வீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்
May 25, 2018
ஒரு வழியாக, சென்ற சனிக்கிழமை, சிறார்களுக்கான மின்னியல் பணிமனை (இரண்டுவாரம் + ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் + மின்னோட்ட அடிப்படைகள் முதல் ஐஸி ஸர்க்யூட்கள் வடிவமைப்பு வரை + சதா உளறிக்கொட்டிக்கொண்டே வளர்த்துக்கொள்ளும் வாய்த்திறனில்லாமல் கைத்திறன்+மூளைத்திறன் மீது குவியம் + ஆறாவது முதல் ஒன்பதாவது வரை படித்த குழந்தைகள் + வருந்தத்தக்க விதத்தில் ஒரு பெண்பிள்ளையும் இல்லை) முடிவு பெற்றது.
ஹ்ம்ம்… எலக்ட்ரான் பற்றிய அடிப்படைகளை அறியாமல் வந்து சேரும் பிள்ளைகள், இரண்டு செயல்பூர்வ வாரங்களின் முடிவில் ஐஸி-க்களைப் பற்றி அவற்றை உபயோகிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, ஓரளவு தன்னம்பிக்கையுடன் முன்னேற முடியும் சாத்தியக்கூறு, எனக்கு மிகவும் திருப்தி தரும் விஷயம்.
(இதனால் – தமிழகக் கஞ்சினீயரிங் கல்லூரிகளில் நான்கு வருடம் மின்னியல் குப்பை கொட்டி ஒரு மசுத்தையும் தெரிந்துகொள்ளாமல் ஒரு செயல்பாட்டையும் அறியாமல் வெளியே வரும் மந்தைகள் பற்றி – எனக்கு மாளா ஆச்சரியமும் தாங்கொணா வருத்தமும்தான்! பணிமனைக்கு ஒரு தமிழ் இளைஞனை உதவியாள அப்ரசன்டியாகத் தேர்வுசெய்ய ஆன மட்டுக்கும் முயன்று பார்த்துத் தோற்றுவிட்டுத்தான் இப்படி எழுதுகிறேன்.
…நறநறத்து நறநறத்து, பற்கள் மொண்ணையாகிவிட்டன. நல்லவேளை – தெரிந்தவர்கள் மூலமாக ஒரு ஷிவ் நாடார் பல்கலைக்கழகப் பஞ்சாபி இளம்பெண் கிடைத்தாள்; இவளும் ஆஹோஓஹோ என்றில்லை – ஆனால் சொல்வதைப் புரிந்துகொண்டு கொஞ்சமேனும் கற்றுக்கொள்வதில் ஆசையுள்ளவளாக இருந்தாள் – நேரக் கெடுபிடியில் இருந்த நானும், பெண்கள் மின்னியலிலும் ஏகோபித்து ஜொலிக்கவேண்டும் எனும் ஆணாதிக்க மனப்பான்மையுடையவனான காரணத்தால் – விட்டாற்போதும் என ஒப்புக்கொண்டுவிட்டேன். அய்யன்மீர், இப்படி ஒவ்வொரு அனுபவத்திலும் கதை இருக்கிறது, ஆனால் எழுதத்தான் நான் சிறுகதைக்கிறவனாக இல்லை, என்ன செய்வது சொல்லுங்கள்…)
சரி.
…குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விதமே அலாதி. இதனை ஓரளவுக்காவது நேரடியாக உணரும் பாக்கியம் பெற்றதால்தான், பெரும்பாலான வயதானவர்களிடம் (=அகுழந்தைகள்) எனக்குச் சுத்தமாகவே ஒத்து வரமாட்டேனென்கிறதோ என்ன எழவோ!
ஆனால், இந்தப் பதிவு அந்த எழவெடுத்த பணிமனை குறித்து அல்ல. (இதைப் பற்றியும் பின்னொரு சமயத்தில் எழுதவேண்டும்)
-0-0-0-0-0-
மின்னியல் மஹாத்மியம் முடிந்த கையோடு, கடந்த மூன்று நாட்களாக என் கொடைக்கானல் பக்க கிராமாந்திர நண்பனுக்கு உதவி. இவனைப் பற்றி முன்னமே ஒருமுறையாவது எழுதியிருக்கிறேன்.
ஒரு மாதிரி மலைச்சரிவில் குடில் ஒன்றைக் கட்டியெழுப்புதல். உடனே ஆர்கனிக் பசுமை வெங்காயம் பாரம்பரியக் கட்டிடக் கலை Vs கான்க்ரீட் காடு என்றெல்லாம் போராளித்தனமாகச் சிறகடித்துப் பறக்கவேண்டாம். முடிந்தவரை சமனத்தோடு பாரம்பரியத்தையும் நவீன தொழில் நுட்பத்தையும் இணைத்து கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயம் இது.
ஆக – விஷயம் புரிபடுகிறதோ இல்லையோ, தகுதி இருக்கிறதோ இல்லையோ – பின்புல யோசனைகளிலிருந்து வடிவமைப்பு வழியாக ஓரளவு அதனைச் செயல்முறைப்படுத்தல்வரை மூக்கையும் இன்னபிற துருத்திக்கொண்டிருக்கும் உடற்பாகங்களையும் நுழைத்து, அய்யா தன் வழக்கம்போலவே ஒர்ரே படுபிஸி.
இரண்டாயிரம் லிட்டர் கொள்ளளவு நீர்த்தொட்டி (ப்ளாஸ்டிக்) எழவுக்கான கட்டுமானம் முதல், சுமார் 15’க்கு 35′ விஸ்தீரண கொட்டகை வரை – அனைத்து விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டிருக்கிறோம். கூரை – ஏ ஃப்ரேம்; டாடா ஸ்டீல் தகடுகள், அதற்கு அடியில் டீல்வுட் எனப்படும் இயந்திரங்கள் பொட்டலம் கட்டப்பட்டு வரும் மரப்பலகைகள்.
தரை/தளம் மரப்பலகைகள் + சுட்டகளிமண் வகை; சுவர் ‘வரிச்சி‘ என வட்டாரத்தில் சொல்லப்படும் wattle and daub வழிமுறை. களிமண்சேறு + சிறுகற்கள் +குச்சிகள் (++ முடிந்தால் பசுஞ்சாணியும், முட்டையும், கருப்பட்டியும்) வைத்துக் கட்டப்படும் அழகு. இப்பகுதியில் டெர்மைட் எனப்படும் வெள்ளைக்கரையான்கள் இல்லாதது ஒரு வசதி. செல்லரிப்புப் பிரச்சினை பற்றிய கவலையே இல்லாமல் மரத்தையும் மண்ணையும் கலந்தடித்து மாளிகைகள் கட்டலாம்.
= ஒரு சிறு சமயலறை + தூங்க/வேலைசெய்ய ஒரு பெரிய அறை + கழிப்பான் உள்ளடக்கிய குளியலறை + ஒரு தாழ்வாரம்.
முடிந்தபோதெல்லாம் எங்களுடைய உடலுழைப்பு; தேவைக்கேற்ப தினக்கூலி வகையில் உதவ வெளியாட்கள் – தச்சர்கள், கொத்தனார்கள், இன்னபிறர். இந்த இரண்டாம் பிரிவினரில் சதா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் பிரச்சினை – பொதுவாகவே நம்மில் உறைந்திருக்கும் திராவிடப் பண்பான செய்நேர்த்தியில்லாமை. செய்யும் தொழிலின் உன்னதத்தின் மீது கர்வமில்லாமை. ஊக்க போனஸ்களாக சால்ஜாப்பு. பஜனை. காலத்தை விரயம் செய்தல். முக்கியமாக, திராவிடத் திருட்டுத்தனம். :-(
பலகைகளைக் கோணாமாணாயில்லாமல் பொருத்துவது, ஆணிகளை நேராக அடிப்பது, நேர்கோடுகள் குறித்த கவனம், அடிப்படை அழகுணர்ச்சி, முன்னதாகவே திட்டமிடல், சிந்தனையுடனும் குவியத்துடனும் எந்தவொரு காரியத்தையும் செய்தல், உடலுழைப்பின் மாண்பினை மதித்தல் என ஒரு விதத்திலும் ஆழமேயில்லாத மேலோட்ட ஜிகினா ஆசாமிகளாக மாறிவிட்டோம்!
…கடந்த மூன்று தலைமுறைகளில், நம் தமிழகம் அடைந்துள்ள திராவிடச் சரிவென்பது முழுக்கவே அசிங்கமான விஷயம்.
எது எப்படியோ.
இந்த வீட்டிற்கான மொத்த செலவு (நாங்கள் செலவழித்த நேரத்தையும் உழைப்பையும் தவிர்த்து) சுமார் 2.75 லகரத்தில் போய் நிற்கலாம். சுமார் 500 சதுர அடி விஸ்தீரணம். + 0.75 லகரம் நீர்த்தொட்டிக்கு. பார்க்கலாம்.
மேற்கண்ட காதையின் நீதி: நம் வாழ்நாளில் ஒருமுறையாவது நாமே வடிவமைத்து நாமே முடிந்தவரை கட்டி அதில் வாழும் புளகாங்கிதமிருக்கிறதே, அதனைச் சொல்லில் வடிக்க முடியாது. அனுபவித்து இன்புற்றுத் துன்புற்றால்தான் அதன் அருமை தெரியும்.
இன்னொரு முக்கியமான நீதி என்னவென்றால்: அப்படிச் செய்தால், இப்படியெல்லாம் விலாவாரியாகப் பதிவிட்டு அல்ட்டிக்கொள்ளலாம், மினுக்கிக்கொண்டு பவனி வரலாம். ‘டேய், தட்டச்சு குமாஸ்தாங்க்ளா, ஸோம்பேறிக் கூவான்களா!’ என ஆரம்பித்து விடலைத்தனமாகப் பிலுக்கிக் கொள்ளலாம். என்னைப் போல. நான் போகவேண்டிய தூரம் அதிகம்.
மலைச்சரிவுப் பாதைகளில், கிடைக்கும் பொருட்களை வைத்துக்கொண்டு படிக்கட்டுகளை அமைப்பது எப்படி…
சரி.
-0-0-0-0-0-0-
…ஆனால், என் சக செல்லத் தமிழர்களை, பலப்பல ஆண்டுகளாக பார்த்து விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் நமக்கு வூடு கட்டுவதில் குவியம் தாஸ்தி.
‘வூடு கட்றது‘ – என்பது ஒரு மெட்றாஸ் பாஷை வழக்கு; இதன் குத்துமதிப்பான குண்ட்ஸான பொருள்: நேரடிச் சண்டையில் இறங்காமல், சண்டைபோடாமல், இவ்விடரிலிருந்து தப்பித்துப் போய்விடத்தான் ஆசை என்று தொடை நடங்குவதையும் வெளிக்காண்பித்துக்கொள்ளாமல் – எதிரும் புதிருமாக இருக்கும் இரு தரப்பினரும் சுற்றிச் சுற்றி வந்து ‘வோத்தா டேய், வொன்ன கீஸிப்புடுவேன், ராஸ்கோல்’ என ஒருவரைப் பார்த்து இன்னொருவர் அன்புடனும் அமர்க்களத்துடனும் சொல்லிக்கொள்வது.
அதே சமயம், சக தரப்பினர் தங்கள் ஆட்களைப் பிடித்து இழுத்து ‘டேய் வுட் ரு பா, அவன் பொளச்சுப் போவட்டும்’ என்பார்கள். இதனை மீறி (ஆனால் நிஜமாக அப்படியில்லாமல்) டாய், டூய் எனப் பேய்ச் சத்தம் போட்டு திமிறிக்கொண்டே – ஆனால் எதிராளிக்குப் பக்கத்திலேயே போகாமல் ‘வொன்ன கொல பண்ணிடுவேன், போன எட்த்ல பில்லு மொளச்சுரும், நெஞ்ஜுல கீர மஞ்சாசோத்த எட்த்திருவேன்’ என்கிற வகையில் சுற்றிச் சுற்றி நடனம் ஆடுவது.
….இந்தக் கோமாளித்தனம் சில நிமிடங்களில் கரைந்து அவரவர் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவர். எவருக்கும் மீசையில் மண் ஒட்டாது. எதிர்புதிராளர்கள் தம்மைப் பற்றித் தாங்கள் ஒரு வீங்கிய, சுயமைதுன சுயபிம்பத்தை உருவாக்கிக்கொள்ளலாம். ‘பொழச்சிப் போ’ என எதிராளியைப் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டதாகக் கருதிக்கொள்ளலாம்.
இதன் மறுபெயர் போராளி நாடகம். நல்ல காலட்சேபம். அஹிம்சாமுறை வன்முறை. ‘வினவு’ காரர்கள், தமிழ்த் தோசையர்கள், தீராவிட இயக்கத்தினர், சுற்றுச்சூழல் வெறியர்கள், தமிழ்த் திரைப்படக் கோமாளிகள் போன்ற உதிரிகள் அனைவரும் தொழில்முறை வூடுகட்டலாளர்கள். வூடுகட்டலால் அவர்களுக்கோ சமூகத்துக்கோ ஒரு சுக்கு உபயோகமுமில்லை.. (ஹ்ம்ம்… மன்னிக்கவும் – முன்னவர்களுக்கு, பொறுக்கித்தனத்தில் -அது தரும் அரசியல் ஆதாயங்களில் பயிற்சி; சமூகத்துக்கு, பொறுக்கித்தனத்தைப் பொறுத்துக்கொள்வதில் பயிற்சி)
ஆனால்… இதனால் இவர்களுக்கும், ஊடகப்பேடிகள் வழியாக சாதா தமிழர்களுக்கும் கிடைக்கும் இன்பம்ஸ் இருக்கிறதே, இது அளவிடமுடியாது. தமிழர்கள் வூடுகட்டலியலில் வல்லவர்கள்.
சில சமயங்களில் இந்த வூடுகட்டலியல் போராளித்தனம் எல்லைமீறி, சுயமைதுன லாகிரி வெறியால் ‘வூடு கட்டல்’ கோழைத்தன அடிப்படைகள் மீறப் படும்போது வன்முறை எழுகிறது.
அந்த வன்முறையால், எதிர் வன்முறை (அரசுபக்கத்திலிருந்தோ, பிற எதிராளிகளிலிருந்தோ) ஏற்படுகிறது.
இப்படி நடக்கும் போதெல்லாம் கூக்குரலிடுபவர்கள், அய்யோ மனிதவுரிமை போய்விட்டதே என அலறுபவர்கள் – ‘அபார்ட்மென்ட் கட்டுபவர்கள்‘ என்றறிக. இவர்கள், வூடுகட்டுபவர்களை வைத்துக்கொண்டு அவர்கள் பிணத்தின்மேல் நடனமாடி, சொந்த அபார்ட்மென்ட் கட்டிக்கொள்ள ஆசைப்படுபவர்கள் என்றுணர்க.
நன்றி.
பின்குறிப்பு: திராவிடத்தால் வீழ்ந்த தமிழனுக்கு – உழைப்பின் மேன்மையைப் பற்றியும் செய்நேர்த்தியைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும், அபோராளித்தனத்தைப் பற்றியும் பாலபாடம் எடுக்கவேண்டும். அவன் தன்னுடைய அற்பப் போராளித்தனத்தை விட்டொழிக்க அவனுக்கு, ஒரு சரியான தலைமை வேண்டும்.
அப்படிப்பட்ட தலைமையைத் தரக்கூடிய அற, ஆன்மிக அடிப்படைகளும் கட்டுமானங்களும், தற்போதைக்கு பாரத தேசியக் கட்சிகளிடம் மட்டும்தான் இருக்கின்றன.
திராவிடம் ஒழிந்தால், தமிழகம் வாழும். ஆமென்.
May 26, 2018 at 10:23
பொய்
May 26, 2018 at 15:45
சரி.
May 30, 2018 at 10:11
இப்படி இரண்டே எழுத்தில் மொண்ணைத்தனமாக எதிர்வினையாற்ற ‘திராவிடக்குஞ்சுகளால்’மட்டுமே முடியும்!
May 26, 2018 at 15:09
₹3 லகரத்தில் வீடு அமோகமாக உள்ளது. பிரதமரோ அல்லது ஜார்க்கண்ட் , சத்தீஸகர், ஒரிசா மற்றும் அஸ்ஸாம் முதல்வர்களோ இக்கட்டுரை பற்றி அறிய நேர்ந்தால், உங்கள் புண்ணியத்தில் ஒரு மாபெரும் “ஏழைகளுக்கு வீடு”–3 வாரங்களில் கொடுக்கப் படும் நிலை-அறிமுகப் படுத்தலாம். உண்மையாகவே.
மிகப் பெரும் அளவில் திட்ட ஒதுக்கீடு தேவை இல்லை. வீட்டின் 3 பக்கமும் பக்கத்திற்கு 5 மரக் கன்றுகள் வைத்து பராமரித்தால்……..
திட்ட வடிவை அனுப்பிப் பார்க்கலாமே!
பயன் பெற்ற குடும்பங்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கிய உங்களையும் உங்கள் தலைமுறைகளையும் வாழ்த்தும்.
அரசு அளவில், ₹2 லகரத்தில் முடிக்க முடியும்
May 26, 2018 at 15:48
அய்யா, யோசனைக்கு நன்றி.
ஆனால் 1) விஷயங்கள் அவ்வளவு சுளுவில்லை 2) எங்கள் இருவருடைய உழைப்பு சாத்தியமானது, எங்களுக்குக் கிடைத்திருக்கும் கால அவகாசமும் கொஞ்சம் சக்தியும். இவற்றுக்கு ஒரு பணமதிப்பு கொடுத்தால் விலை 4 லகரத்துக்குச் செல்லலாம். 3) அவரவர்களுக்கு வசதியாக அவரவர்களே வடிவமைக்க – கொஞ்சமேனும் பயிற்சி வேண்டும் – அது எல்லோருக்கும் லபிப்பதில்லை.
ஆகவே.
மறுபடியும் நன்றி.
May 26, 2018 at 17:08
Great effort..is there scope for revival of lime mortar for house building? Will it be viable now? Anybody experimented low cost model using this?
May 26, 2018 at 21:57
Lime-mortar as engg material is still good; but it has to be mined from the seas/seabed and transported; they cannot be a local solution and in any case, compared to portland/pozzalona cement(say) – they are not economical. So.
May 26, 2018 at 22:26
Okay..how about the Gfig panels..will it serve the purpose for rural housing..?
May 27, 2018 at 08:14
Sir, I don’t know what these gfig panels are. Please explain.
May 27, 2018 at 09:00
Sorry sir..it should be GRFG panels..glass fibre reinforced gypsum it seems..
May 30, 2018 at 10:00
I am absolutely ignorant about GFRG. Will do my homework to understand the material. Thanks for letting me know.