்டு நாட்கள் சுகவாசம். (ஆனால் – இந்த ‘பயந்த சுபாவ’ விஷயம் காரணமாக, நான் இன்றுவரை என் குடும்பத்தினரால் அவ்வப்போது கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.)

இதற்குப் பிறகும்கூட நான் மூளை கெட்டு – நான் எட்டாவது படிக்கும்போது – என் தம்பியையும் அதே குப்பைகூளத்தில் ஆறாவது வகுப்பில் கொண்டு போய் சேர்த்தேன் – வேறு ஏதாவது அரசுப் பள்ளியில் அல்லது தியாகராய நகர் ராமகிருஷ்ணாமிஷன் பள்ளியில் அவனை ஆறாம்வகுப்பில் சேர்த்தியிருக்கலாம்.

ஆனால், துளிக்கூட வரலாற்றுப்பாடங்களைப் படிக்காமல், படிப்பினைகளைப் பெறாமல் –  என்னால் (இன்றும் கூட!) நம்பவே முடியாதபடிக்கு – அதே கர்ரெஸ்பாண்டெண்டிடம் இதற்காகப் பேசினேன்; அவர் கேட்ட ஒரே கேள்வி ‘அவனும் படிக்கிற பையனா?‘ நான் சொன்னது – ‘ஆமாம் ஸார், என்னைவிட ரொம்ப ரொம்ப நல்லா படிப்பான்!

‘ஒன்னைப்போல பேசுவானா?’ ‘இல்லை ஸார், அவன் அமைதியானவன்!

இப்பல்லாம் வர்ரதேயில்ல, வாலை சுருட்டுக்கிட்டு இருக்கியா, கர்ரெஸ்பாண்டெண்ட் ஆஃபீஸுக்கு வந்து ரொம்ப நாளாச்சுபோல” என அவர் கையில் இருந்த கருப்பு உருட்டைக்கட்டையை (அழகான, மஹோகனி மரத்தில் செய்யப்பட்ட ரூலர் என நினைவு) உருட்டிக்கொண்டே சிரித்தார்.  நானும் ‘ஒழுக்கமா இருக்கேன் ஸார்‘ என ஏதோ பயத்தில் உளறிக்கொட்டினேன் என நினைவு.

அவ்வளவுதான். விண்ணப்பப் படிவத்தை வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டார்.

…ஆக, அவனும், பாவம் அந்தப் பள்ளியிலேயே படித்து – பின்னர் வெளிக்காற்றை மீண்டும் சுதந்திரமாக சுவாசிக்க, ஏழு வருடங்களாகி விட்டன. (நான் எழுதும் ஒத்திசைவு எழவையெல்லாம் படிக்கும் ஜீவன்களில் அவனும் ஒருவன்; நான் சிறுவயதில், ஆனால் அறிந்தே தவறு செய்த என்னை மன்னிப்பான் என நினைக்கிறேன். :-( )

…சரிதான். இச்சம்பவங்களும் தொடர்புள்ள நிகழ்ச்சிகளும் வெள்ளம்போல, சிலவாரங்கள் முன் எனக்கு நினைவுக்கு வந்து, என் அம்மாவிடம் சிரித்துக்கொண்டே இந்த விஷயங்களைப் பேச ஆரம்பித்தேன் – ஆனால், அவருக்கு இருக்கும் மனரீதியான பிரச்சினைகளில் இதில் எதுவுமே நினைவிலேயே இல்லை. அப்படியா ராமா, நீ சொன்னா சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டார்.

பெரம்படி வலிச்சிருக்குமே என்றார். ஆமாம், ஆனால் அதொன்றும் பெரிய்ய விஷயமில்லை என முடித்துவிட்டேன். கேல் கதம்.

-0-0-0-0-0-0-0-

அந்தப் பள்ளியில் நூதமான முறைகளில் பாரதப் பண்பாடுகள் இழிவு செய்யப்பட்டன. இதில் எனக்கு நினைவில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை மட்டும் கொடுக்கிறேன்.

வெள்ளிக்கிழமைதோறும் காலை 11.30 முதல் 1.00 வரை ‘ஒழுக்கம்’ குறித்த வகுப்புகள் நடக்கும் – முழுப்பள்ளிக்கும் சேர்ந்து ஒரே இடத்தில், கொன்றை மரங்களின் நிழலில். அருமையான சூழல்.

இதில் பிரதானமாக, பரமார்த்தகுரு கதைகள் சொல்லப்படும். இவை ‘வீரமாமுனிவர்’ என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட  (=Constantine Joseph Beschi) யேசுசபை சார்ந்த இத்தாலிய ஜெஸூய்ட் உதிரிப் பாதிரியினால் ஏறத்தாழ 1825-8 வாக்கில் எழுதப் பட்டவை; அவர் அவற்றை 1) கோதம் கிராம அறிவாளிகள் (Wise Men of Gotham) எனும் 13ஆம் நூற்றாண்டுத் தொகுப்புக் கதைகளை, மூலத்தைக் குறிப்பிடாமலேயே இக்காலத் தமிழ் இலக்கியவாதிகள் போல உல்ட்டா செய்தும் + 2) ஹிந்து மதத்தைக் கேலியும் கிண்டலும் செய்து மதமாற்றப் பிரச்சாரம் செய்வதற்கும் பயன்படுத்தினார்.

மூடன், மட்டி, மடையன், மூர்க்கன், மிலேச்சன் என ஐந்து சீடர்களும் பரமார்த்தகுருவும் பங்குபெறும் மதியீன அங்கதக் கதைகளாக மொத்தம் எட்டு கதைகளும் (அதற்குள் சிலப உபகதைகளும்) இருந்த அத்தொகுப்பு, நியாயமாகப் பார்த்தால் பாரதத்திலிருந்தும் ஆகவே தமிழகத்திலிருந்தும் அதன் நிறமும் அயோக்கியமும் சார்ந்து இனம் காணப்பட்டு ஒதுக்கி வைத்திருக்கப்பட்டிருக்கவேண்டும். அவற்றின் – க்றிஸ்தவ மதப்பரப்பலுக்கு எதிராக இருந்த ஹிந்து மத சைவ மடங்களின் மேலான அப்பட்டமான வெறுப்புமிழலை – உணர்ந்து விட்டிருக்கவேண்டும்.

ஆனால் நம் பாதிரிகளின் (+அவர்களின் அடிவருடிகளாக இருந்த திராவிடத்தனம் செய்யப்பட்ட நம் தமிழர் கும்பல்களின்) கல்வி மீதான கிடுக்கிப்பிடித் தாக்கத்து காரணமாக – இன்று வரை அவை ‘அங்கதக் கதை’களாகக் கருதப்பட்டு – நம்மை நாமே (காரணமேயில்லாமல்) எள்ளி நகையாடிக்கொள்ள ஏதுவாகின்றன. மதமாற்றச் சக்திகளுக்கு உதவி செய்கின்றன.

சோகம்.

இந்தக் கதைகளை என் பள்ளியில் நூதன முறையில் சொல்வார்கள் – காந்தம் பொருத்தப்பட்ட சீடர் படங்கள், மிருகங்கள், மரங்கள், குரு எல்லாருடைய கேலிச் சித்திரங்களும் ஒரு இரும்புத்தட்டியில், கதை நகர நகர, அவையும் நகர்ந்து கொண்டிருக்கும். கதை சொல்லும் பாதிரி இளைஞர்கள்  – குருவும் சீடர்களும் சொல்வதாக ‘அய்யோ ராமா‘  ‘ அட ராமா‘ ‘அய்யய்யோ சிவா‘ என்றெல்லாம் சொல்லி எங்களைச் சிரிக்கவிடுவார்கள்.

ஒவ்வொரு முட்டாள் பரமார்த்தகுரு கதைக்கும் ஒரு பைபிள் கதை ‘ஞானத்தைப் பொழிவதாக’ ஒரு முத்தாய்ப்பாகவும் எதிர்வாதமாகவும் வைக்கப் படும். ‘சேசு ஒருவரே தேவர், அவர் மட்டிகளையும் ஸொஸ்தம் செய்து நல்ல மார்க் வாங்க வைப்பார்‘ என்று முடியும். (இந்த பரமார்த்தகுருக் கதைகளில் ஒன்று – ‘ஆற்றைக் கடந்த கதை’ வீரமாமுனிவர் செய்த ஒரு அப்பட்டமான ஈயடிச்சான் காப்பி என்று சொல்லியதற்கு நான் சுமார் ஒருமணி நேரம் முட்டிக்கால், அஸெம்ப்ளிக்கு முன்னால், அனைவருக்கும் தெரியும்படி போட்டிருக்கிறேன்; இது நடந்தது ஏழாம் வகுப்பில் என நினைவு…)

மேலும் பலப்பல பிற ‘ஒழுக்கக்’ கதைகளில் வில்லன்களுக்குப் பெயர் முருகன், கிருஷ்ணன் என்றெல்லாம் இருக்கும். ‘வில்லி’களுக்குப் பெயர் சீதா, திரௌபதி என்றெல்லாம். ஆனால் நற்காரியங்கள் செய்பவர்களுக்கு எல்லாம் ஜான், டேவிட் என்றெல்லாம்.  ஒரு ராமாயணக் கதையில், சூர்ப்பனகை கறுப்பு நிற திராவிடப் பெண்ணாக இருந்ததால், ஆரிய லக்குவன் அவள் மூக்கை அறுத்தான் என்றெல்லாம் விரிந்தது. மக்தலேனா கதையாடல் இதற்கு முட்டு கொடுக்கப்பட்டது. (உண்மையைச் சொல்லப்போனால், என் ஒன்பதாவது வகுப்பு வரை – நானும் இந்த ஆரிய-திராவிடப் பொய்மைப்பிரிவுகளை உண்மையென்றே நம்பியிருந்திருக்கிறேன், வெட்கக்கேடு!)

நம் பாரம்பரியங்களை இளக்காரத்துடனும் இல்லாவிடில் குற்றவுணர்ச்சியுடனும் பார்க்க, நம் பண்பாடுகளை அறிவீனத்துடன் ஏறி மிதிக்க, அவற்றின் கூறுகளை ஒழித்துக்கட்ட, கபளீகரம் செய்திட – இளஞ்சிறார்களின் நெஞ்சில் நச்சினை விதைக்க, மூளைச்சலவை செய்ய – அமோகமாக உழைத்தன இந்த ‘ஒழுக்கக்’ கதையாடல்கள்…

அடுத்த பகுதியில் மேலும் சில தொடரும் நினைவுகள்

9 Responses to “க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2)”

  1. Ramesh Narayanan, Nanganallur Says:

    நீங்கள் சுட்டிக்காட்டியவாறு நடக்கிற எதிர்மறை போதனைகளை IBH வெளியிட்ட அமர் சித்திரக் கதைகள் பெறுமளவு சமன் செய்துள்ளதாகக் கருதுகிறேன். தமிழ் மக்களுக்கு எவ்வளவு சென்றுள்ளது என்பது ஐயமே! மேலும் ராமானந்த் சாகரின் ரராமாயணமும சோப்ராவின் மகாபாரதமும் இதில் அடங்கும்.


    • ஹ்ம்ம்… ஓரளவுக்குச் சமன் செய்யப்பட்டிருக்கிறது. சபரிமலைகளும், அடிகளார்களும், புத்துருவாக்க குருஜிக்களும், பல இளைஞர்கள் ஆன்மிகம் நோக்கித் திரும்பியிருப்பதும் நடந்திருப்பவையே. இவை பெரும்பாலும் எதிர்வினைகளோ என எனக்குச் சந்தேகமே.

      ஆனால், ஆன்மிகத்துக்கு அப்பால் – பொருளாதாரம், அறிவியல், தொழில்/கலை நுட்பங்கள், நாம் அடைந்திருந்த உச்சங்கள், அவற்றையும் நம் பெருமையையும் (வெட்டியாக அல்ல) எப்படி நாம் மீட்டெடுப்பது, அந்த மீளுயிர்ப்பு அஸ்திவாரங்களின் மீது எப்படி எதிர்காலத்தைக் காத்திரமாகவும் காலத்துகேற்றபடியும் கட்டியெழுப்புவது என்பதிலெல்லாம்….

      நம் மலைக் கிராமங்களில், வனாந்திரங்களில், ஏன் பிறபகுதிகளிலும்கூட (பாரதம் முழுவதும்) இப்போதும் நடந்துகொண்டிருக்கும் பாதிரித்தன (+ இக்காலங்களில் இஸ்லாமியத் தீவிரவாத) அயோக்கியங்கள் காத்திரமாக, பல அடுக்குகளில் முறியடிக்கப்பட்டாலொழிய, பிரச்சினைகள் சிடுக்கலாகும் என்பது என் கருத்து.

      பார்க்கலாம்.

  2. ஆனந்தம் Says:

    என் தந்தை திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரிப் பாதிரிமார்களைப் பற்றி மிகுந்த மதிப்புடன் பேசக்கேட்டிருக்கிறேன். ஃபாதர் சுந்தரம் (மதமாறிய பிராமணர்) அவர்கள் பற்றி என் தந்தை நன்றியால் கண்கலங்காமல் பேசியதே இல்லை.

    என்னுடைய அனுபவங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. நான் படித்தது அரசுப்பள்ளியில். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் பள்ளிக்குள் மாணவர்கள் மீது அதிகாரம் வகித்த ஆசிரியைகளும் பெரும்பாலும் கிறித்துவர்கள். ஏறக்குறைய கிறிஸ்துவப் பள்ளியில் படித்ததாகவே நான் உணரும் அளவு கிறிஸ்துவர்கள். சில சமயம் மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பள்ளியில் ஒரு முறை புதிய ஏற்பாடு புத்தகத்தை வகுப்பு வகுப்பாகச் சென்று வழங்க உடற்பயிற்சி ஆசிரியை ஏற்பாடு செய்தார், (கிறிஸ்துவர், அதிகாரம் மிக்கவர்கள் என்று நான் குறிப்பிட்டவர்களுள் முக்கியமானவர்) அதை உள்ளூர் விஎச்பிகாரர்கள் கேள்விப்பட்டுப் பள்ளி வாசலில் கண்டனப் போஸ்டர் ஒட்டினர். பயந்த ஆசிரியை அடுத்த ஓரிரு தினங்களில் பைபிள்களைத் திருப்ப வாங்கிக்கொண்டார். வாங்கிக்கொள்ளும்போது எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. விஹெச்பி போஸ்டரைப் பார்த்ததும்+ ஒரு ஆர்எஸ்எஸ் தோழியின் பிரசாரமும் சேர்ந்து எனக்கு ரோஷம் வந்தது. என் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்கட்டுமா என்ன செய்வது என்று கேட்டதற்கு அதில என்ன தப்பு? அதுபாட்டுக்குஇருந்துட்டுப்போறது. என்றனர். (இருவருமே மதச்சார்பின்மை பற்றி எனக்குக் கற்றுக்கொடுக்க அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். இன்னமும் நான் செக்யூலராக நீடிக்க அதுதான் காரணம். ) அந்த பைபிளை நான் சில பக்கங்கள் படித்துவிட்டுப் புரியாமல் வைத்துவிட்டேன். திருப்பித் தரவில்லை.

    சில நாட்களில் புதிய தலைமையாசிரியை வந்தார் (அவரும் கிறிஸ்துவர்) ஆனால் அரசுப்பள்ளி என்பதால் எந்த மத சம்பந்தமான பிரசாரங்களும் இருக்கக் கூடாதென்று உத்தரவிட்டார். ஆனாலும் சில கிறித்துவ ஆசிரியைகள் குறிப்பாக 10, 12 வகுப்பாசிரியைகள் வகுப்பு ஆரம்பிக்கும்போது மற்றும் பரீட்சை நாட்களில் ஜெபம் செய்வதுண்டு. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ரத்தினங்கள். தொழிலை நேசித்தவர்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் சலிப்பின்றி ஐயம் போக்குபவர்கள். கல்வியுடன் ஒழுக்கத்தையும் போதித்தவர்கள். (நான் 10th கணக்கில் நூறு வாங்க வேண்டுமென்று ஜெபம் செய்த ஆசிரியை திருமதி ஞானமேரியை என்னால் மறக்க இயலாது. )

    பரமார்த்த குரு கதைகள் லைப்ரரியில் அநேகக் காபிகள் உண்டு. (நூலகரும் கிறிஸ்துவர்) ஆனாலும் இந்தச் சூழ்நிலை என்னை (அல்லது வேறு யாரையும்) எந்த விதத்திலும் பாதித்ததில்லை. ஒருவராவது மதம் மாறியதும் இல்லை. இப்போது யோசிக்கும்போது மதம்மாறியவர்களுக்குண்டான அதீத உற்சாகம் (இதை இயற்கை உணவு, பேலியோ வகையறாக்களிடம்கூடக் காண முடியும்) தவிர அவர்களிடம் எந்த ஒரு தீவிர உள்நோக்கமும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை.
    மதமாற்றம் பற்றி இப்போது இந்துத்துவர்கள் paranoid ஆக இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. இத்தனை வருடங்களில் நாட்டில் எல்லா இடங்களிலும் துறைகளிலும் சீரழிவுகள் அதிகரித்திருப்பதுபோல்- குறிப்பாகக் கல்வித்துறையில் பல மடங்கு அதிகரித்துள்ளதுபோல்- மிஷனரி அமைப்புகளிலும் சில தவறுகள் நடக்கலாம். அதை மதப்பிரச்சினையாகப் பார்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. இந்துத்துவ அரசியலை நான் தனிப்பட்ட முறையில் எதிர்த்தாலும் அந்தத் தரப்பு முழுக்க அயோக்கியத்தனம் என்று நான் கருதுவதில்லை. ஆனால் இந்துத்துவர்கள் செக்யூலரிஸ்டுகளை அயோக்கியர்களாகவும் மதவிரோதிகளாகவும் பார்ப்பது என்பது வருத்தமளிக்கிறது. வழக்கமாக சாம்பல் நிறம் பற்றிப் பேசும் நீங்கள்கூட இந்தப் பதிவில் ஒற்றைப்படையாகப் பேசியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
    செக்யூலரிஸம் என்பது சொந்த மத வெறுப்பு என்று இப்போது ஹிந்துத்துவர்களால் கேலி செய்யப்படுகிறது. இதுவும் ஒற்றைப்படையானது.
    என் பெற்றோர் எனக்கு மதச்சார்பின்மையை உபதேசித்த அதே நேரத்தில் என் மதத்தை நேசிக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தன் சொந்த மதத்தை உண்மையாகவும் ஆழமாகவும் நேசிக்கிற ஒருவருக்கு மதமாற்ற சக்திகள் பற்றித் துளியும் அச்சம் ஏற்படத் தேவை இல்லை. அச்சமில்லாத இடத்தில் வெறுப்பும் இல்லை. நமக்குத் தேவை நம் மதம் பற்றிய ஆழ்ந்த புரிதல்தானே தவிர பரமத வெறுப்பல்ல. முழுமையாக திராவிடக் கட்சிகளும் ஓரளவுக்குக் காங்கிரஸும் செக்யூலரிஸம்= இந்து மத வெறுப்பு என்ற நிலையை உண்டாக்கியதற்காக செக்யூலரிஸமே கெட்ட வார்த்தை என்ற நிலையை எடுக்க வேண்டியதில்லை. போலி மதச்சார்பின்மை தவறென்றால் அதில் உள்ள ”போலி” தான் களையப்பட வேண்டுமே தவிர ”மதச்சார்பின்மை”யே அல்ல. போலி மதச்சார்பின்மையை எதிர்க்க அதை வைத்து அரசியல் செய்கிறவர்களுக்குத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பித்தாலே போதுமானது. அதற்காகப் பிற மதங்களின்மீது எதற்காக ஏளனமும் வெறுப்பும்?
    சர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜவும்
    வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே என்னிடத்தில் இளைப்பாறுங்களும் எனக்கு சமம்தான். இரண்டும் ஆழமான அன்பிலிருந்து பிறந்தவை. அன்புக்கு ஏங்கும், இக வாழ்க்கையில் எந்த பலமுமின்றித் தனித்துப் போராடும் எளிய மனிதனை உத்தேசித்தவை. இருவரில் யாரையும் அல்லது இருவரையுமே கற்பனையான கதாபாத்திரம் என்றாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.


    • உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீங்கள் சொல்பவற்றில் சில விஷயங்களைக் குறித்து இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறேன், முடிந்தால் படிக்கவும்.

      சாம்பல் நிறம்: இதன் உபாசகன் என்றாலும் நான் நடுநிலைக்காரன் கிடையாது. என்ன செய்வது சொல்லுங்கள். பிற மதங்களின்மீது ஏளனம் என்றில்லை. ஆனால் மதமாற்றம் (அண்மையில் 9 நாட்கள் கொடைக்கானல் பக்க கிராமத்தில் இருந்தேன், அட்டூழியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன) – என்பதை – கேவலமான முறைகளில் கலாச்சார ஆக்கிரமிப்பு என்றவகையில் பார்க்கிறேன்.

      இன்னொன்று: ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை அனுபவங்கள் என்பவை வித்தியாசமாக இருக்கின்றன. உங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள், அனுபவங்கள், உங்களை அப்படிப்பட்ட பார்வை கொண்டவராக உருவாக்கியுள்ளன. நீங்கள் சிந்திக்கும் ஜாதி. :-)

      பிறபின்.

  3. Ram Says:

    Sir, you are right. i have the same experience with A.G.School Tenkasi.
    our geography teacher called Chandran…(no more now)he was the one who used to take scripture class…..use to say cheap things on hindu gods……only very few 12th students speak against or try to disturb such class…… now i really feel ashamed to sit and hear those things….
    lost my respect towards Christianity….but the problem is every where it happens. ….. why it did not happen in college is students may raise their voice against it.


    • அய்யா, கருத்துகளுக்கு நன்றி.

      சில வடுக்கள் ஆறமாட்டா. இருந்தாலும், உங்கள் மீது நீங்கள் கடுமையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

      ஏனெனில், அப்ரஹாமிய மதங்களின் உலகப் பார்வையே வேறு. ஆனாலும் அவை பாரதம் வந்தபின் அவற்றின் உள்ளார்ந்த வன்முறையானது ஒதுக்கித் தள்ளப்படாமல் – ஸப்ளைம் செய்யப்பட்டு அவை மெருகேற்றப் பட்டிருக்கின்றன என்பவை நம் பண்பாட்டின் மைல்கற்கள்.

      நன்றி.

  4. Prabhu Says:

    இங்கு பெங்களூரில் எனது ஏழாம் வகுப்பு வரை ஒரு தமிழ் வழி பள்ளியில் படித்தேன், பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் மிகவும் படிப்பறிவில்லாத பாமரர்கள், ஒரு ஹிந்து பண்டிகையோ அல்லது குடும்ப விசேஷமோ லீவ் கேட்டு வரும்போது சில ஆசிரியர்கள் மிகவும் கீழ்த்தரமாக பேசுவார்கள், தினமும் மூன்று முறை பிரேயர் ஒவ்வொரு நாளும் பைபிள் வசனங்கள் என ஒரு முழு நேர மத போதனை நடந்து கொண்டிருந்தது, அவர்களின் 50 வருட கல்வி சேவையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் நல்ல மாணவர்களை உருவாக்க முடிந்தது.

    சில நல்ல ஆசிரியர்கள் இருந்த போதிலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, எங்கள் ஏரியாவில் விநாயகர் பண்டிகை ஒரு வாரத்துக்கு மேல் நடக்கும் அப்பொழுது நடந்த அன்னதானத்துக்கு நாங்கள் பத்து பதினைந்து நண்பர்கள் சேர்ந்து மதியவேளையில் சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம், அதில் சில கிறிஸ்தவ மாணவர்களும் அடக்கம், நாந்தான் எல்லோரையும் அழைத்து சென்றேன் என ஒருவன் சொல்ல என்னை கிட்ட தட்ட ஏதோ கொலை செய்துவிட்டதை போல ஒரு வாரத்திற்கும் மேலாக பல வகைகளில் தண்டித்தனர், தாங்க முடியாமல் என் தந்தையிடம் கூறிவிட்டேன், அவர் விஷயத்தை ஏரியா கவுன்சிலர் வரை எடுத்து சென்று எல்லா விஷயமும் நிறுத்தப்பட்டது.

    இந்த மாதிரியான செயல்களால் இருந்த ஒரு சில தமிழ் முஸ்லீம் மாணவர்களை அவர்களின் பெற்றோர் கன்னட பள்ளிகளுக்கு மாற்றிவிட்டனர், ஏழ்மை காரணம் மாநிலம் விட்டு மாநிலம் வந்த பெரும்பாலான தமிழர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த மாதிரியான தமிழ் பள்ளிகளையே நம்ப வேண்டியிருந்தது, அனால் இன்று சூழ்நிலை பரவாயில்லை.


    • அய்யா, கருத்துகளுக்கு நன்றி.

      உங்கள் பின்னூட்டம் ஸ்பேம் வரிசைக்குப் போய்விட்டது. ஆகவே, தாமதம்.

      ​ஆனால் அய்யா, பெங்களூரில் பலப்பல பள்ளிகளில் இம்மாதிரித் தொடரும் பிரச்சினைகள் இருக்கின்றன.

      என் பார்வை என்னவென்றால், முழுவதும் சர்ச் பணத்தில் செய்வதனால் இவ்விஷயங்களைக் கொஞ்சமேனும் பொறுத்துக்கொள்ளலாம்​ – ஆனால் அரசுப் பணத்தை வாங்கிக்கொண்டும் இப்படிச் செய்வது படுகேவலம்…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s