பள்ளிச் சிறுவர்களை-சிறுமிகளை வைத்துக்கொண்டு ஆனந்தமாக, ஒன்றரை நாட்களில் மர நாற்காலி செய்து இன்புறுவது எப்படி
May 29, 2016

இவன், நான் படித்த கல்லூரியில், எனக்கு 5 வருடம் ஜூனியர். படித்தபின், முழுமூச்சாக ஒரு தன்னார்வ நிறுவனத்தில் ஈடுபட்டு, பெங்களூரை அடுத்த சென்னபட்டணத்தில் குழந்தைகளுக்கான மரவிளையாட்டுச் சாமான்களை உருவாக்கும் தொழிலாளிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுறவு முயற்சியைப் படாதபாடுபட்டு நடத்திக் கொண்டிருக்கிறான். பலவிதமான கல்யாணகுணங்களைக் கொண்டவன். மாரத்தான் ஓட்டக்காரன். கொல்டி. வடுகன். ஆனால், ஆவக்காயும் பிடிக்கும். நிறைகுடம். கொஞ்சம் ஸீரியஸ் டைப், என்னிடம் ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டான், பாவம். பத்ரி சே ஷாத்ரிக்கு இவனைத் தெரிந்திருக்கக்கூடும்.
–0-0-0-0-0-0–
பொதுவாகவே – என்னுடைய மகாமகோ வருத்தங்களில் ஒன்று என்னவென்றால், நம் குழந்தைகளுக்கு நாம் உடலுழைப்பின் மேன்மையைக் கற்றுத்தருவதேயில்லை. இதற்கு ஒரு முக்கியமான காரணம்: நாமும் அதனை நம் அடிமனதிலிருந்து படுமோசமாக வெறுக்கிறோம் என்பதாகத்தான் இருக்கவேண்டும். மேலும் – நமக்குப் பொதுவாகவே சிரத்தையில்லை; தமிழ்த் திரைப்பட எச்சங்களை உடனுக்குடன் பார்த்துக் களித்து, ஆஹாஓஹோ என்று புல்லரித்துக்கொள்வதிலும், அல்லது அதுவும் ஒரு ‘அட்டைக் காப்பி’ எனப் புதிதாகக் கண்டுபிடிப்பதிலும், அதியுன்னத விமர்சனங்களைப் புட்டுவைக்கும் திறனிலும் இருக்கும் நம் ஈடுபாடு – நமக்கு உடலுழைப்பின்மீதில்லை.
சொல்லப்போனால், நாம் நம் குழந்தைகளுக்கு – உடலுழைப்பு என்றாலே கேவலம், சரியான சம்பளம் வராது, ஆத்மதிருப்திக்கும் பணம் சம்பாதித்தலுக்கும் தொடர்பேயில்லை, படிப்பறிவற்றவர்கள்தான் வியர்வைசிந்தும்வேலை செய்வார்கள், வியர்வை அருவருக்கத்தக்கது ஆகவே புறம்தள்ளப்படவேண்டியது, அலுங்காமல்நலுங்காமல் துட்டு சம்பாரிக்கவேண்டும், ஏதாவது எழவை படித்துவிடித்துமுடித்துவிட்டு, தட்டச்சுவிசைப்பலகை குமாஸ்தாவாகி உடனடியாக அமெரிக்காபோய் ‘ஸெட்டில்’ ஆகி குசுவிட்டுக்கொண்டிருக்கவேண்டும் — எனப் பலப்பலவிதங்களில் சமிக்ஞைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டேயிருக்கிறோம். ஆக, மகத்தான உடலுழைப்பு செய்யும் போற்றத்தக்க மக்களுக்குமேகூட தங்களைப் பற்றிய, தேவையேயில்லாத ஒரு தாழ்வுணர்ச்சி. நமது ஜாதிவரிசை அலங்கோலத்தின் ஒரு பரிமாணம்தான் இது.
நான் மூளையினாலான உழைப்பை மதிக்காதவன் அல்லன், ஆனால் மேன்மையை நோக்கிய உடலுழைப்பையும் மதிப்பவன், அவ்வளவுதான்.
அதனால், எனக்குச் சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் – என் குழந்தைகளைக் ‘கரடுமுரடான’ வேலைகளில் ஈடுபடுத்திவிடுவேன் – தோட்டவேலையாகட்டும், சமையல்வேலையாகட்டும், வெல்டிங் வேலையாகட்டும், கட்டிடவேலையாகட்டும் – இவ்வனைத்திலும் என் குழந்தைகள் ஆனந்தமாக ஈடுபட்டு, அவ்வேலைகளை (இதுவரை!) எனக்கும் திருப்தி தரும்படிச் செய்துமுடித்துத்தான் இருக்கிறார்கள். அவர்கள் விட்டேற்றியாகவே இல்லை. இதுவும் எனக்கு ஆச்சரியம்தான். [அதே சமயம் – கழிப்பறைகளைக் கழுவுவதில், என் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் கூச்சம் இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். :-(]
…என்னைப் பொறுத்தவரை – கைவினைப் பொருட்களை கைவேலைகளைச் செய்வது (மன்னிக்கவும், நானிங்கு திராவிடலைத்தனமான இனமானக் கைமுட்டியடித்தலைக் குறிப்பிடவில்லை!) என்பது பலவிதங்களில் நம் குழந்தைகளுக்கு உபயோககரமானது; எடுத்துக்காட்டாக, பொதுவாகவே:
இப்போது, ஒருவிஷயம்: நான் பொதுவாகவே, கிராமப்புறப் பள்ளிகளில்தான் வேலைசெய்திருக்கிறேன் – ஆனால் கடந்த ஒரு வருடமாக, சில நகரப் பள்ளிகளிலும் ஏதோ ஏனோதானோவென வேலை(!) செய்துகொண்டிருக்கிறேன்; ஆக, நகரம்(மட்டும்)சார் குழந்தைகள் எப்படி இந்த உடலுழைப்பு விவகாரத்தை எதிர்கொள்வார்களோ எனக் கொஞ்சம் கவலையுடன் இருந்தேன்.
என்ன சொல்லவந்தேனென்றால், இந்தத் தச்சுவேலை விவகாரத்தில் ஈடுபட்ட அனைத்துக் குழந்தைகளும் மிகப் பணக்காரவீட்டுக் குழந்தைகள். இந்தப் பணிமனையில் பங்கேற்க இக்குழந்தைகள், இந்திய அளவில் நடந்த இரண்டடுக்கு நுழைவுத்தேர்வுகளை வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறார்கள்! ஜாம்ஜாமென்று, அனைவரிடமும் ஐபேட்களும் ஐஃபோன்களும் – பொழுதன்னிக்கும்! பலரும், அமெரிக்காவிலிருந்து திரும்பிவந்த ‘போன மச்சான் திரும்பிவந்தான்’ வகையறா தட்டச்சுப் பிரகிருதிகளின் பரிதாபத்துக்குரிய குழந்தைகள்.
அதாவது, அவர்கள் வேலையின் தரத்துக்குத் தொடர்பேயில்லாத சம்பளங்களைத் துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் வாங்கிக்கொண்டு, Sustainabubbleகளின் வாழ்ந்துகொண்டு, Sustainababble உரையாடல்களில் ஈடுபட்டு, பிறத்தியாருக்கு Sustainabullshit அறிவுரைகளை வாரிவாரி வழங்கும் நகரம்சார் ‘படித்த’ ஆனால் பொதுவாகவே clueless வர்க்கத்தினரின் குழந்தைகள். இக்குழந்தைகளின் பாடு பரிதாபமானது.
இக்குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதெல்லாம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர்களுடைய அனுபங்களானவை, பெற்றோர்களுடைய குமாஸ்தாத்தனமான விழைவுகளால் சூழப்பட்டுள்ளன. ஆக, இக்குழந்தைகள் தங்கள் ஸைய்ன்ஸ்ஃபேர் எழவுகளில் செய்ததெல்லாம் வெறும் மின்னியல் இணைப்புகள் சார்ந்த ரோபாட்டுக்கூவான்களும் இன்னபிற ஜந்துக்களும். அதிகபட்சம் கொஞ்சம் கணிநிகளை வைத்துக்கொண்டு பொட்டிதட்டியிருக்கிறார்கள்.
…அல்லது டப்பாஅடித்த புளகாங்கிதம்ஸ் மூலமான ஸ்பெல்லிங்பீ எழவுகள். அறிவியலில் ஆசை – ஆனால், வீட்டில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவரையோ சுத்தியலையோ கூடத் தொட்டிருக்காத அபாக்கியவான்கள், பாவம். (இதைக் கேட்டதும், எனக்கு அவர்களுடைய பெற்றோர்களை தலா ரெண்டு சாத்துசாத்தவேண்டும் போலத் தோன்றியது)
ஆவலுடன் அஸ்ட்ரோஃபிஸிக்ஸ் , அஸ்ட்ரானமி, ப்லேக்ஹோல் எனப் பேசவிழைவார்கள். ஆனால் வீட்டிற்கு வெளியே வந்து வானில் அள்ளித் தெளிக்கப்பட்ட நட்சத்திரங்களைப் பார்த்ததில்லை. ஐபேட் வகையறாவில் ஏதோ ஆப் வைத்துக்கொண்டு ஆப்பசைத்த ஜந்துக்களாக கான்ஸ்டெல்லேஷன் எனப்பேசுகிறார்கள். ஆனால் பாவம், அவர்கள் ஊர்களின் அட்சரேகை தீர்க்கரேகை கூட அறியாத பாவப்பட்ட ஜீவன்கள். ஏனெனில் பெற்றோர்கள் அப்படி! டீவி முன்னால் உட்கார்ந்துகொண்டு நொறுக்குத்தீனியை மொசுக்கிக்கொண்டு, தங்களுடைய மெகாஸைஸ் ஸ்மார்ட்ஃபோன்களில் அரசியல் நிலவரத்தைப் பற்றி அமெரிக்காத்தனமான அமெரிக்கையுடன் அமோகமாக பிற திரும்பியேறிகளுடன் ஆராய்பவர்களாக அவர்கள் இருக்கும்போது – அட்சரேகையாவது மசுராவதுமண்ணாவது!
…முதலில் நினைத்தேன் – இக்குழந்தைகள் எப்படித்தான் கருவிகளை உபயோகிக்கப்போகிறார்களோ, ரத்தக்களறியாகிவிடுமோ என்றெல்லாம். ஆனால், எல்லா குழந்தைகளும் அதிகபட்சம் ஒன்றிரண்டு கீறல்களுடன் தப்பித்துவிட்டன. மேலும் நான்கு குழந்தைகளுக்கு ஒரு முன்னனுபவமுள்ள ஆசாமி மேற்பார்வைக்காக என (தச்சுவேலையென மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் வேலைசெய்வதிலும்!) ஒரு கொள்கைக் கூட்டணியும் (=குநகூ) அமைத்திருந்தோம். ;-)
ஆகவே பிரச்சினையில்லாமல் தச்சுவேலையும் முடிந்தது, ஒரு வழியாக! குழந்தைகளுக்கும் ஏகக் குதூகலம். :-))
-0-0-0-0-0-0-0-0-
என்னுடைய பலவிதமான + (எனக்குச்) சுவாரசியமான கிறுக்குத்தனங்களில் ஒன்று தச்சுவேலை. எல்லாம் நானே முட்டிமோதிக் கற்றுக்கொண்டதுதான். முயற்சி அயர்ச்சி தரும் என்பது சரிதான். ஆனால் எப்படியும், அதுவும் பொய்வருத்தக் கூலி (ah, the real pleasures of victimhood and wallowing in a great sea of self-pity) தரும் அல்லவா? அதனால்தான்.
சரி, குழந்தைகளுடன் தச்சுவேலையும் செய்யலாம் என முடிவெடுத்தவுடன், அதற்கான முஸ்தீபுகளை ஆரம்பித்தோம். தச்சுவேலைப் பணிமனை வகுப்புகளில் ஆவலுடன் பங்குபெற்ற குழந்தைகள் ஏழாவது/எட்டாவது முடித்திருந்தார்கள், மொத்தம் 17 பேர். இதில் இருவர் மட்டுமே :-( சிறுமிகள். முடிந்தவரை நவீன யந்திரங்கள் எதனையும் (பாஸ்ஷ், ப்லேக்&டெக்கர் ட்ரில்கள் தவிர) குழந்தைகள் உபயோகிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.
எனக்கு மிகவும் பிடித்தமானதும் எளிமையானதுமான ஒரு நாற்காலி மாதிரியைத் தேர்ந்தெடுத்தோம். கூடவே, ஒரு சிறிய நகைப்பெட்டி மாதிரியையும். குழந்தைகள் உபயோகிக்கக்கூடிய பொருட்கள் இவைதாம் என முடிவும் எடுத்தோம்: வெறும் அரம், சுத்தியல், உப்புக்காகிதம், ஸ்க்ரூக்கள், போல்ட்டுகள், வாஷர்கள், ட்ரில் பிட்டுகள், கௌன்டர்ஸிங்க்கள், ஸ்கேல், பென்ஸில், ஸ்க்ரூட்ரைவர்கள் + மரப் பாலிஷ் + தேவையிருந்தால் பட்டி பார்த்தல். அவ்வளவுதான்.
இப்பதிவில் நாங்கள் வடிவமைத்துச் செய்த – ரெய்ட்வெல்ட் நாற்காலி வடிவமைப்பை நம் நாட்டுக்கேற்றவாறு மாற்றியதைப் பற்றி எழுதுகிறேன். பின்னொரு பதிவில் நகைப்பெட்டியைப் பற்றியும் எழுத முயற்சிக்கிறேன்.
-0-0-0-0-0-0-
கீழே – ரெய்ட்வெல்ட் நாற்காலி பற்றி நான் எடுத்த ஒரு 20 நிமிட வகுப்பின் ஸ்லைடுகள்…
கெரிட் ரெய்ட்வெல்ட் என்பவரால் 1923ல் வடிவமைக்கப்பட்ட அழகு இது.
ஆனால், எங்களுக்கு வசதியாக பேக்கிங் க்ரேட் மரப்பலகைகளை உபயோகிக்க முடிவெடுத்து சில முன்மாதிரிகளையும் (கீழே இருப்பது போல) செய்தோம்.
அழகாகவும் உறுதியாகவும் வடிவம் பெற்றன அவை…
சரி. குழந்தைகளுக்கு இழைப்பு வேலைகளைக் கொடுக்கவேண்டாம், உளிகளும் வேண்டாம் என முடிவெடுத்திருந்ததால், நாங்களே பலகைகளை வெட்டியெடுத்து இழைத்துக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டோம்.
குழந்தைகளுக்கு பணிமனை நடத்தும் சமயம் – உதவிக்கு, பலவிதங்களில் என்னுடைய ஆசானான ஜான்னியையும், மகத்தான நண்பிகளில் ஒருவரான நடாஷாவையும் கூப்பிட்டுக்கொண்டோம். இப்போது மொத்தம் நான்கு தச்சர்கள். ஜான்னி மகாதச்சர். பெரியவர். என் அன்புக்கும் மரியாதைக்குமுரியவர்.
முன்னமே எழுதியதுபோல நான்கு அணிகளாகப் பிரிந்துகொண்டு (=குநகூ!) குழந்தைகளை ஒருங்கிணைத்தோம். ஒவ்வொருவருக்கும் உபகரணங்களையும், மரப்பலகைகளையும் கொடுத்தோம். (இப்பதிவின் முதலில் உள்ள ப்ளூப்ரின்ட் படத்தையும்)
குழந்தைகள் ஆவலுடன் வேலை செய்தனர். சுமார் 1.5 நாள் உழைப்பில், சிறுசிறு சிராய்ப்புகளைத் தவிர ஒரு பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை.
முடிவில் ஒவ்வொரு குழந்தையும் கீழ்கண்டபடியான நாற்காலியை உருவாக்கி இறும்பூதடைந்தது. எங்களுக்கும் மகாமகோ சந்தோஷம்.
தொந்தியும்தொப்பையும் படுஅபரிமிதமான வாய்த்திருந்த அன்பர் ஒருவர், அனைத்து நாற்காலிகளையும் பரிசோதனை செய்து, ஓகே என்றார். 113 கிலோ டெஸ்ட்.
…இந்த வடிவமைப்பின் முக்கியமான விஷயம் என்னவென்றால் அதனைச் சட்டகம் சட்டகமாகக் கழற்றி அழகாக அடுக்கிவிடலாம். இதனை எடுத்துக்கொண்டுபோக மிகவசதி.
….பின்னொரு நாள், தத்தம் குழந்தைகளின் ஆக்கங்களை வந்துபார்த்த பெற்றோர்களுக்கு மகாமகோ ஆச்சரியம். புளகாங்கிதம். முத்தங்கள். ஸெல்ஃபிகள். க்ரூப் ஃபோட்டோக்கள். நடுநாயகமாக அவர்களுடைய குழந்தைகள் உருவாக்கிய நாற்காலிகள்! :-)
பல பெற்றோர்கள், தங்களுக்கும் இப்படி ஒரு பணிமனை நடத்தமுடியுமா எனக்கேட்டார்கள். நான் பணிவுடன் முடியாதென்று சொல்லிவிட்டேன்.
ஏனெனில், சொல்லித் தெரிவதில்லை, கற்றுக்கொள்ளும் கலை, முக்கியமாக, வயதானவர்களுக்கு… எப்படியும் உண்மையாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என்றால், கொட்டிக்கிடைக்கின்றன வாய்ப்புகள்… என்னிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டுமென்பதும் இல்லை.
மேலும் எனக்குக் குழந்தைகளுடன் ஒத்துவருவதுபோல வளர்ந்தவர்களுடன் முடியாது. நன்றி.
-0-0-0-0-0-0-
[நமக்கு நாமே!] பயோசார் ‘உரக்கரி’ செய்துகொள்வது எப்படி – சில குறிப்புகள் 04/02/2016
சொந்தமாகக் காயலான் கடை நடத்துவது எப்படி 19/09/2015
May 29, 2016 at 20:07
Gandhi’s rattai,thagli taught children many things like tolerance,patience!!
May 29, 2016 at 20:09
Of course, of course!
May 30, 2016 at 04:45
அற்புதமான பதிவு !!
“ரெய்ட்வெல்ட் நாற்காலி பற்றி நான் எடுத்த ஒரு 20 நிமிட வகுப்பின் ஸ்லைடுகள்…”
– is not linked to any presentation.
2016-05-29 22:42 GMT+10:00 “ஒத்திசைவு…” :
> வெ. ராமசாமி posted: “இப்படித்தான். …கடந்த நான்கு வாரங்களில்,
> சிறுவர்சிறுமியர் குழாம் ஒன்றுடன் (கோடைப் பணிமனை என்கிற பெயரில்) பலப்பல
> விதமான பரிசோதனை முயற்சிகள் செய்தேன். அதில் ஒன்றுதான் இந்த தச்சுவேலை
> முயற்சி. பாவம், குழந்தைகள். என்னுடன் கூட மல்லாட ஒருவனும் கிடைத்தான், இவன”
>
May 30, 2016 at 07:53
Sir, Ranganathan – the slides have been converted into png files and are all there in the post.
May 30, 2016 at 10:37
oh yes, sorry !
May 30, 2016 at 14:20
பள்ளிச் சிறார்களைக் கொண்டு 1 1/2 நாளில் மர நாற்காலி செய்த அனுபவம் நன்கு உள்ளது. இப்போதைய சிறார்கள் நுண்ணறிவு (IQ) சிறிது அதிகம், நாம் தான் அதை (அவர்களை) மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம் எனும் எண்ணம் கொண்டவன் நான். ப்ளாஸ்டிக் (கடினமான) ப்ளாக்குகள் கொண்டு நல்ல கட்டிடங்கள் செய்கிறார்கள், டிராக்டர், வண்டி என செய்கிறார்கள் என்பதால் அனைத்து பெற்றோர் மற்றும் குழந்தைகளையும் ஒரே தராசில் நிறுக்க வேண்டாம். தச்சு வேலையில் ஒரு (ஒரே) பயம், குழந்தைகள் காயம் அடைய வாய்ப்பு (உங்கள் மேலான மேற்பார்வையில் சிறு சிராய்ப்புகள் மட்டும்). எனினும் உழைப்பின் மேன்மையை சிறார்களுக்கு அளித்த உங்கள் முயற்சி வாழ்க! அடுத்த கோடைப் பணியை சிறார்களும் எதிர்நோக்குவார்கள்.
May 30, 2016 at 21:57
அருமையான பதிவு .. தள நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை தங்ளை சார்ந்த சிறார்களிடம் காண்பித்து … இதை பாேல செய்ய துண்டினால் ” உழைப்பின் ” வியர்வையை நுகரசெய்த திருப்தி ஏற்படும் … அய்யா …!தேர்தலுக்கு பிறகு கலைஞரின் அறிக்கைகள் பற்றி தங்களின் … பார்வை ….!!
May 31, 2016 at 05:32
அய்யா, நன்றி.
தேர்தலுக்குப் பின் கலைஞர் பார்வை பற்றியெல்லாம் பேசி அவரை நோகடிக்கவேண்டாமே! குட்டுண்டோம், வருந்தியிருப்போம், காலம் மாறும் – என அவரே பாவம் ஏதேதோ பினாத்திக்கொண்டிருக்கிறார்.
ஆனால் – மதிமுக தேமுதிக கட்சிகளை திராவிடநாயகரீதியில் திமுக பிளந்ததுபோல், அஇஅதிமுகவையும் பிளக்க முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஜெயலலிதா மீதான ‘சொத்துக் குவிப்பு’ வழக்கு அடுத்த ஒன்றிரண்டு வருடங்களில் குவியம்பெறும்போது, நமக்கு இம்மாதிரி மேலதிகமாகக் கேளிக்கைகள் காத்துகொண்டிருக்கின்றனவோ என்னவோ! ;-)
பார்க்கலாம், காலம் எப்படி விரிகிறதென்று!
May 31, 2016 at 07:54
அருமை ,..
ஆனால் , இந்த மாதிரி பதிவுக்கு எல்லாம் பொதுவா கமெண்டே வராதே.. தமிழ்நாடு திருந்தி விட்டதா ??
May 31, 2016 at 15:03
Sir, Very true.. being a parent of 2 kids, would like them to grow out of my “sustainable” lifestyle .. please let know where i can get to know details of these events in the future
June 3, 2016 at 18:09
Unlike Hans Wegner’s great chairs which look simple and are extremely difficult to copy Rietveld’s chair appears simpler and a little easier to copy. But the chair became famous when the colours were added under the influence of the celebrated painter Mondrian. This is a brave and commendable effort and eeds to be publicized and popularized. Just when I saw the Bihar schools scandal hitting the news I saw this blog and was both excited and pleased. Sad that our papers will not publicize this!
June 3, 2016 at 18:21
அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். ஹேன்ஸ் வெக்னர் அவர்களின் வடிவமைப்புகளை ஒற்றியெடுப்பதற்குக் கொஞ்சம் நிறையவே தச்சுவேலை நிபுணத்துவம் வேண்டும். அவற்றிலுள்ள வளைந்த பரப்புகளை உருவாக்குவதும், கடைவதும் சிரமம் தான்; அதுவும் சிறுவர்களுடன் இதற்காக மல்லாடமுடியாது. ஒரு சிறு தவறு செய்தாலும் அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை அதிகமாகவிருக்கும். மேலும் அவர்களுக்கு வெறுத்துவிடும் – பின்னர் தச்சுவேலை பக்கமே திரும்பமாட்டார்கள் கூட.
எனக்கு பிஹார் பள்ளிகள் தொடர்பான விஷயங்களில் பரிச்சயமில்லை. ஆகவே, என்ன சொல்லவருகிறீர்கள் என்பது புரியவில்லை.
நீங்கள் யார்? :-)
June 23, 2016 at 14:31
நல்ல பதிவு சார், நன்றி.
// அவர்கள் வேலையின் தரத்துக்குத் தொடர்பேயில்லாத சம்பளங்களைத் துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் வாங்கிக்கொண்டு // இதில் என்ன பிரசினை? சந்தைப் பொருளாதாரத்தில் வேலைக்கான சம்பளத்தை நிர்ணயிப்பது “தரம்” மட்டுமல்ல, சந்தையின் விதிகளும் தான். எனவே வாங்குபவர்கள் கூச்சமில்லாமல் வாங்குகிறார்கள் என்று அவர்களை மட்டும் சாடுவதில் பொருளில்லை. நீங்கள் சொல்லும் வகையினர் மட்டுமல்லாது, பல அரசு நிறுவனங்களின் ஊழியர்களும் கூட அப்படித் தான் சம்பளங்கள் வாங்குகிறார்கள். மிகக் குறைந்த வேலை (அல்லது முழு வேலையின்மை), நிறைய ஓய்வு, காத்திரமான சம்பளம் என்ற வகையிலான பல அரசு ஊழியர் வேலைகள் 1960-70-80களில் பல படித்த இந்தியர்களால் விரும்பப் பட்டன. இத்தகைய வர்க்கத்திலிருந்து நல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும், சமூக அக்கறையாளர்களும் உருவாகி வந்தார்கள் என்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்கக் கூடும் :)
June 23, 2016 at 17:01
// மிகக் குறைந்த வேலை (அல்லது முழு வேலையின்மை), நிறைய ஓய்வு, காத்திரமான சம்பளம் என்ற வகையிலான பல அரசு ஊழியர் வேலைகள் 1960-70-80களில் பல படித்த இந்தியர்களால் விரும்பப் பட்டன. இத்தகைய வர்க்கத்திலிருந்து நல்ல எழுத்தாளர்களும், இலக்கியவாதிகளும், கலைஞர்களும், சமூக அக்கறையாளர்களும் உருவாகி வந்தார்கள் என்பதையும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்கக் கூடும்:)
8-)
ஹ்ஹ் ஹாச் சூஊ…; தும்மல்தான், வேறொன்றும் இல்லை.
பொடி கொஞ்சம் அதிகமாக ஆகிவிட்டதோ? பலர் நினைவுக்கு வருகிறார்கள், அதுதான் குறிக்கோளோ?
மேலதிகமாக தார்ன்ஷ்டீன் வெப்ளென் (theory of leisure class எழுதியவர்) போன்றவர்களெல்லாம்கூட! ;-)
July 1, 2016 at 07:23
. நல்ல முயற்சி பாராட்டுக்கள் சார்.நல்ல படிக்லன்னா கூலி வேலைக்குத்தான் போகணும் என்று சொல்லி உடலுழைப்பை இழிவுபடுதித்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் பெற்றோர்.
“ஆப்பசைத்த ஜந்துக்கள் ” சொல்லாடலை ரசித்தேன்
July 7, 2016 at 10:53
நல்ல முயற்சி பாராட்டுக்கள் சார்.நல்ல படிக்லன்னா கூலி வேலைக்குத்தான் போகணும் என்று சொல்லி உடலுழைப்பை இழிவுபடுதித்தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் பெற்றோர்.
“ஆப்பசைத்த ஜந்துக்கள் ” சொல்லாடலை ரசித்தேன்
June 4, 2017 at 11:29
[…] […]