#பெரியார்புதைந்தமண்: சில குறிப்புகள் (2/n) + திபெ கமலநாதன், வீரமணி…
December 24, 2015
பெரியார் நாமம் வாழ்க! பக்காத் திராவிடர்கள், சாதா தமிழர்களுக்குத் தொடர்ந்து போடும் நாமம், மேலதிகமாக வாழ்க! :-(
இனி இரண்டாம் பகுதி…
-0-0-0-0-0-0-0-
என்னுடைய பலப்பல பழையகால, அற்புதமான நண்பர்களில் இந்தப் பஞ்சாபியும் ஒருவன், நான் (இப்போது சத்தீஸ்கட் மாநிலத்தில் இருக்கும்) பிலாய் உருக்காலையில் பணிபுரிந்தபோது அறிமுகமானவன். ஒரளவுக்கு வசதியான, படித்த குடும்பத்தைச் சேர்ந்தவன். அழகன். அப்பா இந்திய ராணுவத்தில் மேஜர்; அம்மா, ராணுவத்தில் ஒரு செவிலி. இவனும் இவன் தங்கையும் (அவள் அப்போது துர்க்காபூர் ஆர்ஈஸியில் பொறியியல் படித்துக்கொண்டிருந்தாள்) சேர்ந்து இரு குழந்தைகள்.
இந்த நண்பனும் நானும் ஒரேசமயத்தில் ஸிவில் ஸர்வீஸஸ் (=’ஐஏஏஸ்’ வகையறா) தேர்வுகளை எழுதுகிற மும்முரத்தில் (~~1980களின் இறுதியில்) இருந்தோம். அதற்காகப் பலவகைகளில் சேர்ந்து படித்தோம், விவாதித்தோம். பாரதத்தைப் பற்றிப் பல புதிய/பழைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். பரவலாகப் படித்தோம். ஒருவருக்கொருவர் படிப்பித்துக் கொண்டோம். ஒரு புது விஷயத்தை எப்படிக் கற்றுக்கொள்வது என்பதில் ஓரளவுக்குத் தேர்ச்சி பெற்றோம்.
எங்கள் எழுத்துமூல ஆங்கிலத்தை மண்டையில் அடித்து, முடிந்தவரை சரிசெய்துகொண்டோம் (அவன் ஹிந்திவழிக் கல்விக்காரன் – ஆங்கிலமூலப் படிப்பு கிடைக்க வசதியிருந்தும், ஹிந்திஅபிமானியான தகப்பனாரால் இப்படி; நான் கந்தறகோளத் திராவிடத் தமிழ்வழி). பலவிதமான, நிறமான ஜோக்குகள் சொல்லிக்கொண்டு சிரித்தோம். கடைசியில் அந்த பஞ்சாபிக்காரனுக்கு அவன் விரும்பியது கிடைத்தது – அவன் புத்திசாலித்தனமும் குவியமும் அப்படி. நான் ஜெயிக்கவில்லை – என் புத்திசாலித்தனமும் குவியமும் கர்வமும் அப்படி. பின்னர், தொடர்ந்து பல வருடங்கள் தொடர்பில் இருந்தோம்.
அவன் ஒரு மாணிக்கம். பணியில் கடுமையும் கறாரும் அதே சமயம் இத்தேசத்து ஆம்-ஜனதாக்கள், பொதுமனிதர்களின் மீது கனிவும் கரிசனமும் உடையவன். ஒரு சமயம், 2003 வாக்கில், சில பொது நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தபோது அவனைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தேன்; அவன் உடனே என்னைத் தடுத்து, அர்ரே யார், உங்களுக்கெல்லாம் குழந்தைகுட்டிகள் இருக்கின்றன, தகப்பனார்தாயார் எனப் பார்த்துக்கொள்ளவேண்டும். எனக்கென்ன பிரச்சினை, ஆக நான் செய்வதெல்லாம் பெரிய விஷயமேயில்லை, என்னை இடமாற்றம் செய்தால், உடனடியாக மூட்டை கட்டிக்கொண்டு நான் கிளம்பிவிடமுடியும். நான் செய்யும் விஷயங்களெல்லாம் நீங்கள் செய்வதற்கு முன்னால் தூசு.
(இது ஒரு பொய்; இதேபோல நானும் அவனும் ஒரு சமயம் டிஎன் சேஷன் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் அப்படிச் சொன்னதை நினைவு கூர்கிறேன்; இவர்களெல்லாம் பெரிய மனிதர்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை; குழந்தை குட்டியற்றவர்களெல்லாம் சத்தியசந்தர்களாக இருக்கிறார்களா என்ன?)
அவன் பிஹார் மாநில கேடரில் இருந்தான். சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது கயா மாவட்டத்தில், தன் மனைவியுடன் ஒரு கிராமப் பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கேள்வி. இப்போது, பல ஆண்டுகளாகத் தொடர்பில் இல்லை.
இவனைப் போன்றவர்கள் அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் நேரடியாகப் பங்களிப்பைச் செய்யாமல், தனிமனிதர்களாகப் பணிபுரிவது தேசத்துக்கு ஒரு சோகம் என்றாலும் – அவன் தொடர்ந்து அளித்துக்கொண்டிருக்கும் கொடை என்பது பெரிது; மேலும், அவன் சந்தோஷமாகவே இருக்கிறான் என நினைக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-
இப்போது ஒரு சோகமான விஷயம்: என்னிடம் இருந்து, பெரியார் திடலுக்குப் போவதற்கு முந்தின நாள் கடன் வாங்கிய ஒரு புத்தகத்தை, இவன் இன்றுவரை திருப்பிக் கொடுக்கவில்லை! (= அது திபெ கமலநாதன் அவர்களின் – சிறிய ஆனால் காத்திரமான, ஆதாரபூர்வமான வாதங்களை முன்வைத்த புத்தகம் : Mr. K. Veeramani, M.A., B.L., is refuted and the historical facts about the scheduled caste’s struggle for emancipation in South India | TP Kamalanathan | Ambedkar’s Self Respect Movement, Tirupattur | 1985 | 114 pages | GoogleBooks )
மாறாக, தலித் மக்கள் திரள் ஒன்றின் தலைவரான தொல் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ திருமாவளவன் அவர்களும் இந்த திராவிடப் பம்மாத்து ஜோதியில் ஐக்கியமாகியிருக்கிறார்! விடுதலை வீரமணிகளுடன் கைகோர்த்துக்கொண்டு புளகாங்கிதமடைகிறார். ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் ஆஸ்தான தொழில்முறை அறிவுஜீவியான ரவிக்குமார் அவர்கள், இது பற்றி என்ன நினைக்கிறார் என்றும் தெரியவில்லை.
நினைத்தால் இவர்களால் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் நிதி ஆதாரங்களை வைத்து (இது புறம்தள்ள முடியாத அளவுதான், ஒன்றுக்கும் குறைவில்லை; ஒரு மாஜி விசிகே அமைப்பாளருடன் பேசிவிட்டுத்தான் இப்படி எழுதுகிறேன்) இந்த கமலநாதன் அவர்களின் புத்தகங்களை வெளியிடுதல், அவரும் அவருடைய தகப்பனாரும் தேடியலைந்து சேகரம் செய்த அரிய ஆவணங்களை ஒரு காப்பகம் வைத்து பாதுகாத்தல் போன்ற வேலைகளைச் செய்யமுடியாதா, என்ன?
காலத்தின் கந்தறகோளம்தான் இது.
இந்த புத்தகத்திற்கு, என் செல்ல ஆய்வாளர்களில் ஒருவரான எம்எஸ்எஸ் பாண்டியன் அவர்கள், ஒரு அணிந்துரை அளித்திருக்கிறார்கள். நிலைமை இப்படி இருந்தாலும், இப்புத்தகம், இன்றைய தமிழகத்தின் கமுக்கமான ஜாதிவெறி நிலையைப் புரிந்துகொள்ள உதவும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ( எம்எஸ்எஸ் அவர்களுக்கே க்றீச்சிடும்படி, ‘இரண்டாம் பிடில்’ வாசிப்பது எப்படி? 17/11/2014; பேராசிரியர் மத்தியாஸ் சாமியல் சவுந்தர ‘எம்எஸ்எஸ்’ பாண்டியன் அவர்களின் அகால மரணத்தை முன்வைத்துச் சில சிந்தனைகள்… 12/11/2014)
-0-0-0-0-0-0-0-0-0-0-0-
என் வழக்கமேபோல எங்கோ போய்விட்டேன்; என்னுடைய செல்ல பஞ்சாபி பக்கம் மீண்டும் செல்வோம்.
… இவனுக்கும் எனக்கும் பல பொதுவான (கிறுக்குத்தனமான என்றேகூடச் சொல்லிவிடலாம்) ஆர்வங்கள் இருந்தன: இந்திய தத்துவ தரிசனங்கள், ஸ்ரீ தரம்பால் பார்வைகள், மேற்கத்திய சாஹித்ய சங்கீதம், அம்பேட்கர்-காந்தி உரையாடல்கள், டிஎஸ் நாகராஜ், திபெத் வரலாறு, தோட்டவேலை, இஸ்லாமின் வரலாறு, நாலந்தாவும் தக்ஷசீலமும் அழிக்கப் பட்ட வரலாறு, பௌத்தம், அரிசியின்/புல்வகைகளின் வரலாறு, மாஹ்ர்ஸெல் ப்ஹ்ரூஸ்ட், போற்ஹெஸ், கணிதம், சாகபட்சிணி சமையல், கால்பந்து, ஜிம்னேஸ்டிக்ஸ் (நான் என் இளமையில் ரோமன் ரிங்ஸ் கலையில் ஒரளவு தேர்ச்சி பெற்றிருந்தேன்; இரும்புச் சிலுவைப் பயிற்சியை என்னால் ஒருகாலத்தில் அனாயாசமாகச் செய்யமுடிந்தது – ஒரு விதமான போட்டிக்கோ கீட்டிக்கோ நான் செல்லாவிட்டாலும். இப்போதும் கூட, ஒன்றிரண்டு வாரங்கள் பயிற்சி செய்தால் தேறிவிடுவேன் என்றுதான் தோன்றுகிறது) எனப் பலப்பல சுவையான விஷயங்கள். கொண்டாட்டத்துக்குக் கேட்பானேன்! மெய்யாலுமே அற்புதமான நாட்கள் அவை.
…இவனுடன் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது (1987-89 என நினைவு) அவனுக்கு ஜஸ்டிஸ் கட்சி, திராவிட இயக்கம், பெரியார் பற்றியெல்லாம் (பரீட்சை நோக்கில்) சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போதே அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ஏனெனில், இவ்வளவு சுயமுரண்கள் உள்ள கருத்தாக்கங்கள், வெறும் வெறுப்பின் மீது கட்டமைக்கப்பட்ட, அரசியலதிகாரச் சலுகைகள் தொடர்பான அரசியல் கட்டுமானங்கள், வெகு சீக்கிரம் (நாட்ஸிகளின் ஜெர்மனிபோல) வெளுத்துவிடும் என நினைத்திருந்தான்.
நான் அவனுக்கு, நாட்ஸி ஜெர்மனியில் இல்லாத, ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை அமோகமாக இருந்த, தொடர்ந்து இருக்கும் ஊடக(சினிமா)+அரசியல் ஊடுபாவுகள், க்றிஸ்தவ மதமாற்றச் சட்டகங்களின் பிரித்தாளும் வெறுப்பூன்றும் முறைமைகள், சுயமரியாதைத் திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கயமை பற்றிச் சொன்னேன். கொஞ்சம் மார்க்ஸீய ரீதியாகவும் விவாதங்கள் நடந்தன என்பதும் நினைவிருக்கிறது.
ஜாதிகளை ஒழிப்பதாகச் சொல்லிக்கொண்டு – பிரச்சினைகளுக்கு எளிமையான காரணங்களைக் கற்பித்து – ஜாதி வெறியினை, சிலஜாதி சர்வாதிகாரத்தை வளர்ப்பதில் முன் நின்ற திராவிட இயக்கங்களைப் பற்றிச் சொன்னேன். அவற்றின் தீவட்டிக் கொள்ளைக்காரத்தனத்தையும், சர்க்காரியா கமிஷன் பற்றியும் பேசினேன்.
நாங்கள் இருவரும் சேர்ந்து, திருவல்லிக்கேணியில் நடந்த ஒரு திமுக பொதுக்கூட்ட எழவு ஒன்றுக்கு – உண்மையில், அது ஒன்றுக்கு தான் – சென்றிருக்கிறோம். அந்த மேடைப்பேச்சு, வழமையான திராவிடப் பொறுக்கி நடையிலிருந்தும் ஒருபடி மேலேபோய், ஆபாசமும் இரட்டை அர்த்தமும் தொனிக்கும் அயோக்கியப் பேச்சாக முதற்பேச்சாளர்களால் முன்னெடுக்கப்பட்டிலிருந்து திரிந்து, படுமோசமாக கருணாநிதி அவர்களால் மகுடம் சூட்டப்பட்டது. ஒரே விசில் மயம், சிரிப்பு; எனக்கோ, வெறுப்பு. தூ! :-(
அவனுக்கு கருணாநிதி அவர்களின் மேடைப்பேச்சை, அது நடக்கநடக்க மிகுந்த சிரமப்பட்டு மொழிபெயர்த்துச் சொன்னேன். ஏனெனில் அடுக்குமொழி பொறுக்கிநடையினை ‘திராவிடப் பாரம்பரிய(!)’ பின்புலமில்லாமல் புரிந்துகொள்வது, அதுவும் மொழி பெயர்ப்பது மிகவும் கடினம். எப்படியும் அதனைக் கேட்கக் கேட்க, அவனுக்கு ஆச்சரியம் – அவன் சொன்னான், இந்தியாவில் வேறெந்த இடத்திலும் இப்படிப் பேச்சுப்பேசியே அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது நடக்கவேயில்லை. மதறாஸிகளின் சகிப்புத் தன்மையே அலாதிதான்.
அப்போதிலிருந்தே – பரந்த படிப்பறிவு பெற்றவனும், நேர்மையாளனும் – நம் வரலாறுகளைத் ஐயம் திரிபறக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவனும், மகத்தான நகைச்சுவை உணர்வு நிரம்பியவனுமான அவனுக்கு – சமயம் வாய்க்கும்போது பெரியார் சமாதியைப் பார்க்கவேண்டும் (அவனிடம் அங்கு ஒரு விசித்திர ம்யூஸியம் மாதிரி ஒரு பெரியார் நினைவகம், கார்ட்போர்ட் கட்-அவுட்டுகளுடன் இருக்கிறது என்று வேறு சொல்லியிருந்தேன்) என ஒரு கொடூரமான ஆவல்.
-0-0-0-0-0-0-