2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3)
March 15, 2016
இவ்வரிசையின் முதற்பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3); இரண்டாம் பகுதி: 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3)
இப்பதிவு, இவ்வரிசையில் கடைசி: 3/3. … தொடர்ச்சி… …
7. மதிமுக – ஒருகாலத்தில் வை கோபால்சாமி அவர்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அவரும் ஒரு சாதாரண திராவிடத் தலைவர்தான், அர்த்தமற்ற அடுக்குமொழிகளில் ஆழ்ந்து புளகாங்கிதம் அடைபவர்தான் என்பதை உணர்ந்துள்ளேன்.
…ஆனாலும் – திராவிட இயக்கத்தின் தலைவர்களில் முக்கியமான ஒருவராக இருந்தாலும்கூட, தனி மனித ஒழுக்கம் நிரம்பியவர் என ஒருவரைச் சொல்ல முடியுமானால் அவர் நிச்சயம் வை.கோபால்சாமி அவர்கள்தாம். ஆனால், பல பிறவிஷயங்கள் காரணமாக – தற்போதைக்கும் அவருடன் சேர்ந்து, நானும் பகிரங்கமாக விசும்பி விசும்பி அழத்தான் முடியும்.
நாங்கள் இருவரும் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே உணர்ச்சி வசப்படும் வகையினர், வேறென்ன சொல்ல. ஆகவேதான், தேவையேயற்று அவர் அந்த ந்யூட்ரினோ பற்றியெல்லாம் அமோகமாக உளறிக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து அரைகுறைப் போராட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்தமாதிரி போராளித்துவ எழவுகளுக்கெதிராக நானும் எழுதிக்கொண்டேஏஏஏஏ இருக்கிறேன்.
எது எப்படியோ, கட்சியை அதிகாரத்தை நோக்கி நடக்கவைக்க வைகோ அவர்களால் முடியவில்லை.
ஏனெனில், தந்திரோபாயங்களில் பயிற்சியில்லை. ஆகவே – வசீகரம் அவ்வளவு இருந்தும், திறமை இருந்தும், கடின உழைப்பு இருந்தும் — முக்கிய எதிராளியாக, வீழ்த்துவதற்கு ஒரே மனிதராக, வசீகரமற்ற ஊழல் வாணிகர் இசுடாலிர் மட்டுமே இருந்தும்கூட இந்த நிலைமை! பாவம் – வைகோ மட்டுமல்ல, தமிழகமும்தான்.
ஆகவே… அழுவோம், :-( ஏனெனில் இக்கட்சி காலப்போக்கில் கரைந்துவிடும். ஒரு திராவிடக் கட்சி இப்படி சாத்வீகமாகக் கரைந்து ஒழியப்போகிறது. நன்றி அய்யா!
8. கொங்கு கட்சிகள், பச்சமுத்து கட்சி போன்றவையெல்லாமும் திராவிடச் சாயல் கட்சிகளே – திராவிடம் என்கிற கிழிந்த போர்வையில் ஜாதிரீதியாக மட்டுமே மக்களைத் திரட்டும் அமைப்புகளே; ஆனால் இவற்றின் தாக்கத்து என்பது, மகிழ்ச்சி தரும் விதத்தில், மிகவும் குறைவு. நன்றி.
9. தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத், மனிதநேய மக்கள் கட்சி போன்றவை முஸ்லீம்களின் மேன்மைக்குப் பணிபுரிவதாக வாய்கூசாமல் புளுகும் அடிப்படைவாத, பொறுக்கிமுதல்வாத இயக்கங்கள் – இவையும் பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை; திராவிடத்தனமாக மக்களைத் திசைதிருப்பி அரசியல், பொருளியல் ஆதாயமும் பெறுவதற்கு அப்பாற்பட்டு – மூடநம்பிக்கைவாதத்தின் பின்னும், பயங்கரவாதத்தின் பக்கமும் தத்தம் அமைப்பு/சமூக இளைஞர்களை அயோக்கியத்தனமாகத் தள்ளுபவை.
பரந்துபட்ட முஸ்லீம் சமூகத்தை மூட நம்பிக்கைகளிலும், தனிமைப் படுத்தலிலும் – ஆகவே தாங்கொணா வெறுப்பியத்திலும் தள்ளுபவை. இவையும் தமிழகத்திலிருந்து அகற்றப் படவேண்டும். இவையும் ஒழிக்கப்படவேண்டிய புற்று நோய்களே!
ஆனால் மிதவாத ‘இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்’ பற்றி, அது பல பிளவுகளுடன் இருந்தாலும் இப்படிச் சொல்லமாட்டேன்; இத்திரள்களில், ஒருகாலத்தில் மதிக்கத்தக்க பல தலைவர்களிருந்தார்கள் – இப்போதும் சிலர் இருக்கிறார்கள் என நம்புகிறேன். ஆனால் இவர்கள் ஒவ்வொரு தேர்தலின்போதும் திராவிடக் கட்சிகளிடம் – முக்கியமாக, அந்தக் கடைந்தெடுத்த அயோக்கிய திமுகவிடம் – சரணடைந்துவிடுகிறார்கள்; இதுதான் மிகப் பெரிய சோகம்.
-0-0-0-0-0-0-
…மேற்கண்ட பிரிவுகளில்-கட்சிகளில் – அபூர்வமாக – ஒரிரு நேர்மையானவர்கள், செயலூக்கம் மிகுந்தவர்கள், மக்களின் மேன்மையை விழைபவர்கள், சுயஅர்ப்பணிப்பு மிக்கவர்கள், நெடு நாள் நோக்கில் சிந்திப்பவர்கள், தேர்ந்த அரசியல்வாதிகள் என்றெல்லாம் இருக்கலாம். ஆனால் – அப்படித் தவறிப்போய் திராவிடத்தில் ஐக்கியமாகியிருக்கும் பழ. கருப்பையா போன்ற அறிவாளிகளும் நேர்மையாளர்களும்கூட சில சமயங்களில் நிதானம் தவறி நடந்துகொண்டுவிடுகிறார்கள்.
ஆனாலும் அந்த அபூர்வமானவர்கள் திருமாவளவன்களாகவோ, வைகோக்களாகவோ, விஜயகாந்த்களாகவோ இருக்கும் சாத்தியக் கூறுகள், எனக்குத் தெரிந்தவரை இல்லை. (உங்களுக்கு இது தொடர்பாக, ஏதாவது நற்செய்தி எழவினைத் தெரியுமானால் சொல்லவும்!) திராவிடச் சாக்கடைகளில் தாமரை மலர்வது அபூர்வம். தாமரைக்குத் தரம் முக்கியம்.
…சரி. இப்படித்தான் இருக்கிறது, நம் தமிழகத்தின் நிலைமை. கவலைக்கிடம்தான். ஆனால், சொந்தக் காரர்களுக்குச் சொல்லியனுப்பவேண்டிய நிலையில், படுமோசமாக ‘இழுத்துக்கொண்டு’ இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், திராவிடச் சாயைகளும் அயோக்கியத்தனங்களும் பெரிதளவில் இல்லாத கட்சிகளும் தமிழகத்தில் இருக்கின்றன என்பது ஆசுவாசம் தரும் விஷயம்.
10. காங்கிரஸ் கட்சி – இது தமிழகத்தில் இன்னமும் உயிருடன் இருக்கிறது என்பதுதான், கடவுள் இருக்கிறார் என்பதற்குச் சான்று என நினைக்கிறேன்! ;-)
இதிலும் ஊழல்வாதிகள் இல்லாமலில்லை. ‘கதர்ப் பதர்’ எனச் செல்லமாக ப. சிதம்பரம் அவர்களை முன்னமே அழைத்திருக்கிறேன் (ஏன் எழுதுகிறேன்…10/05/2011). ஆனாலும் இதில் பல, ஜனங்களின்மேல் கரிசனம் உள்ள நல்லவர்கள் இருக்கிறார்கள். பாரதத்தின் கட்டுக்கோப்பினை விழைபவர்களும் அதன் மேன்மைக்காகச் சிந்திப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனாலும் பாவம், உட்கட்சி ஜனநாயகம் கொஞ்சம் அதிகமாகவேயுள்ள கட்சி இது. அவர்கள் தங்களுடைய உட்கட்சித் தகராறுகளில், பொதுவாகவே மிகமும்முரமாக இருப்பதால், யார் காலை எப்படி வாரலாம் என்று கபடியாடிக்கொண்டே இருப்பதால், பாவம், தமிழர்களுக்கு அவர்களைப் பொருட்படுத்தவேண்டிய அவசியமேயில்லை; அவர்கள் பாட்டு விளையாடிக்கொண்டிருக்கட்டும். அயர்வானபோது அவ்வப்போது தில்லி சென்று கோள் சொல்லி (=’அவன் என் பென்ஸில திருடிட்டான், மிஸ்‘) டீச்சர்களிடம் (=மகாமகோபாத்தியாய ராஹுல் ஆசார்யர் + ஸோனியா பெரியம்மையார் + ப்ரியங்கா சின்னம்மையார்) காதுதிருகலும், உதையும் வாங்கிக்கொண்டுவரட்டும். இப்படி இரண்டுமூன்று சுற்றுகள் போவதற்குள் தேர்தல் முடிந்துவிடும். நன்றி.
இருந்தாலும் – தேச அளவில் நம்மை ஒருங்கிணைக்கும், முடிந்தவரை சமமான வளர்ச்சியை பெரும்பாலும் நாடெங்கும் விழையும், மூன்று கட்சித் திரள்களில் ஒன்றாக (மற்றவை பாரதீயஜனதா, ஸிபிஐ+ஸிபிஎம்) இதனைப் பார்க்கிறேன். இக்கட்சியின் வளர்ச்சியை, செழுமைப் படுத்தலை விரும்புகிறேன். ஆனால், இக்கட்சியின் தமிழகப் பதிப்புக்கு இப்போதைக்கு விமோசனமேயில்லை என்பதையும் உணர்கிறேன். இது ஒரு சோகம்தான்.
11. தமிழகத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகள் (=ஸிபிஐ, ஸிபிஎம் கட்சிகளை மட்டும்தான் கணக்கில் கொள்கிறேன்; சமூகப் பொறுப்பற்ற பொறுக்கிமுதல்வாத நக்ஸலைட் கட்சிகள் தேர்தல்களத்திலும் இல்லை, மேலும் அவர்கள் வெறுப்பியத்தில் மட்டுமே ஈடுபட்டிருப்பவர்கள் – ஆகவே, அந்த ஜந்துக்களைப் பற்றிப் பேசவில்லை இங்கு!): நாம் மிகமிக மதிக்கவேண்டிய பலர் இக்கட்சிகளின் இன்னமும் இருக்கிறார்கள். அப்பழுக்கில்லாதவர்கள் இருக்கிறார்கள். அடிமட்டத்திலிருந்து, சேவை மனப்பான்மை, தொழிலாளி-விவசாயிகளைத் திரட்டுதல் போல மகத்தான உழைப்புகளின் மூலமாக மட்டுமே மேலெழும்பிய தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அதிகம் வெளியே தெரியவராத இளம் நம்பிக்கை நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். (ஆனால் இக்கட்சிகளின், குறிப்பாக ஸிபிஎம்-ன் மேற்குவங்க, கேரள அமைப்புகளின் அட்டூழியக் கேவலங்களையும், அவற்றின் அடிப்படைஅறங்களை நசுக்கும் பண்பையும் உணர்ந்துதான் இருக்கிறேன்).
இக்கட்சிகளின் சிலபல கருத்தாக்கங்களுடன் (+சில செயல்பாடுகளுடன்) எனக்கு ஒப்புதல் இல்லையென்றாலும், கம்யூனிஸ்மும் மூடநம்பிக்கைகளுடன் இயங்கும் கருத்தாக்கக் குவியல் என்பது தெரிந்தாலும் – இவற்றின் தலைவர்கள் பெரும்பாலும் அடிப்படையில் அயோக்கியத்தனமானவர்கள் அல்லர்; நாகரீகமற்றுப் பேசுபவர் அல்லவர் என்பதை உணர்ந்திருக்கிறேன். மேலும், இவர்கள் – நெடு நோக்கில் சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஸோவியத் ரஷ்ய, சீன வால் பிடிப்பவர்களாக இருந்து, அதிசயிக்கத்தக்க விதமாக சொந்த நாட்டின் வளர்ச்சியைக்கூட ஊக்குவிக்காமல் இருந்த நிலையிலிருந்து மாறி, இக்காலங்களில் நம்நாட்டின் மீது நம் மக்களின் மேன்மையின் மீது 10 விழுக்காடாவது கரிசனத்துடன் இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம் இது.
ஆனால், இதில் சோகமான விஷயம் ஒன்று என்னவென்றால் – ஒரு காலத்தில் நல்ல படிப்பாளிகளாக இருந்த ‘இடதுசாரி’ இளைஞர்களை, இக்காலங்களில் நான் பார்க்கவே முடிவதில்லை. ஏனோதானோ என்று ஒருவிதமான படிப்பறிவோ, உழைப்போ இல்லாமல் உளறிக்கொட்டிக்கொண்டிருப்பது அதிகமாகவே ஆகியிருக்கிறது. நான் ‘கிழக்கு’ மருதன் போன்றவர்களை இங்கே குறிப்பிடவில்லை. ‘தஹிந்துத்துவா‘ புகழ் வெறியரான என். ராம் போன்றவர்களையும் கூடக் குறிப்பிடவில்லை – ஜேஎன்யு போன்ற பல்கலைக்கழகங்களைத்தான் குறிப்பிடுகிறேன்; இம்மாதிரி அமைப்புகளில், பெரும்பாலும் இளம் பொறுக்கிகள்தான் இருக்கிறார்கள் – நான் பப்பரப்பா ஊடகப்பேடிகளின் கண்மணியான கண்ணையாகுமார் போன்றவர்களைத்தான் குறிப்பிடுகிறேன். (‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு 20/02/2016)
சிலசமயம் ஓரளவு நேரடியாகவே உண்மைகளை எழுதிவிடும் மனு ஜோஸஃப் அவர்களின், இந்த கண்ணையாகுமார்களின் ஊற்றுக்கண்களைப் பற்றிய கருத்துகளையும் – அவசியம் படிக்கவும்: Kanhaiya Kumar’s message was in the delivery
…எது எப்படியோ, இந்த கம்யூனிஸ்ட்காரர்கள் தங்களுடைய அடிப்படை உரிமையான ‘பேத்துரிமை’ என்பதை விட்டுக்கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! (பேத்துரிமை: இந்தியர்களின் முக்கியமான அடிப்படை உரிமை 27/02/2016)
(இதைப் படிக்கும் உங்களுக்கு) ஆச்சரியம் தரும் வகையில் – இக்கட்சியில் உள்ள தமிழகத் தலைவர்கள் மீதும், நான் தமிழகத்து கம்யூனிஸ்ட் தலைவர்கள் மேல் வைத்திருக்கும் அளவுக்காவது மரியாதையையும் அபிமானத்தையும் வைத்திருக்கிறேன். மேலும் ஒரு முக்கியமான விஷயம்: பாஜக-வின் உறுப்பினர்கள் பலருக்கு தேசிய அபிமானம் உண்டு – தேசவேறி கிடையாது என்பதையும், நான் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். மூன்றாம் பேருக்குத் தெரியாமல், ஆர்பாட்ட ஆரவாரமில்லாமல், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் சகோதர இயக்கங்களும் (முக்கியமாக, ஸேவாபாரதி) தொடர்ந்து செய்துவரும் களப்பணிகளை நான் எப்போதுமே வியப்புடன் பார்த்து வந்திருக்கிறேன். படுமோசமான தாக்குதல்கள் நடக்கும் சமயமும் (=வாய்ப்பேச்சு/உடல் ரீதியான வன்முறை) இந்தக் களப்பணியாளர்கள் பொறுமையுடன் இருப்பதையும், உரையாடல்களுக்குத் தயாராக இருப்பதையும், நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.
இருந்தாலும், பல படிப்பாளி-சிந்தனையாள இளைஞர்கள் பாஜக-வில் உருவாகி வரும் அதே நேரத்தில், தேவையற்ற வெட்டிச் சவடால் பேச்சுகளை, வெறுப்பேற்றல்களை – அவர்களில் சிலர் ஒதுக்கலாம் எனத் தோன்றுகிறது – இந்திய மக்களின் அடிப்படை உரிமையான பேத்துரிமையைப் புறக்கணிக்கலாம் எனவும்தான்!
என் நம்பிக்கையில் – பாரதப் பேரொழுக்கின் அடிப்படையே, சகிப்புத்தன்மையுடன் பன்முக தரிசனங்களை-செயல்பாடுகளைப் போற்றி வளர்த்துக்கொள்ளும் பண்புதான்; இவற்றை உணர்ந்து, உள்வாங்கிக்கொண்டுதான், பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கிடையே, பாஜக தொடர்ந்து வளர்ந்துவந்திருக்கிறது, வளரும். மேலதிகமாக அது, ‘சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது’ போன்ற உளறல்களையும் சகித்துக்கொண்டால், தன்னுடைய அமைப்புகளில் உள்ள சில சமனமற்றவற்றவர்களைச் சகித்துக்கொள்ளாமலிருந்தால், அதுவும் நன்றாகவே இருக்கும்…
எது எப்படியோ – ‘டைவர்ஸிடி’ – பன்முக அம்சங்களைப் பேணுதல் – எனும் பெயரில், வெறியர்களை – ‘இடதுசாரி’களும் சரி, ‘வலதுசாரி’களும் சரி – அவர்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியமேயில்லை.
13. தமிழ் மாநில காங்கிரஸ் – இது ஒரு நம்பிக்கை நட்சத்திரம். அதன் இளம் தலைவர் ஜிகே வாசன் அவர்களின் ஆர்பாட்டமற்ற ஆனால் கறார் தலைமையில் கீழ் அது நன்றாகவே வளர சாத்தியக்கூறுகள் உள்ளன. அவருடைய தகப்பனார் (எனக்கு ஜிகேமூப்பனார் அவர்கள் மேல் அவ்வளவு மரியாதை இல்லை; இதற்குப் பல காரணங்கள்…) போய்ச் சேர்ந்தபிறகு, கற்றுக்குட்டித்தனமாகச் சிலபல விஷயங்கள் நடந்தாலும், வாசன் அவர்கள் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார் – ஆனால், தன்னை மட்டுமே அற்பத்தனமாக முக்கியப்படுத்திக்கொள்ளாத இயல்பான தலைமை இவருடையது. அவருடன் இணைந்து பணியாற்ற சிலபல மூத்த தலைவர்களும் அனுபவசாலிகளும் இருக்கிறார்கள்.
அவர் முந்தைய மத்திய ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தபோது, அந்த திராவிட டிஆர் பாலுவின் படு மோசமான கொள்ளைகள் பினாமிகள் மூலமாகத் தொடர்ந்து, துறைமுகம் துறைமுகமாக நடந்துகொண்டிருக்கும்போது அதை முடிந்தவரை நைச்சியமாக அணுகிய பக்குவம் ஒன்றே, அவருடைய பொறுமைத் தன்மைக்கும், விட்டுப் பிடிக்கும் திறனுக்கும் சான்று. ஆனால், இந்த நைச்சியத்தினால் டிஆர்பாலு நடத்திய கொள்ளையோதிகொள்ளைகளை ஒன்றும் பெரிதாகக் கட்டுப்படுத்தமுடியவில்லை என்பது வேறு விஷயம். (பிரச்சினை என்னவென்றால், இவர் மறுபடியும் திராவிட கும்பல்களிடம் கூட்டணிக்காகச் சரணடையாமல் இருக்கவேண்டும், பார்க்கலாம்!)
தமாகாவில் – அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் இருக்கிறார்கள். மேலும், அது தேசியத்தை விரும்பும், முதுகெலும்பும் இருக்கும் கட்சி. ஆகவே, இந்தக் கட்சி தமிழகத்தில் வளரவேண்டும், தமிழகத்தில் ஒரு செழுமையான மாற்றத்துக்காகப் பாடுபடவேண்டும் என்பது என் அவா.
அது தொடர்ந்து வளரும் என்பது என் நம்பிக்கை.
14. 49-ஓ: இது வெறுப்பாளர்களின், எதற்கெடுத்தாலும்எதிர்மறை வாதிகளின், ஜனநாயகப் பொறுப்பற்றவர்களின் புகலிடம். ஏனெனில் – நான் அவநம்பிக்கைப் பிலாக்கணவாதியல்லன். அதனாலும், என் சொந்த அனுபவங்களாலும் – எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளுக்கு, மானுட மேன்மை தொடர்பான விழைவுகளுக்கு நம் நாட்டில் பஞ்சமேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஆகவே, இந்த இந்த 49-ஓ எழவையும் அதன் ஜிங்குசிக்கா அரைவேக்காட்டாளர்களையும், நான் நேரடியாக-முழுமையாக நிராகரிக்கிறேன்.
ஆக, நீங்கள் இதுவரை படித்துவிட்டீர்களா என்ன? அல்லது ஏதாவது அழுகுணியாட்டம் ஆடி இங்கு வந்துவிட்டீர்களா??
சரி. :-)
எனக்கு ஒருவரை வலதுசாரி இடதுசாரி என்றெல்லாம் வர்ணித்து உளறிக்கொட்டி, ஒரு மனிதரைப் பிடிக்கும் பிடிக்காது என்ற கருத்தாக்கங்களுக்கு வருவது, ஒத்தே வராது. ஏனெனில் நான் ‘எல்லா விஷயங்களும் சாதக/பாதக அம்சங்கள் நிறைந்த கலவை’ எனும் பார்வையை உடையவன்; ஆகவே முடிந்தவரை ‘ஹோம்வர்க்’ செய்து என் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்பவன்.
ஆனால், திராவிடத்தை மட்டும் ஏன் பாதகமாக மட்டுமே பார்க்கிறாய் – அதில் மட்டும் சாதகமான விஷயம் ஒன்றுமேயில்லையா என மிகச் சரியாகவே நீங்கள் கேட்கலாம்; உண்மைதான் – திராவிடக் கட்சிகளில் (இதுவரை) இருக்கும் ஒரு குணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருவதுதான், ஒப்புக்கொள்கிறேன்.
அது என்னவென்றால்:
என் வீட்டிற்குள் நேரடியாகப் பட்டப்பகலில் புகுந்து – கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, திருமாவளவனோ, விஜயகாந்தோ, ஸ்டாலினோ, டிஆர்பாலுவோ, தயாநிதிமாறனோ, கலாநிதிமாறனோ, கனிமொழியோ, அன்புமணியோ அல்லது மற்றெந்த திராவிடகுலத் திருட்டுத் திலகமோ – இதுவரை கொள்ளையடிக்கவில்லை, என் மனிபர்ஸ் இன்னமும் என் ஜேபியில் தான் இருக்கிறது…
…தமுமுக தவ்ஹீத்ஜமாத் இஸ்லாமியவெறியாட்கள் என் காஃபிர் தலையை இன்னமும் கொய்யவில்லை. சில வினாடிகளுக்கு முன்தான் இவற்றை ‘செக்’ செய்தேன்.
இதற்கு, நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கண்கள் பனித்துவிட்டன. இதயம் இனித்துவிட்டது. நன்றி. வணக்கம்.
திராவிடக் கட்சிகளுக்கு ஜே!
-0-0-0-0-0-0-
முடிவாக, நான் சொல்ல விழைவது, மனதார விரும்புவது இரண்டு விஷயங்களை:
அ. திராவிட, திராவிடச் சாயல் கொண்ட, அழிவுவாதத்தை நோக்கித் தமிழகத்தை பயணம் செய்யவைக்க முனையும் அயோக்கியக் கொள்ளைக்கார கும்பல்கள் – தமிழகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் துரத்தப் படவேண்டும். தயவுதாட்சணியம் இல்லாமல் நசுக்கப் படவேண்டும். 2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் இதற்கான ஒரு ஆரம்பமாக இருக்கவேண்டும்.
ஆ. ஆக – நான், தமிழகத்துத் தேர்தல்களில் ஓட்டுப் போடுவேனென்றால் – முன்னணிகள், கூட்டணிகள் போன்ற தேர்தல்சார் சந்தர்ப்பவாதத் திரள்களுக்கு அப்பாற்பட்டு – அது பாஜக / கம்யூனிஸ்ட் / தமாக வகை கட்சிகளுக்கு மட்டுமே இருக்கும்; அதிலும் என் தொகுதியில் போட்டியிடுபவர், என்னுடைய பொன்னான வாக்குக்குத் தகுதியானவரா, மற்றவர்களை விடக் கொஞ்சமேனும் உயர்ந்தவரா எனப் பார்த்துமட்டுமே என் வாக்கை அவருக்கு அளிப்பேன்; ஆம், வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம். சிறுதுளி பெருவெள்ளம்.
இந்த மூன்று கட்சித் திரள்களைத் தவிர மற்றவை, இந்த 2016 தேர்தல்களில் துப்புறவாகக் கடாசப்பட்டால் – நமக்கும் நம் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் – ஏன், நம் உலகத்துக்குமேகூட எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை.
எங்கேடா என் கஞ்சா?
நன்றி.
March 16, 2016 at 03:56
அரசியல்வாதிகளிடம் அப்பழுக்கற்ற நேர்மை, நாணயம் போன்றவற்றை எதிர்பார்ப்பதில்லை. Usefulness முக்கியம். குறைந்தபட்ச அக்கறை முக்கியம். நமக்கு உவப்பில்லாமல் இருந்தாலும், திராவிடக் கட்சிகள் have kept TN’s conflicting casteist, fundamentalist forces to an acceptable compromise. திராவிடக் கட்சிகளின் inevitable decline points to a future where TN is rife with casteist, fundamentalist outfits representing exclusive communal interests that have scant regard for 21st century democratic and social values. த்தா தேவன்டா/மறவன்டா/கவுண்டன்டா என்று விடலைகள் சலம்புவதைப் பார்க்கையில் பதற்றமாக இருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கான மாற்று வரும் போது, அது காங்கிரஸாக இருந்தால் பரவாயில்லை.
March 16, 2016 at 04:12
(I was writing a reply. I’m not sure I posted it right. Let me try again.)
அரசியல்வாதிகளிடம் நேர்மை, நாணயம் போன்றவற்றை எதிர்பார்ப்பதில்லை. Usefulness முக்கியம். குறைந்தபட்ச அக்கறை முக்கியம். நமக்கு உவப்பில்லாமல் இருந்தாலும், திராவிடக் கட்சிகள் have so far kept TN’s conflicting casteist, fundamentalist forces to an acceptable compromise. திராவிடக் கட்சிகளின் inevitable decline points to a future where TN is rife with casteist, fundamentalist outfits representing exclusive communal interests that have scant regard for 21st century democratic and social values. த்தா தேவன்டா/மறவன்டா/கவுண்டன்டா என்று சலம்பும் விடலைகள் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திராவிடக் கட்சிகளுக்கான மாற்று காங்கிரஸாக இருந்தால் பரவாயில்லை.
March 16, 2016 at 10:36
அருமையான அலசல். திராவிட கொள்கையை வைத்து கொண்டு ஏமாற்றும் கட்சிகளை பற்றி ஒரு தெளிவான பார்வை தமிழகத்தில் இல்லை. உங்களது பதிவு பலரது கண்களை திறககட்டும்.
March 16, 2016 at 12:32
தமிழகத்து பாரதீய ஜனதா கட்சியை பற்றி உயர்வாகவே எழுதி இருக்கிறீர்கள்!.இருந்தபோதிலும் H .ராஜா போன்ற சிலரின் பேச்சுக்கள்,செய்கைகள் அக் கட்சியின் எதிர்கால நலனுக்கும்,நாட்டுக்கும் அவ்வளவு உகந்ததாக இல்லை.
March 16, 2016 at 13:18
என்ன செய்வது! சில சமயம் மனிதர்கள் அவர்களுக்கு இருக்கவேண்டிய நிதானம் தவறிப்போய், பேத்துரிமை பக்கம் சரிந்து விடுகிறார்கள். (நான் குண்டுதைரியத்துக்காகவும், மாளா உழைப்புக்காகவும் மிகவும் மதிக்கும் சுப்பிரமணியன்ஸ்வாமி கூடச் சில சமயங்களில் பேத்திவிடுகிறார், என்ன செய்ய!)
நிற்க, ராஜா அவர்கள் என்ன பேசினார்/பேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது.
ஆனாலும்… தமிழக பாஜகவினரில் அடிப்படை அயோக்கியத்தனம் நிரம்பியவர்கள் இல்லை எனத்தான் நினைக்கிறேன்.
April 6, 2016 at 01:42
மிக நல்ல அலசல். சசிகலா கும்பலின் கூட்டணியோடு ஜெ போன்றதொரு political psycho தலைமையிலான அ.தி.மு.க தொடர்ச்சியாக இரண்டாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட நேர்வது தமிழகத்தின் மாபெரும் சோகமே.
மாஃபியா கும்பலான தி.மு.க-வையும் விஜய்காந்த் போன்ற கோமாளிகளையும் துளியும் இரக்கமேயில்லாமல் குப்பைக்கூடையில் எறிந்து தலைஎடுக்கவே இயலாமல் செய்யவேண்டியது தமிழக ஜனநாயகத்திற்கு மிகவும் நல்லது. (அதனால் அவர்களுக்கு கவலையில்லை. எந்த கொடி பறக்கிறதோ அங்கு சென்று ஒட்டிக்கொண்டு தமது நோயை தீவிரமாக பரப்புவதில் வல்ல நோய்க்கிருமிகள் அவர்கள்)
April 7, 2016 at 08:57
// இது வெறுப்பாளர்களின், எதற்கெடுத்தாலும்எதிர்மறை வாதிகளின், ஜனநாயகப் பொறுப்பற்றவர்களின் புகலிடம். ஏனெனில் – நான் அவநம்பிக்கைப் பிலாக்கணவாதியல்லன். அதனாலும், என் சொந்த அனுபவங்களாலும் – எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகளுக்கு, மானுட மேன்மை தொடர்பான விழைவுகளுக்கு நம் நாட்டில் பஞ்சமேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.
ஆகவே, இந்த இந்த 49-ஓ எழவையும் அதன் ஜிங்குசிக்கா அரைவேக்காட்டாளர்களையும், நான் நேரடியாக-முழுமையாக நிராகரிக்கிறேன். //
மாறுபட விழைகிறேன். குறைந்தபட்சம் குற்ற பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக நிறுத்துமளவுக்காவது அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்க மக்களாகிய நமக்கு இதுவரை எந்த வாய்ப்பும் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் ஏன் நாம் 49-ஓ-வை அதற்கு பயன்படுத்தக்கூடாது ?