இளம் அண்ணாமலை அவர்களுக்கு அறிவுரை தருவது எப்படி? யார் கொடுக்கலாம்? மாறாக, உருப்படியாக என்ன செய்யலாம்?
December 14, 2022
(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!)
அ
இருந்த இடத்தில் சொகுசாக அமர்ந்து கொண்டு, ஆற அமர பிறத்தியாருக்கு மேலான அறிவுரை கொடுப்பது என்பது, நம் செல்லத் தமிழகத்தில், ‘வேர்ச்சொல் ஆராய்ச்சி’ + ‘தமிழ்தான் உலகத்திலேயே சுத்தசுயம்பு ஒரிஜினல் ஆதிமொழி’ + ‘ஆதித் தமிழகத்தில் சமூக ஏற்றத் தாழ்வுகளே இருந்ததில்லை’ + ‘திராவிட மாடல்’ போன்ற பெரும்பீலா அற்புதங்களுக்கு அடுத்ததாக, ஆனால் அதையும் ஏகோபித்து முந்தும் நிலையில் தற்போது முழுப்பாய்ச்சலில் உள்ள ‘மேலான (பாஜகவுக்கு) அறிவுரையாளர்’ குடிசைத் தொழில்.
இதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதனால் தான், நானும் அறிவுரை கொடுக்கவேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டேன், என்ன செய்வது சொல்லுங்கள்…
தமிழனாக இருந்துவிட்டால், அறிவுரையும் நாப்பழக்கம் அன்றோ? பிறத்தியாருக்கு ஃப்ரீ அட்வைஸ் கொடுக்கும் + நீதி புகட்டும் didactics/டைடாக்டிக்ஸ் வகை எழுத்துகளைத்தானே நாம் நம் சங்ககாலத்திலிருந்தே ‘ஸ்பெஷலிஸ்ட்ஸ் இன் ஆல் ஸப்ஜெக்ட்ஸ்’ என விதந்தோதி வருகிறோம், சொல்லுங்கள்?
எடுத்துக்காட்டுகளாக:
1. படுபீதி ரத்தக்களறிப் போருக்குச் செல்லவிருக்கும் இறுக்கநிலை அவசரகதியில் கூட, நந்தவனத்துக்குச் சென்று, முதலில், ஒரு மாதிரி பூச்சூடிக் கொள்ள வேண்டுமாமே! வென்ற பின் இன்னொரு வகை பூவையோ இலையையோ தழையையோ செவியைச் சுற்றிக் கட்டிக்கொண்டு சீவிச் சிங்காரித்துக் கொள்ள வேண்டுமாமே?
2. திருக்குறள் என்பது டெஸ்க்ரிப்டிவ்/descriptive – இருக்கும் விஷயங்களை, முன்னமே பிறமொழிகளில் சொல்லப் பட்டவைகளை, தமிழ்(!) பண்பாட்டுகேற்ப ‘ஷ்வல்ப அட்ஜஸ்ட் மாடி’ செய்து கவிதை நயத்துடன் விவரணைப் படுத்துவதா? அல்லது ‘இப்படி இருக்கவேண்டும்’ எனும் ப்ரெஸ்க்ரிப்டிவ்/prescriptive விஷயமா? அல்லது அது ‘மேலான அந்தக் கால அறிவுரைக் களஞ்சியமா?’ இல்லை, இம்மாதிரி விஷயங்களை ஜனரஞ்சமாகக் கலந்து கட்டியதா?
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ‘அறிவுரைதல்’ என்பது ஆதித்தமிழனின் ஆதித் தொழில்.
+ ப்ளடி #கீழடியில் இன்னமும் ஒரு கிலோமீட்டர் ஆழம் நோண்டினால், யாராவது ‘வாயாட்டிச் சித்தர்’ இன்னமும் அங்கே தாடிவுட்டுக்கொண்டு சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, ‘வாயாட்டு மன்றம்’ என எத்தையாவது யூட்யூப் சேன்னல் நடத்திக் கொண்டிருக்கும் அளப்பரிய காட்சியைக் காணலாம்.
“முகத்தில் வாயைக் கொண்டு பேசும் தோழர்காள், அகத்தில் மலம் கொண்டு பேள்வதே ஆனந்தம்.”
நேயர்: “எப்டீ ஸொல்ட்டு போய்ட்டான் பாரூ பா! புல்லரிக்குதே!!”
…ஆனாலும், என் கையறு உயர் நிலையை நினைத்தால் எனக்கே சோகமாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. காலங்கார்த்தாலேர்ந்து ஒரு ப்ளடி ஃப்ரெண்டும் எனக்கு அறிவொரை கொட்க்க மாட்டேண்றான், யின்னாத்த செய்றதுபா.
சரி, அழுவாச்சியை ஒருமாதிரி ஒதுக்கிவிட்டு… …
ஆ
என்ன மாதிரி, எப்படியாப்பட்ட அறிவுரைகள் கொடுத்தால் அது ட்ரெண்ட் ஆகும், நிறைய லைக் கிடைக்கும்? மிக முக்கியமாக, அறிவுரைகள் கொடுக்கும் நமக்குத் திருப்திகரமாக இருக்கும்?
கீழே ஒரு பெரும் ஜாபிதா! (பாவம், நீங்கள்!)
“பாஜக கட்சி தமிழகம் முழுவதும், ஒரு குக்கிராமம் வுடாம, பூத் கமிட்டிங்கள அமைக்கணும். அண்ணாமலெ, அது தெரியாம பேட்டி கொடுத்துட்ருக்காறு! “
“மொதல்ல வொங்க கட்சீலஇருக்கற தொண்டர்கள வெச்சி இருக்கற பூத்களுக்கு ஒவ்வொரு ஏஜெண்ட்டாவது போடுவீங்க்ளா, போடமுடியும்ங்க்ளா… அதுக்கே வழியில்லே…”
“பூத் கமிட்டிங்ள மானாவாரியா அமெக்கறதனால மட்டும் யூஸ் இல்ல, அந்தந்த பகுதில பெரும்பான்மையா இருக்கற ஜாதீங்க ஆதரவுதான் முக்கியம்!”
“பெரும்பான்மை ஜாதீங்க்ள ஆதரவும் மட்டும் இர்ந்தா போறாது, அவ்ங்க எல்லாக் கட்சிங்களுக்கும் பிர்ச்சி போட்றுவாங்க… மாறாக, சிறுபான்மை ஜாதீ வோட்டுங்கள சிந்தாம சிதறாம சேகரிச்சா, வெற்றி கெடைக்கும்…”
“ஜாதீங்க மட்டும் பெரிசா காப்பாத்தாது – ஏன்னாக்க அவங்க ஈக்வலா எல்லா கட்சீங்களுக்கும் போடுவாங்க… அத்தொட்டு விட்டமின் எம், காசு கொட்கற்து ரொம்ப முக்கியம்!”
“காசு வாங்கிக்கினா ஓட்டுப் போடுவாங்கண்றது தப்பு! அப்ப எப்டி திமுகா பல தொகுதிங்கள்ல தோக்குது, சொல்லுங்க? ஆக, வேட்பாளர் தேர்வுதான் முக்கியம்…”
“வேட்பாளர்ங்க முக்கியமில்ல – கூட்டணீ கட்சியோட ஓட்டு ட்ரான்ஸ்ஃபர் தான் முக்கியம்!”
“கூட்டணி முக்கியமில்ல, சொந்தக் கால்ல நிக்கணும்கறதுதான் முக்கியம்!”
“சொந்தக் கால் சொந்தக் கை என எல்லாத்துலயும் இருந்தாலும் பாருங்க, கடோசில பூத் கமிட்டிங்கதான் முக்கியம்!”
“அரசியல் கட்சின்னாக்க ஆட்சியப் புடிக்கணும்றதில்ல… ஒரு ஒட்டுமொத்த சமூகப் புரட்சிக்கான பொறுமையான முன்னெடுப்பா அவங்க பாக்கணும்… அத்தொட்டு இப்ப இல்லாக்காட்டியும் சுமார் 50 வருடத்துல ஆட்சிய புடிக்கலாம்…”
“அரசியல் கட்சியோட எய்ம் என்னாங்க? ஆட்சிதான? எல்லாரும் சீஂமான் மாரீ அட்ச்சிவுட்டுக்கினு குபீர்சிர்ப்பு சிர்ச்சிக்கினு இருக்க முடியுமா? எந்த விலை கொடுத்தும் அரசமைக்கணும்… அதுக்கு தமிழ் தேசியம் பேசறவங்களோட முழு ஆதரவு கெடைக்கும்னா அவங்களோடயும் கைகோர்த்துக்க ரெடியாக இருக்கணும்… அப்பத்தான் நின்னு நெலச்சு ஆடமுடியீன்ங்க்…”
“தமிழகத்துல பண நாயகம் தானுங்க முக்கியம். அம்பானி-அடானிங்கள இங்கு இறக்கிவிட்டா தமிழன் ஓட்டு போடுவான்…”
“தேர்தல் களத்துல பணம் பெரிசா வெளையாடாதுங்க… கொள்க தாங்க முக்கியம்… இப்ப பாருங்க, திக-காரங்க கொள்கப் பிடிப்போட எப்படி இருக்காங்க பாருங்க… கழகம் சிறுசுதான் ஆனாக்க அவ்னுங்க இன்ஃப்ளூயன்ஸ் பெரிசில்லா? இப்ப திமுக ஆட்சிக்கட்டில்ல இருக்குண்றது உண்மதான? அதாட்டு சொல்றேன்….”
“பழைய தலைவர்கள அரவணைத்துச் செல்லணும்.”
“பழைய தலைவர்ங்க டம்மீபீஸ்ங்க… அவங்கள கண்டுக்காம லூஸ்ல வுடணும்…”
“அனைத்து ஜாதிகளையும் அரவணெக்கணும், எல்லாருக்கும் பிரதி நிதித்துவம் கொட்க்கணும்! அத்தொட்டு – அண்ணாமலெ ஒரு விடிவெள்ளி தலைவரா இர்ந்தா, வர்ஷத்துல கீற 365நாள்லயும் ஜாதி விகிதாச்சாரத்துப் படி ஒவ்வொரு ஜாதிலயும், ஒட்டுமொத்தமா அனைத்து ஜாதிலயும் இருக்கணும், செய்வாரா? பாப்பானா ரெண்டு நாள், நாடானா இருவது, வன்னியனா எம்பது, கவுண்டனா நாப்பதுன்னிட்டு…”
“பாப்பானுக்கான கட்சி பாஜக இல்லன்னு அண்ணாமலெ தேர்வு வழியா பாஜக தெளிவு படுத்திருக்காங்க… ஆனாக்க அவ்ரே ஒரு க்ரிப்டோ ப்ராமின்னு பரவலா திமுக-காரங்க பேசிக்கறாங்க… இந்த பிம்பத்த ஒடைக்கணும், அவ்ரு எப்ப மனு நீதி புத்தகத்தெ எரிப்பாரு? எரிச்சா வோட்டு வீதம் 2% அதிகமாகும்ண்றத்துக்கு நான் கியாரண்டி…”
“பாஜகவுக்கு திமுக தான் பி டீம்ண்றத நாம்ப புரிஞ்சிக்கணும். இந்தப் புரிதல அடஞ்சாதான் நாம்தமிளர்சீமான் பாஜக-வோட ஏ டீம்ண்றத நாம் அறிய முடியும். அதனால பாஜக கண்டிப்பா நாதக-திமுகவோட கூட்டணி வெக்கவேகூடாது! இத அண்ணாமலெக்குப் புரிய வெக்கறது அமித்ஷாவோட கடமெ.”
“களத்துல பட்டய கெளப்பணும், மாநாடு நடத்தினா பத்தாது!”
“களப்பணியெல்லாம் யூஸ்லெஸ், நர்ரேட்டிவ்தாங்க முக்கியம்! மாநாடு மக்கள் தொடர்புன்னிட்டு மஜா செஞ்சாதான் முடியும்!”
“வேற எதுவுமே முக்கியமில்லே! தேர்தல் தேதியன்னிக்கி வோட்-கன்வர்ஷன் தான் முக்கியம்!”
“தேர்தல்ல கெலிக்கிறது முக்கியமில்ல தம்பீ! நாம் அறவுணர்ச்சியோட அறப்போர் செய்றோமாண்றதுதான் நீதி… அண்ணல் காந்தி என்ன ஸொல்லிக்கீறார்னாக்க…”
“ற்றொம்ப பேட்டி கொடுக்கறாரு, அதக் கம்மி செஞ்சி, கட்சிப் பணில கவனம் செல்த்தணும்.”
“பேட்டி கொடுத்து கொடுத்துதாங்க கட்சிய வளக்க முடியும்? எப்டி அவேர்னெஸ்ஸ பில்ட் பண்றது?”
“கிராமங்கள்ல, க்ராஸ்ரூட் ரெவல்ல கச்சிய வளக்கோணும்! ஏன்னாக்க நகர்ப்புறங்களில்தாங்க கட்சி வீக்கு… கிராமங்கள்ல ஆதரவு இருக்கே!”
“கட்சிய வட மாவட்டங்கள்ல பலப் படுத்தணும். மிச்ச மாவட்டங்கள்ல கூட்டணி கட்சிக்காரன்ங்க்ளுக்கு வுட்டுக் கொடுத்துட்லாம்…”
“கட்சிய டெல்ட்டா ரீஜன்ல வளக்க என்ன ஸ்ட்ரேட்டஜீ வெச்சிர்க்காங்க? இது முக்கியமில்லா?”
“…மன்னார்குடீ…. அதாட்டு தான் சொல்றேன், அங்கிட்டு டிடிவி தினகரனுக்கு வோட்டு கணிசமா 90% இருக்கு. அதனால அவ்ரோட கூட்டணி வெச்சாக்க, கன்யாகுமரீல கணிசமா வோட்டு பாஜக-வுக்கு கெடைக்கும்…”
“மக்கள ஈர்க்கறாமாரீ செயல்படணும், யெதுக்கெடுத்தாலும் வெமர்சனம் செய்யக்கூடாத்.”
“அவ்ரு நல்லா செயல்பட்றாரு ஆனாக்க துடுக்குப் பேச்ச கம்மி பண்ணணும்!”
“முஸ்லீம்க நம்பிக்கய பெற அவ்ரு இன்னமும் பாடுபடனும்…”
“கன்யாகுமரீல எல்லாம் க்றிஸ்தவ வாக்க அள்ளணும்… அதுக்கு வொழைக்கணும்…”
“கூட்டணி கட்சிகள அனுசரிச்சி போவணும்… தேர்தல்ல வெட்ரி தோள்விய நிர்ணயிக்கப் போறது கருத்தியலா வோட்டுகளா?”
“ஒபிஎஸ் இபிஎஸ் கிட்ட மாறிமாறீ நெகோடியேட் பண்ணி அவங்க ரெண்டு பேரையும் டிடிவி தினகரன் கீழ அணி திரள வெக்கறதுல தான், அண்ணாமலையோட சாணக்கியத்தனம் தெரியவரும்…”
“கூட்டணி கட்சிகள ஏன் மதிக்கணும்? களத்துல இன்னிய தேதிக்கு திமுக-வ எதுர்க்கறது யாரு?”
“தனியா நிக்கவே கூடாது, எப்டியாவது கூட்டணி அமெச்சி திமுகவ தெர்த்தணும், அதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்ணும்…”
“தனியாவே நின்னு பலத்த காமிக்கணும்! யென்ன, ரெண்டுமூணு தேர்தல்ல பின்னடைவு இருக்கும், அப்பால எல்லாம் சரியாய்டும்!”
“கூட்டணி அமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கணும், காம்ப்ரமைஸ் பண்ணாம இருக்கணும் – அதே சமயத்ல அவங்க வோட்டு பாஜகக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சிக்கணும்றது முக்கியம்”
“பாஜக தனியா ஒரு கூட்டணி அமெக்கணும், அதுக்குத் தலெமெ தாங்கணும்; கம்யூனிஸ்ட்ங்கள சேத்தா நகர்ப்புர தொழிலாளர் மத்தீல வோட்ட அள்ளலாம். திர்மாவோட விசிக வோட்டுங்கள மேற்கு மாவட்டங்கள்ல பெறலாம், நாம் தமிளர் சீமானோட டெல்ட்டா ரீஜன் ஓட்டு எல்லாம் அதே அணிக்கு கெட்ச்சிடும்…”
“பூவுலகின் நண்பர்கள், பியூஷ்மனுஷ், ஜகத்கப்சர், இஞ்சிநீர் சுந்தர்ராஜன் கூட கூட்டணி வெக்கணும், ரோட்-ஷோ நடத்தணும் – அப்டீ செஞ்சாக்க கொங்கு-பெல்ட்ல ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’னு அங்க இருக்கற ராமநாதபுரம் திருநெல்வேலி பகுதீங்கள்ல வெட்ரி நிச்சயம்!”
“மோடீ காசீல நின்னாச்சி, இப்ப அவ்ர இராமேஸ்வரத்துல நிக்க வெக்கணும்! அதுதான் ஸில்வர்புல்லட் ஸ்ட்ரேட்டஜீ…”
“கட்சிக் காரனுங்கள அடக்கி வெக்கணும்… சில ஆட்களுக்கு மைக்க முன்னாடி நீட்னாக்க என்ன பேஸ்றதுன்னே தெரீல…”
“பால் விலையற்றம் பத்தீ பேஸ்ரது சரி, ஆனால் அது சார்ந்த பாலியல் பிரச்சினைகளைப் பேசாம இருக்கறது சரியில்லீங்க்ளே!”
“அட்ச்சி ஆடணும்…”
“அறிக்கை தராம, பேட்டி கொடுக்காம அமைதியா இருக்கணும்… அந்த எனர்ஜிய கட்சீய வளக்கறதுல செலவிடணும்…”
“கட்சிக் காரனுங்கள தட்டிக்கொட்த்து உற்சாகப் படுத்தணும்…”
“கட்சிக்காரனுங்கள நம்பக் கூடாது… உள்குத்து தாஸ்தீ அங்கிட்டு…”
“தொண்டர்கள அரவணெச்சுக்கணும், அவர்கள ஊக்குவிக்கணும்…”
“தொண்டர்கள் இன்னிக்கு வருவாங்க, நாளெக்கி போவாங்க… கருத்தியல்தான் முக்கியம்!”
“ஹிந்துத்துவா கருத்தியலை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்க்கணும்…”
“ஹிந்துத்துவா தேசிய கருத்தியல்ன்னு பேசினா தமிழனுக்கு ஒவ்வாமையாய்டும், அத்தொட்டு மோடி பேர மட்டும் எடுத்துட்டுப் போய் வாக்கு சேகரிக்கணும்….”
“தனிமனித வழிபாடு பாஜகவின் சாபக்கேடு! மோடீ அண்ணாமலேன்னு தனி நபர்கள் பாஜக-வுக்கு முக்கியமில்லை, அதன் தொண்டர்களும் தேச ஒற்றுமையும்தான் முக்கியம்!”
“துதிபாடீங்க கட்சிண்ற பிம்பத்த பாஜக வொடெக்கணும்… காங்கிரெஸ் கிட்டேர்ந்து இந்த நல்ல விஷயத்தெ கத்துக் கிடணும்…”
“பாஜக தன்னோட இந்துத்துவ ஆசைங்கள வுட்டுடணும். தான் இந்துத்துவாவுக்கு எதிரின்னிட்டு நிரூபிச்சா, திராவிடக் கட்சீங்களோட வோட்டு எல்லாம் பாஜகவுக்கு வந்திடும், பாத்துக் கிடுங்க… குறிச்சு வெச்சுக்கிங்க…”
“பாஜக, தான் இந்துத்துவத்தின் எதிரின்னு காமிச்சா, சிறுபான்மையினர் வோட்டு எல்லாம் ஒரு ப்ளாக்கா வந்துடும், வெட்ரி நிச்சயம்!”
“பாஜக தான் சிறுபான்மையினரோட எதிரின்னு அறிவிச்சா, எல்லா இந்துக்களும் பாஜகவுக்கு ஓட்டுப் போடுவாங்க, வெற்றி!”
“பாஜகவோட முன்களப்பணியாளர்கள் எங்கே? பாஜக-க்குன்னு தனியா ஒரு டீவீ சேன்னல் வேணும்…”
“பாஜக சினிமாவ அரவணெக்கணும்… சினிமா தயாரிக்கணும்…”
“சசிகலாவை சுப்ரமணியம்ஸ்வாமி வழியா குருமூர்த்தி ரூட்ல எதிர்கொண்டு அவங்கள டம்மிபீஸாக்கி, டிடிவி தினகரன செயல்படவுடாம செஞ்சி, அவரையே கூட்டணி தலைவராக ஆக்கிட்டா, பூத் கமிட்டிங்களே வேண்டாம். அவரே பணப்பகிர்வ பாத்துக்கிட்டு திமுகவ செக்மேட் செஞ்சிருவார்!”
“பாஜகவே ஒரு தனி பத்திரிகை ஆரம்பிக்கணும். ஜூனியர்விஜயபாரதம்னு பேர்வெச்சி அதில் தொடர்ந்து ‘ஸ்டாலின் பையன் மாயம்… பாலிடால் டப்பியில் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி விளையாடுகிறாரா வெள்ளாட்டுத் துறையமைச்சர்?’ ங்ற மாறீ கட்டுரை போட்டா பிச்சுக்கும்… இன்னும் ‘கண்விண்மீன் நடிகையுடன் விளையாடிய துறையமைச்சர்’ன்னு போட்டா நக்கீரனுக்கு செக்மேட் வெக்கலாம்!”
“பாஜகவோட ஐடி செல்லுல – திமுக ஊடுருவியிருக்குன்னு பேசிக்கறாங்க. யார் உட்கட்சி வெவகாரத்த வெளீல லீக் பண்றது?”
“ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது! அதனுடனான பிணைப்பை, பாஜக வெட்டிக்கொண்டால்தான் அதற்கு விமோசனம்…”
“கட்சி வளரவேயில்ல… வெறும் வெளம்பர பிம்பத்த தான் நாம்ப பாக்கறோம்… ரியலிட்டிய அது பிரதிபலிக்கவே இல்ல…”
“கட்சி மாநாட்டுக்கு வர்ற கூட்டம் வேற… ஓட்டு விகிதம் வேற… இத்த ரெண்டயும் போட்டுக் கொளப்பிக்கப் படாது…”
“கட்சிய வளக்கணும்… ஆனா புது உறுப்பினர்கள சேக்கக் கூடாது. அப்டி சேத்தே ஆகணும், கட்சி வளர்ந்தே ஆகணும்னாக்க – குறெஞ்ச பட்சம் பத்துவருடம் அவனுங்க ஆர்எஸ்எஸ்ல தொண்டாற்றியிருக்கோணும்… இல்லாகாட்டி பன்னிரு திருமுறைகளையாவது மனப்பாடம் செஞ்சிருக்கணும்… ‘முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண’ன்ற திருப்புகள் பாட்ட சுத்த உச்சறிப்போட பாடத் தெரிய்ணும்…”
“கட்சி மாறி வர்ரவனுங்களுக்கு பத்து வருடம் ஒரு பதவியும் கொடுக்கவே கூடாது… இல்லாகாட்டீ பாஜகவும் திமுக ஆய்டும்!”
“கட்சி இளெஞ்சர் அணீல எல்லாருமே இளைங்கர்களாக இருக்கற்தால அவங்க்ளுக்கு ஏத்த அறிவுரெ கெடக்கறதில்ல… அத்தொட்டு டீஎம்கே இளெங்கர் அணி மாறீ, அந்த அணீல சேர்றவனுங்க வயசு குறெஞ்சபட்சம் அறுவது வயசாவது ஆகிருக்கணும்…”
“கண்டகண்ட கட்சிலேர்ந்து வர்ரவ்னுங்கள கட்சீல சேத்தா அதோகதிதான்! திமுகலர்ந்து வர்ரவனுங்க வைரஸ்ங்க. அதிமுகலேர்ந்து வர்ரவனுங்க அம்மா விசுவாசிங்க, ஆனா பாஜக-வுக்கு அப்பா விசுவாசீங்கதான முக்கியம்… வர்ற கம்மீனிஸ்ட்ங்க்ள சேத்திக்கலாம் – ஏன்னாக்க மோடிக்கும் தாடி இருக்கு, மார்க்ஸ்க்கும் இருந்ததுண்றாங்க இல்லியா?”
“கருத்து வேற, செயல்பாடு வேற… கூட்டணி வேற, கொள்கெ வேற… தேர்தல் வேற, ஆட்சியமெக்கறது வேற… அதனால பாஜக, திமுகவோட கூட்டணி வெக்கறத்துக்கும் தயாரா இருக்கணும்… பொது எதிரி யார்ண்றதுல தெளிவு இருக்கணும்… ராஜாஜீ அண்ணாத்துரைக்கு சப்போர்ட் செஞ்சாரா இல்லியா?”
…
…
“அண்ணாமலை போக வேண்டிய தூரம் அதிகம்… அதற்கு ‘Seven Habits of Highly Defective People’ போன்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களை அவர் படிக்கவேண்டும்.”
…
…
இ
டேய் படுபாவீங்க்ளா!
சரி. இம்மாதிரி மேலான அறிவுரைகளை வாரிவழங்கும், உங்களைப் போன்ற என் செல்ல சகஅறிவுரையாளர்களின் உளறியல்களைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், நம் உளவியலை ஓரளவாவது புரிந்து கொள்ள முயல்கிறேன். ஆனாலும், நீங்கள் (நானும்தான்!) பிடித்த முயல்களில் ஒன்றுக்குக் கூட நாலுகால்களில்லை, என்ன செய்ய…
நல்லெண்ணமும் கரிசனமும் வேண்டிய அளவு இருக்கிறது. இவற்றில் நமக்குப் பிரச்சினை இல்லை. நாமெல்லாம் 50+ ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அயோக்கிய திராவிடலை தீராவிஷ மாயை குறித்த வெறுப்பில் இருக்கிறோம்… நம்முடைய வெறுப்புணர்ச்சியின் ப்ராக்ஸியாக, அல்லது நம் அபிலாஷைகளில் வடிகாலாக – இளம் அண்ணாமலையும் பாஜகவும் செயற்படவேண்டும் என நினைக்கிறோம்… பாதகமில்லை. இருக்கும் படுமோசமாக சூழலில், பாஜகவை விடிவெள்ளியாகவும், அண்ணாமலையை ஜொலிக்கும் நட்சத்திரமாகவும் பார்க்கிறோம்… இதுவும் சரிதான்.
ஆனால் உட்கார்ந்த இடத்திலிருந்து யூட்யூப் ட்விட்டர் வலைத்தளம் எனப் பேசித் தள்ளலாம் – அதற்கு மேல் அவற்றால் உபயோகமில்லை, அவ்வளவுதான். களத்தில் கால் படிக்காமல் பட்ச்சி-அட்ச்சி வெள்ளாடலாம் – இவையெல்லாம் அதிகபட்சம் நகைச்சுவை விஷயங்கள் அவ்வளவுதான்…
இவற்றால், நம் தினவுகளைத் தீர்த்ததற்கு, தீர்ப்பதற்கு அப்பாற்பட்டு என்ன பெரிய/காத்திரமான பயன் விளைகிறது என நாம் யோசிக்கவேண்டும்…
அண்ணாமலை அவர்களுக்கு மேலான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கும் நிலையில் நாம் இருக்கிறோமா என்பதை நாம் கொஞ்சமேனும் நினைத்துப் பார்க்கவேண்டும்…
நம்மால் உபயோகமாக இருக்க முடியாவிட்டாலும், உபத்திரவமாக இருப்பதையாவது தவிர்க்கலாமே! வாயோயாமல் பினாத்துவதை மட்டுறுத்தலாமே! :-(
ஆனால்.
அண்ணாமலை அவர்களின் பெரும் பிரச்சினை என்னவென்றால், அவருடைய இளமை. பாவம். வயது சுமார் 37-38 ! அவ்வளவேதான்!
ஆகவே 38 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நல்லெண்ணக் கூமுட்டைக்கும், அண்ணாமலைக்கு அறிவுரையாளராக இருக்கத் தகுதி இருப்பதாக, ஏகத்தும் தன்னம்பிக்கையோடு அட்ச்சிவுடமுடிகிறது. (அவர்கள் மட்டமல்ல, முளைத்து ஒரு விதையிலை கூட விடாத அற்பப் பதர்களும் புற்களெல்லாம் கூட அதிமேதாவித்தனமாக அவருக்கு அறிவுரைகளை அள்ளித் தருகின்றன!)
வாழ்க்கையில் ஒரு சிறு விஷயத்தைக் கூடச் சாதிக்காதவர்கள், ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட்டுக்கூட பாரதமாதாவுக்கு உதவாதவர்கள் – முழ நீளமாக அறிவுரைக்க வந்துவிடுகிறார்கள்…
ஆனால் பாருங்கள், இளைஞர் அண்ணாமலை நம்மை எல்லாம் அணுகாமலேயே, நம் மேலான அறிவுரைக்கு ஏங்கிக் கொண்டிருக்காமலேயே – துளிக்கூடப் பெரிய பின்புலமில்லாமல், ஏதோ ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து கடும் உழைப்பினாலும் குவியத்தினாலும் அடிப்படை-புத்திசாலித்தனத்தாலும், முக்கியமாக ஒழுக்கநெறியாலும் பொறியியல், மேலாண்மைக்கல்வி, ஐபிஎஸ் பதவி, அதிலும் அப்பழுக்கற்ற ஸர்வீஸ் என ஜொலித்திருக்கிறார்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு சுய அர்ப்பணிப்புடன் தேச சேவையில் தளராது, நம்பிக்கையோடு தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்; நம்மிடம் அனுமதி பெறாமல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டு, அவருடைய திறமையையும் தலைமைப் பண்பும் கருத்தில் கொள்ளப்பட்டு மிகக் குறைந்த காலத்தில் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
பின்னரும் சுழன்று சுழன்று தளராமல், பல தளங்களிலும் பணி புரிகிறார், கடுமையாக உழைத்துப் புத்திசாலித்தனத்துடனும் கட்சியை வளர்க்கிறார், தகுதியானவர்களை இனம் கண்டுகொண்டு உட்சேர்த்திக் கொள்கிறார்; எந்தவொரு அமைப்பிலும் இயல்பாக எழக் கூடிய பூசல்களை (நாமெல்லாரும் மனிதர்கள்தாமே!) எதிர் கொள்கிறார்; ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிகிறார்; அவ்வப்போது அமைப்புகளில் எழும் சிடுக்கல்களை அவிழ்த்த வண்ணம் இருக்கிறார்; இயக்கத்தை இதுவரை போஷித்தவர்களிடம் மரியாதையுடன் இருக்கிறார்; ஒரு லூஸ்-டாக், கவனக் குறைவாக அட்ச்சிவுடுவது என்று பெரிதாக ஒன்றையும் செய்யாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்…
தேசத்தை, நம் மக்களை நேசிக்கிறார். பாரதப் பேரொழுக்கான ஹிந்துமதத்தைக் கரிசனத்துடன் பார்க்கிறார். நன்றாகப் பேசுகிறார். இயல்பாக உரையாடுகிறார், தரவுகளை மனதில் கொண்டு நன்றாக விளாசவும் செய்கிறார். நல்ல நகைச்சுவை உணர்ச்சியும் இருக்கிறது. நம் இளைஞர்களுக்கு ஆதர்சமாகவும் ஒரு அழகான எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார்.
சர்வ நிச்சயமாக – அவர் ஒரு ‘மாறாது போல வந்த மாமணிதான்.’
அவர் பாஜக-வின் சொத்து மட்டும் அல்லர் – நம் பாரதத்தின் சொத்தும், எதிர்காலமும் கூட! நாம் கொடுத்து வைத்தவர்கள்தாம்! (என் தகப்பனார் இன்றிருந்தால், அண்ணாமலைக்கு (ஆகவே பாஜகவுக்கு (ஆகவே பாரதத்துக்கு)) சேவை செய்யப் போயிருப்பார்; ஆனால் பாவம், போய்ச்சேர்ந்துவிட்டார்.)
இளம் அண்ணாமலை அவர்களுக்கு, எல்லாம் வல்ல ஸரஸ்வதியும், லக்ஷ்மியும், துர்க்கையும் தொடர்ந்து துணை புரிந்து, அவருக்கு உடல்மன ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கொடுப்பார்களாக…
நமக்கெல்லாம் அவரை வாழ்த்த வயதிருக்கிறது, வணங்கி மகிழவும், அவரை ஊக்கப் படுத்தவும் வேண்டும்கூட….
ஈ
கடோசியாக…
…என் படு செல்லங்களான சகஅறிவுரையாளர்களுக்கு (என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறதே! த்ருஷ்டி கழிக்கவேண்டுமோ??) என்னுடைய சொந்த, என் பங்கிற்கான மேலான அறிவுரை என்னவென்றால்:
1. முதலில், அரசியல் என்றால் என்ன என்பதை அர்ஜுன் அப்பாதுரைகளுக்கும், ஒன்றிரண்டு புத்தகங்களுக்கும், டீவி-சேன்னல்களுக்கும், யூட்யூப் மயிர்பிளப்புகளுக்கும், ஏன், நம் ஓலா/ஊபர் டேக்ஸி ஓட்டுநர்களின் மேலான கருத்துகளுக்கும் அப்பாற்பட்டு – களத்தில் இறங்கி, ஒன்றிரண்டு வாக்குகளையாவது நம்முடைய சாவகாசமான செல்லக் கனவுகளுக்காகவும், கூட்டணிக்காகவும், தனித்துவத்துக்காகவும் போராடிப் பெறலாம்.
2. 50-100 ஓட்டுகளுக்குப் பொறுப்பு எடுத்துக்கொண்டு அடுத்த ஒன்றரை வருடங்களுக்காவது உழைக்கலாம்.
3. அண்டை/அருகாமையில் உள்ள ஆர்எஸ்எஸ் &/அல்லது பிற பாஜக சார்பு/கூட்டணி அமைப்புகளுடன் கோர்த்துக்கொண்டு அவர்களுக்கு உதவியாக இருக்கலாம்.
4. முடிந்தவரை தர்ம/ஹிந்துத்துவ காரியங்களுக்கு உதவலாம்.
5. பிரதிபலன் பார்க்காமல் உழைக்கும் பாங்கை, இரண்டாம் மனிதருக்குத் தெரியாமல் எப்படி, நம் தேசம்+மக்களின் வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பது என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்புகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.
6. 2023-24 ஆண்டுகளில் குறைந்த பட்சம் மூன்று மாதங்களையாவது தன்னார்வ உழைப்பாளனாக, பாஜகவுக்கு அர்ப்பணிக்கலாம்…
7. பாஜக-நரேந்த்ரமோடி திட்டங்களையும், அவர்களுடைய எல்லாருக்குமான, காத்திரமான திட்டங்களைக் குறித்து ஆவணபூர்வமாக நம் வட்டாரங்களில் உள்ள அமைப்புகளில் பேசலாம்…
8. நமக்கு நரேட்டிவ்-பில்டிங்/narrative-building விஷயங்களில் விருப்பமானால், காத்திரமான, விதம்விதமான தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதலாம் – இவையும் பாஜகவுக்குப் பயன்படக் கூடியவை தான்…
9. ஜாதி வர்ணம் வேதங்கள் உபநிஷதங்கள் இதிஹாஸங்கள் புராணங்கள் தர்மஸாஸ்திரங்கள் குறித்த காத்திரமாக கருத்தாக்கங்களை, திறந்த மனதுடன் உருவாக்கிக் கொள்ளலாம்; சிடுக்கல்களைக் களைய முற்படலாம், உன்னதங்களைப் பரப்பலாம்.
10. ஹிந்துத்துவா என்றால் என்ன என அடிப்படை புரிதல்களை அடையலாம்… அரவிந்தன் நீலகண்டனின் கீழ்கண்ட புத்தகத்தைப் படிக்கலாம்…
(நான் படிக்க ஆரம்பித்துவிட்டேன் – 30% முடித்துவிட்டேன் – இதுவரை காத்திரமாகவே இருக்கிறது; அதாவது, முழுவதையும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவேண்டுமென்றிருக்கிறேன்)
11. …
12. மேற்கண்டவை போன்றவைகளைச் செய்தாலும், அவை நம் கடமையாகத் தான் இருக்கவேண்டும். நமக்குத் தனிப்பட்ட முறையில் பிரதிபலனை எதிர்பார்த்துக்கொண்டு செய்யக்கூடாது. முக்கியமாக, நம் கீதை சொல்வதை கவனித்துக் கொள்ளலாம்:
कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन ।
मा कर्मफलहेतुर्भुर्मा ते संगोऽस्त्वकर्मणि ॥
(இவை என் கோரிக்கைகள் + ஒருமாதிரி டெம்ப்ளேட் திட்டமும் கூட; கொஞ்சம்போல மேற்கண்ட வழிமுறைகளைக் கடைப்பிடித்திருக்கிறேன்கூட)
(பார்க்கலாம்)
—-0000—-
December 15, 2022 at 01:13
ராம் மோடிஜி ஆட்சியில் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. நீங்கள் மிக விரும்பிய மாற்றங்கள் என்ன இனி நிகழ வாய்ப்புள்ள மாற்றங்கள் என்ன இதை குறித்து கட்டுரைகள் எழுத முடியுமா நன்றி
January 12, 2023 at 13:53
இந்த பதிவிற்கு தொடர்பில்லாததுதான் இருந்த போதிலும் இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வருகிறேன். நீங்களும், உங்கள் மூலமாக என்னைப் போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் மதுபூர்ணிமா கேஷ்வர் இப்படி டிவிட்டியிருக்கிறார்
ஒரு காலத்தில் உங்கள் அறிமுகத்தில் இவர் எழுதிய மோதி நாமா படித்துள்ளேன் இப்போது ஏன் இப்படி ?!
January 12, 2023 at 19:01
ஐயன்மீர், இப்போதும் அவர் ஒருமாதிரி அத்யந்த நண்பர்தான்.
ஆனால் – வரவர வாழ்க்கையில் பலப்பல விஷயங்களை லூஸ்லவுட வேண்டியிருக்கிறது. வயதும் ஏகத்துக்கும் ஆகிக் கொண்டிருக்கிறது அல்லவா?
நண்பர் என ஒருவரை பரஸ்பரம் வகித்துக்கொண்டால், அவருடன் அனைத்து விஷயங்களும் துப்புரவாக 100% ஒத்துவந்தே ஆகவேண்டுமென்பது இல்லை எனப் படுகிறது; அடிப்படை நேர்மை என இருந்தாலும், அவரவருக்கு அவரவர் அனுபவங்கள், பார்வைகள், பிறப்பு, வளர்ப்பு, ஜெனெடிக்ஸ் இன்னபிற, அல்லவா? :-( (சில வருடங்களுக்கு முன்புகூட நான் இப்படி இருந்திருக்கவில்லை – எவ்வளவோ ‘நட்பு’களை நான், இந்த துணிபுக்கு வரமுடியாததால் கத்தறித்துக் கொண்டிருக்கிறேன், என்ன செய்ய…)
புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன். (இருந்தாலும் வலிக்கிறது என்பது உண்மை)
—