கைபர் போலன் ஸியாச்சென் டோக்லம் வாராணஸீ பூடான் யுக்ரைன் இஸ்ரேல் கார்கில் ‘குமரிக்கண்டம்’ கொடைக்கானல்

March 7, 2023

கேள்வி: இவற்றுக்கெல்லாம் பொதுவான அம்சம் என்ன?

பதில்1: எந்தவொரு திராவிடக் கூவானுக்குமோ அல்லது தமிழ்வெறியனுக்குமோ இந்த இடங்களில் எதுவுமே எங்கே இருக்கிறது எனக் கொஞ்சம் கூடத் தெரியாது. ஏன், குண்ஸாகக் கூடத் தெரியாது.

ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் முழ நீளம் பேசச் சொல்லுங்கள்… வந்தேறி போயேறி வரலாறு உளறாறு ஸ்ட்ரேட்டஜி போர் யூதவெறி முதல்சங்ககாலம் அது இது என ஒர்ரேயடியாகப் பிலுக்கிக் கொள்வார்கள்.

பதில்2: இவை பற்றிய எதிர்க் கேள்விகள்தான் என் உரையாடல்-தற்காப்புக் கவசங்கள்.

1

சுமார் 1990-91 வாக்கில்தான், என்னுடைய இந்தத் தற்காப்புக் கவசத்தைத் தற்செயலாகக் கண்டுபிடித்தேன்.

அவர் பெரியவர்; அச்சமயம் அவருக்குச் சுமார் 65 வயதிருந்திருக்கலாம், தமிழிலும் இலக்கியத்திலும் ஆர்வம். நான் மதிக்கும் ஓரிரு அழகான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்; பொதுவாகவே பண்பாளர்தாம். (நல்ல படிப்பு, ஏர்ன்ஸ்ட் யூங்கரின் ‘சலவைக்கல் சிகரங்களினூடே(!)’ வரை கதைத்திருக்கிறோம் என மங்கல் நினைவு)

நானும் எனக்குப் பிற வேலைவெட்டி என ஒன்றும் இல்லையென்றால், மேலாக, தமிழ் இலக்கிய அரிப்பு சொறி சிரங்கு என வந்தால், இரண்டுமூன்று வாரங்களுக்கு ஒருமுறை அவரிடம் போய் வளவளாவிக் கொண்டிருப்பேன்.

அவர், பொதுவாக நல்லவர். ஆனால் பாரதம், ஹிந்துமதம், ஸம்ஸ்க்ருதம் எனவெல்லாம் வந்துவிட்டால் கொஞ்சம் பதட்டத்துடன் சாமியாட விரும்புபவர்.  திக அல்லர், ஆனால் திராவிடர், திராவிட அபிமானி, பாவம்.

ஊக்க போனஸ்ஸாக – அவர் மறைமலையடிகளையும் தேவநேயப்பாவாணரையும், திக ‘கைவல்ய சுவாமி, ‘சின்னக் குத்தூசி’ இரா. தியாகராஜன் போன்றவர்களையும் ஆதர்சமாகக் கொண்டவர்  பின்னவரின் நண்பரும் கூட, என்ன செய்வது சொல்லுங்கள்.

(இப்போது நினைவுக்கு வருகிறது: ஒருமுறை கூட அயோத்திதாசரைப் பற்றிப் பெரிதாகப் பேசியதில்லை – நாங்கள் இருவரும் அவரைப் படித்திருந்தாலும், அப்போது அவருக்கு அவ்வளவு பெரிய ‘மௌசு’ இல்லை. எங்களுடைய பொதுவான அபிப்ராயம் என்னவென்றால், அவர் மரைகழன்றமலையடிகள், அவ்வளவுதான். + பெரியவருக்கு வையாபுரிப் பிள்ளை என்றால் கொஞ்சம் ‘புரிந்து கொள்ளப்படக்கூடிய’ ஒவ்வாமை. ஆகவே – அவரையும் கொஞ்சம் லூஸ்ல விட்டுவிடுவோம்)

வெறி அரசியல் என இல்லையென்றாலும் – இந்தப் பெரியவர் – “என் மகளின் தாயார்” ராஜாத்தி அம்மையார், கனிமொழி அம்மணியார்களின் அபிமானத்தைப் பெற்றவர்; இந்த ‘பகுத்தறிவுப் பகலவி’ ‘பெண்ணுரிமைச் சிங்கம்’  அம்மணி – பெரியவரிடம் ஆர்வத்துடன் ஜோசியம் கேட்ட விவகாரமும், பின்னர் ‘தனிப்பட்ட முறையில்’ சிலபல பரிகாரங்கள் செய்தமையும் சுவாரசியமானவை; ஆனால் பெரியவருக்கு, இந்தத் தொடர்புகளைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. (ஆகவே நானும் லூஸ்லவுடுகிறேன்)

ஆனால், அவரிடம் கொஞ்சம் திராவிட நக்கல் இருந்தது; பேச்சினிடையே பிராம்மணக் கொச்சையையும் வெறுப்பியத்தையும் உள்நுழைப்பார். “நீங்களெல்லாம் ஆத்துல இதை செய்யமாட்டேளோல்லியோ!” வகை. “என்ன ஓய்! பிராம்ஂமணாளுக்கு பிராம்மணாள் உங்களுக்குள்ளயே உதவி செஞ்சுப்பேள், ஆனால் சூத்ராள ஒதுக்கிடுவேள்… “

ஒருமுறை ” உவே சாமினாதைய்யர்னா தூக்கிக் கொண்டாடுவேள், சிவை தாமோதரம்பிள்ளைன்னா ஸைலண்டா போய்டுவேள்” என அபாண்டமாகச் சொன்னதை – நேரடியாக, அப்படியெல்லாம் இல்லையே – ஆதாரம் உண்டா எனக் கேட்டு – அவரை ஓரிரு நிமிடம் வாயடைக்கச் செய்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால், பொதுவாகவே – நானும் சிலபல காரணங்களால் – இந்தச் சிறுபிள்ளைத்தனங்களையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல், சிரித்துக்கொண்டே மேலே சென்றுவிடுவேன்.

காரணங்கள்: அவர் படித்தவர் (இன்று வரை இப்படிப் படித்தவர்கள் எனத் தமிழர்களில் 500 பேர் தேறினால் அது மிக அதிகம்; நம் மக்கட்தொகை எட்டு ப்ளடி கோடியாமே!). எனக்கும் அவருக்கும் குறைந்த பட்சம் 40வருட வித்தியாசம் வேறு. மேலும் அவர் சபைக்கு/வீட்டுக்குச் சென்று அவருடன் சூடான வாக்குவாதம் செய்வது, ‘தோற்கடிப்பது’++ – சரியான செயல்பாடுகளாக இருக்கமாட்டா எனவொரு தீர்மானம்.

எது எப்படியோ.

நிலைமை இப்படி இருந்திருக்கையிலே.

2

இப்படித்தான் ஒருமுறை.

ஏதோ தமிழ்-> திரமிளம்-> திராவிடம் எனவெல்லாம் அவர் சங்ககால போகஸ்/போலி வியாக்கியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது – அரிசி என்பதிலிருந்துதான் ரைஸ்/rice வந்தது எனப் பேசினார்.

நானும் வழக்கம்போல மரியாதையுடன் (+உள்ளூர நமட்டுச் சிரிப்புடன்) இதையும் கடந்து, குறுந்தொகை பற்றிய பெத்த பேச்சில் சரணடைந்து இருக்கலாம்.

ஆனால், அன்று எனக்கு நாக்கில் சனி.

(இக்காலங்களில் சனிபகவான் என் நாக்கில் பர்மனென்டாகப் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார், என்ன செய்ய)

அதனால், என்னிடம் அப்போதிருந்த மொழியியல் தரவுகளுடன் அது அப்படியல்ல என நிறுவினேன். அது ஸம்ஸ்க்ருதத்திலிருந்துதான் வந்திருக்கவேண்டும் எனக் காட்டினேன்.

அவருக்கு அது மானப் பிரச்சினையாகிவிட்டது – நானும் அப்படியே விட்டிருக்கலாம், ஆனால் நாக்கில் சனி.

மேலே ஒரு ‘ஃப்ளோ’வில் போய் “தமிழகம் என்றுமே குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பூகோளரீதியாக, அரசுபூர்வமாகப் பிரிக்கப் பட்டதில்லை; அவை நாடகங்களை அரங்கேற்றும்போது உதவத் தோதான நிகழ்கலைக் கருவிகள்/கோடிட்டுக் காட்டல்கள் (theatrical devices) மட்டுமே” என்றேன்.

அத்துடன் நிற்காமல், இவற்றையும் ஸம்ஸ்க்ருத நாட்டியநாடக மரபுகளிலிருந்து நாம் பெற்றுக் கொண்டவையே என்றேன். இப்படிப் பெற்றுக்கொண்டதால் தமிழ் சிறுமை பெறவில்லை, அது தொடர்ந்து தன்னூடேயும் பிறவற்றிலிருந்து எடுத்துக்கொண்டும் வளர்ந்து கொண்டேதான் இருந்தது, இருக்கவேண்டும் என்றேன்.

பெரியவருக்கு இது மானப் பிரச்சினையாகிவிட்டது. அப்படியே அது சிலப்பதிகாரம் அதுயிது, ‘ஆரியன் கடன்வாங்கினான்’ – ‘பாப்பான் திருடிக்கொண்டான்’ – வந்தேறி என்றெல்லாம் பேசி, அவர் முக கழுத்து நரம்புகள் தெறிக்க அப்படியொரு கோபம்… பாவம்.

எனக்கு புஸ்ஸென்று ஆகிவிட்டது; இக்காலமாக இருந்தால் “இவ்ளோதானாடா வொங்களோட டக்கு” என எத்தையாவது சொல்லியிருப்பேனோ என்னவோ.

ஆகவே, “எவிடென்ஸ் முக்கியமில்லையா சார், நான் சொல்றதுல எங்க தப்புன்னு காண்பிச்சீங்கன்னா, என்னை திருத்திக்கிறேன் – ஆனா இப்படி ஜாதி வெறியன் பேசறமாதிரி எங்கிட்ட பேசினீங்கன்னா எனக்கு ஆச்சரியமாதான் இருக்கு!” என்பது போலச் சொன்னேன் என நினைக்கிறேன்.

ஆனால் அவர், “கைபர்போலன் வழி இங்க தேர்ல வந்த ஆடுமாடு மேய்க்கறவங்க, எங்கள ஆக்கிரமிச்சி, எப்படி ஆட்றீங்கடா!” என்றார்.

அவருக்குக் கோபம் அடங்கவில்லை. அவர் தொடர்ந்து இம்மாதிரியே வசைபாடலில் மூழ்கியிருந்தார்.

ஆனால், நான் ‘டாட்டா, பைபை’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கலாம்.

ஆனால் அப்போது 20+ வயதினனான எனக்கும் கொஞ்சம் ரோஷம் வந்துவிட்டது.

(எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது: அன்று ஞாயிற்றுக் கிழமை, அரசுப் பள்ளியொன்றில் பிற்பகல் 2-5 சமயம் பிள்ளைகளுக்கு இலவச ட்யூஷன் நடத்திக் கொண்டிருந்தேன் – அன்று ஏதோ பூகோளம் பற்றிய உரையாடல் நடத்தி இருந்ததால், கைவசம் அட்லஸ் இருந்தது; + சனி பகவான் நாக்கில் மூன்-வாக்…)

அட்லஸை விரித்து, இந்திய வரைபடத்தைக் காண்பித்து அவரிடம், ‘எங்கே இந்த கைபர்போலன் – காட்டுங்கள் பார்க்கலாம்’ என்றேன்.

அவர் காட்டியது லடாக்குக்கு மேலே கிட்டத்தட்ட கிர்கிஸ்தான்-சீனா பகுதியை!  (எனக்கு ஆச்சரியமாகி விட்டது; அவருக்கும்தான்!)

அவருக்கு அவை எங்கே இருக்கின்றன எனக் காட்டினேன், பாவம்.

+”சார், இந்த கணவாய் வழிகள்ல எப்படி தேர்களை ஓட்டிக்கொண்டு வந்திருக்க முடியும் என நினைக்கிறீர்கள்? கைபர்போலன் எங்கே எனத் தெரியாமலேயே இஷ்டத்துக்குப் பேசுகிறீர்களே!”

அவருக்குக் கோபம், நிலைகொள்ளாமல் அதிகமாகிவிட்டது என நினைக்கிறேன். அவருடைய ‘பண்பு’ பறந்து விட்டதற்கு அது காரணமாக இருந்திருக்கலாம்; ஆனால் இன்று, ‘திராவிடத்தின் ஜாதிவெறி’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

“பாப்பாரத் திமிர்!” – என்றாரே பார்க்கலாம்.

நான் பதிலுக்கு ஒன்றுமே பேசாமல் கிளம்பி வந்துவிட்டேன்.

அதற்குப் பின்னர் ஏதேச்சையாக எங்கோ ஓரிரு முறை சந்தித்தாலும், அதிக பட்சம் ‘வணக்கம்’ என்பதுதான் என் பக்கத்திலிருந்து. அவருக்கு என் பேரில் இவ்விஷயத்தில் மஹாவருத்தம் எனக் கேள்விப் பட்டேன்; பொது அறிமுகங்களை வைத்து “அவனுக்கு என்மேல என்ன கோபம், வந்து பேசக் சொல்லுங்க.” ஆனால், நான் பொருட்படுத்தவில்லை.

…பின்னர் 20+ வருடம் கழித்து அவரை மறுபடி, குறிப்பாகப் பார்க்கவேண்டி வந்தபோது (அவர் இறக்கும் தருவாயில் இருந்தார் என்பதால்) கொஞ்சம் ‘மரியாதை நிமித்தம்’ பேசினேன். அவருடைய மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டேன்.

3.

“சரி, அப்போ அது எங்க இருக்குன்னு காண்பி” என்பது என் தற்காப்புக் கவசமானது. மூடர்கள், அட்ச்சிவுடுபவர்கள், எந்தவொரு விஷயத்தின் அடிப்படையிலும் ஒரு மசுத்தைக்கூட அறியாமல் உளறிக்கூட்டும்  கூட்டத்தைச் சமாளிக்க உன்னதமான ஒரு கருவி அது.

ஸியாச்சென் டோக்லம் பற்றி வாய்கிழிய, பாரத அரசுக்கு  ‘ஸ்ட்ரேட்டஜிக்’ அறிவுரை கொடுப்பவர்களுக்கு அது எங்கே என்றே தெரியவில்லை.

பூடான் எங்கே என்றால், எங்கோ அருணாச்சல் பிரதேசத்தைக் காண்பிப்பார்கள். சிர்ரபுஞ்சி எங்கே என்றால் மிஸோரத்தில்.

யுக்ரைன் எங்கே என்றால் மங்கோலியா அருகில்.

வாராணஸீ லக்னோ அருகில் இருக்கிறது; அதன் இன்னொரு பெயர் அலஹாபாத் – அதன் பெயரைத்தான் ப்ரயாக்ராஜ் என மாற்றிவிட்டான் உன் யோகி.

இஸ்ரேல் எங்கே என்றால் ஸைப்ரஸ் அருகில்.

குமரிக்கண்டம் என்றால் ஆஃப்ரிக்காவிலிருந்து ஆஸ்ட்ரேலியா வரை ஒரு பெரிய பட்டை பெயிண்டடித்தல்.

கொடைக்கானல் வந்திருந்த ஒருவனிடம் கேட்டால், அது திருச்சிக்கும் ஊட்டிக்கும் நடுவே இருக்கும் பிரதேசம். கொல்லிமலை கொடைக்கானல்தான், நன்றி!

இவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்தந்த விஷயத்தின் புவியியல் ரீதியான முக்கிய கூறுகளில் தேர்ந்தவர்கள் எனத் தம்மை நம்புகிறவர்கள்.

4

இக்காலங்களில் இதே கைபர்போலன் கேள்விதான் – ஆனால் வரலாற்றின் நேரவரிசைப்படிக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்…

இதிலும் ஏகப்பட்ட உளறல்கள்; பெரும்பாலான தமிழர்கள் என்னை ஏமாற்றுவதே இல்லை.

தொல்காப்பியம் பொதுயுகம் முன் ஏற்பட்டது.

சிலப்பதிகாரம் என்பது  பொயு 200 வாக்கில் எழுதப் பட்ட சமகால வரலாறு.

நூற்றுவன் கண்ணன் எனும் சாதவாஹனப் பேரரசன், சேரன் செங்குட்டுவன் காலத்தவன்.

கஜபாஹு தமிழகம் வந்து கண்ணகி கோவிலைப் பார்த்தான்.

….

ராஜேந்திர சோழனின் கத்திக் கப்பல்களில் அம்பெய்யும் இயந்திரப் பொறிகள் இருந்தன!

….

…இவை எல்லாவற்றுக்கும் ‘பதில் கேள்வி’ எனக் கேட்டால், அவர்களிடமிருந்து இன்னமும் சிரிப்பான பதில்கள் வரும்!

அல்லது கமுக்கமான மௌனம்.

ஏனெனில்.

முக்காலே மூணுவீசம், தமிழக வரலாறு என்பது – குறிப்பாக ‘சங்க கால வரலாறு’ என்பது – ப்ளடி உளறல்.

ஆனால், இதனைச் சொன்னால் (தரவு ரீதியாகத்தான்) நிறைய பேருக்குக் கோபம் வந்துவிடுகிறது. வெறுக்க ஆரம்பித்து விடுகிறார்கள்… என்ன செய்ய.

இச்சமயம், இன்று காலை நண்பர்கள் சிலருக்குப் பரிந்துரை செய்த புத்தகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருமாதிரி ‘சுய முன்னேற்ற’ வகைதான், எனக்கு ஒத்துவராத துறைதான் (ஏனெனில், நான் முழுநேர சுயபின்னேற்றவாதி) – இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை இந்த குறிப்பிட்ட விஷயத்துக்காக முக்கியமானது.

ஏனெனில் நாம் பொதுவாகவே, வாழ்த்தப் படுவதையே விரும்புகிறோம். அனைவரும் நம்மிடம், எல்லா சமயங்களிலும் தவறாமல் அன்பு செலுத்தவேண்டும் எனப் பேராசைப் படுகிறோம் – அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.

இது தவறல்ல. எல்லாம் பரிணாம உயிரியல், மனோதத்துவம் படி புரிந்துகொள்ளப்படக் கூடியவைதான்.

ஆனால் மோக்ஷம் கிட்டக்கூடிய வழி அதுவல்ல என நினைக்கிறேன்.

5

எல்லாம் சரி. நான் எங்கு இருக்கிறேன்?

பாரத வரைபடத்தில் காண்பிக்க முடியுமா? ப்ளீஸ்??

6 Responses to “கைபர் போலன் ஸியாச்சென் டோக்லம் வாராணஸீ பூடான் யுக்ரைன் இஸ்ரேல் கார்கில் ‘குமரிக்கண்டம்’ கொடைக்கானல்”

 1. K Muthuramakrishnan Says:

  உண்மையாகவே அவர் சொன்ன திமிர்தான் உங்களுக்கு
  .கையோடு அட்லஸ் கொண்டு போனா என்ன செய்யமுடியும்?


  • ஐயோ ஐய்யா! அவரை எதிர்க்கவேண்டுமென்று அப்படி முன்னேற்பாடாகச் செய்யவில்லை. ஆனால் அகஸ்மாத்தாக அச்சம்பவம் அப்படி நடந்துவிட்டது.

   இக்கால தமிழிளைஞ பாஷையில் சொல்லவேண்டுமென்றால்,  ‘சம்பவம் செய்யப்பட்டது.’

   (பொதுவாக பிறர் சபைக்குச் சென்று அவமதிப்பு என்று செய்யும் பழக்கமில்லை, ஆனாலும் செய்துவிட்டேனே! சரி, இனிமேல் இதனை முன்மாதிரி(!)யாகக் கொண்டு, ஒவ்வொரு இடத்துக்கும் சென்று ‘சம்பவம்’ செய்யவேண்டியதுதானோ?)

 2. சங்கி Says:

  இப்படியாகத்தானே டம்மிலனின் எல்லாமறிந்த பராக்கிரமத்ததைக் கண்டு உங்களைப் போன்றோர் கதறுகின்றனர்(ஒரே இன்பம்ஸ்தான்), ஸாம்பிளுக்கு ஒன்று இங்கே.

  தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராவதைத் தவிர நமது மாணவர்கள் முன்னே உள்ள மற்ற வாய்ப்புகள் யாவை?

  சரி, நமது வட்டாரத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் யாவை?

  தம்பி, நம்ம ஊர்ல பவர் லூம்ஸ் இருக்கா?

  இருக்கு சார்

  ஸ்பின்னிங் மில் இருக்கா?

  இருக்கு சார்

  திருப்பூர்ல இருந்து நெறய கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட் ஆகுதா?

  ஆமா சார்

  அந்த கம்பெனில நம்ம பசங்க வேலைக்கு சேரலாமா?

  சேரலாம் சார், ஆனா புல்லா வடக்கனுங்க, எங்குளுக்கு வேல இல்ல

  சரி தம்பி, சொந்தகாரங்க யாரும் அங்க வேல பாக்கறாங்களா?

  இல்ல சார்

  தெரிஞ்சவங்க யாராவது?

  இல்ல சார்

  எந்த மில்லுக்காவது நேரா போயிருக்கியா?

  இல்ல சார்

  அப்றம் எப்படி இவ்ளோ வெவரமா பேசற?

  சார் வாட்ஸாப்பு இன்ஸ்டா ரீல்சு யூடூப்பு பேஸ்புக்குனு எல்லாத்துலயும் இப்ப இதான் வைரலா போய்ட்டு இருக்கு, பாக்கலயா நீங்க?

  இல்லயே தம்பி, அப்டி என்னதான் நடக்குது?

  சார் வடக்கன் எல்லாரும் வித்தவுட்ல ரயிலேறி இங்க வந்து நம்ம வேலைய புடுங்கறானுங்க சார், எல்லா எடத்துலயும் அவனுங்கதான், கண்ட எடத்துல துப்பி வெக்கறானுங்க சார் பீடா வாயனுங்க, இது பத்தாம கேங் சேத்துட்டு நம்மள அடிக்கறானுங்க சார், இவனுங்கனாலதான் சார் இங்க கிரைம் நடக்குது, வொர்ஸ்டு பிகேவியர் சார்

  ரைட்டுதான், நம்ம ஊர்ல இருக்கற சின்ன சின்ன ஹோட்டல் தாபால கூட இருக்காங்க…

  அதேதான் சார், நம்ம ஊரு வில்லேஜு, இங்கயே இவ்ளோபேர் இருக்கானுவனா டவுனு பக்கமெல்லாம் சொல்லவே தேவையில்ல சார், ஓவர் அட்ராசிட்டி சார் இவனுங்க, அன்னிக்கி பஸ்ல வர்றப்ப கண்டக்டர்கூட வண்ட வண்டயா திட்டுனாரு சார், உட்டா தமில்நாட்டயே வித்து வாய்ல போட்ருவானுவனு சொன்னாரு சார்

  ஏன் அப்படி சொன்னாரு?

  பின்ன என்ன சார்? பஸ்ஸே புல்லா ஸ்டேண்டிங்ல வருது, இவனுங்க ஜீன்சு பேன்ட போட்டுகிட்டு ஹெட்போன மாட்டிகிட்டு நோகாம உக்காந்துட்டு வர்றானுவ…

  வித்தவுட்டா?

  இல்ல சார், நம்ம ஊர் பஸ்ல அப்டி வரமுடியுமா? கொத்துக்கறி போட்ற மாட்டோம்?

  அப்றம் ஏன் கண்டக்டர் திட்டுனாரு? ஏதாச்சும் பிரச்சன பண்ணாங்களா?

  சார் எங்க வந்து யார்கிட்ட யாரு சார் பிரச்சன பன்றது? பொளந்துருவோம், திமுரா உக்காந்துட்டு வந்தானுவ சார், அந்த கடுப்புலதான் திட்டுனாரு, அவனுங்கள அப்டிதான் சார் வெச்சு செய்யனும்…

  உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பு?

  சார், இவ்ளோ நேரமா அதான சொல்லிட்ருக்கேன், தமில்நாடே நாசமாய்ட்டு இருக்கு சார் இவனுங்கனால…

  எப்பிடி சொல்ற?

  என்ன சார் இப்டி கேக்கறீங்க? எங்க தலைவரு சொல்றாரே, மினிஸ்டருங்களும் சொல்றாங்க, எவ்ளோ வீடியோ மீம்ஸ்லாம் பாக்கறோம்…

  நீ யார்கிட்டயாவது பேசியிருக்கியா?

  இவனுங்கட்ட எவன் சார் பேசுவான், கிய்யா பையானுட்டு இருப்பானுவ…

  நீ பிரைவேட் ஸ்கூல்தானே? ஹிந்தி படிச்சியா?

  ஆமா சார், கம்பல்சரி அதனால படிச்சேன், நமக்கு ஹிந்தியும் வேணாம் ஹிந்திகாரனும் வேணாம், தெரிஞ்சாலும் பேசமாட்டேன்

  நான் பேசினேன் தம்பி

  ஏன் சார் அவனுங்கட்ட பேசறீங்க? உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?

  நான்தான் கவர்மென்ட் ஸ்கூல்ல தமிழ் மீடியம் ஆச்சே, அவங்களுக்கு தமிழ் புரியுது, தட்டுதடுமாறி பதில் சொல்றாங்க. உள்ளூர் தாபா போயிருந்தேன், அங்க ஒரு வெளியூர் பையன் இருந்தான். தோப்புக்குள்ள இருக்கற சின்ன தாபா அது, அங்க அவன நான் எதிர்பார்க்கல, அதனால பேசினேன்

  அப்டி என்ன சார் சொன்னான் அவன்?

  அவன் நம்ம நாடே இல்ல, நேபாள். பத்தாவது படிச்சிருக்கான், ஒரு வருஷமா இங்க வேலை செய்யறான். தாபாலயே தங்கிக்கறதால செலவு ஒன்னும் பெருசா இல்லனு சொல்றான். இங்க எப்படி வேலைக்கு வந்தனு கேட்டப்போ ஏற்கனவே இங்க வேலைல இருக்கற எங்க ஆளுங்க சொல்லிதான் வந்தேனு சொல்றான். என் பேரு தினேஷ்னு சொன்னா இங்க யாரும் நம்பறதில்ல, சைனாகாரனாட்டம் இருக்கற, இங்க வந்து பேர மாத்திகிட்டு கத விட்றயானு கேக்கறாங்க. இந்த ஊர் ஆளுங்க ஒருநாள் வேலைக்கு வந்து காசு வாங்கினதும் குடிச்சிட்டு வாரக்கணக்கா வேலைக்கு வர்றதில்ல, அதனாலதான் முதலாளி என்னை பொறுப்பா பாத்துக்க சொல்றாரு, என்னோட சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பறேன், அது போதும்னு சொல்றான். அவனைப்போல வேலை செய்ய நீங்க தயாரா?

  இன்னொரு பையன் பீகார்ல இருந்து இங்க சித்தாள் வேலைக்கு வந்திருக்கான். +2 மேத்ஸ்-பயாலஜி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிருக்கான். காலேஜ் போறதுக்கு பணம் சேர்க்கறான். தூங்கற நேரம் போக மீதி எல்லா நேரமும் இந்த பசங்க வேலை செய்யறாங்க, அதுவும் பாதி சம்பளத்துக்கு, நம்ம பசங்க செய்வீங்களா?

  தமிழன் வேலையை மத்தவங்க தட்டி பறிக்கறாங்க, அவங்கள விரட்டனும்னு உசுப்பேத்தற உங்க தலைவர்கள் பேச்சை கேக்கற நீ அந்த வேலையை ஏன் அவங்களைத் தேடிப்போய் கொடுக்கிறோம்னு நம்ம ஊர் முதலாளிகள் சொல்றதை ஏன் கேக்கறதில்லை?

  இதுவரைக்கும் எத்தனை மாநிலத்துக்கு ரயில்ல போயிருக்க?

  தமிழ்நாட்டுக்குள்ளயாவது போயிருக்கியா?

  தமிழ்தாட்டைத் தாண்டாத நீ, ஒருதடவைகூட ரயில்ல போகாத நீ வடக்கனுங்கதான் வித்தவுட்ல வர்றானுங்கனு எதை வச்சு சொல்ற?

  எங்கயோ எவனோ அவனோட ஆதாயத்துக்காக எதையோ அடிச்சுவிட்டான்னா அதை அப்படியே பிடிச்சு தொங்கறதை நிறுத்திட்டு அதுல எவ்வளவு உண்மை இருக்குனு யோசிக்க முடியலனா நீ எவ்வளவு படிச்சும் தற்குறிதான், திருட்டு ரயில் கும்பலை இப்போ எங்க வெச்சிருக்கோம் அது எப்படி நடந்துச்சுனு மொதல்ல யோசி, மத்த உலக விஷயமெல்லாம் அப்புறம் அலசலாம்.


  (டேய் நான் அப்பவே சொல்லல, இந்தாளு சரியில்லனு, வடக்கனுக்கு எப்டி சப்போர்ட் பண்றான் பாரு, இந்தாளு பூமர் ராமானுஜம் மட்டுமில்லடா, பக்கா சங்கி)

 3. Ramanathan N Says:

  தங்களின் தமிழ் மற்றும் பிற மொழிகள் ஒப்பிடு இன்னும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் குறிப்பாக சமஸ்கிருதம்.


  • ஐயன்மீர், தயைகூர்ந்து பொறுமை காக்கவும்.
   நான் வெறும் மாணவன் தான். (தமிழானாலும் சரி, ஸம்ஸ்க்ருதமானாலும் சரி – ஏன், ஆங்கிலமும் ஹிந்தியும்கூட ததிங்கிணத்தோம்!)

   ஆனால் கொஞ்சம் அதிகப்ரசங்கித்தனமாகப் படித்து இன்புற்றிருப்பதால் – உங்களுக்கும் எனக்கும் ஒருசேரப் பிரச்சினை, என்ன செய்ய!

   //தங்களின் தமிழ் மற்றும் பிற மொழிகள் ஒப்பிடு இன்னும் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம் குறிப்பாக சமஸ்கிருதம்.

   ஒப்பீடு எனப் பெரிதாகச் சொல்ல முடியாது – ஏனெனில் எனக்கு இவ்விரண்டும் செல்லங்கள். பாரதமொழிகள் பேசும் பாரதீயன் ஒவ்வொருவனுக்கும் (உர்தூ பேசுபவர்கள் உட்பட) ஸம்ஸ்க்ருதத்தின் மிகமுந்தைய ஆதிவடிவங்களான சந்தஸ் பாஷா போன்றவைகள் ஆதிப்பெரும் தாய்மொழி வடிவங்கள் என்பதில் எனக்கு ஏறக்குறைய சந்தேகமில்லை.

   Proto Indo-European, Proto Dravidian போன்றவை நம் வசதிக்காக, நம் ஒழுங்கமைவு சார்ந்த புரிதல்களுக்காக நாம் ஏற்படுத்திக்கொண்ட கற்பிதங்கள். இவை இப்படித்தான் இருந்தன என நம்மால் ஐயம்திரிபறச் சொல்லவே முடியாது. ஆனால் பொதுப்படையாக இப்படி இருந்திருக்கலாம் எனச் சொல்வதில் தவறும் இல்லை. பிரச்சினை என்னவென்றால் – நம் ‘சான்றோர்’களும் ஒருமாதிரித் திரிபவாதிகள் – Proto Indo-European எனும் ஆதிமூலபாஷை ஸ்டெப்ஸ் பகுதியிலிருந்து மேலெழும்பியது எனக் குதூகலகமடைந்து கும்மியடிப்பதில் அவ்வளவு சந்தோஷம்; ஆனால் அது அப்படியல்ல.

   என்னைப் பொறுத்தவரை ஒப்பீடு என்பது நியாயமாக இருக்காது.  மாறாக எப்படி ஒன்றையொன்று தழுவியிருக்கின்றன என்பது சுவாரசியமான கதையாக இருக்கும்; எப்படி இருந்தாலும் தமிழ் என்பது சந்தஸ் பாஷா போன்றவற்றுக்கு மிகப் பின்னால்தான் முதிர்ச்சியடைந்தது என்பது சமனத்துடன்  மொழி (+இதர) வரலாறுகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

   பிற பின்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s