க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2)

June 1, 2018

முதல் பாகமான – க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (1/2) – காட்டுரையைப் படித்துவிட்டு இதனைப் படிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் புரியலாம். பாவம், நீங்கள்! :-(

-0-0-0-0-0-

பொய் சொல்லக் கூடாது. என் மிஷனரி பள்ளியில் பிறமதச் சின்னங்களை அணிவதற்கு நேரடி அல்லது பகிரங்கத் தடை ஒன்றும் இல்லை. அணியாதே என்று சர்வ நிச்சயமாகச் சொல்லவில்லை. ஆனால் இது மறைமுகமாக நிர்வகிக்கப்பட்ட ஒன்று.

ஏழாவது வரை நான் நெற்றியில் பளிச்சென்று திருநீறு அணிந்துதான் சென்று கொண்டிருந்தேன். கூடவே என் நண்பர்களும் (அச்சரப்பாக்கம் பலராமன், சேத்துப்பட்டு எத்திராஜுலு, பல்லாவரம் ‘வெள்ளைக் காக்கா,’ கூடுவாஞ்சேரி ‘ஒம்போது’ – போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன) அப்படித்தான்.

ஆனால் வகுப்புகளில் ‘யார்ரா அது பட்டைச் சாமி’ (அல்லது ‘நாமக்காரன்’) என அவ்வப்போது வாத்தியார்கள் கிண்டல் செய்ததால் – எட்டாம் வகுப்பில் அது ஒரு சிறு கீற்றானது. பின்னர் ‘டேய் கீத்து’ – என்று ஆரம்பித்து மிகவும் கடினமான, பாடத் திட்டத்துக்குச் சம்பந்தமேயற்ற கேள்விகள் (உதாரணம்: ‘சீப்புரு’ எங்கே இருக்கிறது? சரியான பதில்: ஸைப்ரஸ் தீவு, மத்திய தரைக்கடலில் இருக்கிறது; தமிழ் பைபிளில் அது அப்படி அழைக்கப்பட்டது!) கேட்கப்படும்போது, அவற்றுக்கு எனக்கு ‘படிக்கிற பையனாக’ இருந்தாலும் பதில் தெரியாதபோது – எனக்குப் புரிந்தது; ஆக, முட்டி போடவைத்தலிலிருந்து தப்பிக்க கீற்றையும் அணியாமலிருப்பதே வழியென்று. இருந்தாலும் கால்சராய் பாக்கெட்டில் சதா இருந்த விபூதிப் பொட்டலம் எனக்கு அமைதியைத் தந்தது.

…காலையில் அஸெம்பிளி போது பட்டைவிபூதியை சிறிதுசிறிதாக, வேர்வையைத் துடைப்பதுபோல பாவலா செய்து ஒருகீற்றாக்கி (இதனை, நண்பர்களுக்குத் தெரியாமல் செய்வது ஒரு வெட்கங்கெட்ட கலையே!), பின்னர் அதனை காலை இடைவேளைக்கு முன் அழித்துவிடுவேன். பின்னர் மாலை 4.15க்கு முகம் கழுவிக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டுதான் கிளம்புவேன். அவை சோகமான நாட்கள்.

…அஸெம்பிளியில் பைபிள் வாசகங்கள் படிப்பிக்கப்பட்டு – ‘பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே’ பிரார்த்தனை ‘எஃபெக்டிவாக’ இருக்கவேண்டுமென்றால் பிற மதச் சின்னங்களை அணியாமல் இருந்தால் நல்லது என்று மறுபடியும் மறுபடியும் சொல்லிச் சொல்லி எங்களை உருவேற்றினார்கள்; ஆனால், எங்கள் குழுவில் நாங்களெல்லாம் எங்களுக்குப் பிடித்த கந்தர சஷ்டி கவசத்தை முடிந்தவரை மனதுக்குள்ளேயே சொல்லிக்கொள்வோம். ஆமென்.

-0-0-0-0-0-0-

ஒரு அய்யங்கார் தமிழ்+ஸம்ஸ்க்ருத வாத்தியார் இருந்தார். நான் 10வது படித்துக்கொண்டிருக்கும்போது வேலையை விட்டார். ஏனெனில் அவரை விட வயதும், பணித்திறனும், அனுபவமும் குறைவான ஒரு ஆசாமியை, மதக் காரணங்களுக்காக, அவருக்கு மேல் பணிவுயர்வு செய்தார்கள்.

ஆனால் அய்யங்கார் மகிழ்ச்சியுடன் வேலையை விட்டார் என்று கேள்விப்பட்டேன். ஏனெனில் – ஹிந்தி+தமிழ் ட்யூஷன் எடுத்தே அவர் பள்ளியில் கொடுத்ததை விட அதிகம் சம்பாதித்தார், அதுவும் மனவுளைச்சல் எதுவும் இல்லாமல் – என அவர் பையன் சொன்னான். (இவன் எனக்கு ஒரு வருடம் ஸீனியர்)

இன்னொருவர் சைவப் பிள்ளைமார். க்ராஃப்ட் வாத்தியார். அழகாக – தக்களியிலும் ராட்டையிலும் வேலை செய்வார். அதிகம் பேசமாட்டார். சுருட்டைமுடியும், தளம்தளமாகக் கண்களும் கொண்டு ஜொலிப்பார். நல்ல அழகர். சிரித்த முகம். படிப்பாளி வேறு. இவரை நாங்கள் ‘அழகு ஸார்’ என்றுதான் குறிப்பிடுவோம். (இவர் தான் எனக்கு பாரதியை முறையாக அறிமுகப் படுத்தினார்)

நான் ஒன்பதாம் வகுப்பில் இருக்கும்போது – அழகு ஸார், ஒரு சக ஆசிரியையைக் ல்தகா (அப்படித்தான் பள்ளியில் மாணவர்கள்(!) பேசிக்கொள்வோம் – காதல்) செய்தார். ஆனால் அந்தப் பெண் இவர் மதமாற்றம் செய்தால்தான் திருமணம் என்று சொல்லிவிட்டதால், மிகுந்த விசனத்துக்கிடையில் மதம்மாறி ஞானஸ்னானம் + திருமணமும் செய்துகொண்டார். தம் பெற்றோர்களுக்கு இது குறித்து அவர் ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் – அவருடைய அப்பாவும் (அவர் ஒரு பெரிய தமிழ் வித்துவான், ஆரல்வாய்மொழிக்காரர் என நினைவு; அழகு ஸார் சொல்லித்தான் எனக்குத் தெரியும்) அம்மாவும் ஒரு நாள் பள்ளிக்கே தேடிக்கொண்டே வந்து விட்டார்கள். சண்டையெல்லாம் போடவில்லை; ஏதோ சப்தம் அதிகமில்லாமல் பேசிக்கொண்டார்கள். கர்ரெஸ்பாண்டெண்ட் அப்பாவிடம், அவர் யேசுவடி சேர்ந்தால் உடனடியாக தமிழ் டிபார்ட்மெண்ட் தலைவராக அவரை நியமிப்பதாகச் சொன்னார். (நாங்களெல்லாம் க்ராஃப்ட் அறையின் தட்டிபின்னால் வேலைவெட்டியற்று ஒளிந்துகொண்டு இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தோம், வம்புதான் + எங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் அழகு ஸார்!)

அப்பா நிமிர்ந்த பார்வையுடனும் திடத்துடனும் வெளியே வந்தார் – பின்னர் அம்மா அழுதுகொண்டே அப்பா பின்னாலேயே சென்றார். ஆனால் எங்கள் அழகு ஸாரின் முகம் இருண்டு விட்டது. குறுகி விட்டார். அழுதார். கர்ரெஸ்பாண்டெண்ட் ஆசிரியரைத் தேற்ற முயன்றுகொண்டிருந்தார்… உங்களுக்காக நான் ஜெபிக்கிறேன்… (இதைப் பற்றி, இன்று நினைத்தாலும் சங்கடமாக இருக்கிறது – அழகு ஸாரின் மதமாற்றம் கிதமாற்றம் என்பதற்கு அப்பாற்பட்டு மானுடன் படும் ‘human condition’ வகைக் கஷ்டங்கள் இருக்கின்றனவே… என்ன சோகம்! :-(  …எது எப்படியோ, அழகு ஸாரும் அவர் மனைவியும் இன்றும் சந்தோஷமாக, பிள்ளைகுட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என நம்பவே ஆசை.)

-0-0-0-0-0-0-

ஒரு நாள் காலை அஸெம்ப்ளி அதிகப்பிரசங்கத்தின்போது டேவிட் ‘தாவீது’ – கோலியாத் கதை பற்றி குழந்தை யேஸு பற்றியெல்லாம் ஒரு வெள்ளைக்கார மதபோதகர் பேசப்பேச எங்கள் தலைமையாசிரியர் அதனை மொழி (மத?) மாற்றம் செய்து தமிழில் சொன்னார். இப்போது நினைத்தாலும் நம்பவே முடியாத அளவுக்கு அராஜக வெறுப்பியம்; மூளைச்சலவை என்பதற்கு அப்பாற்பட்டு – பள்ளிக் குழந்தைகளிடம் இவை பற்றியெல்லாம் பிரச்சாரம் செய்வதில் நேரடிப் பயனேயில்லை – இருந்தாலும் வெட்கமேயற்று இம்மாதிரி விஷயங்கள் அவ்வப்போது செய்யப்பட்டன. (இவற்றைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது – இவை நடந்து சுமார் 40 வருடங்கள் உருண்டோடி விட்டாலும்… இப்போதும் அப்படித்தான் நேரிடையாகத் தொடர்கிறார்களா என்பது எனக்குள் இருக்கும் கேள்வி…)

சரி. விஷயத்துக்கு வருகிறேன். அந்த அமெரிக்கர் சொன்னதன் சாராம்சம் என்னவென்றால்: ஹிந்துச் சாமிகள் வெறும் கற்கள். அவை அற்புதங்கள் ஒன்றையும் நிகழ்த்தவில்லை. ‘முழ்ழுகேன்’ எப்படி மயில் வாகனத்தில் போக முடியும்? எல்லாம் மூட நம்பிக்கை. யேஸுவே வழியும் சத்தியமும் ஜீவனும். இந்தியா வளரவேண்டுமென்றால் க்றிஸ்துவே வழி.

பின் வழக்கம்போல பரமண்டல ஜெபம். சுபம்.

எனக்கு ஆறவேயில்லை. எனக்கு ஓரளவாவது அணுக்கமாக இருந்த தமிழாசிரியர் (இவர்தான் என்னைத் தாளாளரிடம் மாட்டிவிட்டவர்) ஒருவரிடம் பொருமினேன்.

அவர் மிக அழகாகச் சொன்னார் – டேய், அவரு வெள்ளைக்காரரு, ஏதோ சொல்லிட்டாரு, வுட்டுரு. அழாதே. இத பாரு, முருகனும் சாமிதான். என்ன, அவ்ரு அந்தக் காலத்துலேயே மயில் மாரி ஒரு பறக்கிற மெஷின் பண்ணிக்கிட்டாரு, அதுல வொக்காந்துக்கினு பறந்தாரு அப்டீன்னு வெச்சிக்கோ. இதுக்கெல்லாம் வருத்தப்படாத, சரியா? அதே முருகன் தான் பிற்காலத்துல யேஸுவா அவதரிச்சார்னு பாத்தா, இதுல வெசனத்துக்கு என்ன இருக்கு சொல்லூ? நம்மள எல்லாம் பாவத்துலேர்ந்து காப்பாத்தத்தான் தேவமகன் அவதரிச்சாரு இல்லையா?

ஆஹா.

அன்று இரவில், என் கனவில், சாவி கொடுத்து முடுக்கப்பட்ட வண்ண மயில் வாகனத்தில் முருகன் பறந்துகொண்டிருந்தான். (இதனை எஸ்ராமகிருஷ்ணத்தன நெகிழ்வாலஜியாக ஜோடித்து எழுதவில்லை. நிஜமாகவே அந்தக் கனவு வந்தது…)

-0-0-0-0-0-0-

…என்னை (முன்பு) ஹிந்து வெறுப்பாளன், சுயவெறுப்புக் கழிவிரக்கம் கொண்டவன் என்று என்னுடைய இடதுசாரி இளைஞ மும்முரக் காலங்களில் சொல்லியிருக்கிறார்கள். இது உண்மையாக இருந்திருக்கலாம். இப்போது முஸ்லீம்/க்றிஸ்தவ எதிர்ப்பாளன் என்கிறார்கள் (மின்னஞ்சலில், பின்னூட்டமாக இடாமல்). உங்கள் கருத்து, உங்கள் விஷயம். எனக்கு, உங்கள் கருத்தால் ஒரு பிரச்சினையுமில்லை. முடிந்தால் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வேன், அவ்வளவுதான்.

எனக்கு மதவெறுப்பு என நீங்கள் தாராளமாகச் சொல்லலாம் (ஒரு அன்பர் என்னை hindutva bastard என மின்னஞ்சலில் அழைத்திருக்கிறார்; இவரை நான் ‘சுயவெறுப்பு மிக்கவர்’ அல்லது secular bastard என பதிலுக்கு ஏச மாட்டேன்! எனெனில் அவர் ‘ஸெக்யூலர்’ எனத் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டாலும், அதனுடைய இடஞ்சுட்டிப் பொருள் விளக்கத்தைப் பெறும்படிக்கு, அவருக்குப் படிப்பறிவு இல்லை; மேலும் அவர் தாயாரை எனக்குத் தெரியும். பெற்றவயிற்றில் பிரண்டையைக் கட்டிக்கொள்ள வேண்டிய துர்பாக்கியமான நிலையில் இருப்பவர் அவர், பாவம்!).

…எனக்கு இப்படிப்பட்ட முத்திரை குத்தல்களால் ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால், சர்வநிச்சயமாக – நான் மதவெறுப்பின் காரணமாக பிறர் கழுத்தை வெட்டுபவனோ, என் மதத்துக்கு மாறினால்தான் உனக்கு மோட்சம் என்று தேவைமெனக்கெட்டுச் சொல்பவனோ அல்லது வாய்க்கு வந்தபடி உளறிக்கொட்டும் போலி ‘ஸெக்யூலர்’எழவாளனோ அல்லன்.

சரி. நீங்கள் – ஸெக்யூலர்த்துவா அல்லது இஸ்லாம்த்துவா அல்லது க்றிஸ்துவா அல்லது ஹிந்துத்துவா அல்லது ஙே!த்துவா என எப்படியிருந்தாலும் – நான் வேண்டுவதெல்லாம், ‘தயவு செய்து தங்கள் ஹோம்வர்க் எழவைச் செய்யவும்; வரலாறுகளை அறியவும்; சும்மனாச்சிக்கும் பேசிக்கொண்டே காலட்சேபம் செய்துகொண்டிருக்காமல், காத்திரமான செயலிலும் ஈடுபடவும்! + பொய் பேசாமல், தரவுகளின் பாற்பட்டு மட்டுமே உரையாடி – முடிந்தவரை பிறர் கருத்துக்கு மதிப்பைக் கொடுக்கவும்.‘ அவ்வளவுதான். ஏனெனில் – நான் ஹோம்வர்க் செய்பவர்களை மட்டுமே மதிப்பவன். கூறுகெட்ட எதிர்மறை எச்சங்களை அல்ல. ஆகவே.

மதநல்லிணக்கம் மதச்சார்பின்மை என்கிறார்கள். சரி. எனக்கும் இவை பிடிக்கும் – பாரதத்தின் கலாச்சாரப் பின்புலத்தில் இவை என்னவென்று புத்தம்புதிதாகவும் தனியாகவும் புரிந்துகொள்வது, என் சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்களாக இருந்தாலுமேகூட.

என் பிரச்சினை, எபிஸ்டெமாலஜி  வகையறா – நம் பண்பாட்டைக் குறிக்க, அவதானிக்க, புரிந்துகொள்ள ஆரம்பிக்கக்கூட – நாம் வேற்றுமொழிகளின்மூலம், தொடர்பற்ற அரைகுறைக் கலைச்சொற்கள் மூலம் யோசனைகூட செய்ய முடியாது என்பதை அறிந்ததால் வந்த எழவு இது.

மதம் என்ற வார்த்தையால் ஸனாதன தர்மத்தை அணுகமுடியாது என்பது என் கருத்து. (ஹ்ம்ம்… நான் ‘ஸனாதன தர்மம்’ என்று எழுதியவுடன் ‘ஹிந்துத்துவா’ காரன் அல்லது hindutva bastard என்பார்கள் என்பதை அறிவேன், ஆனால் எனக்கு இது பிரச்சினையில்லை; அதைக் கேவலமாகவும் எண்ணவில்லை. நான் ஹிந்துத்துவாகாரனல்லன் என்று சொல்லமாட்டேன். நீங்கள் எப்படி உங்கள் அர்த்தங்கள் அல்லது சாய்வுகளை நிர்மாணித்துக்கொள்கிறீர்கள் என்பது உங்கள் இஷ்டம்.)

இன்னொன்று: வேறு வழியேயில்லாமல்தான் நான் ‘ஹிந்து’மதம் அல்லது ஹிந்துமதங்கள் என்று குறிப்பிடுகிறேன். என் கருத்தில், நான் இந்த ஸனாதன தர்மத்தை முடிந்தவரை கடைப்பிடிக்க முயற்சிப்பவர்களில் ஒரு அங்கம். நாஸ்திகன்.

ஏனெனில், என்னைப் பொறுத்தவரை – ஒரு ‘ஹிந்து’வாகத் தன்னை உணர்பவன், அடிப்படை அறங்களைப் பற்றி ஒரளவு திடத்தில் இருந்தால் போதும். அவன் என்னைப்போன்ற வாழ்க்கை, வாய்ப்புகள், அனுபவங்கள் பெற்றவனாக இருந்தால் ஓரளவுக்கு நகைச்சுவை உணர்ச்சியும் இருந்தால், அவனுக்குக் கடவுள் அவசியமில்லை. ஆக, பிற எல்லோருக்கும் அது அவசியமேயில்லை என்றுமில்லை. அவரவருக்கு அவரவர் வழி. எது பெரிது அல்லது சிறிது அல்லது ‘என் நம்பிக்கையை நம்பாதவனை மாற்று அல்லது கொல்’ போன்ற அற்பத் துக்கடா விஷயத்துக்கு அப்பாற்பட்ட, பரஸ்பர மரியாதை குறித்த விஷயமிது. இதைத் தான் நான் ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’ எனப் புரிந்து கொள்கிறேன். ஆகவே, நான் ஹிந்துத்துவா காரன் தான். நன்றி.

மேலும், நான் பேசிக்கொண்டே, மேலான கருத்துகளை அட்ச்சுவுட்டுக்கொண்டே காலத்தைத் தள்ளும் தாமஸ குணம் படைத்த தட்டச்சுவீர எதிர்ப்புக் குமாஸ்தாப் போராளிய ஜல்லிக்கட்டு ஸ்டெர்லைட் ந்யூட்ரினோ சீமைக்கருவேல மண்ணாங்கட்டி தெருப்புழுதி அலக்கிய ஆசாமியுமல்லன். நான் என மனதுக்குகந்த விதத்தில், மரியாதையுடன், என்னால் முடிந்த அளவில், சிரித்துக்கொண்டே, ஆஹாஓஹோ என்றில்லாவிட்டாலும் – கொஞ்சம் களப்பணி செய்பவன். ஆகவேயும் ஹிந்துத்துவன். இதில் எனக்குக் கர்வம் தான். நன்றி.

-0-0-0-0-0-

ஹ்ம்ம்…

…அதே சமயம், பள்ளியில் எல்லா விஷயங்களும் மோசம் என்றுமில்லை; ஏழாம் வகுப்பு முடிவில்போல, என் ‘போராளி’த்தனத்தைக் கைவிட்டுவிட்டு நானும் ஜோதியில் ஐக்கியமானேன்; நானும் என்னுடைய சில நண்பர்களும் சேர்ந்து, பத்தாம் வகுப்பு கணிதத்தை எட்டாம் வகுப்பிலேயே முடித்தோம்; ஒர்ரே இன்பம்ஸ் – பின் பெஞ்சுகளில் உட்கார்ந்து இன்ப லாகிரியில் மிதந்து கொண்டிருந்த எங்களை, ஆசிரியர்கள் ஒன்றும் சொல்லவில்லை. சர்வ நிச்சயமாக சிலபல மதிக்கத்தக்க ஆசிரியர்களும் என் பள்ளியில் இருந்தார்கள் – ஆனால் எனக்கு அவர்கள் லபிக்கவில்லை.

…இருந்தாலும் – சில எதிர்மறை விஷயங்களை மட்டும் நினைவில் வைத்திருந்து அவற்றைக் கொட்டுகிறேனோ என்றும் தோன்றுகிறது. கற்பனை செய்துகொள்கிறேனோ எனவும்.

ஆனால் நான் இந்தப் பதிவை எழுத ஆரம்பித்தது 2012ஆம் வருடத்தில். அதற்கான குறிப்புகளில் மேற்குறித்த நான்கு (+ மேலதிக மூன்று – இவை கொஞ்சம் மோசமென்பதால் கடாசிவிட்டேன்) நிகழ்வுகள் இருக்கின்றன.

மிகுந்த யோசனைக்கும் அசைபோடலுக்கும் பின் தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். (இதை இந்த 2018ல் முடிக்கத் தோன்றியது, ஒரு நண்பர் அண்மையில் அனுப்பிய – டாக்டர் ஹில்டா ராஜா அவர்களின் கட்டுரையால்தான்; இது மிக முக்கியமான, ஆத்மார்த்தமான + படிக்கவேண்டிய கட்டுரை)

-0-0-0-0-0-

எனக்கு, க்றிஸ்தவ மதபோதகப் பாடல்களைப் பாடுவது மிகவும் பிடித்தமானதாக இருந்தது. உணர்ச்சியுடன் பாடுவேன்; என் வீட்டிலும் பாடிக் காட்டியிருக்கிறேன்.

நான்கு வருடங்களுக்கு முன்னால் (2014?), என் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுத்து, க்றிஸ்துமஸ் சமயம் பாடிய ஏழெட்டு யேஸூ பாட்டுகளில் ‘ஆத்துமமே என் முழுவுள்ளமே, உன் ஆண்டவரைத் தொழுதேத்து’ பாடலும், அது என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்திருந்ததும் நினைவுக்கு வருகிறது.

“கடவுள் நம்பிக்கையேயில்லாமல் எப்படி இந்தப் பாடல்களை மனவெழுச்சியுடன் ஆடிக்கொண்டே பாடுகிறாய்” என ஒரு சிறுமி கேட்டதற்கு இன்று வரை என்னிடம், அச்சிறுமிக்குப் புரியக்கூடிய வகையில் சொல்ல சரியான பதில் இல்லை.

கடவுள் நம்பிக்கையில்லாமலும் க்றிஸ்தவ மத நிறுவனங்களின் பலகூறுகளின் மேல் (தொடர்ந்து செய்யப்படும் படுகேவலமான பொய்ப் பிரச்சாரங்கள் உட்பட) ஆழ்ந்த விமர்சனமும் வெறுப்பும் இருந்தாலும் – என்னாலேயே ஆச்சரியப்படத்தக்கவிதத்தில் எனக்குப் பல ‘தீவிர’ க்றிஸ்தவ நண்பர்களும் இருக்கின்றனர்; அவர்களில் சிலர் எவ்வளவுதான் என்னைச் ‘சரி’ செய்ய முயன்றாலும், அவர்களுடன் தர்க்கரீதியாக விவாதிக்காமல், சிரித்துக்கொண்டே அகன்றுவிடும் பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டிருக்கிறேன்; ஏனெனில், சொல்லித் தெரிவதில்லை அப்ரஹாமிய மதங்களின் கண்ணிகள்; அடியேன் உட்பட, அவரவருக்கு அவரவர் முட்டுச்சந்து. என் வாழ்நாளும் அவர்களுடையவையும் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றனவும்கூட.

ஆனாலும். பல க்றிஸ்தவ மதபோதகப் பாட்டுகளின் (அவற்றின் பொருளும் சூழலும் சார்ந்து எனக்குப் பலப்பல மோசமான சங்கடங்கள் இருந்தாலும்) மெட்டுகள் பிடித்திருக்கின்றன. அதனுடன் அவற்றை விட்டுவிடவே ஆசை.

“போற்றிடும் வானோர், பூதலுத்துள்ளோர் சாற்றுதற்கரிய தன்மையுள்ள…”

இப்படிக்கு,

“hindutva bastard”

14 Responses to “க்றிஸ்தவ மிஷனரிகளும் கல்வியும் – சில நினைவுகள்+குறிப்புகள் (2/2)”

 1. sambukan Says:

  hindutva bastard. TRUE


  • அய்யா, சம்புகத் தற்குறியாரே! சம்புகன் பற்றி ஒரு எழவும் ஒரு முடிக்கும்கூட ராமாயணப் பின்புகமும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லையென்றாலும் பேர் மட்டும் இப்படி புரட்டுகரமாக வைத்துக்கொள்ளமுடிகிறதே! என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது, என்ன செய்ய!

   திட்டுவதைக் கூட ஒரிஜினலாகத் திட்டமுடியவில்லை போலும்…

   எப்படியும், ஆசிகளுக்கு நன்றி.

   ரா.

 2. Sundar Says:

  “Sixer”…I think you complete the column without pending..Requesting you to complete other pending posts..


  • அய்யா சுந்தர், இந்த இரண்டாம் பாகத்துடன் இந்தக் கதை முற்றிற்று. எனக்கும்.

   நாம் ஒரே உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் பலப்பல வித்தியாசமான அண்டங்களில் ஆனந்தமாக இருக்கிறோம் என்பது எனக்கு மாளா ஆச்சரியமும் துயரமும் தருவது.

   மற்றபடி ஸிக்ஸர் இன்னபிற பற்றி – இந்த எழவெடுத்த ஆர்ஸி அவர்களின் பின்னோட்டத்துக்கு என் பதில் முன்னோட்டத்தில் கொஞ்சம் மேடர் இருக்கிறது.

   நன்றி.

 3. RC Says:

  ஆறு வருடமாக ஆற/ஊறப் போட்டு இறக்கி வைக்கப்பட்டதற்கு உடனடி எதிர்வினை செய்யத்தான் வேண்டுமா என்று யோசிக்கத்தான் செய்தேன். இருப்பினும் கீழே ..
  உங்களின் பள்ளி அனுபவம் உங்களுக்குரியது அது விரிந்து ஒட்டுமொத்த தமிழக கிருத்துவ பள்ளிகளை பிரதிநிதித்துவம் செய்ய முடியாதெனவே கணிக்கிறேன்.
  என்னுடைய அனுபவமாக கொள்வது என் தந்தை மற்றும் அவர் சகோதரர்கள்(7 பேர்), என் நண்பர்கள் கற்ற நெல்லை கிருத்துவ பள்ளிகள்+ கல்லூரிகள் , என் மனைவி கற்ற வேலூர் பள்ளி+ கல்லூரி சார்ந்து மட்டுமே. இவையும் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் செய்யாது என்று உணர்ந்தே இருக்கிறேன்.

  நான் கேட்ட வகையில் அனைவரும் கற்ற பள்ளியை உயர்வாகவே சொல்கின்றனர்.என் தந்தை (வயது 71) அவர் பள்ளி முதல்வரை மிகுந்த மரியாதையோடு, பிரம்புடன் கூடவே சேர்த்து நினைவு கூர்ந்தார்.தினப்படி பள்ளி அசெம்பிளி பாடல் ஒன்று கூட பாடிக் காட்டினார்.

  இதுவே என் நண்பர்கள் (90 களில் படித்தவர்கள்) சொல்லும் போது ஒரே மாதிரிதான் இருந்தது எனினும், புனித செயின்ட் சேவியர் பள்ளி + கல்லூரி மேல் சிறிது விலக்கம் உள்ளது அதனுடைய கூடுதல் கிருத்துவ ஒழுக்கம் சார்ந்த நெறிகள் மற்றும் பார்வை காரணமாக.

  வேலூர் கிருத்துவ பள்ளி ஒன்றில் படித்த என் மனைவியும் நேர்மறையாகவே சொல்கிறார். மீண்டும் மீண்டும் ஜீசஸ் படம் பார்த்து கண்ணீர் மல்கியதை, way of the cross சென்றதை இன்று நினைவு கூர்ந்தார்.இத்தனை வருடங்களில் நான் கேட்காத பாட்டு ஒன்று கூட பாடிக் காண்பித்தார்.
  “திருக்கரத்தால் தாங்கி என்னை
  திரு சித்தம் போல் நடத்திடுமே
  குயவன் கையில் களிமண் நான்
  அனுதினமும் நீர் வனைந்திடுமே”

  60 களில் படித்தவர்களுக்கும் 90 களில் படித்தவர்களுக்கும் அவங்க பள்ளியிலே ஜேசுவ கும்புடுத்தானே சொல்வாங்க/ செய்வாங்க என்ற தெளிவு இருப்பதாகவே உணர்கிறேன். வருத்தம் ஏதுமில்லை.
  நீ சொல்றதெ சொல்லுன்னு கேட்டுட்டு உள்ளாற நாங்க முருகன தான் கும்புடுவோம் என்று இருந்ததாகவே நினைக்கிறேன். இதைத்தான் 1498/1500 களில் கிருத்தவ ராஜா இருப்பதாக நினைத்து முதலில் நுழைந்த போர்த்துகீசியன் ஒருவனின் குறிப்பிலும் இருப்பதாக படித்த ஞாபகம்.(புத்தகப் பெயர் நினைவில் இல்லை..மன்னிக்க)

  தங்களின் அனுபவம் எனக்கு வண்ணதாசன் அவர்களின் சிறுகதை ஒன்றினை நினைவுக்கு இழுத்தது.’தனுமை’ என்று பெயர்.அதுவரை நான் பார்க்காத பள்ளி சிஸ்டர் ஒருவரை கதையில் காண்பித்திருப்பார் ‘டெய்சி வாத்திச்சி’ என்ற பெயரில்.தென் தமிழக கிருத்தவ அனாதை பள்ளி பின்புலத்தில் நடக்கும் கதையில் “இந்த நல்உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்ற பாடல் வரி ஒன்று கூட வரும்.

  அது போல் நீங்கள் சொல்வதற்கும் இடமிருக்கிறது ஆனால் அது ஒரு பொது அனுபவமாக ஏற்க மாட்டேன் என்னளவில்.

  ஏழரை ல இருக்கும் ஒரு அரை இன்று உங்கள் பக்கம் இல்லை அய்யா.எங்கூர்க்கார சேஷகிரி அய்யாவும் என் பக்கம் தான் இருப்பாரு, ஒன்னரை காலி :-(
  மட்டையை சுத்தும் போது சிக்ஸ் போகும்ன்னு சுத்தன மாதிரி தெர்ல ய சார். ஹிட் விக்கெட் ஆகும்ன்னு தெரியாமலயா சுத்துனீங்க டவுடாக்கீதே ..


  • அய்யா, கருத்துகளுக்கு நன்றி.

   ஒரு விண்ணப்பம்: தயை செய்து மேலோட்ட நெகிழ்வாலஜி முறைமையில் இதனைப் பார்க்கிறோமோ என, உங்கள் அனுபவங்களை மறுபரிசீலனை செய்யமுடியுமா? நானும் பலமுறை மேலோட்ட வெறுப்பாலஜி முறைமையில் கடந்தகாலத்தையும்+தற்காலத்தையும் பார்க்கிறேனா என்று பலமுறை யோசித்துவிட்டுதான் பதிவுகளை எழுதினேன்.

   பாரதம் என்று மட்டுமில்லாமல் ஆஃப்ரிக, அமெரிக்கர்களில் க்றிஸ்தவ அனுபவங்களும் (இவை நம்முடையதை விடக் கொடூரமானவை) இதில் பின்/இடுபொருட்கள். பட்டுச்சால்வைகளின் கீழ் பிச்சுவாக்கள் வகையும் இவற்றில் அடங்கும்.

   மேலும், இந்த விஷயங்களை நான் எழுத, அவை நடந்து சுமார் 40 வருடங்களுக்குப் பின்தான் முனைந்திருக்கிறேன். ஆகவே இவை முட்டியடி எதிர்வினைகளல்ல. ஆக, தொடரும் சோகங்களின் மீதான நெடுநாள் பார்வைகள் என இவற்றை எடுத்துக் கொள்ளலாமோ?

   இன்னொன்று: இரண்டு வருடங்கள் முன், என்னுடன் பள்ளியில் படித்த அக்கால ஆப்த (=கோலிகுண்டு அளவு) நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவன் நினைவுகளெல்லாம் என்னுடன் ஒத்துப்போகின்றன. ஆனால் – இதையெல்லாம் எப்படி நினைவு வைத்துக்கொண்டிருக்கிறாய் என அவன் ஆச்சரியப் பட்டான். ஆக – நான், ஒருவேளை எதிர்மறை விஷயங்களையும் நினைவில் வைத்திருப்பவனான இருக்கலாம். நமக்குப் பிடிக்காத அல்லது ஒவ்வாத விஷயங்களை ஃபில்டர் செய்து பிடித்தமான விஷயங்களை மட்டுமோ அல்லது நினைவுகளைப் புத்துருவாக்கம் அல்லது தொழில்முறை உருவாக்கம் செய்பவனான இல்லாமல் இருக்கலாம். அப்படியேயும் இருக்கலாம்.

   ஆகவே முடிந்தவரை சமனத்துடன் எழுதியிருக்கிறேன் எனத்தான் ஒரு அனுமானம்; இதுவும் சுயானுபவம் சார்ந்த ஒரு/மற்றொர் பார்வை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

   எப்படியும் எந்த விஷயத்துக்குமே, அனுபவங்களும் பார்வைகளும் சாய்வுகளும் சார்ந்து YMMV என்பதையும் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் இது பொருந்தும்.

   இன்னுமொன்று: என் குருவிமூளைக்கும் வாசிப்பெழவுக்கும் – இம்மாதிரி ‘கான்ட்ரவர்ஸி’ வகை விஷயங்களை அணுகுவது கத்தியில் நடக்கிற மாதிரியல்ல. ஏனெனில், மகிழ்ச்சிக்குரிய விதத்தில், நான் எழுதுவது(!) வாசகர்களை(!!) அதிகரித்துக் கொள்வதற்காக அல்ல. பெரும்பாலும் நானே மறுபடியும்மறுபடியும் அவற்றைப் படித்து உருப்போட்டு அகமகிழத்தான். YMMV

   ஏழரையிலிருந்து ஆறு: உங்கள் கணக்கு தவறு. இங்கு எல்லோருமே அரை தான். கல்வி அரையில. இன்று முதல் நாளை கல்வி. என்னைப் பார் சிரி. மழை நீர் சேமிப்பீர்.

   நன்றி.

   கொசுறு: கிரிக்கெட், எனக்கு அறவே பிடிக்காத விளையாட்டுகளில் ஒன்று. இத்தனைக்கும் சிறுவயதில் நிறைய விளையாடியிருக்கிறேன். 1976ல் பள்ளிகரணை-நங்கநல்லூர் டீம்கள், உலகக் கோப்பைக்காகப் பொருதியபோது, 24 ரன் எடுத்து எங்கள் நாடு வெற்றிபெறக் காரணமாக இருந்தேன் என்பதைப் பணிவடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   இருந்தாலும் ஸிக்ஸர், ஹிட் விக்கெட் என என்னெழவுகளைக் கருதாமல், வெறும் நோபால்களாகவோ வைட்களாகவோ கருதினாலே போதும்.

   • RC Says:

    //மேலோட்ட நெகிழ்வாலஜி முறைமையில் இதனைப் பார்க்கிறோமோ என, உங்கள் அனுபவங்களை மறுபரிசீலனை செய்யமுடியுமா?// நன்றி அய்யா,செய்ய முயற்சிக்கிறேன்.தற்போது என் குறைவு பட்ட அனுபவ நெகிழ்வாலஜி தாண்டி என்னால் பார்க்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

    19 நூற்றாண்டு தமிழகக் கல்வியில் க்றிஸ்தவ மிஷனரிகளின் பங்கு பற்றி கடந்த ஆண்டு இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய பதிவுகள் உண்டு. எழுத்தாளர் திரு பி .ஏ.கிருஷ்ணன் மற்றும் கலவை வெங்கட் என்ற நபருடையது.(இதில் திரு.கலவை வெங்கட் அவர்களின் மொழியும் தர்க்க முறையும் எனக்கு ஒத்து வருவதில்லை என முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறேன்).ஆவணங்களை வைத்து ஆடிய பதிவு ஆட்டம் அது. மேலும் ஆவணங்களைக் கொண்டு மட்டும் வரலாற்றைப் பார்ப்பதில் எனக்கு தயக்கம் உள்ளது.அது என் கிரகிப்பு சிக்கல் மட்டுமே.

    மேலும் க்றிஸ்தவ மிஷனரிகள் பற்றி நேரு குறிப்பிட்டதாக திரு.அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவில் எழுதியிருந்தார் பின்வருமாறு.(http://contrarianworld.blogspot.com/2017/05/jawaharlal-nehru-on-christian.html).

    “Is it good for Christianity anywhere, more especially in India, to be associated with foreign domination and imperialism?” “It is strange that the gospel of Jesus, the gentle but unrelenting rebel against untruth and injustice in all forms, should be made a tool of imperialism and capitalism and political domination and social injustice.”

    “If Christianity is to be popular religion in India it must dissociate itself from such pledges and from official patronage and ecclesiastical department. It must rest on the strength of its message and on the goodwill of the people”

    The words, written in 1940, are still relevant to the Church in India and they should pay heed.//

    திருமதி.ஹில்டா ராஜா + உங்களைப்போன்றோர் சொல்லும் கருத்துகளுக்கும் சர்ச் காது கொடுக்க வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன், லார்ட் யேசுவிடம் அல்ல இயல்பாக என் அப்பன் முருகனிடம் தான் :-)

  • A.Seshagiri Says:

   “அய்யா.எங்கூர்க்கார சேஷகிரி அய்யாவும் என் பக்கம் தான் இருப்பாரு, ஒன்னரை காலி :-(”

   அய்யா மன்னிக்கவும்.நான் இந்த விஷயத்தில் ராமையா (ராம்+ அய்யா )பக்கம்தான்.ஏனெனில் எனது இரு குழந்தைகளின் கிறிஸ்துவப் பள்ளிகளின் அனுபவம் அப்படி!

   • RC Says:

    நம்பமாட்டேன் ஸார்வாள்.எனக்கான டெபாசிட் கூட கிடைக்க முடியாதபடி இத்தளம் வடிவமைக்கபட்டிருக்கிறது.உறங்காப்புளி ஊர்க்காரர் ஓட்டு எனக்குத்தான்.அட்மின் செய்யும் தவறு என்றறிவேன்.அருந்தவ அமெரிக்க ஆனா கானா துணைக்கிருக்கிறார் பயமில்லை :-)


   • அய்யன்மீர்,

    ​உறங்காப்புளிக்கு இன்னா செய்தால், இடிச்சபுளிக்குத் தாமே வரும்.​

    கேள்விபதில், வாசகர் கடிதம், பின்னூட்டம் போன்றவயை எனக்கு நானே எழுதிக்கொண்டு அவற்றுக்குப் பதிலும் அளிக்க எனக்கு நேரமில்லை.

    என்னுடைய அழகான பதிவுகளை அழகுபடுத்திப் பதிப்பிப்பதற்குள்ளேயே நாக்கு தள்ளிவிடுகிறது, என்ன செய்ய.

    மற்றபடி இங்கு ஈவிஎம் கருவிகள் ஒழுங்காகவே, முறைகேடில்லாமல் வேலை செய்கின்றன.

    உங்கள் கருவியை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டுபோம். கருவவேண்டாம். கருத்தரிப்பும் வேண்டாம். கருத்துகளைத் தெரிவித்தால், தெளிவித்தால் என்று அல்ல – போதுமானது.

    ​​சரியா?

   • RC Says:

    என் கடைசி பின்னூட்டம் புண்படுத்தியிருந்தால்,அதற்காக வருந்துகிறேன்.நன்றி.


 4. […] நன்றியுடன், என்னெருமை வாலிபவயோதிக 6.5 வாசக அன்பர்களுக்கு, இந்த […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s