9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)

September 22, 2015

சுமார் இரண்டரை  வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)

அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:

இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)

  1. முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
  2. முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
  3. எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?

பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக,  ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)

-0-0-0-0-0-0-

இதில் முதலாவதை, சுமார் 1.5 வருடங்கள் முன் எழுதினேன்  ( = முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014 )

இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

சரி. கீழ்கண்ட சம்பவங்களுடன் தொடர்புள்ள மனிதர்கள் பெயர் எதையும் நான் கொடுக்கப் போவதில்லை. அது அவசியமும் இல்லை.  மற்றபடி, இதில் பதிவாகியுள்ள சில நிகழ்ச்சிகளில் பங்கு வகித்த சிலரிடமிருந்து (எல்லோருமிடமிருந்தும் அல்ல!) ஒப்புதல் வாங்கிக்கொண்டுதான் அவற்றைப் பற்றிக் கோடி காட்டியிருக்கிறேன். அவர்களில் ஒருவர் மட்டுமே ஒத்திசைவு பதிவுகளைக் கொஞ்சம் அடிவயிற்றுக் கலக்கத்துடன், கிலியுடன், சிரமப்பட்டுக்கொண்டு தொடர்ந்து  படிப்பவர், தமிழர். ஒருவன் கொல்டி. இன்னொருவன் காடி. ஒருவன் ராஜஸ்தானில் வளர்ந்த, தமிழ் தெரியாத பாலக்காட்டான். இன்னொருவன் ஹைதராபாதி, ஆறாமவர் கொங்கணிகாரர் – ஆக இந்த ஐந்துபேரும் தைரியமாக இருக்கிறார்கள். இவர்களில் இருவர் முஸ்லீம்கள், ஒருவர் க்றிஸ்தவர்.  அனைவரும் என்னுடன் வேலை செய்தவர்கள்.

ஏன் இப்படி விலாவாரியாக, தன்னிலை வாக்குமூலம் போல எழுதுகிறேனென்றால், இவை என் நேரடி அனுபவங்கள்; ஆகவே – எல்லா வாழ்க்கைசார் சுயானுபவங்களும் போலவே, சில விகசிப்புகள், மகிழ்ந்த தருணங்கள் + சில முகம் சுளித்தல்கள், அலுப்புகள். வயிற்றெரிச்சல்கள் – இவையெல்லாம் கலந்தடித்துக் கதம்பமாக இருக்கின்றன.  நடந்து பலவருடங்கள் ஆகி இருந்தாலும் – முடிந்தவரை என் அனுபவங்களைச்  ‘செறிவு’ படுத்தாமல், வீங்கவைக்காமல், பொய் சொல்லாமல் தர முயற்சித்திருக்கிறேன்.

சரி, பீடிகை போதும். ஸிகரெட்காலுக்குப் போகலாம். ;-)

-0-0-0-0-0-0-0-

2000-2001 வாக்கில் பெங்களூரில், சொந்தப் பணத்தைப் போட்டு, ஒரு சிறு கணினித் தொழில் நுட்ப நிறுவனத்தைத் தொடங்கி நடத்திக் கொண்டிருந்தோம்; தொடங்கிகளின் குழுவில் மொத்தம் நான்கு பேர்; அதில் நான் ஒரு தொழில்நுட்ப ஆசாமி – மற்றவர்கள் அவரவர்களுடைய துறைகளில் விற்பன்னர்கள். பலப்பல சிறிய அழகான விஷயங்களைச் செய்வதான எத்தனங்கள், சுகமான நாட்கள். அதில் ஒன்றாக –  கூட மூன்று இளைஞர்களை சேர்த்திக்கொண்டு (அப்போது) மிகமிகச் சிறிய வடிவமே/அளவே உடைய, ஆனால் பராக்கிரமம் மிக்க, ஒரு ப்லூடூத் ஸ்டேக் + ஸிப் ஸ்டேக்-களை எழுதியிருந்தோம். அடிப்படை வடிவமைப்பையும் அதன் மீதான  ஒருமாதிரியாக வேலைசெய்யும் மாடலையும் செய்திருந்தோம். ப்லூடூத் ஸ்டேக்  டெமொ-க்கள்(=மாதிரி வெள்ளோட்டங்கள்) ஒருமாதிரியாக நன்றாகவே இருந்தன என நினைவு.

அச்சமயம், உலகமெங்கும் பலவிதங்களில் கணிநித்தொழில் நுட்ப முனைவுகள், பாய்ச்சலுடன் முன்னேறிக் கொண்டிருந்தன. எதிர்காலத்தைக் குறித்து பல நம்பிக்கைகள்; தொடர்ந்த பொருளாதார வளர்ச்சி, தொழில் நுட்பங்களின் மீது கட்டமைக்கப்பட்டு,  பல மானுட விழைவுகளைச் சாத்தியமாக்கும் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்தேன்; அசுர உழைப்புடன், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் குவியத்துடன் பணி புரிந்துகொண்டிருந்தோம்.

ஸீரீஸ்-ஏ நிதிப்பங்களிப்புக்கான/ஆதரவுக்கான சிலர் முன்வந்தனர் – அவர்களைத் தவிர்த்தோம். ஏனெனில் ஏற்கனவே,   சிலபல பெரிய நிறுவனங்கள் எங்களுடைய மென்பொருட்களில் / சட்டகங்களில் ஆர்வம் காட்டியிருந்தன. அதில் டெக்ஸஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் எனும் பெரிய நிறுவனமும் ஒன்று. முதலில் நடந்த சில அமர்வுகளுக்குப் பின், எங்கள் வெள்ளோட்டங்களின் திறமையை அனுமானித்தவுடன்,  தணிக்கை செய்தவுடன் – அவர்கள் திருப்தியுடன் மேற்கொண்டு அக்விஸிஷன் (= எங்கள் நிறுவனத்தைத் தடுத்தாட்கொள்வது பற்றிய)  பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் எனத் தெரிவித்தார்கள்.

2001 ஸெப்டெம்பர் மாதம், பெங்களூர் அஷ்ரயா ஹோட்டெலின்  கான்ஃப்ரென்ஸ் அறை ஒன்றில் உட்கார்ந்துகொண்டு. டிஐ நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் முடியவேமுடியாத சுற்றிக்கொண்டே குவியத்துக்கு வராத பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தோம்; பொதுவாக எனக்கு, இப்படித் தேவையற்றுப் பேசிக்கொண்டிருப்பது ஒத்துவராது, ஆகவே பொறுமையுடன் மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தேன். அந்த நிறுவனத்தின் வெள்ளைக்கார அதிகாரிகள் பொதுவாக மரியாதையுடன், ஏதாவது பேசவேண்டுமென்றால் மட்டுமே பேசினார்கள் – ஆனால் அவர்களுடைய குழுவில் இருந்த ஒரு இந்தியர் (அமெரிக்கவாசி, ஒரு பணத் தணிக்கை ஆசாமி, ஆடிட்டர்ன், புதுவார்ப்பு அமெரிக்கக் குடிமகன்), தொடர்ந்து முட்டுக்கட்டைகளைப் போட்டுக்கொண்டே இருந்தார்; ஒருவிதமான பின்புலமும் இல்லாமல், ஏதேதோ அற்பக் காரணங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்; ஒரே வாய்ச்சவடால்:
…ஐஐடி காரர்களுக்கு மூளை இருக்கலாம், ஆனால் உங்கள் நிறுவனத்தின் ஐடியாக்கள் அவ்வளவு முதிர்ச்சியடைந்ததுபோலில்லை; மிக அதிகமாக விலை வைத்திருக்கிறீர்கள்; 40 மாத மனித-எத்தனத்தில் செய்யப் பட்டதற்கு அதிகபட்சம் $ 8000  X  40 தான் கொடுக்கமுடியும்… டீஸிஎஸ்ஸுக்குக் கொடுத்தால் $100kயில் முடிந்துவிடும்! என்னை விட்டால், பத்துபேரை வைத்துக்கொண்டு ஒரே மாதத்தில் இதனை முடித்துவிடுவேன்!

நான், எவ்வளவோ வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறேன்; ஆனால் இம்மாதிரி ஒரு பிரமிக்க வைக்கும் அரைகுறையை நான் (அதுவரை) பார்த்ததேயில்லை! அவருடன் வந்த வெள்ளைக்காரர்கள் கொஞ்சம் நெளிந்துகொண்டிருந்தார்கள் – ஆனால் ஒன்றும் பேசவில்லை; அந்த இந்திய நண்பர் அவர்களிடம் ‘என்னிடம் இந்த இந்தியர்களுடன் பேரம் பேசுவதை விட்டுவிடுங்கள், அவர்களை, அவர்கள் பாணியிலேயே, ஒருகை பார்த்துவிடுகிறேன்‘ என முன்கூட்டியே சொல்லி, தன்னுடைய அமெரிக்க/நிறுவன விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கக்கூடும்.

…எனக்கு அந்த ‘இந்திய நண்டுகளை ஏற்றுமதி செய்யும்’ கதை (=இளக்காரம் தொனிக்கும் இந்தக் கதையாடலின் ஒரு தமிழ்வடிவம்: இந்திய நண்டு மேலே ஏறாது; ஒரு ஆங்கில வடிவம்) நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட அற்பர்களுடன் நான் அதிகம் நேரடியாகப் பேசிப் பழக்கமில்லை. ஆகவே, ஆச்சரியமாகவும் அலுப்பாகவும் இருந்தது…  ஏனெனில்,  இந்தியா மீது கரிசனம் மிக்க வெளிநாடு வாழ் இந்தியர்களை மட்டுமேதான், நான் அதுவரை சந்தித்திருந்தேன்!  இந்தியாவை, தேவையேயற்று மட்டம் தட்டுபவர்களை நான் எதிர்கொள்ளவேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை.

ஆனால், இதை எழுதும்போது எனக்கு, அரவிந்தன் கண்ணையன் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான அழிச்சாட்டிய எழுத்துகளைப் பற்றிய நினைவு வருகிறது; ஆனால், ஒவ்வொருவரும் (நான் உட்பட!) ஒவ்வொருவிதமான பேக்கேஜ் என்பதையும், ஒப்புக்கொள்ளமுடிந்த + முடியாத சிலபல விஷயங்களின் கலவைகள்தாம்என்பதை உணர்ந்திருக்கிறேன்; மற்றபடி, அவர் பழகுவதற்கு இனிமையானவராகவே இருக்கக்கூடும் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்.

எது எப்படியோ, எனக்கு – ‘திராவிடம்’ மீது ஒரு கொலைவெறி, அது தமிழகத்தைத் தொடர்ந்து ஒழித்துக்கொண்டிருக்கிறது என்று. அவருக்கு – ‘பாரதம்’ எனும் கருத்தாக்கத்தின் மீது கொலைவெறி, அது பிணந்தின்னிகளின் தேசமென்று.

Each unto his own hate, what else. :-(

சரி. எனக்குக் கோபம் தாளாமல் போனாலும், அந்த நண்டுக்குப் பொறுமையாக ஒரு பாலபாட பதில் சொல்ல முயன்றபோது, என் நண்பன், தன் ஷூ போட்ட பாதத்தால்  செருப்பு மட்டும் போட்டுக்கொண்டிருந்த என் பாதத்தைப் படுமோசமாக மிதித்தான். நான் உடனடியாக வாயை மூடிக்கொண்டேன்.

…ஆனால், ஒரு வழியாக, பணம் குறித்த பேச்சுவார்த்தைகள் முடிந்து, அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்துப் பேச ஆரம்பித்தோம். அந்தப்  புதுவார்ப்பு இந்திய அமெரிக்கருக்கு, இதனுடன் துப்புரவாக ஒப்புதலில்லை எனப் புரிந்தது.  இந்தியர்களுடன், அவர்பாணி இந்தியத்தனமாகப் பேரம் பேசி ஒன்றும் பெரிதாகப் படியவில்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டார். முகம் தொங்கிப் போய்விட்டது, பாவம்.

-0-0-0-0-0-0-

ஆக, ஒரு இடைவெளி கிடைத்தபோது அலுப்புடன் அறையை விட்டு வெளியேறி, நானும் என் நண்பனும் தேநீர் அருந்த, வெளிக்காற்று வாங்குவதற்காக வெளியே லாப்பிக்கு வந்தோம். அங்கு ஒரு பெரிய டீவி திரையில்  ஏதோ சேன்னலில், தொடர்ந்த லூப்பில், உரத்த சப்தத்துடன் வேர்ல்ட் ட்ரேட் ஸென்டர் மீது விமானங்கள் மோதி அவை சரிந்து வீழ்வதைத் தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்தார்கள்.  அன்று 11 ஸெப்டெம்பர், 2001.

கடும் கடுப்பிலும் அயர்ச்சியிலும் நான் இருந்ததால், எனக்கு, அது ஏதோ ஸர்ரியல் கார்ட்டூன் படம் பார்ப்பதுபோல இருந்தது; இருந்தாலும், புகட்டப்பட்ட  வெறுப்பியத்தின் பரிணாம வளர்ச்சியைக் கண்டு, கண் விரிந்துவிட்டது.

என் நண்பன், அவனுடைய  ந்யூயார்க் நண்பர்களுக்கெல்லாம் ஃபோன் செய்துகொண்டே ஃபக், பாஸ்டர்ட்ஸ் என்று சொல்லிக்கொண்டே பதட்டத்தில் இருந்தான். ஒரே அரற்றல். அவன் தங்கை ஸூனியில் படித்துக்கொண்டிருந்தாள், அந்தக் கவலை வேறு. அவள், தகர்க்கப்பட்ட அந்தக் கட்டிடங்களின் பக்கத்துக் கட்டிடம் ஒன்றில் ஏதோ  இன்டெர்ன் வேலை செய்துகொண்டிருந்தாள் என நினைவு. (அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை)

…கிட்டத்தட்ட 1979 டெஹ்ரான் சம்பவத்திலிருந்து வெகு உன்னிப்பாக வஹ்ஹாபிய கொடும்மதவாதத்தின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, இந்த 9/11 தகர்ப்பு என்பது, இஸ்லாமின் சமூக அதிகாரமானது, வெறிபிடித்த சிறுபான்மை அரசியல்/மதத் தலைமைக் கேனையர்களிடம் போய்ச்சேர்ந்ததன் விளைவாகத்தான் தோன்றியது.

இரண்டு இரவுகளாகச் சரியாகத் தூங்காததினால், என் அறைக்குப் போய் ஏதேதோ எண்ணங்களில் மூழ்கி எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை; உலக மக்களின் மீதான, அமைதி+முன்னேற்றம் மீதான என் கரிசனம் அவ்வளவுதான்.

…அடுத்த நாளும் பேசுவதாக இருந்த விஷயம், நடக்காமல் ரத்து செய்யப்பட்டு, உடனடியாக டிஐ குழுவினர் பெங்களூரை விட்டுக் கிளம்பிப் போய்விட்டனர்.

 சுபம். :-(
Screenshot from 2015-09-17 21:43:16
9/11 – அதனை   நாம் எப்படி மறக்கமுடியும்?

-0-0-0-0-0-0-0-0-

அதற்குப் பின் ஏற்பட்ட மகாமகோ பொருளாதாரச் சரிவில் நாங்களும் பக்கவிளைவாக மரணஅடி பட்டோம். என் வாழ்க்கையில் இரண்டாம் முறையாக, தொழிலில் படுபயங்கர நஷ்டம். ஒருவர் பின் ஒருவராக பிற தொடங்கிகள், சோர்ந்து போய், வேறுவேலைகளில் சேர்ந்துவிட்டார்கள். நானும் இரண்டு-மூன்று மாதங்கள் பொறுத்துப் பார்த்து, ஏதாவது நடக்குமோ என நப்பாசையுடன் எதிர்பார்த்து, ஒரு எழவும் நடக்கவில்லையாதலால், அந்த நிறுவனத்தை ஒருவழியாக இழுத்து மூடினேன்.

ஆனால், அந்த இரண்டுமூன்று மாதங்களில்  ஒரு வரி கணிநி நிரல் கூட எழுதாமல், மும்முரமாக இஸ்லாம் பற்றிப் படித்துக்கொண்டேயிருந்தேன். கம்பராமாயணப் பாராயணமும் கொஞ்சம் நடந்தது. மற்றபடி, என் இரண்டுவயது மகளுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்ததற்கு அப்பாற்பட்டு, இஸ்லாமின் சமகாலப் பிரச்சினைகளைப் பற்றியும் யோசித்துக் கொண்டிருந்தேன்; சில பெரியவர்களுடன் தொடர்பு கொண்டு, என் எண்ணங்களைச் செப்பனிட்டுக் கொண்டேன்.

2001 டிஸெம்பர் மாதம், என் சொந்த வங்கி இருப்பிலும் பணம் இல்லை. அடியில் கண்ட சொத்தைத் தவிர என்னிடம் வேறு ஒரு சொத்தும் இல்லை! அனுபூதி நிலை. :-)

ஆக – 2001 இறுதியில் நான் ஒரு மகாமகோ பன்னாட்டு நிறுவனத்தில் நிபந்தனையற்றுச் சரணடைந்து, ஒரு ஆராய்ச்சியாளனாக (வெறும் தகவல்தொழில்நுட்ப தட்டச்சுக் குளுவானாக அல்ல!) வேலைக்குச் சேர்ந்தேன்.

-0-0-0-0-0-0-0-

குறிப்பு: டெக்ஸஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் தளத்தில் இந்த ப்லூடூத் ஸ்டேக் பற்றிய செய்தி. கவனிக்கவும்: இது நாங்கள் உருவாக்கியதல்ல, ஒரு எடுத்துக்காட்டாகத் தான்  இதனைக் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதுமாதிரி ஒன்றைத்தான் நாங்கள் வடிவமைத்திருந்தோம்.

அவர்கள் வேறெங்காவது இதனை வாங்கியிருக்கலாம் – அல்லது அவர்களே, அந்த இந்திய ஆடிட்டர் தலைமையில், பத்தேபேரை வைத்து ஒரே மாதத்தில் உருவாக்கியிருக்கக்கூடும்! :-)

-0-0-0-0-0-

Screenshot from 2015-09-21 21:22:09

2014 ஸெப்டெம்பரில் நம் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், வேர்ல்ட் ட்ரேட் ஸென்டர் மெமொரியலை விஜயம் செய்தபோது எடுத்த படம்.

Screenshot from 2015-09-22 08:30:00

9/11 – அதனை   நாம் எப்படி மறக்கமுடியும்?

(மேற்கண்ட படங்கள் இங்கிருந்து)

(தொடரும்…)

தொடர்புள்ள பதிவுகள்:

 

2 Responses to “9/11 நிகழ்வுக்குப் பின், முஸ்லீம் இளைஞர்களுக்கு மேலதிகமாக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி? (1/4)”


  1. நண்பர் ஸ்ரீதர் திருச்செந்துறை (http://justexperience.blogspot.in/) அவர்களின் எதிர்வினை, அவருடைய அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது.

    -0-0-0-0-

    Sounds similar to my experience in 2001. I was with a dot com, which I think was a bit ahead of its time.

    I returned to India and started all over with a biv consulting company, warmed the bench for 6 months before I joined another crazy startup.

    Since then, I have interviewed thousands of people. I think Muslims’ success rate in my interviews has been a bit high just because I may have interviewed just about 20.

    I got to hire two Muslim girls, surprisingly from NIIT when I was with another startup. They showed remarkable understanding of a complex BI project. My Muslim coworkers are/were at least as good as the other people I hired.

    I tend to extra careful when interviewing people from backward regions or communities. They may have worked hard to get this far. I find myself sympathetic towards them, but I don’t lower the standard for them.

    Looking forward to the next parts.

    Sridhar


  2. அன்புள்ள ஒத்திசைவு,

    எங்கே என்னை வசைப் பாடுவதை விட்டு விட்டீர்களோ என்று கொஞ்சம் ஏக்கமாகி விட்டது.

    //எது எப்படியோ, எனக்கு – ‘திராவிடம்’ மீது ஒரு கொலைவெறி, அது தமிழகத்தைத் தொடர்ந்து ஒழித்துக்கொண்டிருக்கிறது என்று. அவருக்கு – ‘பாரதம்’ எனும் கருத்தாக்கத்தின் மீது கொலைவெறி, அது பிணந்தின்னிகளின் தேசமென்று.// திராவிட இயக்கைத்தை தீவிரமாக விமர்சித்து எழுதியதற்காக எனக்கு கிடைத்த பட்டம் “பார்ப்பன அடிவருடி”. பார்க்க http://contrarianworld.blogspot.com/2013/05/tamil-nadus-debt-to-kamaraj-and-mgr-on.html

    http://contrarianworld.blogspot.com/2013/05/evr-to-kaduvetti-guru-saga-of-hatred.html

    http://contrarianworld.blogspot.com/2013/09/radhakrishnan-stalin-and-mathimarans.html

    என்ன்னுடைய கூகிள் பிளஸ் போஸ்ட் கூட உங்கள் கவனத்தை ஈர்த்திருப்பது என் பாக்கியம். அதை படித்தால் பாரதம் எனும் கருத்தாக்கத்தின் மீது எனக்கு கொலைவெறி என்று புரிந்து கொள்வதற்கு உங்களால் மட்டுமே முடியும். வேறென்ன சொல்ல.

    ஆனால் உங்களுக்கு நன்றி சொல்ல வேறொரு விஷயமிருக்கிறது. உங்களை மறுத்து எழுதுவதற்காக நாசா பற்றி இணையத்தில் தேடிய போது மேரிலாந்தில் நாசா காட்டார்டு ( NASA GOddard) செண்டர் குழந்தைகளுக்காக ஒரு மாபெரும் கண்காட்சி ஏற்பாடு செய்திருப்பது தெரிய வந்தது. நேற்று தான் என் மகளோடு அங்கே சென்று வந்தேன். உங்களுக்கு நன்றி.

    –அரவிந்தன் கண்ணையன்


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s