aao77ckn
May 31, 2016
கடந்த சில நாட்களாக ராஜஸ்தானின் ஒரு வறண்ட டொக்கில் ஆசிரியர் பயிற்சி முகாம் ஒன்றில் வேலை.
சிலபல கணிநி-சார் கற்பித்தல்களுக்கான முஸ்தீபுகள் – அறிவியல், கணிதம் என. கணிநிகள் எப்படி நம் நண்பர்கள், அவற்றிடமிருந்து வேலை வாங்கிக்கொள்வது எப்படி, அவை கொடுக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்வது எப்படி என்றெல்லாம் விரிந்தன/விரிகின்றன அவை… பயிற்சிமுகாம் பெரும்பாலும் ஹிந்தியில் தான் நடந்தது. ஆகவே கொஞ்சம் தடுமாறிவிட்டேன். ஏனெனில் ஹிந்தி கலைச்சொற்கள் பலவும் என் மண்டையில் இல்லை. ‘ஏக் கான்வ் மே, ஏக் கிஸான் ரகுதாத்தா’ பாக்கியராஜ் பலமுறை நினைவுக்கு வந்தார். :-(
காலை 3.30க்கு வேலை ஆரம்பித்தால், ஓட்டமோதிஓட்டம்! மாலை 8.30 வரை ஓடுகிறது. மூன்று நாட்களுக்கு மேல் என்னால் இந்த மண்டைகாயும் வேலையைச் செய்யமுடியவில்லை.
தினமும் இரண்டுவேளை தால்சாவல் சாப்பிட்டும் படுஇனிப்பான டீ குடித்தும் மேலும் அலுத்துவிட்டது. இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன. அகாலமான பயணங்கள் வேறு. மகாமகோ அலுப்பு. எப்படிக் கடைந்தேறப் போகிறேனோ தெரியவில்லை. என் நகைச்சுவை(!) உணர்ச்சிதான் என்னைக் காப்பாற்றவேண்டும்!
-0-0-0-0-0-0-0-
…மாணவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், சிலர் 50+. அனைவருக்கும், கற்றுக்கொள்வதில் அவ்வளவு ஆர்வம்.
தயங்கிக்கொண்டேவந்து, ஒரு வயதானவர் இன்று என்னிடம் சொன்னார் – அய்யா, உங்களைப் போலல்லாமல் எனக்கு வயதாகியிருக்கலாம், ஆனால் மனதளவில் நான் இளம் மாணவன் தான். எனக்கு வகுப்பு பிடித்திருந்தது. நிறைய கற்றுக்கொண்டேன். நன்றி.
அவர் வயதைக் கேட்டால் அவருக்கு 45 ஆகிறதென்றார். அய்யோ என்று சொல்லி — அய்யா, உங்களை விட நான் பெரியவன். நரைத்திருக்கும் மீசையையும் தாடியையும் மழித்துவிட்டால், 40+ வயதானவுடன் எட்டிப்பார்த்து அமோகமாக வளரும் தொப்பையும் இல்லையென்றால், ஒருவன் இளைஞனாகக் கருதப்படுவான் போலும் — என்றேன்; இருவரும் சிரித்துவிட்டோம்.
-0-0-0-0-0-0-0-
இப்பயிற்சியில் – சில அதிமுனைப்புள்ள இளைஞர்கள் இருக்கிறார்கள். தாரிக் கான், பஜ்ரங் ஸிங் பன்வர், யாமீன் அஹெம்மத், ஸாகிர் அலி, ராம் நாராயண் ஸிங், ராம்ஜீ குல்லாரி, பீர் ப்ரதாப் சௌஹான், ஷ்யாம் ஷர்மா எனப் பலப்பலர் (நினைவில் இருக்கும் பெயர்களை எழுதியிருக்கிறேன், ஒரு ஞாபகச் சக்திப் பயிற்சிக்காக!).
இவர்கள் படுபுத்திசாலிகளும் கூட. இவர்களை ஆசிரியர்களாகப் பெறப்போகும் மாணவர்கள் பாக்கியசாலிகள்தான்.
-0-0-0-0-0-0-
சரி. இந்த ஆசிரியப் பயிற்சி மாணவர்களுக்கு என ஒரு சமூகத்தை (‘ஸமுதாய்’) உருவாக்கி – அவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள ஒரு இணையதளம் கட்டியெழுப்பியுள்ளோம். அதில் அவர்களுக்கு ஒரு அக்கௌன்ட் ஆரம்பித்து அவர்களுக்கு அதன்மூலமாகப் பயிற்சி கொடுக்கத் தொடங்கினோம்.
அதில் அனைவருக்கும், முதல் உபயோகத்திற்காகவென, ஒரு பொதுவான கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) கொடுத்தோம். அதுதான் aao77ckn. வேண்டுமானால் இதனை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும் சொன்னோம்.
வழக்கமாக இந்த மாதிரி இணைய எழவுகளில் – வசதியாக இருக்கட்டுமே என்று மலினமாக – வெல்கம்123, பாஸ்வேர்ட் என்றெல்லாம் இந்த பாஸ்வேர்ட் எழவைக் கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் கொடுத்தது இந்த மாதிரி aao77ckn.
தாரிக் கான் கேட்டான் – இது என்ன, இதற்கு என்ன பொருள்?
நான் சொன்னேன் – பாய்ஸாஹேப், கடவுச்சொல்லை ஆங்கிலத்தில் படிக்காமல் ஹிந்தியில் படியுங்களென்று.
அவன் புத்திசாலி. உடனே புரிந்துகொண்டுவிட்டான். பஜ்ரங் ஸிங்கும் அப்படியே! இருவரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள்.
“आओ साथ् साथ् सीखें…” (ஆவோ, ஸாத் ஸாத் ஸீகேன் = வா, நாமெல்லாம் சேர்ந்து கற்றுக்கொள்ளலாம்!)
பின்னர் தாரிக் கேட்டான் – ஏன் ஸீகேன்? (=सीखें = கற்றுக்கொள்ளலாம்) – ஸீகோ (=सीखो -=கற்றுக்கொள்) என்றுதானே இருக்கவேண்டுமென்று.
நான் சொன்னேன் – எந்த சந்தர்ப்பத்திலும் யாரிடமும் கற்றுக்கொள்ளவேண்டியது என ஏதாவது இருக்கும். மேலும், இப்பயிற்சி முகாமில் நாம் அனைவரும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோமல்லவா? எவ்வளவு புதிய ஹிந்தி கலைச்சொற்களை நான் கடந்த சில நாட்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?
மேலும், இந்த இணையதளமே நாமெல்லாம் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளத்தானே இருக்கிறது. ஒரு வகுப்பில் மாணவன் எவ்வளவு கற்றுக்கொள்கிறானோ, அம்மாதிரி ஒரு தேர்ச்சிபெற்ற ஆசிரியனும் கற்றுக்கொள்வான்.
அவனுக்குத் திருப்தியாகவில்லை.
-0-0-0-0-0-0-0-
இப்போது ஒரு விஷயம்: நான் அவ்வப்போது முடிந்தவரை நம் தமிழக அரசியல் நிலவர எழவையும் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பலருக்கு இந்த விஷயங்கள் மிகவும் அதிசயமாக இருந்தன.
அவர்களூர் முதலமைச்சர் (=வஸுந்தரா ராஜே ஸிந்தியா) தங்கமானவர், ராஜஸ்தானின் முன்னேற்றம் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்தார்கள். தமிழகத் திராவிட நூதன ஊழல் என்பது அவர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது. (அவர்களுக்கு, தமிழக அரசு கேபிள் டீவி – சுமங்கலி கேபிள் விஷன், கருணாநிதி, தயாநிதியின் அரசு செலவில் வூட்டுக்குள்ளாறவே அமோக டெலிஃபோன் இணைப்பகம் என்றெல்லாம் சொல்லியிருந்தேன் வேறு!)
இந்தப் பின்புலத்தில் தாரிக் கேட்டான் – ஏன், ‘தமில்நாட் கர்னானிதி’ கிட்டேகூட ஏதாவது கற்க இருக்கிறதா என்ன?
நான் சொன்னேன்: ஆம் இருக்கிறது. அது அவருடைய குடும்பப்பாசம். குடும்பம்தானே நமக்கெல்லாம் முதல் விஷயம்? அவர் குடும்பத்தின் வளர்ச்சிக்கு – மற்ற எதனையும், எல்லாவற்றையும் தாரை வார்ப்பதுதான் அவரது கல்யாணகுணம். குடும்பம்தானே பாரதத்தின் அடிப்படை சமூகக்கூறு? அதைத் தானே அவர் போற்றிப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார்?
அவர்கள் சிரித்துவிட்டார்கள்.
ஆம்! aao77ckn!! आओ साथ् साथ् सीखें!!!
:-)
சரி. தூங்கப் போகவேண்டும். AaO77soN. ;-)
June 20, 2016 at 11:23
தாரிக் கான், யாமீன் அஹெம்மத், ஸாகிர் அலி, //
இவர்கள் எல்லாம் ராஜஸ்தானிய பார்பான்களா ??
இதை எல்லாம் எவனும் படிக்க மாட்டான் .. அப்புறம் பொங்க வேண்டியது .. !!