நம் சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் அற்புதம், அதற்காக உதவவேண்டிய நமது கடமை…

June 2, 2016

(எனக்குத் தற்போது சுமார் 70 நிமிடங்களுக்கு இணைய இணைப்பு, ஒரு லேப்டாப் எழவுடன் கிடைத்திருக்கிறது; ஆகவே இந்தப் பதிவை அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்; ஆகவே, என் தட்டச்சுத் தவறுகளை மன்னிக்கவும்!)

…குர்திஸ்தான் (அல்லது கர்டிஸ்தான்) என்பது எப்போதோ முதல் உலகப்போர் முடிந்தபின்னர் கைகூடியிருக்கவேண்டிய விஷயம். ஆனால் – தேசம் தேசியம் தேசியஇனப்பிரச்சினை எனவெல்லாம் மானாவாரியாக உளறிக்கொட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த காலகட்டத்திலும் மகாமகோ ஸோவியத் ருஷ்யா கூட இதனை ஒரு பொருட்டாக நினைக்காமல் விட்டது ஒரு வரலாற்றுச்சோகம்.

ஏனெனில் இம்மாதிரி பகுப்புகளுடன் மிகமிக முழுமையாகவே குர்தி மக்கள்திரளைப் பொருத்திப் பார்த்திருக்கமுடியும்; ஆனால் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் சேர்ந்துகொண்டு துருக்கியின் ஆகாத்தியத்துக்கு அடிபணிந்து – மனம்போன போக்கில் இராக் ஸிரியா இரான் அர்மேனியா எனப் பிரித்துவிட்டார்கள். துருக்கி தன் பங்குக்கு ஏகத்துக்கும் குர்திஸ்தான் நிலப்பகுதியை ஏப்பம் விட்டது. முதல் உலகப்போரில் நேசநாடுகள் (=அல்லைஸ்) சார்பாக ஈடுபட்டு ரத்தம் சிந்திய மகத்தான மக்களுக்கு அதே நேசநாடுகள் (+ஸோவியத் ருஷ்யா) கொடுத்த கொடைதான் இந்தத் துரோகம்.
Screenshot from 2016-06-02 18:08:04
குர்திகளுடைய பின்புலம் என்பது  வரலாற்றுப் பழமைமிக்கது; அவர்களுடைய நெடிய பாரம்பரியம் என்பது மிகக் காத்திரமான ஒன்று. அவர்களுடைய திரளில் சுமார் 95% பிற்காலங்களில் அடக்கியொடுக்கப்பட்டு இஸ்லாமுக்கு மாறினாலும், அவர்களுடைய இஸ்லாம் என்பது பன்முக, நவீன, மிகமுற்போக்கானதும் அழகானதுமான இஸ்லாம். குர்திகளில் ஸுன்னி முஸ்லீம்களும் உண்டு, ஷியா முஸ்லீம்களும் உண்டு, யேஸீதிகளும் உண்டு. ஆனால் இவர்களெல்லாரும் தங்களை குர்திகளாக வரித்துக்கொண்டு ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்கிறார்கள்.

இவர்களுடைய குர்தி மொழி (=குர்மாஞ்ஜி), மிகக் காத்திரமானது. இவர்கள் சாதா முஸ்லீம்கள் அல்லர். ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு அநீதி எனக் கொர்-ஆனை மேற்கோள் காட்டுபவர்கள் அல்லர். அதேசமயம் சுயவெறுப்பிலும் ஈடுபடுபவர்களல்லர்.  இவர்கள் இஸ்லாமிய வெறியர்களின் எதிரிகள். கழுத்தறுப்பு ப்ரேண்ட் இஸ்லாம் இவர்களுக்கு ஒத்துவராது – ஆகவே தங்கள் கழுத்துகளை ஈந்துமேகூட, காஃபிர்களைக் காக்கும் பரந்தமனப்பான்மையுடையவர்கள்.
Screenshot from 2016-06-02 18:09:50
…இரானாலும் இராக்காலும் ஸிரியாவாலும் துருக்கியாலும் ஸவுதிஅரேபியர்களாலும் (இப்போது இஸ்லாமிக் ஸ்டேட் குண்டர்களாலும்) தொடர்ந்து மிகஅநியாயமாக வேட்டையாடப் பட்டுவந்தாலும், அவர்கள் பிற நாடுகளில் பதில் தாக்குதல்கள் நடத்துவதை முடிந்தவரை தவிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அப்படியே பதில்தாக்குதல்கள் இருந்தாலும் அவை (நம்மூர் நக்ஸலைட் அரைகுறைகள் போலல்லாமல்) ஆயுதம் தரிக்காத பொதுமக்களை நோக்கி நடத்தப்படவில்லை. (எர்டொகனின் துருக்கி அரசானது, இன்றுகூட -பலப்பல குர்தி கிராமங்களின்மீது நகரப்பொதுமக்கள்மீது, அவர்களுடைய குடியிருப்புகள் மீது அநியாயத் தாக்குதல்கள் நடத்தியிருக்கிறது; குழந்தைகளையும் பெண்களையும் கொன்றுகொண்டிருக்கிறது)

இவர்கள்  – மெய்யாலுமே ஜனநாயக வாதிகள். பலர் படிப்பாளிகள், உழைப்பாளிகள், போர்வீரர்கள் (வெறும் திராவிடத்தனமானப் போராளிகள் அல்லர்!), தங்கள் சுய நிர்ணயவுரிமைக்காகத் தொடர்ந்து போராடுபவர்கள், பலவிதங்களிலும் அழகானவர்கள்;இவர்களின் ஒருசிலரை என் நண்பர்களாகப் பெற்றது என் நல்லூழ்தான்.

என்னைப் பொறுத்தவரை – இவர்கள்தாம் முஸ்லீம்களுக்கு, இஸ்லாமுக்கு முன்னோடி எடுத்துக்காட்டுகளாக இருக்கவேண்டும். குர்திகளின் ஆன்மிக பலமும், தைரியமும், பண்பும் எனக்கு மிகுந்த ஆச்சரியம் தருபவை.

நாமும் நம்மூர் முஸ்லீம்களும் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய – ஏனெனில், நம்மிடம் மதிக்கத்தக்க முஸ்லீம் தலைவர்கள் இல்லை. வெறும் வெறுப்புவாத முல்லாக்களும், உலீமாக்களும், ஓவைஸிகளும், ஜவாஹிருல்லாக்களும்தான் இங்கு ஸாஸ்வதம்… (நான் முன்னமே ஒருமுறை எழுதியதுபோல் – இருகுவே, இஸ்ரேல், இந்தியா, குர்திஸ்தான், அமெரிக்கா என ஐந்து ஜன நாயக மக்கட்திரள்களும்/தேசங்களும் சித்தாந்த ரீதியில் இணைந்து பணியாற்ற முடிந்தால், அது உலகத்துக்கு ஒரு பெரிய விஷயமாகவே இருக்கும்!) (எங்கு இதை எழுதினேன் என்று எனக்குச் சட்டென நினைவுக்கு வரவில்லை – என் பதிவுகளில் பொறுமையாகத் தேட இப்போது சமயமுமில்லை!)

-0-0-0-0-0-0-0-

சரி. என்னுடைய குர்தி அறிமுகங்களில் முக்கியமானவரான கில்யஸ் அவர்கள் போரில் இறந்துபோய், 13 மாதங்களுக்குமேலாகிவிட்டன. அவரைக் குறித்து நான் எழுதியுள்ள பதிவுகள் கீழே:

இவற்றுக்குமேல் நான் குர்திகள் தொடர்பாகவும், இன்னபிறவாகவும் பிற பதிவுகளையும் (இஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு) எழுதினேன். இவற்றைப் படிக்கமுடிந்தால் (சரியானதொரு பின்புலத்தைப் பெறுவதற்காக) படிக்கவும்.
-0-0-0-0-0-0-

…ஒரு கோரிக்கை.

இஸ்லாமிக் ஸ்டேட் கொலைகாரர்களிடமிருந்து பெரும் உயிர்ச்செலவில், குர்தி ரத்தத்தால் மீட்கப்பட்ட ரொஜாவா நகரம் புனர் நிர்மாணம் செய்யப்படவிருக்கிறது.

இதன் ஒரு அங்கமாக – ‘நமக்கு நாமே’ என ரொஜாவா நகரத்தில், தங்கள் கழிவுகளை வைத்துக்கொண்டு தாங்களே தங்கள் உரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறது. எப்படிப்பட்ட முற்போக்குத் திட்டம் இது! (இது எனக்கு கூபா தேசத்தின் அண்மைய தற்சார்பு விவசாய முறைகளை நினைவு படுத்துகிறதும்கூட)

இதனைப் பற்றிய மேலதிக விவரங்கள், திட்ட முன்னெடுப்புகள் இந்தச் சுட்டியில்: Feed the Revolution – Ecological Fertilizer, official project of Rojava – Help Fix the Food Problem

எனக்கு இத்திட்டம் நான்கு வகைகளில் பிடித்தம் – 1) தற்சார்பு 2) நான் – என் கழிவுகளை உரமாக்கியுள்ளவன், உரமாக்க விழைபவன் 3) ரொஜாவா, கபாணி நகரங்களில் உள்ள அரிய ஜனநாயக முயற்சிகள் – சமூகப் பரிசோதனைகள் 4) மிக முக்கியமாக, மகத்தான குர்திகளுடைய விழைவு இது.

ஆகவே, இவர்களுடைய திட்டத்துக்கு ப்ரிட்டிஷ் பௌண்ட் 501/- (என் நண்பன் ஒருவன் மூலமாக, நம்மூரில் மொய் எழுதுவது போல ஒரு எண்ணிக்கையை) கொடுத்திருக்கிறேன். அது இன்று அவர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் முடிந்த அளவில் – இம்மக்களுக்கு உதவக் கோருகிறேன். முடியுமா? தயவுசெய்து??

Screenshot from 2016-06-02 20:29:24

நம் கண்ணெதிரில் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மகத்தான நிகழ்வில், மானுட மேன்மையை விழையும் நாமும் பங்கேற்கவேண்டுமல்லவா?

இம்மாதிரி பங்ககேற்கக்கூடிய அரிய வாய்ப்புகள் நமக்கு அதிகமாக வாய்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு அல்லவா?

நன்றி.

4 Responses to “நம் சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் அற்புதம், அதற்காக உதவவேண்டிய நமது கடமை…”

  1. D.SureshKumar Says:

    Sure Ram – Please provide account details to which money could be sent

  2. Chandramouli Parasuraman Says:

    தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. கடமையை ஆற்றிவிட்டேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s