ஒரு பாவமும் அறியாத, நிரபராதிக் கவிஞரும் பெண்ணியவாதியுமான கனிமொழி – சில குறிப்புகள், விண்ணப்பங்கள்…
March 23, 2018
சரி.
கடந்த சுமார் 6 ஆண்டுகளாக இந்த 2ஜி தொடர்பான வழக்கு (பச்சைக் குழந்தையும் மகத்தான திராவிட நேர்மையாளியுமான கனிமொழியின் அழகான அன்னியச்செலாவணி மோசடி உட்பட) – ஒரு ஸிபிஐ விசேஷ நீதிமன்றத்தால், தில்லியில் விசாரிக்கப்பட்டு – கனிமொழி-ஆஇராசா கும்பலினர் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டார்கள். (டிஸெம்பர், 2017).
ஆனால் இந்த விசேஷ நீதிமன்றம் ஒரு கீழ்மட்ட (ஹ்ம்ம்ம்… படுமட்டம் என்றே கூடக் கருதலாம்) நீதிமன்றம் தான். இதன் தீர்ப்புகள் உயர் நீதிமன்றத்தாலும், பின் உச்ச நீதிமன்றத்தாலும் விசாரிக்கப்படும். அதாவது – இடைநிலைத் தீர்ப்புகள் எப்படி வருகின்றனவோ – அதற்கேற்ப, அவற்றை எதிர்கொண்டு கனிமொழி கும்பல் இல்லையானால் ஸிபிஐ + அமலாக்கப்பிரிவு இந்த வழக்கைத் தொடரும்.
ஆக – முடிவான தீர்ப்பு வர, இன்னமும் 10 ஆண்டுகளாவது ஆகும்… மகிழ்ச்சி.
-0-0-0-0-0-
ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி நாம் கொஞ்சமேனும் தெளிவாக இருக்கவேண்டும்…
…இந்த அமைப்புகள் நீதிமன்றங்களல்ல – வெறும் சட்டமன்றங்கள்தாம். சட்டத்தைப் பார்த்து, கிடைக்கும் ருசுக்களை வைத்து, முந்தையதீர்ப்புகளைக் முத்தாய்ப்பாகக் கொண்டு, நீதிபதியின் படிப்பறிவை வைத்து – வழக்குரைஞர்கள்+சட்டபதி (நீதிபதி அல்ல) போன்றவர்களின் அடிப்படை நேர்மையையும், ‘சாதுர்யத்தை’யும் பொறுத்துச் செயல்படும் நிறுவனங்கள்.
இவற்றைப் பொதுவாகவே நீதிமன்றங்கள் என்றழைப்பது என்னைப் பொறுத்தவரை, ஒரு தவறான அணுகுமுறை.
சட்டம் வேறு. நீதி என்பது வேறு. ஸ்ம்ரிதிக்கும் ஸ்ருதிக்கும் உள்ள வித்தியாசம் இவற்றிலும் இருக்கிறது.
நீதி என்பது தர்மம் தொடர்பான சமாச்சாரம். நமக்குத் தான் தெரியும் நாம் நீதிமானா, நியாயவானா, அடிப்படை நேர்மையுள்ளவரா என்பதெல்லாம். பிறரைப் பற்றி நம்முடைய அனுமானங்களும் அப்படியே. ஆனால் சட்டச் சட்டகங்கள் அப்படியல்ல.
எடுத்துக்காட்டாக – என்னுடைய செல்லங்களில் ஒருவரான கருணாநிதியை எடுத்துக்கொள்ளுங்கள் – அவரும் தம்மை தர்மவானாக நினைத்துக்கொள்ளமாட்டார், நாமும் அப்படியே அவரைத் தவறாகக் கருதிவிடமாட்டோம் – அதாவது நாம் அவருடைய திராவிடச் சொம்புகளாக இல்லாத பட்சத்தில்…
ஆனால் சட்டங்கள் நீதி(!)மன்றங்கள் பார்வையில் அவர் (இதுவரை) பெரும்பாலும் அப்பழுக்கற்றவர். இது ஒரு சிரிப்போதி சிரிப்பான விஷயம்தான். ஆனால் நடைமுறை உண்மை.
நீதிமன்றங்களில் சட்டம் என்பது – வெட்டிப்பொய் வழக்குரைஞர்கள் நீட்டி முழக்க, வெத்துவேட்டு மனிதவுரிமைக்காரர்கள் கபடியாடத்தான் பெரும்பாலும் பயன்படுகிறது.
சட்டங்கள் என்பவை, நீதிமன்றங்களைப் பொறுத்தவரையில் – வெறும், வழக்குரைஞர்களும் மனிதவுரிமைக்காரர்களும், பிற உதிரிகளும் பணம் பண்ணுவதற்காகவும் கூத்தடிப்பதற்காகவும் உபயோகப்படும் கருவிகள்.
இன்னொரு விஷயம் – அதே சமயம், நம் பாரதத்தில் நீதி பரிபாலனம் தொடர்புள்ள அனைத்து விஷயங்களும் மோசமாகவும் க்ஷீணித்தும் போகவில்லை. ஏனெனில் – இந்த நீதிமன்றங்களில்கூட தப்பித் தவறி பக்கா நீதிமான்களே நீதிபதிகளாகவும் இருக்கின்றனர். மிகவும் உன்னதமான விஷயமிது.
ஒரு அழகான உதாரணம்: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான மகாதேவன் அரங்கநாதன். இன்னமும், இவரைப்போலப் பலர் இருக்கலாம்.
இம்மாதிரி ஆசாமிகள் ‘பெய்யெனப் பெய்யும் மழை.’ நன்றி.
குறிப்பு: எப்படியும் என் வழக்கமேபோல மண்டையில் அடித்துக்கொண்டு – இவற்றை ‘நீதிமன்றங்கள்’ என்றே அழைக்கிறேன். ஏனெனில் எனக்கு மேஜிக்-ரியலிஸ்ம் பிடிக்கும்.
-0-0-0-0-0-
சரி. கடந்த சில நாட்களில், அமலாக்கப் பிரிவும், ஸிபிஐ-யும் – கீழ்மட்ட நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றன; கொஞ்சம் சந்தோஷம் தரும் விஷயம்தான் என்றாலும் இவையும் சொதப்பப்படாமலிருக்கவேண்டுமே எனக் கவலையாக இருக்கிறது.
இவை தொடர்பாக, தில்லி உயர் நீதிமன்றம், ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்பட மொத்தம் 19 சான்றோர்களுக்கு, தீராவிடப் பெருமகனார்களுக்கு – நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பார்க்கலாம், இது எப்படி விரிகிறதென்று…
இப்போது, என் கண்மணியும் மரியாதைக்குரியவருமான கனிமொழி அவர்களின் மேன்மைமிக்க சமூகத்திற்கு என் கேள்விகள்: (இவற்றைப் பற்றி, அண்மையில் தில்லி போயிருந்தபோது ஒரு உயர் நீதிமன்ற வழக்குரைஞ ஆசாமியிடமும் பேசிக்கொண்டிருந்தேன்; ஆக, அக்குறிப்புகளையும் உபயோகித்திருக்கிறேன்)
1. இந்த ஸிபிஐ நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கான நேரடி வழக்குரைஞர் தொடர்பான செலவுகள் மட்டுமே இதுவரை – குறைந்தபட்சம் சுமார் ரூ 70 கோடிகள் ஆகியிருக்கின்றன. ஏனெனில் கும்பலினர் உயர்’தர’ வழக்குரைஞர் ஆசாமிகளை நியமித்திருக்கிறீர்கள். (மற்ற செலவினங்களை – கையூட்டு/காலூட்டு, பிரயாணம், ‘சாப்பாடு’ இத்யாதிகளைக் கணக்கில் கொள்ளவில்லை)
இந்த அளவு பணம் செலவழிக்க தங்களுக்கு எப்படி அபரிமிதமான ‘நிதி’ கிடைத்தது?
2. மேற்படி வழக்காடுதலுக்காக, அடுத்த பத்துவருடங்களில், மேலதிகமாக சுமார் ரூ 150 கோடிகளாவது ‘செலவழிக்க’ வேண்டிவரும். இந்த ‘நிதி’ எங்கிருந்து வரப் போகிறது?
3. கார்த்தி சிதம்பரத்துடன் சேர்ந்து இந்தியாவை மேன்மையடையச் செய்ய, தமிழினைக் காப்பாற்ற என தாங்கள் ஆவலுடன் தொடங்கிய ‘தொழில் முறை’ வணிகங்கள் குறித்த நடைமுறைகள் – நிதிமூலங்கள்-நிர்மூலங்கள் எப்போது விசாரணைக்கு வரும்?
4. சென்னை எஸ்ஐஇடி கல்லூரிக்கு எதிரே உள்ள வோல்டாஸ் நில அபகரிப்பு (பல நூறுகோடி மதிப்புள்ள நிலம்) குறித்து ஏதாவது தன்னிலை-நேர்மை வாக்குமூல வகையறாக்கள் கொடுக்கமுடியுமா?
5. ‘த ஹிந்து’ தினசரியின் மாஜி-அடிமட்டதுணையாசிரியராக இருந்து சம்பாதித்த நிதியிலிருந்து, பின் கடுமையாக உழைத்து, சென்னைத் துறைமுகத்தின் பல்லாயிரம்கோடி கன்டெய்னர் டெர்மினல் ஒன்றின் அதிபதியானதன் அற்புதங்கள் என்ன?
6. மணல் அள்ளல் சங்கமம் மங்கமம் என, பல வகைகளில் விரியும் அள்ளல்கள் – பலப்பல ஆவிகளுக்கு அற்புத சுகமளிக்கும் அனாயாச விஷயங்கள் என – இருக்கின்றன; ஆனால் அவை கிடக்கட்டும் கழுதைகள்.
7. தன்னம்பிக்கையையும், உழைப்பின் வெற்றியையும் அதன் மெய்வருத்தக்கூலிதரும் பண்பையும், நேர்மையின் மாண்பினையும் போதிக்கும் உங்கள் சுயசரிதை எப்போது வெளிவரும்?
தொடர்ந்து களப் பணிப்பிணி செய்ய, சமூக நீதி காக்க, தமிழைப் போற்ற, திராவிட அரசியலின் உச்சோதியுச்சத்தில் பரபரவெனப் பறக்க – உங்களுக்குப் பணிவான மகிழ்ச்சி கலந்த ஆசிகள்.
என்னுடைய மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால் – நீங்கள் பிற பல பணிப்பிணிகளில் ஈடுபடும்போது – உங்களுக்கு அதற்குத் தேவையான நேரம் இல்லாமற்போய் — தமிழ் இலக்கியத்தையும் கவிதையையும் ஒருகை பார்க்காமல் இருப்பீர்களல்லவா?
நன்றி.
March 23, 2018 at 11:27
” ராஜா கையை வெச்சா ராங்கா போனதில்லை! வித் ஹிந்து N.ராம்” -சமர்ப்பணம் – https://www.minnambalam.com/k/2018/03/22/36
March 23, 2018 at 11:40
ஆக, இந்த அற்பர்கள், ‘ராஜா கைய வெச்ச’தை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே கறைபட்ட வேட்டிகள் அவிழ்ந்து விடலைத் தற்குறிகள் தென்படும் காலமும் வரும்.
எல்லாம் சரி, பாவம், ஏன் அந்த சாதிக் – ஆஇராசாவின் சிறுபான்மை உதவியாளர் – தூக்கில் தொங்கினாராம்? ஒரு நகைச்சுவைக்காக இருக்குமோ?
இந்த என்.ராம் முகம், ஏன் பேஸ்தடித்துப் போயிருக்கிறது?
March 23, 2018 at 13:35
http://www.fakingnews.firstpost.com/politics/raja-confirms-new-book-2g-saga-unfolds-will-sold-first-come-first-served-basis-25086 இதையும் படித்து இன்புறவும்
March 23, 2018 at 16:20
இன்புற்றேன். :-)
June 30, 2018 at 20:36
[…] […]