போங்கடா, நீங்களும் ஒங்களோட அரெவேக்காட்டு அறச்சீற்றமும்…
September 2, 2014
அடுத்த பதிவுதான் இந்த வரிசையில் கடைசியாக இருக்கும் – என்னவோ இந்த எதிர்வினை ஹனுமார் வால்போல நீண்டுகொண்டே போகிறதே! ;-)
… ஆம்… விடாது நிசப்தக் கருப்பு… :-( ‘அங்க என்னம்மா சத்தம்?’ அலசல்(! – தேவையா??) தொடர்கிறது, பாவம் நீங்கள்.
எழுத்தாளர் இப்படித் தொடர்கிறார்:
” [ஸத்தாம் ஹுஸ்ஸெய்னை] கொன்றால் தொலையட்டும். ஒரு ஸ்திரமான அரசு அமைய உதவியதா? எந்தக் காலத்திலும் அதைச் செய்ய மாட்டார்கள். ஈராக் கதறிக் கொண்டேயிருப்பதுதான் அமெரிக்காவுக்கு நல்லது. இப்பொழுது அங்கே என்ன நடக்கிறது என்பதைத்தான் பார்க்கிறோமே.”
எழுத்தாளர்வாள் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை என்னால் எளிமையாகப் புரிந்துகொள்ள முடிந்துவிட்டது – அதாவது, மேலோட்டமாகச் செய்திகளை மேய்ந்து சல்லீசாக ‘நாம்’ எல்லாம் போட்டு, அவருடைய அறியாமைக் கும்பலில், தன் லைக்கடிச்சான் குஞ்சப்ப-வாசகர்கள் அனைவரையும் சேர்க்கிறார்! (அய்யய்யோ, என்னையுமேதான்! அடக்கடவுளே!!)
நான் இந்தப் பதிவுவரிசையை எழுதுவதற்கு முன்னர் அவரைப் பற்றி கோரமாக எதுவும் எழுதவேயில்லையே! ஏனிப்படி??
ஏனிப்படி இராக் கதறிகொண்டேயிருந்தால்தான் அமெரிக்காவுக்கு நல்லது? வழக்கமான ‘பெட்ரோல் தான் பிள்ளையா’ கதையா? சரியான தடாலடி கருத்துதிர்ப்புக்காரராக இருக்கிறாரே! துறையறியா உளறல்களுக்கும் ஒரு அளவு வேண்டாமா?
“ஈரானில் அணு ஆயுதம் இருப்பதாக ஆட்டையைக் கலைக்க முயன்றது. ஏதோ ஒரு புண்ணியவானால் சற்று அடங்கியிருக்கிறது.”
அய்யா அவர்கள் தம் நினைவிலிருந்து எத்தையோ எழுதுகிறார்… புண்ணியவான் யாரென்றும் சொல்லவில்லை – அவர் எழுத்தாளர் அவர்கள்தானோ?
ஆனால், அய்யா – அமெரிக்க-இரான் உறவுகள் சரியாகிக்கொண்டுதான் இருக்கின்றன. சென்றவருடமுடிவில் (2013 அக்டோபர்?) – இரானிய ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதியும் – முன்னவர் அமெரிக்கா சென்றிருந்தபோது பேச்சுவார்த்தைகள் (நேரடியாக அல்ல) நடத்தினர். இந்த இரண்டு தேசங்களுக்கிடையில் வர்த்தகமும் கொஞ்சம்போல ஜாம்ஜாமென நடந்துகொண்டுதான் இருக்கிறது – அமெரிக்கா தன் இறுக்கத்தைத் தளர்த்தினால் வருடந்தோறும் பலபத்து பில்லியன் டாலர்களுக்காவது இது நடக்கும். சில பிரச்சினைகளும் இருக்கின்றனதாம். ஆனால் – தேசங்களுக்கிடையில் போர்களைவிட, இக்காலங்களில் வர்த்தகத்துக்குத்தான் முதலிடம் என்பதை எழுத்தாளர் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன்.
அய்யா அவர்களின் “மேற்கு ஆசியா அமைதியாகிவிட்டாலும் அல்லது அவர்களுக்குள் ஒற்றுமை வந்துவிட்டாலும் தீர்க்கவே முடியாத தனது பெட்ரோல் பசியினால் அமெரிக்கா திண்டாடிவிடும்.” எனும் அரச்சீற்றச் சீறலை, சாபத்தை – நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை – முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
“அமெரிக்கா என்ன அமெரிக்கா? இந்தியாவுமே அப்படித்தான். வெகுகாலம் வரைக்கும் இந்தியா பாலஸ்தீனத்துக்கு நட்பாகத்தான் இருந்தது. இப்பொழுதுதான் ஜகா வாங்குகிறது. ‘நமக்கு இஸ்ரேலும் வேண்டும் பாலஸ்தீனமும்’ வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் பேசுகிறார். இந்தியா கமுக்கமாக ஒதுங்கிக் கொள்கிறது. மிகப்பெரிய ஆயுத பலவானான இஸ்ரேல் பாலஸ்தீனத்தை நசுக்கிக் கொண்டிருக்கும் போது எப்படி ‘எனக்கு இரண்டு பேருமே ஒன்றுதான்’ என்று சொல்ல முடியும் என்று தெரியவில்லை. ‘ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறோம். கொன்றுவிட்டு வா, தோளில் கை போட்டுக் கொள்கிறோம்’ என்பதுதான் அதில் இருக்கும் அர்த்தம்.”
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை ஐயம்திரிபற – அதுவும் மிக எளிமையாகப் புரிந்துகொண்டு – அதைவிடச் சுளுவான இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு வருகிறார். இவருடைய அறச்சீற்ற நகைச்சுவையால் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் எனக்குத் திணறல் அதிகமான காரணத்தால் – ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன். *லொக்* *லொக்* :-(
ஏமாந்தால், ஸவுத்ப்ளாக் விற்பன்னர்களுக்கு எல்லாம் கடுக்காய் கஷாயம் கொடுப்பார் போல!
“கமுக்கமாக ஒதுங்கிக்கொள்வது”: கண்டமேனிக்கும் கருத்துகளைக் கடாசி அடித்துவிட்டு, முப்பதுவார்த்தை/நிமிட வேகத்தில் நாறடித்து – அதற்குச் சில (பல கூட அல்ல) தர்க்கரீதியாக கேள்விகள் வந்தால் பதிலளிக்காமல் பதுங்குவதும் அதேதானே?
“சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு அமெரிக்காவின் தோள்களை இந்தியா பற்றிக் கொள்ளத் துவங்கியதிலிருந்தே தனது பாலஸ்தீன நட்பிலிருந்து சற்று விலகிக் கொண்டேயிருக்கிறது.”
ஸோவியத்யூனியனுடன் இந்தியா நட்பாக இருந்தபோதே – நம்நாடு, அமெரிக்க ஸிஐஏ-வுடன் இணைந்து பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் 1960களில் நடந்த திபெத் விவகாரங்கள் அடங்கும். ஸோவியத் யூனியனின் கேஜிபி + அமெரிக்க ஸிஐஏ இணைந்தும் கூட (நம்பவே முடியாத விதத்தில்) பல அதி ரகசியத் திட்டங்கள் நடந்திருக்கின்றன.
இதென்ன ஸோவியத் ரஷ்யா? ரஷ்யா ஸோவியத் யூனியனின் ஒரு அங்கம். அவ்வளவுதான். வலுக்கட்டாயமாக பல பகுதிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஸோவியத் யூனியன் – பிரச்சினைகள் தாங்கமுடியாமல் போனபோது பிரிந்தது. அவ்வளவுதான். இதில் என்ன எழவு சிதறுதல்? சிதறி எங்கே போயின ஸோவியத் யூனியனின் பிரிவுகள்?
அமெரிக்கத் தோள்களை கோர்பசேவிற்குப் பின் திடீரென்று இந்தியா பற்றிக்கொள்ளவெல்லாம் இல்லை – இது என்ன அற்ப கொச்சைத்தனம் – ஆனால் ஸோவியத் யூனியனின் பிரிக்கப்படல் என்பதற்கெல்லாம் வெகு முன்னமே அமெரிக்கா+இந்தியா வர்த்தக உறவில் (சில முக்கிய ராணுவத் தளவாடங்கள் தவிர்த்து) பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. உதாரணத்துக்கு இந்த பிஎல்480, ஒன்றுபோதும்.

அமெரிக்க ஜனாதிபதி லின்டன் ஜான்ஸன், நமது இந்திரா காந்தியுடன் மார்ச் 28, 1966 அன்று உரையாடுகின்றார். பாடுபொருள்: அமைதிக்காக உணவு திட்டப்படி, அமெரிக்க கோதுமை இந்தியாவை வந்தடைவதற்காகப் பேச்சுவார்த்தைகள். கறுப்பு-வெள்ளைப் படங்களின் ஆழமே அலாதிதான்!(https://s3.amazonaws.com/static.history.state.gov/milestones/pl-480.jpg)
இந்தியாவில் உணவுதானியங்கள் போதாமைப் பிரச்சினையை எதிர்கொள்ள அமெரிக்க அரசு நமக்கு அளித்த கடன் இந்த பிஎல்180-யில் அடங்கும்.
இன்னொன்று: இந்தியாவின் (இன்னமும் ஓரளவுக்கு மிக நன்றாகவே இயங்கும்) இந்தியத் தொழில் நுட்பக் கழகங்களின் முன்னோடிக் கட்டமைப்புகளிலும் – ஸோவியத் யூனியன் பங்கு பெற்ற அளவு, அமெரிக்காவும் பங்கு பெற்றிருக்கிறது.யூஎஸ்எஸ்ஆர் உதவியுடன் ஐஐடி-மும்பய் 1958 வாக்கில் செயல்படத் துவங்கியபோது, அமெரிக்க உதவியுடன் ஐஐடி-கான்பூர் 1959 வாக்கில் ஆரம்பித்தது.
பல தொழில்நுட்பக் கூட்டுறவுகளை, இதற்குச் சுட்டலாம்…
நிற்க, இந்தியாவின் பாலஸ்தீன நட்பால் – பாலஸ்தீனத்துக்கு நிறுவன ரீதியாக ஒரு பிரயோஜனமும் இல்லை, இந்தியாவுக்கும் சர்வ நிச்சயமாக ஒரு ஆதாயமும் இல்லை – ஒருகால் இங்கு இருந்திருக்கக் கூடிய மைனாரிட்டி வாக்குஅள்ளல் தொடர்பான கணக்குகள் தவிர; இந்தியாவின் பங்கு/நட்பு என்பது பெரும்பாலும்: ஐநா சபையில் தார்மீக ஆதரவு + தூதரக நடவடிக்கைகள் + மாணவர்களுக்கு உதவிகள் – அவ்வளவுதான். அவ்வப்போது, சில சமயம் தேவைக்கு அதிகமாகவே, நிதியும் அளிக்கப் படுகிறது. இவை அனைத்தும் இப்போதும் தொடர்கின்றன.
இந்த அழகில், என்ன எழவு ‘நட்பில் விலகல்’ ஏற்பட்டிருக்கிறது என்பதை நம் ‘திடீரெக்ஸ் இந்திய வெளியுறவுத் துறை விற்பன்னர்’ சொல்லமுடிந்தால் தேவலை!
“இப்பொழுது பூதாகரமாக்கப்பட்டிருக்கும் இந்தப்பிரச்சினையின் பின்னால் கூட ஒரு அரசியல் அல்லது வியாபாரம் இருக்கிறது என்கிறார்கள்.”
அடடா! ‘என்கிறார்கள்!‘ – ஆக மேலே எழுதப் பட்டிருக்கும் ஆசிரியரின் கருத்துகளுக்கும் அவருக்குமேகூட ஒரு சம்பந்தமும் இல்லை – எனத்தான் நாம் கருத வேண்டுமா? என்ன தருக்கப் பிரச்சினையப்பா இது!
“இஸ்ரேல்தான் அமெரிக்காவின் நண்பன். பாலஸ்தீனத்தோடு நட்பு பூண்டு என்ன பிரையோஜனம் என்ற நினைப்புதான். இஸ்ரேலிடம் நட்போடு இருந்தால் ஆயுதமாவது பேரம் பேசலாம். பாலஸ்தீனத்திடம் என்ன இருக்கிறது? செத்துக் கொண்டிருக்கும் சில்வண்டுகளைத் தவிர?”
பாலஸ்தீனத்தால் இந்தியாவுக்குப் பல விதங்களில் இக்கட்டுதான். ஆனால் இன்னொன்று – நமக்கு மிகத் தேவையான போது, இஸ்ரேல் உதவி செய்ததைப் போல வேறெந்த நாடும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். (கார்கில் சண்டை, விசேஷப் படையினரின் தளவாடங்கள், ஸிஜின்ட் வகையறா நுட்பங்கள்…)
அய்யா! வண்டுகளையாவது விட்டுவிடுங்கள் – அவற்றையும் ரைம் வகையறாவில் உபயோகித்து ரீங்காரம் செய்யவேண்டாமே! (ஒருவேளை அய்யா அவர்கள் ஒரு என்டொமாலஜிஸ்டுமோ? பயமாக இருக்கிறது!)
“உலகத்திலேயே ஆயுத விற்பனையின் மஹாராஜா இஸ்ரேல்தான். “
இது உண்மையானால் – உலகத்திலேயே தலைசிறந்த இலக்கியகர்த்தா நிசப்தம் புகழ் மணிகண்டன் அவர்கள்தாம்!
ஏன், நானும் வெட்கத்தை, தன்னடக்கத்தை விட்டுக் சொல்லுகிறேன் — உலகத்தின் ஒரே அரசியல் + இலக்கிய + இசை + திரைப்பட + அறிவியல், மருத்துவ, தொழில்நுட்ப மகாமகோ விமர்சகனும் நான் தான்! ;-)
… எப்படித்தான் இப்படிச் சந்தடிசாக்கில் மிக தைரியமாக அடித்துவிடுகிறாரோ, எனக்கு இந்த இழவு புரியவே மாட்டேனென்கிறது; எனக்கு இவ்வளவு வயதாகியும் இம்மாதிரி மனோவலிமை இல்லையே என நினைத்து உருகுவதைவிட வேறென்ன வழி… ;-)
எனக்கு இது மிக ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னுடைய மகாமகோ அறச்சீற்றப் பொங்கலில் யாரும் இதனைக் கண்டுகொள்ளமாட்டார்கள் என்கிற கணக்கோ என்ன கருமமோ…
“இப்பொழுது நடக்கும் பிரச்சினை கூட அதன் புதிய டெக்னாலஜியை உலகுக்கு விளம்பரம் செய்வதற்கான உத்திதானாம். Iron dome என்ற டெக்னாலஜி அது. எதிரி தேசத்திடமிருந்து வரும் ராக்கெட்களையும், ஏவுகணைகளையும் அது வரும் பாதையிலேயே கண்டுபிடித்து திருப்பி அடித்து அழிக்கும் நுட்பம். “
அடடே! இப்போது விளம்பரம், மார்க்கெட்டிங் போன்றவற்றில் விற்பன்னராகிவிட்டார், எழுத்தாளர்! ஒரு தமிழனால் முடியாதது எதுவுமில்லை என்பதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கிறார்.
… தமிழக் குளுவானிடம் ஒரு தட்டச்சு விசைப்பலகை + இன்டர்நெட் தொடர்பு கொடுத்தால் போதும் – அவனைத் தோற்கடிக்க ஆளேயில்லை… சுழன்றுச் சுழன்றுச் சூறாவளியாக அவன் விற்பன்னத்தனம் நான்கு திசைகளிலும் பேரோசையுடன் எழும்பும்தான்!
கந்தறகோளக் கருத்தியல் மீதேறி எளிமையான வார்த்தைச் சிலம்பமாடி சிந்தாந்த வெற்றிடங்களை சூடான வாயுக்களால் நிரப்பி கற்பனைக் கவசகுண்டலம் அணிந்துகொண்டு சமர் செய்ய நாம் புறப்பட்டால் – எதிரிகள் புறமுதுகு + புற உள்ளங்கால் வாங்கி ஓடிவிடமாட்டார்களா…
“அதற்காகத்தான் பாலஸ்தீனத்தை சீண்டி விடுவதும் அதனால் டென்ஷனான ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமிருக்கும் தீபாவளி ராக்கெட்டை வீசும் போது திருப்பி அடித்து ‘இது எப்படி இருக்கு?’ என்று உலகத்திடம் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்”
:-))))
September 2, 2014 at 18:16
திண்ணை இணைய இதழில் திரு. சின்னக்கருப்பன் அவர்கள் எழுதிய ஓரிரண்டு கட்டுரைகளைத்தவிர , தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் வா.மணிகண்டன் வகையிலான ஜல்லியடிகள்தான்…… தலையெழுத்து…….
http://puthu.thinnai.com/?p=25986
http://puthu.thinnai.com/?p=26307
September 2, 2014 at 20:35
\\\\\\\\\ “இஸ்ரேல்தான் அமெரிக்காவின் நண்பன். பாலஸ்தீனத்தோடு நட்பு பூண்டு என்ன பிரையோஜனம் என்ற நினைப்புதான். இஸ்ரேலிடம் நட்போடு இருந்தால் ஆயுதமாவது பேரம் பேசலாம். பாலஸ்தீனத்திடம் என்ன இருக்கிறது? செத்துக் கொண்டிருக்கும் சில்வண்டுகளைத் தவிர?”
பாலஸ்தீனத்தால் இந்தியாவுக்குப் பல விதங்களில் இக்கட்டுதான். ஆனால் இன்னொன்று – நமக்கு மிகத் தேவையான போது, இஸ்ரேல் உதவி செய்ததைப் போல வேறெந்த நாடும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். (கார்கில் சண்டை, விசேஷப் படையினரின் தளவாடங்கள், ஸிஜின்ட் வகையறா நுட்பங்கள்…) \\\\\\
ம்……… ஹிந்துஸ்தானத்துக்கு லாபமா நஷ்டமா என்று நீங்கள் பார்க்கிறீர்கள். ஆகவே உங்களுக்கு அறச்சீற்றம் இல்லை.
நுனிக்கிளையில் உக்காந்து அடிக்கிளையை வெட்டுவதன் மூலம் தன்னுடைய அரம் நல்ல கூறான அரம் என்று நிரூபிக்கிறார் பெல்நெக்கனார்.
பிள்ளையாரைப் பற்றியெல்லாம் எழுதி கலாய்ச்சிருக்காறாம்.
அதெல்லாம் போதாதுன்னு பகுத்தறிவு, (போண்டியாகிக் கொண்டிருக்கும்) த்ராவிட சித்தாந்தம் பற்றிய கவலைப் படல் என்றெல்லாம் பெல்நெக்கனாரின் சிந்தனை போகிக்கொண்டிருக்கிறது என கேழ்விப்பட்டேன்.
ம்……………..விடாது கருப்பு.
September 3, 2014 at 14:37
// நமக்கு மிகத் தேவையான போது, இஸ்ரேல் உதவி செய்ததைப் போல வேறெந்த நாடும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். (கார்கில் சண்டை, விசேஷப் படையினரின் தளவாடங்கள், ஸிஜின்ட் வகையறா நுட்பங்கள்…)//
அவர் பதிவு படித்த பொது நானும் இதை எண்ணினேன். நன்றி மறப்பது நன்றன்று என்பார்களே என எண்ணினேன்.