மேஸ்திரிகளின் உலகம் (ஜெயமோகனுக்கு ஒரு பகீரங்கக் கடிதம்!)
October 4, 2015
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
நெடுங்காலம் கழித்து எழுதுகிறேன். நலமா? அரங்காவின் புது மனை புகு விழாவில் என்னை நீங்கள் பார்க்காதது நினைவிருக்கலாம். ஏனெனில் நான் அங்கு போகவில்லை.
உங்கள் வாசகர் உங்களுக்கு எழுதிய ‘மேசன்களின் உலகம்’ கட்டுரைக் கடிதம் படித்தேன். புல்லரித்து அப்படியே உங்களைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுக்கவேண்டும் எனத் தோன்றியது. ஆனால் இது ஏதாவது ஓரினச் சேர்க்கை எனத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுமோ என உடனடியாகப் பயந்து, நாமிருவரும் தமிழினம்தானே, ஆகவேதான் இப்படி இனச்சேர்க்கை என்று சப்பைக்கட்டு கட்டி – உங்கள் வாசகருடைய கடிதப்பதிவை என் எதிரிகளுக்கும் பகிர்ந்திருக்கிறேன்.
மேலும், அந்தக் கடிதத்தின் முழு பாதிப்பில்தான் நான் இதனை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் வரிக்கு வரி சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி. உள்ளூர் வரிகள் மேலதிகம், கவனிக்கவும்.
ஏனெனில் இக்கால மேஸ்திரிகள் எந்தக் கட்டிடம் கட்டினாலும் அதில் எஃகு உருக்குக் கம்பிகளின் ஊடுபாவு இல்லாமல் படைப்பதே இல்லை. ஆனால், சில மேஸ்திரிகள் முன்பணம் வாங்கிக்கொண்டு கம்பி நீட்டிவிடுவதும் உண்டு, என்ற அரிய உண்மையை திரைப்பட நடிகர் நாஸர் அவர்கள் ‘புதுச்சேரி லதா ஸ்டீல்ஸ்’ டிஎம்டி கம்பி விளம்பரத்தில் மறைமுகச் சதித்திட்டச் செய்தியாக அனுப்புவதை நீங்கள் அறிந்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக, அந்த விளம்பரத்தின் புகைப்படம் என்னிடம் இல்லை. ஆனால், கீழ்கண்டவர்தான் நாஸர் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. (எதற்கும் சதி பார்த்துக் கொள்ளவும்!)

ஆனால், நாசருக்கு வாழைக்காய் பஜ்ஜி பிடித்தம் என்று எனக்குப் புரிந்த உடனே நான் சுதாரித்து மொத்தக் கட்டுரையை ஊன்றிப் படிக்க ஆரம்பித்து விட்டேன். ஏனெனில் பஜ்ஜியில் உறைந்திருப்பதும் ப்ருஹ்மம்தான் என்பதையும், அதன் பெயரைக் கேட்டவுடனேயே வாயில் பொங்கும் உமிழ் நீரையும் நீங்கள் அறியாதவர் அல்லர்! மேலும் ப்ரஹ்மபஜ்ஜி சமாஜியான அவர், நடிகர் சங்கத்தின் உறுப்பினர். இந்த இரண்டு தகுதிகளை உடையவர்கள் எக்காலத்திலும் தேர்ந்தெடுக்கப் பட்ட மிகச் சிலரே. அவர்கள் தான் free mesons என்றழைக்கப் படும் அடிப்படைத் துகள்களினர்.
உலகில் சமீப நூற்றாண்டு நிகழ்வுகள் அனைத்தும் இந்த ஃப்ரீ மேஸான்கள் செய்தவையே என நான் நம்புகிறேன். ஜனநாயகம் என்னும் கோட்பாடு அதில் பிரதானமானது. மிளகு ரசம் அடுத்தது. என் பக்கத்து வீட்டு வெங்கிட்டகவுடா ஒரு மேசன். அய்ன் ரேன்ட் தீவிர மேசன்.
ஆகவே, அய்ன்ரேன்ட்தாசனான அரவிந்தன் கண்ணையன் ஒரு அதிதீவிர மேஸான் அடிப்படைவாத வெறியர்.
அய்ன் ரேண்ட் கார்ப்பரேஷன் எனும் நிறுவனமே இவர்களுடையதுதான். www.rand.org எனும் இந்த நிறுவனத்தின் சுட்டியில் அய்ன் என்பதை எவ்வளவு கமுக்கமாக மூடி மறைத்திருக்கிறார்கள், பாருங்கள்! எல்லாம் சதித்திட்டக்காரர்கள்தான்! உலகெங்கும் மூளையுள்ளவர்களின் ஆட்சி ஒழிக்கப் பட வேண்டும் என்பது இவர்களின் உறுதியான கொள்கைகளில் ஒன்று என நான் ஊகிக்கிறேன்.
மேசன்கள் தங்கள் கடைக்கால்களை ஊன்ற மிகவும் விரிவாக மட்டுமல்லாமல், ஆழமாகவும் வேலை செய்திருக்கிறார்கள்; குழிகளைப் பொதுவாகச் சித்தாட்கள் தோண்டினாலும் மேசன்கள் நோண்டல் மன்னர்கள்!
பூந்தியில் மணத்தைக் கலக்கிய அடையாறு ஆனந்தபவன்காரர்கள், அடையாறு க்ரேண்ட் ஸ்வீட்ஸ் காரர்களின் அத்தை பையன்கள்! அதே அடையாறு க்ரேண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பர்களின் மாமா மகள்தான் காந்தீ ஸ்வீட்ஸ் என்பதை நீங்கள் அறிவீர்கள்!
ஆக இவர்களெல்லாருமே மேஸ்திரிகள். அவர்கள் கட்டமைப்பது நம் உடம்பின் டையாபட்டீஸையும், கொலஸ்ட்ராலையும்தானே?
அவர்கள், நடிகர் விவேகானந்தர் (= விவேக், நகைச்சுவையாளர் எனப் பதம் பிரித்தறிக!) உட்பட பலரிடமும் தம் கருத்துகளுக்கு ஆதரவு திரட்டியிருக்கிறார்கள். நாஸரது பிள்ளைகளும் நடிகர் சங்க உறுப்பினர்கள். நாஸர் பூந்தியை அணுகிச் சாப்பிட்டது தற்செயல் அல்ல என எனக்குத் தோன்றுகிறது. ஏன், சோழர்களின் வரலாறு எழுதிய நீலகண்ட ஸாஸ்திரி ஒரு மேஸ்திரியே!
கொரியா பிரிவினை, தமிழகத்தினரும் கர்நாடகக்காரர்களும் ஒருவரை ஒருவர் என்றும் நட்பாடாமல் பார்த்துக் கொள்வது, இந்தியப் பெண்களின் மையமான சாரிகளில் கறை படிய வைக்கும் விதமாக இடதுசாரி இயக்கத்தை இன்று வரை நடத்தி வருதல், வாசகர்கடிதமிஸம் என்னும் ஒரு செயற்கைக் கோட்பாட்டால் நம் மக்களை மூச்சுத் திணறச் செய்து வருவது, இந்துக்களின் நெற்றிப் பொட்டில் வைத்த துப்பாக்கியாய் வஹாபியத்தை ஏவி விட்டது போன்ற அனைத்து விஷயங்களின் மூளை – இந்த மேஸ்திரிகளே! போர்டு பவுண்டேஷன் மேசானிய அமைப்பு.
இதற்கு முதல் சாட்சியம்: ஃபௌண்டேஷன் இல்லாமல் மேஸ்திரிகள் வேலை செய்யமுடியாது.
இரண்டாவது சாட்சியம்: போர்டுகள் மீது நிற்காமல் மேஸ்திரிகளால் வேலை செய்யமுடியுமா?
மூன்றாவது சாட்சியம்: போர்ட்கள் வைத்து ஸென்டரிங் செய்யாமல் – மேற்கூரைகளை, தளங்களை நிர்மாணிக்க முடியுமா, சொல்லுங்கள்? QED.
இவர்களின் உளறாறு மிகப் பழையது. புத்தன் தான் முதல் மேஸ்திரி என்கின்றார்கள். ஏனெனில் பௌத்தம் இவர் கட்டமைத்ததுதானாம்! இவர்களின் நெடும் கால வரலாற்றில் தொடர்ச்சியாய் நாம் காணும் ஒரே விதமான சந்தேகம் அவர்களுடைய “ஹாஸ்யம் காத்தல்” என்பது தான்.
சாஞ்சி ஸ்தூபம் கட்டும் புத்தன்
மதம் என்ற ஒரு கோட்பாடே, யானைக்கு மெனோபாஸ் சமயம் வருவதுதான்!
அதன் மதத் தும்பிக்கை நீட்சி இங்கே இந்தப் பாலைவன மதங்கள். அதனால்தான் ஒட்டகங்களுக்கும் மதம் பிடிக்கின்றன, பாவம். ‘அடி சப்பாத்திக் கள்ளீ…‘ என்று தமிழ் திரைப்படத்தனமாகச் சொல்லி அவை வாய்களைச் சுழற்றிக் கொண்டு காதலுடன் அவற்றைச் சாப்பிடுவதே இதற்குச் சான்று!
மேஸ்திரிகள் உலகளாவிய மாற்றத்துக்காக உழைப்பவர்கள். மனிதனை அனைத்து அடையாளங்களான உடை, மூளை, தத்துப்பித்துவம் போன்றவற்றில் இருந்து விடுவித்து முழு நிர்வாணமாக்கும் ஒரு முயற்சியில் இருக்கக் கூடும் என ஊகிக்கிறேன்.
தமிழ்நாட்டில் ஆரம்ப கால மேஸ்திரிய வித்துகள் ஆதி, பகவன்.
பின்பு முதற்றே, உலகு – போன்ற பல சான்றோரும் இதில் இணைந்தனர். என் தகப்பனாருடன், கட்டிடவேலைகள் தொடர்பாகப் பணிபுரிந்த ஜகன்னாதன், தங்கராஜ் போன்றோர் மேஸ்திரிகள். லால் பஹாதுர் ஸாஸ்திரிகூட ஒரு மேஸ்திரி. ஆனால் அவர் குவியம் வடஇந்தியா.
தமிழ்நாட்டில் தமிழனின் ஆண்குறியை அழிக்க மேஸ்திரிகள் அனுப்பியது ஈவேராவை. அன்று நடுச் சதிகளை வைத்து சமூகத்தை நிலை குலையச் செய்தது போல பின்பு, ஓரச் சதிகளை வைத்து பொஞ்சாதிகளை ஏவி கீழ்த்தர டீவி ஸீரியல் சதிகளின் மூலமாக சமூகத்தை துவம்சம் செய்வது அவர்களின் இன்றைய திட்டமாக இருக்கலாம்.
சினிமாவை விரும்பாத பேதி (அல்லது உங்கள் விருப்பம்போல மூதி) கட்சியின் ஊடகம் கூட மேஸ்திரிகள் உதவியில் தான் செயல்படுகிறது என்கின்றனர் என் எதிரிகளும் நண்பர்களும்!
அன்றிலிருந்து இன்று வரை கார்பூஸியஹ்ர், லுட்யன்ஸ் மேஸ்திரிகள் இந்தியத் தன்மை அற்ற கட்டிடங்களையே கட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயத்தில், மகாமகோ மேஸ்திரி லாரீ பேகர், இந்தியத் தன்மையுடன் கட்டிடங்களைக் கட்டியதும் மேசன்களின் சதியே!
ஒரே சமயத்தில் இரு எதிர்ச் சதிகளை சதிராட வைப்பதுதான் இந்த மேஸ்திரிகளின் திட்டம்! நாமெல்லாம் மக்குப் பிளாஸ்திரிகளானதால் தான் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது.
இந்தக் கட்டிடங்களின் சாவி இன்னமும் அதே மேஸ்திரிகளின் கையில்! சாவியை, வீட்டைவாங்கியவர்களிடம் கொடுக்காமல் அழிச்சாட்டியம் செய்கின்றனர்…
சேமியாவின் பெற்றோர் ஜவ்வரிசியும் மேக்கிநூடுல்ஸும்தான்! மேஸ்திரிகளின் பிடியில் தான் ‘கொல்ரு’ இருக்கிறது என்று நானே இணையத்தில் எழுதி, அனைவரும் சர்வ சாதாரணமாகக் காணும் செய்தி.
மேஸ்திரிகளின் தலைமைப் பீடங்கள் கான்க்ரீட்டால் நிரப்பப் பட்டவை. ஆனாலும் அவர்கள் பிற அனைத்து கட்டிடங்களையும் ஆக்கிரமித்தே இருக்கின்றனர்.
சாத்வீகமும் சமரசமும் அருட்பெரும் ஜோதியும் தனிப்பெரும் கருணையும் அலாதிக்குக் கொஞ்சிக்கொண்டிருந்த இஸ்லாமிய நாடுகளான ஆப்கானிஸ்தானையும், இரானையும் அநியாயமாக வெறும் பத்து வருடங்கள் இடைவெளியில் உலகின் அருவருக்கத் தக்க தீவிரவாத நாடுகளாக மாற்றியது அவர்கள் சாதனை. ஏனெனில் போர் நிகழ்ந்து குண்டுகள் வெடித்து (சில சமயம் மேஸ்திரிய ஸிஐஏ சதியினால் ஒல்லிகளும் வெடித்திருக்கின்றன!) கட்டிடங்கள் தகர்ந்தால், மேஸ்திரிகளுக்குத்தானே அதிக வேலைகள் கிடைக்கும்?
இது நடந்து கொண்டிருக்கையிலேயே, உலகத்தை திசை திருப்ப, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கித் தள்ள, ”வாழ்க வளமுடன் இஸ்லாம்” என்ற வசனத்தை புஷ் மற்றும் டோனி ப்ளேர் திரும்பத் திரும்ப லூப்பில் கூவிக்கொண்டே இருந்தனர். ஏனெனில் புஷ் புதரில் இருந்தார். டோனி ப்ளேர், ஆட்டோ ப்ளே மோட்! இருவரும் ஃபேஸ்புக்கில் விளையாடிக்கொண்டிருந்தனர், அதில் நியூ இண்டெர்னேஷனல் ஆர்டர் எனும் விளையாட்டைக் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். இருவரும் மேஸ்திரிகள். இப்படிப் பதவி உயர்வு பெருவதற்குமுன், அவர்கள் மேஸ்டூக்களாகவும் அதற்கு முன்னர் மேஸ்ஒன்னுகளாகவும் இருந்தார்களாம்!
-0-0-0-0-0-
நான் கூறிய புள்ளி விவரங்கள் எதுவும் நான் நிரூபிக்கத் தேவையில்லை. அவை தன்னைத் தானே நிரூபித்துக் கொள்ளும். இந்த புள்ளிவிவரங்கள் தங்களை எஸ்ரா என நினைத்துக்கொண்டிருக்கின்றனவோ?
மேஸ்திரி அமைப்புக்கள் 2000 ஆண்டுக்குப் பின்னர் ரகசியங்களை வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. தமிழக அரசுப் பாட நூல் நிறுவனப் புத்தகங்கள், தமிழக அரசு தாக்கல் செய்யும் வருடாந்திர பட்ஜெட், குமுதம், விகடன் – ஏன் காலச்சுவடு, உங்களுடைய ஜெயமோகன்.இன் தளம், போன்றவை கூட அவர்களின் நீண்ட சரித்திரத்தை பதிவு செய்து எழுதுபவைதான்!
அன்றாடம் நம் வாழ்வில் உரசும் பல அமைப்புகள் மேஸ்திரி வேர் (கிளைகள் இல்லை!) கொண்டவை. உரசாதவைகளைப் பற்றி அதிகப் பிரசங்கித்தனமாகக் கேட்கவேண்டாம்!
மேலே உள்ள கோபன்ஹேகன் மேஸ்திரி கிளப் சின்னம், மேசன்களின் ஆண்குறியீடுகளை ஒத்தது. அதற்குக் கீழே உள்ளது மேசன்களின் சதிகளின் சின்னம். சிறுநீர் ஒரு குறியீடுதான்!
கோயம்புத்தூரில் மேசானிக் டோட்டரி சங்கம் வட கோயம்புத்தூரில் உள்ளது. பெரிய போர்டு வைத்து நடத்துகிறார்கள். அதுவும் போர்ட் ஃபௌண்டேஷன் விஷயம்தான்!
உங்கள் ஊரில் உள்ள விவேகானந்த கேந்திரம் சுத்தமான மேஸ்திரி அமைப்பு. முகப்பில் விவேகானந்தர் சிலைக்கு மேலே தலையில் முண்டாசுக்குள் சின்னம் பிரதானமாய் பொறிக்கப் பட்டுள்ளது – கவனிக்கவும், அது பொறிக்கப்பட்டது சுத்தமான நயம் ரீஃபைன்ட் எண்ணையில்தான்! கவலை வேண்டேல்.
மேஸ்திரிகளுக்கு மேன்மையான பக்கம் உண்டு. இஸ்ரோ இவர்கள் இயக்கம். மேஸ்திரிகள் இல்லாமல் எதனைத்தான் கட்டமைக்க முடியும். நீலகண்ட மேஸ்திரி, சோழர்கால கட்டுமானங்களைக் குறிப்பிட்டது இதனைச் சுட்டத்தான்.
இஸ்திரிகளுக்கு இனிமையான பக்கம் உண்டு. ஆனால், அதனைச் சுவைக்க அழுத்தித் தேய்க்கப்பட்ட துணிகளை கொஞ்சம் நக்கிப் பார்க்கவேண்டும்.
மேஸ்திரிகளின் சர்வாதிகாரத்தைப் பற்றிய மேம்போக்கான அடையாளங்களைக் கூறி விட்டேன். பிறவற்றை உங்களால் எளிதில் அறிந்து கொண்டு விட முடியும். ஏனெனில் நீங்களுமே ஒரு தேர்ந்த மேஸ்திரிதான்.
-0-0-0-0-0-0-
சரி. எனக்கு அவசரமாக அமெரிக்க மேரிலேன்ட் பக்க நாசா காட்டர்ட் மையத்துக்குப் போய் சர்வநாசம் செய்யவேண்டியிருப்பதால் (என் தலைமை மேஸ்திரி அப்படித்தான் ரகசிய கட்டளை இட்டிருக்கிறார்) இப்போதைக்கு இவ்வளவுதான் எழுதமுடிந்தது. எனக்கு எவ்வளவோ பிரச்சினைகள்; என் நாசவேலைச் சதியை எப்படியோ தெரிந்து கொண்டுவிட்ட அரவிந்தன் கண்ணையன் தன் மகனுடன் அங்கே போய் பதுங்கிக்கொண்டிருக்கிறார் என அவரே ஒரு சங்கேதச் செய்தியை எனக்கு அனுப்பியிருக்கிறார்! அவரும் சர்வ நிச்சயமாக ஒரு மேஸ்திரிதானோ? என் நாசா நாசாவேலைகளை நாசாமாக்க எவ்வளவு ஆவல் அவருக்கு! :-(
இப்போதைக்குப் படுகுழப்பத்தில் உள்ள நான், பின்னிணைப்பாக உங்களுக்கு மேஸ்திரி பாராயணம் அனுப்புகிறேன்.
மேஸ்திரிகளின் கடவுளான விஸ்வகர்மனும் மகாமேஸ்திரியான மயனும் தங்களுக்கு வேண்டுமளவு இருள் பாலிக்கட்டும்.
தாங்கள் தனித்தமிழ்மேஸ்திரியத்தைக் கட்டமைக்க என் வாழ்த்துகள்.
வாழ்க மேஸ்திரியம்! வெல்க மேஸ்திரியம்!!
எங்கும் மேஸ்திரியம்!!! எதிலும் மேஸ்திரியம்!!!!
நன்றி.
இவண்:
ராமசாமி மேஸ்திரி.
ரகசியக் குறிப்பு: முடிந்தால், அடுத்த ‘ தமிழ்மேஸ்திரி-செம்மேஸ்திரி 2016 விழா’வை நீங்கள் ஊட்டியில் நடத்தும்போது, பிற, அடுத்து நிகழ்த்தப் போகும் சதிகளைப் பற்றிப் பேசலாம். உஸ்ஸ்ஸ்! உளவாளிகள் ஜாக்கிரதை!!
பின்னிணைப்பு:சாஸ்திரீய மேஸ்திரிய கீதம்
மேஸ்திரியத மேஸ்திரியித மேஸ்தா
மேஸ்திரியுமு ரக்ஷதே
மேஸ்திரியஸ்ய மேஸ்திர மாதாய
மேஸ்த்ரியேவா வஸிஷ்யதே!
ஓம் மேஸ்திரி மேஸ்திரி மேஸ்திரி ஹி…
அலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )
October 4, 2015 at 16:15
தஞ்சாவூரில் ஊரின் ‘நடு சென்டரில்’ பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் மேசன்களுக்கு ஒரு ‘லாட்ஜ்’உள்ளது.’லாட்ஜ் பிரகதீஸ்வரா'(?)என்று பெயர்.
அந்தக் கட்டிடம் இருப்பதே தெரியாமல் மிகவும் ரகசியமாக ஒளித்து வைத்தது போலத்தான் இருக்கும்.சுற்றிலும் பர்மா பஜார் என்ற வெளிநாட்டுக் கடத்தல் பொருட்கள் விற்கும் குட்டிக்கடைகள்.
எல் ஐ சி வளர்ச்சி அதிகாரி ஒருவர் அதில் உறுப்பினர்.அடிக்கடி அலுவலகத்தில்
எங்களுக்கெல்லாம் இனிப்பு,காரம்,காப்பி வழங்குவார்.காரணம் கேட்டால் ‘எங்கள் லாட்ஜில் ஒரு பரீட்சையில் தேர்ச்சி பெற்றேன்’ என்பார்.’என்ன பரீட்சை?’என்று கேட்டால் ‘அதெல்லாம் சொல்லக்கூடாது.ரகசியக் காப்புப் பிரமாணம் கொடுத்துள்ளேன்’ என்பார்.அவர் சொல்லும் பாணி கொஞ்சம் அச்சம் ஊட்டுவதாகவே இருக்கும்.
நான் அவ்ர் அலுவலக்த்தினுள் நுழையும் போதெல்லாம் ‘வாரும் ஐயா! சுதந்திர மேஸ்திரியாரே!’என்றுதான் வரவேற்பேன்.நீங்களும் ‘மேஸ்திரி மேஸ்திரி’ என்று போட்டுத் தள்ளியவுடன் என் பழைய நாட்களின் நினைவு வந்துவிட்டது.’மேஸ்திரிக்கு எநத வீடு பிடிக்கும்’ என்ற பாடலையும் குறிப்பிடுவீர்கள் என்று ஆவலுடன் படித்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.
அந்தக்காலத்தில் இவர்களைப்பற்றி பெரியவர்கள் ‘தலை வெட்டி சங்கம்’ என்று குறிப்பிடுவார்கள். சிறுவனாக இருந்தபோது அவர்கள் ச்ங்கத்தில் நரபலி கொடுப்பார்கள் என்று எண்ணி பயப்படுவேன்.கொஞ்சம் பெரியவனான் பின்புதான் தெரிந்தது, சங்க உறுப்பினர்கள் ‘கிராப்’ வைத்துக் கொள்ள வேண்டும் என்பது.குடுமியை வெட்டிவிட்டு கிராப் வைத்துக்கொள்வதைதான் ‘தலை வெட்டி’என்று சொல்லி சிறுவனான என்னை பய்முறுத்தி வைத்திருக்கிறார்கள்.
அந்த வேங்கட சுப்பிரமணியனை விட அதிகமான ஆய்வுகளைத் தரவுகளுடன் கொடுத்த உங்களைப் பாராட்டுகிறேன்.:)
அவர்களுடைய கட்டிடங்களுக்கெல்லாம் ஏன் நம்மூர் தங்கும் விடுதிகளைப் போல ‘லாட்ஜ் லாட்ஜ்’ என்று பெயர் வைக்கிறார்கள் என்று யாராவது ஒரு சுதந்திர மேஸ்திரியைக் கேட்டு சொல்லுங்களேன்.
October 4, 2015 at 17:10
சார் இந்த பெரி மேசன்றாங்களே, அவரும் மேஸ்திரியோ? பெரிய மேசன் எல்லாம் மேஸ்திரியாறது சகஜம்தானே?
October 4, 2015 at 18:22
ஹையா …….வாரத்தில் ஒருவர், இவரிடம் மாட்டிக்கிறாங்க ……வாங்கிக் கட்டிக்கொள்ள ,, ஜாலிதான் நம்பாடு , நன்றாக சிரிக்கலம் ….
(இஸ்திரிகளுக்கு இனிமையான பக்கம் உண்டு. ஆனால், அதனைச் சுவைக்க அழுத்தித் தேய்க்கப்பட்ட துணிகளை கொஞ்சம் நக்கிப் பார்க்கவேண்டும்….)
October 5, 2015 at 08:14
மேசன் என்றால் எஸ்ராவிய தமிழில் சித்திரை-வைகாசிப் பிள்ளை என்றுதானே முழிபெயர்க்க வேண்டும்? மேஸ்திரி என்று நீங்கள் மொழிபெயர்த்ததிலேயே தெரியவில்லையா நீங்கள் வெறும் ப்ளாஸ்திரி என்று?
October 5, 2015 at 16:16
ராமசாமி சார் சரியான satire mood ல் இருப்பீங்க போல.
தொடர்ந்து satire post.சிரிச்சி சிரிச்சி முடியல சார்.பொதுவாவே நீங்க எது எழுதுனாலும் satire இருக்கும்.complete satire னா எங்களுக்கு குஷி தான்.
October 6, 2015 at 06:46
ஒரு வேளை அந்த லெட்டெர எழுதுனவரு நிஜமாலுமே மேசன்ங்கள நம்புவாரோ ?
ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி எங்க தாத்தா, அவர அவரோட ஏதிரிகள்(?) கொலை செய்ய
வாறதா சொல்லி எங்கயாவது போய் ஒலிஞ்சுக்குவார். எங்க பாட்டி கிட்ட கேட்டா அந்த மனுசனுக்கு கிறுக்கு பிடிச்சிகிச்சுனு சொல்லுவாங்க.
ஆனா, எங்க பக்கத்து தெருவுல எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே சாமிகிட்ட மன்னிப்பு கேக்குற ஒரு க்ரூப்ல போய் அவரு சேர்ந்துட்டார். அவுங்க அவரு சொன்னத நம்பினாங்க. எங்க தாத்தாவுக்காக தினமும் ஸ்தோத்திரம் சொன்னாங்க. அந்த குரூபோட லீடர், ஒரு அம்பது வயசு சிஸ்டர். அந்த அம்மா பளபளப்பான கருப்பு நெரங்கரதால, அவங்க புடவையும், பல்லும், கண்ணும் ரொம்ப வெள்ளையா தெரியும். யாராலையும் புரிஞ்சிக முடியாத எங்க தாத்தாவ அவங்க எப்படி புரிஞ்சிகிட்டாங்கனு ஆச்சர்ய பட்டேன். இப்போதான் தெரியுது அவங்க ஒரு மேஸ்திரினு.
ஏன், இரண்டு நாளைக்கு முன்னாடி நான் கூட உங்களுக்கு free அட்வைஸ் கொடுத்தேன். ஒரு வேல நானே மேஸ்திரி’யா இருப்பேனோ ?
October 6, 2015 at 07:01
ஹா ஹா. இது தான் வரிக்கு வரி பதில் என்பதா. ஆனால் எனக்கு புது பதிவு விவரம் Rand.org கிடைத்தது. நன்றாகவும் உள்ளது. So double thanks. ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தான் பாவம். நாசாவில் பார்த்தால்,நான் விசாரித்ததை கூறுங்கள்.
October 6, 2015 at 08:34
“ஆனால் அரவிந்தன் நீலகண்டன் தான் பாவம். நாசாவில் பார்த்தால்,நான் விசாரித்ததை கூறுங்கள்.”
அரவிந்தன் நீலகண்டனா? அல்லது அரவிந்தன் கண்ணையனா?
October 6, 2015 at 09:17
அய்யன்மீர்,
எம்பெருமான் அரவிந்தன், செந்தாமரையோன் — நீலக்கழுத்தோனாக இருந்தால் என்ன, கண்ணின் மணியின் மகோன்னத மாமானுடனாக இருந்தால் உங்களுக்கு என்ன?
எல்லாம்வல்ல பரம்பொருளின், சோதிச் சொரூபனின் பலப்பல தகத்தகாய வடிவங்களன்றோ அவர்கள்?
வாழ்க பழமுடன்,
மகாமேஸ்திரி.
October 6, 2015 at 09:31
யோவ் மகாமகோ மேஸ்த்ரீங்க்ளா!
கொஞ்சம் வுட்டுப் பிடிக்லாம்னாக்க, இம்மாங் கிண்டல் பண்றீங்க்ளேடா!
ஒர்த்தர் பெரிமேசன்ண்றாரு, இன்னொர்த்தர் மக்குப்பிளாஸ்திரிண்றாரு, இன்னொருத்தரு ரேடியல் டயரு சடையருண்றாரு. இன்னாபா மொஹமது, என் தலேல ஒரு மசுர் கூட இல்லைங்க்றேன், என்னை நீ சடையண்றே… வொனக்கே நல்லாகீதா?
யோவ் முத்துராமகிஷ்டன்! லாட்ஜுன்னா என்னன்னிட்டு, ரூம்பு போட்றது எதுக்குன்னிட்டு – என்னையா கேப்ப? அதெ போய் லயன் டாக்டர் சித்தமருத்துவ காளிமுத்து கிட்ட கேப்பயா, எங்கிட்டயா? றொம்ப துள்றியே, நேரக்க கவிராஜ் டாக்டர் சிவராஜ் கிட்ட போனட்ச்சி வொனக்கேவொனக்கா ஒரு செட் தங்கபஸ்பம் ஆர்டர் பண்ணட்டா? அப்றம், கோமணத்துக்குள்ள அடங்காது, ஜாக்ரதை…
பெரிஸ்ஸா பின்னூட்டம் போட வந்த்ட்டானுவ…
பாவீங்க்ளா, வுருப்டுவீங்க்ளா?
யோவ், நான் றொம்ப ஆண்மீகம்டா! அந்தப் பொறம்போக்கு ப்ர்ஹ்ம்மனே, மவனே, ஒரு மேஸ்த்ரிதாண்டா! நாமெல்லாஞ் சித்தாளுங்கதாண்டா!
இதெ புர்ஞ்சிக்கினா வாள்க்கையே வளம்தாண்டா!
ஸர்வம் மேஸ்திரிமயம் ஜகத்!
ராமேஸ்திரி.
October 6, 2015 at 15:01
என்ன நைனா .. ஒரே மெர்சலா கீது !!!! இப்போ இன்ன பிரச்னை ? வூடு பூந்து கலாசிர்லாம்