கில்யஸ் – ஒரு கர்ட் பெஷ்மெர்கெ ஆளுமை, நடைமுறை இஸ்லாம்: சில நினைவுகள், குறிப்புகள் (1/2)
April 8, 2015
மனதே சரியில்லை.
சுமார் இரண்டு வருடங்கள் முன்(ஜூன் 2013 என நினைவு), எங்களிடமிருந்து (= ஒரு சிறிய அளவிலான இந்திய நண்பர் குழாமிடமிருந்து) விடைபெற்ற கர்ட் தேசம் (இப்போதைக்கு இரான் – ஸிரியா – துருக்கி – ஆர்மேனியா – இராக்-கின் பாகம்) சார்ந்தவரான இந்த கில்யஸ் அம்மணி, சில நாட்கள் முன்பு (28 மார்ச்) அற்ப, மதப்பொறுக்கிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் அரைகுறைகளுடன் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில் இறந்தார்.
இணையத்தில் இது தொடர்பாகத் தேடிப் பார்த்தேன். அவர் அறிமுகம் செய்த சில கர்ட் பிராந்திய ட்விட்டர்காரர்களிடமும் (ஒரு அழகான – மனதைப் பிழியும், ஆனால் கம்பீரமான எடுத்துக்காட்டாக) தேடினேன்; கொஞ்ச நேரம் #பெஷ்மெர்கெ-விலும் தேடினேன்.
ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவில்லை. (இப்போது தோன்றுகிறது, ஒரு மேலதிக விஷயமும் கிடைக்கவும் தேவையில்லை!)

மேற்கண்ட கர்டிஸ்தானின் வரைபடம் – இந்தப் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது; அங்கு, இது தொடர்பான பலவிதமான வரைபடங்கள் இருக்கின்றன.
… எனக்கு நேற்று காலை தான் இந்தச் செய்தி கிடைத்தது.
எவ்வளவோ படுகோரச் சாவுகளை நேரடியாகப் பார்த்திருந்தாலும், பொதுவாகவே என் தாங்குதன்மை மிகவும் அதிகம் என்றாலும்கூட, என் கால்கள் தொய்ந்துபோய் விட்டன. ஒரே சோர்வு. சாப்பிடவே பிடிக்கவில்லை. மலையளவு, பள்ளிசார் வருடமுடிவு மாளா வேலைகளுக்கு அப்பாற்பட்டு, பிற வேலைகள் காத்துக்கொண்டிருக்கின்றன – பெய்ன்ட் வேலை, ஹார்ட்டிஸ்க்கள் ரிப்பேர், வெய்யிலில் வெந்து கொண்டிருக்கும் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சுதல், வீட்டுவேலைகள் பலப்பல – இவற்றைத் தவிர அரையும் குறையுமாக இருக்கும் பல ஒத்திசைவு பதிவுகள், மேஜைகளிலும் நாற்காலிகளிலும் அலமாரிகளிலும் பிதுங்கி வழியும், அவசியம் படிக்கவேண்டிய புத்தக அடுக்குகள் என – ஆனால், என் அன்புக்கும், மரியாதைக்குமுரிய தோழியின் நினைவாக, இதைக்கூட என்னால் செய்யமுடியாதா என்ன?
நேரே வீட்டுக்கு வந்து இதனை எழுத ஆரம்பித்தேன்…
-0-0-0-0-0-0-0-0-0-
எனக்கு ‘கில்யஸ்’ (Gilyaz) என்று அறிமுகப்படுத்தப்பட்ட அவருடன் மூன்று வாரப் பழக்கம்தான். அவருடைய குட்டிக் குழந்தையை முன்புறம் கட்டிக்கொண்டு, பெரிய சாக்குப்பையைப் பின்புறமும் போட்டுக்கொண்டு, கழுத்தில் ஸாக்ஸஃபோன் பையைத் தொங்க விட்டுக்கொண்டு – அழுக்கு ஜீன்ஸ், குர்த்தாவுடன் – இந்தியாவில் ஏழெட்டுமாத, பெரும்பாலும் கையேந்திச் சுற்றலின் கடைசியில் புதுச்சேரி பக்கம் வந்து அலைந்துகொண்டிருந்தார்.
அதாவது, பேருந்துகளில் பயணம் செய்து, சாதாரண இந்தியக் குடிமக்களுடன் வீட்டில் தங்கி, பலவிதமான மக்களை, தலைவர்களைச் சந்தித்து (இவர்களில், என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய மௌலானா வஹீதுத்தீன் கான், தில்லி ஜும்மா மஸ்ஜித்தின் மிகக்குறுகிய காமாலைக் கண்ணருமான ‘ஷாஹி இமாம்’ ஸையத் அஹம்மெத் புகாரி உட்பட, ஹைதராபாத் அஸாஸுத்தின் ஓவைஸி போன்ற மதவாத ரவுடிகளும் அடக்கம்) அளவளாவி, புண்ணிய தலங்களில் தங்கி, புத்திகூர்மையுடன் அவதானித்து — என ஒரு வெறும் வெட்டிச் சுற்றுலா செய்யாமல், அறிவுலா செய்திருக்கிறார்; ஒரு ட்ரேவல்லாக் – பயணப் புத்தகம் – எழுதுவதாகக் கூட ஒரு எண்ணம் இருந்தது – தலைப்புகூட வைத்திருந்தார்: ‘நவீன இந்தியாவில் நவீன இப்ன் பத்தூதா!‘
…அப்போது சில பரஸ்பர நண்பர்களின் மூலம் அவர் தொடர்பு கிடைத்தது. இப்போது ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும்; நான் இக்காலங்களில் வசிக்கும் பகுதியில், படிப்பவர்கள் மிகவும் சொற்பம். அதிலும் யோசிப்பவர்கள் என்பதே கிடையாது. பொதுவாகவே குடிவெறியில், சாக்கடையில் கிடந்துஉழலும் வாழ்க்கை. என் சுற்றுவட்டாரத்தில் – பல பிறதேசத்தவர்கள், மகத்தானவர்கள் இருக்கிறார்கள் – ஆனால் இவர்களில் பெரும்பாலோருக்கு உடலுழைப்பில், யோகமுறைகளில் – நுண்ணுணர்தல்களில், தன்னையறிதல்களில் மட்டுமே குவியம்; லௌகீக உலகவாழ்க்கையோ, படிப்பறிவையோ சார்ந்த விஷயங்களில் அவர்களுக்குப் பெரிதாக ஈடுபாடில்லை.
குழந்தைகள் அனைவரும் அழகுதான் – ஆனால், அவர்களுடன் எல்லா விஷயங்களையும் பேசமுடியாதே! மனைவியுடன் நிச்சயம் பேசலாம் – எப்படியும் தினம்தினம் பேசித்தான் ஆகிறது; மேலும், ஓரளவுக்கு மேல், பாத்திரம் தேய்ப்பு, துணி தோய்த்தல் போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தவேண்டும், இதுவும் சரிதான். ஆகவே, செயலூக்கம் கொண்ட பிற புத்திசாலி-படிப்பாளிகளுடன் பேச (= intelligent conversation) ஏங்கும் நான், யாராவது தோதாகக் கிடைத்தால் விடமாட்டேன்.
ஆகவே, நானும் அவரும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்து நிறையப் பேசினோம். பலமுறை சேர்ந்து சாப்பிட்டோம். ஒரு நாள், மத்திய தரைப்பகுதி உணவைச் சாப்பிடவேண்டும் போல இருக்கிறது என்றார். இந்த வட்டாரத்தில் நல்ல ஃபலாஃபெல் கிடைக்குமா என்றார். ‘அம்மணி, இந்தியாவிலேயே மிகச்சிறப்பான ஃபலாஃபெலும் ஹும்மூஸும் இங்குதான் கிடைக்கும்!‘ என்று கூட்டிக்கொண்டு சென்றேன்.
-0-0-0-0-0-0-0-0-
ஜனநாயக பூர்வமான (எடுத்துக்காட்டு: இந்தியா போன்ற) அல்லது பெரும்பாலும் சரியாகவே நடக்கும் (எடுத்துக்காட்டு: இந்தியா போன்ற), அடிப்படையில் நல்லெண்ணம் கொண்ட (எடுத்துக்காட்டு: இந்தியா போன்ற) அரசுகளுக்கெதிரான, சுயநலம் சார்ந்த வறட்டு வன்முறைப் போராட்டங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.
ஆனால் அர்மேனியர்களை, கர்ட் மக்களை – அவர்களின் விடுதலை நோக்கிய உந்துதல்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுடைய மனப்பாங்கை – மகாமகோ தைரியத்துடன், சுய அர்ப்பணிப்புடன் தம் மக்களுக்காக மட்டுமல்ல, மற்றவருக்காகவும் கூடப் போராடும்தன்மையைப் போற்றமுடிகிறது.
இக்காலங்களில் – நான் அறிந்த அளவில் – இந்த கர்ட் பிராந்திய மக்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் – பாலஸ்தீனியர்கள், யூதர்கள் உட்பட – வேறெங்கும் கிடையவே கிடையாது. இவர்கள், பல நூற்றாண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டு – துருக்கி, இராக் (இராக்கின் ஸத்தாம் ஹுஸ்ஸெய்ன், கர்ட்களை அழித்தொழிக்கச் செய்த முயற்சிகள், ஆயுதம் தரிக்காத கர்ட் மக்கள் மீது அநியாயமாக உதிர்க்கப்பட்ட மாளாஅழிவு விஷக்கெமிக்கல் குண்டுகள் பிரசித்தி பெற்றவை; இது ஒன்றுக்காகவே அவருக்குத் கிடைத்த தூக்குதண்டனை சரியானது), இரான், ஸிரியா எனச் சகல நாடுகளினாலும் தொடர்ந்து துன்புறுத்தப் படும் மக்கள்; இவர்களில் பெரும்பான்மை ஸுன்னி முஸ்லீம்கள், மற்றவர்கள் ஷியாக்கள் – ஆனால், மற்ற நாடுகளில் ஸுன்னி இஸ்லாமியர்களால், ஸுன்னி வஹ்ஹாபியர்களால், இஸ்லாமிக் ஸ்டேட் போன்ற திடீரெக்ஸ் அரைகுறைகளால் தொடர்ந்து வேட்டையாடப் படுபவர்கள்.
இதற்குக் காரணங்கள் பல; அதில் தலையாயது: கர்ட்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தங்கள் பன்முக இஸ்லாமை விரும்புகிறார்களோ, அதேயளவு – பெண்ணுரிமை, அமைதி, முன்னேற்றம், உழைப்பு, நேர்மை முதலியவற்றை விரும்புபவர்களாக இருக்கிறார்கள்.
இரண்டாவது: ஏனெனில், அவர்கள் மொழியும் நோக்கும் வேறு.
மூன்றாவது காரணம்: கர்ட்களின் தலைமையின் தன்மை; இதனைப் பெரும்பாலும் ஞானம் மிகுந்தது (enlightened leadership) எனச் சொல்லலாம். ஏனெனில் – ஐந்து நாடுகளிலும் கர்ட்கள் துயரப் படுத்தப் பட்டாலும், இத்தலைமையால் மக்களை ஒருங்கிணைத்து, தொலைதூர/மலையுச்சிக் குறிக்கோள்களை நோக்கி, அவர்கள் சக்தியைக் குவிக்க முடிகிறது. அதே சமயம், அவர்கள் பிராந்தியத்தையும் மதங்களையும் நவீனமயமாக்க முடிகிறது; ஆகவேதான் அவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல முடிகிறது. பரந்த நோக்குடன் யாஸிதிகளையும், க்றிஸ்தவர்களையும், பலிகொள்ளப்படும் இன்னபிற இஸ்லாமிய மக்கள்திரள்களையும் ஒன்று திரட்டிச் செல்ல முடிகிறது.
இவையெல்லாம் பழமைவாத, ஒரேஇஸ்லாம்-ஒரேகடவுள் அரைகுறைகளுக்கு ஒத்துவரமாட்டேனென்கிறது. ஆகவேதான் கர்ட்களை அழித்தொழிக்கும் போக்கு.
இப்படிப்பட்ட, நம்பவேமுடியாத எதிர்மறைச் சூழலில் இருந்தாலும் – கர்ட்களுடைய பிராந்திய/மொழிப்பற்றும் – அதற்காக அவர்கள் கொடுக்கத் தயாராக இருக்கும் விலையும், அதே சமயத்தில் மற்ற மதத்தினரை / பிற மக்கள் திரள்களை மரியாதையுடனும் அன்பாகவும் நடத்தும் பண்பும் – எனக்குத் தெரிந்து வேறு எவரிடமும் இல்லை – ஒரு மக்கள்திரள் நீங்கலாக – இங்கு நான், பாரதத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான ஸுக்ரிதி-யை நினைத்துப் பார்க்கிறேன்.
ஸுன்னிமுதல்வாத இஸ்லாமிக்ஸ்டேட் கற்பழிப்பாளர்கள் பார்த்தாலே பயந்து நடுங்கும் மக்களில்/ராணுவங்களில் – கர்ட்கள் தலையாயதாக – அதிலும் முக்கியமாக, பெஷ்மெர்கெ பெண்கள் படையினர் இருப்பதில் எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை. (பெஷ்மேர்கெ-வில் பெண்களின் பிரதிநிதித்துவம், 40%த்துக்கும் மேல் என்று ஒரு கணக்கு சொல்கிறது)
-0-0-0-0-0-0-0-0-
கில்யஸ்… அற்புதமான மனுஷி. அவருக்கு – போராளி, வீரமரணம், தியாகம், உயிர்ப்பலி, நினைவேந்தல், புல்லரிப்பு, கடவுள், மோட்சம் போன்றவற்றில் எல்லாம் நம்பிக்கையில்லை; அடிப்படையில் ஒரு மனித நேயர், அவ்வளவுதான்.
மதவாதத்தின், மதப்பொறுக்கிமுதல்வாதத்தின் எதிரி. துருக்கி சார்ந்த கர்ட் மக்களை ஒருங்கிணைக்கும் பிகெகெ அமைப்பின் ராணுவமுமான பெஷ்மெர்கெ துருக்கியப் பிரிவின் மூலமாக ராணுவப் பயிற்சி.

கர்ட் பெஷ்மெர்கெ பெண்கள், தாய்கள் – இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிமுதல்வாதத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் – (நம்முடைய செல்லத் தமிழகத்தின் தறுதலைப் புலிகள்-பிரபாகரன்கள் போலல்லாமல்!) மானுடத்தின் பரிணாம வளர்ச்சிக்காக சுய அர்ப்பணிப்புடன் போராடுபவர்கள்.
சிறுமை கண்டு வெறுமனே பொங்குவதை மட்டும் செய்யாமல், அதற்கெதிராக, விடாமல் உழைத்தவர். வெறும் இணையப் போராட்டக்காரியோ அல்லது வெட்டி மனிதயுரிமை போராளியோயல்லர். இயற்பியலில் பிஹெச்டி. செவிலிப் பயிற்சி. கராட்டே ப்ளாக்பெல்ட். மிக நன்றாக ஸாக்ஸஃபோன் வாசிப்பார்.
வஹ்ஹாபிய இஸ்லாமின், ‘இஸ்லாம் மட்டுமே மார்க்கம், அதுவும் எங்கள் ப்ரேன்ட்தான் இஸ்லாம்’ அற்ப வழியின், ‘ஒரே கடவுள்’ முட்டுச் சந்து வழிகளின் தர்க்க ரீதியான எதிர் நிலை.
பரந்த படிப்பறிவு. உலக, மத வரலாறுகள் குறித்த தெளிவான சிந்தனை. ஆறு மொழிகளில் புலமை. எளிமையான ஊர்சுற்றலில் ஆசை. வாழ்க்கையை ரசித்தவர், மதித்தவர். சாக பட்சிணி. மானுட விடுதலையை விரும்பியவர்.

மேற்கண்ட படங்கள் – ஜேகப் ரஸ்ஸல் அவர்களால் எடுக்கப்பட்டவை. படங்கள் இங்கிருந்து. அங்கே ஒரு சிறு ஆங்கிலக் கட்டுரையும் இருக்கிறது. (இவற்றில் ஒன்றிலும் கில்யஸ் அவர்கள் இல்லை)
(நான், கோரமான, அயோக்கிய இஸ்லாமிக்ஸ்டேட்டினர்களால் – பெஷ்மெர்கெ வீரர்கள் எரிக்கப்பட்ட, வெட்டப்பட்ட, தூக்கிலிடப்பட்ட படங்களைப் போடவில்லை; இஸ்லாமிக்ஸ்டேட் வெறியர்களால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மார்பகங்களும்-யோனிகளும் வெட்டிச் சிதைக்கப்பட்ட பெஷ்மெர்கெ பெண்கள், தாய்கள் படங்களைப் போடவில்லை)

Nayman Haldar and her three-year-old daughter, Hannan, share a meal at the checkpoint PHOTO: Anastasia Taylor-Lind
…கர்ட் மக்களின் போராட்டம், ஒரு நேர்மையான க்ருஸேட் – இதனை, ஆயுதம்தாங்கி அடிப்படைவாதப் பொறுக்கிகளுக்கு எதிராக, பலப்பல நூற்றாண்டுகளாக ஒரு தாயகத்துக்காகப் போராடி வரும், கருணையற்றுத் தொடர்ந்து நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள் திரளின் பிரவாகமாகப் பார்க்கிறேன்.
இது என் அவா என்பதற்கு அப்பாற்பட்டு, இவர்கள் போராட்டம் வெற்றி பெரும் என்பதில் எனக்கு ஐயமேயில்லை!
-0-0-0-0-0-
கில்யஸ், உங்களை, நான் எப்படி மறக்கமுடியும்?
…இருபது வயது இளம்பிராயத்தில் இருக்கும் என்னருமை பழைய ஜீப்-ஐ (மஹீந்த்ரா கடமுடா ஆர்மடா!) எனக்கு பயபீதிவரும்படிக்கு புதுச்சேரி-திண்டிவனம் நாற்பாதைப் பெருஞ்சாலையில் லொடக்மொடக்கென்று ஓட்டி, கலகலவென்று சிரித்தார். அருமையான நகைச்சுவையுணர்ச்சி! :-(
கில்யஸ் ஒரு சிந்திக்கும் மனுஷி. பெண்ணியம், மார்க்ஸிஸ்ம் போன்றவை சார்ந்த தடாலடி எதிர்வினைகள், அதர்க்கரீதியான முத்திரை குத்தல்கள் அவரிடம் இல்லை.
அவருடைய உரையாடற் புள்ளிகளை அவர் கோர்த்தவிதமும், அவற்றைப் பெரும்பாலும் உணர்ச்சிகரமாக அல்லாமல் வெளிப்படுத்தியமையும், தரவுகளாக அவருடைய சுயானுபவங்களை, படிப்பறிவை பின்புலத்தில் வைத்திருந்தலும் — எனக்கு, இளைஞர்களில் இருக்கும் இம்மாதிரி விதிவிலக்குகளின் மீது மரியாதையைத்தான் ஏற்படுத்துகிறது.
-0-0-0-0-0-0-
இன்னொன்று: நடைமுறை பெரும்பான்மை இஸ்லாமில் பெண்களுக்குக் கதிமோட்சமேயில்லை எனும் கில்யஸின் துணிபு. (இதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாக எழுதவேண்டும்)
-0-0-0-0-0-0-0-0-
…அடுத்த பாகத்தில் கில்யஸ் புராணத்தின் தொடர்ச்சி, நடைமுறை இஸ்லாம் பற்றிய அவருடைய அவதானிப்புகள் (+என்னுடைய கருத்துகள்), கர்டிஸ்தான் இயக்கங்களுக்கு (போருக்காக அல்லது வளர்ச்சிக்காக) உங்களாலான நிதியுதவி அளிக்கக் கோரல், இன்னபிற…
- சில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)
- முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014
- களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? 26/02/2013
- அபு ல்-வலித் மொஹம்மத் பின் அஹ்மத் பின் ரஷித் எனும் அவெர்ரீஸ் 28/01/2013
- குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள் 25/03/2013
April 10, 2015 at 22:37
the best, well written article. thank you.
April 26, 2015 at 11:36
rams, rendu naala enna azha vidra neee…
August 15, 2015 at 20:39
அய்யா அந்தேரி/மும்பய் அனாமதேயம், உங்களுடைய உளறிக்கொட்டல்களுக்கு டாடா இணையத் தொடர்பு ஒரு கேடா?
அரைகுறைகளுக்கு அழகு – அனைத்து ஓட்டைகளையும் மூடிக்கொள்ளுதல், சரியா? ;-)