சொந்தமாகக் காயலான் கடை நடத்துவது எப்படி
September 19, 2015
(அல்லது) வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து தரைதுடைப்பான் (‘மாப்’) செய்வது எப்படி…
தெருவெல்லாம் பொறுக்கிய வாஷர்கள், நட்டுகள், போல்ட்கள்; இரும்பு/அலுமினியம்/தாமிரக் கம்பிகள், விதம்விதமான வயர்கள், மோட்டர்கள், டைனமோக்கள், பற்சக்கரங்கள், ஆட்டோமொபைல் பாகங்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஈவேஸ்ட் என்று சொல்லப்படும் எலக்ட்ரானிக் வஸ்துக்கள், விதம்விதமான விதைகள், அட்டைகள், ப்லாஸ்டிக் டப்பிகள் (கூடவே டப்பாக்களும், தம்பதி சமேதராக), மரப்பலகைகள், பலவிதமான ரசாயனங்கள், பிற கண்டாமுண்டா சாமான்கள் + பலவிதமான கருவிகள்…
ஒரு விஷயம் இப்போது நினைவுக்கு வருகிறது: எனக்குப் பொதுவாக, இந்தப் பிறந்தநாள் இறந்தநாள் என்று கண்டமேனிக்கும் கொண்டாடுவதெல்லாம் ஒத்துவராது; ஆனால் என் மகன், அவனுடைய மூன்று வயதில் எனக்கு மிகப் பிரியத்துடன் ‘பிறந்த நாள்’ பரிசாக அளித்த ஒரு பழைய தகர டப்பியை மறுபேச்சுப் பேசாமல் வாங்கிக்கொண்டேன். ஏனெனில், நன்றாகத் துடைக்கப்பட்டிருந்த அந்த டப்பி முழுவதும், அவன் தெருவில் பொறுக்கிய ஆணிகள், வாஷர்கள் + சிறிய ஹேக்ஸா ப்லேட் கத்தி. அனைத்தையும் அவன் துப்புரவு செய்து கிரோஸீன் போட்டுத் துடைத்து மினுமினுப்பாக்கியிருந்தான். ஒரு உடைந்த ஹேக்ஸாப்லேடை சாணை பிடித்துக் கூர்மைசெய்து கத்தியாக்கியிருந்தான்.
ஹ்ம்ம்… ஆனால், என்னுடைய காயலான் கடையில் ஒரு பொருள்கூட, சரியாக அடுக்கிவைக்கவோ வகைபிரிக்கவோ படவில்லை என்பதால், குறைந்த பட்சம் மாதத்துக்கு இருமுறையாவது நான் விவாகரத்துக்கு மிக அருகில் தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறேன். :-(
[என் (இதுவரை) மனைவி: பலரும் தங்கள்வீட்டில் அட்டாச்ட் பாத்ரூம் போன்ற விஷயங்களைத்தான் வைத்திருப்பார்கள்; ஆனால், உலகத்திலேயே நம் வீட்டில் மட்டும் தான் அட்டாச்ட் காயலாங்கடை + அட்டாச்ட் லைப்ரரி! முதலில் எல்லாவற்றையும் சரியாக அடுக்கி, தேவையில்லாதவற்றை அப்புறப்படுத்து! உன் தொல்லை தாங்கமுடியவில்லை!]
:-(
…எது எப்படியோ, என்னுடைய காயலான் கடை – எனக்கு மிகவும் பிடித்தமான, அள்ள அள்ளக் குறையாத சொந்த சோதனைக்கூடம்; மட்டற்ற மகிழ்ச்சிதரும் கந்தறகோளம். (நேற்றுகூட, குழப்பம்தரும் பின்னிரவில், எனக்கு யாரோ ஒரு ஆசாமி டெக்ட்ரானிக்ஸ் ஆஸில்லாஸ்கோப் ஒன்றை வெகுமதியாக அளித்தது போல ஒரு கனவு! மிக சௌகரியமாக, என் மனைவி அந்தக் கனவில் வரவில்லை!)
…ஆனால் அம்மணிகளே, அம்மணர்களே! இந்தக் குவியல்களில், என் தமிழ முப்பாட்டன் வைப்பாட்டன் நாப்பூட்டன் பரம்பரை முருகன் கூட அங்கு எங்காவது ஒளிந்துகொண்டிருந்தால், எனக்கு ஆச்சரியமில்லை. ஆ! சொல்ல மறந்துவிட்டேனே – சிலபல பழைய சீமார்களையும் கூட அங்கே வைத்திருக்கிறேன்! மன்னிக்கவும், சீமார் புல்லினால் செய்யப்பட்ட துடைப்பங்களைச் சிலசமயம் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்! நீங்கள் நாம்தமிழர் முயக்கத்துடன் இதனைப் போட்டுக் குழப்பிக் கொண்டால், அது வழக்கம்போலவே என் பொறுப்பல்ல, சரியா?
-0-0-0-0-0-0-0-0-
நான் ஒரு DIY – do it yourselfஆசாமியல்லன் – அதாவது ‘நீ இதனை இப்படிச் செய்’ எனப் பேசுபவனல்லன். ஆகவே, ஒரு DIM – do it myselfகாரன்; ‘இதனை நான் இப்படிச் செய்துகொள்வேன்’ ஆசாமி. ஆக, நீங்கள் என்னை dimwit என மிகச் சரியாகவே கருதினால், எனக்கு ஆட்சேபணையே இல்லை.
தவறு செய்தால் அசிங்கம் என நான் நினைப்பவனல்லன். தொடர்ந்த தவறுகளின் (எடுத்துக்காட்டு: இந்த ஒத்திசைவு எழவு) மூலமாக மட்டுமே எந்த விஷயத்தையும் செய்யமுடியும், மேலெழும்ப முடியும் என எதிர்மறைத்தனத்துடன் மரைகழன்று உழல்பவன்.
…ஆக ஒருகால் அப்படியாகிவிடுமோ, கேலி செய்வார்களோ எனவெல்லாம் பயப்படாமல், எந்த விஷயத்தையும் ஒருகை பார்த்துவிடுபவன். ஆனால், இந்த முட்டாள்தனத்துக்குப் போய் ஏன் அற்பத்தனமாகப் பெருமைப் படவேண்டும் என்றெல்லாம் வக்கணையாகக் கேட்காதீர்கள். யாக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு என்று சும்மாவா சொன்னார்கள்? எம் தலைவர் கலைஞர் சொல்லக்கூடுவது போல — இருப்பதோ ஒரு யாக்கை, அது இருக்கப்*போவதோ பலதடவை…
சரி. இனி, அவ்வப்போது இம்மாதிரி டிம்விட் சமாச்சாரங்களை எழுதலாமென்றொரு எண்ணம். வழக்கம்போல யாரும் இவற்றைப் படிக்கவேண்டாம்.
வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து தரைதுடைப்பான் (‘மாப்’) செய்வது எப்படி
அல்லது, ஹிந்தியில் சொல்வதானால், ‘மாஃப் கிஜியே!’ ;-)
அண்மையில், ஒரு ஸுபர் மார்க்கெட்டுக்குச் சென்றபோது, அங்கிருக்கும் பளப்பளா மாப்களைத் தடவி மட்டும் பார்த்தேன். சோப்ளாங்கி ப்லாஸ்டிக்கில் அழகுணர்ச்சியில்லாமல், செய்நேர்த்தியில்லாமல் செய்யப்பட்டிருந்த அவைகளின் விலை சுமார் ரூ200லிருந்து ரூ540 வரை! ஆச்சரியமாக இருந்தது இந்த விலைகளைப் பார்த்து… என்னைப் பொறுத்தவரை விளக்குமாறுகளுக்கும் பட்டுக் குஞ்சலங்கள் தேவைதான், ஆனால் அதற்காக இப்படியா பொருட்களைத் தரமற்றுத் தயாரிப்பது?
தேவையானவை:
- பழைய, நைந்துபோன பருத்தி டீஷர்ட்
- கத்தரிக்கோல்
- ஒரு 5 அடி நீளக் கொம்பு (அல்லது) குழாய் (அல்லது) பராக்கிரமம் மிக்க #பெரியார்இறந்தமண் புகழ் திராவிடக் குஞ்சாமணி
- ஒரு கம்பிவெட்டுவான் + கட்டிங் ப்லையர்
- 2 அடி நீள இரும்புக் கம்பி அல்லது நல்ல நாடா. (அமெரிக்கா நல்லா நாடா என்ன? அதனால்தான் நான் அதனை உபயோகிக்கவில்லை!)
- அதிக பட்சம் 10 நிமிட நேரம்
டீஷர்ட்டினை இப்படி வெட்டிக் கொள்ளவும். ஒரு டீஷர்ட்டை வெட்டினால் இரண்டு துடைப்பான்களைச் செய்யலாம். நான் இந்த முயற்சியில், டீஷர்ட்டின் மேற்பகுதியை உபயோகித்திருக்கிறேன்.
குழாயின் ஒரு முனையைச் சுற்றி அந்த வெட்டப்பட்டபின் சுருட்டப்பட்ட டீஷர்ட்டின் மேற்பாகத்தை கான்டம் போடுவதுபோலப் போடவும் அல்லது லுங்கி கட்டுவதுபோலச் சுற்றவும். இது இறுக்கமாக இருக்கவேண்டும். இல்லாவிடில், குழந்தை பிறந்துவிடலாம், ஜாக்கிரதை. (நான் பக்கத்து வீட்டுக்காரர்கள் தூக்கிப்போட்ட இரும்புக் குழாயை உபயோகம் செய்தேன்; இதற்கு மூங்கில் குச்சியும் உசிதமானது – ப்லாஸ்டிக் போலல்லாமல் அனைத்தும் மக்கக்கூடிய விஷயமாகிவிடும்)
துணி சுற்றப்பட்ட குழாய்முனையைச் சுற்றி இரும்புக்கம்பியை வைத்து இறுக்கமாகப் பிணைக்கவேண்டும். அவ்வளவுதான்.
பின்னர், ஆனந்தமாக நீண்ட நெடுங்காலம் வீட்டுத்தரையைத் துடைத்துக்கொண்டே இருக்கலாம்.
இது அனுதினத் தொடர் உபயோகத்தில் இருந்தால் சுமார் 2 மாதங்களுக்கு வரலாம். நைந்து போலவுடன் துணி/பருத்தி பாகத்தைப் பிரித்து செடிகளுக்கு மூடாக்காகப் போட்டு மக்க வைக்கலாம். மற்ற விஷயங்களை மறுசுழற்சி செய்யலாம்.
-0-0-0-0-0-0-0-
சமர்ப்பணம்: சுத்தம்/சுகாதாரம் என அல்லாடும் ‘ஜேனிட்டர்’ துப்புரவுப் பணிமக்கள் மீதான, அரவிந்தன் கண்ணையன் அவர்களின் அலாதியான உயர்ந்த மதிப்புக்கு,
நன்றி.
* சிறுநீர் கழிப்பதை, அந்தக்கால மெட்றாஸ் பாஷையில் ‘இருப்பது’ எனப் பூடகமாகச் சொல்வார்கள். எடுத்துக்காட்டு: ஒரு கருணாநிதி அபிமானி, தான் எம்ஜிஆர் திரைப்படப் போஸ்டர் மீது யாரும் பார்க்காதபோது இருந்துவிட்டு வந்தேன் எனச் சொல்லக்கூடும்.
September 20, 2015 at 00:37
குப்பை அள்ளுபவர் 1 வாரம் விடுமுறை எடுத்தால் எப்படி இருக்கும் என நன்கு உணர்ந்தவர் அ.க. அவர்கள். மெக்சிகோ மக்கள் இல்லை எனில் என்ன ஆகும் என நன்கு உணர்ந்தவர் திரு ஒபாமா அவர்கள். அங்கு உள்ள அ.க. வும் அது தெரிந்தவர் தான். பின் எப்படி, இப்படி?