என்னது? என் பெரும்பேராசான் ஜெயமோகனை மாவோயிஸ்ட்கள் என்கௌன்டர் செய்துவிட்டார்களா?

June 17, 2019

பகீர்!

மாவோயிஸ்ட்கள் தமிழகத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஒருவரும் (சக ஏழரைகள் உட்பட) அதை நம்புவதில்லை. மாறாக, என்னை ஏளனம் செய்கிறார்கள்.

அரைத்த மாவோவையே அரைத்து ஆகவே புரட்சிகரமாகப் புளித்துப்போய்ப் புழுத்து வினவிக்கொண்டேயிருக்கும் புரட்டுவாதம் இனிமேல் செல்லுபடியாகாது, என்றுமே பாஸ் மார்க்ஸ்கூட வாங்காது; மாறாக, எங்கேல்ஸ் அது எனத் தேடும் நிலையில் கவலைக்கிடமாகத் தொடர்ந்து இருப்பின் அவஸ்தையில் இருக்கும் என்றுதான் நானும் நினைத்திருந்தேன். ஆனால்… நிலைமை அப்படி இல்லையே அய்யன்மீர்!

பீஃபைக் கடித்து மட்டனைக் கடித்து, இப்போது நம் தோசையையும் கடிக்க ஆரம்பித்துவிட்டார்களே இந்த மாவோயிஸ்ட் பாவிகள்! தோசை புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனப் பேசிக்கொண்டிருந்தவர்கள் விடுதலைப் புளித்தது எனத் தாளித்துக்கொட்டுகிறார்களே!

-0-0-0-0-0-

கடந்த பத்து வருடங்களாகவே இந்த ஊடுருவலை, அதிகரிக்கும் என் ரத்த அழுத்தத்துடனும் மாளா படு வேதனையுடனும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் எங்கு சென்றாலும் இந்த ஊடுருவல்! அதுவும் ப்ளாஸ்டிக் அரக்கனுடன் சேர்ந்துகொண்டு இந்த மாவோயிஸ்ட்கள் அடிக்கும் கும்மாளத்தை என்னால் தாங்கவே முடியவில்லை!

எங்கு சென்றாலும் தப்பவேமுடியாத – ரத்தத்தை உறைய வைக்கும்விதமாக, செய்முறை உரை என ஓன்றுமில்லாமல்  உரைகளில் நிரப்பப்பட்ட மாவோயிஸ விஷம். சோற்றாலடித்த பிண்டம் என எம் தானைத்தலைவர் கருணாநிதியாலேயே  புகழப்பெற்ற தமிழர்களை, மாவோயிஸ்ட் உதிரிகள் மாவால் அடித்து வரும் அவலம்.

இதனுடன் அண்மையில் கேரளாக்கார இஸ்லாமியத் தீவிரவாதி மாவோயிஸ்ட்கள், துளிக்கூட வெட்கமே இல்லாமல் ‘ஈத்’ என்ற பெயரில் மாவோயிஸத்தை விரித்தவண்ணம் இருக்கிறார்கள்.

தோசைக்கான கச்சாப்பொருளிலிருந்து பெற்ற ஞானத்தை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில், ஓசைமிக்க குண்டின் கச்சாப்பொருளையும் உருவாக்க முடியுமன்றோ? தோசை சுடுவதிலிருந்து ஆரம்பித்துப் பின் ஆளைச் சுடுவதற்கு எவ்வளவு நேரமாகும் சொல்லுங்கள்?

ஆக, நம் நக்ஸல் பாரிவள்ளல்கள் – மாவோ கடை விரித்தோம். கொள்வாரிருக்கிறார்கள். கல்லா கட்டிவிட்டோம் எனத் திருமூலத்துக்கே முழுமுதல்மூல அல்வா கொடுக்கிறார்கள்! அந்தோ!

இந்த அழகில், என் வீட்டிலும் எனக்கே தெரியாமல் இந்த ஈத் இஸ்லாமிய மாவோயிஸம் இளிக்க ஆரம்பித்திருக்கிறதே என்பதை நினைத்தால்…

…தோசை திங்க ஆசை யாகுதே! தோசை சுட்டதடா ஆசை விட்டதடா என்று சுலபத்தில் சட்டினியென்று அகன்று இட்டலிக்குச் சென்று விடமுடியுமா என்ன? நான் என்ன சொக்கத்தங்கம் சோனியாவா?

-0-0-0-0-

கொஞ்சம் ஸீரியஸ்ஸான குறிப்பு:

ஜெயமோகன் அவர்கள், ஒரு அற்ப அசம்பாவிதம் காரணமாக ஒரு தோசைமாவோயிஸ்ட் குடிகார(அதாவது திராவிட)க் கூவானால் தாக்கப்பட்டது சோகமான விஷயம்தான் என்றாலும் – ஊரே சேர்ந்து தேரிழுத்துப் புலம்பி மொஹர்ரம் கணக்காகச் சாட்டையால் நம்மை நாமே ‘நமக்குநாமே’ என விளாறிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. புரையோடும் சமூகம் அது இது என்று சொல்லி எதையும் பூதாகாரமாக (flower give spicy like) ஆக்கவேண்டிய விஷயமும் இல்லை. Loose cannonதர கிண்டல் செய்பவர்களைச் சபிக்கவேண்டிய அவசியமும் இல்லை. இது ஒரு comic relief வகைதான் என்ற அளவில் விட்டுவிட்டுக் கடந்துவிடவேண்டியதுதான்.

ஏனெனில் இதில் கருத்துரீதியாகக் கொதிக்கவேண்டிய முகாந்திரமோ அவசியமோ இல்லை. ஏனெனில் தள்ளுமுள்ளு நடந்ததும் (ஜெயமோகன் தரப்பு சொல்வதுபோல) கருத்தியல்ரீதியாக நடைபெறவில்லை – வெறும் மளிகைசாமான் சர்ச்சை விஷயம்தான் இது. அந்த மளிகைக்கடைக்காரர் என்ன வெண்முரசுக்காகவா, அந்த பாவப்பட்ட ஜெயமோகனுடன் பொருதினார்?

இதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் ஏன், நம் எல்லோருக்குமே நடக்கச் சாத்தியக்கூறு இருக்கிற விஷயம்தான்.  நடந்த அசம்பாவிதம், குடிப்பாரம்பரியம் மிக்க திமுக/திராவிட ஆசாமி அருகில் இருந்ததால் நடந்தது. ஆனால், நமக்குத் தெரிந்த, நாம் பெரும்பாலும் மதிக்கும் பெரும்பேராசனுக்கு இது நடந்ததால் –  இதையெல்லாம் போய் சமூகத்தின் மனச்சாட்சியை ஒடுக்கும் ரேஞ்சுக்கு உயர்த்தவேண்டிய அவசியமில்லை. சிரிப்பவர்களை வையவேண்டிய அவசியமுமில்லை. கருவிக்கருவி எதிர்வினைக்கான சதியாலோசனைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் இல்லை.

இன்னொன்று: நான் தள்ளுமுள்ளு சர்ச்சைகளில் ஈடுபட்டிருப்பவன். கருத்தியல் ரீதியாக திமுக திராவிடர்களிடம் உதை வாங்கியிருப்பவன் + கொடுத்திருப்பவன். இந்தத் திராவிடர்களிலும் அனைவரும் குடித்திருக்கவில்லை. சுய நினைவோடுதான் அயோக்கியத்தனம் செய்தார்கள். என்னுடைய செயல்பாடுகளுக்கு (=திமுகவுக்கு எதிரான வாக்குச்சேகரச் செயல்பாடு) நான் கொடுத்த விலை அது. நான் அதற்குப் பிலாக்கணம் வைக்கமாட்டேன். அலறமாட்டேன். நான் எவ்ளோ பெரீய்ய அறிவாளி, எவ்ளோ சமூகசேவை இடியாப்பம் செஞ்சிருக்கேன்… என்மாதிரி தங்கமான ஆசிரியரை அவமதிக்கும் நாடு ஒழிந்துபோம் எனச் சொல்லிச் சபிக்க மாட்டேன். முன்னேபின்னே பேசி மென்றுமுழுங்கி damage-control செய்யவேண்டிய அவசியமற்ற தொழிலில் இருப்பவன் நான்.

ஆகவே, என்னைப் பொறுத்தவரை, கண்டகண்ட கழுதைகள் வீட்டுக்கு வந்து தொடர்பேயற்ற பெண்பிள்ளைகளை மிரட்டினால், ஆனது ஆகட்டும் என்று பார்த்து அடிதடியில் நேரடியாக இறங்கிவிடவேண்டியதுதான். இது மந்திராலோசனை மசுராலோசனை வெண்முரசு கண்பெரிசு என்றெல்லாம் பார்க்கும் நேரமில்லை – ஆயிரெத்தெட்டு அத்தியாயங்களுக்குப் பிறகு பார்க்கலாம் என தள்ளிப்போடவேண்டிய அவசியமுமில்லை.  அதேபோல திமுகவுக்கும் அவனுக்கும் தொடர்பில்லை, திமுகவினர் சொக்கத்தங்கங்கள் என சுயஅறிவுரைச் சால்ஜாப்புகள் அளித்துக்கொள்ளவேண்டிய அவசியமுமில்லை. ஆனால், என்னைப்போலவே அனைவரும் இருக்கவேண்டும் எனவும் எண்ணமாட்டேன்.

மேலும் – விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் விடுவதற்கு மாறாக – ஜெயமோகனே தன்னிலை விளக்கம், டிவி நேர்காணல் அதுஇது என்றெல்லாம் கொடுத்து, பின்னர் அடிப்பொடிகள் இவற்றைப் பெருக்குவதை மட்டுப்படுத்தாமல், விஷயத்தைப் பெரிதுபடுத்த உதவியிருக்கிறார். வெறும்வாயையே வெறித்தனமான மெல்லும் (வாசகர் + அவாசகர் + எதிர்வாசகர்) வம்பர் கூட்டங்களுக்கு அவரே பொட்டலம்பொட்டலமாக அவல் ஸப்ளை செய்துவிட்டு – ஐயய்யோ கிண்டல்செய்கிறார்களே என்றால் அது நியாயமாகவும் படவில்லை!

ஆனால்… அவரவருக்கு அவரவர் பில்ட்-அப். அவரவர் கற்பனைக்கேற்றவாறு அவரவர் சுயபிம்பம், சுயமைதுனம் வகையறா. அவ்ளோதான்.

-0-0-0-0-0-

… நம் சுட்டதோசை வேண்டுமா சுடாத ஓசை வேண்டுமா தர இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகள் இப்படி இருக்கையிலே… …இந்தத் திடுக்கிடவைக்கும் சம்பவத்தைப் பற்றி எழவெடுத்த நண்பர் ஒருவர் ட்வீட் செய்து அதன் முன்னேபின்னே தெரியாமல் நான் முழித்தபோது, உதவிக்கு வந்து – சமூகவளைத்தல எலிகள் பலர் ரசக்குறைவாகவும் மானுடத் தன்மையில்லாமலும் இந்த என்கௌன்டரைக் குறித்துக் குதூகலிப்பதையும் கொஞ்சம் சங்கடத்துடன் குறிப்பிட்டார்.

கொஞ்சம் யோசித்ததில் – எனக்கும் அப்படித்தான் பட்டது – ஒருவரின் கஷ்டத்தில் சுகப்படும்/சந்தோஷப்படும் இந்த schadenfreude எழவெல்லாம் நமக்குத் தேவையா என்று.

ஆனால் – என்னுடைய சொந்தக் குயுக்திக் குசும்பாளத் தன்மையையும் குறித்து யோசிக்கிறேன். ஏனெனில் நானொன்றும் எந்த கும்பலுக்கும் அலக்கியத்தரமான அற்ப மனச்சாட்சியல்லனே! வெறுமனே பொழுதுபோக்கு நாட்குறிப்பாகக் கட்டுரை எழுதுபவன் தானே!

…இப்படி, எஸ்ரா விஷயங்களையும் அவர் தம்முடைய வாசகர்களுக்குக் கொடுக்கும் அளவிலா அனுபூதி நிலையையும் தேவையேயில்லாமல் கிண்டல் செய்ததினால்தானே பின்னொரு சமயம், ஒத்திசைவு கொடியை அரைக்கம்பத்தில் மூன்று நாட்களுக்குப் பறக்கவிடவேண்டி நேர்ந்ததுஸாஹித்ய அகடெமி நின்று கொல்லும்.

ஆக – எனக்கு இந்த ‘முற்பகல் மாவாட்டின் பிற்பகல் தோசை தாமேவரும்’ என்ற கருமம்பிடித்த கர்மா விஷயமெல்லாம் தெரியாமலில்லை. புளித்த மாவில் வெங்காயத்தை அரிந்துபோடும் ஞானமார்க்க அறிதல் நிலையில் தான் ஊத்தப்ப மரபு உப்பிக்கொண்டு வரும் ஆனால், முறுகல்தோசை வெறும் ஒசையுடைத்த ஆசைமட்டுமே என்றெல்லாம்…

-0-0-0-0-0-

ஆனால், தேவைக்கதிகமாக ஜெயமோகன் அவர்கள் இதனைப் பூசிமெழுகி திமுகவினர் கட்சிரீதியாகப் பரிசுத்தவான்கள் என்பதுபோல அரசியல் நகைச்சுவையைத் தொடர்ந்தபோதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் டீவி பார்ப்பவனல்லன் – ஆனால் அதையும் தேவைமெனக்கெட்டுப் பார்க்கும் அன்பர் (இவரை எனக்கு அதிகம் தெரியாது) சொல்கிறார், ‘ஜெயமோகனின் டீவி நேர்காணல்களைப் பார்க்கும்போது எனக்கு, கருணாநிதியின் ‘அடிக்கறாய்ங்க, அடிக்கறாங்க…’  நடிப்பு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!‘ அவ்வளவு விஷயவறட்சியா நம் தொல்லைக்காட்சிகளுக்கு? (ஆனால், ஜெயமோகன் இப்படி இந்தவொரு அற்ப விஷயத்தைப் பற்றி டீவியில் பேசவில்லை என்றால், நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்)

ஜெயமோகன் எழுதுகிறார்:

//இதில் இதுவரை கட்சி அரசியல் இல்லை. திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்புகோரிவிட்டு  சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு.

…தெய்வமே என என் செல்லப் பேராசான் எஸ்ராமகிருஷ்ணன் புகழ்பாடிக் கொண்டிருந்த என்னை, உசுப்பிவிட்டது மேற்கண்ட பத்தி. என்ன செய்வது சொல்லுங்கள். அதனால்தான் இந்தப் பதிவு. (உங்களுக்கே தெரியும், எனக்குப் பகடி செய்வதிலோ கிண்டலாகக் கருத்து தெரிவிப்பதிலோ குவியமோ தகுதியோ சுத்தமாகவே இல்லை என்பது! ஆகவே என்னைத் திட்டாதீர்கள், சரியா?)

சரி. ஜெயமோகன் அவர்கள், நான் உண்மையாகவே சிலாகிக்கும் நகைச்சுவை எழுத்தாளர். அற்புதமாக நகைச்சுவையுணர்ச்சியும் பகடி செய்யும் திறனும் மிக்கவர். ஆகவே, சுயபகடியாக, நகைச்சுவைக்காக இப்படி எழுதியிருக்கிறார் என்பதாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்களையும், இந்த மாவோயிஸ அத்தியாயத்தை மூடிவிட்டு அவர் மேலேகி பிற மிச்சம்மீதியிருக்கும்  இலக்கியவுச்சங்களையும் அடைய அவர் எத்தனிப்பதும், ஒருவிதமான சமரச சன்மார்க்க, விட்டாப்போதும் என்கிற உணர்ச்சியும், இக்கட்டிலிருந்து தப்பியோட முனைப்புகளும்… … ஆதூரத்துடனும் நெகிழ்வுடனும் புரிந்துணர்ச்சியுடன் புரிந்துகொள்ளக்கூடியவையே!

ஆனால்… அநியாயத்துக்கு அந்த மஜாபாரத துரியோதனனை விட்டு பதிவுக்கு ஒருமுறையாவது மண்ணில் ஓங்கி அறையவிட்ட வெண்முரசுக் கர்மா, சும்மா விடுமா சொல்லுங்கள்?

மேலும் – திமுக ப்ரேண்ட் திராவிடத்தில் இம்மாதிரிப் பொறுக்கித்தனமெல்லாம் சகஜமப்பா. ஆகவே, திமுகவுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது, ஸாரி, கொஞ்சம் ஓவர். (ஒரு ஆர்எஸ்எஸ் காரரோ, ஒரு புடம்போட்ட இடதுசாரி தொழிற்சங்கவாதியோ இப்படி மொடாக் குடிப்பார், அடிப்பார் என்றெல்லாம் ஒரேயொரு ருசுவாவது கொடுக்கமுடியுமா? இதெல்லாம் நம்பும்படியாக இருக்குமா?)

திமுக என்பது பொறுக்கிகளால் பொறுக்கிகளுக்காக நடத்தப்படும் பொறுக்கிகளுடைய இயக்கம். இந்த நிதர்சன, அடிப்படைப் புரிதல் முக்கியம். இது இப்படியில்லை – மாறாக அதன் பண்பட்ட ரீதி, அறிவுத்தளக் கட்சி, தனிப்பட்ட முறையில் நம்பிக்கை அதுஇது என அட்ச்சிவுடுவது பெரும் நகைச்சுவை. நன்றி, ஜெயமோகன்.

-0-0-0-0–

சிலகாலம் முன், ‘மிகமிக பண்பட்ட ரீதியில் அறிவுத்தளம் கொண்ட கட்சி’யான திமுகவின் கண்மணி கனிமொழி அவர்கள், பெரும்பேராசானைக் கன்னாபின்னாவெனக் குற்றம்சாட்டி ஆவேசப் பட்டார். எடுத்துக்காட்டாக – கீழேயுள்ள காணொலியில் – ஜெயமோகனை ஸைக்கோ (~மனநோய் பிடித்த வக்கிர ஆசாமி) என பண்பட்ட ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார் பாருங்கள்!

https://www.youtube.com/watch?v=8xVK192fTak

(4.40-4.43 இடைவெளியில் இது வருகிறது – இது 2008 வருட விடியோ – ஜெயமோகன் தொப்பி-திலகம் என எம்ஜி ஆர் சிவாஜியைக் கிண்டல் செய்ததன் எதிரொலி என அனுமானிக்கிறேன்; விவரங்கள் முன்னேபின்னே இருக்கலாம்; பொருத்தருளுங்கள்!)

இவர் அதே ‘தனிப்பட்ட முறையில்’ ஜெயமோகனின் ‘நம்பிக்கை கொண்டுள்ள’ கருணாநிதியின் மகளின் தாயாரின் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, 1) அறிவுதளத்தில் 2) மிகமிக பண்பட்ட ரீதியில் இது சொல்லப்பட்டிருப்பதால் – உண்மையைத்தான் கனிமொழியார் செப்பியிருக்கிறார் என என் பெரும்பேராசான் ஒப்புக்கொள்வார் என நினைக்கும் நான்தான் ஒரு ஸைக்கோ என்பதன்றிப் பிறிதொருவனில்லை. நன்றி.

-0-0-0-0-

இன்னொரு விஷயமும் எனக்கு ஜெயமோகன் சம்பவத்தில் உறுத்துகிறது.

திமுகவுக்கும் தான் அடிபட்டதற்கும் ஒரு தொடர்புமேயில்லை எனத் திரும்பித் திரும்பிப் பரப்புரை செய்து வருகிறார் நம் ஜெயமோகன். சரி. கட்சிசார்புக்கும் அடிதடிக்கும் தொடர்பில்லை என்கிறார் – ஆனால் தனிப்பட்ட அரசியல்வாதிகள் இதற்குப் பின்னால் இருக்கிறார்களாம்! சரிதான். அது அவர் கருத்துரிமை. அந்தத் தனிப்பட்ட அரசியல்வாதிகளின் அரசியல் என்பது அரசியலே இல்லை என்றே கூடச் சொல்லலாமே! (ஆனால், இந்தவிஷயத்தில் அவருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும் சங்கடங்களை நான் உணராமலில்லை)

// இன்று இதில் தலையிட்டு தொடர்ந்து அழுத்தம் அளிப்பவர்கள் சில தனிப்பட்ட அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகளுடைய குற்றச்செயல்களுக்கான கருவி இவனும் இவன் உடன்பிறந்தவர்களும். அதில் உண்மையில் கட்சிச்சார்புகள் இல்லை.

…ஆனால் அதேபோன்ற கருத்துரிமை நிலைநாட்டலை, ஜெயமோகன் போன்றவர்களும் அவருக்காகக் கொடிபிடிப்பவர்களும், மோதி/பாஜக விஷயத்தில் செய்ததாக எனக்கு நினைவில்லை.

நாட்டில் எந்தச் ‘சகிப்பின்மை’ விஷயம் நடந்தாலும்  முறைகேடுகள் ஏற்பட்டாலும் அல்லது அவை ஏற்பட்டிருப்பதாகக் கதையாடல்கள் கதைக்கப்பட்டாலும் – அதற்கெல்லாம் பாஜக/ஆர்எஸ்எஸ் காரர்கள் நேரடியாகவோ / மறைமுகமாகவோகூட காரணமேயில்லை என்றாலும்கூட – பலர் (ஜெயமோகன் உட்பட) நரேந்த்ரமோதியை அவர்களுக்கு முடிந்தவரை கரித்துக்கொட்டினார்கள். பாஜக ஹிந்துத்துவா பயங்கரவாதம் என்றார்கள். ஹிந்து வேறு ஹிந்துத்துவா வேறு என்றார்கள்… மதவெறி ஹிந்துத்துவா மோசம் என்றார்கள்… …

ஒரு சமயத்தில் கூட, இந்த மதச்சார்பின்மை-லிபரல் நாயகர்கள், மனிதவுரிமைத் திலகத்தொப்பிகள்  ‘தனிப்பட்ட மனிதர்கள் செய்வதற்கு கட்சி எப்படி பொறுப்பேற்க முடியும்’ என்றுகூடச் சொல்லவில்லை. ஆய்வு / ஆராய்ச்சிகளுக்குப் பின் சரியான விஷயங்கள் வெளிவந்தபோது, தங்களுடைய காமாலை கண் கருத்துகளுக்காக ஒருமுறை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை; தங்களைத் திருத்திக்கொள்ளவுமில்லை.

ஆனால், நானும் கருத்துரிமை கட்சிதான்.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதும், இரட்டைவேடங்களிடுவதும் நம் கருத்துரிமைகளில் தலையாயவை என்பதையும் ஆமோதிக்கிறேன்.

அதுவும் அலக்கியவாதிகளென்றால் – ஒரு முற்றிய முமுட்சுவாக முட்டைவேடம் கூட அணியலாம் என்பதையும்…

நன்றி. (டீவிகாரர்களுக்கான டிஆர்பி ரேடிங் போல யாராவது படுஸீரியஸ்ஸாக இணையதள போக்குவரத்தையும் மானிட்டர் செய்கிறார்களோ என்ன எழவோ! அதனால்தான் நம் ஜெயமோகன் இப்படியெல்லாம் செய்கிறாரோ?)

-0-0-0-0-

ஐயய்யோ!

என்ன??

சென்ற கணம் ‘உடைந்த செய்தி’யில் –

பிரபல எழுத்தாளர் எஸ்ராமகிருஷ்ணன், தோசை என்கிற பெயர் ராசியாக இருப்பதால், தன் பதிப்பகத்தின் பெயரை தோசாந்திரி என மாற்றிவிட்டுத் தேசம்தோசமாகத் திரிந்து தனித்துவமாகவும் தன்னளவில் வட்டமாகவும் இருக்கும் கலகப் பிரதி ஜென் வொலகத் திரைப்பட தோசைகளைத் தேடி நடைப்பயணம் சென்றுவிட்டாரா??

– என வந்திருக்கிறதே!

ஐயகோ! இனி ஞான் ஜோக்குகளுக்கு எந்தா செய்யும்! :-(

 

15 Responses to “என்னது? என் பெரும்பேராசான் ஜெயமோகனை மாவோயிஸ்ட்கள் என்கௌன்டர் செய்துவிட்டார்களா?”

  1. Velmurugan Kuberan Says:

    //திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது//

    என்ன சொல்வது இவரை எல்லாம் ஒரு நேர்மையான ஆளாக நினைத்து படித்தவர்களைதான் சொல்ல வேண்டும். இவர்(ஜெயமோகன்) இவ்வளவு கேவலமாக இறங்குவார் என்று நான் நினைக்கவில்லை.

  2. V Says:

    லோக்கலில் கட்சிகாரர்களை கடிந்து ஒதுக்க கூடாது. அண்ணன் ஸ்டாலின் என பாஜக கட்சிக்காரர்களே பம்புவார்கள், ஆசானெல்லாம் சாதாரண மிடில் க்ளாஸ், சமாதானமாக போவது நல்லது.

  3. N.vijayentheran Says:

    // திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது.// இப்படி அறிக்கையெல்லாம் விட்டாரா தெரியாது.ஜெயகாந்தனும் கடைசிக் காலத்தில் இப்படி பம்மியதாக ஞாபகம்.


    • ஐயா, அவர் சர்வ நிச்சயமாக அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

      அது அறிக்கையாக வெளிவந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் பொதுவாகவே, முடிந்தவரை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துவிட்டுத்தான் எழுதுவேன். (அதையும் மீறிச் சில தவறுகளைச் செய்துவிடுகிறேன் – விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய சில விஷயங்களில்).

      மற்றபடி இவர் பம்மினார் அவர் ஜகா வாங்கினார் என்பதிலெல்லாம் எனக்கு அவ்வளவு அக்கறையில்லை. நன்றி.

  4. xxx@test.com Says:

    Peacock Nair responded to you. Any comments?


    • Sir, I do not know whether it is his response to whatever I posted. I do not think he even reads what I blather. It does not matter anyway or eitherway.

      I do not read everything he writes (if he writes) may be because of my self-imposed lack of facebookish curiosity – and am sure he also would not bother with an unscholarly guy like me. Cuts both ways. Net is fool of such peepal.

      That said, there are three things;

      1. He writes his name as BCAK Nayar. But if you have written in jest about peacock, it is absolutely fine.

      2. I do not agree with many of his statements, some statements I cannot relate to or understand – but as I had said earlier, ‘looking out for friends’ is a commendable attribute and he has already demonstrated it (at least once) in the context of cuddaloreseenu, jainism, jemoism and all that.

      3. Please try to do something useful apart from ‘feeding’ info.
      Thanks.

  5. Sundar Says:

    திமுக என்பது பொறுக்கிளால் பொறுக்கிகளுக்காக நடத்தப்படும்

    The matter is correct but pls correct the spelling.

  6. Sundar Says:

    Schadenfreude

    Can you kindly teach me where do you pickup and how do you remember such words?

  7. K.Muthuramakrishnan Says:

    மாவு விற்பவர்கள் எல்லாம் மாவோயிஸ்டா? ஆனாலும் குசும்பு ரொம்ப ஜாஸ்தி.

    பாவம் குடிமகனால் அடிக்கப்பட்டு சங்கடத்தில் இருக்கிறார். சொல்லாலும் அவரைச் சீண்ட வேண்டுமா?

    மாபெரும் வெற்றியைப் பெற்று இழ‌ந்த செல்வாக்கை மீண்டும் பெற்று வரும் கழகத்தைப் பகைத்துக் கொள்ள முடியுமா?


    • ஐயா! நீங்களும் இந்த மாவோயிஸ்ட் ஊடுருவலைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமலிருந்தால் ஞான் எந்தா செய்யும்! :-(


  8. […] தத்துப்பித்துவம், ஜெயமோகன் மாவோயிஸ்ட்களாலும் பாண்டாக்களாலும் […]


Leave a reply to N.vijayentheran Cancel reply