கம்பர் காலத்தில் வாசகர் கடிதம்

July 20, 2017

அண்ணா! பேராசானே!! குருவே!!!

கம்பர் காலத்திலும் வாசகர் கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள் என்பதை என் நண்பர் நம்பவே மாட்டேனென்கிறார். ஆனால் அச்சமயத்திலும் அது இருந்துகொண்டிருந்தது என உங்கள் எழுத்துகளில் படித்ததாக நினைவு. இது உண்மைதானே? கொஞ்சம் விளக்கமுடியுமா?

தூக்கம் வராதபோதெல்லாம் உங்கள் புத்தகத்தைத் தான் படிப்பேன். உடனடி பலன் கிடைக்கிறது. எப்படி சார் இப்படியெல்லாம் எழுதுகிறீர்கள்?

பிரமிப்புடன்,

ராக்கமுத்து மாரியப்பப் பூவண்ண பூபதிப் பெருமாள்

-0-0-0-0-0-

அன்புள்ள ராமாபூபூபெ,

உங்கள் இரு கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் கொடுக்கிறேன்.

முதலில் கம்பன். இவரைப் பற்றிச் சுமார் 150 வருடங்களாகத் தொடர்ந்து எழுதியும் விவாதித்தும் உரையாடியும் படித்தும் கேட்டும் உணர்ந்தும் அறிந்தும் தெளிந்தும் புரிந்தும் செரித்தும் வருகிறேன் – என்னளவுக்கு யாரும் முனைந்து  கம்பனின் பெருமையை இப்படி இந்த அளவுக்குப் பரப்பியதாக எனக்குத் தெரியவில்லை.

…இவ்வாறான என்னுடைய முயற்சிகளானவை அவருக்கு உவே சாமினாதைய்யரை நினைவு படுத்துவதாக இன்னொரு வாசகர் இன்னொரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இது ஒரு சரியான அவதானிப்பாகவும் இருக்கலாம். எனக்குப் பெருந்தன்மையும் அடக்கவுணர்வும் கூச்சமும் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. ஆகவே என் பெருமைகளைப் பற்றி நானே பேசி எழுதுவதில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

இந்தப் பின்புலத்தில் நான் கண்டுகொண்ட ஒரு உண்மை என்னவென்றால் – உங்கள் நண்பர், நான் எழுதிய விஷயத்தை நம்பவில்லை. ஏனெனில், இது சராசரிகளின் காலம். இங்கு மட்டுமல்ல, மங்கோலியாவிலும் அப்படித்தான்.

2011 வாக்கில் மங்கோலிய அரசாங்கம் எனக்குப் பிரத்தியேகமாக விமான டிக்கெட்டை அனுப்பி என்னை அங்கு வரவழைத்துக் கொண்டபோது – அங்கு இரண்டு தமிழ் நாட்டாரியல் ஆராய்ச்சியாளர்கள் என்னிடம் பேசி என் ஆலோசனைகளைப் பெற்றார்கள். கொஞ்சம் சோகம்தான். தமிழ் வழக்காற்றியலின் நாட்டாரியல் கூறுகள், கருணாம்ருத சாகரம், அலென் டுண்டெஸ் பற்றிப் பேசினார்கள், என் கருத்தை அறிந்தார்கள், மேன்மையுற்றார்கள்; மேலும் – தமிழ் எழுத்தாளர்களின் வாசகக்கடிதவிலக்கியம் பற்றியெல்லாம் என்னதான் உள்ளொளி பொங்க மங்கோலியாவில் பேசினாலும் எடுபடவேமாட்டேனென்கிறதென்று புலம்பினார்கள். “ஒரு சராசரி மங்கோலியன் ஓட்டகத்தையும் குதிரையும் புல்வெளிகளில் மேய்ப்பதைத்தான் அதிக பட்ச ஆன்மிகப் பங்களிப்பாகக் கருதுகிறான். சலிப்பாக இருக்கிறது.”

இந்த மங்கோலியச் சராசரிகள் எப்போது தான் சமகால தமிழிலக்கிய உச்சங்களை, நாட்டாரியலின் அரிய கூறுகளை அறிந்துகொள்ளப் போகிறார்கள்?

ஆனால் எந்தக் கலாச்சாரத்திலும் இலக்கியவாதிகள் தாம் பண்பாட்டின் ஆன்மாக்கள். கெட்டாலும் ஆன்மாக்கள் ஆன்மாக்களே. அவர்கள் மட்டுமேதாம் சமூகத்தின் மனச் சாட்சிகள். அற விழுமியங்களைக் குறித்த தொடர்ந்த தேடலில் இருப்பவர்கள். இவர்களில்லையேல் மங்கோலியாவும் இல்லை மங்பம்பர யாவும் இல்லை.

ஆன்மாவை ஆஃப்மாவாக்க – எனக்கு நன்றாகத் தெரிந்த சில வெறுப்பாளர்களும் கசப்பாளர்களும் விவாதிக்க முயலலாம். ஆனால் ஆன்மாவுள்ள ஆமைகள்தாம் அந்த முயல்களை வெல்லும் என்பது ஒரு தொன்மக் கதை அல்லவா?

உங்கள் கேள்விக்கு வருகிறேன். இதே கேள்வியைக் கடந்த 10 வருடங்களில் 100 முறை கேட்டபோதெல்லாம் சலிக்காமல் பதில் சொல்லியிருக்கிறேன். இப்போது 101வது முறை. அடுத்தது 102வது முறை.

சரி. உங்கள் கேள்வியை, என் வழக்கம்போலவே, நான் மூன்று வகைகளில் புரிந்து கொண்டு அணுகுகிறேன்:

முதலில், நம் தமிழகப் பாரம்பரியம் வழியாக:

சடையப்ப வள்ளல், கம்பனுக்கு நல்கை வழங்கியதுக்கு ஃபோர்ட் ஃபௌண்டேஷன் வழிமுறைதான் காரணம் என்பதே நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? சடையப்பம் என்பதே தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நூட்ல்ஸ் வகை என்பது எவ்வளவுபேருக்குத் தெரியும்? சடை சடையாகப் பிரிந்த அரிசிப் பணியாரமான சடையப்பத்தை ஜிஎஸ்டி கொடுக்காமல் விற்பனை செய்து ஈட்டிய ஊழல் செல்வத்தை (இந்த அத்தையின் மாமா பையன் தான் வால்மீகி) மேற்படி ஃபௌண்டேஷன் மூலமாக கனிமொழி ராஜா போல வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சி புல்லுக்கும் ஆங்கே பொசிந்து வந்ததுதான் கம்பராமாயணம்.

கம்பராமாயணத்தில் சடையர் வகை அங்கதச் செய்திகள் கிஷ்கிந்தா காண்டத்தில் இருப்பதை அவதானித்திருப்பீர்களே!

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ எனும் சொல்லாடலைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; ஆனால் இதன் உண்மையான, சரியான வடிவம்: ‘கம்பன் வீட்டில் கடிதமும் கடுப்பாகும்’ என்பது தான் – இதுதான் காலவாக்கில் மருவி உருவப்பட்டு, தறிகெட்டுக் கட்டுத்தறியாகிவிட்டது. அதாவது, ஒரு சமயத்தில், அவருக்கு எக்கச்சக்கமான வாசகர் கடிதங்கள் வந்தபோது கம்பர் கடுப்பாகி வயிற்றுக் கடுப்பினால் அவதிப் பட்டிருக்கிறார். (ஆதாரம்: பேரறிஞர் ஆஇரா வேங்கடாசலபதி எழுதிய ‘அந்தக் காலத்தில் ராமாயணம் இல்லை’)

இரண்டாவது பார்வை – மேற்கத்திய ஊடுபாவு கொண்டது: (இந்த ஊடுபாவு என்பது பாவுபாஜி எனும் மஹாராஷ்டிரப் பணியாரத்தின் மாமா மகன்; இந்த பாவுபாஜியானது  பேஷ்வா பாலாஜி பாஜிராவ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதையும் சிலகாலம் முன்பு சில சமையல் கலை விற்பன்னர்களுடன் பேசும்போது திடீரென்று கண்டுபிடித்துச் சொன்னேன் என்பதும் நினைவுக்கு வருகிறது)

…புதிய ஏற்பாடென்பதே யேஸ்ஸுவின் சீடர்கள் அவருக்கு எழுதிய புல்லரிப்பு வாசகர் கடிதங்களின் தொகை நூலல்லவா? இப்படிப்பட்ட ஏற்பாடுகள் பண்டைய காலத்திலிருந்தே பிரபலமாக இருப்பவை எனும் என் சீரிய கருத்தை என் வீட்டிற்குச் சென்ற நூற்றாண்டில் வந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸலுடன் விவாதித்தபோது அவர் ஆச்சரியத்துடன் கண்ணீர் மல்க என் காலடியில் உடனடியாக டமாலென்று விழுந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. அது கிடக்கட்டும் கழுதை.

ஏன், இஸ்லாமின் மறையான குர்ரானே,  மொஹம்மது நபி சார்பில் அவருடைய சீடர்கள் அல்லாவுக்கு எழுதிய வாசகர் கடிதங்களின் பகுப்புசெய்யப்பட்ட தொகுப்புகளின் தொகை வடிவம்தானே? முரணியக்கங்களின் முரண்டுபிடித்தல் தானே! என் பனிரெண்டாம் நூற்றாண்டுப் பேராசான் இப்ன் ரஷீத் சொன்னது போல அதெல்லாம் தஹஃபத் அல்-தஹஃபத் தான்! குழப்பவாதத்தின் குழப்பவாதமே!

(ஆச்சரியக் குறி ஸ்டாக் தீர்ந்துபோய்விட்டது. இனிமேல் அதை உபயோகிக்க முடியாது. மன்னிக்கவும்)

மூன்றாவது கோணப் பார்வையாக:

கடிதம் என நான் சொன்னது –  வாழ்க்கையைட் டோட்டலாக வெறுத்த வாசகர்கள் தம் மூச்சைப் பிடித்துக்கொண்டு (‘தம்’), பற்கள் நற நறக்க எதையாவது ‘கடி’ப்பது பற்றி.

கடி + தம் = கடிதம்.

ஆக, வாசகர்கள் கடிதம் என்றால் – அவர்களுடைய பொறுமை தமிழ் இலக்கியத் தீவிரவாதிகளால் மிகவும் சோதிக்கப்பட்டதால் அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்பதைச் சித்திரிப்பதாகவும் இருக்கலாம்.

…இப்படியெல்லாம் நான் உள்ளொளி பொங்கும் நேர்மையுடன் எழுதுவதைக் கண்ட கழுதைகள் கிண்டல் செய்யலாம்.

ஆனால், இதுவரை மண்டையில் அடித்துக்கொண்டு படித்திருக்கும் நீங்கள், நான் எதை எழுதினாலும் உடனே அது அறமும் விழுமியமும் வழியும் சத்தியமும் ஜீவனுமாகியே தீரவேண்டும் என்கிற அடிப்படை உண்மைகளைச் சந்தேகத்திற்கில்லாமல் உணர்ந்தவர் அல்லவா?

-0-0-0-0-0-0-

சரி. இப்போது, தூக்கம் தொடர்பான உங்களுடைய இரண்டாம் கேள்விக்கு வருகிறேன்.

நான் எதை எழுதினாலும் என்னுடைய முதல் வாசகர் என் மனைவியாகத்தான் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம். (சிறுகுறிப்பு: விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது) பின்னர் என் மகளும் மகனும்.  (ஏனோ தெரியவில்லை, இவர்கள் என்னை மதிப்பதே இல்லை. இந்தத் தலைமுறையின் தாங்கொணா வீட்சியும் பாரம்பரியங்களுக்கு மரியாதையே கொடுக்காத தன்மையும் எனக்குத் திகைப்பைத் தொடர்ந்து கொடுக்கின்றன, தற்குறி ஜென்மங்கள்…)

உன்னதமான படைப்பாற்றலின் உச்சங்களைத் தொடர்ந்து எட்டி உதைத்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய எழுத்தாளனின் முதல் எதிரிகள், அவன் குடும்பத்தினர்தாம். அறிவிலிகள்.

ஹ்ம்ம்ம்… இவர்களைத் தூங்கச் செய்வதற்குத்தான் நான் எழுதவே ஆரம்பித்தேன். ஏனெனில் – இவர்கள் முழித்துக்கொண்டால் அவர்கள் எனக்குக் கொடுக்கும் ரோதனையைத் தாள முடியாது. பின், நான் முழித்துக்கொண்டிருக்க நேரிடும்.

மேலும், தலையணை அளவுக்கு எழுதினால்தான் – அதனைத் தூக்கம் வருவதற்கும் அது வந்தபின் தலையணைபோலவும்  அவர்கள்  2-இன்-1 போல பயன்படுத்தமுடியும் என்பதைக் கண்டுகொண்டேன்.

ஆகவே, என் புத்தகங்களைப் படித்தால் உடனே உங்களுக்குத் தூக்கம் வருவது என்பது –  முன்னமே முறையாக யோசித்து, வடிவமைக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடர்ந்து வாசகர் கடிதம் எழுதவும். நன்றி.

பேராசான் வெ. ராமசாமி

— 

 

21 Responses to “கம்பர் காலத்தில் வாசகர் கடிதம்”

  1. Anonymous Says:

    FAKE LETTER. ALL FAKE. YOU NEVER GONE TO MANGOLIA. YOU ARE CHEATER


    • ஞானக்கொழுந்து அவர்களே!

      எப்படி இதனைப் புலனாய்வு செய்தீர்கள் எனப் புரியவில்லை.

      எதுஎப்படியோ, நீங்கள் ஒரு கேபிடலிஸ்டாக இல்லாமல் ஒரு சாதா வாசகர் கடிதத்தை எனக்குத் தட்டிவிட்டால், உடனடியாக விரிவான பதிலை அனுப்பி அதையும் பிரசூரிக்கிறேன்.

      நன்றி.
      பின்குறிப்பு: உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து களப்பணியாற்றினால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உங்களுக்கு எதிராகப் போராடித் தழைத்தோங்க வாய்ப்புகள் அதிகம். இது நல்லவிஷம் தான்.

      • ஆனந்தம் Says:

        அங்கங்க மானே தேனே மாதிரி ஸ்மைலி அள்ளித் தெளிக்காவிட்டால் நகைச்சுவையை நகைச்சுவை என்று புரிந்து கொள்வது தமிழனுக்குக் கடினம். இனிமேல் பகடி எழுதினால் முதல் நாளே எச்சரித்துவிடவும்.


      • ​ஆனால் அவர் ஒரு ஆங்கிலேயர். கேபிடலிஸ்ட். மன்னித்துவிடவும்.

      • ஆனந்தம் Says:

        ஆங்கிலேயர் என்றால் இந்தப் பதிவை எப்படிப் படித்தார் என்று அடுத்த ஞா.கொ. கேட்கக்கூடும்.

        ஆசானுக்கு எழுதப்படும் வாசகர் கடிதங்கள் fake என்றொரு குற்றச்சாட்டு பரவலாகக் கிளம்பியதால் ஆசான் இப்போதெல்லாம் வாசகர் கடிதத்துடன் அவர்களது ஃபோட்டோவையும் பிரசுரிக்கிறார். நீங்கள் அந்தப் பழக்கத்தைப் பின்பற்றத் துவங்கினால் வாசகர் கடிதங்கள் பெருக வாய்ப்புள்ளது. (ஆனால் ‘அழகிய சிங்கர்’ பாணியில் எதுவும் முயல வேண்டாம். துப்பறிவாளர்கள் உங்களை Cheater என்று இனங்காணக்கூடிய அபாயம் உள்ளது.)


      • ​குருவே! மன்னிக்கவும்! எனக்கு இந்த ப்ரொடொகோல் பற்றிய ஞானமில்லை.

        அடுத்தமுறை வாசகர் கடிதத்துடன் அவருடைய புகைப்படத்தையும் பதிப்பிக்கிறேன்.

        எனக்கெதுக்கு வம்பு.

        நன்றி.

  2. Mohamed Says:

    வயித்துல பட்டாசு கொளுத்திட்டீங்களே சார்.இப்படி non stop ஆ சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு.வாழ்க உங்கள் நகைச்சுவை உணர்வு.


    • யோவ் மொஹெம்மத்,

      ஒரு சோகக் காவியத்தை எழுதியிருக்கிறேன் – நீங்கள் பாட்டுக்குச் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களே!

      தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் அல்லல்களையும், அவர்கள் தங்களை நிறுவி நிரவி ஒரு பேரியக்கமாக்கிக்கொள்ள படும் பாடுகளையும் கோடிகாட்டியிருக்கிறேன்; ஆனால் நீங்கள் கொஞ்சம் கூடப் பரிவோ புரிதலோ இல்லாமல் இப்படி வெட்கமற்று இருக்கிறீர்களே?

      உங்களுக்கு இது தகுமா? முன்னேபின்னே வாசகர் கடிதம் எழுதியுள்ள அனுபவம் இருக்கிறதா?

      சலிப்பாக இருக்கிறது. அடிக்கடி பின்னூட்டம் போடவும்.

      நன்றி.

  3. Kannan Says:

    கனம் கோர்ட்ட்டார் அவர்களே, அந்த கேசை உடனே முடிவுக்கு கொண்டு வரவும்.

    தொல்லை தாங்கமுடியலை !!!!

  4. Kannan Says:

    (சிறுகுறிப்பு: விவாகரத்து வழக்கு கோர்ட்டில் இருக்கிறது)

  5. Sivakumar Viswanathan Says:

    ராம்
    எல்லா மங்கோலியனும் ஒரு சராசரி மங்கோலியனிலிருந்துதான் பரிணாம வளர்ச்சிதை மாற்றம் அடைகிறான்தான் இல்லையா? அந்த பரிணாம சுழர்ச்சி வாக்கியங்களாக உங்களைப்போன்றவர்களால் எப்படி குழப்பியடிப்படுகின்றன என்பதற்கு உதாரணம் கீழ்க்கண்ட வரிகள்.

    “ஒரு சராசரி மங்கோலியன் ஓட்டகத்தையும் குதிரையும் புல்வெளிகளில் மேய்ப்பதைத்தான் அதிக பட்ச ஆன்மிகப் பங்களிப்பாகக் கருதுகிறான். சலிப்பாக இருக்கிறது.”

    இந்த வரிகள் மங்கோலிய மொழியில்…

    “Монголын тал хээр ottakattaiyum meyppataittan дээр дундаж морь хувь нэмрээ оруулсан хамгийн сүнслэг үзэж байна. Энэ нь маш уйтгартай байна. ”

    இதன் உண்மையான அர்த்தம்…

    “புல்வெளிக் ottakattaiyum மிகவும் ஆன்மீக சராசரி குதிரை meyppataittan மீது பங்களிப்பு கருதப்படுகிறது. இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.”

    Ottakattaiyum என்பது கம்பர் (“ஒத்தகட்டை”யின் தழுவல்) – meyppataittan (மேய்ப்பன்). அதாவது சாமானிய முரடர்களான மங்கோலியர்கள், குதிரைமேல் ஏறி ஆன்மீக புல்வெளியை மேய்ந்தால், அவர்களும் கம்பர்களாகலாம். இது கூட தெரியாத அறியாமை கஷ்ட்டமாக இருக்கிறது.

    இதை நீங்கள் நீராடி’யாகவே சொல்லியிருக்கலாம். அதை தடுப்பது உங்கள் இல்லுமினாட்டி சதியின் ஒரு பகுதி.

    01001111 01001011?


    • ​​யோவ் சிவகுமாரூ!

      எவ்ளோ பேராசானுங்கோ இப்டீ புற்றீசல் மாறீ கெளம்பிக்கீறீங்கோ? படுபீதியாக் கீதே!

      நெசம்மாத்தான் கேக்றேன், வொங்க் வூட்ல வேற வேலயே கெட்யாதாய்யா வொங்க்ளுக்கு?

      நடுங்கிக்கொண்டே,

      ரா.

      • SivaKumar Viswanathan Says:

        If you trouble the trouble, the trouble will trouble you (From a Telugu film…Pray no law suit for plagiarism)

  6. gopi Says:

    ஐயா நீவிர் தமிழ் இலக்கிய உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உன்னத எழுத்தாளரை மகாமகோ கிண்டல் அடிக்கிறீர் என்பது தெரியாமல் இல்லை இதற்கு அவரின் ரசிக சீட குஞ்சாமணிகளின் கடும் எதிர்விளைவை சந்திக்க நேரிடும் என்பது நீங்கள் அறிந்தது தானே அல்லது அவரே கூட அப்படி ஒரு கடிதத்தை வேறு பெயரில் எழுதி தன் தளத்தில் தானே வெளியிட்டு கதிகலக்க கூடும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s