திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்

April 6, 2015

… ‘கலைஞர் டீவி’யில் மெய்மறந்து மானாடமயிலாட நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே, பாதித்  தூக்க மயக்கத்தில், கோபாலபுரத்தில் மானசீக கோபிகைகளுன் ஏகோபித்து, ஆனந்தமாக கோபிகாகீதம் பாடிக்கொண்டே உடன்இறப்புகளுக்குக் கடிதம் எழுதியே, தமிழகத்தை முன்னேற்றிக் கொண்டிருந்த நவீனகிருட்டிணர், திடீரென்று விழித்தெழுந்தார்.

ஏதேதோ சிந்தனைகள்… தூக்கமா கனவா நனவா எனத் தெரியாத குழப்ப கனவிலிநனவிலி நிலை… அதுவும் கனவுக்குள் கனவுகாணும் கந்தறகோளம். கதம்பமாகக் கலந்தடித்த எண்ணவோட்டங்கள்…

என்னையே ஏமாற்ற முயன்ற அந்த கேடி சகோதரர்கள் எப்படி ஒழிந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் மக்கள்? 2ஜி+கலைஞர்டீவி ஆரியச் சதியால், மகளும் மனைவியும் துணைவியும் ஒருசேர சிறைபிடிக்கப்படுவார்களோ? மஞ்சள்துண்டினை விட்டெறியும் காலமும் வருமோ?

அறிவாலயத்தைப் பீரங்கி கொண்டு நானே பிளக்கும் காலமும் வருமோ? எனக்கு மோட்சம் கிடைக்குமோ? என் குலக்கொழுந்து இசுடாலினார் பொறுமையாக இருப்பாரோ – அல்லது ஔரங்க்ஸெப், அவன் தந்தை ஷாஜெஹானைச் சிறையில் அடைத்ததுபோல் நடந்துவிடுமோ?  என் கட்சியின் கோஷ்டிப் பூசல்கள் தீருமோ? கோஷ்டிப் பூசல்? என் சொந்தப் பிள்ளைகளே இப்படி பதவிக்கு ஆசைப்பட்டு கோஷ்டிகானம் செய்கிறார்களே …ஆ! …கோஷ்டி, திருக்கோஷ்டியூர்!!  திருக்கோஷ்டியூர் கோபுரப் புகழ் ராமானுஜரைப் பற்றி ஒரு புத்தகம்/அல்லது கதைவசனம் எழுதினால், என் பாவங்கள் அகலுமோ?

அய்யய்யோ, நண்பர் துரைமுருகன் வருகிறாரே! இப்போது என்னத்தான் பிரச்சினையோ! அவர் கொள்ளுப் பேரனுக்கு திமுக பேரர்கள் அணியில் பதவிவேண்டும் என்பதற்காக இருக்குமோ?அடக் கடவுளே இயற்கையே!

கிண்டலாகப் பேசவேறு ஆரம்பித்துவிட்டாரே… என்ன? ராமன் குடிகாரன் என்று வால்மீகி, என் கனவில் பேரறிஞர் அண்ணா சகிதம் வந்து சொன்னார், சரி.  அதை நான் வெளியே மஞ்சள்துண்டுடன் சொல்லப்போய் இந்துத்துவவாதிகள் என்னைக் கிழித்து விட்டார்களே! இப்ப என்ன சொல்ல வர்ரீங்க? ராமானுஜன் என்றால் எப்படியும், ராமனின் இளையசகோதரன் என்றா பொருள்? இலக்குவனா?? ஆனால், நமது இயக்கத்துக்கு ஹீரோ ராவணன் தானே? ஆகவே இராவணானுஜன் என்று எழுத வேண்டுமா?

அய்யா, துரைமு, என்னத்தான் சொல்லவருகிறீர்கள்? நான் இராவணானுஜன் என்று எழுதினால் வீபிஷணன் என்றாகி விடுமே! திராவிட இயக்கத்தின் நம்பர்#1 எதிரி, தம் சொந்த திராவிட அண்ணனைக் காட்டிக்கொடுத்த இந்த வீடணத் துரோகி அல்லவா? குழப்பாதீர்கள்… அய்யோ, இந்த இராவணன், இராமாயணக்கதைப்படி ஒரு பார்ப்பனனா? இத்தனை நாள் பார்ப்பனரையா உயர்த்திப் பிடித்திட்டோம்…

துரைமு – வெளியே சொல்லாதீர்கள், வெட்கம், வெட்கம்… தம்பீ இனமான இளவல், அடங்கா அடலேறு, மானமிகு வீரமணிகூட எனக்கு இதனைச் சொல்லிடவில்லையே? … … என்ன? அவர் பட்டிதொட்டியெங்கும் அதிதீவிரத் தாலியறுப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாரா?  சீக்கிரம் வாசக்கதவை அடைங்கடா! நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து தாலியை அறுத்துடப் போறாரு…  என்னய்யா, இந்த குழப்பத்துக்கு மேல குழப்பமாக இருக்கிறதே! இயற்கையே!!

சரி… நான் இராமானுஜனின் வரலாற்றைப் பற்றி, ஒரு பக்கா பகுத்தறிவு சார்ந்த நாத்திகப் பார்வையில் எழுதப் போகிறேன். ஆளை விடும். அண்ணாவும் பெரியாரும் என் கனவில் வந்து என்னை இப்படிப் பிராயச்சித்தமாக எழுதச் சொல்லியிருக்கிறார்கள் – அப்போதுதான் என் கட்சியில் கோஷ்டிப்பிரச்சினை அகலுமாம்! அதனால்தான்! எப்படியும், எவ்வளவு நாட்கள்தான் நானும், அழகிரி திடுதிப்பென்று வீட்டுக்கு வந்து, அவருடைய உரிமையை நிலைநாட்ட, என் சிண்டைப் பிடித்து உலுக்குவாரோ என்று பயந்துகொண்டே காலத்தைத் தள்ளுவது, சொல்லுங்கள்?

… … அய்யய்யோ, சொல்லச் சொல்லவே அழகிரி வாசல்கதவைத் திறந்துகொண்டு வருகிறாரே! ஐயகோ! நான் சாமானியன் என்பதால்தானே இதெல்லாம் எனக்கு நடக்கிறது… ஆரிய, மதவாத, வடவ, பார்ப்பனபனிய, ஏகாதிபத்திய, சங்கப்பரிவாரச் சக்திகளை ஒடுக்க உடனே புறப்பட்டுப்போய், எங்காவது ஒளிந்துகொண்டு இராமானுஜர் கதையை எழுதவேண்டுமே!

எல்லாம் என் ஜாதகம். நான் ஜாதகத்தை நம்பாவிட்டாலும், ஜாதகம் என்னை நம்புகிறதே!

 … வேர்வை சொட்டச்சொட்ட, இதயம் துடிக்க, கண்கள் பனிக்க… திடுக்கிட்டு  விழித்துக்கொண்ட தமிழினத்தின் மூத்த தலைவர் …

…ஆக – பிராயச் சித்தமாக, திருக்கோஷ்டிபுரம் போக முடிவெடுத்தார். கோஷ்டிப்பூசல்கள் நீங்க, திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள சௌமியநாராயணனைச் சரணடைவதுதான் வழி என்று கண்டுகொண்டார்.

-0-0-0-0-0-0-0-0-

ஆக… அவ்வூரில் வசித்த திருக்கோஷ்டியூர் புகழ் ராமானுஜரிடம் தெருமந்திர உபதேசம் பெறுவதற்காக, ரோமபுரி திமுக ஆச்சார்யாரான கருணாநிதி வந்தார். மிக மிக, தொடர்ந்து, மெய்வருத்தம் பாராமல், முயன்று கொண்டேயிருந்தார்… பாவம்!

அவர் விடாமுயற்சிகளின் விவரங்கள் பின்வருமாறு… (இவ்வுரையாடலுக்கான அடிப்படை ஆதாரங்கள்: நான் செத்து வாதீப ஒளி தளம்; நான் செத்து வாதினமலர்.)

ராமானுஜரின் இல்லத்திற்கு சென்ற அவர், வெளியில் இருந்து அழைத்தார்.உள்ளிருந்த ராமானுஜர், “யார்?’ என்று கேட்க, “கலைஞன் வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “கலைஞன் செத்து வா!’ என்றார். கோபப்பட்ட கருணாநிதியும் சென்றுவிட்டார்.

இரண்டாம் முறை சென்று “நான்   ‘யாரொன் ஏ மில்லத்’ வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “யாரொன் ஏ மில்லத் செத்து வா!’ என்றார். வெறுப்படைந்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

மூன்றாம் முறை சென்று “நான் சர்க்காரியாவை வெற்றி கொண்ட வீரன் வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “சிறைக்குப்போய்ச் செத்து வா!’ என்றார். வருத்தமடைந்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

நான்காம் முறை சென்று “நான், அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமாரை பலிகொண்டவன் வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “எப்படியோ, டாக்டர் பட்டத்தை  வாங்கிவிட்டாயல்லவா, இங்கு எதற்கு வந்தாய், போ!’ என்றார். விதிர்விதிர்த்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

ஐந்தாம் முறை சென்று “நான், டாக்டர்  வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “நீயே உனக்கு மருத்துவத்தைச் செய்துகொள், என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார்.  நோயுற்ற கருணாநிதியும் சென்றுவிட்டார்.

ஆறாம் முறை சென்று “நான், ஒரே சமயத்தில் – மதவாதிகளை எதிர்த்தவும் ஆதரித்தவனும், திராவிடத்தை எதிர்த்தவனும் ஆதரித்தவனும், ஆரியத்தை எதிர்த்தவனும் ஆதரித்தவனும், எம்ஜியாரை எதிர்த்தவனும் ஆதரித்தவனும், தமிழகத்தை எதிர்த்தவனும் ஆதரித்தவனும் – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “நீயே உன்னை ஒரேசமயத்தில் ஆதரித்துஎதிர்த்துக்கொள், என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். சலிப்படைந்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

ஏழாம் முறை சென்று “நான், திரைப்பட, தொலைக்காட்சி வசனகர்த்தா  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “என் வசனத்தையும் நீயே எழுதிக்கொள், என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். திகைப்படைந்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

எட்டாம் முறை சென்று “நானே கம்யூனிஸ்ட்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “போய் வினவு தளத்தைப் படி. சிரி. என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். புரட்சியடைந்த கருணாநிதியும் சென்றுவிட்டார்.

ஒன்பதாம் முறை சென்று “நானே முஸ்லீம்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “என்னிடம் எதற்கு வந்தாய்? புண்ணிய மக்கா போ, மக்கா!” என்றார். ஸலாமிட்டுக்கொண்டே, ரம்ஸான் கஞ்சி குடித்துமட்டுமே இஸ்லாமியர்களுக்கு ஏகோபித்த ஆதரவளிக்க, கருணாநிதியும் சென்றுவிட்டார்.

பத்தாம் முறை சென்று “நானே க்றிஸ்தவன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “என்னிடம் எதற்கு வந்தாய்? பாவமன்னிப்பு தற்சமயம் ஸ்டாக்கில் இல்லை!” என்றார். சிலுவைச் சின்னத்தையிட்டுக்கொண்டே, க்றிஸ்மஸ் கேக் சாப்பிட்டுமட்டுமே க்றிஸ்தவர்களுக்கு ஏகோபித்த ஆதரவளிக்க, கருணாநிதியும் சென்றுவிட்டார்.

பின்னர், பாவம், சிலநாட்கள் போல –  “நான், என் தள்ளாத வயதில், என் பெருகுடும்பச் சுமைகளைச் சுமப்பதற்கு, குடும்பக்கட்சியினைச் கட்டிமேய்ப்பதற்கு  அப்பாற்பட்டு,  பத்துமுறை இப்படி வெட்டியாகச் சென்றாகிவிட்டதே, ஒரு பலனும் இல்லையே! என் ஜாதகம் இப்படித்தானோ” – என்று பிலாக்கணம் வைத்தாலும், அவர் அடிப்படையில் ஒரு விடாமுயற்சிக்காரர்.  கடும் உழைப்பாளி. “நான் போடாத வேடமா? எப்படியாவது, ஆயிரம் வேடங்களைச் சுட்டியாவது,  இராமானுஜனைப் பார்த்தே தீருவேன்!” என்று கருவிக்கொண்டார்…

-0-0-0-0-0-0-0-

ஆக, பதினொன்றாம் முறை சென்று “நானே உழவன், குடியானவன, எழைச் சாமானியன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “ஒட்டு அறுவடை வேண்டாம். போய் ஏரோட்டி விவசாயம் செய். என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். உழவனாக உழைத்துச் சம்பாதிக்க கருணாநிதியும் சென்றுவிட்டார்.

பனிரெண்டாம் முறை சென்று “நான் குடமுருட்டி குண்டினை உருட்டியவன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “திருவாரூரில் குடமுழுக்கு செய். வைணவனான என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். குடத்தை முழுக்கி உருட்ட கருணாநிதியும் திரும்பித் திருச்சி சென்றுவிட்டார்.

பதின்மூன்றாம் முறை   “நான் ராஜராஜசோழன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “போய், உங்கள் சுப. வீரபாண்டியனை ஒரு முழு மருத்துவபரிசோதனை செய்துகொள்ளச் சொல். அவருக்குக் கண்ணிலும் ஏதோ பெரிய பிரச்சினைபோல! போ!’ என்றார். வாசன் கண் மருத்துவமனைக்கு சுப.வீயை அனுப்ப, கருணாநிதியும் திரும்பிச் சென்றுவிட்டார்.

பதிநான்காம் முறை சென்று “நான், என்னுயிரைத் துச்சமாக மதித்து தண்டவாளத்தில் தலையை வைத்தவன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “அதனால் என்ன, அந்த வண்டவாளத்தை எனக்குத் தெரியும். என்னிடம் எதற்கு வந்தாய், போ!’ என்றார். தன் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு கருணாநிதியும் திரும்பித் திருச்சி சென்றுவிட்டார்.

பதினைந்தாம் முறை சென்று “நான்  இந்திய அரசசட்டத்தைத் தைரியமாகக் கிழித்து எரித்தவன்  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “அந்தக் கதையைத் தெரியும். பின்னர் வெறும் காகிதத்தைத்தானே எரித்தோம் என்று ஜகா வாங்கினாய்? என்னிடம் இருந்தும் ஜகா வாங்கு, போ!’ என்றார். கருணாநிதியும் ஜகா வாங்கினார்.

பதினாறாம் முறை சென்று “நான்  டெஸோதனைப்  புஸ்ஸோவாக்கி புஸ்வாணமாக்கி எரித்து, அதன் சாம்பலிலிருந்து மறுபடியும், மறுபடியும் தேவைப்பட்டபோதெல்லாம் டெஸோ-வை உயிர்த்தெழவைக்கும் ஆற்றல் பெற்றவன், பல்டி அடிப்பதில் வல்லோன் – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “அந்தக் கேளிக்கையெல்லாம் என்னிடம் வேண்டாம்! என்னிடம் இருந்தும் அந்தர்பல்டி அடித்துப் போ!’ என்றார். கருணாநிதியும் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டே போனார். உடற்பயிற்சி யோகமுறைகளில் முறையாகப் பயிற்சி பெற்ற அவருக்கு வராத அந்தர் பல்டியா? அசகாய சூரத்தனமா?

பதினேழாம் முறை சென்று, வேறு வழியேயில்லாமல், யாரேனும் தான் சொல்வதைக் கேட்டுவிடப்போகிறார்களோ என்று அக்கம்பக்கம் பார்த்துக்கொண்டே  “நானே இந்து  – வந்திருக்கிறேன்,” என்றார். ராமானுஜர் வீட்டிற்குள்ளிருந்தே, “இந்து என்றால் திருடன் என்று சொன்ன நீ, என்னிடம் எதற்கு வந்தாய்? என் வீட்டில் பணமோ நகையோ ஒன்றும் இல்லை!” என்றார். மனம் நொந்துபோன தட்சிணாமூர்த்தியான கருணாநிதியும் கர் வாபஸ் சென்றுவிட்டார்.

… இவ்வாறு தொடர்ந்து 17 முறை கருணாநிதி வந்தபோதும், ராமானுஜர் இதேமாதிரி பதிலை சொன்னார். 17ஆம் முறை, மேலதிகமாகக் கொஞ்சம் எச்சரிக்கையும் செய்தார்: “இப்படியே போனால், 18ஆம் முறையும் படையெடுத்தால், நான் உன்பெயரை கஜினி மொகம்மது என்று மாற்றிவிடுவேன், உஷார்!”

எப்படிப் பெயரை மாற்றினாலும் கொள்ளையடித்தது நிதியைத்தானே என்று ஆசுவாசமாக இருந்தாலும், தள்ளாதவயது காரணமாக, பாவம், கருணாநிதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கோஷ்டிப்பூசலார்கள் அவர் நிம்மதியைக் குலைத்துக்கொண்டேஇருந்தனர். இருந்தாலும்…

பதினெட்டாம் முறையாகச் சென்ற கருணாநிதி, பதினெட்டாம் திருப்படியாக, சரணம் பொன்னையப்பாவாக, வேறு வழியேயில்லாமல், “அடியேன், வந்திருக்கிறேன்” என்று உரக்க, நெக்குருகிக் கத்தினார்.

உடனே மகிழ்ந்து அவரை வீட்டினுள் அழைத்த ராமானுஜர், முதுகில் ஓங்கி, மிகச் செல்லமாகவும் மரியாதையுடனும் ஒரு அடி அடித்தார். சொன்னார் – “நீ கேட்டது கிடைத்தது. நீ வேண்டுவதும் கிடைக்கும்!”

-0-0-0-0-0-0-0-

கருணாநிதி தனக்கு தன் குடும்பக்கட்சிப்பிரச்சினைகளை தீர்க்க வல்ல மந்திரத்தை போதிக்கும்படி கேட்டார்; இராமானுஜரும் உடனே, அவர் காதுக்குள், மிக ரகசியமாக,  “ஓம் திராவிட ஸ்வாஹா!’ என்ற தந்திர உபதேசம் செய்தார்.

மேலும், இந்த தந்திரத்தை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், வழக்கம்போலவே கமுக்கமாக உள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும், மீறிச் சொன்னால் அவருக்கு நரகம் கிடைக்கும் என்றும் கூறினார்.

ஆனால், கருணாநிதியோ,  அனைத்து உலக உயிர்களும் திராவிட தந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக திருக்கோட்டியூர் போயிங்747  விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்துவிட்டார்.

கோபம் கொண்ட ராமானுஜர், கருணாநிதியைக் கடிந்து கொண்டார். அவரிடம் கருணாநிதி பணிவாக, தனக்கு  “நரகம் கிடைத்தாலும், திராவிட மக்கள் நன்றாக வீழ்வார்களே, அதுபோதும்!” என்றார்.

மகிழ்ந்த ராமானுஜர் “நீ என்னிலும் பெரியவர், எம்பெருமானார், ஆன்மீகச் செம்மல்!” என்று சொல்லி கட்டித்தழுவிக்கொண்டார்.

மேலும் தொடர்ந்த அவருடைய நிழலான  ராவணானுஜர், “மொதல்ல, ராமானுஜ சீரியலுக்கு வஜனம் எள்து. அப்பால, ஊருக்குப்போய் வளக்கம்போல ஊருக்கு உபதேசம் செய்பா. ஆனாக்க, தலீவர்கள் வூட்ல என்னமாறி பவ்த்தறிவுன்னு வெளீல சொல்லாத,  ஸிர்ச்சிஸ்ர்ச்சே வொங்க வொடன்பெற்ப்புங்கோ செத்துப்பூடுவானுங்கோ!” என்றார்.

இப்படியாகத்தானே திராவிடம், ஸ்வாஹா செய்யப்பட்டது. செய்த புண்ணியத்துக்கு, பிரதியாக – நிலபுலம், சொத்துசுகம், மனைவிமக்கள், படம்புகழ், கட்சிஅடிமைகள், பகுத்தறிவுஆன்மீகம் என ஏகோபித்து வாய்த்தது.

-0-0-0-0-0-0-0-0-

கதையும் முடிந்தது. கத்தறிக்காயும் காய்த்தது.

யோவ்! அல்லோரும் வூட்டுக்குப் போய் ஆவ்ற வேலயப் பார்ங்கபா!

நீங்க்ளாடா டமிளகத்த முன்னேத்தப் பாடையில ஏத்தப்போறீங்க? சோம்பேறிங்க்ளா!

…  ங்ஙொம்மாள, சும்மா ப்ளாக் படிக்க வந்த்டான்னுவ… வேலயத்தவன் எள்தறான், போக்கத்தவன் படிக்றான்… ங்கோத்தா, உர்ப்டியா ஏதாச்சும் செய்ங்கடா, மூதிகளா!

நன்றி. ஓம் திராவிட ஸ்வாஹா!

12 Responses to “திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: ஒரு பின் நவீனத்துவ திராவிட மீளுருவாக்க, மாற்றுப் புராண எழவியல்”

 1. Narasimhan Says:

  நவீன கிரிட்டினர் என்பதிற்க்கு பதில் நவீன திருதராஷ்டிரன் என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன் .எப்போதாவது இந்துக்களை நோன்டவேண்டும் என்று இவர் இப்படித்தான் ஏதாவது ஆரம்பிப்பார் .


  • இன்னாபா சொல்ற? அவரைக் கண்ணில்லாக் கபோதின்னிட்டு சொல்லணும்றியா? நான் சொல்லமாட்டேன். அது நாகரீகமல்ல.

   ம்ம்… த்ருஷ்டிவக்கிரன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

   ஆனால், ஒரு விஷயம்: எனக்கு திராவிடர்களைப் பிடிக்கும். ஆனான் திராவிடீயத்தைத்தான் பிடிக்காது.

   …பாவிகளே! ‘ஓம் திராவிட ஸ்வாஹா’ மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால், உங்களுக்கு கதிமோட்சம் இல்லை. அதைச் செய்யாமல் பின்னூட்டமா இடுகிறீர்கள்?

   • Narasimhan Says:

    அப்படியில்லை, தன பிள்ளைகளுக்காக ,தன குடும்பத்திற்காக முதலில் எதையும் செய்யதுணிவார் என்று பொருள்படும் . சாயிபாபாவின் காலில் மனைவி விழுந்தபோது கண்டும் காணாதது போல இருந்தது நினைவிற்கு வரவில்லையா ?

 2. Venkatesan Says:

  எங்கள் எம்மிறை இமையோர்க்கு நாயகன் எத்தடியவர்
  தங்கள் தம்மனத்துப் பிரியாதருள் புரிவான்
  பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறுமிளங்கொளி
  செங்கமல மலரும் திருக்கோட்டியூரானே!


  • சபாஷ், சிறிய கடிகாரப் பிள்ளை! ஆனால், என்ன சொல்லவருகிறீர்கள்?

   –வெறும் கோட்டி ஊரான்.

  • Venkatesan Says:

   விஷயம் ஒன்றுமில்லை! வாய்ப்பு கிடைத்ததால், திருமங்கை மன்னனின் பாசுரம் ஒன்றை எடுத்து விட்டேன். அவ்வளவே. பதிவுக்கு மேலும் நெருக்கமான பாசுரம் வேறொன்றையும் எடுத்து விடுவோம்!

   இன்புற்ற சீலத்து இராமானுசா! என்றும் எவ்விடத்தும்
   என்புற்ற நோயுடல்தோறும் பிறந்திறந்து எண்ணரிய
   துன்புற்று வீயினும் சொல்லுவதொன்றுண்டு உன்தொண்டர்கட்கே
   அன்புற்றிருக்கும்படி எண்ணையாக்கி அங்காட்படுத்தே!

  • Venkatesan Says:

   அடடா, தொண்டர்கட்கு அன்புற்றிருக்கும்படி என்னையாக்கும்படியான பிரார்த்தனை எண்ணையாக்கும் படியாகிவிட்டதே!

 3. somu Says:

  அண்ணே முடியல,

  நல்ல விஷயத்தையெல்லாம் நீங்களே வெச்சுகிட்டு சாக்கடையை பத்தி மட்டும் பகடியா எழுதி நீங்க relax ஆகிக்கிறீங்க.

  உங்களையே நம்பிகிட்டு இருக்கிற எங்களுக்கு என்ன செஞ்சீங்க. போங்க.. போயி Goodreads ல உள்ளத எல்லாம் முடிச்சுட்டு (இல்லாட்டி முடிக்காம) நல்ல விஷயமா எழுதுங்க.

 4. Balasubramani Says:

  உபத்திரவேதவாந்தி திருக்குவளை கருணாநிதி ஸ்வாமிகள் அருளிச் செய்யும் ராமானுசரா?

 5. Balasubramani Says:

  ராமானுஜர்: யார் அது?
  கரு: நான் கருணாநிதி வந்திருக்கிறேன்.
  ரா: நான் செத்து வா…
  கரு: ஹா ஹா ஹா. Non-Bramin, Non-Veg மாதிரி Non கலைஞர் தான் வந்திருக்கிறேன்.
  ரா: நான் செத்தேன்.
  கரு: நல்லது. பொதுக்குழுவும், செயற்குழுவும் இட்ட கட்டளையை ஏற்று இனி நானே ‘குரு’ பரம்பரையை ‘தோளில்’ சுமப்பேன்.(இவ்வாறாக தலைவரின் தோளிற்கு மஞ்சள் துண்டு வந்து சேர்ந்தது).

 6. Bala Sundara Vinayagam Says:

  Excellent post. Hard work. Congrats.


 7. […] போட்டாகிவிட்டது.(எடுத்துக்காட்டாக: திருக்கோஷ்டியூரில் நவீன இராமானுஜன்: …  […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s