2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)
March 14, 2016
இவ்வரிசையின் முதற்பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3)
… தொடர்ச்சி… …
3. அஇஅதிமுக-வும் ஒரு கடைந்தெடுத்த திராவிடக் கட்சிதான். ஆகவே, இதுவும் ஒரு மகாமகோ கொள்ளைக்கார நிறுவனம் மட்டுமே.
ஆனால் இவர்களிடம், திமுக போன்ற கலாச்சாரச் சுரண்டலில்லை. பொருளாதாரச் சுரண்டலை அமோகமாகச் செய்தாலும், பண்பாட்டினைப் பொசுக்கித் தள்ளுவதில்லை, என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருந்தலைவர்களுக்கு, அடுத்த பரம்பரைத் தலைவர்கள் இல்லை. ஆகவே இதுசார்ந்த போட்டிகள் இல்லை. கொள்ளைக்காரர்களாக இருந்தாலும், குறுநில மன்னர்கள் இல்லை.
இவ்வமைப்பில், கட்சிக் கட்டுப்பாடு என்பது கொள்ளை சார்ந்ததாக மட்டும் இல்லாமல், திராவிடர்களுக்கே உரித்தான தனி நபர் வழிபாட்டினை, தலைவர்களின் பாதங்களைச் சுத்தமாக நக்கும் திறனை, உச்சகட்ட வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது; அதுவும் – சுயமரியாதையைத் துப்புறவாக விட்டொழித்து, கட்சித் தலைமைக்கு அடிபணிந்து கீழேகுனிந்து தரையை நக்கும் அளவில் உள்ளது…
…சொல்லப்போனால், ஒரு பெண் தலைவியின் காலடியில் புரண்டுகொண்டு அருளுக்காக ஏங்கும் (மற்றபடி ஆணாதிக்கவெறிய காமாந்தகர்களான) திராவிட’இன’மறவர்களைக் காணும்போதெல்லாம் எனக்கு ஒரு வக்கிரமான திருப்தியும் கூட!
என்னுடைய அனுமானத்தில் – ஜெயலலிதா அவர்கள், ‘என் காலில் விழு, அடுத்த முதலமைச்சர் பதவி உனக்குத்தான்‘ எனக் கருணாநிதி அவர்களிடம் உறுதியாகக் கூறினால் – திராவிடக்கொள்ளைச் சார்புமிக்க, திராவிடத் தன்மானம் மிகுந்த அவர், தயக்கமேயில்லாமல் நெடுஞ்சாண்கிடையாக டமாலென்று சந்தோஷமாக விழக்கூடியவர்தான்! அதனையும் குடும்பசகிதம் அமோகமாகச் செய்து நமக்குப் புல்லரிப்பனைக் கொடுக்கக்கூடியவர்தான்! (நினைவுபடுத்துகிறேன்: எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்தபோது, எப்படியாவது தேர்தலில் வெற்றிபெறவேண்டுமென, நம் கருணாநிதி, கிட்டத்தட்ட இப்படியெல்லாம் ததிங்கிணத்தோம் நடனமாடியது நமக்குத் தெரியாதா என்ன?)
…எது எப்படியோ, திமுகவைவிட அஇஅதிமுக-வுக்குத் தான் ‘மக்கள்’ ஆதரவு அதிகம் என்றாலும், திராவிட ‘ஐம்பெரும்’ பாரம்பரியத்தில் ஊறிய மட்டில் இது ஒரு இரண்டாம்தர திராவிடக் கட்சிதான்; இதற்கும், தன் போக்கைத் திருத்திக்கொள்ளும் அவசியமோ, விருப்பமோ இல்லை. ஆனால் பலவித காரணங்களினால் எப்படியும் – இக்கட்சி தானாகவே தளர்ந்துபோகக் கூடிய சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.
இருந்தாலும், இதுவும் படிப்படியாக – திமுகவுக்கு அடுத்தபடி, இரக்கமற்று உதிர்க்கப் படவேண்டிய கட்சிதான். இதிலும் எனக்குச் சந்தேகமேயில்லை.
3. பாமக, தேமுதிக போன்றவற்றை திராவிடத்தனமாக இயங்க ஏங்கும், பிடிவாதமாக முயலும் கட்சிகள் என நினைக்கிறேன். இவற்றில் பாமக-வுக்கு மட்டும்தான் கொள்கைகளோ, நெடு நாள் நோக்கில் சிந்திப்பதோ இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். சொல்லப் போனால், சில அடிப்படைத் திருத்தங்கள் செய்யப்பட்டால், தமிழக அரசியல் சூழலில், இக்கட்சியானது எதிர்காலத்தில் பிரகாசிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.
அன்புமணியும் ‘அளவுக்கு அதிகமாக’வெல்லாம் ஊழல்கள் செய்யவில்லை, பிற தலைவர்கள் போலல்லாமல், அவர் படித்தவர். கோர்வையாக அவருடைய எண்ணங்களை முன்வைத்து, அமைப்பு ரீதியாகப் போராடக் கூடியவர். ஓரளவுக்குப் பண்பாளரும் கூட. ஆனால் – அவருடைய தகப்பனாரைப் பற்றி அப்படிச் சொல்லமுடியுமா என்பது ஒரு கேள்விதான். கடந்த சில வருடங்களில் அவருடைய சமன நிலை குறைந்துவிட்டது என்பது சோகமே!
எது எப்படியோ, ஜாதிஅபிமான அரசியலுக்கு அப்பாற்பட்டு, பாமக-வுக்கு கொள்கைகளைப் பற்றிச் சிந்திக்கும் திறனும் இருக்கிறது, தமிழகத்தின் மேல் கொஞ்சம் கரிசனம், அதுவும் தொடர்ந்து இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இருந்தாலும் இது ஒரு திராவிடக் குணங்களையுடைத்த ஒரு கட்சி. மேலதிகமாக காடுவெட்டி குரு போன்றவர்களின் அப்பட்டமான ஜாதிவெறிப் பேச்சுக்கள்வேறு! இந்த நோய்களைக் கண்டுகொண்டு அவற்றை உதிர்த்துக்கொண்டால் இக்கட்சிக்கு விமோசனம் (நமக்கும் சரி, அதற்கும் சரி) கிடைக்கலாம்.
4. தேமுதிக தலைவர் ‘கேப்டர்’ விஜயகாந்த் தன்னுடைய குளுவான் ரசிகர் மன்றத்தை அரசியல் ரீதியாகத் திரட்டியிருக்கிறார். இதுவும் ஒரு பாவமான திராவிடப் பாரம்பரியம்தான். என்டி ராமராவ், எம்ஜிஆர் போல மேலெழும்ப ஆவலுள்ளவராகத் தெரிகிறார், நம் கேப்டர். திமுக-அஇஅதிமுகவுக்கு மாற்றாக நான்தான் இருக்கிறேன் என்கிறார் – ஆனால் கட்சியை, திராவிடப் பாணியில்தான் நடத்திக்கொண்டிருக்கிறார். கொள்கை என்றால் கிலோ எவ்வளவு லிட்டர் எனும் அளவில் இருக்கிறார், பாவம்.
இவருக்கு- சிந்தனைகளில், அவற்றை வெளிப்படுத்துதல்களில் கோர்வையில்லை. நெடு நோக்குத் திட்டங்களை அவதானிக்கும் திறமையில்லை. அரைவேக்காட்டு முட்டியடி எதிர்வினைகள் வேறு. பொறுப்புணர்ச்சி இல்லவேயில்லை. அமோகமாக உளறிக் கொட்டுகிறார் – பேசாமல், தெளிவாகச் சிந்தித்துக் கோர்வையாக உரையாடமுடியும் நிலையில் இருக்கும் அவர் மனைவியை மட்டுமாவது பேசவிட்டு, தான் மேடைகளில் கையை மட்டும் ஆட்டிவிட்டுப் போய்க்கொண்டிருக்கலாம்.
ஆனால் – கேப்டருக்கு, மேடைகளிலும் நடிக்கத் தெரியவில்லை. ஆனால் ஆசையிருக்கிறது தாஹ்ஸில் பண்ண. தேமுதிக கத்திக்கப்பலின் கண்ணில்லாத கபோதி கேப்டன், கூடியவிரைவில் கடல் பட்டாங்கு?
…திராவிடத்தால் காயடிக்கப்பட்ட, பதனம் செய்யப்பட்ட பாவப்பட்ட தமிழகத்தில் மட்டும்தான் இந்த கேப்டர் விஜயகாந்தனார் போன்றவர்கள் தொடர்ந்து மேலெழும்ப முடியும். வேறெந்த மாநிலத்திலும், நிதானமில்லாமல் இருக்கும் மனிதர்களால், அதுவும் ஜாதிசார்பற்ற-கொள்கையற்ற ஒரு பரந்துபட்ட கட்சியமைப்பை, விசிலடிச்சான் குஞ்சப்பனார்களை மட்டுமே வைத்துக்கொண்டு நடத்திக்கொண்டு செல்லவே முடியாது.
ஆனால், இவரால் இந்தக் காரியத்தைச் செய்ய முடிந்திருக்கிறது – இதே போலத்தான் நம்பவே முடியாத அளவில் இளம் அரைகுறைகள், விஜய்குஜய்கள் பின்னாலும் அஜித்கள் பின்னாலும் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள் அல்லவா? :-( திராவிடத்தால் கண்டமேனிக்கும் குறுக்குசால் போட்டு உழுதழிக்கப்பட்ட தமிழக நிலத்தில் தான் இது சாத்தியம்!
விஜயகாந்த் செய்தது, ஒரு ரசிகக்குளுவான் திரளைக் கட்டியமைக்க முடிந்தது மட்டுமல்ல; அவரால், தொடர்ந்து தன் ஆதரவுஅடித்தளத்தையும், ஆகிருதியையும் தேர்தல்களின் மூலமாகவும் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. (வெறுமனே நகரங்களில் அமர்ந்துகொண்டிருந்து, தினசரிகளையும் இணையத்தையும் நம்பி வம்பளப்பு செய்யும் அரைகுறைகளுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், விஜயகாந்த் அவர்கள் பின்னாலும் கூட ஒரு பெரிய திரள் (இதில் இளைஞர்கள் பலர்வேறு!) இருக்கிறது. இது ஒரு முக்கியமான, ஆனால் திகைக்கவைக்கும் சோகம் தரும் விஷயம்! இதேபோலத்தான் நம்பவே முடியாத எண்ணிக்கைகளில், சீறும் சீமானார் பின்னாலும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர்! இந்தக் காரணங்களினாலேயே எனக்கு, நம்முடைய பெரும்பாலான தமிழ் இளைஞர்கள் பேரில் ஒரு மாளா அவநம்பிக்கை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.)
…இருந்தாலும், இந்த தேதிமுகவானது திராவிடத்தன பாவலாக்களும் விசிலடிச்சான் குஞ்சப்பர்களும் நிரம்பிய – ஆகவே ஜனநாயகமற்ற, மக்கள் மேல் கரிசனமற்றவர்களற்ற, அறிவாளிகளற்ற (ஆகவே தரமான வழி நடத்துதல்களற்ற), கொள்கைகளற்ற, குடிகாரக் கூவான்கள் மிகுந்த உளறல்வாதக் கட்சி. இந்த லட்சணத்தில், மேலதிகமாக, வசீகரக் கோமாளித்தனத்தில் திளைக்கும் கட்சி. இதுவும் தயவுதாட்சணியம் இன்றிக் கடாசப் படவேண்டியதுதான் – கிள்ளி எறியப்படவேண்டியதொன்று மட்டுமே!
5. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பது வெறும் திருமாவளவன் கட்சிதான். அவர், சில தலித் உட்பிரிவுகளை அமைப்பு ரீதியாகத் தொகுத்து திராவிடத்தன அரசியல் செய்துகொண்டிருப்பவர் மட்டுமே. கொள்கை என்றால் என்ன, சொந்த சமூக மேன்மைக்காக என்ன செய்யவேண்டும், படிப்பறிவின் முக்கியத்துவம், ஆக்கபூர்வமான செயலூக்கத்தின் மூலம் நெடுங்கால ரீதியான முன்னேற்றங்களுக்கு எப்படி வித்திடுவது, தமிழகத் திராவிட நடைமுறைச் சூழலில், எப்படிப்பட்ட தலைமை தலித்களின் ஒரு சில உட்பிரிவினரையாவது கடந்தேற்றக்கூடும் – என்பவை போன்ற சிந்தனைகள் – இவர் தொகுத்திருக்கும் பெரும்பாலான இளைஞர்களுக்கு இல்லவேயில்லை; அவர்கள் தேவையற்ற அடாவடிக்கும், குடிவெறிக்கும், குண்டர்தனத்துக்கும், முறைகேடான வழிகளில் பொருளாதாயம் தேடுவதற்கும் மட்டுமே பயிற்சி தரப் பட்டுள்ளனர். மேலும், இவ்விளைஞர்களில் சிலர், பிற, மேலதிகமாக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள ஜாதிகளை (=அருந்ததியர்கள், ஒட்டர்கள்) எப்படி அணுகுகிறார்கள் என்பதையும் நேரடியாகப் பார்த்திருக்கிறேன் – இதுவும் அமைதி தருவதாக இல்லை. (இது தொடர்பான 2011 தேர்தல் காலத்திய பதிவு: தேர்தல் ‘சுற்றுப்பயணம்’ – 3 23/04/2011)
திருமாவளவன் அவர்களின் பல பேச்சுக் கச்சேரிகளுக்குப் போயிருக்கிறேன். அவர் பேச்சுகளில் பொதுவாகவே, தொலை நோக்கோ திட்டமிடுதலோ இல்லை. முட்டியடி எதிர்வினைகளிலும், நம் தமிழகத்திலிருந்து ஒன்றையும் செய்யமுடியாத ‘தமிழ்’ ஈழப் பிரச்சினையிலும் மூழ்கி, உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதிலும், விசிலடித்தல்+கைதட்டல் பரிசில்கள் வாங்குவதிலும் – பொதுவாகவே கதாகாலட்சேபம் செய்து கொண்டிருப்பதிலுமே அவருடைய நேரம் போய்விடுகிறது. இதற்கு ஒரு படி மேலேபோய் தேவையேயற்ற (வரலாறு+அறிவியல் ரீதியாக) காலாவதியான ‘இனம்’ ‘இனமானம்’ பற்றியெல்லாம் ஒரு சுக்குக்கும் பயனில்லாமல் முழக்கங்கள் + ஜாதிவெறி திராவிட அமைப்புகள், ‘விடுதலை’ வீரமணி போன்றவர்களுடன் சல்லாபித்து நேரவிரயங்கள்…
மேலதிகமாக, கடந்த 4-5 ஆண்டுகளில் அவருடைய பேச்சின் தரம் – திராவிடக் கட்சிப் பேச்சாளர்களின் வக்கிரத் தனத்துடன் போட்டி போடுகிறது; குறைந்த பட்சம் ஒருமுறையாவது ‘எங்களோடது பெருசு’ ரீதியில் பேசியதை நானே கேட்டிருக்கிறேன். வன்னியர் சார்பில் பேசுவதாகக் கருதிக்கொண்டு காடுவெட்டி குரு போன்றவர்கள் அரைகுறைத்தனமாக வெறுப்பை உமிழ்ந்தால், திருமாவளவன் அதற்கு மேல் பேசுகிறார். இப்படிப் படு கேவலமாகப் பேசினால், அவருடைய தொண்டர்கள் எப்படி மதிக்கத்தக்க செயல்களை – பிறருக்காக என்பதையே விடுங்கள் – தங்களுக்காகவாவது செய்து கொள்ள முடியும்?
விசிக-வின் தலைமையும் பரந்துபட்டதாக இல்லை. திமுக அஇஅதிமுக போலவே, இக்கட்சியிலும் இரண்டாம் அடுக்குத் தலைவர்களே இல்லை; தலைவர் – அவருக்குப் பின் மூன்றாம் அடுக்குத் தலைவர்கள்தாம்! இதற்கு – பதவியைத் தக்கவைத்துக்கொள்வதுதான் காரணம் என்பது மட்டுமல்ல, பிற சோகமான பொருளாதாரக் காரணங்களும் இருக்கின்றன.
மேலும் – இவ்வளவு சிறிய கட்சியாக இருந்தாலும் கூட, நம்பகத் தன்மை இல்லாமல், பல விஷயங்கள் நடக்கின்றன; உட்கட்சியில் உள்ள – பொருளாதாயம் குறித்த பொறாமையால், பங்கிடல் பிரச்சினைகளால் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் தேவையற்று ஜாதிவெறி முலாம் பூசப்படுகிறது. இதனால், இக்கட்சிக்கு, தலித்களுக்கு அப்பாற்பட்ட பரந்துபட்ட மக்கள் வந்துசேருவதும் முடியாது. மேலும், இக்கட்சியானது, முட்டியடி எதிர்வினைகள் மட்டுமே கட்சியின் நடைமுறைக் கொள்கைகள் என்ற அளவில் மட்டும் தான் இயங்குவதால், ஒரு தொலை நோக்கே இல்லாமல் அலைபாய்வது என்பது மட்டுமே சாஸ்வதமாகியிருக்கிறது. இது ஒரு சோகமான, நிதர்சன உண்மை. சமூக(!) வலைத் தளங்களில், கருத்துலக அரைகுறைகள் நடந்துகொள்வது போல பிரச்சினைக்குப் பிரச்சினை தாவிக்கொண்டே கருத்துதிர்த்துக் கொண்டிருந்தால் – ஆக்கபூர்வமான கட்டமைப்புகளைச் சமைப்பதற்கு ஏது நேரம்!
ஆனால், திராவிடக் கட்சியாக இருக்கும் விசிகே – இப்படியேதான் தொடரும் என்றுதான் நினைக்கிறேன்; ஆகவே, இதுவும் கடாசப்படவேண்டிய கட்சிதான்.
இச்சிறு கட்சிக்கு இவ்வளவு நீளமாக எழுதியிருக்கவேண்டுமா என்று தோன்றுகிறது, ஆனால் விசிக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து + பாமக அமைக்கப்பட்டதிலிருந்து அவற்றை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன் – இவற்றின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ, நடைமுறைப் பிறழ்வுகளுக்கோ அந்தந்த ஜாதித்திரள்கள் காரணமல்லர்; ஏனெனில், எனக்குப் பட்டவர்த்தனமாகத் தெரியவருவது என்னவென்றால் இவையனைத்தும் திராவிடக் கந்தறகோளத்தில் முக்குளித்து முகிழ்த்தவை. ஆக, இவை – அலங்கோலமல்லாமல் வேறெப்படி இருக்கக்கூடும்? இப்போதைக்கு இவற்றுக்கும் (நமக்கும்) விமோசனமேயில்லை.
திருமாவளவன் அவர்களுடைய கட்சியின் தேங்கல் நிலை வருத்தம் தருவது – ஆனால் நிச்சயம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.
6. கிருஷ்ணசாமி அவர்களின் ‘புதிய தமிழகம்‘ கட்சியும் தலித்களின் உட்பிரிவுகள் சிலவற்றை அமைப்பு ரீதியாகத் திரட்டிச் செயல்படும் கட்சியே; ஆனால், இக்கட்சி பற்றி நான் அதிகம் அறியேன். இக்கட்சியில் இருக்கும் இளைஞர்களையோ, தலைவர்களையோ – ஒருவரைக்கூட எனக்குத் தெரியாது. கட்சியின் நடப்பு பற்றியும் அப்படியே! கிருஷ்ணசாமி அவர்களின் பேச்சுகளுக்கும் அவ்வளவு போனதில்லை. (=ஒரேயொருமுறை தான் போயிருக்கிறேன்; அதிலும் அவர் அமைதியாக, கருத்துகளைத் தொகுத்துக்கொண்டுதான் பேசினார் எனத்தான் நினைவு! ஆர்பாட்டமில்லாமல் ஆரவாரம் இல்லாமல் எப்படித்தான் ஒரு தமிழ அரசியல்வாதி பேசக்கூடும் என்று அன்றே நினைத்ததை, இன்று நினைவு கூர்கிறேன்)
…எனக்கு ஒப்புக்கொள்ளமுடியாத (ஆனால் சுளுவாகப் புரியும்) விஷயங்களில் ஒன்று: இந்த கிருஷ்ணசாமி அவர்களும், திருமாவளவன் அவர்களும் ஒன்று சேர முடியாமற்போனது, போவது…
மானுடவியல் அடிப்படையில் மனிதன் குழுக்களாகப் பிரிந்துபிரிந்துதான் செயல்படுவான் என்று புரிகிறது. அவனுக்கு ஆதாயமும் அதிகாரமும் முக்கியம் என்பதும்தான். என்னதான் இணையம் போன்றவை பரந்துபட்டு பொதுமக்களை அடைந்தாலும், அவற்றின் சாத்தியக்கூறுகளையும் உபயோகித்து அணிஅணியாகத் திரள்வான் அவன் என்பதும் புரிகிறது; சில சமயங்களின் வெறுப்பினை உமிழ்ந்து வெறியூட்டுவான் (=bigotry), சில சமயங்களில் அவனே குய்யோமுறையோ என்றலறி, ஏன் எனக்குமட்டுமே இப்படியாகிறது என்றெல்லாம் பிலாக்கணம் வைப்பான் (victimhood) என்பதும்தான்!
ஆனாலும்…
-0-0-0-0-0-0-
அடுத்த பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3)… …