கணிதமேதை ராமானுஜன், ரேம்போனுஜன் ஆன கதை!
August 8, 2014
ஆ இரா ‘சலபதி’ வெங்கடாசலபதி, ஸ்ரீ வெங்கடேஸம் மனஸா ஸ்மராமி…
இன்றுதான் ‘சலபதி’ அவர்கள் நாளைய ‘தமிழ் ஹிந்து’ தினசரியில் எழுதிய ராமானுஜன் பற்றிய கட்டுரையைப் படித்தேன். இன்புற்றேன்.
இதன் ஒரு பகுதியை உங்களுக்கு அவசரம்அவசரமாக, தப்பும்தவறுமாக ‘இந்திய இணைய வரலாற்றிலேயே முதல்முறையாக டட்டடா டட்டடாவாக அளிப்பதில்’ பெருமையடைகிறேன்: எனக்கு எப்போதுமே ‘யாம் பெற்ற அக்கப்போரு பெறுக இவ்வையகம்’தான்.
கணிதமேதை ராமானுசன் ஒரு ஆயுதம் தாங்கிய புரட்சியாளனாகவும்[0] இருந்தது யாருக்குத் தெரியும்? :-(
“பொதுவாக, நமக்கு வரலாறு என்பதைப் பற்றிச் சரியான புரிதல்கள் இல்லை. அதுவும் ஆதிக்க சாதிகளின் வரலாறு என்பதன் அடியோட்டங்களை, ஊற்றுக்கண்களை நாம் கொஞ்சம்கூட அறியாமல் – கிளிப்பிள்ளைகள் போல அவர்கள் எழுதுவதைச் சரியென்று நம்பி விடுகின்றோம்.
“உதாரணமாக – கணிதம், அறிவியல் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்கள் மேல், ஆதிக்க சாதியினர்தான் என்றும், இவர்களுக்கும் வன்முறைக்கும் ஒரு தொடர்புமில்லை, இவர்கள் அறவழியின் பாற்பட்டு நின்று மனிதவாழ்வின் அடிப்படை விழுமியங்களைக் காப்பவர்கள்தான் என்றும் தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கிறோம்.
“ஆனால் நடப்பதென்னவோ – இவர்கள் எந்தத் தொழிலிலும் சிறந்து விளங்குவதில்லை என்ற நிதர்சன உண்மைதான். அதேசமயம் – இவர்களுடைய இன்னொரு பக்கமான கோரவன்முறை என்பது ஜமுக்காளத்திற்கு அடியில் பெருக்கித் தள்ளப் படும். [1]
“இதற்கு ஒரு எடுத்துக்காட்டு: ராமானுசன் எனும் துறைமுக குமாஸ்தா ஒரு கணிதமேதை எனப் பரப்புரை செய்யப் பட்டது. அது மட்டுமல்ல, அவர் ஒரு வன்முறையாளக் குண்டர் எனும் உண்மையினை நாம் பரிசீலிக்க மறுப்பது.
0000000000
“சுமார் ஒரு நூறாண்டுகள் முன்பாக, நான் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய ஆவணப் பாதுகாப்பகத்தில் 20 வருடங்களைச் செலவு செய்து – எப்படி ஆரியம் வீரியம் கொண்டு எழுந்து தமிழகத்தின் லெமூரியக் காலத்திலிருந்தே திராவிடத்தை நசுக்கிக் கொண்டிருக்கிறது என்பதை – கடந்த முன்னூறு ஆண்டுகளாகத் தங்கள் கண்களால் பார்த்து ப்ரிட்டிசு காலனிய விற்பன்னர்கள் கை ஓயாமல் எழுதிவைத்த குறிப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தேன். அச்சமயம் தற்செயலாக சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
“… நிற்க, காப்பியின் வரலாற்றையே அந்தக் காலத்தில் அது நடக்கநடக்கப் பின்னிப்பின்னிச் சுளுக்கெடுத்த[2] எனக்கு, தமிழ் இலக்கியத்தின் வரலாற்றைக் கரைத்துக் குடித்து வெந்து தணிந்த எனக்கு கணிதத்தின் வரலாற்றையும் ஊறுகாய் போல ‘தொட்டுக்கொண்டு’ சாப்பிடுவது என்பது முடியாத விசயமா என்ன? கணிதத்தை சுவாசிக்கும் மேதமைக்கும், விளிம்பு நிலை நாசவேலைக் காரர்களுக்கும் உள்ள காத்திரமான உறவை நுட்பமாக அறியத் தெரியாதா என்ன?
“ஆகவே, 1882ஆம் வருடத்திலேயே (1 ஏப்ரல் அன்று) நான் இந்த விஷயத்தைப் பற்றி ‘ல மாண்ட்’ எனும் ப்ரெஞ்சு பத்திரிகையில் எழுதியிருக்கிறேன்.
“[ஒரு குறிப்பு: இந்த ‘ல மாண்ட்’ பத்திரிகையையே சாருநிவேதிதா அவர்கள்தாம்[3] மட்டித் தமிழர்களுக்கு, சென்ற 17ஆம் நூற்றாண்டிலேயே அறிமுகப் படுத்தினார் என அவரே கூறிக்கொண்டாலும் அதற்கு முன்னரே அந்தப் பத்திரிகை ஆசிரியராகவே நான் இருந்தது அவருக்குத் தெரியாது பாவம். இது விஷயமாக இன்னொரு ஆராய்ச்சிக் கட்டுரையை மறைமலையடிகள் நூலகத்தில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று ஆய்ந்தறிந்து பின்னர் லண்டன் சென்று அதனைப் பதிப்பிக்கலாம் என எண்ணம்.]
“ராமானுசம் ஆய்ந்ததாகச் சொல்லப்படும் எண்கோட்பாடு[4] என்பதே ஒரு மட்டரகமான புனைவு. இதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு மணிநேரம் கூடப் பிடிக்கவில்லை. இந்த ‘கணிதமேதை’ ராமானுசம் – நோட்டுப் புத்தகம் நோட்டுப் புத்தகமாகக் கிறுக்கி வைத்திருப்பதையெல்லாம் இந்த கணிதவியலாளர்கள் ஆகாஓகோ எனப் புகழ்வதெற்கெல்லாம் காரணம், பின்னவர்களும் ஆதிக்க சாதிக்காரர்களே!
“… ஆக, எப்படி இந்திய சுதந்திரத்துக்காக போரிட்ட தீவிரவாதிகளுடன் அணி சேர்ந்து நாசவேலைகளில் ராமானுசன் (1887-1920) ஈடுபட்டார் என்பதையும் சென்னைக்கு அந்தப் பக்கத்திலிருந்த பாண்டிச்சேரியில் தங்கியிருந்த அரவிந்த கோசு (1872-1950), அல்லாடிக் கொண்டிருந்த சுப்ரமணிய பாரதி (1882 -1921) போன்றோரிடம் அவருக்கு இருந்த புரட்சிகரத் தோழமையைப் பற்றியும் என்னுடைய கட்டுரையில் எழுதியிருந்தேன். (வருடங்களைப் பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும்; சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 140 கிமீதான்; அந்தக் காலத்தில் ஈசிஆர் இல்லையென்றாலும் – இந்த வன்முறைக் கும்பல் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பயணம் செய்து அநியாயமாக ப்ரிட்டிசுகாரர்களைத் துரத்த, சாதாரண சாலைகள் இருந்திருக்கும்தானே! இது பற்றிய ஒரு கல்வெட்டு, வடநெம்மேலி அருகிலுள்ள க்ரொகொடைல் பேங்க் (இது ஒரு பன்னாட்டு வங்கி) வளாகத்திலுள்ளே[5] இருக்கிறது)
“ராமானுசனின் நோட்டுப் புத்தகங்களில் உள்ள கோழிக் கிறுக்கல்கள், என்னுடைய நுணுக்கமான ஆராய்ச்சியாளப் பார்வையில் – வன்முறைத் திட்டங்களைப் பற்றிய பரிபாடையாக விரிந்ததும் ஒரு பெரிய கண்டுபிடிப்பு. இதற்காக எனக்கு நொபெல் பரிசு இல்லாவிட்டாலும் ஒரு ஃபீல்ட்சு பதக்கமாவது கொடுக்கப் படவேண்டும்.“… ஆனால், என்னுடைய மிகமுக்கியமான இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, அந்த வேலைவெட்டியற்ற அமெரிக்க கணிதக்காரர் ப்ரூசு ப்ரென்டு என்பார், சான் மற்றும் சாங் எனும் சீன ஆய்வாளர்களுடம் அணிசேர்ந்து “Ramanujan’s association with radicals in India ” என ஒரு ஆய்வறிக்கையை [6] – வெட்கமேயில்லாமல், என் பெயரைக் குறிப்பிடாமல் எழுதியிருக்கிறார். இது தகுமா?
….
….“ஆக, ராமானுசன் ஒரு கணிதமேதையல்லர் – ஒரு வெட்டி குண்டர் தான் என்பதை நாம் எப்போதுதான் உணரப் போகிறோம்??
அடிக்குறிப்புகள்:
[0] Radical
[1] ‘வில் பீ சுவெப்டு அன்டர் தி கார்ப்பெட்டு’
[2] ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ – எனும் ஆயோதிஆய்வுக் கட்டுரைட் டொகுப்பு.
[3] ‘ல மாண்ட்’ அல்ல ‘லு மோந்த்’ என்பதுதான் சரியான உச்சரிப்பு. சாரு நிவேதிதாவின் உச்சரிப்பு சரியில்லை.
[4] நம்பர் தியரி – இதை உபயோகப் படுத்தித்தான் நம்பராலசி எனும் பண்டமிழ் சோதிட முறையொன்று அக்காலத்தில் புழக்கத்திலிருந்தது என ரோசாமுத்தையா நூலகத்தில் உட்கார்ந்து ஆய்வு செய்து ஈபிடபிள்யு[7] பத்திரிகையில் பதிப்பித்திருக்கிறேன்.
[5] இந்த வங்கியின் உயர் அதிகாரி – ரோமுலஸ் விட்டேகர் என்பவர்தான் ரோமாபுரி நகரத்தை, தன் இரட்டைச் சகோதரர் ரீமஸ் விட்டேகர் என்பவருடன் ஆரம்பித்தார்; இவர் ஒரு சிஐஏ எஜென்ட்.
[6] ஆதாரம்: Ramanujan’s association with radicals in India (with H. H. Chan and L.-C. Zhang), American Mathematics Monthly 104 (1997), 913-919,
[7] http://epw.org.in/
-0-0-0-0-0-0-0-
மன்னிக்கவும்; இதனை நான்தான் (=வெ. ராமசாமி) ‘சலபதி’ எழுதினால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து – ஆகவே, அதிகமெல்லாம் வருத்திக் கொள்ளாமல் எழுதினேன்.
தாங்கவே முடியவில்லை. இவருடைய மண்வெட்டிதாச ஆராய்ச்சியையும் வரலாற்றாசிரியத்தனத்தையும்… :-(
அடிப்படையில் ஒரு புத்திசாலியான ஆசாமி, ஏன் இப்படிச் சீரழிய வேண்டும்?
… குறிப்பாக, ஆங்கிலக் கட்டுரையின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு – எப்படிப்பட்ட புரட்சிக்காரர் (அல்லது வன்முறையாளர் எனவும்) இவர் என்றும், இவருடைய மற்ற பக்கங்களை ஏனோ ராமானுஜ-ஆய்வாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர் எனவும் பிலாக்கணம் வைக்கக்கூடும் போக்கினை – மரியாதையுடன் எழுத முயன்றிருக்கிறேன்…
-0-0-0-0-0-0-0-
…ஆகவே, தாங்கள் – எழுத்தாளர் (மன்னிக்கவும், வரலாற்றாளர்!) சாஹேப் அவர்களின் கீழ் கண்ட கட்டுரைகளைப் படித்து, அவற்றில் உள்ள தர்க்கரீதியற்ற குதித்தல்களையும், அவரலாறுகளையும், முன்முடிவுகளையும், கடன்வாங்கல்களையும், துறை அறியாமல் காலை வைக்கும் பண்பையும் உணர்க.
மேலும் வரும்…
அலக்கியம், காப்பிக்கடை, இன்னபிற இழவுகள்…
February 4, 2019 at 21:17
[…] […]