தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடமோ அல்லது எஸ். ராமகிருஷ்ணனிடமோ ஒரு எழவையும் சொல்லி விடாதீர்கள்!  ப்ளீஸ்!!

September 30, 2014

தயவு செய்து…

உங்களிடம் கண்ணீர் மல்க மன்றாடி, நெஞ்சு விம்ம, மூக்குச்சளி ஒழுக, நெடுஞ்சாண் கிடையாக உங்கள் காலடியில் விழுந்து, நிபந்தனையற்றுச் சரணாகதியடைந்து கேட்டுக் கொள்கிறேன் –  நம் தமிழகத்துக்காக, பாவப்பட்ட சகதமிழ் வாசகர்களின் மன நிம்மதிக்காக, இதைக்  கூடவா உங்களால் செய்ய முடியாது? :-(

… ஏனெனில், அவர்கள் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு, காணொலியைப் பார்த்துவிட்டு எம்மாதிரி கந்தறகோள தத்துப்பித்துவ மலச்சிக்கல் கவிதையையும், மகாகோர மனிதச்சிங்கநேயக் கட்டுரையையும் ஊசிப்போன உப்புமாப் பிண்டங்களாக, முறையே, முறையாக, ஒரு வரைமுறையே இல்லாமல் அநியாயத்துக்குக் கிண்டி – நம் மாசிலா நற்றமிழ்த் தாயின் உயிரை – முறையே மாறுகவிதை, மாறுகட்டுரை வாங்கி ஒருவழி  செய்துவிடுவார்களோ என்பதை நினைத்துப் பார்த்தாலே கதி கலங்குகிறது… :-(((

அம்மணிகளே, அய்யாமார்களே!  தயவுகூர்ந்து, புரிந்துகொள்ளுங்கள்.

-0-0-0-0-0-0-0-0-

சுருக்க அறிமுகம்: காட்டில் மோசமாக அடிபட்டுக் கிடந்த  ஒரு  சிங்கக்குட்டியைக் காப்பாற்றினாராம், ஒரு கொலம்பிய நாட்டுப் பெண்மணி – அதனைத் தன் வீட்டிற்கு எடுத்துசென்று பார்த்துக்கொண்டு அதற்கு நன்றாக சிசுரூஷை செய்து, அதன் ஆரோக்கியம் மேம்பட்டதும் அதனை ஒரு விலங்குக் காட்சியகத்துக்கு அதனைக் கொடுத்துவிட்டாராம். கீழ்கண்ட காணொலியில், அவர் ஐந்து வருடங்கள் பின்னர் தன்னுடைய செல்ல சிங்கக்குட்டியை காணச் சென்றபோது  – அது அவரை அரவணைத்து,  உச்சிமுகர்ந்து முத்தம் கொடுப்பதாக காட்சி விரிகிறது.

இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு வெட்டிஒட்டல் என்பது எனக்குத் தெரியவில்லை.

ஆனால், என் மகள் இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்துவிட்டு, எனக்கு இதனை அனுப்பியவுடன் – இந்தக் காணொலியை – ஒரு முன்னெச்சரிக்கையுமில்லாமல், நம்முடைய சமூக வலைத்தளத் தமிழ்க் குளுவான்களிடையே பரவவிட்டால் – – இதன் தமிழ் அலக்கியச் சூழல் சார்ந்த அபாயகரமான பின்விளைவுகளைப் பற்றி அவசரமாக யோசித்த  (= அதாவது, ஏற்கனவே அனுபவப்பட்டிருக்கும் நான்!)  நான், உடனே, போர்க்காலரீதியில் இந்தப் பதிவை எழுதியிருக்கிறேன்.

உ ஷார்!

தயவுசெய்து இந்த வீடியோவை நீங்கள் பார்த்ததாகவே, மேற்கண்ட பிரக்ருதிகளிடம் காட்டிக் கொள்ளவேண்டாம், அவர்களிடம் இதனைப் பற்றி ஒரு மூச்சுகூட விடவேண்டாம்  – என மறுபடியும், மறுபடியும்  விண்ணப்பித்துக் கொள்கிறேன்.
-0-0-0-0-0-0-0-

இருந்தாலும், பயமாகத்தான் இருக்கிறது. :-(

… ஒருவேளைஇங்கிதம் தெரியாதவர்கள், தற்கொலை எண்ணம் மிக்கவர்கள், ஒம்போதப்பர்கள் — தங்கள் ஆதர்ச எழுத்தாளர்களான எஸ்ரா, மபு இன்னபிறர்களிடம் இதைப் பற்றிச் சொல்லி, ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடுமோ?

நெடுஞ்சிங்கம், சிங்கமுத்தம், சிங்கெழுத்து, சிங்கபாண்டவம்  என்றெல்லாம் எனக்கு இன்றிரவுத் தூக்கத்தில் குதித்துக் கும்மியடித்துத் தட்டாமாலை சுற்றும் படுகோரக்கனாக்கள் வருமோ? பயமாகவே இருக்கிறது.

எஸ். ராமகிருஷ்ணன்,  தன்னுடைய இன்னொரு புத்தம்புதிய மகாமகோ நாவலை, இப்படி, தன் வாசகனுக்கு அறிமுகம் செய்வாரோ?

… … எண்ணற்ற உள்மடிப்புகள் கொண்ட சிங்கத்தின் குடலாகவும், குளிக்காத அற்புதத்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் சிங்கஞாயமம் பல நூறு ஆண்டுகளின் ஆலீஸின் அற்புத சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த ஜென் கவிதையினை எழுதுகிறது. தூரக்கீழ் மரபின் சிங்காபிமான சிங்கநேய வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ உலக சினிமா நீரோட்டங்களூம், திரைக்கதை வசனக் கூத்துகளும் ஊடாடிவரும் துணையெழுத்துக் காரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்ட இப்புனைவு எதார்த்தம், பதார்த்தம், புனைவு, வெங்காய சாம்பார் என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் கோரஅரைகுறைகளான என் இலக்கியங்கள், என் மொழிபெயர்ப்புச் சிதிலங்கள், கட்டுரைக் கண்றாவிகள் போன்ற மகத்தான வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் பாவப்பட்ட தமிழ வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும்  பரிதாபமாக விவரிக்கிறது… [1]

படுபீதியாக இருக்கிறது. :-((

-0-0-0-0-0-0-

காணொலியால் உணர்ச்சிவசப்பட்ட மனுஷ்யபுத்திரன் அவர்கள், தன்னுடைய பிரத்தியேக டுபுக்கவிதை கோடவுனிலிருந்து தன்னுடைய பழைய வார்த்தைக் குவியலை எடுத்து இன்னொரு சலிக்கவைக்கும் டெம்ப்லேட் மற்றொருவாக்கம் செய்து உலவ விட்டுவிடுவாரோ?

உதாரணத்திற்கு – மேதகு கவிஞ்ஜர் அவர்கள், இப்படி ஒரு கவிதை எழுதலாம்….

நற்சிங்கங்கள்

நல்வாழ்த்துக்கள்
நடுக்காட்டில்
யாரோ கைவிட்ட சிங்கத்தை
வீட்டுக்கு அழைத்து வரும்
யாரோ ஒருத்திக்கு

பராமரிக்க முடியாத சிங்கத்தை
விலங்கு காட்சியகத்தில் விட்டுவிட்டு
அந்தக் வளாகத்தை ஒரு கணம்
திரும்பிப் பார்க்கும் பெண்மகளுக்கு

நல்வாழ்த்துக்கள்
நிராதரவான காட்டில்
ஏதோ ஒரு சிங்கத்தின் வாலசைப்பிற்கு
வாகனத்தை நிறுத்தும்
யாரோ ஒருத்திக்கு

ஒரு உடையாத கம்பிக் கூண்டின்
கம்பியை வளைத்துடைக்க
நீண்ட நேரமாகப் போராடும்
சின்னஞ்சிறு சிங்கக் குழந்தைக்கு

ஏதேனும் ஒரு விலங்குக் காட்சியக வரிசையில்
எப்போதும்
நின்று கொண்டிருக்கும்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
சிங்கமற்ற வீட்டிற்குத்
தனியே திரும்பி வரும்
யாரோ ஒருத்திக்கு

ஒருத்தி உடம்பில் மாட்டிய புடவையை
நன்றாக இழுத்துப் பார்த்துவிட்டு
ஒரு கணம் தயங்கி அசிங்கம் என
யோசிப்பவனுக்கு

காடு திரும்பும் வழியை மறந்துவிட்ட
சிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும்

பழைய காடலரைத் தேடிச் செல்லும்
பழைய காடலர்
எவருக்கும்

நல்வாழ்த்துக்கள்
கைமறந்து வைத்த சிங்கத்தைத்
தேடிக்கொண்டிருக்கும்
எவருக்கும்

ஒரே கவிதையைமறுபடியும் மறுபடியும்
எழுதியேகாலத்தை ஓட்டலாம்
என நம்பும்
எந்த மகாமகோ கவிஞருக்கும்

நல்வாழ்த்துக்கள்
யாரோ ஒரு கந்தறகோளக் கவிஞரை
மன்னிக்கும் வாய்ப்புக் கிடைத்த
யாரோ ஒருவருக்கு

வாதையைத் தாங்கிக்கொள்ள
புதுப் புது வழிகள் கண்டுபிடிக்கும்
பாவப்பட்ட தமிழ்வாசகருக்கு

இந்தக் கவிதையைப் பொறுக்கவே முடியாது
எனப் பரிதாபமாகக் கூச்சலிடும்
ஒவ்வொருவருக்கும்

இந்தக் கவிதைக்கு
வெளியே சுகமாக இருக்கும்
எவருக்கும். [2]

-0-0-0-0-0-0-0-0-

மனதைத் தேற்றிக் கொள்ள முயல்கிறேன்….

சரி, போனால்போகட்டும் என்று, நம்முடைய செல்ல மனுஷ்யபுத்திர, எஸ். ராமகிருஷ்ணனாதிகளையே  கூட விட்டுவிடலாம். அவர்கள் என்னவேண்டுமானாலும் எழுதிக் கொள்ளட்டும்… ஆளை விட்டால்  சரி.

ஆனால்… இவர்கள் புல்லரிப்புக் கட்டுரைகளையும், கவிதைகளையும் படித்துவிட்டு புளகாங்கிதமடைந்து, மனவெழுச்சி பெற்று,  என்னுடைய செல்லக் கவிதாயினி ராக்ஷசபுத்திரி அவர்கள் – இன்னொரு படுகோரக் கவிதையை எழுதி  – அதனை நான் பதிப்பித்தே ஆகவேண்டுமென்று சொன்னால், என்னைக் கட்டாயப் படுத்தினால் – அய்யகோ, நான் என்ன தான் செய்வேன்! எங்கே போய் முட்டிக்கொள்வேன்… ( மனுஷ்யபுத்திரன்(புலி வேட்டை)=ராக்ஷசபுத்திரி(புளிக் கொட்டை) படித்தீர்களா?) :-(

அனாதரவாகத் தவிக்கும் என்னை யார்தான் காப்பாற்றப் போகிறார்கள்? :-((
-0-0-0-0-0-

[1] ஆதாரம்: எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘யாமம்’ நாவல் பற்றிய ஒரு குறிப்பு-ப்லர்ப்

[2] ஆதாவிஸ்கி: நல்வாழ்த்துகள் என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரிஜினல் வார்த்தைக் குவியல் இங்கே! கவிதை எங்கே?

 

7 Responses to “தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்திரனிடமோ அல்லது எஸ். ராமகிருஷ்ணனிடமோ ஒரு எழவையும் சொல்லி விடாதீர்கள்!  ப்ளீஸ்!!

  1. வி.அருண் குமார் Says:

    சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியான செருப்படி..

  2. ஆனந்தம் Says:

    பரமண்டலத்தில் இருக்கும் ராமசாமியே! இவர்கள் தாம் செய்த பிழையை அரிய மாட்டவே மாட்டார்கள். அதனால் தயவு செய்து அவர்களைப் போனால் போகிறதென்று விட்டுவிடும். ஆமென்!

  3. ஆனந்தம் Says:

    காணொளி என்று இருக்க வேண்டுமோ? அல்லது இதுவும் உங்கள் பகடியின் அங்கமா?

  4. ஆனந்தம் Says:

    கவிதை படித்து மண்டைகாய்ந்த
    எல்லாருக்கும்
    மண்டைகாய்ந்து கவிதை படித்த
    எல்லாருக்கும்
    நல்வாழ்த்துகள்
    கவிதை படித்து
    மண்டையும் காய்ந்தது போதாமல்
    பாயைப் பிறாண்டுபவர்களுக்கும்
    பிறாண்டப் பிறாண்டப்
    புதிதாகப் பாய்வாங்கித் தருகிறவர்களுக்கும்
    புதுப்பாயைக் கலையாமல்
    மடித்து வைக்கிறவர்களுக்கும்
    நல்வாழ்த்துகள்
    ஏற்கெனவே கவிதை படித்து
    மண்டை காய்ந்தவர்களைத்
    துரத்தித் துரத்திப்
    பதிவுபோடுபவருக்கும்
    எந்தப் பதிவானாலும்
    பின்னூட்டம் போட்டே தீரவேண்டுமென்று
    பிடிவாதம் பிடிக்கிறவருக்கும்
    பின்னூட்டத்துக்கு (விதியே என்று)உள்ளே இருக்கிறவர்களுக்கும்
    வேறு வழியில்லாமல்
    வெளியே இருக்கிறவர்களுக்கும்
    நல்வாழ்த்துகள்!!!

  5. Ramanan Says:

    படிக்க சிரிப்பாதான் இருக்கு……ஆனா…..

  6. Hema Ravi Says:

    Dear R
    செல்லக் கவிதாயினி ராக்ஷசபுத்திரி, எதிர்பார்கிறோம் .

    (எஸ் .ராமகிருஷ்ணன்னின், மனுஷ்யபுத்திரன் இவர்களின் மன சாட்சிதானே நீங்கள் ?)


  7. […] தயவுசெய்து, இதைப் பற்றி மனுஷ்யபுத்தி…30/09/2014 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s