போங்கடா அநியாயவாதிகளா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு வாயோர நுரைதள்ளல்களும்…

September 4, 2014

இது  இவ்வரிசையில்  கடைசிப் பதிவு; இந்த வரிசையில். முதல் ஐந்து பதிவுகள் மேம்படுத்தப்பட்ட இந்த பக்கத்தில் இருக்கின்றன: போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)

நிசப்தக் கட்டுரையின் அலசலின் தொடர்ச்சியில் — எழுத்தாளரைத் தொடர்வோம்…

“இப்பொழுது நடக்கும் பிரச்சினை கூட அதன் புதிய டெக்னாலஜியை உலகுக்கு விளம்பரம் செய்வதற்கான உத்திதானாம். Iron dome என்ற டெக்னாலஜி அது. எதிரி தேசத்திடமிருந்து வரும் ராக்கெட்களையும், ஏவுகணைகளையும் அது வரும் பாதையிலேயே கண்டுபிடித்து திருப்பி அடித்து அழிக்கும் நுட்பம்.

 “அதற்காகத்தான் பாலஸ்தீனத்தை சீண்டி விடுவதும் அதனால் டென்ஷனான ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமிருக்கும் தீபாவளி ராக்கெட்டை வீசும் போது திருப்பி அடித்து ‘இது எப்படி இருக்கு?’ என்று உலகத்திடம் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்.

அய்யா அவர்கள் – ஹமஸ் அமைப்பினர் செலுத்தும் ஏவுகணைகளை ‘தீபாவளி ராக்கெட்’ என விவரித்திருக்கிறார்கள். ஆக, அவருக்கு தீபாவளி ராக்கெட் தொழில்நுட்பமும் தெரியாது என்பது நிரூபணம். ஏன் இப்படித் தன்  ‘ஒவ்வொரு துறையிலும் அறியாமை’யை மிக உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார் இந்த மனிதர்! *ப்ச*  :-(

உண்மையில், இந்த  ‘தீபாவளி’ ராக்கெட்டுகள் –  ரஷ்ய க்ரேத் (கத்யூஷா) ஏவுகணைகளின் வழிவந்தவை; நவீனமானவை.  காஸாவில் இருக்கும் ஹமஸ் அமைப்பினரின் – பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்ட செலுத்துவானிலிருந்து  – ஏறக்குறைய ஒரே சமயம் (ஒரு பத்துஇருபது வினாடிகளில்) 40 ராக்கெட்டுகளை தொடர்ந்து செலுத்தக் கூடியவை.

காஸாவில் இருந்து இவர்கள் 2006ஆம் வருடத்திலிருந்து – இஸ்ரேலை நோக்கி இதனைச் செலுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். பல சமயங்களில் – சிறார்கள் போகும் பள்ளிப் பேருந்துகளைக் குறிவைத்து…

இந்த அற்ப, விடுதலைப்புலித்தனமான கயமைத் தாக்குதல்களில் இருந்து மீள – இஸ்ரேலின் அரசு நிறுவனம் ஒன்று (இது ரஃபேல் – ஏறக்குறைய நம் டிஆர்டிஓ நிறுவனங்களுக்குச் சமானம்) ஆரம்பித்ததுதான் இந்த இரும்புக்கூடாரம் உருவாக்கும் திட்டம்.

இந்தப் புதிய இஸ்ரேலியத் தொழில் நுட்பம் –  ‘அயர்ன் டோம்’ இரும்புக்கூடாரம் (கும்மட்டம் என்பதை விட கூடாரம் என்பது சரியாகப் படுகிறது) –  2007ஆம் ஆண்டிலிருந்து முனையப்பட்டது. கடினமான, அதி நவீன ஆராய்ச்சியின் விளைவாகக் கடைசியில் 2011ஆம் ஆண்டில் வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டது இது. 2012 வாக்கில் அமெரிக்காவும் (அதன் ரேதியான் நிறுவனம் மூலமும், நேரடியாகவும்) இந்த இரும்புக்கூடாரத்தின் மேலதிக வளர்ச்சிக்கு நிதிப் பங்குதாரரானது.

அதே சமயம் – இந்தியாவும் இதனை வாங்குவதாக இருந்தது. பின்னர் இல்லையென்று ஆனது. மறுபடியும் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரும்புக்கூடாரத்தின் கூடவே டேவிட்-ன் கவண்டிவில் (டேவிட்’ஸ் ஸ்லிங்) எனும் தொழில் நுட்பமும் 2018-20 வாக்கில் நாம் வாங்க சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

  1. இஸ்ரேல் இந்தத் தொழில் நுட்பத்தை யாருக்கும் அலைந்து அலைந்து விற்க முனைவதில்லை; பல நாடுகளில் இருந்து வந்த வர்த்தக சாத்தியக் கூறுகளை அது தொடரவேயில்லை. பணம் கொடுப்பவர்களுக்கெல்லாம் விற்பதாக இல்லை. இஸ்ரேலுக்கு, அதன் தொழில் நுட்பங்கள் எங்கு, எப்படி உயோகப் படுகின்றன என்பது முக்கியம். அதற்கு – அதுவும் ரஃபேலின் கச்சிதமான தொழில்நுட்பத்திற்கு, ஒரு எழவு விளம்பர உத்தியும் தேவையேயில்லை.
  2. இது மூன்றுவருடம் ஆன தொழில் நுட்பம். புதியது அல்ல. பொதுவாக – வரும் செய்திகளையெல்லாம் படிக்காத நானே ஆறு வருடங்களாக இதனைப் பற்றி வரும் செய்திகளைப் படித்து வருகிறேன்.
  3. என்கிறார்கள்?” ஒப்புக் கொள்கிறேன். :-((  ‘அதுவாம்,’  ‘இதுவாம்,’  ‘அப்படியாம்,’  ‘என்கிறார்கள்,’  ‘சொன்னார்கள்’ என ஜூனியர்விகடன் கழுகு ஜந்துவின் மொழியில் – அண்டப்புளுகுகளை உருவாக்குவதும், கயமைப் பீலாக்களை பறக்கவிடுவதும், வதந்திகளுக்கு, அரைகுறைச் செய்திகளுக்கு அலங்காரம் செய்து பவனிக்கு அனுப்புவதும், வாசகக் குஞ்சாமணிகளின் பிரமிப்பை அறுவடை செய்வதும்  – நம் பப்பரப்பா பத்தி எழுத்தாளர்களுக்குக் கைவந்தகலை…
0-0-0-0-0-0
“சில நாடுகள் பில்லியன் டாலர்களைக் கொட்டி இந்த டெக்னாலஜியை விலைக்கு வாங்குவார்கள்.”

… அந்த நாடுகள் யாவை – தேவரீர் தாங்கள் இதனைத் தயவு செய்து எனக்குத் தெரிவிக்க முடியுமா – ஆவலாக இருக்கிறது. எப்போதிலிருந்து தாங்கள் – யுத்ததளவாட விற்பன்னராகவும் மாறினீர்? எனக்கு மயிர்க் கூச்செறிகிறது!

“சமீபத்திய பிரச்சினைக்கு அடிப்படையான காரணம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்களை ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்று கொன்றுவிட்டார்கள் என்று அறிவித்துவிட்டுத்தான் இந்தப் போரை இஸ்ரேல் தொடங்கியது. இது இஸ்ரேல் நடத்திய சதி என்றும் இது வல்லரசுகளால் பாலஸ்தீனத்தின் மீது திணிக்கப்பட்ட போர் என்று பாலஸ்தீன ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். “

என்ன அடிப்படைக் கயமை இது. காற்றோடு வந்த இஸ்ரேலுக்கு எதிராக வந்த செய்திகளை டமாரம் அடித்துவிட்டு – இப்போது நடக்கும் சண்டையின் மூலகாரணமான – ஹமஸ் நடத்திய இஸ்ரேலியச் சிறுவர்களின் அயோக்கியக் கொலைகளைக் கண்டுகொள்ளாமல் – இது மட்டும் ஏதோ வதந்தி போல, ஒரு திட்டமிட்ட சதி போல –  ‘பேசுகிறார்கள்’ என இவர் எழுதுகிறார்.

‘என்று அறிவித்து விட்டுத்தான்’ என்று எழுதும்போது – ஒருவேளை இந்த ஹமஸ் நடத்திய கொலைகள் நடந்திருக்காதுதான் எனும் அனுமானம் தொக்கி நிற்கிறது. அதாவது இஸ்ரேல், சும்மனாச்சிக்கும் சில கொலைகளை ஜோடித்து, அப்பாவி நிராயுதபாணி காஸாவுக்கு எதிராக  ஒரு நவீனப் போரை நடத்தி கொன்று குவிக்கிறது எனும் அபாண்டப் பொய்ச் சித்திரம்!

எனக்கு வெறுத்துவிட்டது. அவருடைய சத்தக் கட்டுரையின் அனைத்து உளறல்களையும் பொறுத்துக்கொண்டேன் – இந்த வரிக்கு வரும் வரை.  இந்த வரியின் தொனியில், வார்த்தைகளில் உள்ள அடிப்படை அயோக்கியத்தனம்தான் – என்னை இந்த எதிர்வினை வரிசைப் பதிவுகளை எழுதவைத்தது. இந்த அடிப்படை நேர்மையற்ற நிசப்தப் பதிவை, பிய்த்துக் கடாசவேண்டும் என்ற வெறி வந்தது.

-0-0-0-0-0-0-

“வெளிப்படையாகச் சொன்னால் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்தப் பிரச்சினையின் பத்து சதவீதம் கூட தெரியாது. இந்துத்துவம் பேசுபவர்கள் எல்லாம் இசுலாமியர்களுக்கு எதிரான இஸ்ரேலுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று ‘ஐ சப்போர்ட் இஸ்ரேல்’ என்று எழுதுவதும் இஸ்லாமியர்கள் எல்லோரும் தனது இனம் சித்ரவதைப்படுகிறது என ‘இஸ்ரேல் டவுன் டவுன்’ என்று பேசுவதும்தான் நடக்கிறது.”

தவறு. ஒரு எழவும்  தெரியாது என்பதுதான் சரி. எழுத்தாளரின் பதிவே இதற்கு ஒரு சாட்சியம்.  மேலதிகமாக – அவருக்கு இஸ்லாமித்துவம் என்றாலும் இந்துத்துவம் என்றாலும் யாமொன்றறியோம் பராபரமே என்பதும் வெள்ளிடைமலை!

எழுத்தாளர் எழுதுவதும் அரைகுறை ‘இஸ்ரேல் டவுன் டவுன்‘ பார்வையுடன் தானே? ஆனால் பாவம், இது அவருக்கே  தெரிந்திருக்காதோ?

இன்னொன்று: எனக்குத் தெரிந்தே ஹிந்துத்துவம் பேசும் பலர், இந்த விஷயத்தில் ஒரு கருத்துமே இல்லாமல் (ஆனால் எழுத்தாளரைப் போல அண்டப் பொய் புளுகாமல், பொய் சொல்லாமல்) இருக்கிறார்கள்; சிலர் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான ரீதியில் ஆதரவு கொடுக்கிறார்கள் – இது அவர்கள் தவறல்ல; அவர்களும் ஊடகங்களால் ஊட்டப் படுபவர்கள்தாமே!

ஆனால் அய்யா – ‘இனம்‘ எனும் கலைச்சொல்லை, தாங்கள் தாறுமாறாக உபயோகப் படுத்தவேண்டாம் எனத் தெண்டனிட்டு விஞ்ஞாபித்துக் கொள்கிறேன். அல்லது, ஒருக்கால்  – நீங்கள் மானுடச்சமூகவியலிலும் ஒரு விற்பன்னராக மாறிவிட்டீர்களா?

“மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம்.”

ஆஹா! ஆஹாஹா!! எனக்குப் புல்லரிப்பு இழவு நிற்கவே மாட்டேனென்கிறது. என்ன செய்ய… இப்படி ஒருவர் எழுதவேண்டுமென்றால் – அவர் ஒரு மதங்களைக் கடந்த, நிர்வாண நிலையை எட்டிய, த்ரிகாலமும் உணர்ந்த ஞானியாகத்தான்  இருக்கமுடியும்.

மதம் என்பது மனிதனால் கண்டெடுக்கப்பட்டு, நடத்தப்படும் ஒரு நிறுவனம். ஒரு நிறுவனத்துக்குரிய அனைத்துப் பண்புகளும் அதிலும் அடக்கம். ஆகவே பொத்தாம்பொதுவாக இதனைக் கரித்துக்கொட்டல், அரைகுறைப் புரிதல்களை ‘நிதர்சனம்‘ எனப் பவனி விடுதல் போன்றவற்றை மறு பரிசீலனை செய்யலாம்…

ஒரேயொரு எடுத்துக்காட்டாக –  இஸ்கான் (=’ஹரேராமா ஹரேக்ருஷ்ணா’ க்ருஷ்ணபக்தி இயக்கம் – ) நடத்தும் மகத்தான அன்னதான இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் பெயர் அக்ஷயபாத்ரா.

இது மதத்தின் அடிப்படையில் ஆரம்பித்து, தொடர்ந்து மகத்தான, அளப்பரிய சேவை செய்துவரும்  ஒரு திட்டம். மேலும், அது தான் நம்பும் மதத்தின் அடிப்படையில் அதன் ஆதரவை – குழந்தைகளுக்குப் பசியாற்றும் பணிமூலமாக நல்கும் திட்டம். இந்தியாவில் உள்ள பத்து மாநிலங்களில் உள்ள 10661 பள்ளிகளில் படிக்கும் 14 லட்சம் குழந்தைகளுக்கு – இலவச, ‘ஆர்கனிக்,’ சத்து நிறைந்த, சுவையான உணவு – அனுதினமும்… அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதுமில்லை.  நாங்கள் அது செய்கிறோம், இது செய்கிறோம், பள்ளிகளுக்கு உதவுகிறோம் என்றெல்லாம் குதித்துக் கும்மியடிப்பதில்லை.

மேலும் – பல முஸ்லீம் மதராஸாக்கள், முஸ்லீம்+க்றிஸ்தவ பள்ளிகளும் இதனால் மகத்தான பயன்பெறுகின்றன. (பெங்களூர்காரரான எழுத்தாளர் அய்யா – இதனை வெகு சுளுவாக சரி பார்க்கலாம். நான் இரண்டுமாதங்கள் முன் பெங்களூர் கமர்ஷியல் தெரு பக்கம் போயிருந்தபோது – ஹாஸ்பிடல் தெருவில் உள்ள ஒரு இஸ்லாமியப் பள்ளிக்கு (இது திவாரி உணவகம் பக்கத்தில் இருக்கிறது) அக்ஷயபாத்ரா வண்டி மதிய உணவு கொடுப்பதை நேரில் பார்த்தேன். பள்ளிக்குள் சென்று விசாரித்தபோது, அவர்கள் பள்ளியில் இது கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வருவதாகச் சொன்னார்கள். முகத்தில் நன்றியுணர்ச்சியும், மகிழ்ச்சியும்…

ஆம். மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதும் மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு மட்டுமல்ல – செயல்படுவதற்கும் அருகதை உள்ளவர்களாகிறோம்… பலர் இப்படிச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் நமக்கு மதம் என்பதன் நற்கூறுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது கேவலம். உள்ளுக்குள் எப்படி அற்பர்களாக நாம் இருந்தாலும், மதத்தை விமர்சிக்காவிட்டால் ஒரு மனிதவுரிமைக்காரனாக இல்லாமல் போய்விடுவோம் எனும் பயம் வேறு. எழுத்தாளரும் என்னதான் செய்வார், பாவம்.

மதங்களைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களில்லாமல் வினவுகாரர்கள் போலவே சிந்தித்தால்(!) விமோசனமே இல்லை.

நிற்க – இந்த மகத்தான நிசப்தக் கருத்துக்கு, நிசப்த தளத்தில் ஒரு குளுவான் இப்படி பின்னூட்டமிட்டிருந்தது:

மாடிப்படி மாது5:12 PM GMT+5:30 \\\ மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம் \\\\  பதிவு முழுவதும் நீங்கள் விவரமாக சொன்னதை இந்த ஒரே வரியில் சுலபமாக புரிய வைத்து விட்டீர்கள்!

மகா கோரம்! :-( வாசகனளவு உயரம் எழுத்தாளனா, அல்லது எழுத்தாளனின் அளவில் மட்டுமே வாசகனா என்று எனக்குப் புரியவில்லை…
-0-0-0-0-0-0-

“என்னவோ அரசியல் இருக்கட்டும். இந்தப் போரில் செத்துச் சுண்ணாம்பு ஆவதெல்லாம் பாலஸ்தீனிய பொதுமக்கள்தான். அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? மூன்று வயதில் பெற்றவர்களை இழக்கிறார்கள். உடல் உறுப்புக்களை பறிகொடுக்கிறார்கள். பார்வையை இழக்கிறார்கள். சொந்தங்களை விட்டுப் பிரிந்து தவிக்கிறார்கள். வீடுகளையும் உடமைகளையும் இழந்து பொதுவெளியில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பெற்றவர்களுக்கு இதைவிடவும் கொடுமை. தங்களது குழந்தைகள் கண் முன்னாலேயே சாவதை பார்க்கிறார்கள். பிள்ளைகளின் காயங்களுக்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களைச் சுற்றிலும் அத்தனை கொலைவெறி. அத்தனை வன்மம். அத்தனை காவு வாங்கும் அரசியல்.”

இலையுதிர்தல் போலல்லாத சாவுகள் எல்லாம் கோரம்தான். ஆனால் – இந்த சுண்ணாம்பு ஆதல், பித்ருசோகம், புத்திரபுத்திரிசோகம் – அனைத்தும் இஸ்ரேலின் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் (இதில் இஸ்ரேலி முஸ்லீம்களும், இஸ்ரேலி க்றிஸ்தவர்களும்  அடக்கம்) பொருந்தும்  – இவை – குறைந்த பட்சம் கடந்த 90 வருடங்களாக இந்த இஸ்ரேல்-பாலஸ்தீனப் பகுதியில் நடந்து வருவதை எழுத்தாளர் அறியவில்லை. அதற்கு இது சரியாகப் போயிற்று எனச் சொல்லவில்லை. ஆனால் ஒருதலைப்பட்சமான அற்பப் பொய்மைகள் எழுதப் படுவது முகத்தைச் சுளிக்க வைக்கிறது.

எப்படி இந்தச் சுற்று ஆரம்பித்தது (= ஹமஸ் செய்த படுஅநியாயக் கொலைகள்) என்பதை மறந்து விட்டு – அறிவுரை, அறச்சீற்றம், பொங்கல், படையல் எல்லாம் மிகச் சுளுவாகவே செய்யலாம்…

“ஆனால் ஒன்று- பெட்ரோலுக்காகவும், ஆயுத விற்பனைக்காவும், மதத்துக்காகவும் இன்னும் ஏதேதோ காரணத்திற்காகவும் குருட்டுவாக்கில் இஸ்ரேலை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் இந்தக் குழந்தைகளின் கதறலுக்கும் அப்பாவிகளின் கண்ணீருக்கும் ஏதாவதொரு பதிலைச் சொல்லியாக வேண்டும். இவர்களால் பதில் சொல்லவே முடியாது என்று நம்பலாம். பதில் சொல்ல முடியும் என்று யாராவது கையை உயர்த்தினால் சந்தோஷம். ஆனால் அந்தப் பதிலில் துளியாவது நேர்மையிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்.”

இந்த நிசப்தப் பதிவிலேயே மகாமகோ நகைச்சுவை – குறிப்பாக, முரண்நகை என்பது இந்தப் பகுதிதான்…

நம் செல்ல எழுத்தாளரும் தன் பதிவில் ‘துளியாவது நேர்மையிருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தால்‘ இந்தப் பதிவுகளையே நான் எழுதியிருக்கமாட்டேன்… :-(

நிசப்தமும் டன்னிங்-க்ரூகர் விளைவின் ஒரு பிரதிநிதிதான் என்பது விசனம் தருவது…

-0-0-0-0-0-

காஸாவுக்கு ஆதரவாக இரு, ஆனால் யூதர்களுக்கு எதிரியாக இருக்காதே – என மணியாக, பெரும்பாலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்க கட்டுரையை – ஒரு பாகிஸ்தானி இளம்பெண்(அரீபா கமல்) எழுதியிருக்கிறார். ஏனெனில், அவர் படிப்பறிவு பெற்றவரும், ஆழ்ந்து சிந்தித்துச் செயலாற்றுபவரும், காமாலைக் கண்ணில்லாதவரும்; ஆனால் நம் குளுவான் அரைகுறை அறச்சீற்ற எழுத்தாளர்களும் ‘படிப்பறிவு’ பெற்றவர்கள்தாம், ஆனால் பிற விஷயங்களில்தான் கொஞ்சம் சிரமம்… என ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன், வேறென்ன செய்ய…

-0-0-0-0-0-

கடைசியில் – இந்த அதிஅற்புத வெறுப்பியக் கட்டுரையை எப்படி முடிப்பது என்று எழுத்தாளருக்குத் தெரியவில்லை.

என்னமாதிரி கடைசி ‘பஞ்ச்‘ கொடுக்கலாம் எனக் குழப்பங்கள். ஆக, அவருடைய பிரச்சினைகளை நான் புரிந்துகொண்டபடிக்கு – இப்படி அவருடைய நைந்துபோன ‘டெம்ப்லேட்‘ எண்ணவோட்டங்கள் இருந்திருக்கலாம்…

  • ஏதாவது ஒரு ஜோக் போடலாமா?
  • எளிமையாக, உரையாடல் நடையில் ஒரு சிறு நிகழ்ச்சியை எழுதி, தன் பரப்பிய முயற்சியில் வாசகர்களை அவர்களுக்குக் தெரியாமல் அவமதிக்கலாமா?
  • ஒரு எதிர்மறைக் கருத்து சொல்லிவிட்டு ‘எதற்கு வம்பு?‘ என ஓடலாமா அல்லது
  • எக்கேடோ கெட்டுப் போகட்டும்‘ என விரக்தியாக இருக்கலாமா?
  • நம்மால் இதைத்தானே செய்யமுடியும்?‘ என ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாமா?
  • சொன்னா அடிக்கவருவாங்க‘ என்று அப்புராணியாக முடிக்கலாமா?
  • கேட்டால் உதைப்பார்கள்‘ எனக் கிண்டலாகப் பயப்படலாமா?
  • சரி, வேற வேலையப் பார்க்கலாமா?‘ என முடிக்கலாமா… இல்லாவிட்டால்,
  • இருந்துவிட்டுப் போகட்டும்‘  எனப் பெரியமனது பண்ணலாமா?
  • அல்லது   ‘தொலையட்டும், பரவாயில்லை‘ என விட்டுக்கொடுக்கலாமா?
  • அதுதான் சரி, அது இல்லாவிட்டால் கூடச் சரிதான்‘ எனும் அனுபூதிப் பார்வையை லூஸ்ல விடலாமா?
  • பொத்தாம்பொதுவாக ‘அதில் ஐந்து சதவிகிதம் கூட இது இல்லை‘ என்கிற ரீதியில் கணிதபூர்வமாக முக்கலாமா?
  • ஏன் தெரியுமா‘ எனும் மர்மமுடிச்சுப் பீடிகையுடன் இன்னொரு அற்ப பீலாவை அவிழ்த்துவிடலாமா?
  • பொதுவாக ஒருவருக்கும் ஒன்றுமே தெரியவில்லை‘ என்ற வகையில் மேலதிக அறியாமையை அலங்கோலமாக ஆடவிடலாமா?
  • இல்லை ஒரு அடிப்படை விழுமியம் சார்ந்த நேர்மை, கீர்மை எனப் பேசி வாசகனின் மனச்சாட்சிக்கு ‘அப்பீல்’ செய்து  முடிக்கலாமா?

ஹ்ம்ம்ம், பிரச்சினைகள், மகாமகோ பிரச்சினைகள்… எப்டீரா போராளிப்பேச்சுக் கச்சேரிய முடிக்கறது,  மத்யமாவதி பாட்றது… :-(

எழுத்தாளரும் என்னதான்  செய்வார், பாவம்.

-0-0-0-0-0-0-

ஆக – ஒரு ‘அதிர்ச்சி’ முடிவுக்காக – தன் மஞ்சள்காமாலை வெறுப்பியப் பார்வையை இப்படிக் காண்பிக்கிறார்…

“ஓவியக்கலைஞர் சந்தோஷ் நாராயணின் அஞ்ஞானச் சிறுகதை” எனும் ஒரு அற்பத்தனத்தைத் தேவைமெனக்கெட்டு, கடைசி ‘எஃபெக்ட்’ சமாச்சாரமாக நிசப்தம்காரர் பதித்திருக்கிறார்  – சிவப்பு நிறத்தில், என்ன ஒரு நிறத்தேர்வோ இது.  டேஞ்சர் சமாச்சாரமா?

‘அடோல்ஃப் ஹிட்லரை எரிச்ச பிறகு அந்த சாம்பல சின்னச் சின்ன மைக்ரோ கேப்சூல்ல அடச்சு நாஜிக்கள் குழு ஒண்ணு பத்திரமா பாதுகாத்துட்டு வருது தெரியுமா?’ என்றார் ப்ரொஃபசர் லர்ஹிட்.
ஆந்த்ரோ போலஜி மாணவனான சக்தி மேவாயைத் தடவினான்.  ‘இப்போ அது கிடைக்குமா’ என்றான்.
‘விற்பனைக்கே கிடைக்கும். ஆனா அது ஹை சீக்ரெட் அண்ட் கோடிக்கணக்குல விலை போகுது’ என்றார் ப்ரொஃபசர்.
‘யாராவது அதை வாங்கி இருக்காங்களா?’ 
‘ஆமா இரண்டாயிரத்துக்குப் பிறகு அதுல ஒண்ணு இந்தியாவுக்கு வந்ததாகவும் இன்னொண்ணு இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கு’
‘கடைசியா யாரு வாங்கினாங்க?’
‘இஸ்ரேல்’

இது நிச்சயம் ஒரு  காரிய-அஞ்ஞானிகளுக்கான அஞ்ஞானச் சிறுகதை என்பதில் சந்தேகம் ஒன்றுமே இல்லை. இந்த மேதகு சந்தோஷ் அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. அவருடைய ஓவியமும் எப்படியும் இந்த அரைகுறை இஷ்டைலில்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

… ஆனாலும், படுகொலை செய்யப்பட்ட யூத இனத்தையும், அப்படுகொலைகளின் காரணகர்த்தாவான ஹிட்லரையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் – யூதர்களும் ஹிட்லர்கள்தாம், ஆகவே அவர்கள் கொலை செய்யப்பட்டது சரியே எனத் தொக்கி நிற்கும் அயோக்கிய அரைகுறை வாதம் – மிக மிக அசிங்கமானதும், நேர்மையற்றதும், வக்கிரமனதினுடையதும்தான்.

அதற்குமேல் –  ஒரு முகாந்திரமும் இல்லாமல், இந்தியாவையும் இலங்கையையும் இதில் இழுத்திருப்பது சிறுமையிலும் சிறுமை. இப்படி, தவிட்டுக்குருவியால் கடவுளாக்கப்பட்ட, ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவர் குறிப்பிட்டு வன்மத்துடன் (அல்லது முட்டாள்தனத்துடன்?) எழுதுகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

இந்தியா அவ்வளவு ஹிட்லர் தனமான மோசக்கார, ஃபாஸ்ஷிஸ நாடு என்றால் தட்டச்சுக் குளுவான்களுக்கு – இதைவிட்டு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என – இல்லையேல் இருக்கவே இருக்கிறது மகாமகோ ஸவுதிஅரேபியா – போய் சந்தோஷமாக ‘ஸெட்டில்’ ஆகவேண்டியதுதானே?

-0-0-0-0-0-0-

சரி. … இம்மாதிரி அபாண்டமாகப் புழுதிவாரியிறைக்கும் நடவடிக்கைகள், அற்பத்தனமானவை என என் மிகைக்கோபப் புரிதல் இருந்தாலும் – இவையெல்லாம், குறிப்பாக, எழுத்தாளரது சத்தக்கட்டுரை – ஒரு கண நேர மூளைப்பிறழ்வால் நிகழ்ந்ததாக – ஆகவேதான் அரைவேக்காட்டுத்தனமாக இருப்பதாகக் கருதப் படத்தான் எனக்கு ஆசை. A momentary lapse of reason??

ஏனெனில் நானும் மிக நிறையவே இம்மாதிரி மூடத்தனங்களைச் செய்திருக்கிறேன். :-( (இந்த ஒத்திசைவு வலைதளத்தை ஆரம்பித்ததே அப்படிப்பட்ட ஒன்றுதான். என் தொடரும் மௌடீகம்தான்.)

ஏனெனில் – ‘மீட்சி’ – ரிடெம்ப்ஷன் எனும் கோட்பாட்டில் எனக்கு நம்பிக்கை அதிகம்.

இளைஞர் மணிகண்டன் மிக நன்றாகவே எழுதிக்கொண்டிருந்தார். நானும் அவர் எழுதுவதை அவ்வப்போது நேரம் கிடைக்கும் சமயத்தில் படித்துவந்தவன்தான். ஆனால், கடந்த இரு வருடங்களாக என்னவாயிற்று என்று எனக்குப் புரியவில்லை. எந்தப் புள்ளியில் இந்த சறுக்கல் ஆரம்பித்தது என்பதும்தான். ஆனாலும் அவர் மேலெழும்பி வர, வரும் காலங்களில் நல்ல கவிதைகளையும் மற்ற புனைவுகளையும் எழுதவேண்டும் என்பதுதான் அவா.

இருந்தாலும்,  இந்த நிசப்தம் பக்கம் போவது என்பது இனிமேல் எனக்கு ஏலாது. ஏனெனில் அவருடைய ஒவ்வொரு கட்டுரையையும் படிப்பதற்குத் தேவையான சமன நிலையோ, நகைச்சுவை உணர்ச்சியோ, பதிலுக்கு ஐந்தாறு  கட்டுரைகள் எழுதும் திராணியோ எனக்கு இல்லை.

ஹ்ம்ம்ம். ஆனால், யாரும் என்னை இம்மாதிரி கந்தறகோளங்களுக்கெல்லாம் எதிர்வினை தரச்சொல்லிக் கேட்கவில்லையானாலும் – சாதாரண சராசரித்தனம் அல்லது இரண்டும்கெட்டான்தனம் கூடப் பரவாயில்லை – இது மினுக்கிக் கொண்டிருக்கும் சராசரித்தனமாக, அறவுரை சொல்லும் கந்தறகோளமாக இருப்பதால் தான் எனக்குப் பிரச்சினை… இவற்றைப் படித்து ரத்த அழுத்தம் தலைக்கேறி — உடனே உட்கார்ந்து பதில் எழுத ஆரம்பித்துவிடுகிறேன். ஹ்ம்ம்ம்…

ஆனால், என்னைப் போன்ற ஒருவன் படிக்காததால்,  நஷ்டம் நிச்சயம் நிசப்தம்காரருக்கு அல்ல என்பதும் புரிகிறது… ஹ்ம்ம். Another One Bites the Dust. அவரவருக்கு அவருடைய தொழிலில் ஈடுபாடு. அவ்வளவுதான்.

சொன்னால் அடிக்கவருவார்கள். ஆம். ஆனால், அவர்கள் எப்படியோ தொலையட்டும்… ;-)

மன்னிக்கவும், கிண்டலைத் தவிர்க்க முடியவில்லை. :-(

சுபம்.

அறச்சீற்றத்துக்குப் பின் *நிசப்தம்*  – ஹ்ம்ம்

ஆமென்.

28 Responses to “போங்கடா அநியாயவாதிகளா, நீங்களும் ஒங்களோட இஸ்ரேல் எதிர்ப்பு வாயோர நுரைதள்ளல்களும்…”

  1. nparamasivam1951 Says:

    //இன்னொன்று: எனக்குத் தெரிந்தே ஹிந்துத்துவம் பேசும் பலர், இந்த விஷயத்தில் ஒரு கருத்துமே இல்லாமல் (ஆனால் எழுத்தாளரைப் போல அண்டப் பொய் புளுகாமல், பொய் சொல்லாமல்) இருக்கிறார்கள்; சிலர் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான ரீதியில் ஆதரவு கொடுக்கிறார்கள் – இது அவர்கள் தவறல்ல; அவர்களும் ஊடகங்களால் ஊட்டப் படுபவர்கள்தாமே!//
    இது தான் உண்மை நிலவரம். நமக்கு கிடைக்கும் ஊடகச்செய்திகள் மூலம் தான் நமது எண்ணம் இருக்கும்

    நீங்கள் குறிப்பிட்ட அறீபா கமல் மிக நன்றாக குறிப்பிட்டுள்ளார். //At the end of the day, any kind of faith is beautiful. There is plenty of room in our world and in our minds for several religions to coexist peacefully even as we remain secure in our respective set of beliefs.//

    உங்கள் பதிவின் மூலம் இந்த சண்டை பற்றி siridhu
    அறிந்து .கொண்டேன். நன்றி.

  2. சரவணன் Says:

    // ஒரேயொரு எடுத்துக்காட்டாக – இஸ்கான் (=’ஹரேராமா ஹரேக்ருஷ்ணா’ க்ருஷ்ணபக்தி இயக்கம் – ) நடத்தும் மகத்தான அன்னதான இயக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் பெயர் அக்ஷயபாத்ரா. ///

    பேஷாகக் கேள்விப்பட்டிருக்கிறோமே! அவர்களது பள்ளிகளில் (அமெரிக்காவிலும் இந்தியாவிலும்) பல தசாப்தங்கள் தொடர்ந்து நடந்துவந்த குழந்தைகள் மீதான உடல்-மன-பாலியல் ரீதியான அத்துமீறல்களையும்கூட! இப்போது அதெல்லாம் நடப்பதில்லை ‘என்கிறார்கள்’. ஆண்டவனுக்கே வெளிச்சம்..

    இஸ்கான் = ஹரேராமா ஹரேக்ருஷ்ணா’ க்ருஷ்ணபக்தி சைல்ட் அப்யூஸ் பண்ணிய இயக்கம். இலவச சாப்பாடு போட்டுவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமா?

    • சரவணன் Says:

      கடைசிப் பாராவை இப்படித் திருத்திக்கொள்ளவும்:

      இஸ்கான் = ஹரேராமா ஹரேக்ருஷ்ணா’ க்ருஷ்ணபக்தி சைல்ட் அப்யூஸ் பண்ணிய இயக்கம். இலவச சாப்பாடு போட்டுவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமா?

      • சரவணன் Says:

        அவ்… கடைசிப் பாராவை இப்படித் திருத்திக்கொள்ளவும்:

        இஸ்கான் = ஹரேராமா ஹரேக்ருஷ்ணா’ க்ருஷ்ணபக்தி சைல்ட் அப்யூஸ் பண்ணிய இயக்கம். இலவச சாப்பாடு போட்டுவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுமா?


      • அய்யா சரவணன் – உங்களுக்கு அக்கப்போரென்றால் (என்னைப் போல) மிகவும் பிடிக்கிறது. ;-)

        ஆனால் – இணைய வதந்திகளுக்கும் பப்பரப்பாக்களுக்கும் அளவுக்கு மீறி மரியாதை தருகிறீர்களே! சந்தோஷம்.

        என்னுடைய தூரத்து உறவினர் ஒருவர் பையனும் தன் ‘இஞ்சினீயரிங்’ கஞ்சினீயரிங் படித்துமுடித்துக்கொண்டிருக்கும் சமயம் இஸ்கான் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் (கொல்கொத்தா) சேர்ந்தான். பெற்றோருக்கு இது பிடிக்கவில்லை. பையனுக்கு சந்யாசியாகிவிடத்தான் ஆசை. ஆனால் – பெற்றோர்கள், சில சிபிஎம் குண்டர்களுடன் சேர்ந்து – அவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துவந்து மூளைச் சலவை செய்து – அவனை நடைப்பிணமாக ஆக்கிவிட்டவுடன் (தினமும், மிகஅதிகமாக மாற்றிமாற்றி அன்டி டிப்ரெஸ்ஸென்ட்ஸ், தூக்கமாத்திரைகள் மயம்) – இஸ்கான் ஆட்கள் வழக்கு போடுவோம் என்று சொன்னவுடன் – இவர்கள் இஸ்கானில் ஹோமோஸெக்ஷுவலாக அந்தப் பையனை கட்டாயப் படுத்தினார்கள் என்று கட்டுக்கதை கட்டினார்கள்.

        கொஞ்சம் பொலீஸ் கிலீஸ் என்றெல்லாம் சுற்றி – இந்த அயோக்கியத்தனம் கடைசியில் அமைதியானது.

        நல்லவேளை, அந்தக் காலத்தில் அற்பச்சிகரங்களான ஸன் டீவி, என்டிடிவி போன்றவையெல்லாம் இல்லை.

        ஆனால் – இது பற்றியெல்லாம் அந்தக்கால மூன்றாம்தர பப்பரப்பா பத்திரிகையான இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஒரு அரைகுறைச் செய்தியை வெளியிட்டிருந்தது.

        பலவருடம் கழிந்து அந்தப் பையன் அமெரிக்கா போய் சமர்த்தாக ‘ஸெட்டில்’ ஆகி விட்டான். ஆனால் – இஸ்கான் மீது தீராத அவப்பெயர்.

        இம்மாதிரி இன்னும் இரண்டு பெங்களூர் கேஸ்களை நான் அறிவேன். இம்மூன்றும் பொய்கள்.

        இப்போதும் வதந்திபரப்புபவர்கள் இருக்கிறார்கள். நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்லும் ஞானவான்களும் இருக்கிறார்கள்.

        நான் அறிந்த வரையில் – இஸ்கான் ஆட்கள் – நம்முடைய கழுதைத்தனமாக முத்திரைகுத்தும் பார்வையில், ‘கிறுக்கர்களாக’ இருக்கலாம். ஒரு சில சிறு தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் அவர்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

        ஆனால் – வதந்தி பரப்புபவர்களுக்கு விஷயங்கள் மிகவும் எளிது. மற்ற பக்கவாத்தியக் காரர்கள் கூட வந்து ஒத்துஊதும் பாங்கும் இருக்கிறது.

        இப்பூவுலகில் அனைத்தும் இனியன.

      • சரவணன் Says:

        கல்கத்தா, பெங்களூர் கேஸ்கள் பற்றிச் சொல்கிறீர்கள். அமெரிக்காவில் பல சம்பவங்கள் உள்ளன.

        இஸ்கான் தவறுகளைத் திருத்திக்கொள்ள முயல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் முந்தைய சம்பவங்கள் பப்பரப்பா ஊடகக் கதைகள் அல்ல என்பது மட்டும் உண்மை. இஸ்கான் தானே தனது சொந்தப் பிரசுரத்தில் இவற்றை ஒப்புக்கொண்டுள்ளது என்று (இது கொஞ்சம் ஆச்சரியமானது என்றும்கூட) இந்தச் செய்தி சொல்கிறது; தவறுகளுக்கான காரணங்களைக்கூட அவர்களே ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனாலும் குளியல் தொட்டியில் ஒரு மாணவி படுக்க வைக்கப்பட்டது உட்பட நிகழ்ச்சிகள் நடந்தது உண்மையே. (அவர் இப்போது தன் குழந்தையை இஸ்கானுக்கே அனுப்பவதாகச் சொல்லப்படுகிறது.)

        இருந்தாலும் இஸ்கான் என்றால் ஒவ்வாமை ஏற்படத்தான் செய்கிறது.

      • க்ருஷ்ணகுமார் Says:

        புனித ரெவ ரெண்டு தெரசாள் என்ன தான் போதைப்பொருள் கடத்துபவர்களிடமிருந்து தனம் சேகரம் செய்து சேவை செய்தாலும்………….

        நோயாளிகளை தமது சேவா க்ருஹங்களில் அடைத்து………….வலிநிவாரணிகள் கொடுப்பதற்குப்பதில்………. அல்லேலூயா ப்ரார்த்தனைகளே செய்திருந்தாலும் சரி…………………

        நடுத்தெருவில் நாய்களும் பெருச்சாளிகளும் குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு மனித உயிரை குதறி எடுப்பதற்குப் பதிலாக ……………..

        தமது சேவா க்ருஹங்களில் வேளைக்கு வேளை ஆஹாரங்கள் அளித்து மனிதனாக இறக்க வழிவகை செய்த தொண்டு தொண்டாகத் தான் மதிக்கப்படும்………… ஒருவர் செய்யும் தொண்டில் நிச்சயம் ஆயிரம் குறை காணலாம்……….

        ஆனால் நாம் என்ன தொண்டு செய்கிறோம் நம்மால் சமூஹத்துக்கு என்ன பயன் என்று நமக்கு தோன்றினாலேயே ஜாதி மதங்கள் கடந்து மனித சமூஹம் மேன்மை பெறும்.

        இஸ்கான் காரர்கள் குற்றங்களே செய்திருந்தாலும் வயிறு வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் இடும் அன்னம் விழலுக்கு இறைத்த நீர் எக்காலும் ஆகாது. சரவணனுக்கு பசி என்றால் என்ன என்று தெரிந்தால்………….. பசியாற அன்னம் உண்ட வயிற்றுக்கு கிடைத்த த்ருப்தி என்ன என்று ஒருக்கால் புரியலாம்.

        பாலியல் குற்றங்கள் இஸ்கான் செய்தாலும் குற்றம் தான் பாத்ரிமார் செய்தாலும் குற்றம் தான். சேவைகள் இஸ்கான் செய்தாலும் சேவை தான் பாத்ரிமார் செய்தாலும் சேவை தான்.

        இந்த மதவாதிக்கழிசடைகள் ஒரு புறம் இருக்கட்டும். புர்ச்சிக்காரர்கள் செய்வது என்ன?

        ஓஹ்……………புர்ச்சிக் காரர்களுக்கு பசியைப் பற்றி கோஷம் தானே போடத் தெரியும்………….

        பசித்த வயிற்றுக்கு புசிக்க வழி செய்யவா தெரியும்?

  3. க்ருஷ்ணகுமார் Says:

    ராம்,

    பாட்டெழுதிப்பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் என்றாலும் குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் புலவர்களையும் கொண்டது இந்தத்தாய்த் தமிழகம் அல்லவா

    \\\ பிஎஸ்வீரப்பா(“சபாஷ், சரியான போட்டி!”) \\\

    என்ன ஒரு இறுமாப்பு………

    இது வரை இந்த வ்யாசத்திற்கு எனது மற்றும் உங்களது பேரன்பிற்குரிய பெருந்தகை ஸ்ரீமான் பூவண்ணன் மஹாசயர் அவர்கள் உரலாயுத பாணியாகவோ அல்லது நிராயுத பாணியாகவோ வராங்காட்டியும் கூட………… இந்த வ்யாசத்தை விவாதிக்கிறேன் பேர்வழி என்று கோத்ரத்தைப்பற்றி ரெண்டு வரி, மாட்டுக்கறி பற்றி ரெண்டுவரி, நரேந்த்ரபாய் மோதி பற்றி ரெண்டு வரி எழுதி உங்கள் வ்யாசத்தை மங்களாசாஸனம் செய்யாத போதே……………..சபாஷ் சரியான போட்டி………… என்று சொல்ல வேண்டுமானால் என்ன இறுமாப்பு………….

    உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
    இடுக்கண் களைவதாம் நட்பு

    என்று ஸ்ரீமான் பூவண்ணன் மஹாசயர் அவர்கள் உரலாயுத சஹிதமோ அல்லது நிராயுதமாகவோ இங்கு ஆவிர்ப்பாவம் ஆகவில்லையென்றால் இந்த போட்டி சரியான போட்டியில்லை என்று உளமாற சபிக்கிறேன். ஸ்ரீமான் பூவண்ணன் அவர்கள் வந்து 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலஹம் ஹிந்து சீக்கியர் கலஹம் என்று காமெடி செய்தால் தான் இந்த வ்யாசம் சாபல்யமாகும் என்றும் உபசாபம் ஆகக்கடவது.

    \\\ எனத் தெண்டனிட்டு விஞ்ஞாபித்துக் கொள்கிறேன். \\\\

    ம்ஹும்………. தெண்டனிட்டு விக்ஞாபித்துக் கொள்கிறேன்.

    \\\ மன்னிக்கவும், கிண்டலைத் தவிர்க்க முடியவில்லை. :-(
    சுபம்.
    அறச்சீற்றத்துக்குப் பின் *நிசப்தம்* – ஹ்ம்ம்…
    ஆமென். \\\\\\

    க்ஷமிக்கவும்.

    சுண்டலைத் தவிர்க்க முடியவில்லை.

    ஊசிப்போன நிசப்த மொண்ணை அரச் சீற்ற சுண்டல் சாப்பிட்ட பின் *நிசப்தம்* எப்படி இருக்கும்

    பஞ்ச ப்ராணன்களும் ஏகத்துக்கு டென்ஷன் ஆகி ஒரே த்வாரத்தின் வாயிலாக வெளியேற முனைந்து படாரென வெளிபோந்து

    பெருஞ்சப்தமே எழும்

    அசுபம்.

    பி.கு :- ஸ்ரீமான் பூவண்ணன் மஹாசயர் அவர்கள்……… நிராயுத பாணியாக………. பஹுகாலம்…. ஃபேஸ்புக்கில்…… பீவண்ணன் என்று வசவிடுபவர்கள் மத்தியில் மட்டிலும்…….. பகுத்தறிவு ப்ரசாரம் செய்வது என்று பெரியார் நாமத்தால் ப்ரதிக்ஞை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. எதுக்கும் பழையபடிக்கு ஸ்பேம் ஃபோல்டரை ஒருதபா பார்த்து விடவும். எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும்னு யார் கண்டது.

  4. Venkatesan Says:

    “விமர்சனம் மீதே விமர்சனம் செய்யறியா, நீ இன்னா படிச்சிருக்க” என திட்டுவீர்களோ என பயந்தாலும், விமர்சனம் மீது விமர்சனம் செய்து விடுவோம்.

    சிக்கலான இந்தப் பிரச்சனை பற்றி ஒழுங்காக தெரிந்துகொள்ள அக்கறையின்றி, ஒருதலைப் பட்சமாய் அறச்சீற்றம் காட்டி கட்டுரை எழுதி இருக்கிறார் என்ற விமர்சனம் நியாயமானது என எண்ணுகிறேன்.

    ஆனால், இந்த விமர்சனத்தை வரிக்கு வரி வசைகளால் நிரப்பாமல், இப்பிரச்சனை தொடர்பான சரியான தகவல்களை, தகுந்த ஆதாரங்களோடு எழுதி அத்துடன் நிறுத்தி இருந்தால் இதை விட தாக்கம் மிகுந்ததாய் அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆழமாக சிந்தித்து ஆதாரங்களோடு எழுதப்படும் கருத்துக்கள், வசைகளை விட வலிமையானவை அன்றோ?

    // என்னவோ அரசியல் இருக்கட்டும். இந்தப் போரில் செத்துச் சுண்ணாம்பு ஆவதெல்லாம் பாலஸ்தீனிய பொதுமக்கள்தான். அந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? மூன்று வயதில் பெற்றவர்களை இழக்கிறார்கள். உடல் உறுப்புக்களை பறிகொடுக்கிறார்கள். பார்வையை இழக்கிறார்கள். சொந்தங்களை விட்டுப் பிரிந்து தவிக்கிறார்கள். வீடுகளையும் உடமைகளையும் இழந்து பொதுவெளியில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். பெற்றவர்களுக்கு இதைவிடவும் கொடுமை. தங்களது குழந்தைகள் கண் முன்னாலேயே சாவதை பார்க்கிறார்கள். பிள்ளைகளின் காயங்களுக்கு மருந்தில்லாமல் தவிக்கிறார்கள். //

    இது நியாயமான வருத்தம் தானே?

    ஹமாஸ் அடிப்பதால், இஸ்ரேல் திருப்பி அடிக்கிறது என்றால், இப்படியா மரண அடி அடிப்பது? நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கையை சேர்ந்த ஒரு தீவிரவாத இயக்கம் கொன்றது என்பதற்காக, கொழும்பு நகர் மீது இந்தியா அணுகுண்டு வீசினால் சரியாக இருக்குமா? இஸ்லாமியர்களில் சில தீவிரவாதிகள் மார்கெட்டில் குண்டு வைக்கிறார்கள் என்பதால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளை ராணுவம் கொண்டு அழித்துவிடலாமா?

    “தீபாவளி ராக்கெட்”. ஹமாஸ் ஆட்களிடம் இருக்கும் ராணுவ உபகரணங்களுக்கும், இஸ்ரேல் ராணுவ பலத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டுமா? பின்னவர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லும் போது, முன்னவர்களால் பத்துக் கணக்கில் தானே கொல்ல முடிகிறது. இதைத்தானே “தீபாவளி ராக்கெட்” எனச் சுட்டுகிறார்? ‘மனிதர்களுக்குள் காந்தி இமயம் போன்றவர்’ என்றால், ‘நீ இமயமலையை பாத்திருக்கியா’ என்றா கேட்பது? இப்படி கறார்தனம் காட்டினால் எதை பற்றியும் பேச முடியாது. “நா ய்” என்ற வார்த்தையை உபயோக்கும் முன் நான்கு வருடம் விலங்கியல் படிக்க வேண்டி வருமல்லவா?

    // மதத்தின் அடிப்படையில் நமது ஆதரவு அமையும் போதே மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லாத சில்லரைகள் ஆகிவிடுகிறோம் என்பதுதான் நிதர்சனம் //

    இந்தப் பிரச்சனையில் எதுவும் ஆராயாமல் வெறும் மத ரீதியாக கருத்து உருவாக்கிக் கொள்வது தவறு என்றுதானே சொல்கிறார்? “நான் இந்து, பாலஸ்தீனர்கள் முஸ்லீம், அவங்க சாகட்டும்” என்றோ, “நான் முஸ்லீம், இஸ்ரேலியர்கள் சாகட்டும்” என்றோ நினைப்பது தவறேன்றுதானே சொல்கிறார்? இது சரி தானே. இது பொதுவாக மதம் பற்றிய கருத்தாக தெரியவில்லை.

    பொதுவில், உங்கள் கருத்துக்களுக்கு எதிரான கருத்து கொண்டிருப்போரை மட்டுமே போட்டுத் தாக்குகிறீர்கள். ஆதரவு கருத்து கொண்டிருப்போரை கண்டு கொள்வதில்லை. நாலைந்து மாதங்களுக்கு முன்பு, “மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா நரகம் ஆகும்” என நான் கருத்து சொல்லி இருந்தால், “உனக்கு மோடி பற்றி என்ன தெரியும், அரசியல் பற்றி என்ன தெரியும், நரகத்தை பாத்திருக்கியா” என குடைந்திருப்பீர்கள். மாறாக, மோடி ஆட்சிக்கு வந்தால் இந்திய சொர்க்கபுரியாகும்” என நான் கருத்து சொல்லி இருந்தால், கேள்விகள் ஏதுமின்றி, “Bang on!” என்ற ரீதியில் தட்டிக் கொடுத்து முடித்திருப்பீர்கள். ஒருவன் ஒரு விஷயம் பற்றி கருத்து சொல்லும் முன் அது பற்றி எந்தளவு ஆய்ந்து அறிந்திருக்க வேண்டும் என்ற நியதியானது , அவன் எந்த விதக் கருத்து சொல்கிறான் சொல்கிறான் என்பதை வைத்தே நிர்ணயிக்கிறீர்கள். இது சரிதானா?

  5. Raghavan Raman. Says:

    அன்புள்ள ராமசாமி,

    ” வாசகனளவு உயரம் எழுத்தாளனா, அல்லது எழுத்தாளனின் அளவில் மட்டுமே வாசகனா என்று எனக்குப் புரியவில்லை…”
    இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? எழுத்தாளர் வாசகனளவு மட்டத்திற்கு சமன் ஆகி விடுவார். ரிச்சர்ட் டாகின்ஸ் வாசகனும் வாசகன்தான்; ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ் வாசகனும் வாசகன்தான்.

    “என்னைப் போன்ற ஒருவன் படிக்காததால், நஷ்டம் நிச்சயம் நிசப்தம்காரருக்கு அல்ல என்பதும் புரிகிறது…”
    உண்மைதான். இருந்தாலும்,
    ” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.”
    நீங்கள் இடித்துவிட்டிர்கள். மறந்து விட்டேன் …. மேலே சுட்டிய குறளை ‘பெரியாரைத் துணைக்கோடல்’ அதிகாரத்தின்கீழ் வள்ளுவனார் இயம்புகிறார்.

    ராகவன் ராமன்.

  6. Raghavan Raman. Says:

    நண்பர் வெங்கடேசன் அவர்களே –
    ” சிக்கலான இந்தப் பிரச்சனை பற்றி ஒழுங்காக தெரிந்துகொள்ள அக்கறையின்றி, ஒருதலைப் பட்சமாய் அறச்சீற்றம் காட்டி கட்டுரை எழுதி இருக்கிறார் என்ற விமர்சனம் நியாயமானது என எண்ணுகிறேன்.”
    மேற்கூறியவாறு தாங்களே ஒப்புக்கொண்ட பிறகு மேலதிகம் தாங்கள் பின்னூடம் இட்டது ஏன் என்று விளங்கவில்லை.
    நானும் மணிகண்டன் அவர்களது வாசகன்தான். வாசிப்பது மட்டுமல்ல, பின்னூட்டங்களும் இடுபவன்.
    நண்பர் ராமசாமி அவர்கள் வசை பாடவில்லை. பின்னிப் படல் எடுத்துள்ளார் என்பது உண்மை. இதைக் கண்டு நான் வியக்கவும் இல்லை. நானும் சில வருடங்களுக்கு முன் மத சார்புள்ள இடுகைகளை இப்படி வருக்கு வரி பின்னியவனே. ( சுட்டி தரவில்லை. அது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது).
    மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்; ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் மக்கள் l வாழும் பகுத்திக்குச் செலுத்தப்பட்டன. அதற்கெல்லாம் அறச்சீற்றம் வரவில்லையே?
    ஹமாஸ் என்பது ஒரு அரசாங்கம். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அந்த அரசாங்கம் அண்டை நாட்டைத் தாக்கும்போது மறு தாக்குதலை எதிர்பார்த்தே செய்கிறது. இதில் நாமெல்லாம் விவாதிக்க ஒன்றுமே இல்லை.
    ஹமாஸ் அரசாங்கம் தனது குடிமக்கள் சாவைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. இடைக்கால போர் நிறுத்தங்களையும் மதிக்கவில்லை. இப்போது, 2,000 அரபியரின் சாவுக்குப் பிறகு மூன்ற்ரம் நாள் முன்வைத்த அதே நிபந்தனைகளுக்கு இடைக்கால போர் நிறுத்தம் செய்துள்ளது. இப்படிப்பட்ட மூட அரசுக்கு எதிராக அறச்சீற்றம் எங்கே?

    ராகவன் ராமன்.


    • அன்புள்ள ராகவன் ராமன் – நீங்கள் ஏன் இந்த காஸா-இஸ்ரேல் விவகாரம் பற்றி விலாவாரியாக எழுதக் கூடாது?

      உங்களால் எழுத முடியுமென்றால், அதனை பதிவு செய்ய அனுமதிப்பீர்கள் என்றால் – அதை இங்கு சந்தோஷமாகப் பிரசுரிப்பேன். (என்ன – சுமார் 100 பேர் அதனைப் படிக்கலாம்; ஆனால் ஆழமான கருத்துகள் இணையத்தில் ஆவணப்படுத்தப்பட்டால் – அவை கொஞ்சம்கொஞ்சமாக சரியான ஆட்களைப் போய்ச்சேரும் சாத்தியக்கூறுகள் அதிகம்)

      நீங்கள் அதனை ‘தமிழ் பேப்பர்’ போன்ற தளங்களுக்கு அனுப்பினாலும் நல்லதுதான்.

      சரியான விஷயங்கள், பார்வைகள் – நிச்சயம் நம் மக்களைப் போய்ச் சேரவேண்டும் என்பது முக்கியம்.

      நன்றி.

  7. Anonymous Says:

    //// இங்கு அடுத்தவர்கள் பேசுவது பற்றியும் எழுதுவது பற்றியும் அவர்கள் செய்வதைப் பற்றியும் நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அடுத்தவர்களின் செய்கைகளைப் பற்றி பேசத் துவங்குவது ஒருவகையிலான மனநோயின் ஆரம்பப்படி. இங்கு பலருக்கும் அந்த நோய் இருக்கிறது. அதைத் தொடங்கிவிட்டால் பிறகு அது இல்லாமல் நம்மால் இருக்கவே முடியாது. http://www.nisaptham.com/2014/09/blog-post_3.html

    mr mani is rt. u r mad. sycho jealosy. you think you and jemo are the only rt ppl? will u attack jemo? he also writes everyday.

    onakum apadikkara nalu varum. sycho

    • muthu Says:

      அனானி,
      உங்களுக்கும் உங்க நிசப்த அரைகுறை எழுத்தாளனுக்கும் உங்கள் தவறுகளை சுட்டிக்காட்டினா கோவம், எரிச்சல், ஆங்காரம் எல்லாம் பொத்துக்கினு வருது…என்ன செய்வது? அரைகுறைய அரைகுறைன்னுதான் சொல்ல வேண்டியிருக்கிறது…தெனமும் எழுதுற எல்லாரும் ஒன்னா ? ஜேசுதாசும் பாடுறாரு…கழுதையும் பாடுது..ரெண்டும் ஒன்னா ?..

      //அடுத்தவர்களின் செய்கைகளைப் பற்றி பேசத் துவங்குவது ஒருவகையிலான மனநோயின் ஆரம்பப்படி. //

      இந்த சப்தன் குப்பை கவிதைகளை பதிப்பித்த மனுஷ்யபுத்திரன் -ல ஆரம்பிச்சு எல்லார் செய்கைகளையும் நன்றி கேட்ட விதமா பேசியாச்சு..மனநோய் வைத்தியம் தேவை..

      இந்த ரணகளத்துலேயும் அந்த சப்தன் ஜெமோ-வ விமரிசனம் செஞ்சு ஒரு கட்டுரை…என்ன அருகதை?
      ஜெமோ கடவுளல்ல ..ஆனால் தமிழ் சிந்தனை பரப்பில் ஒரு மாபெரும் இருப்பு..ஆளுமை….முகவரி இல்லாதவன் கூட அவரை விமரிசனம் செய்யலாம்…குறைந்த பட்சம் தெளிந்த சிந்தனை அவசியம்…சப்தன் சிந்தனை வீச்சு அவன் அடுத்த தெருவை தாண்டாது …

      அந்த சப்தன் கிட்ட சொல்லுங்க “எழுத்தாளன்” ஆக முதல் படி மிடில் கிளாஸ் மனநிலையை விட்டு வெளியில் வருவது, அல்லது அதை குறைந்தபட்சம் எழுத்தில் காட்டாமல் இருப்பது…

      உதாரணமாக “நமக்கென்ன?”, சொன்னால் நம்மை உதைக்க வருவார்கள்”, குடுக்கலாம்னு பாத்தேன், பையில காசு இல்ல”, “என்னாலேல்லாம் முடியாது”, இப்படி பெரும்பாலான கட்டுரைகளை முடிப்பது மஞ்ச மாக்கான்களின் வழக்கம்…மஞ்ச மாக்கான்கள் ஒரு நாளும் எழுத்தாளன் ஆக இயலாது..

  8. Benhur Erode Says:

    //இந்த விமர்சனத்தை வரிக்கு வரி வசைகளால் நிரப்பாமல், இப்பிரச்சனை தொடர்பான சரியான தகவல்களை, தகுந்த ஆதாரங்களோடு எழுதி அத்துடன் நிறுத்தி இருந்தால் இதை விட தாக்கம் மிகுந்ததாய் அமைந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஆழமாக சிந்தித்து ஆதாரங்களோடு எழுதப்படும் கருத்துக்கள், வசைகளை விட வலிமையானவை அன்றோ?// I second it.

  9. Raghavan Raman. Says:

    திரு வெ. ராமசாமி அவர்களுக்கு,

    இஸ்ரேல்- காசா + மேற்குக்கரை பிரச்சினைகளைப் பற்றி எழுத முயற்சிக்கிறேன். ஏற்கெனவே கூறியபடி, நிதானமாகவே பதிவுகள் இட முடியும். தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும்.
    முதலில் நான் எழுத நினைக்கும் கருத்தை ஒரு சுருக்கமாக எழுதி அனுப்புகிறேன். தாங்கள் விருப்பபட்டால் அதை அப்படியோவோ அல்லது விமர்சங்களுடனோ வெளியிடலாம். சுருக்கம் சரி என்று ஆன பிறகு விரிவாக எழுதலாம்.
    என்னைப் பொருட்படுத்தி கேட்டதற்கு நன்றி.

    அன்புடன் ராகவன் ராமன்.

    • nparamasivam1951 Says:

      திரு வெ.ராமசாமி மற்றும் திரு ராகவன் ராமன் அவர்களுக்கு,
      உங்கள் கூட்டணி மாபெரும் கூட்டணியாக வெற்றி பெரும். இருவரும் இணைந்து இந்த இஸ்ரேல்-காசா-மேற்குக்கரை-கோலன்மலை-சூயெஸ் குறித்து எழுதினால் இது குறித்து குழப்ப நிலையில் உள்ள என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்கள் தெளிவடைய முடியும். ஒத்திசைவில் இது குறித்து அறிவிப்பு எதிர்பார்க்கிறேன்.


      • /*ஆயிரக்கணக்கான வாசகர்கள்*/

        அய்யய்யோ! உங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு நன்றி.

        ஆனால் மாபெரும் கூட்டணி கீட்டணி என்றெல்லாம் சொல்லி, மிகை எதிர்பார்ப்புகள் வைக்க வேண்டாமே!

        மாறாக நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள் என்றால் அது வரவேற்கத்தக்கதே. (எப்படியும் அது இலுப்பைப்பூ சர்க்கரையாக இளித்துக்கொண்டு பவனி வராது என்றுதான் என் எதிர்பார்ப்பு. பார்க்கலாம்.)

  10. thumbi Says:

    //இந்த வேலைகள் எல்லாம் பாக்கியிருக்கின்றன. இப்படி எத்தனையோ உருப்படியான காரியங்கள் இருக்கின்றன. வங்கிக் கணக்கு வந்தவுடன் முதல் பதிவை எழுதுகிறேன். அதுவரைக்கும் ப்ரேக். நன்றி.//http://www.nisaptham.com/2014/09/blog-post_3.html

    —>>>>>> அய்யா ‘தும்பி,’

    நீங்கள் எதற்கு அந்த நிசப்தப் பதிவின் ஒரு பகுதியை பின்னூட்டமாகப் போட்டிருக்கிறீர்கள் எனப் புரியவில்லை.

    ஆனால், பரவாயில்லை.

    __​​ரா.

  11. poovannan73 Says:

    Its a pleasure to the see the masks of gandhian being peeled off from hindutwawallahs where they cannot tolerate the support for palestinians.All criticisms against manikandan and the venom spewed against his writings equally apply for gandhis views on palestine too.
    Mahatma gandhi had been far more supportive of palestinians even when israel was nowhere near the current era in committing atrocities/killings and jews being persecuted by aryan supremacist hitler.

    http://www.countercurrents.org/pa-gandhi170903.htm

    They will find the world opinion in their favor in their religious aspiration. There are hundreds of ways of reasoning with the Arabs, if they will only discard the help of the British bayonet. As it is, they are co-sharers with the British in despoiling a people who have done no wrong to them. I am not defending the Arab excesses. I wish they had chosen the way of non-violence in resisting what they rightly regarded as an unwarrantable encroachment upon their country. But according to the accepted canons of right and wrong, nothing can be said against the Arab resistance in the face of overwhelming odds.

  12. poovannan73 Says:

    கிருஷ்ணகுமார் சார்

    உங்கள் ஆசையை கெடுப்பானேன்.சுப்ரமணிய சுவாமி த்விட்டேரில் நான் காஷ்யப கோத்திரம் ,காஷ்மீர் மீது அங்கு பிறந்து வளர்ந்தவர்களை விட எனக்கு உரிமை அதிகம் என்று கூறி இருக்கிறார்.
    அவரை போல கஷ்யப கோத்திரத்தில் பிறந்த அனைவரும் காஷ்மீரில் வாழ வேண்டும் என்று தனக்கு ஆதரவாக உள்ள அரசுகளின் அதிகாரத்தை பயன்படுத்தி அங்கு கஷ்யப கோத்திரகாரர்கள் பெருமளவில் குடி பெயர்ந்தால்,பல்வேறு மாநிலங்களில்,நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு குடியமர்த்த பட்டால் எப்படி இருக்குமோ அப்படி உருவானது தான் இஸ்ரேல்.

    ஆர்யன் திராவிடன்(புது பெயர்களான ASI ANI ) எல்லாம் பொய்,இந்தியாவில், அகண்ட BHAARATHATHIL அனைவரும் ஒரே மதத்தை பின்பற்றியவர்கள்,ஒரே மொழியை பேசியவர்கள், அயோத்தியா தான் ராமர் பிறந்த இடம்,ராமர் சேது ராமரும் அணிலும் சேர்ந்து கட்டிய பாலம் எனபது தான் நேர்மையின் ,நடுநிலைமையின் சிகரங்களான ,ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மட்டுமே வாதிடும் ஹிந்டுத்வர்களின் வாதம்.
    அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்த ராமர்பால,அயோத்தி உண்மைகளோடு யூதர்களின் தொலைந்துபோன கதைகளை,ஜெஹோவா கதைகளை ஏற்றுகொள்கிறார்கள் போலும்.ஆனால் ஆள்கிடைக்கவில்லை என்று யூதர்கள் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள பழங்குடிகள் வரைவந்து விட்டார்கள்.அடுத்து பலிகடாக்களுக்காக எந்த மாநிலத்தில் கைவைக்க போகிறார்களோ.
    வடிவேலு நானும் ரௌடி தான் என்று வேனில் ஏறி கொள்வது போல ஹிந்டுத்வர்கள் இஸ்ரேல ஆதரவு என்று கூறுவது சிரிப்பை வரவழைக்கும் நிகழ்வு .கிருத்துவ நாடுகளின் ஆதரவு தான் இஸ்ரேல் உருவாக ,இன்றும் வலுவாக பாலேஸ்தினியார்களின் மீது அடக்குமுறைகளை அளவின்றி நடத்த முக்கிய காரணம்.

  13. poovannan73 Says:

    counter current என்று கொடுத்த சுட்டியை பழிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் உரலாண்ட்வர் உதவியுடன் காந்தியவாதிகளின் சுட்டிகள்

    காந்தி தாத்தா இஸ்ரேல் பாலேச்தீனியார்கள் என்று புகுந்து விளையாடி இருக்கிறார். ஆயிரக்கணக்கில் யூதர்கள் நண்பர்கள்/அவரை மிகவும் மதிப்பவர்களாக இருந்தாலும் terrorist என்று இஸ்ரேல் யூதர்களை சொல்லதயங்கவில்லை

    http://www.gandhiserve.org/information/writings_online/articles/gandhi_jews_palestine.html#%27The%20Jews%27,%20by%20Gandhi%20-%20From%20Harijan,%20November%2026,%201938

    Interview to Reuter, by Gandhi – From Harijan, May 18, 1947

    What is the solution to the Palestine problem?

    It has become a problem which is almost insoluble. If I were a Jew, I would tell them: “Don`t be so silly as to resort to terrorism, because you simply damage your own case which otherwise would be a proper case.” If it is just political hankering then I think there is no value in it. Why should they hanker after Palestine? They are a great race and have great gifts. I have lived with the Jews many years in South Africa. If it is a religious longing then surely terrorism has no place. They should meet the Arabs, make friends with them, and not depend on British aid or American aid or any aid, save what descends from Jehovah.

    Answer to Question by United Press of America, by Gandhi – From The Bombay Chronicle, June 2, 1947

    What do you feel is the most acceptable solution to the Palestine problem?

    The abandonment wholly by the Jews of terrorism and other forms of violence.

  14. poovannan73 Says:

    ?தாய் மதம் திரும்பும் விளையாட்டுக்களை சங்க பரிவாரங்கள் இஸ்ரேல் ராபிக்களிடம் தான் கற்று கொண்டார்களோ.இஸ்ரேல் அரசுக்குஎதிராக எவ்வளவு அநியாயமாக நாட்டை பற்றிதுளிகூட கவலைப்படாத UPA அரசு நடந்து கொண்டு இருக்கிறது.

    இஸ்ரேலுக்கு ஆதரவான சங்க பரிவாரத்தினர் தங்களில் ஒருவரான மோடிஜியின் முழு ஆதரவுடன் இஸ்ரேல் குஜராத்தில்,ராஜஸ்தானில்,தமிழ்நாட்டில் யாரை ,எந்த சாதிகளை எல்லாம் ஜெஹோவாவின் தொலைந்து போனவர்கள் என்று அறிவித்து அழைக்கிறதோ அவர்களை தாய் மதம் திரும்ப ,இஸ்ரேல் அனுப்ப உதவி புரியலாம்.

    http://en.wikipedia.org/wiki/Bnei_Menashe

    In September 2005, a task force from the Rabbinic Court travelled to India to complete conversion for a group of 218 Bnei Menashe. India expressed strong concern to Israel about the mass conversions, saying its laws prohibit such action. It wants to avoid proselytizing and religious conflicts in its diverse society. In November 2005, the Israeli government withdrew the team of the Rabbinic Court from India because of its strained relations with India.

    Some Bnei Menashe supporters said that Israeli officials failed to explain to the Indian government that the rabbis were not proselytising, but formalizing the conversions of Bnei Menashe who had already accepted Judaism. Some Hindu groups criticised the Indian government, saying that it took Christian complaints about another faith proselytizing more seriously than theirs. They have complained for years about Christian missionaries recruiting their members without receiving any governmental response.[43]

    In July 2006, Israeli Immigration Absorption Minister Zeev Boim said that the 218 Bnei Menashe who had completed their conversions would be allowed to enter the country, but “first the government must decide what its policy will be towards those who have yet to (formally) convert.”[4


    • Ah, Poovannan dear! You are back!

      The return and re-run of the prodigal, delights me no end.

      I love it when the noise levels go up in the comments section, It is a prompt for me to move on to the next post!

      Thanks for all the tickle and mirth. Oh the joy.

      _r.

  15. gopi Says:

    http://www.bloomberg.com/news/2014-09-10/45-year-high-u-s-oil-output-may-cut-pump-price-imports.html
    for that writer us is supporting israel for oil.us will overtake saudi arabia next year in oil production.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s