இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (1/3)
July 13, 2015
(அல்லது) ரமதான் மாத மனஅழுத்தங்கள்
… என் மகன், அவன் வகுப்புக் குழந்தைகளுடன் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஒரு முஸ்லீம் பெரும்பான்மை கிராமத்துக்கு – சென்றவாரம் போயிருந்தான்; மதியத்திலிருந்து சாயங்காலவேளை வரை அவர்கள் அங்கு கழித்திருக்கிறார்கள். மாலை மயங்கும் நேரத்தில் அக்கிராமத்தினர் அன்புடன் அளித்த இஃப்தார் விருந்தில் (ரமதான் நோன்பு முடிக்கும் தருணம்) கலந்துகொண்டு, அங்குள்ள மதறாஸாவின் குழந்தைகளுடன் அளவளாவி கண்டமேனிக்கும் இனிப்புகளை சந்தோஷமாக, வயிறு உப்ப உண்டுவிட்டு – வீட்டுக்கு வந்து, இரவு உணவுவேண்டாம் என்று சொல்லித் தூங்கியே விட்டான். :-)
![என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: ... [நாம் வீட்டில் பாடும்] அல்லாஹூ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் - அதன் பெயர் முஸ்தஃபா. அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது... ...](https://othisaivu.files.wordpress.com/2015/07/screenshot-from-2015-07-09-211242.png?w=300&h=232)
என் மகனின் ஆங்கிலமூல நாட்குறிப்புகளில் இருந்து ஒரு பகுதி: … [நாம் வீட்டில் பாடும்] ‘அல்லாஹூ’ பாட்டுபோன்ற ராகத்தில் ஒரு பாட்டை அவர்கள் பாடினர் – அதன் பெயர் ‘முஸ்தஃபா.’ அவர்கள் மிக அழகான வெண்மை நிற ஆடைகளை, தொப்பிகளை அணிந்திருந்தனர். அவர்கள் ஜிப்பாக்களுக்குக் காலர்கள் இருந்தன. மதறாஸாவின் ப்ரின்ஸிபல் பெயர் இப்ரஹீம். அவர் நான்கு ஆண்டுகளாக அங்கு ஆசிரியராக இருக்கிறார். [கிராமத்தில்] மஸ்ஜித் 42 ஆண்டுகளாக இருக்கிறது… …
ஆனால் இப்பேச்சு கொடுத்த உந்துதலால், மேலதிகமாகச் சிலபல காரணங்களால், நான் இதனை எழுதிக்கொண்டிருக்கிறேன். :-(
ரமதான் (அல்லது ரம்ஸான்) மாதத்தில், முஸ்லீம்கள் நோன்பிருக்கப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் இது வெறுமனே, பலரும் நினைத்துக்கொண்டிருப்பதுபோல (பலப்பல முஸ்லீம்களும் நினைத்துக்கொண்டிருக்கிறபடி), வானத்தில் சூரியனிருக்கும் சமயம் சாப்பிடாமல் இருந்து, சடங்குத் தொழுகைகளைச் செய்து, சூரியன் அஸ்தமனம் ஆனவுடன் மசூதியில் இருந்து அவசரம்அவசரமாக வெளியேவந்து, ஸமோஸாக்களையும் ரொட்டிகளையும் சாப்பிட்டு தொப்பையை ரொப்பிக் கொள்வதல்ல. அதேபோல சூரிய உதயத்துக்கு முன் வயிற்றை நிறைத்துக் கொள்வதல்ல. இதற்கும், சூரிய, சந்திர க்ரஹண சமயத்தில் உண்ணாமல் – அதற்கு முன்னும் பின்னும் தொந்தியை ரொப்பிக் கொள்வதற்கும், அமாவாசை பலகாரங்களுக்கும் ஒரு சுக்கு வித்தியாசமும் இல்லை.
இந்த ‘நோன்பு’ என்று நடைமுறையில் மிகவும் நீர்க்கடிப்பட்ட வெறும் சடங்கு – அரபிய மூலத்தில் இது ‘ஸ்ஸாவ்ம்‘ எனும் அழைக்கப்படும் பதம். இதன் ‘ஒருமாதிரியான’ அர்த்தம் – ‘செய்யாமல் இருப்பது‘ – அவ்வளவுதான். ஆனால் இந்த ‘செய்யாமல் இருப்பது’ என்பது ஸ்ரீ ரமண மஹரிஷி ஒரு சமயம் சொன்னது போல ‘சும்மா இரும்’வகைதான்.
அதாவது இந்த ஸ்ஸாவ்ம் போது – ஒரு முஸ்லீம் ஆனவள், தன் வாழ்க்கை முறையை, நடப்புகளை மறுபரிசீலனை செய்து கொள்ளவேண்டும். தவறுகளைக் களைந்து, மேம்படுத்திக் கொள்ளவேண்டும். அவள், தனக்குப் பிடிக்காதவர்களுடன், எதிரிகளுடனும்கூட – சமரசம் செய்துகொள்ளவேண்டும். சம்போகத்தில் ஈடுபடவேகூடாது.
கால்களை உபயோகித்து கண்ட இடங்களுக்குப் போகாமல் இருக்கவேண்டும். வாயினால் வம்பு பேசாமல், புறங்கூறாமல், பொய் சொல்லாமல் இருக்கவேண்டும். கையினால் – தன்னுடையதல்லாத எந்த பொருளையும் தொடாமல் இருக்கவேண்டும். காதுகளால் வம்புகளை, ஆபாசங்களைக் கேட்டுக்கொள்ளாமல் இருக்கவேண்டும். கண்களால் எந்த அற்ப விஷயத்தையும், நீதிக்குப் புறம்பானவைகளையும், கேளிக்கைகளையும் பார்க்காமல் இருக்கவேண்டும். (அதாவது: இக்கால சுயமரியாதையுள்ள முஸ்லீம், ரமதான் மாதத்தில் – இணையம், ஸெல்ஃபோன் பக்கமே வரக்கூடாது!)
வெறுமனே சோறு தண்ணியில்லாமல் சடங்குத்தனமாக நோன்பு இருப்பதற்கு, மசூதி சென்று சடங்குத் தொழுகை செய்வதற்கு – மிகமிக அப்பாற்பட்டு, மேல்மாதிரி அடிப்படைகளான ஸ்ஸாவ்ம் விஷயங்களில் தன்னைக் குவியப்படுத்திக்கொள்ளவேண்டும்.
உடலை, மனதைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். கண்ட, அற்ப விஷயங்களைச் ‘செய்யாமல் இருக்க‘ வேண்டும்.
இப்படிச் செய்பவன்தாண்டா சரியான முஸ்லீம்! மற்றவர்களெல்லாம் வெறும் சடங்கு, பொழுதுபோக்கு முஸ்லீம்கள்தான்.
…சொல்லப் போனால், இந்த இரண்டாம் ஜாதியினரை – எனக்குத் தெரிந்த சில முஸ்லீம் சான்றோர்கள், முஸ்லீம்களாகவே கருதுவதில்லை; ஆனால், பிரச்சினை என்னவென்றால் – சடங்கு முஸ்லீம்களிடம் மட்டும்தான், அதுவும் அதன் பழமைவாத_சுயலாப சமூகத் தலைவர்களிடம்தான் அச்சமூகத்தின் அதிகாரம் குவிந்திருக்கிறது; அதனால்தான் – முதல் ஜாதியினரான – போற்றத்தக்க ஸூஃபி முஸ்லீம்களிடம் அதிகாரம் இல்லாதது மட்டுமல்லாமல், தமிழ் நாட்டில் அவர்களை ‘பிணச் சாமிகள்‘ என்று கேவலப்படுத்துவதும் முடிகிறது.
… இந்தச் சடங்கு முஸ்லீம்கள் – மைக்வைத்து நடத்தும் கனகம்பீர இஃப்தார் ‘பார்ட்டி’ எழவுகளும் (=அரசியல்பேரங்கள் + அற்ப சுயவிளம்பரங்கள் என்றறிக!) இப்படித்தான். ஆனால், பார்க்கப்போனால் – இம்மாதிரி விருந்துகள் – பாவப்பட்ட ஏழைகளுக்கும், அழையா விருந்தினர்களுக்கும் (அதிதிகள்) அளிக்கப்படவேண்டியவை. கருணையுடன் செய்யப் படவேண்டியவை; படாடோபம் இல்லாமல், மூன்றாம் மனிதர்களுக்குத் தெரியாமல், விளம்பர மோகம் இல்லாமல் செய்யப்படவேண்டியவை. ஆனால் இவற்றிலும் திராவிடத் தலைவர்கள் புகுந்து நோன்புக் கஞ்சியை டீவிகாரர்களின் கேமராவுக்குத் தெரியும்போலச் சரியாக நின்றுகொண்டு – அதனைக் குடிப்பதாக நடித்து, மதச் சார்பின்மை எழவை நிலை நாட்டும் பாங்கிற்கு, கயமைப் பொய்மைகளுக்குத் தளம் அமைத்துத் தருபவர்கள் – இந்தச் சடங்கு முஸ்லீம்கள்!
இவர்களால், இஸ்லாமுக்கு மட்டுமல்ல, மானுடத்துக்கே கேவலம்.
சுமார் 12 வருடங்கள் முன் வரைகூட, நண்பர்கள் தங்கள் இல்லங்களில் நடத்திய இப்படிப்பட்ட இஃப்தார்களுக்குச் சென்றிருக்கிறேன் – பல ஏழைகள் பசியாறுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதன் அடிப்படை – இக்காலங்களில் வெறும் டாம்பீகச் சடங்குகளாக, மாஃபியா குண்டர்களின் கூடாரமாக மாறிவிட்டதால் (“இந்த கஞ்சிக் கலயத்தின் உபயதாரர்: ஹாஜி லியாக்கத்கான், தங்கக் கடத்தல் விற்பன்னர்” என்றுதான் ஒரு ஃப்லெக்ஸ் தட்டியை வைத்துக் கொள்வதில்லை, அல்லாவுக்கு நன்றி!) இந்த எழவுகளுக்கெல்லாம் செல்வதேயில்லை. என்ன சோகம் இது.
சரி.
இதே ரமதான் மாதத்தில் 8 நாட்கள் முன்பு – இஸ்லாமிக்ஸ்டேட் அயோக்கியர்கள் இரண்டு பாலகர்களை – கழுத்தறுத்துக் கொன்றிருக்கிறார்கள். அவர்கள் செய்த பாவங்கள் இரண்டு: 1) அவர்கள் க்றிஸ்தவச் சிறுவர்கள்; 2) மோஸுல் பகுதியில், மாலை 4 மணி வேளையில் பசி தாளாமல், இச்சிறுவர்கள் ஒரு பன்னைச் சாப்பிட்டது. இந்தப் படுகொலைகனைப் பார்ப்பதற்கு, அச்சிறுவர்களின் பெற்றோர்களையும் அழைத்துவந்திருக்கிறார்கள். (இந்த ஒழிக்கப்படவேண்டிய அயோக்கிய கும்பலுக்குத் தான் – தமிழக முஸ்லீம் இளைஞர்கள் சிலர் டீஷர்ட் அணிந்து, ஆட்காட்டி விரலை அசிங்கமாக மேல் நோக்கிக் காட்டி, தங்கள் மதம் பிடித்த மதவிசுவாசத்தைக் காட்டி, புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்!)

மார்ச் 2015 மாத வாக்கில் – இஸ்லாமிக்ஸ்டேட் அற்பர்களால் கொல்லப்பட்ட ஒரு க்றிஸ்தவச் சிறுமி; இது ஒரு கத்தோலிக்க நண்பர் மூலம் கிடைத்தபடம். இதன் விவரத்தை என்னால் முடிந்தவரை சரிபார்த்தபின்னர்தான் பதித்திருக்கிறேன். கோரமான படத்துக்கு மன்னிக்கவும்.
இந்த அயோக்கியத்தனத்தை ஆதரித்துவேறு ஒரு தமிழ்(!)முஸ்லீம்(!!) அன்பர்அற்பர், ஷாரியா எல்லாம் மேற்கோள் காட்டி என்னுடன் விவாதம் செய்து கொண்டிருக்கிறார். இம்மாதிரி அற்பர்கள், அரைகுறைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் குழந்தைகள் இருக்கிறார்களா – இருந்தால், அவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள், இப்பதர்களுக்கு இதயம் என ஒன்று இருக்கிறதா என்பதெல்லாம் தெரியவில்லை…
இம்மாதிரி ஒருவர் கூட – அவர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக நம்பும் கொர்-ஆன் ஆவணமுமேகூட – ஷாரியாவைப் பின்பற்றுவதை – நேர்மையான, நன்னடைத்தையுடைய, நெறிசார்ந்த ஒரேமுறையாகவா (=righteous) சொல்கிறது – எனும் கேள்விக்கு பதில் கொடுப்பதில்லை. முட்டாள்கள். அவர்களுக்கும் ஒரு எழவும் புரியாத அரபு மொழியில் உச்சாடனம் செய்யும் மானுட வெறுப்பாள அற்பர்கள், வேறென்ன சொல்ல! இந்தியாவின் உள்ள நடைமுறை ஜனநாயகத்தின் சகல வசதிகளையும் அனுபவித்துக்கொண்டு, தொடர்ந்து இந்தியாவின் மீதும் வெறுப்பை உமிழ்கிறார்கள்.
அரைகுறைத்தன அயோக்கியம் வாழ்க.
(அற்ப ஜிஹாதிகள், ஃபேஸ்புக்-டிவிட்டர் விசிலடிச்சான்குஞ்சுக் கூவான்கள் அல்லாத – அரபிய மொழி தெரிந்தவர்கள், அறிஞர்கள், மேற்கண்டதில் தவறுகள் இருக்கின்றன என்று சொன்னால் என்னைத் தாராளமாகத் திருத்திக் கொள்கிறேன்.)
இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில கருத்துகள்
… மேற்கண்ட தலைப்புடன் தொடர்புடைய சில விஷயங்களை முன்பு ஒருசமயம், எனது (இறந்துவிட்ட கர்ட்) தோழியான கில்யஸ் அவர்களுடன் நடத்திய உரையாடல்களின் சாராம்சமாக எழுதியிருக்கிறேன்; அதில் இந்தியாவின் முஸ்லீம் சமூகத்தின் தற்காலத் தேக்கநிலை குறித்த பல கருத்துகளைத் தொகுத்து, கொஞ்சம் விவரமாகவே எழுதியிருந்தேன். (கில்யஸ்: மேலும் சில நினைவுகள் + இந்திய/நடைமுறை இஸ்லாம்: சில குறிப்புகள் 09/04/2015)
இப்போது இந்தப் பதிவில் – இங்கிலாந்துக்காரரும், நான் மிகவும் மதிக்கும், ஆகவே – சிறிதளவு நன்கொடையும் கொடுத்திருக்கும் – க்வில்லியம் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவருமான மகத்தான மாஜித் நவாஸ் அவர்களின் வழியாக என்னை வந்தடைந்த சில செய்திகளில் ஒன்றை ‘தமிழ்ப் படுத்தித்’ தருகிறேன். (இது பின்வரும் பகுதிகளில் வரலாம் என நினைக்கிறேன்!)
க்வில்லியம் – ஒரு தீவிரவாத எதிர்ப்பு தின்க்டேன்க், சிந்தனைமையம்; மாஜி தீவிர இஸ்லாமியவாதிகளால் நடத்திச் செல்லப் படுவது; இதில் ஈடுபட்டிருக்கும் பலரும், முன்னாட்களில், பொய்க் கற்பிதங்களின் காரணமாக – நுரைபொங்க தீவிர இஸ்லாம்வாதம் பேசியவர்கள், பயங்கரவாதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெகுதீவிரமாக ஈடுபட்டவர்கள், முஸ்லீம் அல்லாதவர்களை இஸ்லாம் அல்லாதவைகளை ஒழிக்க முயன்றவர்கள்; ஆனால், இப்போது தங்களைத் திருத்திக்கொண்டு – அதற்கு நேரெதிர்த் தரப்பை எடுத்து, பழமை/வெறுப்புவாதிககளின் மிரட்டல் -கொலைமுயற்சிகளுக்கும் பயப்படாமல், சுணங்கிப் போகாமல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்; நல்லிணக்கத்துக்காகவும், தீவிரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்காகவும், இஸ்லாமையும் மேன்மைப் படுத்துவதற்காகவும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சில கோரிக்கைகள்: இவர்களின் தளத்தை அணுகும் போது சிறிது பொறுமை வேண்டும்; உங்களுடைய இணையவுலாவியின் காலதேசவர்த்தமானங்களைப் புரிந்துகொண்டபின்தான் அவர்கள் தளம் உங்களுக்குத் திறக்கும். அவர்களுடைய பாதுகாப்புக்காக, தளமேலாண்மைக்காக இந்த விஷயம். அவர்களுடன் தேவையற்று, அற்ப ஜிஹாதி விளையாட்டுகளை விளையாடவேண்டாம்; வெறியுடன் ஆடிக்கொண்டிருக்கும் வால்களை, ஒட்ட நறுக்குவதற்குத் தேவையான உபகரணங்கள், சூட்சுமங்கள், பக்கபலங்கள் அவர்களிடம் இருக்கின்றன. நன்றி. ((க்வில்லியம்))
சரி. என் கேள்வி என்னவென்றால் – நம் இந்தியாவின், குறிப்பாக நம்முடைய தமிழகத்தின் மாஜித் நவாஸ்கள், ஷைக் மொஹெம்மத் தஹீர் அல் க்வத்ரிகள், ஷேக் முஹம்மெத் அல்-யாக்வூபிகள், ஹரஸ் ரஃபிக்குகள் எங்கே? :-(
இஸ்லாமைச் செறிவுபடுத்த, மேம்படுத்த – அதன் பழமைவாதப் போக்குளைப் புறம்தள்ளி, அதன் மதம் சார்ந்த எழுத்துகளை – கம்பீரத்துடன், தைரியத்துடன், தற்கால மானுடத் திரளின் தேவைக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்து – மற்ற மக்களோடு இணக்கத்தோடு நடந்துகொள்ளும் போக்குகள் ஏன் நம்மிடையே இல்லை? (இவற்றுக்குப் பதில் என்னுடைய மேற்கண்ட கில்யஸ் பதிவில் பெரும்பாலும் இருக்கிறது, இருந்தாலும்…)
ஹ்ம்ம்… தற்போது, நான் அறிந்தவரை, நம்மிடம் மாஜித் நவாஸ்கள் ஒருவர்கூட இல்லை. ஏனெனில், நமக்கு லபித்தது வெறும் ஆலூர் ஷாநவாஸ்கள்தான். அவர்களுடைய ஓலங்கள்தான், கமுக்கமான பரப்புரை மட்டுமேதான்! ஏனெனில், நம் தங்கத் தமிழகமே அற்பசராசரிகளின் ராஜ்ஜியம் அல்லவா? (மேதகு ஷா நவாஸ் அவர்களின் படத்துடன் களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? 26/02/2013)
இப்பதிவு வரிசையை, நான் இப்போது எழுதுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள்.
(தொடரும்)
அடுத்த பகுதி: இந்திய முஸ்லீம் சமூகம், அதன் ஏகோபித்த சுயலாப-பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (2/3)
July 13, 2015 at 13:06
http://www.faithfreedom.org/ffiprologue/
நேரமிருப்பின் மேற்கண்ட தளத்திற்கு சென்று பார்க்கவும். மனிதர்கள் மாறுவதற்கு 0.0000000001% வாய்ப்பு இருக்கிறது. கொடிய விஷம்=islam அதன் தன்மையிலிருந்து மாறாது. ஸூஃபி, மனிதநேயம் என்று எப்படி கும்மியடித்தாலும் அடிப்படை விஷ(ய)ம் மாறாதவரை நாம் வெறும் முண்டங்களே.
கணேஷ்
July 14, 2015 at 16:34
அய்யா,
உங்கள் கோபம் புரிகிறது.
இஸ்லாம் என்பது விஷம் என்று என்னால் பொத்தாம் பொதுவாகச் சொல்லமுடியாது. ஆனால் உங்கள் அனுபவங்களைப் பொறுத்து உங்கள் அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில் – கொர்-ஆன், வெறும் ஷாரியா, ஹதித் போன்ற மதச் சாரங்களுக்கு அப்பாற்பட்டு இஸ்லாமானது பல உச்சங்களை அடைந்திருக்கிறது. (ஆனால் வெறும் மதச்சாரத்தை மட்டும் நம்பி தத்துவச் சாரங்களை விட்டுவிட்டதால் தான் அக்பர் ஔரங்க்ஸெப் கஸ்னியின் மொஹெம்மத் போன்றவர்கள் காலத்தில்/மற்ற காலங்களில் படுகோரப் பிறழ்வுகள் ஏற்பட்டன. நீங்கள் இவர்களைப் போன்றவர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பழிக்க முடியாது அல்லவா? கருணாநிதி ஒரு தமிழர் (!) என்பதால் மட்டுமே தமிழர்களெல்லாம் அயோக்கியர்களாகி விடுவார்களா, சொல்லுங்கள்?)
தற்போதைய (அதாவது கடந்த 120 வருட வரலாற்றின்) படி – பலவிதமான மோசமான சிடுக்கல்களால் (இவை எதற்குமே இஸ்ரேலோ, அமெரிக்காவோ காரணமில்லை!) – இஸ்லாம் வெறும் அரபுமயமாக்கப் படுதல், ஆகவே பன்முக இஸ்லாம் ஒழிதல், அரபு தேசியங்கள் இஸ்லாம் மயமாக்கப் படுவது, குறுங்குழு மக்கள் திரள் வாதம், மத்திய வர்க்கம் சரியாக வளராமை, கயமைவாதத் தலைமைகள் போன்ற ஆயிரம் பிரச்சினைகள். நேரம் கிடைத்தால், விரிவாக எழுதவேண்டும்.
எனக்கு, நான் மதிக்கும் பல முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் அரைகுறை வாதத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர்களுடைய இஸ்லாம் என்பதே வேறு. நான் என் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு ஜிஹாதிக் கிறுக்கன் சொன்னால், சில முஸ்லீம் அரைகுறைகள் திட்டி எழுதினால் – அதனால் என் கருத்துகளை மாற்றிக் கொன்ளமுடியாது.
நன்றி.
July 15, 2015 at 10:36
மேற்கண்ட போலித்தனங்கள் அயோக்கியத்தனங்கள் முஸ்லிம்களிடம் மட்டுமா இருக்கிறது? எனக்கு ஹிந்துத்துவர்களைப் பார்க்கும்போது இதே ஆத்திரம்தான் வருகிறது. ராமர் பிறந்த இடத்தை மீட்கக் கிளம்பி நாட்டில் பல இடங்களில் ரத்தக்களறி நடக்கக் காரணமானவர்கள் எத்தனை கோவில் சொத்துகள் அற்பர்களிடம் (சில சமயம் திராவிட, சில சமயம் இந்துத்துவ சக்திகளிடம் கூட – எங்கள் ஊர் கோவில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து ஏமாற்றிக்கொண்டிருந்தவர் VHP அற்பர்.) சிக்கிக்கிடப்பதைக் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்பது பெரிய நாவல் அளவு வளரும் சமாசாரம்.
கிறிஸ்துவர்களிலும் இதேதான் கதை. இந்துத்துவர்கள் விஷயமும் இப்படியே. மத மாற்றம், கர் வாப்ஸி பற்றிக் கூக்குரலிடும் ஹிந்துத்துவர்களில் எத்தனை பேர் இந்து மதம் விதித்த கடமைகளை ஒழுங்காக செய்கிறவர்கள்? இந்துக்களும் கிறிஸ்துவர்களும் முஸ்லிம்கள் போல் நேரடி வன்முறையில் ஈடுபடுவது குறைவு என்று நீங்கள் வாதிடலாம். ஆனால் அயோக்கியத்தனம் அயோக்கியத்தனம்தானே?
‘ஸ்ஸாவ்ம்’ பற்றி நீங்கள் எழுதியுள்ளது ஆண்டாளின் “செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி”யை நினைவுபடுத்துகிறது. மார்கழியில் இந்தப் பாசுரத்தைப் பாடி மனம் நெகிழ ஹிந்துத்துவர்களுக்கு நேரம் உண்டா? குறைந்த பட்சம் இப்படி ஒரு பாசுரம் இருக்கிறதென்றாவது எத்தனை ஹிந்துத்துவர்களுக்குத் தெரியும்? எல்லா மதங்களிலும் அன்பும் உள்ளார்ந்த அழகுணர்ச்சியும் இருக்கிறது. அதை அசிங்கப்படுத்துவது பிற மதங்கள் அல்ல. சொந்த மத மோகிகளான அடிப்படைவாத வெறுப்பு அரசியல் வெறியர்கள்தான்.
வன்முறையைத் தூண்டாத, ஜிஹாத் போன்ற விஷயங்களே இல்லாத ஒரே மதம் என்ற வைதீக மதத்தின் பெருமையை அழித்து ஹிந்துத்துவா என்ற கெட்ட வார்த்தைக்குள் அதை அடக்கிய பெருமை காவிக்கும்பலையே சேரும்.
எல்லா மதங்களுமே தர்மத்தை போதித்து அதன்மூலம் எளிய மக்களைப் பாதுகாக்கவே ஏற்பட்டது. ஆனால் மதம் மனிதன் கண்டுபிடித்த மற்ற விஷயங்களைப்போல- இல்லை- மற்ற எல்லாவற்றையும் விட அதிகமாக அதிகார மையங்களின் கைப்பாவையாக ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியாது.
July 15, 2015 at 12:44
எல்லா மதங்களிலும் வெட்டி குண்டர்கள், திரியாவரங்கள் இருக்கிறார்கள். ஆகவே, நான் ஹிந்து மதங்களில் அவர்கள் இல்லை என்று நிச்சயம் சொல்லமாட்டேன். எனக்கு இம்மாதிரி ஒரு விடலையுடன் (1984ல் இந்திராகாந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டபின் – தமிழகத்தில், என் ஊரில் இருந்த ஒரு சர்தார்ஜி குடும்பம் தாக்கப்பட்டபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்) கைகலப்புகூட ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே அய்யா, தாங்கள் எஸ்ராவைய்யா சொல்லக் கூடுவதுபோல, ‘துப்பாக்கியைக் குதித்து விட்டீர்!’ மேஜர் சுந்தர்ராஜன் மேலதிகமாகச் சொல்லக்கூடுவது போல – you jumped the gun.
இவ்வரிசையில் மூன்றாம் பதிவுக்காக, தாங்கள் காத்திருந்திருக்கலாம்.
நன்றி.