மதங்கள், நடைமுறை இஸ்லாம், அதன் வரலாற்றுப் பின்னணி – சில குறிப்புகள் (5/n)
August 10, 2015
இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாப–பழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள் (5/n) என்றறிக.
இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n.
…எது எப்படியோ, மற்ற இந்தியர்களைப் போலவே – நம் சக இந்திய முஸ்லீம்களும் (குறிப்பாக என் தமிழக முஸ்லீம்களும்) ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய, தங்களுக்குள்ளேயும் பிறபண்பாடுகளுடனும் பொறுமையுடன் உரையாடவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இந்த ஆத்ம/சுய பரிசோதனைக்கு எவரால் உதவமுடியுமோ அவர்கள் உதவினால் – அது ஒட்டுமொத்த மானுடமேன்மைக்குக்கூட உதவும் எனவும் நினைக்கிறேன்.
-0-0-0-0-0-0-0-
சரி.
எல்லா மதங்களிலும் பிரச்சினைகள் இருக்கின்றன, மேன்மைகள் கீழ்மைகள் இருக்கின்றன; இதில் ஒரு விதிவிலக்கு கூட இல்லை. உச்சங்கள், கேவலங்கள் எனச் சகலமும் இருக்கின்றன, இவற்றில். ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்த்தால் விகிதாச்சாரங்கள் வேறுபடும், அவ்வளவுதான்.
ஏனெனில், கடவுள் என்பது மனிதனின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று, மதம் என்பது ஒரு சமூகத் திரள் தொகுப்பு அமைப்பு – ஆகவே, அவற்றிலும் சராசரி மானுடனிடம் இருக்கும் விழைவுகளும் பல மேன்மைகளும் சில கீழ்மைகளும் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அதேசமயம் – இவையனைத்தும் ஆத்மார்த்தமான மானுடவிழைவுகள், ஆக, அவைகளும் பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்து அடைந்துகொண்டிருக்கின்றன என்பதிலும் ஐயமும் இல்லை. ஆக – இந்தப் பின்புலத்தில் ஒரு மதம் உயர்ந்தது இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வதை விடப் பைத்தியக்காரத்தனம் வேறொன்றும் இல்லை.
ஆனால், மையப்படுத்தப்பட்ட அமைப்புகள் இருக்கும், சமூக–அரசியல் பார்வைகள் கூட மதங்களைச் சார்ந்து இருக்கும்படியான சமூகங்கள் – நடைமுறையில் கொஞ்சம் அதிகமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் இம்மாதிரி விழைவுகள் அதிகாரமையங்களால் குவியம் பெறும்போது – அவை, பன்முகச் சிந்தனைகளுக்கு சகிப்புத் தன்மைக்கு எதிராகவே, வெகு இயல்பாகச் செயல்படுபவை.
புவியெங்கும் பரவியிருக்கும் மானுடத் திரள்களின் விழைவுகளும் அவர்கள் கண்ட/காணும் தத்துவ தரிசனங்களும் இடத்துக்கு இடம் கொஞ்சம்போல வேறு படுகின்றன – ஆனால் இந்தத் தரிசனங்களின் ஒளிக்கீற்றுகள் மானுட மேன்மையைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. அதாவது – மானுடத்தை இந்தப் ப்ரபஞ்சத்தின் அங்கமாகப் பார்ப்பது எப்படி, நாம் நம் வாழ்க்கையை ப்ரபஞ்சத்தின் முரணியக்கங்களுடன் பொருத்தி ஆழ்ந்து அவதானிப்பது எப்படி போன்றவை பற்றி உரையாடல்களை நிகழ்த்துகின்றன.
ஆனால் மதப் புத்தகங்கள், கடவுளால் சொல்லப்பட்டவைகள், வழிகாட்டுதல்கள் போன்ற எக்காலத்திலும் மறுதலிக்கப்படக் கூடாதவை எனக் கருதப்படும் கருத்தாக்கங்கள் அப்படியல்ல. அவை நடைமுறைகளைப் பற்றி, அதிகாரத்தைப் பற்றிய கையேடுகள் மட்டுமே. அதனால், இம்மாதிரியான ஒற்றைப்படைப் பார்வையை மட்டும் தூக்கிப் பிடிக்கும் கையேட்டு மதக் கருத்தாக்கங்கள், காலப் போக்கில் அதிகார மையங்களுக்கு சாமரம் வீசும் தன்மையைப் பெறுகின்றன.
ஆக, ஒற்றைப்படை தரிசனம் சார்ந்த, நிறுவன மயமாக்கப்பட்ட, மையப் படுத்தப்பட்ட மதங்கள் அனைத்திலும் பலப்பல அடிப்படைச் சிக்கல்கள் உருவாகின்றன. இயல்பாக, உரையாடல்களின் மூலம் அவிழ்க்கப்படக்கூடிய சிக்கல்கள்கூட, வீரியம் மிகுந்து இடியாப்பச் சிக்கல்களாகின்றன.
ஆனால், ஒரு விஷயம்: மதத்துக்கு மதம், வரலாற்றுரீதியான பல்வேறு கலாச்சாரக் காரணங்களால் – இப்பிரச்சினைகளை, சம்பந்தப்பட்ட சமூகங்கள் அணுகும் முறையானது – பலவிதங்களில், அதுவும் சமயத்துக்குச் சமயமே கூட வேறுபடுகிறது. ஆக – ஒரு மதத்துக்குச் சரியாக இருக்கும் மறுபரிசீலனை முறை, நடைமுறை மறுமலர்ச்சிகள் போன்றவை மற்ற மதங்களுக்கும் சரியாக வரும் என்று சொல்லவே முடியாது.
-0-0-0-0-0-0-0-
…அப்ரஹாமிய மதங்கள் உருவான புவியியல் சார் சுற்றுச் சூழல்கள்–நிலப்பகுதிகளின் விசேஷ தன்மைகள் காரணமாக, அவற்றின் மக்கள்திரள்கள், சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கே பலவிதமான நெருக்கடிகளையும், சிடுக்கல் சமூகவியல் பிரச்சினைகளையும் தொடர்ந்து எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இதன் காரணமாக எழும்பிய பொருளாதாரப் பிரச்சினைகளால் அரசியல்/குழு/மத ரீதியாக மக்கள் திரள் திரட்டல்கள் பிரித்துத் தொகுக்கப்படவேண்டியிருந்தது.
இத்தகைய சமூகச் சூழலால், பல்வேறு குலக் குழுக்களுக்கும் ஜாதித் தொகுப்புகளுக்கும் இடையே பொருளாதார ரீதியான போராட்டங்கள் ஏற்பட்டு – அவை மதம்சார்ந்து இயங்க ஆரம்பித்து பலப்பல கலாச்சார/பண்பாட்டு ரீதியான சிடுக்கல்களில் – ஆகவே அடிப்படை வன்முறைகளில் முடிந்தன; மேலும், அதிக வன்முறையைக் கையாளக்கூடிய வகையில் இருந்த குழுக்கள், தங்கள் சித்தாந்தங்களை மற்ற ஆக்கிரமிக்கப்பட்ட குழுக்கள் மீது கவிழ்த்துவதும் சாத்தியமாகியது. இம்மாதிரி தொடர்ந்து நடந்த வரலாற்று நிகழ்வுகள் அப்பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் திரள்களின் படைப்பாற்றல் வெளிப்பாடுகளை, சிந்தனை நியதிகளை நேரடியாகப் பாதித்தன. அம்மக்கள்திரள்கள் உபயோகித்த தத்துவார்த்த படிமங்களையும், உருவகங்களையும், சிந்தனைச் சரடுகளையும் தடுத்தாட்கொண்டன. நடைமுறை வாழ்க்கையை மதச்சார்பாக்கலை, ஒற்றைப்படையாக்கலைத் தொடர்ந்து செய்தன.
ஆக, இம்மாதிரி புவியியல்–மானுடவியல்– பொருளாதாரம் சார்ந்த பிணைப்புகள் மதமயமாக்கப்பட்டமை – இவை சார்ந்த பின்புலப் பகுப்புகள்/காரணிகள் – இவை வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்து, தொடர் சங்கிலிவட நிகழ்வுகள் போன்றவை — அம்மதங்களில் அடித்தளத்தில் இன்னமும் ஆதாரசுருதிகளாக இருக்கின்றன.
மேற்கண்ட காரணிகளால், இவற்றின் மதநூல்கள், கையேட்டுப் போதனைகள் மிகமிக முக்கியமாக, அதிபுனிதமாகக் கருதப் படுகின்றன. எப்போதோ எழுதப்பட்ட அவற்றை மீறி ஒரு விஷயத்தை, நிகழ்காலத்திற்கேற்ப அணுக, மிகுந்த பிரயத்தனம் செய்யவேண்டும். அவற்றை மறுதலித்து ஒருவனால் அம்மதங்களில் இருக்க முடியாது. இக்காரணத்தால் – மதத்தின் மைய நீரோட்டங்களை–தத்துவங்களை நோக்கிச் செலுத்தும் உரையாடல்கள், முரணியக்கங்கள் என ஏறக்குறைய ஒன்றுமே இல்லாமல் அற்றுப்போயின. காலப்போக்கில், அவை, மறு பரிசீலனை செய்யவே முடியாத அளவுக்கு இறுக்கம் அடைந்துவிட்டன என்றேகூடச் சொல்லிவிடலாம்.
(ஆனால், ஒரு விஷயம்: அப்பகுதிகளில் இருந்து வெளியேறிய அப்ரஹாமிய மதச் சிந்தனைகள், மற்ற நிலப் பகுதிகளுக்கு–சமூகத் திரள்களுக்குச் சென்றடைந்தபோது அவற்றுக்கு – உட்புகுந்த பிரதேச மக்கள்திரள்களுடன், மதம்-தத்துவங்களுடன் ஊடாட வேண்டியிருந்தது. ஆகவே அவை பண்பட்டன, உரையாடல்களில் ஈடுபட்டன – அதனாலும் மேன்மையுற்றன, பல்கிப் பெருகின; ஏனெனில், இம்மாதிரி விஷயங்கள்/மாற்றங்கள் அப்ரஹாமிய மதங்களின் ஆதாரசுருதிகளை வெறியுடன் மறுதலிக்காமல், அவற்றின் நடைமுறைகளைச் செப்பனிட்டன; வன்முறைகளைப் போக்குகளைத் தடுத்தாட்கொண்டு மேன்மை (ஸப்ளைம்) செய்தன; இதைப் பற்றி அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.)
-0-0-0-0-0-0-
அப்ரஹாமியமதங்களில் ஒன்றான இஸ்லாம் உருவாகி வளர்ந்த விதம் என்பதும் மேற்கண்ட பலப்பல காரணிகளை (=பாலைவனச் சூழல், சுட்டெறிக்கும் வெயில்; விவசாயம் வளரமுடியாத, இருந்தாலும் உபரி தொகுக்கப்படமுடியாத இயற்கைச் சூழ்நிலை; பஞ்ச மனப்பான்மைபாற்பட்டு மக்கள் திரள் சிறுசிறு குலக்குழுக்களாகப் பிரிந்து அவற்றிடையே தொடர் பிணக்குகள், வன்முறை; க்றிஸ்தவமும், யூதமும் நேரடியாக உட்புகமுடியாத நிலை; பண்பாட்டுத் தேக்கம்; தத்துவ வளர்ச்சியின்மை; இன்னபிற…) உள்ளடக்கியது என்பதற்கு அப்பாற்பட்டு – இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன.
#1: இஸ்லாம் மத ஸ்தாபகரின் தன்மை: இம்மதத்தின் ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், படிப்பு/எழுத்தறிவு வாய்க்கப்படாதவராக இருந்தும் – ஒரு மதத் தலைவராக மட்டும் இல்லாமல், கடவுளின் தூதராகத் தன்னைக் கருதிக்கொண்டவராக மட்டும் இல்லாமல் – ஒரு அரசராக, அவருடைய மார்க்கத்தில் சேர்ந்த மக்கள் திரளை ஆண்டவராக – அந்த மக்கள் திரளைப் பாதுகாத்து அத்திரள் மேன்மேலும் வளர ஆவன செய்தவராகவும், அதற்காகப் போர்களில் ஈடுபட்டவராகவும், அவற்றுக்காகத் திட்டம் வகுத்தல், தந்திரோபாயங்களைக் கட்டியமைத்தல், தொடர்ந்து அவற்றைச் செழுமைப் படுத்திக்கொண்டு முன்னேறுதல் போன்றவற்றிலும் ஈடுபட்டவராகவும் இருந்தார் என்பது ஆச்சரியகரமான விஷயம். (எதற்கெடுத்தாலும் இஸ்லாமை நொள்ளை சொல்லிக்கொண்டே இருப்பவர்களும், இஸ்லாமில் ஒரு பிரச்சினையுமேயில்லை, எல்லாம் சுபிட்சம் – என்று சொல்கிறவர்களும் ஒருசேர கருத்தில் கொள்ளாத ஒரு முக்கியமான விஷயம் இது)
… அதே சமயம் தன்னுடைய மக்கள் திரளை அரவணைத்து நெறிப்படுத்துதல், அவர்களது அன்றாட/லௌகீக வாழ்க்கை தொடர்பான நுணுக்கமான கட்டளைகளைச் சமைத்தெடுத்தல், தர்ம பரிபாலனம் செய்தல், பிறழ்வுகளுக்கு (அக்காலச் சூழ்நிலைகளுக்கேற்ப) தண்டனை வழங்குதல், தம் மார்க்கத்தின் எதிரிகளை சாமதானபேததண்ட முறைகளில், பெரும்பாலும் வன்முறைகளில் ஈடுபட்டு எதிர்கொள்ளல் – போன்ற ராஜ்ய நீதிச் சாரங்களையும் ஒருங்கிணைத்தார். (எனக்குத் தெரிந்து, வேறெந்த மதத்திலும் – அதன் ஸ்தாபகர், ஒரு அரசர் போல இருக்கவேண்டிய, ஆள வேண்டிய அவசியம் இருந்ததில்லை; இதற்கு மாற்றுக் கருத்துடைய படிப்பாளிகள்/சான்றோர்கள் என்னைத் திருத்தினால், நான் மகிழ்வேன்!)
…இந்த ஒரு பிணைப்பால் – அரசுசார் அதிகாரம் + மதம்சார் அதிகாரம் + சமூகம்சார் அதிகாரம் – என அனைத்தும் ஒற்றைத் தலைமையின் கீழ் குவிக்கப்பட்டன – ஏனெனில் அப்போதைய அரேபிய நிதர்சன நிலவரம் அப்படி இருந்தது.
ஆனால் – இப்படி, பல விதங்களிலும், பகுப்புகளிலும் தலைமை ஏற்க ஒரு மனிதன் மகாமகோ முனைப்புள்ளவனாகவும், படு புத்திசாலியாகவும், ஏற்ற காரியத்தை செவ்வனே முடிக்கும் திறமையுள்ளவனாகவும், மாளா தன்னம்பிக்கை உடையவனாகவும், நிகரிலாத் தலைவனாகவும் இருக்கவேண்டும். மொஹெம்மத் நபி அவர்கள், அப்படிப்பட்ட ஒரு மனிதர். இவரைப் பற்றிய பலவிதமான வரலாறுகளைப் படித்துள்ள எனக்கு, இவர் மேல் மாளா ஆச்சரியம்தான்.
இப்போது இரண்டு உப விஷயங்கள்:
#1.1: அரசு/அதிகாரம் என்றால் – அதன் அடிப்படையில் ஒருவிதமான வன்முறை இருந்தேயாக வேண்டும் என்பது ஒரு அடிப்படை உயிரியல்/சமூக உண்மை. இதன் சாதக பாதகங்களுக்கு அப்பாற்பட்டு, நம்மால் சமன நிலையில் ‘அரசு‘ என்பதைப் பற்றி ‘முடிந்தவரை அதிகம்பேருக்கு நன்மை செய்வது‘ (‘for the greater common good’) என்றாவது புரிந்துகொள்ள முடியவேண்டும். (பிரச்சினை என்னவென்றால் – ‘வன்முறை‘ என்றாலே ஒரு எதிர்மறை உணர்வு, நம்மில் பலருக்குள் தோன்றிவிடுகிறது; ஆனால் பலபத்தாண்டு யோசனைகளுக்குப் பிறகு, நான் ‘வன்முறை என்பது நமது வாழ்க்கையின் ஒரு இன்றியமையாத அங்கம்‘ எனும் உயிரியல்+உளவியல் ரீதியான முடிவுக்கு வந்திருக்கிறேன். மேலும், ‘தேவையுள்ள வன்முறை, தேவையற்ற வன்முறை‘ எனப் பாகுபாடும் செய்துகொள்கிறேன்; ஏனெனில் நான் சாம்பல் நிறத்தின் உபாசகன். வெள்ளை–கறுப்பு எனும் பகுப்புகளினூடே மட்டும் உலகத்தை மிகச் சௌகரியமாக அவதானிப்பது எனக்கு ஒத்துவராது, மன்னிக்கவும்; நான், எனக்கு அபிமானமும் நம்பிக்கையும் உள்ள விஷயங்களுக்காக, சாலையில் இறங்கிச் சண்டை போடும் ஆள். வெறும் தத்துவ அஞ்ஞானியல்லன். சும்மா போராளிக்குசு விட்டுக்கொண்டிருக்காமல், களத்தில் வேலை செய்பவன் – பேசிக்கொண்டே அறிவுரை கொடுத்துக்கொண்டே சுயநலக் காலட்சேபம் செய்வதை விட ஒழிக்கப்படவேண்டிய மோசமான, அசிங்கமான வன்முறை ஒன்றில்லை என்று கருதுபவன்)
…ஆக, அக்கால நிதர்சன நிலைகளினூடே அரசு+அதிகாரம் போன்ற காரணிகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட இஸ்லாம், தொடர்ந்து வன்முறைகளை – தேவையற்ற+தேவையுள்ள வகைகளில் எதிர்கொள்ளவேண்டியிருந்தது, செயல்படுத்தவேண்டியிருந்தது.
#1.2: மேலதிகமாக – நபி அவர்கள் தன்னுடைய காலத்தில், இடம்–தேச–வர்த்தமானங்களுக்கு ஏதுவாக, அவருடைய வழிநடத்தலை ஏற்றுக்கொண்ட மக்கள் திரளுக்காக அவர் மேற்கொண்ட செயல்பாடுகளை, பேச்சுகளைத் தொகுத்து (ஸுஹ்னாஹ்) எழுத்து வடிவில் பிற்காலத்தில் வெளியிடப்பட்ட ஹடீத்களும், ஒற்றைப் பெருங்கடவுள் (அஹ்லாஹ்) தன் கட்டளைகளை கேப்ரியல் வழியாக மொஹெம்மத் நபி அவர்களுக்குக் கொடுத்ததாகக் (கொர்-ஆன்) கருதப் படுவதையும் – அவை எழுதப்பட்ட வகைமுறைகளை, பரிந்துரைகளைச் சரியாக – அவற்றின் பின்புலங்களைக் கருத்தில்கொண்டு புரிந்துகொள்ளவேண்டும் என்றால், ஒருவனுக்கு கொஞ்சத்துக்குச் கொஞ்சமேனும் வரலாற்றறிவும் சமனமும் வேண்டும்.
மேலும் – கடவுள் எனப்படுபவள், கேபிரியல் மூலமாக அவருக்கு ஆலோசனைகளை வழங்கினாள், அந்த அறிவுரைகளை / கட்டளைகளை / போதனைகளை இப்ன் வர்ராக் எழுதிக்கொண்டார், அதுவும் நபி அவர்கள் மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகு இவை தொகுக்கப்பட்டன என்பதெல்லாம் தொன்மங்கள், எல்லா மதங்களிலும் இருப்பதைப் போலவே கதையாடல்கள் எனப் புரிந்துகொள்ளவும் வேண்டும்.
இம்மாதிரி தொன்மங்களுக்கு அப்பாற்பட்டு – இந்த #1.2-இல் முக்கியமான, சரிபார்க்கப்பட்ட மையப்புள்ளி என்னவென்றால் – மொஹெம்மத் நபி அவர்கள் இறந்ததற்குச் சுமார் 20 ஆண்டுகள் பின்னர்தாம் கொர்-ஆன் + ஹடீத்கள் பல வரைவுகளிலிருந்து, வாய்வழிச் செய்திகளிலிருந்து தொகுக்கப்பட்டன.
…அதாவது – மேற்கண்ட போதனைகள் எப்படி, எப்போது உருவாயின என்பது பற்றிய தொன்மங்களுக்கு அப்பாற்பட்டு, இவை, பிற்காலத்தில் அதிகாரபூர்வமாகத் தொகுக்கப்பட்ட காலகட்டத்தின் நெருக்கடிகளையும், தேவைகளையும் பிரதிபலிக்கின்றன.
…இஸ்லாம் பற்றி இன்னொரு முக்கியமான புரிதல் #2 ++ (அடுத்தபதிவில்)
August 11, 2015 at 05:43
[…] மதங்கள் நடைமுறைகள் […]
August 11, 2015 at 12:02
.”ஏனெனில் நான் சாம்பல் நிறத்தின் உபாசகன். வெள்ளை–கறுப்பு எனும் பகுப்புகளினூடே மட்டும் உலகத்தை மிகச் சௌகரியமாக அவதானிப்பது எனக்கு ஒத்துவராது, மன்னிக்கவும்”
உங்களுடைய இந்த கருத்துதான் இப்பொழுதுள்ள சூழ் நிலையில் மிகவும் ஏற்கதக்கது.ஆனால் யார் சொல்லுகிறார்கள்?.நன்கு விஷயம் தெரிந்தவர்கள் கூட ஓன்று ‘கருப்பு’ அல்லது ‘வெளுப்பின்’ பக்கம்தான்.இதுதான் நமது துரதிர்ஷ்டம்.
August 14, 2015 at 12:29
ராமசாமி சார் இஸ்லாத்தை பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க அதே சமயம் கொஞ்சம் பிழையாவும்.
முஹம்மது நபி இஸ்லாத்தின் ஸ்தாபகர் இல்லை.இஸ்லாத்தின் ஸ்தாபகர் அல்லாஹ் தான்.முஹம்மது இஸ்லாத்தின் கடைசி தூதர்.மூசா(மோசஸ்)ஈசா(ஜுசஸ்)இப்ராகிம்(ஆப்ரகாம்) இந்த மாதிரி இன்னும் நிறைய தூதர்கள்,இவர்கள் யாவரும் முஸ்லிம்களே.பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இன,மொழி மக்களுக்கு தூதராக அல்லாஹ்வால் வேதம் கொடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டவர்கள்.முஹம்மது இந்த வரிசையில் இறுதி தூதர்.அவருக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட வேதம் குர்ஆன்.அவர் எழுதியது அல்ல. அவர் மரணிக்கும் தருவாயில் இந்தியா அளவுக்கான நிலபரப்புக்கு அவர் அரசர்(அமீர்),ஆன்மீக தலைவர்.அவரின் வாழ்க்கையை இப்போதுல்ல முஸ்லிம் மன்னர்கள் படித்து திருந்தினால் இஸ்லாத்திற்கு நல்லது.
அவரின் போதனைகளை தமிழக முஸ்லிம்கள் முறையாக ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றியிருந்தால் நீங்கள் இப்போது ராமசாமி யாக இருக்க மாட்டீர்கள்.ஒரு அப்துல்லாவாக இருந்திருப்பீர்கள்.
August 14, 2015 at 14:02
அய்யா மொஹெம்மத்,
உங்கள் பின்னூட்டதின்மீதான என் கருத்துகளை பின்னர் விரிவாகத் தருகிறேன்.
நன்றி.
__ரா.
August 19, 2015 at 07:41
//
அவரின் போதனைகளை தமிழக முஸ்லிம்கள் முறையாக ஆரம்ப காலத்திலிருந்து பின்பற்றியிருந்தால் நீங்கள் இப்போது ராமசாமி யாக இருக்க மாட்டீர்கள்.ஒரு அப்துல்லாவாக இருந்திருப்பீர்கள்.
//
சில வருடங்களுக்கு முன், ஒரு பத்திரிக்கையில் படித்தது,
அண்ணா, பெரியார் இவர்களை பார்க்காவிட்டால் நான் கம்யுனிஸ்டாக ஆகி இருப்பேன் என்று கலைஞர் கூறினார்.
இதை பற்றி ஜெயகாந்தனிடம் கருத்து கேட்டனர் ..
இவர்களை எல்லாம் பார்த்தால் தான் நான் கம்யுனிஸ்டாக ஆகி விட்டேன் என்றார்…
August 19, 2015 at 00:08
தமிழ்நாட்டில் இருக்கும் முகமதுக்கு அரேபிய கடவுளர்களிவனின் மீதும் அவர்களின் கோட்பாடுகளின் மீதும் இருக்கும் நம்பிக்கை நம் தமிழருக்கே உரிய மானங்கெட்ட குணம் தான்